மஞ்சள் நிற உலோகமான தங்கத்தைத் தான் பிரபல எழுத்தாளர் மக்ஸிம் கார்க்கி ‘மஞ்சள் பிசாசு’ என வர்ணித்தார். தங்கம் பயன்பாட்டில் இல்லாத காலம்தான் ‘தங்கமான காலம்’ என ஒரு அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கம் ஓர் அழகிய முரண்பாடு!

தங்கம் போற்றவும்படும்; சபிக்கவும்படும். இடுப்பொடிய சாகும்வரைதங்கத்தைத் தோண்டி யெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கத்தைச் சபித்தனர். கனவான்களோ தங்கத்தைப் போற்றினர். தாங்கள் சாமானியர்கள் அல்ல சீமான்கள் என்று அடையாளப்படுத்த தங்கம் தேவைப் பட்டதால், அவர்கள் போற்றினர். ஆனால் சாமானியர்களே! தங்கத்தையும் வரலாற்றையும் படைக்கிறார்கள் !

கலைப் பொருட்கள் செய்யவும் அணி கலன்கள் செய்யவும் மூலப்பொருளாக கலைஞர் களில் கைகளில் தவழ்ந்த தங்கம், பின்னர் கொலைகாரர்களுடனும் கொள்ளையர்களுடனும் கை கோர்த்துக் கொண்டது. தங்கத்தின் மீதுள்ள ஆசைகாரணமாக பயங்கரமான குற்றங்கள் நிகழ்ந்தன. உலோகத்திற்காக மக்கள் மடிந்தனர். ஸ்பெயினைச் சேர்ந்த யூதர்கள் நாடு கடத்தப்பட்ட போது தங்களுடன் விலையுயர்ந்த தங்கக் கட்டிகளை சிறு சிறு துண்டுகளாக்கி விழுங்கி, மறைத்து எடுத்துச் செல்ல முற்பட்ட போது அரேபியர்கள் தங்கத்தைப் பெற யூதர்களைக் கொன்று வயிற்றைக் கிழித்துப் பார்த்த சம்பவங்கள் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது

தங்கம் மக்களை ஈவிரக்கமற்றவர்களாக , தார்மீக ரீதியில் கெட்டவர்களாக மாற்றியது. இதற்கு தங்கத்தைப் பொறுப்பாளியாக்க முடியாது. ஏனென்றால் அது சில வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட வெறும் உலோகமே. அதை செல்வத்தின் வடிவமாக, அநேகமாக மதத்தைப் போன்று வழிபாட்டிற்குரிய பொருளாகச் செய்திருப்பது நம் மடமைச் சமூகமே .

தங்கம், மண், நீர், காற்று இவற்றோடு உறவாடினாலும் தன் பளபளக்கும் கவர்ச்சியை இழப்ப தில்லை. இதுமட்டுமே இதன் சிறப்பான குணம். தங்கம் 6000 ஆண்டுகளாக மனிதனால் பயன் படுத்தப்பட்டதாக இருந்தாலும், சமீப காலங்களிலேயே தொழில் துறையில் மிகச்சிறிய அளவில் பயன்படுகிறது. பிளாட்டினம் கூட மெல்லிய மயிரிழை போன்ற நுண் குழாய்களை உருவாக்கப் பயன்படும் சிறப்புத் தன்மை கொண்டது. தங்கம் அவ்வாறான தனக்கே உரித்தான சிறப்புத் தன்மை ஏதும் கொண்டதல்ல.

நவீன தொழில் துறை மற்றும் நகரியல் கட்டுமானங்களில் பெருமளவில் பயன்படும் பிரதான உலோகம் இரும்பு. தங்கத்துடன் ஒப்பிடும் போது இதன் மதிப்பு ஆயிரம் மடங்கு பின்தங்கி யிருக்கிறது. மற்ற உலோகங்கள் எவற்றிற்கும் இல்லாத உயர் மதிப்பு தங்கத்திற்கு ஏன் வந்து சேர்ந்தது? பளபளக்கும் தன்மையால் மட்டுமே தங்கம் மதிப்பைப் பெற்றதா? இல்லை. தங்கம் உலோகம் மட்டும் இல்லை அது பணம்! “தங்கம் இயற்கையாகத் தன் இயல்பில் பணம் இல்லை. ஆனால் பணம் இயற்கையாகவே தங்கமாக இருந்திருக்கிறது” என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். ஒரு சாதாரண மஞ்சள் நிற உலோகம். பணமாக செல்வமாக உருப்பெற்றது வரலாற்றில் நிகழ்ந்த ஒரு விபத்து.

ஆதி மனிதன் வேட்டையாடியும் காய் கனியைச் சேகரித்து உண்டும், உயிர் வாழ்ந்தான். நாடோடி வாழ்க்கையை விடுத்து தனக்கான உணவு உற்பத்தியில் ஈடுபட்ட போது, மனித வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. உணவு தானியங்கள், மட்பாண்டங்கள், கம்பளிகள், கத்தி போன்ற சிறு கருவிகள் சந்தைக்கு வருகின்றன.

தானியம் தேவைப்படும் ஒருவர் தான் தயாரித்த கம்பளிகளைச் சந்தைக்கு கொண்டு வரும் போது அந்தக் கம்பளிகளைப் பெற்றுக் கொண்டு தானியத்தை, அவருக்கு தரும் நபர், சந்தையில் இருந்தால் இருவருக்குமிடையேயான பண்டமாற்று சுலபமாக முடியும். தானியத்தை சந்தைக்கும் கொண்டு வருபவருக்குக் கம்பளி தேவையில்லை. மாறாக அவருக்குக் கத்தி தேவைப்படுமெனில், பண்ட மாற்று முறையில் சிக்கல் வருகிறது.

இம்மாதிரியான சூழலில் பொதுவான மதிப்புடைய ஒரு பொருள் இருந்தால் பண்டங்களை மாற்றிக் கொள்வது எளிதாகும். இந்த இடத்தை நிறைவு செய்யவே உலோகங்கள் சந்தைக்கு வந்தன. உலோகங்கள் அப்போது அரிதான பொருளாக இருந்ததால், குறிப்பிட்ட அளவும், எடையும் கொண்ட உலோகம் மற்ற பொருளுக்கு ஈடாக சந்தையில் ஏற்றுக் கொள்வது வழக்கமானது. இவ்வாறே செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்கள் வரலாற்றில் பணமாக மாறியது. இன்றைய தலைமுறையினர் தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்கள் ஒரு காலத்தில் பணமாக செலாவணியிலிருந்தது என்று சொன்னால் ஆச்சரியப்படக் கூடும்.

தோல் பொருட்கள், கோகோ கொட்டைகள், உப்பு, கால்நடைகள் போன்றவையும் பணமாக சந்தையில் பயன்பட்டிருக்கிறது. மனிதன் கூட பணமாக இருந்தான் என்று சொன்னால் நம்பமுடியுமா? 19ஆம் நுற்றாண்டில் கூட ஆப்பிரிக்காவில் அடிமைகள் பணமாகப் பயன்படுத்தப் பட்டனர். மூன்று அடிமைகளைக் கொடுத்து ஒரு குதிரையை மக்கள் வாங்கிச் சென்றதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அய்ரோப்பிய சமூகங்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களும் இது போன்ற காட்டுமிராண்டித் தனமான நிலைகளை கடந்தே வளர்ந்து வந்திருக்கின்றன. பல்வேறு உலோகங்களும் பொருள்களும் பணமாகச் செயல்பட்டிருந்தாலும் தங்கம் மட்டுமே செல்வமாக, பணமாக உயர் மதிப்பு பெற்றதற்கு என்ன காரணம் ?
தங்கம் ஒரு அரிய உலோகம் இதை வெட்டியெடுப்பது கடிமான பணி, மற்ற உலோகங்களைப் போல இது பரவலாகக் கிடைப்பதில்லை. கிடைக்கும் இடங்களிலும் இது செரிவான அளவில் இருக்காது. ஒரு டன் மண்ணை சுத்தம் செய்தால் 100 கிராம் அளவிற்கு சில இடங்களில் தங்கம் கிடைக்கும். அதிக உழைப்பைச் செலுத்தி சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படும் உலோகம் தங்கம், எனவேதான் தங்கம் உயர் மதிப்பைப்பெற்றிருக்கிறது.

“சோதனைச்சாலையில் சிறிதளவு கரியைப் பயன்படுத்தி வைரத்தை தயாரித்துவிட முடியும் என்றால், வைரத்திற்கு மதிப்பேதுமிருக்காது” என்று மார்க்ஸ் தனது ‘மூலதனம்’ நூலில் குறிப்பிட்டிருப்பார். ஒரு பொருள் எவ்வாறு மதிப்பைப் பெறுகிறது என்றால் அதில் உருப்பெற்றிருக்கும் மனித உழைப்பே அப்பொருளுக்கு மதிப்பை தருகிறது என்பதை விளக்குவதற்கே மார்க்ஸ் அவ்வாறு குறிப்பிட்டார்.

பண்ட மாற்று முறை நடைமுறையில் இருந்தபோது உலோகங்கள், பணமாகச் செயல்பட்டு பொருட்களின் பரிவர்த்தனைச் சிக்கல்களைத் தீர்த்தன. இதில் தங்கம் உயர்மதிப்பைப் பெற்ற இனமாகச் (denomination) செயல்பட்டது. தங்கத்தின் மதிப்பை, தரத்தை, எடையை, அன்றைய வணிகர்களின் சங்கமும் நகராண்மை அமைப்புகளும் திருச்சபைகளும் தீர்மானித்தன. பின்னர் அரசுகள் தோன்றிய போது நாணயங்கள் அச்சிடப்படுவது அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஓவ்வொரு நாட்டின் தங்க நாணயமும் ஒவ்வொரு பெயரைக் கொண்டு வெளி வந்தது.

இங்கிலாந்தின் ‘பவுண்ட்டும்’ பிரான்ஸில் நெப்போலியனால் கொண்டுவரப்பட்ட ‘பிராங்கும்’ அமெரிக்காவின் ‘டாலரும்’ நாடுகளுக்கிடையான வர்த்தகத்தில் பிரபலமாயின. இதைப்போலவே ஒவ்வொரு நாட்டின் நாணயமும் ஒரு குறிப்பிட்ட அளவு எடையுள்ள தங்கத்தைக் கொண்டிருந்தது. நாடுகளுக்கிடையிலான பண பரிவர்த்தனையில் ஒவ்வொரு நாட்டின் நாணயத்திலும் உள்ள தங்கத்தின் அளவைக் கொண்டு அதனதன் மதிப்பு வரையறுக்கப்பட்டது.

உதாரணமாக இங்கிலாந்தின் நாணயமான ஒரு பவுண்ட்டின் தங்க அடக்க அளவு 7.322 கிராம் ஆகும். ஒரு அமெரிக்க டாலர் 1.505 கிராம் தங்கத்தைக் கொண்டிருந்தது. பவுன் மற்றும் டாலர் இவற்றிற்கிடையேயான மதிப்பு தங்கத்தின் எடையைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டது. அதாவது 7.322 என்ற அளவை, 1.505 ஆல் வகுத்து வரும் ஈவான 4.87 எனபது இரண்டு நாணயங்களுக்கு இடையேயான மதிப்பு விகிதமாக இருந்தது. அதாவது ஒரு பவுனுக்கு 4.87 டாலர் சமம் என்று மதிப்பு நிர்ணயம் ஆகும். இப்படி தங்கத்தை ஆதாரமாகக் கொண்ட பணவியல் முறை நாடு களுக்கு இடையில் வர்த்தகத்தில் நடைமுறையில் இருந்தது.

தங்கத்தை அதிக அளவில் குவித்து வைத்திருக்கும் நாடுகள் சர்வதேச அளவில் பொருளாதார ரீதியில் மதிப்புடைய நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டன. அமெரிக்கா 1948-இல் உலக இருப்பில் 70 சதவீதத்தை (21,800 டன்) தன் நாட்டில் வைத்திருந்தது. ஆனால் 1972-இல் உலக இருப்பில் அமெரிக்காவின் இருப்பு 21 சதமாகக் குறைந்தது. உலகப் போர்களின் காரணமாகவும், உலகம் தழுவிய பொருளாதார மந்த நிலை காரணமாகவும் தங்கத்தை மையமாகக் கொண்ட பொருளாதார நகர்வுகள் மற்றும் பணவியல் கோட்பாடுகள் தளர்ந்தன. தங்கம் அல்லாத காகிதக் கடன், பணம் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. இருப்பினும், காகித நோட்டுகளை அச்சிட்டு வெளியிட ஒவ்வொரு அரசும் தனது மத்திய அல்லது ரிசர்வ் வங்கியில் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கத்தை வைத்திருக்க வேண்டும் என்ற கோட்பாடுகள் வலுவடைந்தன.

ஏகாதிபத்தியங்களும் வளர்ந்த நாடுகளும் ஒருங்கிணைந்தது பொருளாதார நெருக்கடி களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக IMF என்ற சர்வதேச நிதியம் ஒன்றினை ஏற்படுத்தினர். IMF (International monetary fund) இல் அமெரிக்காவும், இங்கிலாந்தும் முக்கியப் பொறுப்பேற்று பணியாற்றின. இதன் செயல் திட்டங்களை சோவியத் ஒன்றியம் ஏற்றுக் கொள்ளவோ இதில் உறுப்பினராகவோ மறுத்து விட்டது. இந்தச் சர்வதேச நிதியம், சர்வதேச சபை போன்ற வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளின் செல்வாக்கு மிக்க அமைப்புகளே உலக நாடுகளின் பணத்தையும் அதன் மதிப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.

ஒரு நாட்டிலிருந்து ஒரு தேசிய இனம் பிரிந்து தனி நாடாகும் பொழுது அல்லது ஓட்டெடுப்பின் மூலம் ஒரு நாட்டின் ஒரு பகுதி தனி நாடாகும் போது அல்லது மக்கள் எழுச்சி மூலம் புதிய நாடுகள் உருவாகும் பொழுது இவற்றை அங்கீகரித்து அவற்றின் பணத்திற்கு உரிய மதிப்பை அளிக்கும் போது தான் அந்தப் புதிய நாடுகள் மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய இயலும். வளர்ந்த நாடுகள் தங்களுடைய வர்த்தக நலன், தங்களுடன் வணிகம் செய்யும் நாடுகளின் நலன்களை மையப்படுத்தியே ஒரு நாட்டை அங்கீகரிப்பதையும், தனிமைப்படுத்துவதையும் செய்து வந்திருக்கின்றன.

ஒரு நாட்டின் பணம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற அந்த நாடு தன் மைய வங்கியில் குறிப்பிட்ட அளவு தங்கத்தை வைத்திருக்க வேண்டும் என நிபந்தனை விதிப்பதன் மூலம் ஏகாதிபத்தியங்கள் சிறிய நாடுகளை அச்சுறுத்தி வந்தன. அணு ஆயுதங்களைக் கொண்டு மட்டுமல்ல; தங்கத்தைக் கொண்டும் உலகை அச்சுறுத்துவது அவர்களுக்குச் சாத்தியமானது.

உண்மை நிலவரப்படி பூமியில் உள்ள தங்கம் தீர்ந்து வரும் நிலையில் தங்கத்தை மையமாகக் கொண்ட பொருளாதார, பணவியல், நடைமுறை சாத்தியமில்லாத நிலையில் ஏகாதிபத்தியங்கள் மாற்று வழி தேடி விழி பிதுங்கி நின்றன.

பொருளாதாரச்சிந்தனைகள் தோன்றாத யுகத்தில் அறிவியல் வளர்ச்சியடையாத காலத்தில் ஒரு விபத்தாகப் பின்பற்றப்பட்ட பணவியல் முறைக்கு மாற்று வடிவம் தேவையென வரலாறு நிர்ப்பந்திக்கிறது. ஆனால் பகுத்தறிவு கொண்ட நேர்மையான மக்கள் நலன் சார்ந்த, சுரண்டல் நோக்கமில்லாத சர்வதேச மனித உரிமைகளை மதிக்கிற ஒரு புதிய வடிவத்தை இவர்களால் கண்டடைய முடியாது. ஏனெனில், இவர்களது நோக்கம் எதிர் மறையானது. ஆனால் மனிதகுலம் தனி நபர்களின் ஆசைகளை புறந்தள்ளியே வந்துள்ளது. வரலாற்றில் எல்லாப் பண்டங்களின்(COMMADITY) பயன் மதிப்பும்(usevalue) மாறும் தன்மை கொண்டது தங்கத்தின் மதிப்பும் எதிர்காலத்தின் கைகளில்தான் இருக்கிறது.

மன்னர்களின் மணிமுடியை அலங்கரித்த தங்கத்தை, அரசுக் கருவூலங்களில் செல்வமாக சேகரிக்கப்பட்ட தங்கத்தை, நாடுகளின் இறையாண்மையை நிர்ணயித்த தங்கத்தை தோழர் லெனின் அவர்கள் “நாம் (சோசலிசம்) உலக அளவில் வெற்றி பெற்ற பின்னர் உலகத்தின் மிகப் பெரும் நகரங்கள் சிலவற்றில், தெருக்களில் பொதுக் கழிப்பிடங்களின் தளங்களுக்கு தங்கத்தைப் பயன்படுத்துவோம் என்று நினைக்கிறேன்” என்று மிகச்சாதாரணமாகக் கூறினார். உலகின் மிக அதிகமான அளவான 370 நூல்களை தன் வாழ் நாளில் எழுதிய மாமேதை லெனின் அவர்கள் இவ்வாறு விமர்சிக்க என்ன காரணம்? உலகம் ஒரு உலோகத்தை முன்னிறுத்தி பொருளாதாரத்தைக் கட்டமைப்பது வேடிக்கையாக இல்லையா?

நீங்கள் 5 லட்சம் கடன் வாங்கியிருந்து அதை திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்றால் உங்களுக்குக் கடன் கொடுத்தவரிடம் நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது பொருள். ஆனால் 500 லட்சத்தை நீங்கள் ஒருவரிடம் கடனாக பெற்றிருந்தால், கடன் கொடுத்தவர் உங்களிடம், சிக்கிக் கொண்டிருக்கிறார் என்பதே இன்றைய வர்த்தக உலகத்தின் நியதி. அமெரிக்கா 1980 களிலேயே உலக அளவில் 200 பில்லியன் டாலர்களை கடனாகப் பெற்றிருந்தது. இன்று இதன் கடன் பல மடங்கு உயர்ந்திருக்கும்.

அமெரிக்கா ஏதோ கடனாளியாக இருக் கிறதோ என்று நினைக்கத் தேவையில்லை. உண்மையில் இது ஒரு ஏகாதிபத்திய விரிவாக்கமே! அமெரிக்காவும் மற்ற ஏகாதிபத்திய நாடுகளும் IMF, உலக வர்த்தக வங்கி போன்ற அமைப்புகளுடன் கமுக்கமாகச் செய்து கொள்ளும் திரைமறைவு ஒப்பந்தங்கள் மூலம் உலகத்தையே ஒரு ஒற்றை பொருளாதார சார்பு நிலைக்குள் வைக்கின்றன.

அவர்கள் தங்களிடம் தங்கம் அதிகமாக இருந்தால் தங்கத்தில் நாணயங்களை வெளியிடுவார்கள். எண்ணெய் petrol அதிகமாக இருந்தால் எண்ணெயைத் தங்கத்திற்கு மாற்றிக் கொள்வார்கள். தங்கம் குறைந்துவிட்டால் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட அமெரிக்க டாலரே சிறப்பானது. நம்பகமானது எனச் சொல்லச் செய்வார்கள் இதுவே ஏகாதிபத்தியங்களின் கபட நாடகம்.

உலகம் மக்களின் தேவை சார்ந்த மாற்றுப் பொருளாதாரத்தை அறம் சார்ந்த அறிவார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கும் போது தங்கம் கலைப்பொருளாகவோ, காட்சிப் பேழைகளிலோ, உத்திரங்களிலோ அல்லது தோழர் லெனின் அவர்கள் கூறியது போல கழிவறைகளின் தளங்களிலோ காணக் கிடைக்கும். அது வரையிலும் நம் ஆலயங்களில் உள்ள தங்கத்தை விற்று, ஒவ்வொரு வரலாற்றுப் புகழ் பெற்ற திருத்தலங்களின் வளாகங்களிலும் ஒரு பல் சிறப்பு மருத்துவமனையினை நிறுவினால் கடவுளால் கைவிடப்படும் ஏழை எளிய மக்கள் மருத்துவ அறிவியலால் காப்பாற்றப் படுவார்கள்.

பின் குறிப்பு : இரசிய நாட்டின் பொருளாதார நிபுணரான அ.வி.அனிக்கன் அவர்கள் மஞ்சள் பிசாசு என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதிலிருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளது. - தி.கருப்புச்சாமி 9443109026

Pin It