நான் எழுதத்தொடங்கியபோது என்னுடைய நோக்கம் எழுதுவதுதான். மாணவப் பருவத்தில் பல பத்திரிகைகளைப் படிக்கும்போது, ஒருவர் எழுதியதை நாம் படிப்பதுபோல், நாம் எழுதுவதை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் உதித்தது. இந்த ஆசை என்னை எழுதவைத்தது. அப்போது எனக்கு வயது பதினான்கு இருக்கலாம். திருவாரூர் கழக உயர்நிலைப்பள்ளியில் நான் மாணவன். நான் படித்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள்தான் எனக்கு முன்மாதிரி. அந்த முன்மாதிரிகளை வைத்துக்கொண்டு கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி பல பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். ஒரு பத்திரிகையிலும் என் எழுத்து வந்ததில்லை. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் என் எழுத்து அச்சைப் பார்க்காமலே தவித்தது. மாணவப்பருவத்திலேயே எனக்கு ஆழ்ந்த தமிழ்ப்பற்றும், இலக்கிய ஈடுபாடும் உண்டு 

கல்லூரியில் படிக்க சென்னை வந்து கல்லூரி மாணவனாகி நான் எழுதியபோது, என் எழுத்துக்கள் சில பத்திரிகைகளில் வெளிவந்தன. கல்லூரி நாட்களில் எனக்குப்பிடித்தவர்கள், 'கல்கண்டு' ஆசிரியர் தமிழ்வாணன், நடிகர் சிவாஜிகணேசன், பாரதி, பாரதிதாசன், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, பெரியார், காமராஜர் ஆகியோர்தான். 

கலைஞர் கருணாநிதியின் வசனத்திலும், கண்ணதாசனின் பாடல்களிலும், ஜெயகாந்தனின் சிறுகதைகளிலும் எனக்கு மயக்கம் உண்டு. 

என்னுடைய அண்ணன் ராஜமாணிக்கம் மாணவர் காங்கிரசில் இருந்தார். அவர் காங்கிரஸ் பத்திரிகைகளில் எழுதுவார். அப்போது "பாரதம்"என்று ஒரு வாரப்பத்திரிகை வெளிவந்துகொண்டிருந்தது. அதில் காமராஜரைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுதினேன். அதுதான் அச்சில் வந்த முதல் எழுத்து என்று சொல்லவேண்டும். அது அனேகமாக 1960 ஆம் ஆண்டாக இருக்கலாம். அதன் பின்னர் அதுபோன்ற கட்டுரைகளை எழுதவில்லை. அரசியல் கட்டுரைகள் எழுத மனம் விரும்பவில்லை. அது இலக்கியத்தையே நாடியது. 

கல்கி பத்திரிகையிலிருந்து வெளியேறிய பகீரதன் "கங்கை" என்று ஒரு பத்திரிகை ஆரம்பித்தார். புதிய பத்திரிகைக்கு எழுதினால், ஒருகால், நம்முடைய எழுத்து வெளியாகலாம் என்று எனக்குத் தோன்றியது. எனக்குத் தோன்றியது சரிதான். அதில் அடிக்கடி என்னுடைய வேடிக்கைக் கவிதைகள் மற்றும் சில படைப்புகளும் வெளிவந்தன. இன்னும் சில சிறிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் இடம்பெற்றன. எனினும் குறிப்பிட்டுச் சொல்லும்படி அவை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. "குத்தூசி" குருசாமியின் குத்தூசியில் சில கட்டுரைகள் வெளிவந்தன. அப்போது குருசாமி, பெரியாரை விட்டு விலகி இருந்தார். குத்தூசியில் எழுதிய கட்டுரைகள் என் நண்பர்கள் மத்தியில் எனக்கு ஒரு அங்கீகாரத்தைத் தேடித்தந்தன. எழுத்தாளன் என்ற உணர்வு என்னுள் சதிர் ஆடியது. தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் உடனே சேர்ந்தேன். அதில் செயற்குழு உறுப்பினராகவும் பின்னர் ஆனேன். 

கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தேன். ஆங்கில இலக்கியத்தில் இருப்பதுபோல், தமிழில் விமர்சனம் வளரவில்லை என்பதை உணர்ந்தேன். அதனால் திறனாய்வுத் துறையைத் தேர்ந்தெடுத்தேன். ஆரம்பத்தில் கவிதை, கதைகள் எழுதினாலும், பின்னர் திறனாய்வுக்கே என்னை ஒதுக்கிக்கொண்டேன். 

அறுபதுகளின் பிற்பகுதியிலும், எழுபதுகளிலும் சென்னையில் சில புதிய இலக்கிய அமைப்புகள் கூட்டங்கள் நடத்தத் தொடங்கின. "இலக்கிய வட்டம்" என்ற அமைப்பை நடத்தியவர்களில் சா.கந்தசாமியும் ஒருவர். அக்கூட்டங்கள் சிலவற்றில் இலக்கிய விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த க.நா. சு. கலந்துகொள்வார். "எழுத்து" ஆசிரியர் சி.சு.செல்லப்பா எல்லா கூட்டங்களுக்கும் வந்து விடுவார். இந்தக் கூட்டங்களில்தான் நான் தி.க.சி.யைச் சந்தித்தேன். அவர் "தாமரை" பொறுப்பாசிரியராகவும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திலும் இருந்தார். அவர் கூட்டங்களில் சமுதாயப் பார்வையோடு விமர்சனங்களை முன்வைத்தது எனக்குப் பிடித்துப்போயிற்று. "தாமரை" படிக்க ஆரம்பித்தேன். மார்க்சியத்தைக் கற்க ஆரம்பித்தேன். தாமரையில் பல கட்டுரைகள் என்னைச் "சுதந்திரமாக" எழுத தி.க.சி. அனுமதித்தார். வெறும் எழுத்தாளன், முற்போக்கு எழுத்தாளன் ஆனேன். வெறும் எழுத்தாளன் முற்போக்கு எழுத்தாளன் ஆனேன். தாமரையில் தான் எனக்கு முகவரி கிடைத்தது. திகசியின் அறையில் தான் நாவலாசிரியர் டி.செல்வராஜ் இருந்தார். இருவேறு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரே அறையில் வசித்தார்கள். டி.செல்வராஜால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பு ஏற்பட்டது. முதலில் எனக்கு அறிமுகமான கம்யூனிஸ்ட் தலைவர் வி.பி.சிந்தன்தான். "கண்ணதாசன்" பத்திரிகை வெளிவரத் தொடங்கி, அதோடு நெருக்கமான போது மக்கள் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தோம். அதன்பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். சென்னையில் இருந்த பல முற்போக்குப் படைப்பாளிகள் மக்கள் எழுத்தாளர் சங்கத்தோடு தொடர்புடையவர்கள்தான் அச்சங்கத்திற்கு "கண்ணதாசன்" மாத இதழ் பெரிய ஆதரவு மையமாக இருந்தது. 

1975ம் ஆண்டு "சிகரம்" என்ற மக்கள் இலக்கிய மாத இதழை ஆரம்பித்து ஐந்தாண்டுகளுக்கு மேல் நடத்தினேன். 

1) தமிழ்ச் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு 

2) இந்துச்சட்டம் 

3) இந்திய அரசியல் சட்டம் ஓர் அறிமுகம் 

4) தமிழ், திமுக, கம்யூனிஸ்ட்  

5) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 

6) விவாதங்கள் தொடரட்டும் 

7) காதுகளைக் கடன் கொடுங்கள் 

8) ஆலயம் அர்ச்சகர் தீர்ப்புகள் 

9) சமயமும் சமய எதிர்ப்பும் 

10) தமிழ்மொழி நீதிமன்றம் தீர்ப்புகள் 

11) சிதம்பரம் கோயில் சில உண்மைகள் 

12) நிழலின் எதிர்வினைகள் 

13) பண்பாட்டுப் புரட்சி என்றால் என்ன?

14) ஆண்டவன் ஆகமம் நீதிமன்றம் 

இவையெல்லாம் நான் எழுதி வெளிவந்த நூல்கள். இப்போது நான் எழுதி முடித்து அச்சில் இருக்கும் நூல். "அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை-ஒரு மறுவாசிப்பு" 

நான் எழுதுவதற்கு, எழுதவேண்டும் என்ற ஆசையும், தமிழ் உணர்வுமே முதலில் என்னை இயக்கின. ஆங்கில இலக்கியப்பயிற்சி என்னைத் திறனாய்வுப் பக்கம் திருப்பியது. வழக்கறிஞர் தொழில் தீர்ப்புகள் சார்ந்து எழுத வாய்ப்பளித்தது. எனினும் நான் படித்து ஏற்றுக்கொண்ட மார்க்சியம்தான் எனக்குச் சமுதாயப் பார்வை தந்தது. வெளிச்சம் தந்து, வழிகாட்டியானது. என் எழுத்தின் நோக்கம் மார்க்சியக் கண்ணோட்டத்தில், எழுதும் பிரச்சனைகளையும், பொருட்களையும் பார்ப்பதாயிற்று, ஒரு தெளிவான பார்வையும், பயணமும் உறுதியாகிவிட்டது. 

சமீபகாலமாக நான் சமயம் சார்ந்த நூல்களை எழுதிவருகிறேன். சமயம் குறித்து ஏன் எழுதவேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். 

சமயம் குறித்து நான் எழுதுவதற்கு காரணம் கிராம்சிதான். ஆளும் வர்க்கம் மக்களை நேரடி அடக்குமுறை இயந்திரங்கள் அல்லாமல் மக்களை அவர்களின் ஒப்புதலோடு ஆள்வதற்கு சமயம் மக்கள் மத்தியில் கொண்டிருக்கும் செல்வாக்குதான் காரணம் என்பதை அவர் மிகவும் வலியுறுத்தினார். எனவே சமயத்தின் பக்கம் திரும்பி அதன் உள்ளே இருக்கும் முரண்பாடுகளையும், பிரச்சனைகளையும் போராட்டங்களையும் எழுதத் தலைப்பட்டேன். வர்க்கப்போராட்டத்தின் கூறுகள், பிரதிபலிப்புகள் சமயப் போராட்டங்களில் உண்டு. இவைகளை அடையாளம் காண்பதும், அவற்றை மக்களுக்குக் கூறுவதும், உடன்மறையான போராட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பதும் நமது கடமை என்றே நானும் உணர்ந்தேன். கோயில்களில் தமிழ் கருவறைக்குள்ளும் நுழைய வேண்டும். வாழ்வியல் சடங்குகளைத் தமிழ் ஆளவேண்டும். அனைத்து சாதியினரும் கருவறையில் அர்ச்சகர்களாகப் பணியாற்ற வேண்டும், கண்மூடிப்பழக்கமெல்லாம் மண் மூடிப்போகவேண்டும். சமய நல்லிணக்கம் வேண்டும் போன்ற குரல்கள் எல்லாம் ஆன்மீக வட்டத்திற்குள்ளேயே எழும்போது, அந்த வட்டத்தை அந்நிய வட்டம் என்று பார்க்க முடியுமா? இருபதாம் நூற்றாண்டில் அலை அலையாய் வீசிய பல்வேறு முற்போக்குச் சீர்திருத்த இயக்கங்களுக்கான முன்னோட்டம் சமயவாதிகளிடமும் இருந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டாமல் இருப்பது தகுமா?

பண்பாட்டு வரலாற்றின் தலைமை பீடமே சமயத்திடம் தானே இருக்கிறது. எனவே அதிலும் போராட்டம் வேண்டும் அல்லவா?

இன்று இந்தியாவை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சக்தி மதவாதம் அல்லவா? மதநம்பிக்கை உடையவர்கள் மத்தியிலிருந்தே மதவாதத்திற்கு எதிரான குரல் உரக்க வருவத நாட்டுக்கு நல்லதல்லவா? அதனால்தான் சமயப்பிரச்சனைகளில் அதன் இலக்கிய, சமூகத்தளங்களில் என் கவனம் சென்றது. 

எனக்கு முன்னே பல இடதுசாரி சிந்தனையாளர்கள் தமிழ்ச்சமய உலகில் புகுந்து புதிய வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தில் அருணனும் சில நூல்கள் எழுதியிருக்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகால சமய இலக்கியங்களுக்குச் சொந்தமான தமிழ் மொழியில் இவைகள் பற்றி எழுத ஒரு எழுத்துப்படையே வேண்டும். நான் ஒரு முன்னணி சிப்பாய். 

இப்படிச் சொல்வதால் எதிர்காலத்திலும் தமிழக வரலாறு சார்ந்த சமயப் பிரச்சனைகள் குறித்தே எழுதுவேன் என்று என்னவேண்டாம். 

நவீன இலக்கியம் குறித்த விமர்சன நூல்களும் தொடரும், மொழிச் சிந்தனையும் நூல்வடிவம் பெறும். 

இப்போது எனக்கு வயதாகிவிட்டது என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையாக இருக்கலாம். எனக்கு வேண்டியவர்கள் பொய் சொல்வார்களா என்ன?

நான் ஒரே ஒருமுறை ஒரு கூட்டத்தில் சாமிநாத சர்மாவைப் பார்த்திருக்கிறேன். அக்கூட்டத்தில் அவர் சொன்னார். "என் கண்ணில் ஒளி இருக்கும்வரை, என் கட்டைவிரலில் சக்தி இருக்கும் வரை நான் எழுதுவேன்" 

பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சொன்னதை நான் திருப்பிச் சொல்கிறேன். 

- ச.செந்தில்நாதன் 

Pin It