jallikattu 258

2008 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதித்தது. 2008 முதல் 2016 டிசம்பர் வரை உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்துமத அமைப்புகளும், அனைத்து பிற்படுத்தப்பட்ட ஜாதிக்கட்சிகளும், தமிழ்த்தேசிய அமைப்புகளும், ஈழவிடுதலை ஆதரவு இயக்கங்களும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கின்றன. அவர்களின் வாதங்களுக்கு கடந்த 2014, 2015 ஜனவரி காட்டாறு ஏடுகளில் விளக்கமான பதில்களை எழுதியுள்ளோம்.

சி.பி.எம்.எல் ( மக்கள் விடுதலை) போன்ற சில புரட்சிகர மார்க்சிய - லெனினிய பொதுவுடைமை இயக்கங்களும், அரசியல் களத்தில் இயங்கும் சி.பி.எம், சி.பி.ஐ போன்ற கட்சிகளும் ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து ஆதரிக்கின்றன என்பதுதான் நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாத செய்தியாக உள்ளன.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க சட்டம் இயற்ற வேண்டும். பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜல்லிக்கட்டு, மாடுபிடி, ரேக்ளாரேஸ் ஆர்வலர்கள் சார்பில் மதுரை அவனியாபுரம் மந்தைதிடலில் 27.11.2016 ஞாயிறன்று ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் அவர்கள் பேசும்போது,

“ஜல்லிக்கட்டு என்பது காளையை அடையாளப்படுத்துவதற்காக அல்ல; வீரர்களை அடையாளப்படுத்துவதற்காகத்தான். உழைக்கும் விவசாய மக்களின் அடையாளமாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது...

...       ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடுக்க நினைப்பது இந்துத்துவா கும்பலின் அப்பட்டமான அரசியல். ஜல்லிக்கட்டைப் பாதுகாப்போடு நடத்துவதற்கு ஆலோசனை கூற வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். இதனைச் செய்யாமல் தமிழர்களின், விவசாயிகளின் பாரம்பரிய விளையாட்டை நிறுத்துவது எப்படி சரியாகும்.” - (1)

என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகமெல்லாம் பொதுவுடைமை இயக்கங்கள் செயல்படும்முறை, அந்தந்த நாடுகளில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு ஆதரவான போக்காகவே உள்ளன. இந்தியாவில் உள்ள பொதுவுடைமை இயக்கங்கள் மட்டும் தொடர்ந்து பார்ப்பனப் போக்காகவே இயங்குகின்றன என்பதை திராவிடர் கழகத்தின் விடுதலை ஏடு பலமுறை சான்றுகளுடன் விளக்கியுள்ளது. அந்தக் கருத்துக்கு கூடுதலாக வலுசேர்ப்பதே மேற்கண்ட த.மு.எ.க.ச. பொதுச்செயலாளரின் உரை.

‘ஜல்லிக்கட்டு’ அல்லது ‘ஏறுதழுவல்’ என்பது, தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் என்றும், தமிழர்களின் வீரத்தின் அடையாளம் என்றும், தமிழ்நாட்டு விவசாயிகளின் பாரம்பரியம் என்றும் பல காலமாக நமக்குத் திணிக்கப்பட்ட கருத்தை எவரும் ஆய்ந்து பார்ப்பதே இல்லை. விலங்குகளை அடக்குவது தமிழர்களிடம் மட்டும் இல்லை, உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாகத் திகழ்ந்த பண்பாடுதான்.

அந்தந்த நாடுகளில் வாழ்ந்த மிருகங்களின் அடிப்படையில் வேறுபாடுகள் உள்ளன. ஒரே விலங்கை அடக்கி விளையாடும் விளையாட்டுக்களில் நாட்டுக்கு நாடு விதிமுறைகள் மற்றும் வடிவங்களில் சில வேறுபாடுகள் உள்ளன. ஆனால் விலங்குகளோடு மோதி, அவற்றை அடக்குவது அல்லது அழிப்பது என்பது உலகில் இன்று வாழும் அனைத்துவகை மனித இனத்திற்கும் பொதுவான பண்பாடுதான்.

குறிப்பாக, காளையுடன் மோதி அடக்குவது, எருதுடன் மோதி அடக்குவது இரண்டுமே உலகம் முழுக்க இருந்த பண்பாடுதான். இன்று வளர்ந்த நாடுகளாகத் திகழும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ஜெர்மன் போன்ற பல நாடுகளிலும் காளைச்சண்டையும், எருதுச்சண்டையும் பாரம்பரியப் பண்பாடுகளாக இருந்தன.

ஸ்பெயினில் தடை

தமிழர்களின் ஏறுதழுவல் சங்க காலத்திலிருந்தே, சிந்துச்சமவெளி காலத்திலிருந்தே நடந்தது என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதே அளவுப் பாரம்பரியம் கொண்டது தான் ஸ்பெயின் நாட்டின் எருதுச்சண்டை.

ஸ்பெயின் நாட்டிலுள்ள சுயாட்சி பெற்ற மாநிலமான ‘கேடலோனியா’வில் கேட்டலான் பாராளுமன்றத்தில் கடந்த 28.07.2010 அன்று பலநூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட எருதுச் சண்டைக்குத் தடைவிதிக்கக் கோரும் முன்வரைவு விவாதத்திற்கு விடப்பட்டு வெற்றிபெற்றது. (2)

2016-ல் அந்த நாட்டில் உள்ள எருதுச்சண்டை ஆர்வலர்களின் பலமிக்க லாபி வென்றது. “பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்ற அடிப்படையில் ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம் 05.10.2016-ல் மீண்டும் எருதுச் சண்டையை அனுமதித்தது. இந்த நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், எருதுச் சண்டைக்கு நிரந்தரத் தடை கோரியும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஸ்பெயினின் முக்கியப் பகுதியான ‘வாலன்சியா’ நகரில்  bous embolats என்ற ‘எருது அடக்குதல்’ பல நூற்றாண்டாக நடந்துவரும் பாரம்பரிய விளையாட்டு. அங்குள்ள ‘பண்பட்ட மக்களால்’ அந்தப் பண்பாடு தடை செய்யப்பட்டுவிட்டது.(3)

ஸ்பெயினின் Province of Valladolid மாகாணத்தில் உள்ள Tordesillas நகரில் Toro de la Vega festival என்ற ஒரு விழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அவ்விழாவில் மய்ய நிகழ்வு ‘Bull spearing’ என்று கூறப்படும் ‘எருது குத்தும்’ விழா ஆகும். இவ்விழாவில், தனது வீரப்பண்பாட்டைக் காப்பாற்ற விரும்பும் ஒருவர், ஒரு குதிரையின்மீது அமர்ந்து கொண்டு, குத்தீட்டியுடன், எந்த ஆயுதமும் இல்லாத ஒரு காட்டெருமையுடன் போரிட்டு அதைக் கொல்வார். இது ஒரு பாரம்பரிய விளையாட்டு.

இந்த விளையாட்டை ஸ்பெயின் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் பலமாக இயங்கும் PACMA என்ற அமைப்பு கடுமையாக எதிர்த்தது. இந்த விளையாட்டு நடைபெறும் Castile and León மாகாணத்திலேயே மிகப்பெரும் போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தியது. அதன் விளைவாக கடந்த 2016 மே மாதத்தில் இந்த ‘எருது குத்தும் விழா’ தடை செய்யப்பட்டுள்ளது. (4)

எருதுச்சமர்: தேசிய அவமானம்

ஸ்பெயினின் பல பகுதிகளில் நடைபெற்ற இவைபோன்ற ஏறுதழுவல்களை எதிர்த்துக் கடுமையாகப் போராடும் ‘பேக்மா’ அமைப்பினர், தெரிவித்துள்ள கருத்துக்களை மனித நாகரீக வளர்ச்சியில் அக்கறை கொண்டோர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். 11.09.2016-ல் ‘மாட்ரிட்’ நகரில் நடைபெற்ற எருதுச்சமர் எதிர்ப்புப் பேரணியில்,

“ஸ்பெயினில் எருதுச்சண்டையை அனுமதித்தால், நாங்கள் ஸ்பானியர்களாக இருக்க மாட்டோம்”, எருதுச்சண்டை காட்டுமிராண்டித்தனத்தின் பள்ளிக்கூடமாக இருக்கிறது”, "எருதுச்சண்டை - ஒரு தேசிய அவமானம்” என்பன போன்ற பல முழக்கங்களை எழுப்பினர். இதே கருத்துக்களை செய்தியாளர்களிடமும் தெரிவித்தனர். (5)

எருதுச்சமர்களை எதிர்த்த போப்

1566 ஜனவரி 8 முதல் கிறித்துவமதத் தலைமையான‘போப்’ ஆக இருந்தவர் Pope Saint Pius V ஆவார். அவர் 1567லேயே, எருதுச்சமர்களுக்கு எதிராக, எருமைகள் மற்றும் பிற விலங்கினங்களின் நலனுக்காக, ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். போப்பாக இருப்பவர்கள் அவ்வப்போது பிறப்பிக்கும் உத்தரவுகள் மற்றும் அறிவிப்புகள் பொதுவாக Papal Bulla எனப்படும். அந்த உத்தரவுகள்தான் உலகமெங்கிலும் உள்ள கிறித்துவர்களை வழிநடத்தும்.

அப்படி இந்த Pope Saint Pius V அவர்கள் எருதுச் சமர்களுக்கு எதிராக அறிவித்தவை Super prohibitione agitationis Taurorum & Ferarum (“An injunction forbidding bullfights and similar sports with wild animals”), “De Salute Gregis Dominici”, “On the welfare of the Lord’s flock” என்ற பெயரில் தொகுக்கப்பட்டு நூலாக உள்ளது. அந்தத் தொகுப்பு இலண்டன் யேல் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் அரிய நூல்கள் பிரிவில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. ஆம், 1567லிலிருந்தே இவை போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களுக்கு எதிர்ப்புகள் தொடங்கிவிட்டன. (6)

போப்பின் உத்தரவைக் குறிப்பிட்டு கூறியதன் காரணம் என்னவென்றால், உலகையே கட்டுப்படுத்தும் வல்லமை பெற்ற ‘போப்’ கட்டளையிட்டுத் தடுக்க வேண்டிய அளவுக்கு இந்த ‘பாரம்பரியம்’, ‘பண்பாடு’ உலகம் முழுவதும் பரவி இருந்துள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதேயாகும்.

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு, கொசவபட்டி மற்றும் மதுரை மாவட்டத்தின் சில கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று போராடிவரும் கிறிஸ்தவ வன்னியர் சங்கங்கள் ‘போப்’ பின் உத்தரவு பற்றி அறிந்ததாகத் தெரியவில்லை. கிறிஸ்தவர்களாக மதம் மாறினாலும் இந்துமதச் சடங்குகளே இன்னும் வன்னியர்களை வதைக்கிறது என்பதைத்தான் இவை உறுதிப் படுத்துகின்றன.

தடை செய்த நாடுகள்

உருகுவே நாட்டில் 1776 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட எருதுச்சமர் 1912 பிப்ரவரியில் உருகுவே அரசால் தடை செய்யப்பட்டது. அர்ஜன்டைனாவில் 25.07. 1891 முதல் LAW 2786 என்ற சட்டத்தின்படி எருதுச்சமர்கள் தடை செய்ப்பட்டு விட்டன. மெக்ஸிக்கோவில் 1890 முதல் தடை செய்யப்பட்டு விட்டன. (7)

ஃப்ரான்ஸ் நாட்டில் உள்ள 90 சதவிகிதப் பகுதிகளில் 1851 லேயே எருதுச்சமர்கள் தடை செய்யப்பட்டு விட்டன. தெற்கு ஃப்ரான்ஸில் 2011-ல் யுனெஸ்கோ-வால், ‘ஃப்ரான்ஸின் மதிப்புமிக்க பாரம்பரிய அடையாளமாக’ இந்த எருதுச்சமர் அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் அங்கு மட்டும் 2015 வரை எருதுச்சமர் நடந்தது. ப்ரான்ஸில் இயங்கும் The Radically Committee Anti-Corrida (CRAC) என்ற அமைப்பு இந்தப் பாரம்பரிய அடையாளத்தைத் தொடர்ச்சியாக எதிர்த்துப் போராடி, 01.06.2015ல் பாரீஸ் நீதிமன்றத்தின் வழியாகத் தடை ஆணையைப் பெற்றுவிட்டது.

கனடா, டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து, நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் எருதுச்சமர்கள் பாரம்பரிய விழாவாக பல நூற்றாண்டுகள் நடைபெற்றன. தொடர்ச்சியான எதிர்ப்போராட்டங்களினால் பல்வேறு காலகட்டங்களில் அவை தடை செய்யப்பட்டுவிட்டன.

போர்ச்சுகல், கொலம்பியா, வெனிசுலா, பெரு, ஈக்வடார், ஸ்பெயின், தெற்கு டெக்ஸாஸ், அமெரிக்கா கலிஃபோர்னியாவில் போர்த்துகீசியர்களின் பகுதி ஆகியவற்றில் மட்டும் இன்னும் ஏறுதழுவலைப் போன்ற விழாக்கள் நடைபெற்று வந்தாலும் அவற்றுக்கு உலக அளவில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. விரைவில் அங்கும் தடைகள் உருவாகும். (8)

க்யூபா வில் தடை செய்யப்பட்ட எருதுச்சண்டை

1959 ஜனவரி முதல் நாளில் க்யூபா விடுதலை பெற்றது. தோழர் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கத்தின் ஆயுதப்புரட்சியால் கியூபாவில் பொதுவுடைமை அரசாங்கம் நிறுவப்பட்டது. 1901 ஆம் ஆண்டு முதல் க்யூபாவில் எருதுச்சமர் தடை செய்யப்பட்டது. பிறகு புரட்சிக்குப் பிறகு மீண்டும் நடைபெற்றது. சில ஆண்டுகளிலேயே தடை செய்யப்பட்டு இன்றுவரை க்யூபாவில் எருதுச்சமர் நடப்பதில்லை. அந்த நாடு பொதுவுடைமை நாடுதான். இங்குள்ள பொதுவுடைமைக் கட்சித் தலைமைகள் இதைக் கவனிக்க வேண்டும்.(9)

காளைகள், எருதுகள், சேவல்களை மட்டும் மனிதன் அடக்கி விளையாடவில்லை. நாய், நரி, கரடி, வாத்து, குரங்கு, எலி என பலவகை உயிரினங்களையும் அடக்கி ஆண்டிருக்கிறான், அழித்திருக்கிறான். அவற்றைப் பாரம்பரிய விழாக்களாகக் கொண்டாடியும் இருக்கிறான். கொண்டாடிக்கொண்டும் இருக்கிறான். ஒவ்வொரு நாட்டிலும் அதன் தட்ப வெப்ப, உணவு உற்பத்திச் சூழலுக்கு ஏற்ப, அவற்றில் சிற்சில வேறுபாடுகள் உள்ளன. அவற்றை விவரித்தால் கட்டுரை மிகவும் நீளும். தேவைப்பட்டால் பிறகு எழுதலாம். இந்தியாவில் உள்ள பொதுவுடைமை இயக்கங்களுக்காக, சீனாவின் பண்பாடு ஒன்றைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

சீனாவில் நாய் - பூனை உணவு விழாக்குத்தடை

சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள Guangxi province ல்  Yulin நகரில் Yulin Dog and Cat Meat Festival என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான நாய், பூனைகளை ஒரே இடத்தில் வெட்டிக் கொன்று உண்ணும் விழா நடைபெற்று வருகிறது. 600 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விழா நடைபெற்று வருவதாக சீனாவின் பாரம்பரியப் பண்பாட்டுக் காவலர்கள் கூறி வருகின்றனர்.

இந்தப் பண்பாட்டைத் தடை செய்ய வேண்டும் என்று சீனாவில் உள்ள விலங்குநல அமைப்புகள் 2014-ல் சமூகவலைத்தளங்களின் வழியாகப் போராட்டங்களைத் தொடங்கினர். Change.org என்ற இணையதளத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட எதிர்ப்புக் கையெழுத்துக்களைப் பெற்றனர். Humane Society International (HSI), PETA போன்ற அமைப்புகள் ட்விட்டரில் என்ற #StopYulin2015 ஹேஷ்டேக்கை உருவாக்கினர். அது 25 இலட்சத்திற்கும் அதிகமான ட்விட்டுகளை அடைந்தது. யூட்யூபில் 13 இலட்சம் ஹிட்களைப் பெற்றனர்.

நாய்-பூனை உணவு விழாக்களை ஆதரித்தும் பெரும் பேரணிகள் நடத்தப்பட்டன. கடந்த 2014 ஜூன் மாதத்தில் 50,000க்கும் அதிகமான மக்கள் திரண்டு, “நாய்-பூனைக்கறி உண்பது எமது பாரம்பரியம். அது எந்தச் சட்டப்படியும் தவறும் கிடையாது” என்று முழங்கினர்.

பண்பாட்டுக்காவலர்களின் எதிர்ப்பையும் மீறி, சீனாவிலுள்ள பொதுவுடைமைக்கட்சி அரசாங்கம் நாய் - பூனை உணவு விழாக்களுக்குத் தடை விதிக்கும் முன்வரைவை National People's Congress-ல் விவாதத்திற்கு வைத்துள்ளனர். Zheng Xiaohe ( NPC Deputy) இந்த முன்வரைவை வெளியிட்டுள்ளார். இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தப் பாரம்பரியப் பண்பாட்டுக்கு உறுதியாகத் தடை வரும் எனவும் அறிவித்துள்ளார். (10)

சீனாவின் பொதுவுடமைக் கட்சி அரசு, ஒட்டுமொத்த மனிதகுல மேம்பாட்டுக்கு உரிய நிலைப்பாட்டை எடுக்கிறது. க்யூபாவின் பொதுவுடைமைக் கட்சி அரசும் மனித இனத்தைப் பின்னோக்கி இழுக்கும் பண்பாடுகளுக்குத் தடை விதிக்கிறது. இந்தியாவில் உள்ள பொதுவுடைமை இயக்கங்கள் மட்டும் மதவெறி அமைப்புகள் - பிற்படுத்தப்பட்ட ஜாதிவெறி அமைப்புகளின் குரலை அப்படியே எதிரொலிக்கின்றன.

அகில இந்திய அளவில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் பண்பாடு

மேலே கூறுப்பட்டவைகூட எருதுகள் தொடர்பானவை. காளைகள் தொடர்பாகவும் கூறிவிடலாம். கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள், கோவா ஆகிய பகுதிகளில் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு விழாக்கள் நடைபெற்று வந்தன. சிவகங்கைப் பகுதியில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயம், ரேக்ளா ரேஸ் போல பஞ்சாப் மாநிலத்திலும் நடந்துவந்தன. அவை அனைத்துமே உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளன. (11)

இவற்றின்படி, ‘ஏறுதழுவுதல்’ அல்லது ‘ஜல்லிக்கட்டு’ விளையாட்டுக்கள் தமிழர்களுக்கு மட்டுமான அடையாளம், தமிழர்களுக்கு மட்டும் உரிய பாரம்பரியம் என்று நினைத்துக் கொண்டிருப்பதே தவறு என்பது உறுதியாகிறது.

சேவல் சண்டையும் உலகப் பொதுப் பண்பாடே

சேவல் சண்டையும்கூட தமிழர்களின் அடையாளம், தமிழர்களின் பண்பாடு என்று கூறிக்கொள்வது முழுமையான உண்மை அல்ல. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், பாகிஸ்தான், ஈராக், மெக்ஸிகோ, இந்தோனேசியா, பெரு, தாய்லாந்து, க்யூபா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், ப்ரான்ஸ், வியட்நாம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பாரம்பரிய விளையாட்டாகவே பல நூற்றாண்டுகள் நடைபெற்று வந்துள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காலகட்டத்தில் அவை தடை செய்யப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, 1835ல் இங்கிலாந்தில் சேவல்சண்டை தடை செய்யப்பட்டது. 1895ல் ஸ்காட்லாந்தில் தடை செய்யப்பட்டது. க்யூபாவில் 1968ல் தடை செய்யப்பட்டு 1980ல் மீண்டும் அனுமதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் 1976ல் தடை செய்யப்பட்டது. அமெரிக்காவில் வாஷிடன் டி.சி யில் உள்ள லூயிஸியானா என்ற ஊரில் பலகாலமாக நடைபெற்று வந்த சேவல் சண்டை 2007 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் 2015ல் சேவல் சண்டையைத் தடை செய்தது.

இந்தியாவில், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் பல கிராமங்களிலும் பொங்கல் காலத்தில், மிகப்பெரும் அளவில் சேவல் சண்டை நடைபெறுகிறது. ஆந்திராவில் மிகப்பெரும் தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் இச்சேவல் சண்டையில் முதலீடு செய்துள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 1500 கோடி பணம் புரளும் பாரம்பரியப் பண்பாட்டுக்கு உரியது இந்தச் சேவல்சண்டை. கடந்த 2015 ஜனவரியில் 12 ஆம் நாள் உச்ச நீதிமன்றம் சேவல்சண்டையையும் தடை செய்தது. (12)

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்த அசோகர்

விலங்குகளை அடக்கி பழக்கும் அல்லது அழித்துப் பழகும் பண்பாடு உலகம் முழுதும் இருந்தவைதான். அவை தோன்றிய காலத்திலிருந்தே அவற்றுக்கு எதிரான போராட்டங்களும் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. கி.மு 270லேயே அசோகர் இந்தியப் பகுதி முழுவதும் ஏறுதழுவலைத் தடை செய்திருந்தார். இறைச்சிக்காக மாடு வளர்ப்பதைத் தொழிலாக அங்கீகரித்த அசோகர், ஏறுதழுவலைத் தடை செய்திருந்தார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

“தமிழர்களுக்கு மட்டும் உள்ள பிரச்சனை இது. ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறது. உலகம் முழுவதும் தமிழ்நாட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டை மட்டும் எதிர்க்கிறார்கள். ஜல்லிக்கட்டும், சேவல்சண்டையும் தான் நமது, நமக்கு மட்டுமான பண்பாடு” என்று எண்ணிக்கொண்டு அல்லது இந்த எண்ணத்தை அடித்தட்டு மக்களிடம் விதைத்துக்கொண்டு இருப்பவர்கள் இந்தச் சமுதாயத்தை வளர விடமாட்டார்கள் என்பது உறுதி.

இந்தப்பூமி மனிதனுக்கு மட்டுமல்ல; எல்லா வகையான உயிர்களுக்கும் உரிமையுடையது என்ற எண்ணங்கொண்ட மனித மன வள மேம்பாட்டுச் சிந்தனையாளர்கள் உலகம் முழுதும் இவை போன்ற காட்டுமிராண்டிக் காலப் பண்பாடுகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். பெரும்பாலான முன்னேறிய நாடுகளில் வெற்றியும் பெற்று வருகின்றனர். வளர்ந்த நாடுகளில் காலத்துக்கேற்றபடி, தேவைக்கு ஏற்றபடி விளையாட்டுக்களும் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களும் மாறிவருகின்றன.

நாமோ இந்தப் பழக்க வழக்கங்களுக்கு நாம் மட்டுமே உரிமையாளர்கள் என்பது போலவும், அவற்றைக் கட்டிக்காப்பாற்றியே தீருவோம் என்றும் பேசிக் கொண்டிருப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு, தமிழர்களையும் ஏமாற்றும் செயலாகும். எந்தப் பண்பாடாக இருந்தாலும் அவற்றால் மக்களுக்கு நன்மை இருக்க வேண்டும். மக்களின் முன்னேற்றத்திற்கு அவை பயன்பட வேண்டும். ஆனால், அவற்றை நாம் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்தால் அவை எப்படி நமக்குப் பயன்படும்?

நாகர்களின் வீரப்பண்பாடு

வடகிழக்கு மாநிலங்களான, நாகாலாந்து, மேகாலயா, மிசோரம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் நாகா இனத்தவர் வாழ்கின்றனர். நாகா இனத்தில் மொத்தம் 16 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் தனிப்பட்ட சடங்குகள், உணவுப் பழக்கங்கள் உள்ளன. பாரம்பரிய உடை, மொழி, மதம் ஆகியவைதான் அவர்களை இணைக்கின்றன.

திரிபுரா தவிர்த்த மற்ற பகுதிகளில் வசிக்கும் நாகா இனத்தவர் எப்போதுமே இதர இனத்தவரின் மீது படையெடுத்து அடிமைகளைக் கவர்ந்து வந்தனர். தங்களுடைய இனத்தைச் சேர்ந்த பெண்களை மணந்து கொள்வதற்குப் பல பகுதிகளுக்கும் சென்று இதர இன மக்களோடு சண்டையிட்டு அவர்களின் தலையை வெட்டி எடுத்து வருவது வழக்கத்தில் இருந்தது. அதில் அதிக எண்ணிக்கையில் தலைகளைக் கொய்து வருபவருக்கே பெண்கள் மாலை சூட்டுவார்கள். 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் இந்தக் கொலைகார வீர விளையாட்டு முடிவுக்கு வந்தது. (13)

நாகா இனத்தின் வீரத்தை நிரூபிக்கவும், நாகா இன இளைஞன் திருமணம் செய்யவும் அடிப்படைத் தகுதி என்னவென்றால், மாற்று இனத்தவரின் தலையை அதிகமாக வெட்டிக்கொண்டு வர வேண்டும் என்பதுதான். சங்க காலத்தில் தமிழ்நாட்டில், காளையை அடக்குபவனுக்கே மணம் என்ற பண்பாடு இருந்ததைப்போல, நாகர்களும் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைக் கடைபிடித்தனர். இப்போது இல்லை. தடை செய்யப்பட்டுவிட்டது.

அந்தப் பண்பாட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாகர்கள் போராடினால் அதை நாகரீக எண்ணங்கொண்ட எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஜல்லிக்கட்டு, சேவல் சண்டைகளையும் இப்படித்தான் பார்க்க முடியும். தரைப்பகுதியில் வாழ்ந்த மனிதர்களை வெல்வது நாகர்களின் பண்பாடு. மாடுகளை வெல்வது நமது பண்பாடு. மனிதனுக்கு ஒரு அளவுகோல், விலங்குக்கு ஒரு அளவுகோல் என இருக்க முடியாது. இரண்டுமே காட்டுமிராண்டித்தனங்களே.

நாட்டுமாடுகளை அழிக்கச் சதி என்று ஒரு இந்துத்துவக் கருத்தும் பரப்பப்படுகிறது. நாட்டு மாடுகளே இல்லாத நாடுகளில் கலப்பின மாடுகளைக் காக்க காளை - எருதுச்சமர்களைத் தடை செய்யப் போராடுகின்றனர். நாட்டு மாடுகள், கலப்பின மாடுகள், நாட்டுச் சேவல், கலப்பினச்சேவல், நாய், பன்றி, பூனை, நரி, வாத்து என அனைத்து உயிரினங்களையும் காப்பாற்ற, உலகில் அவைகளுக்குள்ள உரிமைகளை நிலைநாட்ட உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்தப் பண்பாட்டு விளையாட்டுக்களில் புரளும் பலகோடி டாலர் வணிகத்தை இழக்க விரும்பாதவர்களும் - ஆதிக்க எண்ணங்களில் மிதப்பவர்களும் தேசிய அடையாளம், தேசியப் பண்பாடு என்ற பெயரில் மேற்கண்ட போராட்டங்களை எதிர்த்து வருகின்றனர். ஆதரவும், எதிர்ப்பும் உலகம் முழுவதும், அனைத்து தேசிய இனங்களிலும் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. ஏதோ இந்தியாவில் மட்டும், தமிழ்த்தேசியத்திற்கு மட்டும் வந்துள்ள சிக்கல் என்பது போல, தமிழர்களை உணர்ச்சி அடிப்படையில் தூண்டிவிடுவது சரியான போக்கு அல்ல.

சான்றுகள்:

1. 27.11.16 தீக்கதிர் நாளேடு

2. 25.09.2011 BBC.Com

3. The guardian 11.09.2016

4. Telegraph 28.06.2016

5. The guardian 11.09.2016

6. www.library.law.yale.edu/news/papal-bull-against-bullfighting

7. www.animanaturalis.org/p/883

8. ஜூன் 2008 Newstatesman

9. ஜூன் 2008 Newstatesman

10. Telegraph 02.01.2015

11. The Animal Welfare Board of India ஏப்ரல் 2016

12. The Animal Welfare Board of India மே 2016

13. 22.11.2016 தி தமிழ் இந்து