periyar 330பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் ஏற்படுத்திய விளைவுகளைப் பெரியார் அவர்களே பின்வருமாறு மதிப்பீடு செய்கிறார்.

“சுயமரியாதை இயக்கம் தமிழ்நாடு, மலையாள நாடு, ஆந்திர நாடு ஆகியவைகளைச் சமுதாய இயலில் ஒரு கலக்கு கலக்கிவிட்டிருக்கிறது. மத இயலிலும் மகா பண்டிதர்கள், ஞானிகள், ஆச்சாரியர்கள் என்பவர்களை யெல்லாம் மாறிக் கொள்ளச் செய்திருக்கிறது. தோழர் காந்தியாரையே பல கரணங்கள் போடச் செய்துவிட்டது.

பெண்கள் உலகில் உண்மையான சுதந்திர வேட்கையைக் கிளப்பிவிட்டது. கீழ்சாதி, மேல்சாதியென்பவைகள் ஓடுவதற்கு ஓட்டத்தில் ஒன்றுக்கொன்று பந்தயம் போடுகின்றன. கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும், பைபிளுக்கும், குர்ஆனுக்கும் புதிய வியாக்கியானங்களை செய்யத் தலைப்பட்டு விட்டனர். காங்கிரஸ் தொல்லை இல்லாமல் இருந்திருக்குமானால் இந்தியா பூராவையும் சுயமரியாதை இயக்கம் இன்னும் அதிகமாய் கலக்கி இருக்கும் என்பதோடு, பார்ப்பனியம் அடியோடு மாண்டிருக்கும் என்றே சொல்லலாம்.”

- பெரியார் –சுயமரியாதை, சமதர்மம் நூல்

பாரதிதாசன் பற்றிய கட்டுரை ஒன்றில் பெரியார் அவர்களின் இக்கூற்றை மேற்கோள் காட்டிய நான் இவ்வாறு என் கருத்தைத் தொடர்ந்தேன்.

பெரியார் கூட ஒன்றையும் சேர்த்துச் சொல்லி இருக்க வேண்டும். பைபிளுக்கும், குர்ஆனுக்கும் புதிய வியாக்கியானங்கள் வந்தன. அதைவிடக் கூடுதலாகத் திருக்குறளுக்குப் புதிய விளக்கங்கள் தர வேண்டிய கட்டாயத்தை மரபில் ஊறிய தமிழறிஞர்களுக்கு பெரியார் ஏற்படுத்தினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்துறையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் இருபதாம் நூற்றாண்டு உரையாசிரியர்களின் பார்வையில் ‘பெண்வழிச் சேறல்’ என்ற தலைப்பில் கட்டுரையொன்று படித்தேன். ‘பெண் வழிச் சேறல்’ என்ற குறள் அதிகாரத்துக்கு மணக்குடவர் பரிமேலழகர் தொடங்கி, பதினேழாம் நூற்றாண்டின் வீரமாமுனிவர் வரை ஒரே மாதிரியான பொருள் கொண்டுதான் உரை எழுதினார்கள்.

பெண் வழியே செல்லுதல் என்பது, பெண்வழிச் சேறல் என்பதன் பொருள், சேறல் – செல்லுதல், மனைவியைத்தான் வள்ளுவர் பெண் என்கிறார். இத்தொடருக்கு “இன்பங்காரணமாக மனையாள் வழி ஒழுகுதல்” என்று மணக்குடவரும், “தன் வழி ஒழுகற் பாலளாகிய இல்லாள் வழியே தான் ஒழுகுதல்” என்று பரிமேலழகரும் விளக்கம் தருகின்றனர். கிட்டத்தட்ட இந்த உரை விளக்கந்தான் 20 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது.

பெரியார் அவர்களால் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூல் 1. 1. 42 ல் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. 1982 -ல் பதினான்காவது பதிப்பாக வெளியிடப்பட்ட நூலையே நான் பார்த்தேன். “தந்தை பெரியார் அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது” என்ற ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இப்பதிப்பின் முன்னுரையில் கூறுகிறார்.

கற்பு, வள்ளுவரும் கற்பும், காதல், கல்யாண விடுதலை, மறுமணம் தவறல்ல, விபச்சாரம், விதவைகள் நிலைமை, சொத்துரிமை, கர்ப்பத்தடை, பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும் எனப் பத்துத் தலைப்புகளில் தம் கருத்தை விவரித்துச் சொல்கிறார்.

“கற்பு என்ற முதல் அத்தியாயத்தில், கற்பு என்ற சொல்லின் பொருளையும் கருத்தின் பின்னணியையும் விளக்குகிறார். ஆரிய அர்த்தத்தின்படி “கற்பு என்கிற பதத்திற்குப் பதிவிரதை என்ற பொருள் கொள்ளப்படுகின்றது. இந்த இடத்தில்தான் கற்பு என்கின்ற வார்த்தைக்கு அடிமைக்கருத்து நுழைக்கப்படுகின்றது என்பது எனது அபிப்பிராயம். அதாவது பதியைக் கடவுளாகக் கொண்டவள், பதியைத் தவிர வேறு எவரையும் கருதாதவள் எனப் பொருள் கொடுத்திருப்பதுடன், பதி என்கிற வார்த்தைக்கு அதிகாரி, எஜமான், தலைவன் என்கின்ற பொருள் இருப்பதால் அடிமைத் தன்மையை இவ்வார்த்தைகள் பலப்படுத்துகின்றன”

(மேற்படி நூல் பக்கம்-14) என்கிறார். இதை இன்னும் கூர்மையாக அடுத்து விளக்குகிறார்.

“நாயகன் நாயகி என்கிற சமத்துவமுள்ள பதங்களும் கதைகளிலும், புராணங்களிலும் ஆண், பெண் இச்சைகளை உணர்த்தும் நிலைகளுக்கே மிகுதியும் வழங்கப்படுகின்றன. ஆகவே காமத்தையும் அன்பையும் குறிக்கும் காலங்களில் சமத்துவப் பொருள் கொண்ட நாயகர் - நாயகி, தலைவர் - தலைவி என்ற நிலைக்கு வரும்போது அதைப் பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்படுத்தி, பதி ஆகிய எஜமானனையே கடவுளாகக் கொள்ளவேண்டுமென்ற கருத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது. (பக் -15)

இவ்விடத்தில் பெரியாரின் உண்மையைத் தேடும் கூரிய பார்வை, திருக்குறள் குறித்து மெளனம் சாதிக்க இடம் தரவில்லை. “அதாவது குறளில் வாழ்க்கைத் துணை நலத்தைச் சொல்ல வந்த 6-ஆம் அத்தியாயத்திலும், பெண் வழிச் சேரல் என்பதைப் பற்றிச் சொல்ல வந்த 91-வது அத்தியாயத்திலும் மற்றும் சில தனி இடங்களிலும் பெண்கள் விஷயத்தில் மிக்க அடிமைத் தன்மையும் புகுத்தப் பட்டிருப்பதாக எண்ணக்கிடக்கின்றன”.

மேற்கண்ட நூலின் அச்சுப்படியில் ‘பெண்வழிச் சேறல்’ என்பது ‘சேரல்’ என அச்சிடப்பட்டுள்ளது. ‘சேறல்’ என்பதற்கு, செல்வது என்பது பொருள், ‘சேரல்’ என்பதற்கு சேர்வது என்பது பொருள். பெரியார் ‘சேரல்’ என்றே எழுதினாரா என்பதற்கு எந்தக் குறிப்பும் இல்லை.

இந்த இரண்டு அதிகாரங்களிலும் பெண் அடிமைத்தனம் வலியுறுத்தப்படுவதை ஆராய வேண்டுகிறார்……“கடைசியாக திருவள்ளுவர் ஒரு ஆணாகயில்லாமல் பெண்ணாயிருந்து இக்குறள் எழுதி இருப்பாரானால் இம்மாதிரி கருத்துக்களைக் காட்டி இருப்பாரா என்பதையாவது கவனிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்“ என்கிறார்.

பெரியாரின் இக்கட்டுரைக்கு ஆன்ற தமிழ்ப் புலவர்கள் விடையிறுக்க முன் வந்ததில் வியப்பொன்றுமில்லை. இந்தப் புலவர்களுக்கும் பெரியார் ‘வள்ளுவரும் கற்பும்’ என்ற அடுத்த கட்டுரையில் கேள்விகளை முன்வைக்கிறார். இது அக்கால கட்டத்தில் மாபெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. ‘இருபதாம் நூற்றாண்டில் திருக்குறள் ஆராய்ச்சியின் வளர்ச்சி’ என்ற முனைவர் பட்டத்துக்கான ஆய்வேட்டில், மகளிர் தொடர்பான ஆய்வுகளைச் சுட்டிச் செல்கிறார் முனைவர் தி.சு. சத்தியம். இந்த ஆய்வுகளில் பேராசிரியர் தொ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் ‘வள்ளுவரும் மகளிரும்’ என்ற நூல் பற்றி ஆய்வாளர் சுட்டுவது குறிப்பிடத்தக்கது.

“வள்ளுவர் மகளிரைத் தாழ்த்தவில்லை என்றும் சிறைப்படுத்தவில்லையென்றும், அடிமையாக்க வில்லையென்றும் வாதிடுகின்றார் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார். பெண்ணுக்குப் பொருட்பாலிலும் பங்குள்ள பாங்கை, துறவிலும் பெண்துணையாகும் இயல்பை விளக்கும் ஆய்வாளர், ‘கொழுநன் தொழுதல்‘, ‘தற்கொண்டான்’ மற்றும் ‘பிறன் பொருளாய்’ போன்ற தொடர்களால் பெண் தாழ்த்தப் படாத தன்மையையும், ‘வரைவின் மகளிர்’ ‘பெண்வழிச் சேறல்’ போன்ற அதிகாரங்களிலும் அவளின் மாண்பு மறைக்கப்படாத பெற்றியையும் விளக்கமாக ஆராய்கிறார்“ என்கிறார் தி.சு.சத்தியம்.

தொ.பொ.மீ மட்டுமல்ல, திரு.வி.க., நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார், டாக்டர் மு.வரதராசனார், சாமி.சிதம்பரனார் போன்ற அறிஞர்களும், வள்ளுவரின் பெண்ணிய பெருமையைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார்கள்.

மணக்குடவர் பரிமேலழகரில் இருந்து தொடங்கிய பெண் வழிச் சேறலுக்கான உரை மரபு, இருபதாம் நூற்றாண்டில் மாறியது. பழைய உரை பொருந்தாது என்பதைத் தமிழறிஞர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

திருக்குறள் மீது தமக்கும் ‘பக்தி‘ இருப்பதாக ஓரிடத்தில் கூறிக்கொள்ளும் பெரியார், பெண்ணுரிமை என்ற நோக்கில் திருக்குறள் உட்பட அனைத்து நூல்களும் பெண்களுக்கு அநீதி செய்வதைத் தெளிவாகவே முன் வைக்கிறார்.

“பெண்ணைக் கொள்ள ஆணுக்கு உரிமை இருந்தால் ஆணைக் கொள்ள பெண்ணுக்கும் உரிமை வேண்டும். ஆணைத் தொழுது எழ வேண்டும் என்று பெண்ணுக்கு நிபந்தனை என்றால் பெண்ணையும் ஆண் தொழுதெழ வேண்டும்“ என்கிறார் பெரியார்.

பெண்வழிச் சேறலில் வள்ளுவரை நியாயப்படுத்தி தொ.பொ.மீ முன்வைக்கும் கருத்துக்களைக் காணலாம்.

“அறத்தினையும் பொருளையும் கருதாது இணைவிழைச்சு ஒன்றே கருதிப் பெண்களோடு வாழ்தலையே வள்ளுவர் பழிக்கின்றார். அறவழியில் நின்று பொருள் வரும் வழி அறிந்த அறிவுடைய இல்லாளின் அறவுரைகளைத் கேட்டலாகாது எனத் திருவள்ளுவர் கூறுகின்றார் இல்லை. அறம் பொருள் வேண்டாது இணைவிழைச்சு ஒன்றே வேண்டி விழைதலையும் ஏவல் செய்தலையும் அஞ்சுதலையுமே பழிக்கின்றார். ‘பேணாது பெண் விழைவான் என்பதற்கு அறத்தினையும் பொருளினையும் பேணாது மனையாளைக் காதலிப்பான்’ என்று மனக்குடவர் கூறுகின்ற உரையினைக் காண்போம்” என்று தொ.பொ.மீ வாதிடுகிறார்.

தந்தைவழிச் சமூக விழுமியங்களில் ஆழ்ந்த தமிழ்நெஞ்சங்கள், தொ.பொ.மீயின் இந்த வாதத்தால் நிறைவு கொள்ளலாம். இந்த விவாதங்களைப் பெரியார் எப்படி எதிர் கொண்டார் என்பதற்குச் சான்றுகள் கிடைக்கவில்லை எனினும் அவரது பகுத்தறிவு வழியில் நிற்போருக்கு இந்த விளக்கங்கள் மீது கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் உண்டு.

அறம் பொருள் பேண ஆடவனுக்குரிய கடமைகள் பெண்களுக்கு விதிக்கப் பட்டுள்ளனவா? இவற்றைச் சுதந்திரமாகச் செய்யும் உரிமை பெண்களுக்கு உண்டா? ஆடவனுக்கு நிகராகப் பெண்ணுக்கும் இக்கடமைகள் இருந்திருந்தால், ஆடவனின் இணைவிழைச்சு (இத்தொடர் இக்காலத்தது) நாட்டத்தை வேட்கையைப் பெண் மறுத்திருப்பாளே, மாறாகத் திருக்குறள் காட்டும் பெண் – தலைவி – பொருள் நாடிச் செல்லுகின்ற தலைவனைத் பாராட்டுகிறவளாக இல்லை, தடுப்பவளாகவே காமத்துப் பாலில் காட்டப்படுகிறாள்.

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை. - குறள் 1151

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிதாற்றிப்

பின்னிருந்து வாழ்வார் பலர். - குறள் 1160

இப்படிப் போராடுவபவளாகத்தான் தலைவி திருக்குறளில் சித்தரிக்கப்படுகிறாள்.

சங்க இலக்கியங்களை வீரநிலைக் காலம் அல்லது இயற்கை நெறிக்காலம் என்று குறிப்பது இக்கால ஆய்வாளர்களின் மரபு. சங்க காலப் புலவர்களின் பல கண்ணோட்டங்களிலிருந்து திருக்குறள் மாறுபட்டது என்பதைப் பல ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். திருக்குறளில் பரத்தையர்ப் பிரிவை நீக்கி ஊடலுக்கு வழிகாட்டியவர் என்றும், ‘மருதத்திணையைத் தூய்மைப் படுத்தியவர்‘ என்றும் திருவள்ளுவரைத் தொ.பொ.மீ. போன்றவர்கள் பாராட்டுகின்றனர். இப்படிச் சிந்தனை ஒழுங்கை அமைத்துக் கொண்ட வள்ளுவர் பொதுக்கடமைகளுக்கு இடையூறாகும் நோக்கத்திலேயே ‘பெண்வழிச் சேறலை’க் கண்டனம் செய்தார் எனில், பரத்தையர் பிரிவைப் போலப் பிரிவாற்றாமையையும் நீக்கி இருத்தல் வேண்டுமல்லவா?

தமிழறிஞர்களின் உரைகள் ஒருபுறமும், பெரியார் எழுதிய கேள்விகள் மறுபுறமும் நீடிக்கின்றன. பெண்ணிய நிலைப்பாட்டில் நின்று, துணிவாகச் சிந்திக்கும் யாரும் பெரியார் கேள்விகளின் நியாயத்தை உணர்ந்து கொள்வார்கள். தமிழ் அறிஞர்கள் சொல்லும் உரை விளக்கங்கள் குறித்துப் பெரியார் இப்படிச் சொன்னார்.

“இனி இதற்கு விசேட உரைகளும் தத்துவார்த்தங்களும் பலப்பல சொல்ல பல வித்துவான்கள் முந்தக்கூடும். ஆனாலும் தத்துவார்த்தமும் விசேட உரையும் சொல்ல முடியாத சப்தங்களும் எழுத்துக்களும் வாக்கியங்களும் செய்யுள்களும் உலகத்தில் கிடைப்பது அரிது என்பது யாவரும் அறிந்ததாகும். ஆதலால் இதற்கு மாத்திரம் தத்துவார்த்தமும் விசேட உரையும் கொண்டு பொருள் கூற வேண்டிய காரணம் அறிவாளிகளால் ஒப்புக் கொள்ளக் கூடியதாகும்“.

- பெண் ஏன் அடிமையானாள்? பக்கம் 21

ஒடுக்குமுறைக்கு எதிரான சிந்தனை என்பது, பெண் ஒடுக்குமுறையைப் பொறுத்துக் கொள்ளாதது. பெரியாருடைய சிந்தனை வளர்ச்சியை இந்த நோக்கில் தொடர்ந்து கவனித்தால் அவர் ஒவ்வொரு தளையாக உடைத்தெறிய முயல்வதையே காணலாம். பால்ய மண எதிர்ப்பு, கைம்பெண் மண ஆதரவு, புரோகிதத் திருமண மறுப்பு, சாதி திருமண எதிர்ப்பு, சடங்கு மறுப்பு, தாலி மறுப்பு என்று தொடர்ந்த அவரது முயற்சிகள் ஒரு கட்டத்தில் திருமண மறுப்பு என்ற புள்ளியை நெருங்குவதில் வியப்பு எதுவுமில்லை. திருமணம் தேவையற்றது என்ற கருத்து அவருக்குப் பிற்காலத்தில் தோன்றிய ஒன்றுதான். மணியம்மையாருடன் அவர் செய்து கொண்ட வாழ்க்கை ஒப்பந்தம் 1949 ல். திருமண மறுப்புப் பற்றிய திட்டவட்டமான கருத்தக்களை 1967 ல் தான் வெளியிடுகிறார்.

காலச்சுவடு செம்டம்பர் 04 - இதழில் தோழர் இரவிக்குமார் எழுதிய கட்டுரையில்,“திருமணம் என்பதைக் கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என 1933 முதல் 1973 வரை பலமுறை பேசிய பெரியார்” என்று கூறுகிறார். திருமணம் கிரிமினல் குற்றம் என்று பெரியர் சொன்னதை அவருடைய ‘புலனாய்வுக் கட்டுரை‘ எடுத்தக் காட்டவில்லை. தோழர் விடுதலை இராசேந்திரன் ஒரு கருத்தரங்கில் இந்தக் கால வேறுபாட்டை மிகத் தெளிவாக விளக்கினார்.

பெரியாருடைய செயல்களாக இரவிக்குமார் சுட்டிய எதுவும் இரவிக்குமார் கண்டுபிடித்தது இல்லை. வேறு யாரும் துப்பறிந்து சொன்ன தகவல்களும் இல்லை. அனைத்தும் பெரியாரால் ஒளிவு மறைவு இன்றி முன்வைக்கப்பட்டவை. வெகுகாலத்துக்கு முன்பு பேராசிரியர் க.அறிவழகன் அவர்களிடம் “பெரியார் ஏன் இப்படி ஒரு திருமணத்தை இந்த வயதில் செய்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டேன். திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்ததற்கு இந்தத் ‘திருமணமும்’ ஒரு முதன்மையான காரணம். பேராசிரியர்.க.அறிவழகன், பேராசிரியர்.க.அன்பழகனின் தம்பி, மிகத் தீவிரமான தி.மு.க.காரர். இருந்தும் அவர் சொன்ன பதில் இன்றும் என் நினைவில் நிற்கிறது.

“பெரியார் யோக்கியன்”

பெரியாருக்கும் மணியம்மையாருக்கும் ஏற்பட்ட உறவை ஒப்பந்தம் எனலாம். மற்றவர்கள் மணம் என்று சொல்லாம். இதில் யாரும் யாரையும் ஏமாற்றவில்லை. ஒரு புரிதலின் பேரில் ஏற்பட்டது. இதை அவர்கள் மறைக்கவில்லை. மணியம்மையார் ஒரு மனையாளாகிப் பெரியாருக்குத் தொண்டு செய்யவில்லை. தோழர் இரவிக்குமார் சுட்டிக் காட்டுகிற அளவில் நிற்கவுமில்லை. அவர் பெரியாரின் தோளோடு தோள் இணைந்து சமூகப் பணியாற்றியவர். அவர் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் தலைவியாகிப் பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.

இந்த ஒப்பந்தத்தை ஏன் இவர்கள் செய்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி இன்னும் கேட்கப்படலாம். “திருமணம் கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும்” என்பது உரத்த சிந்தனைக்காக வைக்கப்பட்ட ஒரு கோட்பாடு. திருமணம் தேவையற்றது என்பதற்கான நியாயங்களைப் பெரியார் முன் வைத்தார். தமிழகத்தில் சிந்தனையாளர்களால் பெரிதளவும் இது விவாதிக்கப்படவில்லை எனினும், உலக அளவில் சிந்தனையாளர்களாலும் பெண்ணியவாதிகளாலும், கூர்மையாக விவாதிக்கப்படுகிறது. சில நாடுகளில் ‘மணம்’ இல்லாமலேயே ஆண், பெண்கள் சேர்ந்து வாழ்கின்றனர். இந்திய, தமிழகச் சூழல்களில் இது இன்னும் நீண்டகாலமாகலாம். அது வரையிலும் திருமணம் தேவையற்றது என்பது கருதுகோளாக முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்படுவதை எப்படித் தவிர்க்கமுடியும்?

சில நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம் என்பதாலேயே அவற்றை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பது பொருளில்லை. இந்திய அரசியல்சாசனம், இந்தியா என்கிற நாடு, சட்டமன்றம், நாடாளுமன்றம் இவற்றை எல்லாம் ஏற்றுக்கொண்டவரில்லை பெரியார். அனால் இவற்றில் இருந்துக் கொண்டே இவற்றுக்கு எதிரான கருத்துக்களையும், போராட்டங்களையும் முன் வைத்தவர். இது நம் எல்லோருக்கும்ன நடைமுறைச் சிக்கல்தாம். இருக்கிறோம், மீற முயல்கிறோம், மீறுகிறோம்.

அதிர்ச்சி மதிப்புக்காக மட்டுந்தான் பெரியார் திருமணம் குறித்த இந்தக் கருத்தை வெளியிட்டார் என்றும் தோழர் இரவிக்குமார் எழுதியுள்ளார். ‘அதிர்ச்சி மதிப்பு’ என்பதை ஒரு விவாதத்துக்காக ஒப்புக் கொள்வதாய் இருந்தாலும், வைதீகத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் ஒரு சமூக அமைப்பின் மாற்றம் கருதிச் சொல்லப்படும் எந்தவொரு கருத்தும் வைதீகவாதிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாகத்தான் இருக்கும்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களும் பிரடெரிக் ஏங்கல்ஸ் அவர்களும், தங்களது நுண்மாண் நுழைபுலத்தினால் கண்ட ஆய்வு முடிவுகள், இருக்கிற நிலைமையின் புரவலர்களுக்கு (Patrons of statusquo) அதிர்ச்சி அளிப்பதாகத்தான் இருந்தன. ஆய்ந்து கண்ட முடிவுகள் என்பதால் எதிரிகள் இக்கருத்தக்களை ஆரத்தழுவிடவில்லை.

தேவதாசிகள் என்போர் விபச்சாரிகள் என்பதும் பெரியாரது கருத்தாக இருந்துள்ளது என்கிறார். எந்தச் சுழலில் இத்தகைய கருத்துக்களைச் சொன்னார் என்பது நமக்குத் தெரியவில்லை. ‘பெண் ஏன் அடிமையானால்?’ என்ற நூலில் ‘விபச்சாரம்’ குறித்துப் பெரியார் கூறுவதைத் தோழர்கள் பார்க்க வேண்டும்.

“சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும் சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாததேயாகும். ஜீவ சுபாவங்களக்கு இவ்விரண்டு வார்த்தைகளும் சிறிதும் பொருத்தமற்றதேயாகும். வாழ்க்கை ஒப்பந்த நிபந்தனைகளுக்கு மாத்திரம் தேவையுடையதாக இருக்கலாம். ஆனபோதிலும் கூட அவையும் இயற்கைக்கு முரணானது என்பதை யாரும் ஒப்புக்கொண்டுதானாக வேண்டும். அதற்கு ஆதாரம் என்ன வென்றால் மேலே சொல்லப்பட்டது போலவே அவ்விரண்டு வார்த்தையின் தத்துவங்களும் பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டு, ஆண்கள் மீது சுமத்தப்பட்டாலும் ஆண்கள் அதற்காக பயப்படவோ, அவமானப்படவோ, கட்டுப்பட்டிருக்கவோ அல்லாமல் அதைப் பற்றி லட்சியம் செய்யாமையுமே ஆகும்“.

அடிக்கோடு என்னால் இடப்பட்டது இயற்கைக்கு முரணானது என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார்

“இயற்கையோடு இனைந்த வாழ்வு எது என்பதையும், எவ்வித நாட்டுப்பற்று, நடப்புப் பற்று, பிறப்புப் பற்று என்பெதெல்லாம் நடுநிலையிலிருந்து தன் அனுபவத்தையும், தன் மனத்தில் தோன்றும் உணர்ச்சியையும், ஆசைகளையும் ஒரு உதாரணமாகவும் வைத்துக் கொண்டு பரிசுத்தமான உண்மையைக் காணுவானேயானால் அப்போதும் கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு என்பதும் மற்றவர்களை அடிமையாக்கவும் கட்டுப்படுத்தவும் உண்டாக்கப்பட்ட சுயநலச் சூழ்ச்சி நிறைந்த தன்மை கொண்டது என்பதும் தானாகவே விளங்கிவிடும்.“ (மேற்படி நூல் – ஏ -53-55)

இப்போதைய திராவிடர் இயக்கச் செயல்பாடுகளில் பெண்கள் பற்றிய மதிப்பீடுகள் பெரும்பாலும் பாலுணர்வு சார்ந்த வக்கிரங்களாகவே வெளிப்படுவதற்கான மூல காரணம் பெரியாரிடம் இருக்கிறது என்கிறார் இரவிக்குமார்.

திராவிட இயக்கத்தவர் என்று சுட்டப்படுவோரின் பெரும்பாலான படைப்புகள், பெரியாரியக் கண்ணோட்டத்தை எந்த அளவுக்கு உள்வாங்கிக் கொண்டன என்ற கேள்வியைத் தோழர் இரவிக்குமார் போன்றோர் எதிர் கொள்ள வேண்டும். புராணங்களில் ஆபாசம் என்று கண்டவற்றைப் பெரியார் அம்பலப்படுத்தம் போது, அவற்றை அவரது ஆபாசங்கள் என்று முத்திரை குத்துவது பெரியாருக்கு நியாயம் செய்வது ஆகாது.

பெரியார் ‘வழி வந்தவர்கள்’ திரைப்படக் கலையின் மீது ஈடுபாடு கொண்டபோது அம் முயற்சிகளைப் பெரியார் ஆதரிக்கவில்லை என்பதோடு, திரைப்படங்களின் மீது தொடர்ந்து தாக்குதலையும் தொடுத்து வந்தார். அலங்காரப் பதுமைகளாகப் பெண் சித்தரிக்கப் படுவதையும், நடத்தப்படுவதையும் அவர் ஏற்றுக் கொண்டதில்லை. பெண்கள் நகை மாட்டும் ஸ்டாண்ட் அல்ல என்று அவர் கூறியது மிக எளிமையாகச் கொன்ன ஆழமான பண்பாட்டு விமர்சனம்.

பெரியார் இயக்கத்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் சறுக்கல்களுக்குப் பெரியாரைக் காரணம் காட்டும்போது, அதற்கான சான்றுகளை அளிக்க வேண்டும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற போக்கில் சொல்லிச் செல்வது முறையாகாது. திராவிட இயக்கம் உட்படப் பெரும்பாலான இயக்கங்கள் சீரழிந்து போய்த்தான் நிற்கின்றன. இதற்கெல்லாம் யாரைக் காரணம் காட்டுவது? காலச்சுவடு –வில் வெளிவரும் படைப்புகள் ஆபாசங்களாக இருக்கின்றன என்று வாசகர் கடிதங்கள் வருகின்றன. இன்று சங்கராச்சாரியாரின் மீது கொலைக் குற்றம் மட்டுமல்லாது பாலியல் வக்கிரம் சார்ந்த குற்றச் சாட்டுகளும் சுமத்தப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் பெரியார்தான் காரணம் என்பார்களா?

ஒடுக்கப்பட்ட மக்களின் விழிப்புணர்வுக்கும், விடுதலைக்கும், இந்தியத்துணைக்கண்ட அளவில், வழிகாட்டக் கூடிய கோட்பாடுகள் அம்பேத்கரியமும் பெரியாரியமும். இவற்றின் குறைகளை அல்லது போதாமைகளைச் சுட்டி விமர்சிக்கலாம். ஆனால் அவதூறு பொழிவது ஆதிக்கச் சக்திகளுக்குத்தான் நலம் புரிவதாக அமையும். தோழர் இரவிக்குமாரின் கல்வியின் மீதும், சிந்தனை வெளிப்பாட்டின் மீதும், சமூகக் கடப்பாட்டின் மீதும் எனக்கு மரியாதை உண்டு. நாம் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசிக் கொள்வது நாம் நேசிக்கும் மக்களுக்கு நலம் சேர்க்காது.

  தொகுப்பு: மே.கா.கிட்டு. நன்றி: ‘இந்துத்துவச் சூழலில் பெரியாரின் தேவை’ புதுமலர் பதிப்பகம், ஈரோடு