தமிழகத்தில் முக்கால் நூற்றாண்டாய் இந்துத்துவாவின் நிம்மதியைக் கலைத்த பெயர், நித்திரையைத் தொலைத்த பெயர், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை தகர்த்த பெயர் ‘தோழர் கலைஞர் மு.கருணாநிதி’. தோழர் பெரியாருக்குப்பின் பார்ப்பனர்களால் இந்து மத வெறியர்களாலும் வெறுக்கப்பட்ட பெயரும் அதே பெயர்தான்.

காரணம் பல இருந்தாலும் உச்ச, உயர் நீதி மன்றங்களில் பார்ப்பனர்களை மட்டுமே My Lord என்று அழைத்து வந்த நிலையில், நாடு முழுவதும் இந்து மனுசாஸ்திரம் எந்த மக்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக, சேரியில் தள்ளி, தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்று ஒதுக்கியதோ அந்தச் சேரியில் பிறந்த வரதராசனாரை இந்தியத் துணைக் கண்டத்தில் முதல்முறையாக, சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக அமர்த்தி, பார்ப்பனர்கள் மற்றும் முதல்நிலை, இடைநிலை சாதியினர் யாராக இருந்தாலும் சேரி மனிதனை My Lord என அழைக்க வைத்தார்.anna periyar and karunanidhi

இந்து மனுசாஸ்திரத்தின்படி, பாவ யோனியில் பிறந்தவர்களாக இழிவுபடுத்தப்பட்ட பெண் இனத்தின் விடுதலைக்குத் தோழர் பெரியார் 1929 -இல் செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்திற்குச் சட்ட வடிவம் கொடுக்க 1989 இல் ‘தகப்பன் சொத்தில் பெண்களுக்குச் சரிபங்கு’ என்று சட்டம், எட்டாம் வகுப்புவரையாவது பெண்களைப் படிக்க வைக்கட்டும் என்று ‘திருமண உதவித் திட்டம்’ என்ற முற்போக்குத் திட்டங்களைச் செயல்படுத்தினார்.

இதே நோக்கத்தில் R.S.S ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசத்தில் ‘கன்னிகாதான யோஜனா’ என்ற பெயரில் திருமண உதவித் திட்டம் உண்டு. அதற்கு அந்தப் பெண் திருமண நாள் வரை கன்னித்தன்மையுடன் இருக்கிறார் என்று மருத்துவர் சான்று வழங்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

உள்ளாட்சி நிர்வாகத்தில், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடுச் சட்டம் கொண்டுவந்தார். ‘பணிக்குச் செல்லும் பெண்கள் அனைவரும் நடத்தை கெட்டவர்கள்’ என்று சொன்ன லோககுரு காஞ்சி சங்கராச்சாரி ஜெயந்திரனின் அறிவிப்போடு கலைஞரின் செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பாருங்கள். கலைஞரைப் புரிந்து கொள்ளலாம்.

சாதியின் இறுக்கத்தைப் போக்க வேண்டு மென்றால் அனைத்து மக்களையும் சரிசமமாக வாழ வைக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ் விடங்களை “சேரி” என்று தனியாக ஒதுக்கி வைக்கக் கூடாது. அனைத்து மக்களும் வாழும் பகுதிகளில் சேரி மக்களுக்கு வாழ்விடங்கள் அமைத்துத் தரவேண்டும் என்ற தோழர் பெரியாரின் வேண்டு கோளை ஏற்று, அவர் பெயரிலேயே பெரியார் நினைவு சமத்துவபுரங்களை நாடு முழுவதும் ஏற்படுத்தி, அந்த இடங்களில் மத அடையாளங் களான கோவில், தேவாலயம், மசூதி என எவற்றையும் அமைக்கக்கூடாது, அதற்குப் பதிலாக நூலகம் பள்ளிக்கூடங்கள்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினார்.

சாதி மறுப்புத் திருமணம் புரிவோருக்கு உதவித் தொகையுடன் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமைச் சட்டம். மூன்றாம் பாலினத்தவரைத் ‘திருநங்கை’ எனப்பெயரிட்டு அழைத்து அவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் முன்னுரிமைச் சட்டம் இயற்றி நாட்டிற்கே வழி காட்டினார்.

சமூகநீதி மறுக்கப்பட்ட சமுதாயங்களான இசுலாமிய சிறுபான்மையினருக்கு நாட்டிலேயே முதல்முறையாக 3.5 சத உள்இடஒதுக்கீடு - தாழ்த்தப் பட்டோரில் தாழ்த்தப்பட்டவர்களான அருந்ததியர் மக்களுக்கு 3 சத உள்இடஒதுக்கீடு - வன்னியர் மற்றும் சீர்மரபினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என அறிவித்து உள்ஒதுக்கீடு, முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த கொங்குவெள்ளாளர்களை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்தது - உயர் கல்வி பயில கிராமப்புற முதல் பட்டதாரி மாணவர் களுக்கு முன்னுரிமைச் சட்டம் போன்ற அடுக்கடுக் கான திட்டங்களால், சமூக நீதியில் சரித்திரம் படைத்து சாதித்த காரணத்தால் கல்வி வேலை வாய்ப்புகளில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்குப் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அடித்து நொறுக்கப்பட்டது. சமூகநீதியைக் கல்வி, வேலை வாய்ப்புகளில் மட்டும் அவர் கடைபிடிக்கவில்லை. தனது கட்சியிலும் மிகத்தீவிரமாகச் செயல்படுத்தினார். பார்ப்பனர்களைத் தவிர்த்து இசுலாமியர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என அனைவருக்கும் உரிய பிரதிநிதித் துவத்தை நடைமுறைப்படுத்தினார். தான் ஆட்சி செய்த அய்ந்து முறையும் பார்ப்பனர் அல்லாதோர் அமைச்சரவையைத்தான் அமைத்தார்.

தோழர் பெரியாரின் இறுதி இலட்சியமான கருவறைத் தீண்டாமையை ஒழிக்க அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை இருமுறை நிறை வேற்றினார். அதற்குப் பார்ப்பனர்கள் உச்சநீதி மன்றம் சென்று தடை வாங்கியபோதும் தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், உயிருடன் இருக்கும்போதே தோழர் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் நீக்கும் வகையில், “பார்ப்பனர் அல்லாத அர்ச்சகரை தமிழக இந்து அறநிலையத்துறை கோவிலில் நியமிக்கப்பட்டார்” என்ற செய்தி வந்த பிறகுதான் மறைந்தார்.

கன்னியாகுமரி கடற்கறையில் தமிழகத்தின் அவமானமான சங்கரமடமும், கடற்பாறையில் இந்துத்துவ அடையாளமான விவேகானந்தர் தியானமண்டபமும் இருக்கின்ற நிலையில் திராவிடர்களின் இழிவைப் போக்கும் வகையில் ‘நான்கு வர்ணத்தை நானே படைத்தேன்’ என்ற கீதைக்கு மாற்றாக தோழர் பெரியார் முன்னிருத்திய ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சமத்துவம் பாடிய வள்ளுவருக்கு 133 அடியில் வானுயர்ந்த சிலை அமைத்து ‘இது திராவிடர் மண்’, ‘வள்ளுவர் திராவிடர்களின் அடையாளம்’ என்று உலகிற்கு உணர்த்தினார்.

இந்துத்துவ எதிர்ப்பில் இறுதிநாள் வரை உறுதியாக இருந்தவர். சேதுக்கால்வாய்த் திட்டத்தை ‘இராமர் பாலம்’ என்று முடக்கியபோது, “இராமன் எந்தப் பொறியியற்கல்லூரியில் படித்தான்?” என்று கேள்வி எழுப்பி, இந்தியா முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்தினார். அதனால் ஆத்திரமடைந்த இந்துமதவெறிச் சாமியார் ஒருவர், “கலைஞரின் தலைக்கு ஒரு கோடி பரிசு” என அறிவித்தார். தனது கட்சியில் ஒரு மாவட்டச் செயலாளர் காவித் திலகமிட்டு வந்தபோதும், தனது அமைச்சரவையில் இருந்த அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் தீ மிதித்த போதும் அழைத்துக் கண்டித்த நாத்திகர்.

இப்படி, தமிழகத்தில் முக்கால் நூற்றாண்டு, பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்தும் இந்துத்துவ சித்தாந்தத்தைச் சிதைத்தும் ஆரியப்பகை வென்ற திராவிடச் சூரியன் என்பதால்தான் சுளுளு சித்தாந்தத்தில் ஊறிப்போன பார்ப்பனர்களால் அவரை ஜீரணிக்க முடியவில்லை. தோழர் பெரியாரைப்போலவே 95 ஆண்டுகாலம் நிறை வாழ்வு வாழ்ந்து மறைந்தார். அவரை மெரினாவில் அடக்கம் செய்ய முடியாது என்று தமிழ்நாட்டு பி.ஜே.பி. அடிமை அரசு முடிவு செய்தபோது அதை வரவேற்று, துக்ளக் சுளுளு குருமூர்த்தி என்ற பார்ப்பனர் அகம் மகிழ்ந்தார், நீதிமன்றம் மெரினாவில் இடம் ஒதுக்கியதும் அதைக் கண்டித்தார்.

இது தோழர் கலைஞருக்கு மட்டும் நேர்ந்ததல்ல. தோழர் அண்ணா அவர்கள் இறந்த போதும் எச்.வி. ஹண்டே என்ற பார்ப்பனர் “மெரினாவில் அண்ணாவை அடக்கம் செய்யக் கூடாது. மீறி அடக்கம் செய்தால் என் வீட்டு நாய் இறந்தால் அண்ணாவின் சமாதியில் அடக்கம் செய்வேன்” என்று கொக்கரித்தார். பிறகு எம்.ஜி.ஆர். அவர்கள் அண்ணாவின் பெயரில் கட்சி தொடங்கி அரசு அமைத்தபோது அந்த அமைச்சரவையில் இடம்பிடித்த ஒரே பார்ப்பன அமைச்சர் இந்த ஹண்டே தான். அண்ணாவிற்கு மெரினாவில் இடம் தரக்கூடாது என்றவர் அண்ணா திமுக வில் அமைச்சரானார்.

எதிர்காலத்தில் R.S.S குருமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் தி.மு.க.-வில் நுழையாமல் தடுக்க தோழர் கலைஞரின் இந்துத்துவ எதிர்ப்போடு தி.மு.க. நடைபோட வேண்டும். தோழர் அண்ணா, கலைஞர் கடைபிடித்த திராவிடர் இயக்கச் சித்தாந்தங்களை தி.மு.க. இளைஞரணியினருக்குப் பயிற்சி முகாம்களை அமைத்துக் கற்றுத் தரவேண்டும். திராவிடர் இயக்க வரலாறுகளைக் கற்றுத்தர வேண்டிய பொறுப்பும் கடமையும் தி.மு.க. செயல்தலைவர் தோழர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு. மிகப்பெரிய ஆளுமையான கலைஞர் மறைந்த வேளையில் அவரின் எழுத்துக்களையும், பேச்சுக்களையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதே தோழர் கலைஞருக்குச் செலுத்தும் சிறந்த மரியாதையாகும்.