kattaru nov17 wrap 500

புத்த மதமும், சமண மதமும் அவை தோன்றிய காலம் முதல் தமிழ் நாட்டிலும் வளரத்தொடங்கின. கி.பி.3 ஆம் நூற்றாண்டுக்கும் முந்தைய சங்க காலத்திலேயே புத்தமும், சமணம், ஆசீவகமும், சார்வாகமும் தமிழர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. ஏராளமான புத்த, சமண மடங்களும், விகாரங்களும் இங்கு மக்களை பெளத்த வழியில் வழிநடத்தியுள்ளன.

இந்து - பார்ப்பன ஆதிக்கவாதிகளின் கடும் எதிர்ப்பால் அழிவைச் சந்தித்த புத்தம், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அயோத்திதாசர், இலட்சுமிநரசு, கோலார் தங்கவயல் அப்பாத் துரையார் போன்றோரின் முயற்சியால் மீண்டும் தழைக்கத் தொடங்கியது. அகில இந்திய அளவில் 1956 ல் தோழர் அம்பேத்கர் பவுத்தம் ஏற்றார். அதற்கு முன் 1935 லேயே இந்து மதத்தைவிட்டு வெளியேறப் போவதாக ஒரு அறிவிப்பைக் கொடுக்கிறார்.

இந்து மதத்தை விட்டு வெளியேறுவது என்ற அந்த அறிவிப்பு, பார்ப்பனர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அந்த அறிவிப்பைத் தோழர் பெரியார் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். தோழர் அம்பேத்கருக்குப் பின் வருமாறு தந்தி அடித்துள்ளார்.

“தாங்கள் புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்தது பற்றி வாழ்த்துக் கூறுகின்றேன். தங்களது முடிவை எக்காரணத்தாலும் மாற்ற வேண்டாம். அவசரப்பட வேண்டாம். முதலில் குறைந்தது 10 லட்சம் பேரையாவது மதம் மாற்ற வேண்டும். பிறகே தாங்கள் மதம் மாறுவது பிரயோஜன மாகவிருக்கும். மலையாளம் உட்பட தென்னிந்தியா தங்களது முடிவுக்கு பலத்த ஆதரவு அளிக்கும்.” (குடி அரசு - வேண்டுகோள் - 20.10.1935)

என்று தந்தி கொடுத்தார். மதமாற்றம் என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல; இந்து மதத்தால் அடக்கப்பட்டுள்ள பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்டவர்களின் விடுதலைக்கும் அதுவே வழி என்கிறார்.

“தோழர் அம்பத்கார் அவர்களின் கர்ஜ்ஜனையும், வீரமும், ஞானமும் நிறைந்த தீர்மானமும் பொது ஜனங்களால் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும் அவர் எவ்வளவு தான் தூற்றப்பட்ட போதிலும் அதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மாத்திரமல்லாமல் இந்தியாவில் உள்ள இந்துக்களில் பார்ப்பன ரல்லாத மக்களாகிய 100க்கு 97 விகிதாச்சாரமுள்ள 24 கோடி இந்து மக்களின் விடுதலைக்கு சர்வசமய சஞ்சீவி ஆகப் போகிறது.” (குடி அரசு 20.10.1935)

20 ஆண்டுகளுக்குப் பிறகு 1956 ல் அக்டோபர் 14, 15 தேதிகளில் அம்பேத்கர் இலட்சக்கணக்கான மக்களுடன் நவயான பெளத்தத்தை அறிவிக்கிறார் - ஏற்கிறார். அதையும் பெரியார் வரவேற்கிறார். ஆதரவாக நிற்கிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அம்பேத்கரின் இந்து மதஎதிர்ப்பு, பெளத்தம் ஏற்பு நடவடிக்கைகளுக்கு அழுத்தமான ஆதரவை வழங்கி வந்தார்.

buddha 600மக்கள் மறுமலர்ச்சித் தடம் MMT

அப்படிப்பட்ட தீவிர புத்த மத ஆதரவா ளரான பெரியாரை, பெளத்தம் ஏற்கும் மக்களுக்கு எதிரியாகக் கட்டமைக்கும் வேலையை இன்று புதிதாக பெளத்தம் ஏற்கும் சிலர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 08.10.2017 ல் சென்னை, கூடுவாஞ்சேரியில் ‘மக்கள் மறுமலர்ச்சித் தடம்’ என்ற அமைப்பு பெளத்தம் ஏற்பு நிகழ்வை நடத்தியது. அதில், ஜவஹர்லால் நேருவுக்குக்கூட நன்றி தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஆனால் ‘பெரியார்’ என்ற சொல் அந்தத் தீர்மானங்களில் எந்த இடத்திலும் வராமல் கவனமாகத் தவிர்க்கப் பட்டுள்ளது.

பெரியார் பெயரையோ, படத்தையோ தவிர்த்தது குற்றமல்ல; அது அவரவர் விருப்பம். ஆனால் அப்படித் தவிர்த்தது தான் மிகச் சிறந்தது. தவிர்த்தது தான் பெரியாருக்குப் பெருமை சேர்த்துள்ளது என்று கூறவேண்டிய அளவுக்கு அவர்களது சில கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேறியுள்ளன. மாநாட்டின் பல செயல் திட்டங்களும், அறைகூவல்களும், கோரிக்கைகளும் நமக்கு உடன்பாடானவை தான். அவற்றை வரவேற்கலாம். கோரிக்கை எண்5 மற்றும் 7 ஆகியவை பற்றி மட்டும் நாம் முரண்பட வேண்டியுள்ளது.

5.  “இந்தியக் குடிமக்கள் யாவரும் தமது மனச் சான்றின்படி எந்த ஒரு மதத்தினையும் சுதந்திரமாகவும், பயமின்றியும், பாதுகாப்புடனும் தேர்வு செய்துக் கொள்ளவும் கடைபிடிக்கவும் இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 25 உறுதி செய்துள்ள அடிப்படை உரிமையான மதச் சுதந்திர உரிமையை மைய அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த அடிப்படை உரிமைக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல்களை அடியோடு ஒழிக்க மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.”

7. “இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 26 ல் வழங்கப்பட்டுள்ள Freedom to manage religious affairs எனும் அடிப்படை உரிமையை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”

ஜாதி - மதங்களைக் காக்கும் பிரிவு 26

இந்த இரண்டு சட்டப்பிரிவுகள் தான் ஜாதியையும், மதத்தையும் - இந்து மதப் பண் பாடுகளையும், ஜாதி ஆதிக்கப் பண்பாடுகளையும், இந்து மதப் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் பாதுகாக்கின்றன. இன்று பிராமணாள் கஃபே, தேவர் டீ ஸ்டால், கவுண்டர் மெஸ் என்று ஜாதிப் பெயரில் இயங்கும் கடைகளுக்கும் - வன்னியர் மேட்ரிமோனியல், முதலியார், முத்துராஜா, நாயக்கர், செட்டியார் மேட்ரிமோனியல்களுக்கும் - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியாத நிலைக்கும், அகமண முறைக்கும், பெண்ணடிமைத் தனத்திற்கும், அனைத்து வகையான ஜாதிய வன் கொடுமைகளுக்கும் அடிப்படையாக இருக்கின்றன. அவற்றைப் ‘பழக்க வழக்கங்கள்’ என்ற பெயரில் அரசியல் சட்டப் பாதுகாப்பையும் வழங்குகின்றன.

இந்திய வரலாற்றில் பார்ப்பனர்கள், ‘பழக்க வழக்கங்கள்’ என்ற பெயரில் இந்து, ஜாதி ஆதிக்க, பார்ப்பன ஆதிக்கப் பண்பாட்டைத் திணிக்கத் திட்டம் போடத் தொடங்கிய காலத்திலேயே தோழர் பெரியார் அதைச் சரியாகக் கண்டு, கடுமையாக எதிர்த்தார். 03.07.1929 ஆம் நாள் சென்னை நேப்பியர் பார்க்கில் (தில்லை வனத்தில்) நடைபெற்ற சென்னை ஆதி திராவிட மகா ஜனங்களின் சுயமரியாதை மாநாட்டின் சொற் பொழிவில் பெரியார்,

“நமது சுயமரியாதை இயக்க மேற்பட்டு 2, 3 வருடங்களேயானாலும் அது நமது நாட்டில் ஒருவித உணர்ச்சியை உண்டாக்கி இருக்கின்றது. அநேக விஷயங்களில் கடுமையான எதிர்ப்புகள் மறைந்து விட்டன. சாமியையும் சாத்திரத்தையும் தொட்டதற் கெல்லாம் முட்டுக்கட்டையாகக் கொண்டு வந்து போட்டுக்கொண்டிருந்தவர்கள் இப்போது அதை ஒருவிதத்தில் மறைத்துக் கொண்டு பழக்கம் வழக்கம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சாமி, மதம், சாத்திரம் என்கின்ற முட்டுக்கட்டைகளை இன்னமும் தைரியமாக உடைத்தெறியத் துணிந்து விட்டோமே யானால் பழக்க வழக்க முட்டுக் கட்டைகளை பஞ்சாய் பறக்கச் செய்துவிடலாம்.” -( குடி அரசு - 21.07.1929)

என்று அரசியல் சட்டம் எழுதப்படுவதற்கு முன்பே, இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே பழக்க வழக்கம் என்ற சொல்லின் ஆபத்தைக் கண்டு எச்சரிக்கிறார்.

கராச்சி என்ற நகரில் 1931 ஆம் ஆண்டு மார்ச் 27 முதல் 30 வரை நடைபெற்ற அகில இந்திய காங்கிஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரஜா உரிமைத் தீர்மானம் பெரியாரின் எச்சரிக்கையை உறுதி செய்தது. அந்தத் தீர்மானம் பற்றி பெரியார்,

அரசியல் சட்டத்தில் ஜனங்களுடைய ஜீவாதாரமான உரிமை என்பது பற்றிய, விதிப்பிரிவுகளில் “இந்தியாவில் உள்ள சகல சமூகத்தாருக்கும், “அவர்களது கலைகள், சமூக நாகரீகங்கள், பாஷைகள், எழுத்துக்கள், தொழில்கள், பழக்கவழக்கங்கள், மதம், மத தர்மங்கள் ஆகியவை காப்பாற்றப்படும்” என்பதாக ஒரு உத்திரவாதம் அதாவது ஜாமீன் கொடுக்கப்படும் என்கின்ற நிபந்தனையும் சேர்க்கப்படும் என்பதாகத் தீர்மானித்திருக்கின்றார்கள். இது அசோசியேட் பிரஸ் சேதியாகும். மற்றும் 13-ந்தேதி வெளியான எல்லாத் தினசரிகளிலும் காணப் படுவதுமாகும்.

...இந்தியாவில் எத்தனை சமயத்தார், வகுப்பார் உண்டோ அத்தனை வகுப்பாருடைய உரிமைகளையும் பொருத்த கலை ஆதாரங்கள், அதாவது வேதசாஸ்திர புராணங்கள், அவர்களது பாஷைகள், பாஷை எழுத்துக்கள், வகுப்பு கல்விகள், வகுப்பு தொழில்கள், அந்தந்த வகுப்பு பழக்க வழக்கத்தில் இருந்துவரும் நடவடிக்கைகள், ஒவ்வொரு வகுப்பாருடைய மதங்கள், அதாவது சமயம், உட்சமயம், புறச்சமயம், அந்தந்த மததர்மங்கள், அதாவது கோவில், கோவில்சொத்து, மடம், மடங்களின் சொத்துக்கள், மததர்மமான மற்ற காரியங்கள் செய்வதற்கு விடப்பட்டிருக்கும் தர்ம சொத்துக்கள் ஆகியவைகள் எல்லாம் காக்கப்படும் என்பதாக காங்கிரஸ் உறுதிகூறி இருப்பதோடு உத்திரவாதமுமேற்றுக் கொண்டிருக்கின்றது.

...இவற்றை யெல்லாம் பார்த்த பிறகும், நன்றாய் உணர்ந்த பிறகும், இனியும் சுயமரியாதைக்காரர்கள் காங்கிரசைப் பற்றி சிறிதுகூட தாட்சண்யம் பார்க்கவேண்டியதில்லை என்பதாகவும், அது ஒரு பெரிய ஜன சமூகத் துரோக சபையாகவும், தாழ்த்தப்பட்ட ஏழை மக்களை ஏமாற்றிக் கழுத்தறுக்கும் வஞ்சக சபையாகவும் இருக்கின்ற உண்மையைப் பொது ஜனங்களுக்குப்படும்படி விளக்க வேண்டியதையே முக்கிய கடமையாகக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது - (தோழர் பெரியார், குடி அரசு - 19.07.1931)

1931 ல் மட்டுமல்ல; தொடர்ச்சியாக இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட காலம் வரை இந்தப் பழக்க வழக்கம் என்ற ஆபத்தை எதிர்த்துப் போராடிவந்துள்ளார். சில சான்றுகள்.

1931 ம் வருஷத்திய காங்கரஸ் வேலைக் கமிட்டியானது பிரஜா உரிமை திட்டம் என்பவற்றில் ஒன்றாக “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வகுப்பார்கள் சம்பந்தப்பட்ட வரையில் அவரவர்களுடைய கலை, பாஷை, எழுத்து, கல்வி, தொழில், மத ஆச்சாரம், மத தர்மம் ஆகியவைகள் காப்பாற்றிக் கொடுக்கப்படும்” என்கின்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது. (தோழர் பெரியார்,குடி அரசு - 06.09.1936)

“கராச்சி காங்கிரஸ் பிரஜா உரிமை திட்டம் என்பதில் ஜாதி, மதம், தொழில், ஜாதிமத உரிமை, பழய சாஸ்திரம், பழக்க வழக்கம், நடைமுறை ஆகியவைகளை காப்பாற்றிக் கொடுப்பதாக உத்தரவாதமளிக்கப் பட்டிருக்கிறது. இதன் அருத்தம் என்ன என்று பாருங்கள். சமூக சம்மந்தமாக உள்ள குறைபாடு களிலும், பல மக்களுக்கு இருந்துவரும் கொடுமை களிலும், சில மக்கள் அனுபவித்து வரும் தந்திரமான மேன்மையிலும் சிறிதும் கை வைப்பதில்லை என்பது தான் இன்றைய அரசியல் தத்துவமாகும்.

இந்திய ஏழை மக்களுக்கும் பாமர மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் போதிய அறிவும் சொரணையும் இல்லாததால் இன்று அரசியல் வேறாகவும் சமூக இயல் வேறாகவும் இந்நாட்டில் இருந்து வர முடிகின்றது.

...புரட்சி உணர்ச்சி உள்ள இந்த காலத்தில் இன்னமும் அரசியல் திட்டத்தில் ஜாதியைக் காப்பாற்ற உரிமையை பிரத்தியேகமாய் குறித்து வைத்துக்கொண்டு அரசியல் மூலம் மக்களுக்கு சுதந்திரமும் விடுதலையும் சம்பாதித்துக் கொடுக்கிறோம் என்கின்ற ஒரு கூட்டம் இந்த நாட்டில் இருக்குமானால் - இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்றால் இந்நாட்டு மக்கள் மனிதத் தன்மை இன்னதென்று உணராத நடைப் பிணங்கள் என்று ஏன் சொல்லக்கூடாது என்று கேட்கின்றேன்.” (தோழர் பெரியார், குடி அரசு - 06.06.1937)

1931 காரச்சி காங்கிரசில்  நிறைவேற்றப்பட்ட பிரஜ உரிமைத் தீர்மானம், பெரியாரின் தொடர்ச்சியான எதிர்ப்புகளை மீறி, இந்திய அரசியல் சட்டத்தில் இணைக்கப்பட்டது. அந்தப் பிரிவு தான் 26. ஜாதி, மதங்களையும், மத நிறுவனங்களையும் பாதுகாக்கும் அந்த 26 வது பிரிவைத்தான், உறுதிப்படுத்தவேண்டும் என்று மக்கள் மறுமலர்ச்சித் தடம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உலக அளவில் அதுவரை நடந்திராத போராட்டம்

மேற்கண்ட 25 மற்றும் 26 பிரிவுகள் மட்டுமல்ல; 13, 19, 25, 26, 368, 372(1) ஆகியவையும் ஆகிய சட்டப் பிரிவுகளும் பார்ப்பன, ஜாதிய ஆதிக்கத்திற்குப் பாதுகாப்புக் கொடுக்கின்றன. அதனால் தான் தோழர் பெரியார் 1957 லேயே இந்திய அரசியல் சட்டத்தின் மேற்கண்ட பிரிவுகளை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார்.

பெரியார் விடுத்த போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் அரசியல் சட்டத்தைக் கொளுத்தினால் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என அறிவித்தார்.  ஜாதி ஒழிப்பிற்காக இது போன்ற அடக்குமுறைகள் எதற்கும் அஞ்சாமல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் சட்டப் பிரிவுகளைக் கொளுத்தினர்.  கொளுத்தியவர்களைச் சிறையில் அடைக்க இடம் இல்லாததால் பெரும் பாலானவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

சமுதாயத்தின் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த தோழர்களும் ஏறத்தாழ 4000 பேர் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனைக்குத் தயாராகச் சட்டங்களைக் கொளுத்தினார்கள். இப்போராட்ட வரலாறு, “சாதியை ஒழிக்க அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்” என்ற நூலாக வெளிவந்துள்ளது. அதில்  தோழர் திருச்சி செல்வேந்திரன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் சில பத்திகளைப் பார்ப்போம்.

“நிறைமாதக் கர்ப்பிணிகள், எழுபது வயதைத் தாண்டிய முதியவர்கள், பதினெட்டு வயது கூட நிரம்பாத சிறுவர்கள் கைக்குழந்தையோடு தாய்மார்கள், இரண்டு கண்களும் தெரியாத திருவரங்கம் மகாமுனி போன்ற தொண்டர்கள், ஒரு கால் முடமாகிக் கட்டை ஊன்றித் தத்திச் செல்லும் திருவரங்கத்துக் கொத்தனார் ஒருவர், அன்றாட ஜீவனத்திற்கே அல்லாடுகிற ஏழைத் தொண்டர்கள் இவர்களோடு பட்டுப் பீதாம்பரமும், ஜரிகை, உத்தரியமும், வைரமோதிரங்களும், மைனர் சங்கிலிகளுமாய் ஜொலிக்கும் தஞ்சை, திருச்சி, தென் ஆற்காடு மாவட்டத்துப் பல நூறு ஏக்கர்களுக்குச் சொந்தக்காரர்களான பெருநில உடமையாளர்கள், குட்டி ஜமீன்தார்களின் குபேரக் குடும்பத்துப் பிள்ளைகள் எல்லாம் பெரியாரின் ஆணை ஏற்றுக் கைகோர்த்து, ஒரே குடும்பமாய் கருஞ்சட்டை இராணுவம் நடந்தது. மூன்றாண்டுகால கடுங்காவல் தண்டனை என்ற அச்சுறுத்தும் சட்டம்இழவு வீட்டு வாசல்படியில் கிடக்கும் எச்சில் இலை போல் கிடந்தது.

இந்தத் தண்டனைக் காலத்தில் சிறையிலிருந்த திருவாரூர் முத்துக்கிருஷ்ணனின் மனைவி காலரா வினால் இறந்தார். இறந்த மனைவியை அடக்கம் செய்ய முத்துக்கிருஷ்ணன் பரோலில் வரவில்லை. தந்தை சிறையில், தாய் மறைந்து விட்டார். பிள்ளைகள் அனாதைகள் ஆகிவிட்டனர். கழகத் தோழர்கள் குடும்பத்தினர் அனைவரும் முத்துகிருஷ்ணன் சிறையி லிருந்து வரும் வரை பிள்ளைகளைத் தத்தெடுத்துக் கவனித்துக் கொண்டனர். பிறகு சிறை மீண்ட முத்துக் கிருஷ்ணன் பிள்ளைகளோடு திருவாரூர் தேரோடும் வீதியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட போது மக்கள் வடித்த கண்ணீரால் கமலாயம் முத்துக்குளமே உப்பு நீராகியது.

...பல ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மூன்றாண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் யாரும் எதிர் வழக்காடவில்லை! ‘கொளுத்தப்பட்டது அரசியல் சட்ட நூலல்ல. அதன் பிரிவுகள் சில எழுதப்பட்ட ஒரு தாள் தான். இது தேசிய அவமாதிப்பாகாது' என்று வாதாடி இருந்தால் அனைவருமே தண்டனையின்றித் தப்பி இருப்பார்கள்.

.இந்த மூன்று மாதம் தொடங்கி மூன்றாண்டுகள் வரை இருந்த தண்டனைக் காலத்தில் திராவிடர்கழகத் தோழர் களில் பலர் காட்டிய மனஉறுதியும் அஞ்சாமையும் தியாகமும் மகத்தானது. சிறையிலேயே கடுமையாய் நோய்வாய்ப்பட்டு, இனிப்பிழைக்க வாய்ப்பில்லை என்று தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே பழியி லிருந்து தப்பிக்கத் தமிழக அரசால் விடுதலை செய்யப் பட்டவர்கள் பதிமூன்று பேர் விடுதலையான ஒரே வாரத்திற்குள் இறந்தனர். அவர்களும் கொல்லப் பட்டவர்கள் பட்டியலில் தான் வருவார்கள். சாதி ஒழிப்புப் போருக்குத் திராவிடர் கழகம் கொடுத்த களப்பலி மொத்தம் பதினெட்டு பேர்.

...திருச்சி வாளாடியைச் சேர்ந்தவன் சிறுவன் பெரியசாமி. அவனுடைய தாய்க்கு ஒரே மகன். பதினெட்டு வயது கூட நிறையாத (16 வயது) பெரியசாமி தீவிரமான கருஞ்சட்டைத் தொண்டன். பெரியாரின் கூட்டங்கள் எங்கு நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்ளும் போர் வீரன். பெரியாரின் ஆணையை ஏற்று அவனும் சட்ட நகலை எரித்தான்.

ஒருநாள் தட்டப்பாறை சிறையில் பார்வையிட வந்தார் தமிழக கவர்னர் விஷ்ணுராம் மோதி பெரிய சாமியையும் கவர்னர் விசாரித்தார்.  “உன்னை மன்னித்து விடுதலைச் செய்கிறேன். இனிமேல் இது போன்ற காரியம் செய்ய மாட்டாயல்லவா' என்றார். சட்ட எரிப்பிற்கான காரணத்தைக் கவர்னரிடம் தெளிவாய் விளக்கிய பெரிய சாமி, “வெளியே அனுப்பினால், மீண்டும் கொளுத்துவேன்” என்றான்.

கடுமையான கோடைக்காலம் பழக்கமில்லாத புழு புழுத்த சோளக் கஞ்சிஇரண்டும் ஒப்புக் கொள்ளாமல் பெரியசாமிக்கு வயிற்றுக் கடுப்பில் தொடங்கி சரியான மருத்துவ வசதி இல்லாமல் ரத்தம் ரத்தமாய் பேதியாகிப் பெரியசாமி நினைவு தடுமாறலானான். சிறை அதிகாரிகள், “விடுதலை செய்கிறோம். வெளியே போகிறாயா?” என்று கேட்க, மெளனமாய்க் கையை அசைத்து மறுத்து விட்டான். சில மணி நேரம் தான், இறந்து போனான்.”

ஜாதி ஒழிப்பிற்காக - ஜாதியைப் பாதுகாக்கும் 25, 26 ஆகிய சட்டப்பிரிவுகளையும், மேலும் சில பிரிவுகளையும் 30 ஆயிரம் தோழர்கள் எரித்தனர். 4000 தோழர்கள் 2 ஆண்டுக்கும் மேலாகக் கடுங்காவல் தண்டனை அடைந்தனர். 18 தோழர்கள் களப்பலி ஆயினர். அந்த மாபெரும் ஜாதி ஒழிப்புப் போராட்டம் நடந்தது 1957 நவம்பர் 26 ல். இந்த ஆண்டோடு 60 ஆண்டுகள் முடிந்துள்ளன.

இந்து மதத்தையும், ஜாதியையும் காக்கும் கோரிக்கைகள்

இந்த மாபெரும் ஜாதி ஒழிப்புப் போராட்ட வரலாற்றுக்கு எதிராக - உயிரையும், வாழ்வையும் துச்சமாக எண்ணிய ஜாதி ஒழிப்புப் போராளிகளின் இலட்சியங்களுக்கு எதிராக - ஜாதியைப் பாதுகாக்கும் 25, 26 பிரிவுகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று பெளத்தம் ஏற்கும் தோழர்கள் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மிகப் பெரும் வேதனையை அளிக்கிறது.

ஒருவேளை ‘மதமாற்றத் தடைச்சட்டம்’ என்பவை போன்ற தடைகளுக்கு எதிராக இக்கோரிக்கை எழுந்திருக்கும் என்று யாராவது கூறினாலும், தமிழ்நாட்டில் இதுவரை புத்தம் ஏற்றவர்கள் யார் மீதும் அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்கள் புத்த மதத்தை ஏற்றாலும், அவர்களது இடஒதுக்கீட்டு உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்ற சட்டப் பாதுகாப்பும் உள்ளது. இந்த உரிமை இஸ்லாமுக்கோ, கிறிஸ்தவத்திற்கோ மதம் மாறும் தலித்துகளுக்குக் கிடையாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி இருந்தும் இவை போன்ற தீர்மானங்கள் எதற்காக நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை மக்கள் மறுமலர்ச்சித் தடம் விளக்க வேண்டும்.

பார்ப்பானைப் பாதுகாக்கும் பதிவுகள்

இந்த பெளத்தம் ஏற்பு நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்திமுடித்த குழுவில் முக்கியமானவர், முதன்மையானவர் தோழர் ஆனந்த் சித்தார்த்தா என்பவர் ஆவார். அவர் அண்மையில் அவரது முகநூல் பதிவொன்றில் தெரிவித்துள்ள கருத்தைப் பாருங்கள்.

“தோழர் மதிமாறனின் இயக்குனர் ரஞ்சித் தொடர்பான பதிவு ஒன்று பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பலபேர் இது அம்பேத்கரிஸ்ட் VS பெரியாரிஸ்ட் சண்டை என சமாதனப் புறாவிடு வதையும், மதிமாறன் பெரியார் பின்னே ஓடிந்து கொள்வதையும்  காணமுடிகிறது.

உண்மையிலே இது என்ன பிரச்சனை? அம்பேத்கரிஸ்ட்VS பெரியாரிஸ்ட் பிரச்சனையா? இல்ல இது மதிமாறனுக்கும் ரஞ்சித்துக்குமான பிரச்சனையா? அதுவும் இல்லை.

திராவிட சித்தாந்தத்திற்கும் தலித்துகளுக்கும் உள்ள பிரச்சனை, சமூக நீதிக்கும் தலித்துகளுக்கும் உள்ள பிரச்சனை - பெரியாரின் கொள்கைக்கும், தலித்து களுக்கும் உள்ள பிரச்சனை - அரசியல் அதிகாரத் திற்கும் தலித் பிரதிநிதித்துவத்திற்கும் உள்ள பிரச்சனை - பெரியார் மண்ணுக்கும் சாதிய வன்கொடுமைகளுக்குமான பிரச்சனை - முக்கியமாக இது பெரியாருக்கும் அயோத்திதாசப் பண்டிதருக்குமான பிரச்சனை - இவ்ளோ பிரச்சனையை வைத்துகொண்டு இது அம்பேத்கரிஸ்ட் பெரியாரிஸ்ட் சண்டை எனச் சுருக்கி, சமாதனப்புறா விடுவது நியாமா?

என்னைப் பொறுத்தரை இச்சண்டை வேண்டும். இது ஆரோக்கியமான விவாதமாக மாற வேண்டும். இவ்வளவு ஆண்டுகாலம் பார்ப்பான் பேய் புடுச்சிக்கும், பார்ப்பான் பூதம் அறைஞ்சிடும் என்று எப்படி பயத்தை உண்டாக்கி Non Brahmin movement உருவாகி அதிகாரத்தைக் கைப்பற்றியதோ -  அதே யுக்தியைப் பயன்படுத்தி தலித்துகளின் உரிமை கோரலை இங்கு நசுக்கப்படுகிறது. அதையும் மீறி தலித் அறிவுஜீவிகள் கேள்விகேட்டால் இந்துத்துவக் கைக்கூலி எனப் பட்டம் கொடுத்து ஒடுக்கிவிடுவது தான் இந்தச் சமூக நீதிக்குப் பட்டா வாங்கிய மதிமாறன் போன்றோர்களின் தலையாய கடமை.

இது பெரியார் மண், இது சமூநீதி மண் என பெரியாரையும் சேர்த்து கட்டமைக்கப்பட்ட அந்தப் புனிதப் பிம்பத்தை இவ்வளவு ஆண்டுகாலம் நடந்த தலித் வன்கொடுமைகளைக் கண்டு பாதிக்கப்பட்டவனாக ரஞ்சித் அதை உடைக்கிறார்.. அதில் பதறிப்போனவர்கள்தான் தோழர் ஓவியா, மதிமாறன் போன்றோர்கள். விவாதம் தொடரட்டும் தீர்வு எட்டும்வரை.”

தோழர்கள் மதிமாறன் - இரஞ்சித் பதிவுகள் தொடர்பாக இந்த எதிர்வினைப் பதிவைத் தோழர் ஆனந்த் சித்தார்த்தா எழுதியுள்ளார்.

பார்ப்பன ஆதிக்கம் என்பது வெறும் பேய், பூதம் போன்ற கற்பனைகள்தான். அந்தக் கற்பனைகளைப் பயன்படுத்தி, திராவிடர் இயக்கம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார். இவை ஸ்டாலின் இராஜாங்கம் போன்ற பல அறிஞர்கள் பார்ப்பனக் காலச் சுவடுகளில் பல ஆண்டுகளாக கூறியவை தான். பல நேரங்களில் அதற்குரிய பதில்களும் வந்துள்ளன. நாமும் பதில் எழுதுவோம்.

இப்படி வெளிப்படையாக பார்ப்பன ஆதிக்கத்திற்குத் துணைபோகின்றவர்களும் - இந்து மத ஆதிக்கம், பார்ப்பன - பார்ப்பனிய - ஜாதி ஆதிக்கங்களைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளுக்கு ஆதரவாகக் கோரிக்கை விடுப் பவர்களும் - பெளத்தத்தைப் பரப்பும் இடத்தில் இருக்கிறார்கள்.

இந்தியத் துணைக்கண்டத்தில், ஏன் உலக அளவில்கூட மிகப்பெரும் மனிதஇனப்படுகொலை என்று வரலாற்றிலேயே பதிவான இனப்படுகொலை எது? உறுதியாக, இந்து மதப் பார்ப்பனர்கள் இந்த நாட்டில் வாழ்ந்த நமது முன்னோர்களான பெளத்தர்கள் மீது நடத்திய இனப்படுகொலைதான் உலகிலேயே மிகக் கொடூரமானது.

பெளத்தத்திற்கு மட்டுமல்ல; உலகில் சமத்துவத்தை விரும்பும் அனைத்து உயிர்களுக்கும் எதிரானவர்கள் பார்ப்பனர்கள். அந்தப் பார்ப்பனர் களை ஆதிக்கவாதிகள் அல்ல என்பதும், நட்பு சக்தியாகப் பார்க்க வேண்டிய பெரியாரையும், திராவிடர் இயக்கத்தோழர்களையும் எதிரிகளாகக் கட்டமைப்பதும் எதற்குப் பயன்படும்? தோழர் அம்பேத்கருக்கு எதிரான - பார்ப்பன மயமான, சிங்கள- ரோஹிங்கியா மயமான ‘மகாயான பெளத்தம்’ தமிழ்நாட்டில் ஆழமாக நுழையவே பயன்படும்.

ஒரு அம்பேத்கரிஸ்ட்டோ அல்லது பெரியாரிஸ்ட்டோ ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளை உறுதிப்படுத்தும் கோரிக்கைகளை முன்மொழியமாட்டார்கள். பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் எதிரியாகக் கட்டமைக்க மாட்டார்கள்.  

இந்த மக்கள் மறுமலர்ச்சித் தடம் அமைப்பில் பல பெரியாரியவாதிகளும், அம்பேத்கரியவாதிகளும் முக்கியப் பொறுப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். அவர்களுக்குத்தான் இந்தக் கட்டுரை. எங்களது புரிதல் தவறு என்று நீங்கள் விளக்கினால், மகிழ்வுடன் எங்களைத் திருத்திக்கொள்ளத் தயாராக உள்ளோம்.

Pin It

jothika 450இயக்குநர் பாலாவின் நாச்சியார் என்ற படத்தில், ‘தே...பய’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அதை நடிகை ஜோதிகா என்ற பெண்ணின் வாயால் பேச வைக்கிறார். அந்தப் படத்தின் டீசர் அந்தச் சொல்லுடன் வந்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி தொடங்கி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் என இதுவரை எத்தனையோ ஆண் கதாநாயகர்கள், வில்லன்கள், இயக்குநர்கள் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த வரிசையில் வந்த நடிகர் சிம்பு பாடிய பீப் சாங் மிகப்பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது.

பீப் சாங்கிற்கு எழுந்த எதிர்ப்பைப் போல அதற்கு முன்பு இதுபோன்ற ஆபாசச் சொற்களைப் பயன்படுத்திய நடிகர்களையோ, படங்களையோ நாம் எதிர்த்ததில்லை. அவை கதையின் யதார்த்தம் எனக் கடந்து சென்று விட்டோம். நாச்சியார் படத்தில் அந்த வசனத்தைப் பேசிய ஜோதிகா, வசனத்தை வைத்த பாலா இருவரையும் கண்டிக்க வேண்டும்.

காவல்துறையைப் பொறுத்தவரை, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த - தனக்கென அரசியல், பொருளாதார, சமுதாய பலமில்லாத, மக்களை நோக்கியே இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதே வார்த்தைகளை ஒரு கொலைக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரியையோ, சீட்டிங், 420 குற்றவாளியான விஜய் மல்லையாவையோ பார்த்து எந்தக் காவல் அதிகாரியும் பேசிவிட முடியாது. அப்படிப் பேசுவது போல காட்சிகளை வைத்துவிட முடியாது. அப்படி ஒருவேளை பாலா துணிச்சலாக அடுத்தடுத்த படங்களில் பார்ப்பனர் களையோ, பன்னாட்டு முதலாளிகளையோ கூட அப்படித் திட்டுவதுபோல ஒரு காட்சி அமைத்தால் அதையும் கண்டிப்பாக எதிர்ப்போம்.

இந்தச் சொற்கள் ஆபாசமானவை. அருவருக் கத்தக்கவை. நாகரீகமற்றவை என்பதற்காகக் கண்டிக்கவேண்டும் என்று சொல்லவரவில்லை. ஆபாசம், அருவருப்பு, நாகரீகம் என்பதற்கெல்லாம் ஆளுக்கொரு வரையறை வைத்திருக்கிறோம். நாம் எதிர்ப்பதற்கான காரணம், ஜாதி அடிமைத் தனத்தையும், பெண் அடிமைத்தனத்தையும் நீடிக்கச் செய்யும் பல பண்பாட்டுக்கூறுகளில் இந்தக் கெட்ட வார்த்தைகளுக்கு மிகப்பெரும் பங்கு உண்டு என்பதுவே ஆகும்.

மனுசாஸ்திரமும் கெட்டவார்த்தைகளும்

பெண்களின் உறுப்புகளையும், பெண்களின் நடவடிக்கைகளையும் அடிப்படையாக வைத்தே 99 சதவீத வார்த்தைகளும் உள்ளன. கிராமத்துச் சண்டைகளில் முதலில் வரும் வார்த்தைகள் பெண்ணின் உறுப்புகளைச் சொல்லித் தொடங்கும். பெண்களின் உறுப்புகளை மய்யமாகக் கொண்ட வார்த்தைகள் என்பவை பெண்களை வெறும் காமப் பொருட்களாக மட்டுமே எண்ணி உருவான வார்த் தைகள்.அடுத்தடுத்த தலைமுறைக்கு பெண் என்பவள் காமத்திற்காகவள் - ஒரு பொருள் என்ற ஆணாதிக்கச் சிந்தனைகளைக் கடத்திச் செல்பவை. இவற்றைவிட மோசமானவை எவை என்றால், பெண்ணின் நடவடிக்கைகளைக் கொச்சைப் படுத்தும் வார்த்தைகள்.

வெளிப்படையாக எழுதுகிறேன். இன்றும் தென்மாவட்டங்களில் அனைத்து கிராமங்களிலும், பிற்படுத்தப்பட்டவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் நடக்கும் சண்டைகளில் இரண்டாம் கட்டமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் சில. ‘ஒங்க ஆத்தாள சக்கிலியப்பய கூட்டிட்டுப் போக...’ ‘வண்ணாப்பய கூட்டிட்டுப்போக....’சில பகுதிகளில் ‘சாணாப்பய கூட்டிட்டுப்போக...’ என்பது போன்ற வார்த்தைகள் மிகவும் சகஜமாகப் புழங்குகின்றன.

ஒரு பெண் தன் விருப்பத்திற்கு உரியவரோடு போவதோ, வாழ்வதோ, விரும்புவதோ மிகப்பெரும் குற்றம் என்ற சிந்தனையைத்தான் இந்த வார்த்தைகள் விதைக்கின்றன. அடுத்து அப்படியே விரும்பி னாலும், வாழ்ந்தாலும் தாழ்த்தப்பட்ட ஜாதியினரை விரும்பிவிடக் கூடாது. அவர்களோடு வாழ்ந்துவிடக் கூடாது என்பதையும் ஆழமாக விதைக்கின்றன.

இந்த வார்த்தைகள் விதைக்கும் ஆதிக்கக் கருத்துக்கள் ஏதோ படிப்பறிவற்ற கிராமத்தான்கள் உருவாக்கியவை என்று எண்ண வேண்டாம். இவை இந்து மதத்தவர்களை இன்றுவரை இயக்கிவரும் மனுசாஸ்திரங்களும், வேதங்களும் உண்டாக்கிவை.

“உயர்ந்த ஜாதிக் கன்னிகையைப் புணர்ந்த தாழ்ந்த ஜாதியானுக்கு மரண வரையில் தண்டனை விதிக்க வேண்டியது. ”

- 8 வது அத்தியாயம் 366 வது ஸ்லோகம்

இந்தக் கருத்தைத்தான் கெட்ட வார்த்தைகள் மக்கள் மொழியில் பேசுகின்றனர். இது ஒரு எடுத்துக்காட்டுக்காக கூறப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள ‘அசல் மனுதரும சாஸ்திரம்’ என்ற நூலில் இதுபோன்ற ஏராளமான சான்றுகள் உள்ளன.

பொதுவாக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் படிப்பறிவில்லாத, நாகரீகமில்லாத மக்கள் இப்படிப் பட்ட வார்த்தைகளைப் பேசுகிறார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. அது தவறு. பங்காளிகள் என்றால் அவர்களைத் திட்டுவற்கான தனி சொற் களஞ்சியம் உள்ளது. மாமன் மச்சான் முறை என்றால் அதற்கென்று தனியாக ஒரு சொற் களஞ்சியம் உள்ளது. எவ்வளவு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கெட்ட வார்த்தை பேசினாலும், முறையை மாற்றிப் பேசமாட்டார்கள். ஆணைத் திட்ட தனிப்பட்டியல், பெண்ணைத் திட்டத் தனிப் பட்டியல். இப்படித் தெளிவாக இலக்கணம் மாறாமல் தான் திட்டுகிறார்கள்.

படித்தவன், படிக்காதவன், அரசியல்வாதி, அதிகாரி, விவசாயி, கூலிதொழிலாளி என அனை வரும் மிக நிதானத்துடன் தான் இந்த வார்த்தை களைப் பயன்படுத்துகிறார்கள். எந்த வார்த்தை யானலும், யாரைத் திட்டினாலும் அவை ஆணாதிக் கத்தையும், ஜாதி ஆதிக்கத்தையும் ஒருசேர விதைப் பவையாகவே உள்ளன.

சட்டப்படி நாம் தேவடியாள் மக்களே!

சமுதாயத்தில் அனைத்துப் பிரிவு மக்களிடமும் ஒரு பழக்கம், ஒரு பண்பாடு இருக்கிற தென்றால், இந்தச் சமுதாயத்தின் ஆதிக்கவாதி களான பார்ப்பனர்களிடம் இருந்ததுதான் அவை புறப்பட்டிருக்கும். ஆம், இந்தக் கெட்ட வார்த்தை களும் பார்ப்பனர்களிடமிருந்துதான் தோன்றின.

. இந்து மதத்தில் உள்ள பார்ப்பனர் அல்லாத அனைத்துத் தமிழர்களையும், அனைத்து தேசிய இன மக்களையும் பார்ப்பனர்களின் ‘வைப்பாட்டி மக்கள்’ என்று பார்ப்பனர்களின் சாஸ்திரங்கள் கூறுகின்றன. உலகில் எந்த மதமும் தனது மதத்தைப் பின்பற்றுபவர்களையே ‘தேவடியாள் மக்கள்’ என்று கூறவில்லை. பார்ப்பனர்களின் இந்து மதம் நம்மை இழிவு செய்துள்ளது. ஏதோ சாஸ்திரத்தில் எழுதி வைத்துவிட்டார்கள். அவ்வளவுதானே? என நினைக்க வேண்டாம். இந்திய அரசியல் சட்டத் திலேயே அந்த சாஸ்திரங்களுக்குப் பாதுகாப்பும் செய்துவிட்டார்கள். நாம் இந்திய அரசியல் சட்டப்படியே ‘தேவடியாள் மக்கள்’ தான்.

இந்து மதத்தின் ஆணிவேர்களான ரிக் வேதம், மனுசாஸ்திரம் ஆகியவை இந்த நாட்டிலுள்ள பார்ப்பனர்கள் அல்லாத பெரும்பான்மை மக்கள் அனை வரையும் ‘சூத்திரர்கள்’ என்று வகைப்படுத்தி யுள்ளது.

‘சூத்திரர்’ என்றால் ‘பிராமணர்களின் வைப்பாட்டி மக்கள்’ என்றுதான் பொருள். ஆம். அப்படித்தான் ‘மனுசாஸ்திரம்’ கூறுகிறது. (அத்தியாயம் 8; ஸ்லோகம் 415) இந்த வேதங்களும், சாஸ்திரங்களும் இந்திய அரசியல் சட்டத்தில் 372 வது பிரிவு மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அது எந்த ஆண்டபரம்பரை ஜாதியாக இருந்தாலும், அந்த ஜாதி மக்களைப் பார்ப்பானின் வைப்பாட்டி மக்களாகத்தான் இந்து மதமும், இந்திய அரசியல் சட்டமும் கூறுகிறது.

அதனால்தான் தோழர் பெரியாரும், தோழர் அம்பேத்கரும் 1927 லேயே மனுதர்மத்தைக் கொளுத்தினார்கள். 1927 ல் டிசம்பர் 24, 25 தேதிகளில் தோழர் அம்பேத்கர் மகத் மாநாட்டில் மனு சாஸ்திரத்தைக் கொளுத்தும்போது,

“இந்துச் சட்டங்களின் பிதா எனக் கருதப்படும் மனுவின் பெயரால் பிரகடனப்படுத்தப் பட்டிருப் பவையும், மனு ஸ்மிருதியில் அடங்கியிருப்பவையும், இந்துக்களின் சட்டத் தொகுப்பான அங்கீகரிக்கப் பட்டிருப்பவையுமான இந்துச் சட்டங்கள், கீழ்ச்சாதியினரை அவமதிப்பவையாக இருக்கின்றன. மனித உரிமைகளை அவர்களுக்கு மறுப்பவையாக உள்ளன. அவர்களது ஆளுமையை நசுக்குபவையாக இருக்கின்றன. நாகரிக உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகளுடன் இவற்றை ஒப்பிடும்போது இந்த மனுஸ்மிருதி எத்தகைய நன்மதிப்பையும் பெற அருகதையற்றது. ஒரு புனிதமான நூல் எனப் போற்றப்படுவதற்குத் தகுதியற்றது என இந்த மாநாடு கருதுகிறது. இதன்பால் தனக்குள்ள ஆழமான அளவிட முடியாத வெறுப்பை வெளிப்படுத்தும் பொருட்டும், மதம் என்ற போர்வையில் அது சமூக ஏற்றத் தாழ்வைப் போதித்து வருவதைக் கண்டித்தும் மாநாட்டு நடவடிக்கைகளின் முடிவில் இதன் பிரதி ஒன்றை எரிப்பதென இம் மாநாடு தீர்மானிக்கிறது”. என்று அறிவித்தார்.

கெட்ட வார்த்தைகளைப் பேசுவது என்பது, இந்து மத வேதங்களையும், மனுசாஸ்திரங்களையும் அவை உருவாக்கியுள்ள பண்பாடுகளையும் நிலைநிறுத்துவதற்கே பயன்படும். சமூக அக்கறை உள்ளவர்கள் அவற்றைத் தவிர்ப்போம். இதுபோன்ற கெட்ட வார்த்தைகளைப் பேசியதற்காக, தோழர் சீமானையும், பாலாவையும், ஜோதிகாவையும், அஜித்தையும், சிம்புவையும் எதிர்த்துக் களமாடுபவர்களுக்கு ஒரு கேள்வி. இந்தக் கெட்டவார்த்தைகளுக்கு அடிப்படையாக உள்ள இந்துமத, மனுசாஸ்திரங் களையும், அவற்றுக்குப் பாதுகாப்பாக உள்ள அரசியல் சட்டப் பிரிவுகளையும், எதிர்த்தும் - இனியாவது குரல் கொடுப்பீர்களா?

Pin It

காட்சி, திரை, அச்சு ஊடகங்களின் பார்ப்பனப் போக்கை சரியான ஆதாரங் களுடன் விளக்கியுள்ள நூல் ‘காட்சி அரசியல்’. மீடியா கண்ட்ரோல் என்ற நிலை உருவாகியுள்ள இன்றைய சூழலில், ஊடகங்களை நாம் எப்படிப் பார்க்க வேண்டும். அதற்கேற்ப நாம் எந்த வகையில் நம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பவற்றை விரிவாக விளக்கி யுள்ளது இந்நூல். நூலாசிரியர் அ.ஸ்டீபன் ஊடக எதிர்கால வியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். ஊடகக் கல்வித்துறையில் 25 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். அவரது படைப்பை திண்டுக்கல் வெற்றிமொழி வெளியீட்டகம் சிறப்பாக வெளிட்டுள்ளது.

புலம்பெயந்தவர்களைப் பற்றிய பார்ப்பனர்களின் அணுகுமுறை

காஷ்மீரில் இஸ்லாமியர்கள் தங்கள் மாநில உரிமையைக் காக்கவும் தங்களுக்கான அரசியல் சுதந்திரத்திற்காகவும் அங்கு சிறுபான்மையாக உள்ள பார்ப்பனர்களை வெளியேற்றி வருகிறார்கள். பார்ப்பனர்கள் தங்களாகவே வெளியேறியும் வருகிறார்கள். அவர்களை இந்தப் பார்ப்பனக் காப்பாளர்கள் அவர்களை அனுதாபத்தின் உச்சிக்கே அழைத்து சென்று விடுவார்கள். இதேபோல நேபாளத்திலும், திபெத்திலிருந்தும் வரும் பார்ப்பனர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்து வரும் மனப் பான்மையும் நடந்துதான் வருகிறது. இது போல நிகழ்வுகள் மியான்மரிலிருந்து வரும் இஸ்லாமியர் களையும் (ரோஹிங்கியா) இலங்கையிலிருந்து வரும் ஈழத் தமிழர்களையும் தங்களது உடைமைகளை இழந்து வருபவர்களையும் மனிதாபிமானப் பார்வையில் பார்ப்பதில்லை.

மாறாக, அவர்களை நுழைவாயில் எதிரிகளாகப் பார்க்கிறார்கள். ஆம் நூலாசிரியர் குறிப்பிடுவது போல பெரும்பாலான செய்தி ஊடகங்கள் நாட்டின் எல்லை வழியாக நுழையும் புலம் பெயர்ந்த மக்களைச் சட்டத்திற்குப் புறம்பாக வந்தவர்கள் முறையான அனுமதியின்றி நுழைந்தவர்கள் என்ற சொற்றொடர்களால் அதிகம் குறிப்பிடப்படுகின்றன. சட்டப்படியும் முறையான அனுமதியுடனும் நுழைவதற்கான அரசியல் சூழல் தத்தம் சொந்த நாட்டில் இல்லாத காரணத் தினாலேயே இவ்வாறு அவர்கள் புலம் பெயர நேரிடுகிறது என்பதும் அவர்கள் சுற்றுலா வர வில்லை என்பதும் ஊடகத் துறையினருக்கு தெரியாமல் போனது துயரம் என்பதை  நூல் ஆசிரியர் மிக சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் தனது சொந்த நாட்டிலேயே அந்த நாட்டின் மக்களையே ஜாதியப் பாகுபாடு காரணமாக பிரித்து ஆள்பவர்கள் உரிமைகளை மறுப்பவர்கள் மத்தியில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

ஈழத்தமிழரைக் கொச்சைப்படுத்தும் படங்கள்

இறையாண்மையைக் குலைப்பவர்கள் என்ற கட்டுரையில் திரைப்படத் துறையில் முழுநீளக் கதாப்பாத்திரமாகக் காட்டுவதில் நடிகர் அஜீத் குமார் கதாநாயகனாக நடித்த பில்லா 2 (2012) கதாப் பாத்திரத்தை ஒரு ஸ்மக்ளராவும் கொலை காரராகவும் காட்சிப்படுத்தியிருப்பதைப் பார்க்கும் பொழுது புலம் பெயர்ந்த மக்களை அவர்கள் வாழ்வதற்காக, எதையும் அஞ்சாமல் செய்வார்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள்என்ற கருத்தை உருவாக்கும் என்பதை ஆசிரியர் விளக்குகிறார்.

நடிகர் கமலஹாசன் (தெனாலி), இயக்குநர் பாலா (நந்தா), எஸ்.செல்வா (ராமேஸ்வரம்) ராஜிவ் மேனன் (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) இப்படங்களின் காட்சிகளில் கதைக்களத்தில் உண்மைச் சம்பவங்களை விட்டுவிட்டு, கருத்தைத் திசைதிருப்பும் வகையில் களத்தில் வேறு கதையை வைத்துத் தங்களது வியாபார யுக்தியைப் பயன் படுத்திப் பணம் சம்பாதிக்கிறார்கள்.

உண்ணும்,உணவுக்குத் தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல பயன்படுத்தப் பார்க்கிறார்கள். இந்த வரிசையில் ஜாம்பவான் எனப்படும் இயக்குனர் மணிரத்தினத்தின் திரைப்படங்கள் ரோஜா (1992), பம்பாய் (1995), கன்னத்தில் முத்தமிட்டால் (2002) போன்ற இவரின் படங்கள் அனைத்தும் இந்திய தேசியத்தைக் கட்டமைக்கும். ஒவ்வொரு திரைப் படங்களிலும் ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையிலும் அமையும். இவற்றைக் காட்டாறு இதழில் விமர்சனம் செய்வது குறிப்பிடத்தக்கது.

மனுதர்மச் சிந்தனையாளர் பாலா

‘புன்னகைத்த மனுதர்மம்’ என்ற கட்டுரையில், ஜாதி மறுப்பு, காதல் திருமணங்களை இன்றைய இளைஞர்களிடம் ஒரு அச்சுறுத்துதல் மனப் பான்மையை உருவாக்கும் விதமாகப் படத்தை முடிக்கும் பாலாவை இந்துத்துவ மனுதர்ம சிந்தனை யாளர் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறார். இதே காலக்கட்டத்தில் இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளிவந்த படம் ‘காதல்’. நடிகர்கள் பரத்,சந்தியா நடித்த படத்தை பார்த்தோமேயானால் காதல் திருமணமே செய்ய வேண்டாம் என்ற நிலைக்கு இளைய சமுதாயத்தினரை நினைக்கும் வண்ணம் காட்சிகள் (கொடூரமாக) அமைந் திருக்கும். ஆனால் படத்தின் இறுதியில் கதாநாயகனை மனநோயாளியாக காட்டியிருக்கும் காட்சிகளைப் பார்ப்பவர்கள் மனதில் இந்தக் காதலே வேண்டாம் என்ற அளவிற்கு அமைந்திருக்கும். காதல் திருமணங்களால் நன்மை எதுவும் எற்படாது. என்பது போல காட்சிகள் ஏற்படுத்துகிறது.

ஆனால் சமூகத்தில் நிகழும் திருமணங்கள், சொந்தத்தில் சொந்த ஜாதியில் நடக்கும் திருமணங் களால் ஏற்படும் பிரச்சனைகள் ஒன்றா, இரண்டா தங்களுடைய அடுத்த தலைமுறையினரை ஊனங்களாகவும் குணப்படுத்த முடியாத நோயாளி களாக்கவும்தானே இந்தத் திருமணங்கள் பயன் படுகிறது. சினிமாத் துறை பார்ப்பன மனுதர்மப் பண்பாட்டைப் பரப்புகிற வகையில் இயங்கிக் கொண்டி ருக்கிறது. பண்பாட்டு மாற்றத்தை விரும்பாத பார்ப்பனத் திரைத்துறையாக இருக்கிறது.

திரைப்படத்துறைக்கு தேசிய விருது கொடுப்பது குறித்து சரியான பார்வை காட்டுகிறது இந்நூல். அன்று முதல் இன்று(ஜோக்கர்) வரை தேசியவிருது என்பது மனநோயாளிகளாக நடிக்கும் நடிகர்களுக்கும், மனநோயாளி டைரக்டர்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்து மதக் கலாச்சாரத்தைத் திரைத்துறையில் பரப்பி வரு பவர்கள் கமல், பாலா, சங்கர் இன்னும் பலர் இந்த வரிசையில் இருக்கிறார்கள்.

பாலாவின் ‘நான் கடவுள்’ படம் மனிதக் கறியின் மகத்துவம் ஒப்பீடு மிகவும் சிறப்பு, படத்தின்  துணைத்தலைப்பு பெயர் அஹம்ப்ரம்மாஸ்மி என்று சமஸ்கிருதத்தில் வைத்துள்ளார் கதை, வசனம் எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தான் சொல்லவா வேண்டும்.  இதில் பஞ்ச் டயலாக் (வாழக்கூடாதவர்களுக்கு நான் தரும் தண்டணை மரணம், வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் தண்டணை மரணம்) என்று வரும் வசனம்.

இதில் நமது கேள்விஎன்னவென்றால், அண்டம் முதல் பிண்டம் வரை அனைத்துக்கும் அவரே காரணம் என்றால், வாழக்கூடாத கெட்டவர் களை ஏன் படைக்க வேண்டும்? வாழ இயலாத முடவர்களை ஏன் படைக்க வேண்டும்? இதுபோன்ற கருத்துக்களைத் தொடந்து பரப்பும் விதமாகப் படம் எடுப்பதால் தான் இவர்களுக்கு மனுதர்ம விருது கிடைக்கிறது. இவர்களுக்கு மருத்துவ அறிவியல், அடிப்படை அறிவு கூடவா இல்லை. படத்தில் நடித்த ஊனமற்ற குழந்தைகளின் ஊனம் என்பது, நெருங்கிய ரத்த உறவு முறைத் திருமணங்களால் உண்டாகும் மரபணுநோய்களாள் உருவானவை தான்..  இவற்றைக் குணப்படுத்த முடியாது. என்பதை ஒரு விவாதக் கருத்தாக எந்தத் திரைப்படத்திலும் வைப்பதில்லை. ஏனென்றால், சென்சார் போர்டு மனு தர்மத்தின் கையில் உள்ளது.

இந்திய கிரிக்கெட்டும், அமெரிக்கச் செருப்பும்

இந்திய, பாகிஸ்தான் இரு தேசங்களிலும் போலி தேசிய ஒற்றுமையை பரப்பி அப்பாவி இளைஞர்களின் மனதில் வெறியை கிளப்பி விடுவதில்தான் எத்தனை லாபம் பாருங்கள்.

1.தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களின் வளர்ச்சிக்கான படிப்பை கெடுப்பதற்கு அரை யாண்டு, முழு ஆண்டு தேர்வின் போது தவறாமல் அய்.பி.எல். மற்றும் இண்டர்நேஷனல் கிரிக்கெட்டு களைத் தொடங்கி விடுவார்கள். இவற்றால் மாணவர்களின் தேர்ச்சி குறையும்.

2.இந்த விளையாட்டின் மூலமாக ரசிகர்களை உசுப்பேற்றி  விட்டு அரசியல் நகர்வுகளில் செய்யும் தவறுகளை மறைக்க, மனதை மடை மாற்ற இவை உதவுகின்றன.

3.இந்த விளையாட்டு தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் அன்னிய - உள்நாட்டுப் பெரு முதலாளிகளுக்கும் வருவாய் ஈட்டித் தரும் பொக்கிஷமாகும். இதை என்றும் அணையா நெருப்பாக பாதுகாக்க வேண்டும் என்பது நோக்கம்

இந்த விளையாட்டை வைத்து இனவாத அரசியலை மிகச் சாதூர்யமாக நடத்தலாம். இத்துறையில் தலைமை முதல் விளையாட்டு வீரர்கள் வரை பார்ப்பனர்களின் ஆதிக்கம் தான்..

இந்த விளையாட்டுத் துறையில் வீரர்களாக சாதாரண இளைஞர்கள் நுழைந்து விட முடியாது என்பதைத் திரைப்படமாகக் காட்டினார் இயக்குனர் சுசீந்திரன். 2014-ல் வெளிவந்த ஜீவா தமிழ்த் திரைப்படத்தில் காட்சிகளில், அகில இந்தியக் கிரிக்கெட் வீரர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று நுழைவுத்தேர்வுக்கு வரும் இளைஞர்களை உள்ளே நுழையும் முன்பு,  முதுகைத் தடவிப்பார்த்து, பார்ப்பனப் பூணூல்களை அடையாளம் பார்த்து, அவர்களை மட்டும் அனுமதிக்கும் காட்சி முக்கிய மானது. இதுபோன்ற பார்ப்பன மோசடிகளைப் புரிந்துகொள்ள இந்திய கிரிக்கெட்டும், அமெரிக்கச் செருப்பும் என்ற கட்டுரையை படிக்க வேண்டியது அவசியம்.

பால் பாக்கெட்டுகள் தந்த சுயமரியாதை  

‘தலையில் துண்டைப் போட்ட பால்காரர்’ என்ற கட்டுரையில் மட்டும் எங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு. இந்தப் பாக்கெட் பால் வந்த பிறகு தான் தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதை மிஞ்சியது. இன்னமும் சில, கிராமப்புறங்களில் பால்காரர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் பகுதிகளில் நுழைவது இல்லை. கிராமப் பால் கூட்டுறவு அங்காடிகளில் உள்ளே நுழைந்து பால் வாங்க அனுமதிப்பதில்லை. இப்படியிருக்கும் நிலையில் பால்காரர் தலையில் துண்டு விழுந்தாலும் பரவாயில்லை.  அவரும் நாமும் ஒன்றாகச் சென்று கடையில் போய் பால் வாங்குவோம். அதே வேளையில், பன்னாட்டு முதலாளிகளின் பெப்சி, கோகோகோலா போன்ற நிறுவனங்கள் நமது நீர்வளத்தைச் சுரண்டுவதைக் கண்டிப்போம்.

ஊடகப்பெயர்ச்சியும் சமூகநீதியும்

‘காற்றடைந்த பலூன்’ என்ற கட்டுரையில் நூலாசிரியர் அன்னா ஹசாரே- வைப் பற்றித் தெளிவாக எடுத்துரைக்கிறார். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் பி.ஜே.பி-க்கு 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மிகவும் பயன்பட்டது. இவரின் பிரச்சாரத்திற்கு ஊடகங்கள் அதிக நேரத்தையும் அதிக பக்கங் களையும் செலவிட்டன. மொத்தத்தில் எப்படியும் அடுத்த அமாவாசைக்குள் ஊழல் ஒழிக்கப்பட்டு விடும் என்ற அளவில் பரப்பினார்கள். இப்போது அந்த ஊழல் ஒழிப்பாளர் என்ன ஆனார் எனத் தெரியவில்லை. அதற்குள் ஊடகங்களுக்கு வேறு வேலைகள் வந்துவிட்டன.  

ஊடகத்துறையில் பார்ப்பன ஆதிக்கம்    

இந்தியாவின் ஊடகத்துறையில் முன்னணியில் உள்ள 315 மூத்தபத்திரிக்கையாளர் களிடம் 2006ல் ஒரு சர்வே நடத்தப்பட்டது. நமக்கு எந்தச் செய்தி வர வேண்டும், இன்று தொலைக் காட்சிகளில் எந்தச் செய்தி விவாதிக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயிப்பவர்கள் இந்த மூத்த பத்திரிக்கையாளர்கள். ஆங்கில, இந்தி மொழி களில் வெளியாகும் அச்சு, காட்சி, இணையதளம் என அனைத்து துறைசார்ந்தும் இந்த ஆய்வு மேற்க் கொள்ளப்பட்டது.

Centre for the Study of Developing Societies (CSDS) என்ற புதுடில்லியில் உள்ள நிறுவனம் பேராசிரியர் யோகேந்திர யாதவ் தலைமையில் இந்த ஆய்வை நடத்தியது. பேராசிரியர் யோகேந்திரா அவர்கள்  University Grants Commission and National Advisory Council (NAC) on Right to Education Act (RTE) போன்றவற்றில் பணியாற்றியவர்.

அந்த ஆய்வில், பார்ப்பனஉயர்ஜாதியினர் 80 %, பிற்படுத்தப்பட்டோர் 4ரூ, இஸ்லாமியர் 3%, கிறிஸ்தவர்கள் 2.3%, இடம்பிடித்திருந்தனர். தாழ்த்தப்பட்டோர் ஒருவர்கூட இல்லை. (ஆதாரம் The Hindu 05.06.2006)

எனவே, இப்படிப்பட்ட ஊடகத்துறையில், சமூக அக்கறையுள்ள தோழர்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்ற கட்டாயச் சூழலை இந்நூல் நமக்குப் புரிய வைக்கிறது.

புத்தகத்தின் விலை: ரூ.60. நூல் கிடைக்குமிடம்: வெற்றிமொழி வெளியீட்டகம்,  எண் 21/2 ஸ்பென்சர் காம்பவுண்ட், திண்டுக்கல் - 624 003,  செல்: 78100 21216, மின்அஞ்சல்:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..

Pin It

‘லட்சுமி’ என்ற தமிழ்க் குறும்படம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் விவாதங்களைத் தொடங்கி வைத்துள்ளது. இந்தக் குறும்படம் பற்றிய விமர்சனத்தைவிட, இப்படத்தின் மூலம் அனை வராலும் பேசப்படும் பொருளாக மாறியுள்ள ‘பெண்ணின் கற்பு’, ‘பெண்ணின் ஒழுக்கம்’ ஆகியவை குறித்து கூடுதலாக விவாதிப்பது அவசியமாகிறது. லட்சுமியை மறந்துவிட்டு, நேரடியாக விவாதிப் போம்.

கணவனைத் தவிர வேறொருவரை விரும்புவது சரியா?

கணவனோடு வாழும்போதே - கணவனைத் தவிர வேறொரு ஆணிடம் செக்ஸ் வைத்துக் கொள்வது சரியா?  இது தான் ஆண்களின் பதட்டம். ஒரே வரியில் பதில் சொல்லலாம். இது பெண்களின் பிரச்சனை. அவர்களே முடிவு செய்யட்டும். மனைவி யுடன் வாழும்போதே இன்னொரு பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதை அந்தந்த ஆண் தான் முடிவு செய்து கொள்கிறான். அல்லது அந்த ஆணும், குறிப்பிட்ட அந்தப் பெண்ணும் முடிவு செய்கிறார்கள்.

அதேபோல, பெண்களும் முடிவு செய்து கொள்ளட்டும். கணவரைத் தவிர பிற ஆண்களை, பாலியல் தேவைக்காக மட்டுமே நாடுவது சரிதான் என்றோ - பெண்கள் இப்படி நினைக்கவே கூடாது என்றோ நாம் எந்தக் கருத்தையும் திணிக்க வர வில்லை. சூழலைப் பொறுத்து, தேவையைப் பொறுத்து அதைப் பெண்களே முடிவு செய்து கொள்ளட்டும். அதனால் வரும் இன்ப - துன்பங் களை ஆண்களைப் போல அவர்களே ஏற்றுக் கொள்ளட்டும்.

மனைவியோடு வாழும் ஒருவன் வேறொரு பெண்ணை பாலியல் தேவைக்காக மட்டுமே அணுகியபோதும், அவற்றைக் கேள்விப்பட்ட போதும், அது பற்றிய கலை இலக்கியங்களைப் படித்த போதும் - அதுபற்றிய திரைப்படங்களைப் பார்த்த போதும் ஆண்கள் அனைவரும் பதறினார் களா? வரலாற்றில் அப்படி ஒரு நிகழ்வே நடந்த தில்லையே?

தனது துணையைத் தவிர வேறொரு பெண்ணை பாலியல் தேவைக்காக மட்டுமே வைத்துக் கொள்பவர்கள் தான் நமக்கு - ஆரியக் கடவுள்களாகவும், குலதெய்வ - நாட்டார் தெய்வங் களாகவும், பார்ப்பன இதிகாசங்களின் நாயகர் களாகவும், தமிழ்க்காப்பியங்களின் தலைவர் களாகவும், தமிழ்ப் பேரரசுகளின் மன்னர்களாகவும், திரைப்படங்களில் கதாநாயகர்களாகவும் இருக் கின்றனர். தற்கால அரசியல் தலைவர்களாகவும், பார்ப்பனச் சாமியார்கள்-தமிழ்ச்சாமியார்களா கவும், அதிகாரிகளாகவும், பத்திரிக்கையாளர்களாகவும், முற்போக்காளர்களாகவும், சராசரி மனிதர்களாகவும் நம்மிடையே வாழ்ந்தும் வருகிறார்கள்.

இவர்களைப் பார்த்து நாம் என்றாவது ஒழுக்கம், கற்பு என்ற கண்ணோட்டத்தில் விரலை நீட்டியிருப்போமா? சராசரி ஆண்களும் சரி. முற்போக்குப் பேசும் ஆண்களும் சரி மேற்கண்ட ஒழுக்கக் கேடுகளை அங்கீகரித்துத்தான் வந்துள் ளோம். ஆண்கள் மட்டுமல்ல; புரட்சிகரமாகப் பெண்ணியம் பேசும் பல பெண் தோழர்கள்கூட பெண்ணடிமைத்தனத்தை விதைத்து, பரப்பவும் செய்யும் மதங்களையும், சாஸ்திரங்களையும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட பண்பாடு, பழக்கவழக்கங்கள், இலக்கியங்களையும் எதிர்த்து எந்த எதிர்வினைகளையும் நடத்துவதில்லை.

மாயோன் பெருவிழா

விஷ்ணு என்ற பார்ப்பனக் கடவுளின் 8 வது அவதாரம் தான் கண்ணன். அவனுக்கு ருக்மணி, சத்தியபாமா, ஜாம்பவதி, நக்னசித்தி, காளிந்தி, மித்திரவிந்தை, இலக்குமணை, பத்திரை என 8 மனைவிகள். இந்த எட்டு மனைவிகள் அல்லாமல், காதலுக்காக என்று தனியாக ‘இராதா’ என்ற ஒரு காதலியை வைத்திருந்தான் மாயோன். இந்த ஒன்பது பேரும் போதாது என்று கூடுதலாக 16,000 மனைவிகளும் இருந்தனர் என்று கிருட்டிணனின் புராணங்களே கூறுகின்றன.

இந்த ஒழுக்கசீலன் கண்ணனின் பிறந்த நாளைத்தான் ‘மாயோன் பெருவிழா’ என்ற பெயரில் நமது தமிழ்ப்பண்பாட்டுக் காவலர்கள் கொண்டாடி வருகிறார்கள். “ஆரியர்களுக்கு எதிராகத் தமிழ்ப் பண்பாட்டை மீட்கிறோம்” என்றும், “கண்ணன் என்பவன் தமிழ்த் தலைவன் மாயோன் தானே தவிர, கிருஷ்ணன் அல்ல”என்றும் தோழர் சீமான் அறிவிக்கிறார். ஆனால், மாயோன் பெருவிழாவுக்கு நாம்தமிழர் அமைப்பு தேர்ந்தெடுத்த நாள் பார்ப்பனர்கள் குறித்துக்கொடுத்த நாளாகும்.

‘ஆவணி மாதம், ரோகிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில்’ கண்ணன் பிறந்ததாக பார்ப்பனர்களின் புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பார்ப்பனர்கள் கூறியுள்ளபடி ஆவணியில் ரோகிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில் தான் இந்த ‘மாயோன் பெருவிழா’வும் கொண்டாடப்படுகிறது.

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதியில் தான் இந்துப் பார்ப்பனர்களும், தமிழ்ப் பண்பாட்டுப் புரட்சியாளர்களும் ஒருசேரக் கொண்டாடினர். அவன் மாயோனா? கிருஷ்ணனா என்ற ஆய்வு நமக்குத் தேவையில்லை. தமிழ்த் தலைவனாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அவனுக்கு கற்பு வேண்டாமா? ஒழுக்கம் வேண்டாமா? எட்டு மனைவிகள் இருக்கும் போது, காமத்திற்காக கூடுதலாக ராதாவை வைத்திருந்த கண்ணன் - மாயோன் - கிருஷ்ணன் தான் நமக்குக் கடவுள்.

கெளதமர் என்ற முனிவரின் மனைவியாகிய அகலிகையை, இந்திரன் என்ற கடவுள் தனது பாலியல் வெறியைத் தீர்த்துக்கொள்வதற்காக முயற்சி செய்தான். அதை அறிந்த முனிவர் இந்திரனுக்குச் சாபம் அளித்தார். இராமன் என்று ஒழுக்கசீலரான கடவுள் இந்திரனை அந்தச் சாபத்திலிருந்து காப்பாற்றியதையும் புராணங்கள் கூறகின்றன.

சிவனுக்கு பார்வதி என்ற மனைவி இருக்கிறார். விஷ்ணுவுக்கும் பல மனைவிகள் உள்ளனர். தேவ - அசுரப் போராட்டத்தில், அசுரர்களை வெல்வதற் காக, சிவனும், விஷ்ணு இணைந்து ஒரு திட்ட மிடுகின்றனர். போரில் வெல்ல முடியாத அசுரர் களை ஏமாற்றி வெல்ல முடிவெடுத்தனர். அதற்காக விஷ்ணு பெண்ணாக மாறி, அசுரர்களை ஏமாற்றி, போரில் வெல்கிறார்கள். பெண்ணாக மாறிய அந்த விஷ்ணுவைப் பார்த்து பாலியல் வெறி ஏற்பட்டு உறவு நடக்கிறது. அந்த உறவில் பிறந்தவன் தான் அய்யப்பன்.

இதெல்லாம் நாம் சொல்வதில்லை. அபிதான சிந்தாமணி என்று இந்துமத நூலும், இந்து மத பக்தி இலக்கியங்களும், புராணங்களும் கூறுபவை. இப்போது புதிதாக, இந்த சிவன், விஷ்ணு, இந்திரன், இராமன் அனைவரும் தமிழ்த்தலைவர்கள்தான் என்ற ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். இவர்களது ஒழுக்கம், கற்பு இவை தாம் நாம் கவனிக்க வேண்டியவை.

இப்படிப்பட்ட கற்பு மீறிய ஆண் கடவுள் களின் ஒழுக்கத்தை எதிர்க்காமல், அவர்களைக் கடவுள்களாக ஏற்றுக்கொண்டிருக்கும் சமுதாயம், இதே நிலையில் ஒரு பெண் - கணவனைத் தவிர வேறொரு ஆணைப் பாலியலுக்காக அணுகுவதைத் தவறு என்று சொல்வது மிகப்பெரும் அயோக்கியத் தனமும் நேர்மையற்ற செயலும் ஆகும்.

பெண்ணிய அமைப்புகள்

இவர்களை எல்லாம் கடவுளாக வழிபடும் சமுதாயத்தில் - இந்தக் கடவுள்களையும், இந்து மதத்தையும் அழித்து ஒழிப்பது பற்றிய விவாதங் களைக்கூடத் தொடங்காத பெண்ணிய இயக்கங் களால் பாலின சமத்துவமோ, பாலியல் சமத்து வமோ எப்படி உருவாகும்? பெண்ணிய அமைப்புகள் என்று பார்த்தாலும், தோழர் ஓவியா அவர்களின் புதியகுரல் அமைப்பைத் தவிர வேறு எந்தப் பெண்ணிய இயக்கங்களும் இதைப் பேசுவதில்லை.

ஒழுக்கம் - கற்புக்குக் கேடான கடவுளர்களின் பிறந்த நாட்களையோ - எந்த மதப் பண்டிகைகளை யுமோ கொண்டாடாத பெரியார் தொண்டர்களைத் தவிர, மற்ற தத்துவங்களைப் பேசும் முற்போக்காளர் கள் இன்றுவரை இந்தக் கடவுளர்களைப் பொது வெளியில் விமர்சிப்பது இல்லை.

தமிழ்நாட்டில் தோழர் பெரியாரைப் போல, வடநாட்டில் ‘இந்து மதம் ஒரு புதிர்’ ‘இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்’ போன்ற நூற்களின் மூலம், அனைத்து இந்துமதக் கடவுள்களையும், வேதங் களையும், சாஸ்திரங்களையும் சல்லி சல்லியாகப் பிரித்தெடுத்து, இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்தெறிந்தவர் தோழர் அம்பேத்கர். அவை போன்ற இந்து மத எதிர்ப்பு நூற்களை இதுவரை தி.க, தி.வி.க, த.பெ.தி.க போன்ற திராவிடர் இயக்கங்கள் மட்டுமே அச்சிட்டுப் பரப்பி வருகின்றன. மற்ற முற்போக்காளர்கள் இதைப் பேசுவதே இல்லை.

நாட்டார் தெய்வங்களிலும் ஆணாதிக்கம்

நாட்டார் தெய்வங்கள் என்று சொல்லப்படும் அய்யனார் என்ற ஆண் தெய்வத்திற்கு ‘பூசனை’, ‘புட்கலை’ என்று இரண்டு மனைவிகள் உள்ளனர். அதே நாட்டார் தெய்வங்களில் பெண் தெய்வமாக வணங்கப்படும் மாரியம்மன் தனது கணவன் ஜமதக்கினியைத் தவிர வேறொரு ஆணை மனதால் நினைத்ததால், தன் மகனாலேயே வெட்டிக் கொல்லப்படுகிறார்.

நாட்டார் தெய்வங்களிலும் ஆணுக்கொரு நியாயம். பெண்ணுக்கொரு நியாயம். நாட்டார் தெய்வங்களின் மீது ஆரியக்கற்பனைகள் திணிக்கப்பட்டு விட்டதாக ஆய்வாளர்கள் கூறலாம். அந்த விவாதம் வேறு. இப்போது மக்கள் நம்பும் கதை இதுதான். இதன் அடிப்படையில் நாட்டார் தெய்வங்களும் பெண்ணின் “கணவன் கடந்த காதலை” ஏற்கவில்லை என்பதே உண்மை.

அன்பானவன் - அசராதவன் - அடங்காதவன்: கோவலன்

தமிழின் பெருமை மிகுந்த ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று என்று கூறப்படும் சிலப்பதிகாரம் வலியுறுத்தும் பண்பாடு என்ன? கோவலன் என்ற தமிழ்த்தலைவனுக்குக் கண்ணகி மனைவியாக இருக்கிறார். கோவலனின் பாலியல் வெறிக்கு அவள் போதவில்லை. மாதவியைத் தேடி ஓடுகிறான். தன்னிடமிருந்த பொருள் எல்லாம் மாதவியிடம் இழக்கிறான். அப்போதும் அவனது வெறி அடங்கவில்லை. அவனது வெறி அடங்கு வதற்காகக் கண்ணகி தன்னிடம் இருந்த கால் சிலம்பைக் கொடுத்து, மாதவியிடம் அனுப்பி வைக்கிறார். அதனால் தான் கண்ணகி கற்புக்கரசி என இன்று வரை தமிழர்களால் புகழப்படுகிறார். சீவக சிந்தாமணியின் கதாநாயகன் சீவகனுக்கு எட்டு மனைவிகள் இருந்துள்ளனர்.

தமிழர்களின் பெருமை மிகுந்த அடையாள மாகக் கருதப்படும் இராஜராஜ சோழன், சேரன், பாண்டியன் என அனைத்துத் தமிழ் மன்னர்களும் - இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மன்னர் களும் தங்களது மனைவி - துணைவி கூட்டங் களோடு மட்டும் தங்களது அன்பை நிறுத்திக் கொள்ளவில்லை.  மனைவி என்ற உறவைத்தாண்டி காமத்திற்காக அந்தப்புரங்களையும் இவற்றில் நூற்றுக்கணக்கான ஆசை நாயகிகளையும் வைத் திருந்தனர்.

வரலாற்றின் பெண் அரசிகள் மிகவும் குறைவு. வேலுநாச்சியார், ஜான்சி ராணி, ராணி மங்கம்மாள் போன்ற ஒரு சிலரைத்தான் காண முடிகிறது. அந்த அரசிகள் எவரும் கணவன் என்ற உறவைத் தாண்டி அந்தப்புரங்களில் ஆண் ஆசைநாயகர்களை வைத்துக் கொண்டிருந்ததாக எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை.

அந்தப்புரங்களில் கொட்டமடித்த மன்னர் களை அவர்களது கற்பு-ஒழுக்கக்கேட்டு நட வடிக்கைகளுக்கு எதிராக இன்றுவரை யாரும் கண்டித்ததில்லை. தமிழர்களின் பண்பாட்டையோ - இந்துக்களின் பண்பாட்டையோ சீரழித்து விட்ட தாகக்  கொதித்தெழவில்லை.

முதல்வர் வேட்பாளர்களின் திரைப்படங்கள்

இக்கால இலக்கிய வடிவங்களில் ஒன்றான திரைப்படங்களிலும் இந்தப் போக்கு தொடர்கிறது. தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரமாக உள்ளவரும், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குபவரு மான இரஜினிகாந்த் ‘வீரா’ என்ற படத்தில், திருமணத்திற்குப் பிறகு, தனது முன்னாள் காதலியைத் திருமணம் செய்வார். அந்த இரண்டாம் திருமணத்தை மறைக்க அவர் படும் பாட்டை நாம் எல்லோரும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம்.

முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கும் மற்றொரு வேட்பாளர் கமலஹாசன், பஞ்சதந்திரம் படத்தில், சிம்ரனின் கணவராக வருவார். அவரது பிறந்தநாளில் அவரது நண்பர்கள் ஒரு பரிசளிப் பார்கள். அந்தப் பரிசு, அதாவது பொருள் என்ன தெரியுமா? பாகுபலி ‘ரம்யா கிருஷ்ணன்.’ வெளிப்படையாகவே, பெண்ணை ஒரு காமப் பொருளாகவும், ஆண் திருமண உறவைத் தாண்டி பாலியல் தேவைக்காக வேறொரு பெண்ணை நாடலாம் என்பதையும் பஞ்சதந்திரம் காட்டியது. நாம் அனைவரும் கைதட்டி, பாராட்டி, வரவேற்றோம்.

கமலஹாசன் நடித்த மற்றொரு படம் ‘சதிலீலாவதி’. அதில், ஏற்கனவே திருமணம் ஆன இரமேஷ் அரவிந்த், திருமண உறவைத் தாண்டி, பாலியல் தேவைக்காக, ‘ஹீரா’வை வைத்துக் கொள்ளத் துடிப்பார். அதையும் பார்த்து கைதட்டிச் சிரித்து மகிழ்ந்தோம்.

பெண்ணின் காதல்

மனைவியைத் தாண்டிய காதலையும், காமத்தையும் ஆதரித்த கடவுள்களும், இலக்கியங்களும், பண்பாடுகளும்-பெண்களின் காதலை எப்படிப் பார்த்தன? இராமாயணக் காலத்திலேயே இராமனை விரும்பிய ‘சூர்ப்பனகை’ மூக்கறுப்பட்டாள்.

இதே திரைத்துறையில், காதலை மய்யமாக வைத்து நூற்றுக்கணக்கான படங்கள் வந்திருக்கின்றன.  அந்தக் காதல் படங்கள்கூட பெரும்பாலும் ஆணின் காதலைப் பேசுபவையாகத்தான் இருக்கின்றன. ஒரு பெண் ஒரு ஆணைப் பார்த்துக் காதலித்து, வெற்றி-தோல்விகளைச் சந்திப்பது போன்ற படங்கள் மிக மிகக் குறைவாகவே வந்துள்ளன.

ஆணைப்பார்த்து பெண் ஆசைப்பட்டால், அவள் வில்லியாகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். ரோசாப்பூ ரவிக்கைக்காரி தீபா, படையப்பா ரம்யா கிருஷ்ணன், பார்த்தேன் ரசித்தேன் சிம்ரன், உயிர் சங்கீதா, சூரியவம்சம் ப்ரியா ராமன் இப்படி பல எடுத்துக்காட்டுக்களைக் கூறமுடியும்.

பஞ்சதந்திரத்தையும், சதிலீலாவதியையும் பார்த்துச் சிரித்த நமக்கு, லஷ்மியையும் இதே அளவில் இயல்பாக எடுத்துக்கொள்ள முடிய வில்லையே ஏன்? நமது கடவுள்கள், நமது இலக்கியங்கள், நமது மன்னர்கள், நமது திரைக் காட்சிகள் என அனைத்துமே ஆண் தனது பாலியல் தேவைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நியாயப்படுத்திக் கொண்டிருக்கும்போதும் - அவற்றை இலட்சக்கணக்கான ஆண்கள் கண்டு கொள்வதில்லை. தனது துணையிடம் மட்டுமே பாலியல் உறவுகளை வைத்துக்கொண்டுள்ளனர்.

அதுபோல, நம் வீட்டுப்பெண்கள் இயல்பாகக் கடந்து போக மாட்டார்களா? இந்தக் குறும் படத்தைப் பார்த்த உடனேயே அடுத்தவனைத் தேடிப் போய்விடுவார்களா? சரி, அப்படிப் போக வேண்டிய நிலை இருந்தால், தேவை இருந்தால், அதைத் தடுக்கவோ, அதைக் குற்றம் என்று சொல்லவோ நாம் யார்? இந்தச் சமூக அக்கறை இத்தனை நூற்றாண்டுகளாக ஆண்கள் மற்ற மற்ற பெண்களைத் தேடியபோது ஏன் வரவில்லை?

ஆண் செய்யும் தவறுகளைத் தானும் செய்வதுதான் பெண்ணியமா?

இதுபோன்ற கேள்விகளை யார் கேட்கிறார் கள் என்று பாருங்கள். இன்றும், நாளையும் தன்வீட்டில், தான் சாப்பிட்ட தட்டைத் தானே கழுவி வைக்க வேண்டும் என்ற சிறு.... மிக மிகச் சிறு....அறிவுகூட இல்லாதவர்களும், அதைச் செய்யாதவர்களும்தான் இப்படிப்பட்ட கேள்வி களைக் கேட்டு வருகிறார்கள்.

திருமணம் ஆன ஒரு பெண், உறவுக்காக வேறொரு ஆணை நாடக்கூடாது. அது பெண் விடுதலை இல்லை என்று சொல்பவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாருங்கள். ஒரு நாள், ஒரு பொழுதாவது தன் மனைவிக்கு ஒரு கோப்பைத் தேநீராவது தயாரித்துக்கொடுத்திருக்க மாட்டான். சமையலில் சிறு உதவியாக, பாத்திரங்களைக் கழுவித்தருவது என்பதைக்கூடச் செய்திருக்க மாட்டான். ஆனால், லஷ்மி போன்ற படங்கள் வந்தால் பதறித்துடித்து, இதெல்லாம் பெண்ணியம் இல்லை. இது ஒழுங்கீனம். பெரியார் அப்படிச் சொல்லவில்லை. அம்பேத்கர் காட்டிய பெண்ணியம் இது இல்லை. மார்க்ஸ் இப்படி வரையறுக்கவில்லை என்றெல்லாம் வகுப்பு நடத்துவார்கள்.

உலகில் ஒழுக்கம், நியாயம், தர்மம், சட்டம் என்பவற்றின் வரையறைகள் எல்லாம், கைவலுத் தவர்கள் மட்டுமே நிர்ணயிப்பதாக உள்ளன. இந்த வரிசையில் பெண் விடுதலையும் சேர்ந்து விடக் கூடாது என்பதே நமது நிலை. இதே செயல்கள் இத்தனை நூற்றாண்டுகளாக பெருமையுடன் நடந்து கொண்டிருந்தன. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அதையே இப்போதும் செய்யுங்கள். அதைத்தான் - அதை மட்டும்தான் ஒழுக்கம் என்கிறார் பெரியார்.

...“நான் திருடுவது குற்றமல்ல. நீ திருடுவது தான் குற்றம். நான் பொய் சொல்வது குற்றமல்ல. நீ சொல்வது தான் குற்றம். நான் விபசாரம் செய்வது குற்றமல்ல. நீ செய்வதுதான் குற்றம்” என்பது போன்றதான பொது ஒழுக்கங்கள் என்பவைகளும் பொதுக்கட்டுப்பாடுகள் என்பவைகளும் ஒரு நாளும் பொதுவாழ்வுக்கும், சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் சிறிதும் பயன்படாது. இன்று உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் இருந்து வரும் ஒழுக்கம், கட்டுப்பாடு, தர்மம் முதலியவைகள் எல்லாம் பெரிதும் இயற்கைக்கு எதிராகவும் அடிமைத்தனத்திற்கு ஆதரவாகவும், தனிப்பட்டவர்கள் சுயநலத்திற்கேற்ற சூட்சியாகவும் செய்யப்பட்டவை களாகவே யிருக்கின்றன.

(குடி அரசு - 26.10.1930)

கற்பு - ஒழுக்கம்:  தோழர் பெரியார்

...எப்படி கற்பு என்னும் வார்த்தையையும் அது பயன்படுத்தும் முறையும் புரட்டானது என்றும், பெண்ணடிமைகொள்ள உத்தேசித்து ஏற்படுத்தியதாகு மென்றும் சொல்லுகின்றோமோ அது போலவே விபசாரம் என்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும் புரட்டானதும், பெண்களை அடிமை கொள்வதற் கென்றே ஏற்படுத்தப்பட்ட தென்றும் காணப்படுவ தோடு அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமான தென்றும் கூட விளங்கும்.

சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும், சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாத தேயாகும்.. ஜீவசுபாவங்களுக்கு இவ்விரண்டு வார்த்தையும் சிறிதும் பொருத்த மற்றதேயாகும். வாழ்க்கை ஒப்பந்த நிபந்தனைக்கு மாத்திரம் தேவை யுடையதாகயிருக்கலாம். ஆன போதிலுங்கூட அவையும் இயற்கைக்கு முரணானது என்பதை யாவரும் ஒப்புக் கொண்டுதானாக வேண்டும். அதற்கு ஆதாரம் என்ன வென்றால் மேலே சொல்லப்பட்டது போலவே அவ்விரண்டு வார்த்தையின் தத்துவங்களையும் பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டு ஆண்கள் மீது சுமத்தப்படாமலும் ஆண்கள் அவற்றை ஏற்றுக் கொண்டு கட்டுப் படாமையும் அதைப் பற்றி லஷியம் செய்யாமையுமேயாகும்.

மற்றும் வேறொரு அத்தாட்சியும் என்ன வென்றால் மக்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்புத் தவறுதலும் விபசாரத் தனமும் கூடாது என்று பொதுவாக இருபாலர்களுக்குத் தானாகத் தோன்றா மலிருப்பதோடு பலர் கற்பித்தும் அதற்காகப் பல நிபந்தனைகளைக் கூட ஏற்படுத்தியும் மற்றும் எவ்வளவோ பயங்களைக் காட்டியும் அதனால் சிலராவது அடிதடி விரோதம், கொலை, உடல் நலிவு முதலியவைகளால் கஷ்டப்படுவதை நேரில் காணக் கூடிய சந்தர்ப்பங்களிருந்தும் இவ்வளவையும் மீறி மக்களுக்குக் கற்புக்கு விரோதமாகவும் விபசாரத்திற்கு அனுகூலமாகவும் உணர்ச்சியும் ஆசையும் ஏன் உண்டாக வேண்டுமென்பதைக் கவனித்தால் அது தானாக விளங்கும்.

இயற்கையோடு இயைந்த வாழ்வு எது என்பதையும் இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வு எது வென்பதையும் எவ்வித நாட்டுப்பற்று, நடப்புப் பற்று, பிறப்புப் பற்று என்பதில்லாமல் நடுநிலையிலிருந்து தன் அநுபவத்தையும் தன் மனதில் தோன்றிய, தோன்றும் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் ஒரு உதாரண மாகவும் வைத்துக் கொண்டு பரிசுத்தமான உண்மை யைக் காணுவானேயானால் அப்போதும் கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு என்பதும், மற்றவர்களை அடிமையாகக் கட்டுப்படுத்த உண்டாக்கப்பட்ட சுயநல சூட்சி நிறைந்தது என்பதும் தானாகவே விளங்கிவிடும். மற்றும் விபசாரம் என்பது ஒருவனுடைய “பாத்தியதைக்கும்” ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுப்பாட்டிற்கும் மாத்திரம் விரோதமே தவிர உண்மையான ஒழுக்கத்திற்கு விரோதமல்ல என்பதற்கு மற்றொரு உதாரணம் கூறவோம்.

- குடி அரசு - 26.10.1930

கட்டற்ற பாலியல் சுதந்திரமா?

பாலியல் சுதந்திரம் பெண்ணுக்கும் தேவை என்று நாம் கூறியவுடன், சிலர் நம்மிடம் “அப்படியானால், நீங்கள் கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்திரம் தேவை என்கிறீர்களா?” நோய்களை உருவாக்கும் காட்டுமிராண்டித்தனமான செக்ஸ் முறைகளை ஆதரிக்கிறீர்களா?” “க்ரூப் செக்ஸை ஆதரிக்கிறீர்களா?” “இது பெண்களை ஏமாற்றவே பயன்படும்” என்றெல்லாம் பேசுகிறார்கள்.

‘பெண்ணியம்’ என்ற பெயரில் பெண்களை ஏமாற்றுவதையோ - ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் ஒடுக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதையோ - தமிழ்த் தேசியம் என்ற பெயரில் தமிழர்களை ஏமாற்று வதையோ - கம்யூனிசம் என்ற பெயரில் பாட்டாளி களை ஏமாற்றுவதையோ உறுதியாக நாம் எதிர்க்கிறோம். அதேசமயம் ஏமாற்றுப் பேர்வழிகள் சிலர் இருப்பதாலேயே - எவரும் மேற்கண்ட கருத்துக்களைப் பேசவே கூடாது என்ற அடக்கு முறையையும் எதிர்க்கிறோம். கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை நாம் ஆதரிக்கவில்லை. ஆனால், அந்தக் ‘கட்டு’ என்ன? எதனடிப்படையில் போடப்பட்ட கட்டு? என்பவற்றைப் பொறுத்து ஆதரவாகவும் நமது நிலை மாறும்.

ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது குற்றமல்ல: பெரியார்

தோழர் குஷ்பு அவர்கள் 2005 ல் ‘இந்தியா டுடே’யில் கற்பு குறித்துத் தெரிவித்த ஒரு கருத்து பெரும் விவாதங்களை உருவாக்கியது. அது தொடர்பாக 15.01.2006-ல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் தி.வி.க தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரையைப் பாருங்கள்.

‘தனிச் சொத்து தோன்றிய பின்னர் தான், தனது சொத்துக்கள் தனக்குப் பிறந்த குழந்தைக்கு மட்டுமே போய்ச்சேரவேண்டும் என்ற எண்ணம் தான், கறாரான ஒரு தாரத் திருமணமுறை - இறுக்கமான கற்புக் கோட்பாடுகள் அதற்கு ஆண்களின் விருப்பத்திற் கேற்ற வழியுறுத்தல்கள் தோன்றின’ என்கிறது ஏங்கல்சின் மானுடவியல் விளக்கம். சொத்துடைமை இல்லாத மக்களிடம் இப்படிப்பட்ட இறுக்கம் நிறைந்த, கற்புக் கோட்பாடுகள் இருக்காது; இருக்க வாய்ப்பில்லை என்பதையே மணவிலக்கு, மறுமணமுறை காட்டுகிறது. அதுவே இயல்பானதும் கூட....

...‘கற்பைப் பற்றிச் சுத்தமாகப் பேச வேண்டும் என்றால், நாடாப்புழு ஒன்று தான் மிஞ்சும். ஏனெனில், அதற்கு மட்டும் தான் தன் உடலிலேயே ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் உண்டு’ என்றார் ஏங்கெல்ஸ்  (பலத்த கைத்தட்டல்).

...1971 ஜனவரி 23, 24 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் பெரியார் நிறைவேற்றிய ‘ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக்கூடாது’ என்ற  தீர்மானத்தை தோழர் அ.மார்க்ஸ் தற்போது மிகச் சரியாகச் சுட்டிக் காட்டினார்.

...திராவிடர் கழகத்தைச் சார்ந்த கரூர் வீர.கே.சின்னப்பன் என்ற வழக்கறிஞர் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 497 ஆவது பிரிவைச் சுட்டிக் காட்டி ‘விடுதலை’யில் எழுதினார் .

‘யாரொருவன், மற்றவன் மனைவியாக ஒருத்தி இருக்கிறாள் என்பதைத் தெரிந்தும் அல்லது தெரிந்து கொள்ள வாய்ப்பிருந்தும், அந்த நபரின் அனுமதி யில்லாமலும் மறைமுக சம்மதம் இல்லாமலும் புணர்கிறானோ, அந்தப் புணர்ச்சி கட்டாய புணர்தலுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். பிறர் மனைவியை புணர்ந்தான் என்ற குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் அல்லது குற்றத் தொகையும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கலாம். இந்தப் படியான வழக்குகளில் குற்றத்திற்கு உடந்தையாக மனைவி இருந்தார் என்பதற்காக அவரை தண்டிக்கக் கூடாது’ - என்பதே அச் சட்டப்பிரிவு.

ஆண்களை மட்டும் தண்டித்து, பெண்களைத் தண்டிக்காத இப்படிப்பட்ட சட்டம் ஏன் எழுதப்பட்டது என்று சட்டத்தை உருவாக்கிய கர்த்தாக்கள் சொன்ன மிக நீண்ட விளக்கம் 07.02.1971 ‘விடுதலை’யில் வெளிவந்தது.

‘‘மனைவிகளின் நம்பிக்கை துரோகத்திற்குத் தண்டனை வழங்கத் தீர்மானிப்பதற்கு முன் இரக்க உணர்ச்சியுள்ள மனிதனைச் சற்று நிறுத்தி நிதானிக்கும் படிச் செய்யும் வண்ணம் இந்த நாட்டிலுள்ள சமுதாய நிலைமையில் சில தன்மைகள் உள்ளன என்பதையும் எங்களால் உணராமல் இருக்க முடியவில்லை.

பலதார மணம் என்ற பெயரில் இந்த நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு கேட்டினை சட்டம் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்று எண்ணும் அளவுக்கு நாங்கள் கற்பனைவாதிகள் அல்லர். மெதுவானது ஆனால் நிச்சயமானது என்று நாங்கள் நம்பும் காலத்தின் செயல்பாட்டுக்கும் கல்வியின் செயல்பாட்டுக்கும் இதை நாங்கள் விட்டு விடுகிறோம்.

ஆனால் அது நடைமுறையில் இருந்து வரும் போது, பெண்களின் மரியாதைக்குரிய தன்மை மீதும், மகிழ்ச்சியின் மீதும் தனது தவிர்க்க முடியாத விளைவு களை உண்டாக்கும் வண்ணம் அது தொடரும் போது, தண்டனைச் சட்டம் என்ற அதிகப்படியான பளுவை ஏற்கனவே ஒருபுறமே மிகவும் அழுத்தப்பட்டுக் கிடக்கும் அதே தராசுத் தட்டில் ஏற்றுவதற்கு நாங்கள் மனங்கொள்ளவில்லை”.....

தோழர் கொளத்தூர் மணி அவர்களின் மேற்கண்ட உரை, 2007 ல் ‘தமிழர் பண்பாடு’ என்ற  சிறுநூலாக வெளியிடப்பட்டது. தி.வி.க வின் இணையதளத்தில் அந்நூலை இலவசமாகத் தரவிறக்கலாம்.

ஏங்கெல்ஸ் - பெரியார் - மெக்காலே - அம்பேத்கர்

பெண்களுக்கு ஆதரவாக இந்த இந்தியத் தண்டனைச் சட்டத்தை உருவாக்கியவர் ஆங்கிலேய ஆட்சியாளர் மெக்காலே ஆவார். இந்த 497 என்ற சட்டப்பிரிவுக்கு எதிராகப் பலமுறை நீதிமன்றங் களில் வழக்குகள் நடந்தன. 1954 ல் யூசுப் அப்துல் அசீஸ் வழக்கு, 1985 ல் செளமித்ரி விஷ்ணு என்ற பெண் தொடர்ந்த வழக்கு போன்ற அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. அப்படித் தள்ளுபடி செய்யப்பட்ட போதெல்லாம், பெண்ணைத் தண்டிக்கக்கூடாது என்பதற்கு அடிப்படையாக இருந்தது தோழர் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் சட்டத்தின் 15 வது பிரிவு ஆகும்.

திராவிடர் பண்பாட்டைச் செதுக்கிய தோழர் பெரியார் ‘லஷ்மி’களை ஆதரிக்கிறார். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய தோழர் அம்பேத்கர், பாட்டாளி வர்க்கப் பண்பாட்டைப் பேசும் தோழர் ஏங்கெல்ஸ், தோழர் லெனின், இந்தியத் தண்டனைச் சட்டங்களை உருவாக்கிய மெக்காலே போன்ற சமுதாயத்தை புரிந்த - சமுதாய  அக்கறை கொண்ட தலைவர்கள்  ‘லஷ்மி’ களைக் குற்றமற்றவளாக அறிவித்துவிட்டனர். அந்தத் தலைவர்களைப் பின்பற்றுபவர்கள் முதலில் ‘லஷ்மிகள்’ குறித்த பார்வையை மாற்றுங்கள். சமுதாயம் தானாக மாறும்.

பாலியல் சமத்துவத்துக்கு முன் பாலின சமத்துவம்

ஆண் - பெண் இருபாலருக்கும் பாலியல் சுதந்திரம் வேண்டுமானால், முதலில் பாலின சமத்தும் என்பதை கருத்தளவிலாவது ஆண் ஏற்றுக் கொள்ளவேண்டும். ஒரு பெண்ணின் பாலியல் விருப்பங்களைப் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டுமானால், முதலில் அந்த ஆண் பாலின சமத்துவத்தை ஏற்றுக்கொண்டவனாக இருக்க வேண்டும்.

சமையலறையில் மனைவியை மட்டும் வேலை செய்ய வைக்கும் எவனும் - வீட்டு வேலைகள் அனைத்தையும் பெண்களை மட்டுமே செய்ய வைக்கும் எவனும் - குடும்ப வாழ்வில் ஒவ்வொரு முடிவையும் தனது துணையோடு விவாதித்து எடுக்காத எவனும் - பெண்ணின் சிறு சிறு உணர்வு களையும், உணர்ச்சிகளையும், உடலையும் புரிந்து கொள்ளாத எவனும் - படுக்கையில் சமத்துவத்தோடு நடந்துகொள்ள மாட்டான். அப்படிப்பட்டவர் களால் ‘லஷ்மி’கள் உருவாவதைத் தடுக்கவும் முடியாது.

Pin It

அறிவுஜீவிகள் எனப் போற்றப்படும் விஞ்ஞானிகளும், அறிவியலாளர்களும் போலி-அறிவியலுக்கு ஆதரவாக இருக்கும் அவலநிலை நம் நாட்டில் எப்போதும் நிலவுகிறது. முட்டாள்தனமான போலி அறிவியல் கூற்றுகளைக் கல்வி வளாகங்களிலும், பொது மக்களிடை யேயும் பரப்புவதற்கும் - நவீன அறிவியல் ஆராய்ச்சி களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் புறந்தள்ளவும் இவர்களைத் தான் அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ISRO) உள்ள விஞ்ஞானிகள் முக்கியமான சோதனை களைச் செய்யும் முன், விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட் போன்ற மாதிரிகளை, திருப்பதி மற்றும் பிற கோவில்களில் காணிக்கையாக வழங்குவதும், டி.ஆர்.டி.ஓ (DRDO) இயக்குனர் புனேயில் உள்ள ஆலந்தி கோயிலுக்கு ரூ .5 கோடி மதிப்பிலான வெள்ளி இரதத்தை வழங்கியதும் நாம் அறிந்ததே!

அறிவியல் ஆய்வுகளுக்கு நிதிக்குறைப்பு

2001 ஆம் ஆண்டில், ஜோதிடப் பட்டப்படிப்பை அறிமுகம் செய்யப் பல்கலைக்கழகங்களை பா.ஜ.க. அரசு ஊக்குவித்தது. வேத ஜோதிடத்தில் UG, PG மற்றும் PhD படிப்புக்காகத் தனித்துறைகளைப் பல பல்கலைக்கழகங்களில் அமைத்தனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பிளாஸ்டிக் சர்ஜரியில் இந்தியர்கள் வல்லுநர்களாக இருந்தனர் என விநாயகரை எடுத்துக்காட்டி பிரதமர் மோடி அவர்கள் பேசினார்.

2015-இல் இந்திய அறிவியல் காங்கிரஸ் ((Indian Science Congress) என்ற நிகழ்வில் பழங்காலத்திலேயே இந்தியர்கள் ரதங்களைக் கொண்டு விண்வெளியில் பறந்ததாகவும், அதுவே விமானத்தைக் கண்டுபிடிக்க அடிப்படையாக அமைந்தது என்றும் பல முட்டாள்தனமான கருத்துகளை முன் வைத்தனர். அதே வேளையில், அறிவியல்-தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் CSIR) நவீன அறிவியல் ஆய்வுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டது.

மாட்டின் சிறுநீர் ஆய்வுக்கு நிதிஅதிகரிப்பு

இந்த ஆண்டு ஜூலை மாதம், பஞ்சகவ்யத்தின் நலன்களை அறிவியல் ரீதியில் மதிப்பிட உதவும் திட்டங்களை மேற்கொள்ள 19 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. டெல்லி ஐ.ஐ.டி. யுடன் இணைந்து, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை (Department of Science and Technology), அறிவியல் மற்றும் தொழிநுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பயோடெக்னாலஜி துறை (Department of Bio Technology, India) மற்றும் அறிவியல் - தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் (CSIR) ஆகியவை இணைந்து ஒரு தேசியத் திட்டத்தை பஞ்சகவ்ய ஆராய்ச்சிக்கென வகுத்தனர். மாட்டின் சிறுநீர் மற்றும் சாணியின் பயன்கள் என்ற பெயரில் பல வினோதமான கூற்றுகளை மத்திய அமைச்சர்கள் கூறி வருவதையும் கண்டிருக்கிறோம். இந்த ஆண்டு ஜூன் மாதம் குஜராத்திலுள்ள ஜுனகத் வேளாண்மை பல்கலைக்கழகம் (JAU), மாட்டின் சிறுநீரில் தங்கத் துகள்களைக் கண்டுபிடித்ததாகக் கூட கூறி வந்தனர்.

அறிவியல் ஆய்வு நிலையத்தில் ஜோதிடம்

இவற்றின் தொடர்ச்சியாக, இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கல்விக்கான முதன்மையான நிறுவனமாகக் கருதப்படும் பெங்களூரிலுள்ள IISC-இன் முன்னாள் மாணவர்கள் அமைப்பு அக்கல்வி வளாகத்தில் “ஒருவரின் முன்னேற்றத்திற்கான அறிவியல் சாதனமாக ஜோதிடம் (Astrology as a scientific tool for individual progress)” என்ற தலைப்பில்  ஜோதிடம் படிக்க இரண்டு நாள் பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்தது. நவம்பர் 25, 26 இல், IISC-இன் முன்னாள் மாணவர் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினரான ரமேஷய்யாவைப் பயிற்றுனராகக் கொண்டு இவ்வகுப்பு நடைபெற இருந்தது.

அவர் 1984-1986 இல் IISC-இல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் எம்.டெக் பட்டம் பெற்றவர். டாக்டர் பி. வி. ராமனால் நிறுவப்பட்ட இந்தியன் கவுன்சில் ஆஃப் அஸ்ட்ராலஜிக்கல் சயின்ஸஸ் (ICAS: Indian Council of Astrological Sciences) என்ற அமைப்பின் உறுப்பினராவார். IISc முன்னாள் மாணவர்களுக்கும் அவர்களின் இணையர்களுக்கும் ரூ.1500-ம், மற்றவர்களுக்கு ரூ.2000-ம் பயிற்சிக் கட்டணம் என்று அச்சிடப்பட்ட பயிற்சி வகுப்பு அழைப்பிதழ்கள் IISc வளாகம் முழுவதும் காணப்பட்டன.

இந்த நிகழ்வு உண்மையிலேயே அறிவியல் மனப்பான்மையோடு இருக்கும் பல மாணவர்களையும், விஞ்ஞானிகளையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. ஏனெனில், IISc என்பது இந்தியாவின் நவீன ஆராய்ச்சி நிறுவனங்களில் எப்போதும் முதலிடம் வகிக்கும் ஆராய்ச்சி நிறுவனமாகும்.

எனவே பயிற்றுநரைத் தொடர்பு கொண்டு பலர் இந்நிகழ்வு IISc-இல் நடைபெறக் கூடாது என்று கூறியுள்ளனர். ஆனால் எந்தப் பயனும் இல்லை. ஆங்கில இந்து பத்திரிக்கையின் செய்தியாளர் அவரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர்,

“இந்தியாவில் 36 பல்கலைக் கழகங்கள் ஜோதிடத்தில் பட்டப்படிப்பு வழங்குகின்றன. ஜோதிடத்திற்கென்று தனிப் பகுதி இல்லாத நாளிதழ்களோ, வார இதழ்களோ கிடையாது. ஜோதிடத்திற்கென்று பல இணைய தளங்களும், சேனல்களும் உள்ளன. அது போலவே இவ்வகுப்பும் நடத்தப்படுகிறது. பங்கேற்பவர்கள் தங்கள் வாழ்நாளில் மீதமுள்ள காலத்தில் எவ்வாறு முன்னேறலாம் என்று கற்றுக் கொடுப்பேன். அவர்கள் 24 மணி நேரத்திற்குள் ஒரு ஜோதிடராகவும் மாற முடியும். இந்த இரண்டு நாட்களில் அவர்கள் ஜோதிடத்தை பற்றி அனைத்தையும் கற்றுக் கொள்ளலாம்”

என்று அவர் ஆர்வத்துடன் பதில் கூறியிருக்கிறார்.

ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கு IISc போன்ற ஆராய்ச்சி நிறுவனம் துணை போகலாமா? என்ற கேள்விக்கு,

“யோகாவைப் போல் ஜோதிடத்தின் மூலமாகவும் பலர் பயனடைய முடியும். ஜோதிடத்தைப் பற்றிக் கேள்வி கேட்பவர்களுக்கு அதைப் பற்றி முழுமையாகத் தெரியாது. ஜோதிடம் அறிவியல் அல்ல என்று கூறுபவர்கள் இவ்வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு உண்மை விளங்கும். யாரேனும் ஜோதிடம் அறிவியலல்ல என்று கூறினால் நம்பாதீர்கள்!” என்று கூறியுள்ளார்.

Breakthrough Science Society

இந்நிலையில், இவ்வகுப்பினை நடத்தக் கூடாது என்று கூறி பலர் எதிர்த்தனர். அறிவியலை மக்களுக்கும் மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் ஒரு நிறுவனத்தில் “ஜோதிடத்தை அறிவியல் சாதனம்” என்று சொல்லிக் கொடுப்பது நியாயமல்ல! ஜோதிடத்தில் பயிற்றுநருக்குத் தனிப்பட்ட வகையில் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அதற்கு IISc -இன் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் பல எதிர்ப்புகள் எழுந்தன.

முறையான வகையில் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வண்ணம், முன்னாள் மாணவர்களில் அந்நிகழ்விற்கு எதிராக இருந்த சிலர், IISc இயக்குனர் அனுராக் குமார் அவர்களுக்கு கடிதம் எழுதினர். அதில், “ஜோதிடம் அறிவியல் இல்லை. அது ஒரு நம்பிக்கை. ஜோதிடத்தின் பல்வேறு முறைகளைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் அதைத் தான் கூறுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய அரசின் போலி அறிவியல் பரப்புரைகளுக்கு எதிராக நாடெங்கும் பல நகரங்களில் அணிவகுப்புகளை நடத்திய பிரேக் த்ரூ சயின்ஸ் சொஸைட்டி (Breakthrough Science Society) என்ற அமைப்பு இந்த கடிதத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் அவ்வகுப்பை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

நன்றி: THE HINDU, Times of India, Science Chronicle

Pin It