கொங்கு குல சிங்கமும் கோமாதாவும்

அன்னிக்கு ஞாயித்துக்கிழமை காலையிலேயே மாட்டிவிட்டேன். நண்பன் கொங்கு குல சிங்கத்திடம்.. டேய்.. எப்படிடா மாட்டுக்கறி திங்கறீங்க, அதை வெட்கமில்லாமல் வெளியில் வேற எப்படி பேசறீங்க,, என்றவனிடம் இதில் என்ன சந்தேகம்? இரண்டுமே வாயில் தான் என்றேன். நக்கல் பண்னாமல் சிரியசா பேசு என்றபின் தொடர்ந்த உரையாடல்….

நான்: சரி, ஏன் மாட்டுக்கறி திங்கக் கூடாது…..

கொ.கு.சி: மாடு அம்மா மாதிரி அது எங்களுக்கு பால் தருது….

நான்: அது பால் தருது. ஆனால், உங்களுக்கு இல்லை. அதன் குட்டிகளுக்கு, எல்லாப் பாலூட்டி விலங்குகளைப் போல, அதை நீ கறந்துட்டு பால் தருது என்கிறாய்…..

கொ.கு.சி: இதென்னப்பா கொடுமையா இருக்கு? மாட்டை நாங்க வளத்துறோம். அது பால் கொடுக்குது கன்றுக் குட்டி குடித்த பால் போக மிச்சத்தைத் தான் கறக்கறோம்.

நான் : நீங்க வளர்த்தாட்டியும் மாடு தானா வளரும். அதில் பால் கிடைப்பதால் நீங்கள் அதை வீட்டில் வளர்த்துகிறீர்கள். அவ்வளவே, சரி உங்க கருத்துக்கே வர்றேன். தோட்டத்துல எத்தனை மாடு இருக்கு?…

கொ.கு.சி:நாலு கறவை மாடு இருக்கு. இரண்டு கெடாரிக் குட்டி இருக்கு. இரண்டு காளைக் கண்ணுன்னு வித்துட்டோம்.

நான்:போன வாரம் ஐந்து கறவை இருந்துச்சே…

கொ.கு.சி: ஒன்னு வத்தக் கறவை ஆயிடுச்சுன்னு வித்துப்போட்டாம், அது இனி பால் கறக்காது வயசாகிப் போச்சு.. கிட்டான் கிட்ட புடிச்சு கொடுத்துட்டோம்.

நான் :நாளைக்கே உங்க அம்மாவுக்கு வயசாகி வேலை செய்ய முடியாமல் போனல் கிட்டான் கிட்ட புடிச்சு கொடுத்துடுவியா?

கொ.கு.சி:என்னாடா அர்த்தம் கெட்ட தனமா பேசிட்டு இருக்கே…

நான்: ஆமாண்டா. நீங்க வத்தக் கறவையை 15000 - 16000 க்கு வித்துப் போட்டு அப்புறம் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள், அப்படின்னு அலறுவது எந்த வகையில் நியாயம்? மாடு அம்மா மாதிரின்னு சொல்லுகிற யாராவது வத்தக் கறவையான பின்னும் தவுடு, புண்னாக்கு போட்டு கடைசிவரை காப்பாத்தி கடைசியில அது செத்த பின்னாடி தொட்டத்துல புதைத்து உள்ளீர்களா??? கேள்வியை முடிக்கும் முன்….

மலேசியா மாநாட்டுக்கு நேரமாச்சு என்றபடி ஓடியவனை இன்னும் காணவில்லை….

சுத்தம் சோறு போடும்

சுத்தம் சோறு போடும்…. சரி எதுங்க கொழம்பு ஊத்தும்?… எனக்கு நீண்ட நாளாகவே இந்த சந்தேகம் இருக்குது என்றபடி வந்தார் கலைக் குழு நாராயணன்.. எனக்கு சுத்தம் சோறு போடும் அப்படிங்கறதில்லையே சந்தேகம் இருக்கு. சுத்தம் எப்படி சோறு போடும் என இருவரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது வந்தது தம்பி விஜயன்.. அட என்ன கள நிலவரம் புரியாம இருக்கீங்க சுத்தம் சோறு இல்லை பீரு கூட தரும் அவ்வளவே ஏன் காரு கூட தரும்.…

நாங்கள் புரியாமல் விழிக்க விளக்கினார் தம்பி விஜயன். லக்னோ நகரத்தைச் சார்ந்த ஐஸ்வர்யா சர்மா என்கிற 10 ம் வகுப்பு படிக்கும் மாணவி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கங்கை நதியின் தூய்மை படுத்தும் திட்டத்தைப் பற்றிய கேள்விகளுக்கான பதிலில், இதுவரை 2958 கோடிகள் செலவு செய்யப்பட்டு உள்ளதாக வந்துள்ளது. அதாவது கண்ணால் பார்த்து உணர முடியாத சுத்ததுக்கு.…

சென்சார் போர்டு உறுப்பினர் சேகர் நாடகத்தில் ஒரு டயலாக் வரும் வெளிநாட்டு அரசியல்வாதி சொல்லுவார் பாலம் கட்டி முடித்த பின் மிச்சம் இருக்கும் காசை பங்கு போட்டுக் கொள்வோம் என, அதற்கு சேகர் சொல்வார் எங்க நாட்டில் பங்கு போட்டு மிச்சம் ஆனால் தான் பாலமே கட்டுவோம் என…. சொல்லி முடிக்கும் முன்….

நான் வடிவேல் கிணத்தை காணோம் என சொன்ன மாதிரி கங்கையில் சுத்தத்தைக் காணோம் என புகார் கொடுக்கப் போகிறேன் என கிளம்பினார் நாராயணன், அட சும்மா இருங்க கங்கையின் சுத்தத்தைக் காண முடியாது உணரத்தான் முடியும் என பதில் வரும் என முடித்தார் தம்பி விஜயன்.…

தமிழ் கூறும் நல்லுலகிற்கு இதனால் சொல்ல வரும் செய்தி…. தமிழா உன் பழமொழி பொய்த்து போகவில்லையடா ….. நிச்சயம் சுத்தம் சோறு போடும்….. யாருக்கு? யாருக்கோ…..

பேர் சொல்லும் பிள்ளை

கிராமத்துப் பக்கம் கணபதியம்மா பாட்டி இருக்கையில் சென்செக்ஸ் கணக்கெடுக்க வந்த ஆபிசருக்கு தாத்தா பெயரைக் கண்டுபிடிக்க எங்க பாட்டி சொன்ன விடுகதைகளுக்கு விடை கண்டுபிடித்து அதன் மூலம் தாத்தா பெயரைக் கண்டுபிடிக்கறதுக்குள்ள போதுன் போதுமுன்னு ஆயிடும் ஆபிசருக்கு….

கட்டுன புருஷன் பெயரை சொல்லக்கூடாது என்பது அந்தக்கால பழக்கம். அடிக்கடி பாட்டியைக் கிண்டல் செய்வேன்.… பெயர் எதுக்கு வைச்சிருக்காங்க? கூப்பிடத்தானே? ஆனால் பேர் சொல்ல ஒரு பிள்ளை வேணுமுன்னு இன்னிக்குப் பிறந்த பிள்ளைகள் கூட பெற்றோர் பெயரைச் சொல்லிக் கூப்பிடும் இக்காலத்தில்… என் தலைவனை பெயரை சொல்லிப் பேசுகிறாயா? என சிலரும், என் தலைவியைப் பெயரை சொல்லிப் பேசுகிறாயா? என சிலரும் முட்டி மோத நமக்குக் கண்ணைக் கட்டி வருது.

இதுல சொல்லாராய்ச்சி வேற? எது சபையில் பயன்படுத்த கூடாத வார்த்தை? வயக்காட்டு பொம்மையா? கொத்தடிமையா? என. நம்ம கோரிக்கையெல்லாம் அதுல இன்னும் இரண்டு வார்த்தைகளை சேர்த்துக்குங்கோ ஒண்ணு ஜெயலலிதா, இன்னொன்னு கருணாநிதி….

பாத பூஜையும் தலை பூஜையும்

இந்து ஆன்மீக கண்காட்சி நடந்தாலும் நடந்துச்சு உடனே சென்னை ஜெயின் பள்ளியில் மாணவர்கள் பாத போஜை செய்ய…..

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இச்செயலை கண்டித்து ஆசிரியர்களின் காலை கழுவுவதுதான் புதிய கல்விக் கொள்கையா? என கேட்க.

பாத பூஜை என்பது நல்ல செயல் தானே? தவறொன்றும் இல்லை என்கிற ரீதியில் தமிழிசை அக்கா முழங்க.

அம்மா, அப்பா, மற்றும் குரு கால்களில் விழுவது தவறில்லை என கருவறைக்குள் போக முடியாத இந்து தொடங்கி கோவிலுக்குள்ளே போக முடியாத இந்து வரை இந்து மதத்தை காப்பாத்த.……

சரி தப்பு இல்லை தானே? அப்புறம் ஏன் முதலமைச்சர் ஜெயலலிதா காலில் அமைச்சர்கள் விழுவதை மட்டும் கிண்டல் செய்கிறீர்கள் எனக் கேட்டால் அவர்கள் காசுக்காக விழுகிறார்கள் என பதில்.

அதன் படியே பார்த்தாலும் உங்கப்பா செர்த்து வைத்திருக்கிற சொத்துக்காகவே நீங்கள் உங்கள் திருமணங்களில் பெற்றோர் காலில் விழுகிறீர்கள் எனக் கேட்டால் எங்கள் நம்பிக்கையைப் புண்படுத்துகிறீர்கள் என்கிறார்கள்.

சரி புண்ணுக்கு மருந்து போடுகிறோம். அதுக்கு முன்னாடி நீங்க ஒண்ணே ஒண்ணு மட்டும் செய்யனும், தலை பூஜை நடத்தணும்..

அதென்ன தலை பூஜை தல அஜித் வருவாரன்னு கேட்கக் கூடாது.. ஆனா அவ்ரு மாதிரியே தெறிக்க விட நாங்க ரெடி… அது என்னவென்றால்,

உங்க மத வழக்கப்படி பிஜேபி யின் இல.கணேசன், எச்.ராஜா, கே.டி.ராகவன், அப்புறம் தமிழிசை அக்கா, பொன்னார் கூட இராம கோபலன், குருமூர்த்தி எல்லோரையும் கரூர் மேட்டு மகாதானபுரம் மாகலட்சுமி கோவிலுக்கு வரச்சொல்லி அவிங்க தலையில் தேங்காய் உடைச்சுட்டு வந்தா புண்ணுக்கு மருந்து போடுகிறோம்..

நீங்க சிரமப்படக்கூடாதுன்னு காட்டாறு உரிமையாளர் பொள்ளாச்சியிலிருந்து நல்ல தெரண்ட தேங்காயை தன் சொந்த செலவில் வாங்கி அனுப்புவார்.. என்ன ரெடியா? தெறிக்க விடலாமா?

நாப்கினும் ஆணுறையும்….

போன வாரம் பாப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு மருந்துக் கடைக்கு போய் மாத்திரை வாங்கும் போது ஒரு பெண்மனி சானிடிரி நாப்கின் வாங்கிச் சென்றார். வழக்கமாகக் கொடுக்கும் வெள்ளை நிற பிளாஸ்டிக் கவர் இல்லாமல் கருப்பு நிற கவரில் கொடுத்தார் கடைக்காரர். அப் பெண் சென்ற பின் கடைக்காரரிடம் கேட்டேன். நாப்கின் வாங்கிப் போறது வெளியே தெரியக்குடாதுன்னு இந்த ஏற்பாடு என்றார். இதற்கு மட்டும் தானா என்றவனிடம், இல்லீங்க சார் நீங்க காண்டம் வாங்கினாக் கூட இதே மாதிரி கருப்பு கவரில் தான் போட்டுக் கொடுப்பேன் என்றார்.

வீட்டிற்கு வந்து என் துணைவியிடம் இந்த விசயத்தைச் சொன்னபோது இவ்வளவு ஏன் சுய சேவை உள்ள பல் பொருள் அங்காடிகளில் கூட ( selef service departmental stores) நாப்கின் வைத்து இருக்கிற வரிசைன் அருகில் கருப்பு நிற காகித பை வைத்து இருப்பார்கள், என்ற செய்தியை சொன்னார்.

பாலியல் சம்பந்தப்பட்ட தெளிவான திறந்த உரையாடலுக்கே நாம் இன்னும் தயாராகவில்லை என்பதே இங்கு பிரச்சனை. பாலியல் கல்வி பற்றிப் பல வருடங்களாகப் பேசிக் கொண்டு மட்டுமே இருக்கிறோம் என்ற சூழலில் மனதிற்கு நம்பிக்கை தந்தது அந்த செய்தி.

அகமதாபாத்தைச் சேர்ந்த அதிதி குப்தா என்ற பெண் தொடங்கியிருக்கும் Menstrupedia.com என்ற இணையதளம் பெண் உடலை பற்றியும் மாதவிலக்கைப் பற்றியும் அம்மாக்களே தங்கள் குழந்தைகளுக்குப் புரிய வைக்க முடியாத அளவிற்கு எளிதாகப் புரிய வைக்கிறது. ஏனெனில் அந்த இணைய தளம் 9 முதல் 11 வயது குழந்தைகள் நன்கு புரிந்து கொள்ளுமளவிற்கு காமிக்ஸ் வடிவில் இருப்பது இன்னும் சிறப்பு. இன்னும் இந்த இணையதளத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆநளேவசரயீநனயை உடிஅஉைள என்ற புத்தக வடிவிலும் வந்துள்ளது.

நம் கடமை, அந்த இணையதளத்தை நன்கு ஆராய்ந்து சரியாக இருக்குமெனில், அதை நம் குழந்தைகளிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதேயாகும். மற்றும் அதே போல சிறுவர்களுக்கும் இதே வகையில் காமிக்ஸ் வடிவில் ஆண்களின் உடலமைப்பு மற்றும் பருவ மாற்றங்கள் பற்றிய செய்திகள் அடங்கிய இணைய தளம் விரைவில் வடிவமைக்க பட வேண்டியது அவசியம்.