2017 Sep kaattaaru 500

செப்டம்பர் 17. தோழர் பெரியாரின் பிறந்தநாள். பெரியாரியல் என்பது ஏதோ ஒரு நாள் ஞானஸ்நானம் பெற்று விட்டு, வீட்டிற்கு வந்து தன் ஜாதியையும், இந்துமதச்சடங்குகளையும் தவறாமல் பின்பற்றும் முறையோ - புத்த மதத்தில் சேர்ந்து விட்டேன், தம்மம் ஏற்றுவிட்டேன் என்று கூறிவிட்டு, சொந்த வாழ்க் கையில் இந்துமத வாழ்வியலைத் தவறாமல் பின்பற்றும் முறையோ அல்ல. பிறப்பு தொடங்கி இறப்பு வரையும் இந்து மதம் உருவாக்கியுள்ள அனைத்து பண்பாடு களுக்கும் எதிரான திராவிடர் பண்பாட்டைச் செயல் படுத்திக் காட்டுவதே பெரியாரியலின் தனித் தன்மை. 

‘சொல்லுக்கு முன் செயல்’ என்பார்கள். அது போல, எந்த ஒரு கொள்கையையும் பேசிக் கொண்டிருக் காமல், தம் வாழ்க்கையிலேயே முன்மாதிரியாகச் செய்து காட்டுவதும், வாழ்ந்து காட்டுவதும் பெரியாரியல் தான். அந்த வகையில் இலட்சக்கணக்கான பெரியார் தொண்டர்கள் தங்களது வாழ்க்கையிலேயே இந்து மதப் பண்பாடுகளுக்குச் சாவு மணி அடித்துள்ளனர். அவர் களில் பலரை ‘காட்டாறு’ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இதழில் ஜாதி-தாலி-சடங்குகள் மறுப்பு மறு மணம் செய்து கொண்ட தோழர்களின் அறிமுகம்.   

என் பெயர் பூங்கொடி, ஊர் தாராபுரம். எனக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பியும் இருக்கிறார்கள். எனது பெற்றோர்கள் காதலித்து ஜாதி மறுப்புத்திருமணம் செய்தவர்கள். தந்தை வயோதிகம் காரணமாக ஒரு வருடத்திற்கு முன் இறந்துவிட்டார். அம்மா என்னுடன் தான் இருக்கிறார்.

pongudhi kumaresan 600முதல் திருமண வாழ்க்கை: விடுபட முடியாத கொடூரம்

எனது முதல் திருமணம் 17 வயதில் எனது விருப்பமில்லாமல், பெற்றோரின் வற்புறுத்தலால் நடத்திவைக்கப்பட்டது. எனது படிப்பும் பாதியில் நின்றது. நின்றது படிப்பு மட்டுமல்ல, எனது கனவு களும்தான். திருமண வாழ்க்கையும் படு கொடூரமாக இருந்தது. அனுபவித்த கொடுமைகளுக்கு அளவில் லாமல் போய்விட்டது. அக்கொடுமையிலிருந்து விடு படவும் முடியவில்லை. எங்கள் வீட்டில் இருந்த வறுமையின் காரணமாக எனது வலிகளைச் சகித்துக் கொண்டேன்.

தினமும் சண்டையும், சச்சரவுமாக ஐந்தாறு வருடங்கள் ஓடிவிட்டன. அந்தத் திருமண வாழ்க் கையில் எனக்கு ஒரு பையனும் பிறந்தான். அவன் இப் பொழுது சட்டம் படித்துக்கொண்டிருக்கின்றான். எனது சகோதரர் வழக்கறிஞர் கிருட்டிணகுமார் மூலம் இந்தக் கொடுமையிலிருந்து விடுபட்டு அவரது குடும்பத்துடன் நானும் எனது பையனும் வாழ ஆரம்பித்தோம்.

ஒரு புழுக்கமான சூழலிருந்து ஒரு மெல்லிய காற்றை சுவாசித்த அனுபவம். பிறகு விட்டப் படிப்பை முடித்து, அழகு நிலையம் தொடங்கி வாழ்க்கையை அடுத்த இடத்திற்கு நகர்த்தினேன். இதற்கு எனது அண்ணன் மற்றும் அவரது துணை வியாரின் உதவியும் பக்கபலமாக இருந்தது. தனித்தே வாழலாம் என்று முடிவில் வாழ்க்கையை நகர்த்தி னேன்.

அண்ணனும் மகனும் நடத்தி வைத்த இரண்டாவது மணம்

ஓரிரு வருடங்கள் கழிந்தபிறகு, எனது தோழிகள் மற்றும் எனதருமை மகன் ஆகியோரின் தூண்டுதலால் இரண்டாவது திருமணம் செய்யலாம் என்று அரை மனதுடன் ஒத்துக்கொண்டேன். எனது அண்ணனின் மூலம்தான் எனக்குப் பெரியாரியல் அறிமுகமானது. பெரியாரை ஒரு கடவுள் மறுப்பாள ராகத்தான் நான் நினைத்திருந்தேன். முதல் திருமணம் சகல சம்பிரதாயங்களுடன் நடந்துதான் என் வாழ் வை நாசப்படுத்தியது. ஆதலால் இரண்டாவது திருமணம் ஒரு சீர்திருத்த திருமணமாக இருக்க ஆசைப்பட்டேன்.  எதிர்பாராத விதமாக, ஜாதியை - தாலியை - ஜாதி, மதச் சடங்குகளை மறுத்த திருமணமாக எனது இரண்டாம் மணம் இனிதாக நிறைவேறியது.

தோழர் குமரேசனின் அறிமுகம் எப்போது கிடைத்தது அவரைத்தேர்வு செய்யக் காரணமென்ன?

தோழரின் அறிமுகம் 2009 இல் சகோதரர் குமார் மூலம் ஏற்பட்டது. தோழர் குமரேசன் ஒரு பெரியார் பற்றாளர். எனது வாழ்க்கைக்கு ஏற்றவர் என்றும் அண்ணன் சொன்னார். எனது அண்ணனுக்கு தோழர் தாமரைக்கண்ணன் மூலமாக குமரேசன் அறிமுகமானவர். அதனால் குமரேசனைச் சந்தித்து என்னுடைய நிலைப்பாடு என்ன, விருப்பங்கள் என்னவென்று தெரிவிக்கலாம் என நினைத்து, சந்திக்க முடிவு செய்தேன். நான், எனது மகன் நிஜந்தன், தோழர் குமரேசன் மூவரும் சந்தித்துப் பேசி, வாழ்க்கையைத் தொடங்கலாம் என நினைத் தோம்.

அவரைத் தேர்வு செய்ய மிக முக்கிய காரணம் அவரின் வாய்த்திறமைதான். அப்படி அழகாகவும் தெளிவாகவும் பேசி, எனது வாழ்க்கைக்குச் சரியாக வருவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினார். எனது வேண்டுகோளாகிய இன்னொரு குழந்தை வேண்டாம், ஊரையும், சொந்தத் தொழிலையும் விட்டு வரமாட்டேன், போன்ற நிபந்தனைகளுக்குச் சரியென்று சொல்லிச் சம்மதிக்க வைத்தார். எங்கள் வாழ்வும் இனிதே தொடங்கியது.

உங்கள் திருமணத்தை நீங்களே முடிவு செய்திருக்கிறீர்கள். பெண்களே அவர்களது வாழ்க்கை குறித்து முடிவு செய்வது நல்லதா? குமரேசனுடன் நடந்த  அந்தச் சந்திப்புக்கு உங்கள் அண்ணனை ஏன் அழைத்துச் செல்லவில்லை?

வாழப்போவது நான் தான். நான் தானே முடிவு செய்யனும்? நன்மையோ, தீமையோ நான் பார்த்துக் கொள்வேன். எத்தனை காலம் அண்ணன், தம்பி, அப்பாக்களின் மறைவில் நாங்கள் வாழ முடியும்? பெண்கள் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கின்ற நிலையிலிருந்தால் தான், தங்கள் வாழ்வு முறையை தங்கள் விருப்பப்படி சுயமரியாதையுடன் தேர்ந் தெடுத்து வாழ முடியும். முடிவெடுக்கும் அதிகாரம் பெண்களுக்கு எங்கெல்லாம் இருக்கின்றதோ அந்த  நாடு, வீடு, கல்வி, வேலை, தொழில் நிறுவனங்கள் சிறப்புடன் இருக்கும். பெண்களைத் தலைமை அதிகாரிகளாகக் கொண்ட நிறுவனங்கள் சிறப்புடன்  செயல்படுகின்றன.

உங்களின் திருமணம் எப்போது நடந்தது? அதில் உங்கள் பெற்றோரிடமும், உறவினர்களிடமும், எதிர்ப்பும், வரவேற்பும் எப்படி இருந்தது?

முதலில் எங்களது இணையேற்பு நிகழ்வு, கோவையில் அப்போதைய பெரியார் திராவிடர் கழகச் செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன் மற்றும் நெருங்கிய தோழர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதன் பின் பதிவுத்திருமணம் தாராபுரத்தில் நடைபெற்றது. பின்னர் பெரிய குளத்தில் பெரியார் திராவிடக் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில், டிசம்பர் 6 அன்று மாலையில் அம்பேத்கர் நினைவு தினத்தில், உற்றார், உறவினர்கள் மத்தியில் வாழ்க்கைத் துணை நல ஏற்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்குப் பெற்றோர்கள் தரப்பி லிருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லை. ஒரு சில உறவினர்கள் மட்டும், இது உனக்குச் சரியாக வராது. இன்னொரு திருமணம் வேண்டாம், பையன் இருக்கிறான். அவனைப் பார்த்துக்கொண்டு வாழ்க் கையை நடத்து என்று அவர்களின் அடிமனதில் படிந்துப் போயிருக்கும் இந்துத்துவச் சிந்தனையை வெளிப்படுத்தினார்கள். ஒரு சிலர் இந்த வயதி லிருந்து எப்படி தனித்து வாழ்வாய்,  உனக்கென்று ஒரு துணை வேண்டும் என்று சொல்லி ஆதரவு தெரிவித்தனர்.

இந்து மத சமூகப் பெண்கள் தங்கள் வாழ்வில் ஜாதியை ஒழிக்க நினைத்தால் அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்?

காலம் காலமாக ஜாதியைப் பின்பற்றி வரும் பெண்கள், ஜாதிகள் உருவானதே நம்மைப் பிரித்தாளப் பார்ப்பனர்கள் கண்டுபிடித்த வழி என்பதை முதலில் உணரவேண்டும். நம் முந்தைய தலைமுறை எப்படியோத் தொலையட்டும். நாமும், நமது அடுத்த தலைமுறையும் ஜாதியற்றவர்களாக மாறவேண்டும். அதற்கு நாம் பார்ப்பனியப் பழக்க வழக்கங்களை  நம் முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஆட்டுமந்தைகள் போல் பின் தொடராமல் பகுத்தறிவுகொண்டு சிந்தித்து இந்தப் பழக்க வழக்கங்கள் நமக்கானதல்ல என்றும் நம்மால் உருவாக்கப் படவில்லையென்றும் உணர்ந்து பெரியார் வாழ்வியல் முறையப் பின்பற்ற வேண்டும். நமது பிள்ளைகளின் ஜாதி கடந்த காதல் திருமணங்களை வரவேற்க வேண்டும். நாமும் ஜாதி மறுப்புத்திருமணத்தை நமது பிள்ளைகளுக்கு செய்து வைக்க வேண்டும்.

பெண்கள் சுயமாக முடிவெடுப்பதில் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு அல்லாத மற்ற மாநிலங்களில் பெண்களின் நிலைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது நமது பெண்கள் படிப்பிலும், வேலைவாய்ப்பிலும், ஏன் திருமண விசயங்களில் கூட சுயமாகவும், சுயமரியாதையுடனும் முடிவெடுக்கிறார்கள். அதற்கு இந்த மண்ணில் பெரியார் போட்ட விதைதான் காரணம் என்பதை நாம் மறந்துவிட முடியாது. மற்ற மாநிலங்களில் உயர்தட்டு மக்களுக்கு மட்டுமே கிடைக்கின்ற எல்லா வசதியும், சுதந்திரமும், இங்கு இயல்பாகவே எல்லாத் தரப்புப் பெண்களும் பெறுகிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. அதற்கு காரணம் தந்தை பெரியாரின் கடுமையான உழைப்பும், அவரைப் பின் தொடர்ந்த திராவிட இயக்கங்களின் ஆட்சியும் ஒரு காரணம். இதைப் பற்றிய முழுமையான புள்ளிவிபரம் நம்மிடம் இல்லை. இது தொடர்பான தகவல்களை நாம் திரட்ட வேண்டும்.

பெரியகுளம் குமரேசன்:

எனது ஊர், தேனி மாவட்டம் பெரியகுளம். என் உடன் பிறந்தவர்கள் அக்காள் ஒன்று, தம்பி ஒன்று. என் தாயார் கேன்சர் நோயினால் பாதிக்கப் பட்டு இறந்துவிட்டார். தந்தை என்னுடன் உள்ளார்.

பெரியார் உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

இதற்கான பதிலை சொல்லுவதற்கு முன் என்னுடைய ஆரம்பகாலத்தையும் சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும். என்னுடைய இளம் வயதில் எனது தாய்மாமன் திராவிடர் கழகத்தி லிருந்தவர். அவரைப் பார்க்கும் போதெல்லாம் சற்று ஆச்சரியமாக இருக்கும். இவர் எப்படி கடவுள் இல்லை என்று சொல்கிறார் என்று ஒரு வித வியப் போடு தான் அவரை அணுகுவேன். ஆனால் அவர் பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டும் பார்த்த தின் விளைவு இன்று முழு நேர பக்திமானாக மாறி விட்டார். அதை விட்டுவிடுவோம். அதன் பிறகு பெரியாரின் மீதான காதல் என்னுள்ளே ஒரு மூலையில் ஒளிந்து கொண்டது. காலம் நகர்ந்து என் படிப்பை முடித்து சுயமாகத் தொழில் தொடங்க ஆரம்பித்தேன்.

அப்போது தான் செம்பட்டியில் தோழர்கள் இராசா, தாமரைக்கண்ணன் ஆகியோரின் நட்பு கிடைத்தது. அதன் பிறகு தான் என்னில் உறைந்து போயிருந்த பெரியாரியம் துளிர்விட ஆரம்பித்தது. தோழர்கள் மூலமாகத்தான் மணி அண்ணனின் அறிமுகமும் பெரியார் திராவிடர்கழகத்தில் வேலை செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.

பெரியாரியலைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அதைப் படித்தால் மட்டும் போதாது. செயலில் காட்டும்போது தான் பெரியாரையும், சமுதாயத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும். அப்படி ஏதாவது ஒரு நிகழ்வைக் கூற முடியுமா?

எனது தாயாரின் மரணம். அவர் கேன்சர் நோயினால் அவதிப்பட்டு இறந்துவிடுகிறார். அந்த இறப்பு நிகழ்வில் நான் என் வாழ்க்கையில் முதல் முறையாக சாஸ்திர சடங்குகளைப் புறக்கணிக்கிறேன். சடங்குகளை மறுப்பது என்றால் அது எப்படிப்பட்டது என்பதை நேரடியாக அனுபவிக் கிறேன். இறுக்கமான ஒரு சாதியச் சூழலில் வாழ்ந்து வரும் என் உறவினர்களுக்கு என்னுடைய செயல் ஒரு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

ஒருபுறம் தாயின் இழப்பு, மறுபுறம் உறவினர் களின் கோபம், வெறுப்பு. இறப்புக்குரிய சடங்கு களைச் செய்யாவிட்டால் உறவுகளையும் இழப் போம் என்ற சூழல். இவற்றுக்கிடையே நிதானமாக நான் முடிவெடுக்க பெரியாரியல் துணையாக நின்றது. நமது தோழர்களின் அறிவுரைப்படி நான் மிகவும் அமைதியாக இருந்து எனது கொள்கையில் உறுதியாக நின்றேன்.

வந்தவர்கள் அனைவரும் முதன் முறையாக பெரியாரின் வாழ்வியல் முறையைத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள். இறுதி நிகழ்வுக்கு  வந்தவர்களின் முக்கால்வாசிப் பேர் இவன் திருமணத்தை எப்படி நடத்துகிறான் என்று பார்ப்போம் என வாழ்த்திவிட்டுச்சென்றார்கள்.

இறப்பிலும், இழப்பிலும் தெளிவாக இருந்து விட்டோம். வாழ்க்கைத் துணை என்பது ஒரு மகிழ்வான காரியம். அதிலும் கொள்கை வழி நிற்போம் என்று உறுதியாக இருந்தேன். எனக்கு துணை தேடும் பொறுப்பைத் தோழர் தாமரைக்கண்ணன் எடுத்துக் கொண்டார். கணவரை இழந்த பெண்ணை அல்லது விவாகரத்தான பெண் ணையோ வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்து தேட ஆரம்பித்தோம். வாழ்வது ஒரு முறை, அந்த வாழ்க்கையைச் சமுதாய மாற்றத்துக்குப் பயன்படும்படிதான் வாழவேண்டும் என்று  தேடியபோது கிடைத்தவர் தான் தோழர் பூங்கொடி.

Pin It

jothika 350தொடக்கத்திலேயே ஜாதிமறுப்பு - சுயமரியாதைத் திருமணம், அதை நடத்தி வைப்பவர்கள் பெண்கள். அதுவும் ப்ளூ ஜுன்ஸ், கருப்பு டிசர்ட் அணிந்தவர்கள். பெரியார், அம்பேத்கர் படங்கள், மோடியின் ‘சுவச் பாரத்’ விளம்பரப்பின்னணியில் சாக்கடை அள்ளும் தொழிலாளர்களின் இழிநிலை என அடுத்தடுத்த காட்சிகளில் ஆர்வத்தைக் கூட்டிவிடுகிறார்கள். அப்போது தொடங்கும் ஆர்வம் இறுதிவரை குறையாமல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு ஜோதிகா அவர்களுடன் இயக்குநர் பிரம்மா பேச்சுவார்த்தை நடத்தும் போது, இரண்டு கதைகளைக் கூறியுள்ளார். இரண்டிலிருந்து இந்தக் கதையை ஜோதிகாவே தேர்ந்தெடுத்துள்ளார். அதற்காக முதலில் அவருக்கு நன்றி கூறவேண்டும். நடிகர் சிவக்குமாரின் குடும்பத் தினர் இதுவரை பேய்களையும், ஜாதி ஆதிக்க வெறியர்களையும் முதன்மைப் பாத்திரங்களாகக் காட்டி வந்தனர். அந்தக் குற்றங்களைச் சரிசெய்யும் விதமாக முதன்மைப் பாத்திரத்தை ஒரு பெரியாரிஸ்ட் போல வடிவமைத்துள்ளனர்.

1978-ஆம் ஆண்டு, மதுரையில் கிறிஸ்தவக் கல்லூரி ஒன்றில் பி.யுசி படித்த மாணவிகளின் வாழ்க்கைதான் இத்திரைப்படம். கலை இயக்குநர் மிகவும் கவனமாகப் பணியாற்றியுள்ளார். 1978 ம் 2017ம் மாறி மாறி வந்து போகிறது. ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தைப் பார்ப்பதற்காக கல்லூரி விடுதியின் காம்பவுண்ட் சுவற்றை ஏறிக் குதித்து, காதலில் விழுவது - ப்ரின்ஸ்பலிடம் மாட்டிக்கொண்டு தண்டனை பெறுவது - திருமண முறையை வெறுப்பது - தோழியின் திருமணத்தைத் தடுக்க திட்டம் போடுவது - பி.யு.சி யைத் தாண்ட முடியாமல் திருமண முறைக்குள் சிக்கிச் சீரழியும் பெண்களின் நிலை என அந்தக் காலத்து மகளிர் கல்லூரிகளில் படித்த அம்மாக்களையும், அக்காக் களையும் கண்முன் நிறுத்துகின்றார் இயக்குநர்.

இந்தியா முழுவதும் சமையலறைகள் இன்னும் சேரிகளைப் போலவே உள்ளன. சேரிகளில் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள் வாழவேண்டும் என்ற மனுதர்மச்சட்டம் இன்றும் அழியாமல் இருக்கிறது. அந்தச் சேரி வாழ்வைவிடக் கொடுமையானது இந்தச் சமையலறை வாழ்வு. அக்ரஹாரம் தொடங்கி, பிற்படுத்தப்பட்டவர்களின் ஊர்களிலும், தாழ்த்தப் பட்டவர்களின் சேரிகளிலும், பெரும் பணக்காரன், ஏழை என அனைத்து வர்க்கங்களின் வீடுகளிலும் ‘சமையலறை’ என்பது பெண்களுக்கான இடமா கவே உள்ளன. சமையல், வீட்டைப்பராமரிப்பது, குழந்தைகளைப் பராமரிப்பது, பெரியவர்களைப் பராமரிப்பது என அனைத்தும் பெண்ணுக்குரிய அத்தியாவசியமான கடமையாக இருக்கிறது.

ஜாதி அடிப்படையிலான தீண்டாமைகளை ‘இரட்டைக் குவளைகள்’, ‘இரட்டை இருக்கைகள்’ என்பவை மூலம் நாம் காண்கிறோம். அவற்றுக்கு எதிராக இரட்டை டம்ளர் உடைப்புப் போராட்டங் களை நடத்தினோம். நடத்துகிறோம். நடத்துவோம்.  இரட்டை டம்ளர்கள் வைத்திருந்த கடைகளை அடித்து நொறுக்கினோம். அதேபோல, ஊர் - சேரி என அனைத்து இடங்களிலும் உள்ள பாலினத் தீண்டாமையின் அடையாளமான ‘சமையலறை’ களை இதுவரை விவாதிற்குள்ளாக்கி இருக்கி றோமா? பாலினப் பாகுபாட்டின் அசைக்க முடியாத அடையாளமாக உள்ள சமையலறைகளை உடைத் தெறிய வேண்டும் என்பவை போன்ற போராட்டங் களை அறிவித்திருக்கிறோமா?

காட்டாறு ஏடு ஒரு சிறு குழுவால் நடத்தப் படும் ஏடு. ஒரு அமைப்பு என இயங்கும் அளவுக்கு இதில் தோழர்கள் இல்லை. ஆனால், காட்டாறு ‘சமையல் மறுப்புப் போராட்டத்தை’ அறிவித்தது. அப்படி ஒரு போராட்டத்தை நடத்தி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படி அறிவிக்க வில்லை. சமையலறைகளிலிருந்து பெண்கள் வெளியேற வேண்டும் என்பது சமத்துவத்தின் முதல் படி. அந்தச் ‘சமையலறைப் பாகுபாடு’ என்ற கொடுமை, ‘கொள்கை அளவில்’ என்ற நிலையில் இருந்து, செயல் தளத்திற்கு வரவேண்டும். அதுபற்றி ஒரு விவாதமாவது வரவேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சமையல் மறுப்புப் போராட்டத்திற்கு முன் நிபந்தனையாக, 20 மேற்பட்ட கோரிக்கைகளைக் காட்டாறு வெளி யிட்டது.

தோழர் பெரியாரின் காலத்திற்குப் பிறகு, சில பெரியார் தொண்டர்களும், காட்டாறு இதழும் எழுத்து வடிவில் தொடங்கிய அந்தக் கருத்துக்கள், நமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத இயக்குநர் பிரம்மா அவர்களால் காட்சி வடிவில் ஒரு பெரும் விவாதமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் மட்டும் நாயகி ஜோதிகா, சமைய லறைத் தீண்டாமைக்கு எதிராகவும், ‘ஹவுஸ் ஒய்ஃப்’ என்ற பாலின வன்கொடுமைக்கு எதிராகவும் டாக்குமெண்ட்ரி எடுக்கிறார். அப்படித்தான் படம் தொடங்குகிறது. சமையலை மறுப்பது, ‘ஹவுஸ் ஒய்ஃப்’ முறையை மறுப்பது, திருமண முறையை மறுப்பது, சுயமாக முடிவெடுப்பது, சொந்தக் காலில் நிற்பது, பிள்ளைகள் பெறுவதை மறுப்பது, பெண்களுக்கு என தனியாக வாகனம் வடிவமைப் பதை எதிர்ப்பது என பலவற்றைக் காட்டாறில் எழுதினோம். அவை அனைத்துமே இப்படத்தில் விவாதிக்கப்படுகிறது.

பெண்ணின் முதல் காதல், பெண்ணின் கோபம், பெண்ணின் அடக்கப்பட்ட மன உணர்வு கள் என அனைத்தையும் பேசுகிறது. 500 சி.சி. ராயல் என்ஃபீல்ட் பைக்கை ஜோதிகா ஒட்டும்போதும், பானுப்பிரியா காரை வேகமாக ஓட்டும் போதும் திரையரங்கில் பெண்கள் எழுப்பும் விசில் ஒலியை ஆண்கள் கவனத்தில் கொண்டு திருந்தவேண்டும்.

நள்ளிரவு 12 மணிக்கு தங்க நகைகளை அணிந்து கொண்டு தனியாக ஒரு பெண் நடந்து செல்வது பெண் சுதந்திரம் அல்ல; நமது வாழ்க்கை யை நாமே முடிவு செய்வதும், மனதுக்குப் பிடித்தவ னுடன் மட்டுமே வாழ்வதுமே பெண் சுதந்திரம் என்கிறார் ஜோதிகா.

கொடுமைக்காரக் கணவன் என்றால், தினமும் குடித்து விட்டு அடிப்பது, மனைவியைச் சந்தேகப் படுவது, சிகரெட்டால் சூடு வைப்பது போன்ற காரியங்களைச் செய்பவர்கள் மட்டுமே என்று அர்த்தம் இல்லை. மனைவியை வீடு என்ற வலைக் குள், திருமணம் என்ற சிறைக்குள் அடைத்துள்ளவர் கள் அனைவருமே கொடுமைக்காரர்கள் தான் என்று முகத்தில் அறையப்படுகிறது.

பூ, புடவை, நகைகள் வாங்கிக்கொடுத்து, அது தான் மகிழ்ச்சி - அவற்றை அணிந்து கொண்டு வாழ்வது தான் உயர்ந்த வாழ்க்கை என்ற சிந்தனை யைப் பெண்களிடம் திணித்து அதை இன்றவிலும் நடைமுறைப்படுத்தியுள்ளது மனுசாஸ்திரம். அந்த மனுவின் சட்டங்களைப் பானுப்பிரியாவின் கேரக்டர் மூலம் அடித்து நொறுக்குகிறார் இயக்குநர் பிரம்மா. “நான் இந்த வீட்டின் தலைமை வேலைக் காரி” என்று பானுப்பிரியா பேசும் ஒரு சில வசனங்களில் அவர் வெளிப்படும் முகபாவங்கள், நிச்சயமாக ஆறறிவுள்ள ஆணைக் குற்றஉணர்வுக்கு உள்ளாக்கும். ‘திருமணமுறை’ என்பது  ‘பெண்களுக் குரிய மேஜிக்கல் ஜெயில்’ என்று காட்சி மொழியால் விளக்கியுள்ளனர்.

பெண்கள், தாம் விரும்பிய நேரத்தில், ஒரு டீக்கடைக்குச் சென்று ஒரு சிங்கிள் டீயைக் கூடக் குடித்துவிட்டு வரமுடியாத கேவலமான சமுதாய நிலையை நாம் அனைவருமே மிக எளிதாகக் கடந்து போய்க்கொண்டிருக்கிறோம். இதில் பெண்கள் வெளியூருக்குச் சுற்றுலா செல்வதெல்லாம் கனவில் கூட நடக்காது. ஆண்களால் நினைத்தால், நினைத்த உடனே ஒரு பிக்னிக்கைத் திட்டமிட்டுப் போய்வர முடிகிறது. அப்படிப் போவது மிகவும் நல்லது தான். ஆனால், அப்படி அதிரடி பிக்னிக் போகும் ஆண்களின் வீடுகளிலேயே அவர்களது துணைவியோ, தாயோ, தங்கையோ அப்படிச் சென்றுவர முடியாது.

வெகு மக்களாக உள்ள, பக்திமான்களின் வீடுகளில் கூட சமயபுரம், மேல்மருவத்தூர், பழனி, திருப்பதி என பக்தியின் பேரிலாவது வெளியூர் களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆனால் இயக்கங்களில் பணியாற்றும் சமுதாயப் போராளி களின் வீடுகளில் சிக்கிய பெண்களின் நிலை மிக மிகக் கொடுமையானது. அப்படி, திருமணச் சிறைக்குள் சிக்கிய மூன்று தோழிகள் ஒரு மூன்று நாள் தனியாக - ஆண் துணை இல்லாமல் சுற்றுலா செல்கிறார்கள். அது தான் இந்தப் படத்தின் ஹைலைட். இதைத்தான் காட்டாறு குழு ‘விடுதலை வெளி’ என்ற பெயரில் மகளிர் சுற்றுலாக்களாகத் திட்டமிட்டு நடத்தி வருகிறது. 

பெண்ணியப் படமென்றால், அதை மட்டுமே பேசாமல், அதோடு நெருக்கமான தொடர்புடைய ஜாதி ஆணவக் கொலைகளையும் பேசுகிறது. உடுமலை சங்கரும், பெரியாரின் விடுதலைப் பெண் கெளசல்யாவும் இப்படத்தில் வாழ்கிறார்கள்.

அனைத்து வகையான ஆணாதிக்கங்களுக்கும் காரணம் ஆண்கள் மட்டுமே என்று மேலோட்ட மாகப் பேசாமல், இவற்றுக்கு அடிப்படைக் காரணம் இந்த ‘சமுதாய அமைப்பு முறை’ என்று சிஸ்டத்தைக் குற்றவாளியாக்கியுள்ளனர். அதுதான் இந்தப் படத்தின் தனிச்சிறப்பு.

இராணுவ முகாமில் ஒரு பெண் அதிகாரி, பானுப்பிரியாவின் மகனிடம் பேசும்போது, குழந்தை வளர்ப்பு என்பது பெண்ணுக்குரியது என்ற தொனியில் ஒரு வசனம் வரும். அதைத் தவிர்த்திருக் கலாம். இறுதிக் காட்சியில், அக்டோபர் 30-இல் மூன்று தோழிகளுக்கும், பட்டுப்புடவைகளைப் பரிசளிப் பார் ஜோதிகா. இந்தப் பட்டு, நகை, நட்டுக்கள், அலங்காரம் இவையெல்லாம் பெண்ணடிமைத் தனத்தின் அடையாளங்கள் தான். அதற்குப் பதிலாக, ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா மூவருக்கும் ஜுன்ஸ், டிசர்ட்டுகளைப் பரிசளித்திருக்கலாம். இன்னும் கெத்தாகவும், கதைக்களத்திற்குப் பொருத்தமாகவும் இருந்திருக்கும். பெண் விடுதலைக்குத் தடையாக உள்ள இந்து மதத்தின் வேதங்களும், சாஸ்திரங்களும் வெளிப்படையாக, நேரடியாகக் குற்றம் சாட்டப் படவில்லை என்ற முக்கியமான குறையைத் தவிர, ‘மகளிர் மட்டும்’ பெரியாரின் விடுதலைப் பெண்ணியத்தைப் பேசுகிறது.

மகளிர் சுய உதவிக்குழுக்களும், கல்லூரி மாணவிகளும், இளம் வயதுப் பெண்களும் அவசியம் இப்படத்தைப் பாருங்கள். அதை விட முக்கியம். உங்களுடன் ஏதாவது ஒரு ஆணை அவசியம் இழுத்துச் சென்று தியேட்டரில் உட்கார வையுங்கள். கணவன், காதலன், இணை, துணை, க்ளாஸ்மெட், அண்ணன், தம்பி, மகன், அப்பா, தாத்தா என யாராவது ஒரு ஆணை அவசியம் அழைத்துச் செல்லுங்கள். யாரும் திருந்தா விட்டாலும், தாம் என்ன தவறு செய்கிறோம் என்பதாவது அவர்களுக்கு விளங்க வேண்டும். 

Pin It

மஞ்சள் நிற உலோகமான தங்கத்தைத் தான் பிரபல எழுத்தாளர் மக்ஸிம் கார்க்கி ‘மஞ்சள் பிசாசு’ என வர்ணித்தார். தங்கம் பயன்பாட்டில் இல்லாத காலம்தான் ‘தங்கமான காலம்’ என ஒரு அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கம் ஓர் அழகிய முரண்பாடு!

தங்கம் போற்றவும்படும்; சபிக்கவும்படும். இடுப்பொடிய சாகும்வரைதங்கத்தைத் தோண்டி யெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கத்தைச் சபித்தனர். கனவான்களோ தங்கத்தைப் போற்றினர். தாங்கள் சாமானியர்கள் அல்ல சீமான்கள் என்று அடையாளப்படுத்த தங்கம் தேவைப் பட்டதால், அவர்கள் போற்றினர். ஆனால் சாமானியர்களே! தங்கத்தையும் வரலாற்றையும் படைக்கிறார்கள் !

கலைப் பொருட்கள் செய்யவும் அணி கலன்கள் செய்யவும் மூலப்பொருளாக கலைஞர் களில் கைகளில் தவழ்ந்த தங்கம், பின்னர் கொலைகாரர்களுடனும் கொள்ளையர்களுடனும் கை கோர்த்துக் கொண்டது. தங்கத்தின் மீதுள்ள ஆசைகாரணமாக பயங்கரமான குற்றங்கள் நிகழ்ந்தன. உலோகத்திற்காக மக்கள் மடிந்தனர். ஸ்பெயினைச் சேர்ந்த யூதர்கள் நாடு கடத்தப்பட்ட போது தங்களுடன் விலையுயர்ந்த தங்கக் கட்டிகளை சிறு சிறு துண்டுகளாக்கி விழுங்கி, மறைத்து எடுத்துச் செல்ல முற்பட்ட போது அரேபியர்கள் தங்கத்தைப் பெற யூதர்களைக் கொன்று வயிற்றைக் கிழித்துப் பார்த்த சம்பவங்கள் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது

தங்கம் மக்களை ஈவிரக்கமற்றவர்களாக , தார்மீக ரீதியில் கெட்டவர்களாக மாற்றியது. இதற்கு தங்கத்தைப் பொறுப்பாளியாக்க முடியாது. ஏனென்றால் அது சில வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட வெறும் உலோகமே. அதை செல்வத்தின் வடிவமாக, அநேகமாக மதத்தைப் போன்று வழிபாட்டிற்குரிய பொருளாகச் செய்திருப்பது நம் மடமைச் சமூகமே .

தங்கம், மண், நீர், காற்று இவற்றோடு உறவாடினாலும் தன் பளபளக்கும் கவர்ச்சியை இழப்ப தில்லை. இதுமட்டுமே இதன் சிறப்பான குணம். தங்கம் 6000 ஆண்டுகளாக மனிதனால் பயன் படுத்தப்பட்டதாக இருந்தாலும், சமீப காலங்களிலேயே தொழில் துறையில் மிகச்சிறிய அளவில் பயன்படுகிறது. பிளாட்டினம் கூட மெல்லிய மயிரிழை போன்ற நுண் குழாய்களை உருவாக்கப் பயன்படும் சிறப்புத் தன்மை கொண்டது. தங்கம் அவ்வாறான தனக்கே உரித்தான சிறப்புத் தன்மை ஏதும் கொண்டதல்ல.

நவீன தொழில் துறை மற்றும் நகரியல் கட்டுமானங்களில் பெருமளவில் பயன்படும் பிரதான உலோகம் இரும்பு. தங்கத்துடன் ஒப்பிடும் போது இதன் மதிப்பு ஆயிரம் மடங்கு பின்தங்கி யிருக்கிறது. மற்ற உலோகங்கள் எவற்றிற்கும் இல்லாத உயர் மதிப்பு தங்கத்திற்கு ஏன் வந்து சேர்ந்தது? பளபளக்கும் தன்மையால் மட்டுமே தங்கம் மதிப்பைப் பெற்றதா? இல்லை. தங்கம் உலோகம் மட்டும் இல்லை அது பணம்! “தங்கம் இயற்கையாகத் தன் இயல்பில் பணம் இல்லை. ஆனால் பணம் இயற்கையாகவே தங்கமாக இருந்திருக்கிறது” என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். ஒரு சாதாரண மஞ்சள் நிற உலோகம். பணமாக செல்வமாக உருப்பெற்றது வரலாற்றில் நிகழ்ந்த ஒரு விபத்து.

ஆதி மனிதன் வேட்டையாடியும் காய் கனியைச் சேகரித்து உண்டும், உயிர் வாழ்ந்தான். நாடோடி வாழ்க்கையை விடுத்து தனக்கான உணவு உற்பத்தியில் ஈடுபட்ட போது, மனித வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. உணவு தானியங்கள், மட்பாண்டங்கள், கம்பளிகள், கத்தி போன்ற சிறு கருவிகள் சந்தைக்கு வருகின்றன.

தானியம் தேவைப்படும் ஒருவர் தான் தயாரித்த கம்பளிகளைச் சந்தைக்கு கொண்டு வரும் போது அந்தக் கம்பளிகளைப் பெற்றுக் கொண்டு தானியத்தை, அவருக்கு தரும் நபர், சந்தையில் இருந்தால் இருவருக்குமிடையேயான பண்டமாற்று சுலபமாக முடியும். தானியத்தை சந்தைக்கும் கொண்டு வருபவருக்குக் கம்பளி தேவையில்லை. மாறாக அவருக்குக் கத்தி தேவைப்படுமெனில், பண்ட மாற்று முறையில் சிக்கல் வருகிறது.

இம்மாதிரியான சூழலில் பொதுவான மதிப்புடைய ஒரு பொருள் இருந்தால் பண்டங்களை மாற்றிக் கொள்வது எளிதாகும். இந்த இடத்தை நிறைவு செய்யவே உலோகங்கள் சந்தைக்கு வந்தன. உலோகங்கள் அப்போது அரிதான பொருளாக இருந்ததால், குறிப்பிட்ட அளவும், எடையும் கொண்ட உலோகம் மற்ற பொருளுக்கு ஈடாக சந்தையில் ஏற்றுக் கொள்வது வழக்கமானது. இவ்வாறே செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்கள் வரலாற்றில் பணமாக மாறியது. இன்றைய தலைமுறையினர் தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்கள் ஒரு காலத்தில் பணமாக செலாவணியிலிருந்தது என்று சொன்னால் ஆச்சரியப்படக் கூடும்.

தோல் பொருட்கள், கோகோ கொட்டைகள், உப்பு, கால்நடைகள் போன்றவையும் பணமாக சந்தையில் பயன்பட்டிருக்கிறது. மனிதன் கூட பணமாக இருந்தான் என்று சொன்னால் நம்பமுடியுமா? 19ஆம் நுற்றாண்டில் கூட ஆப்பிரிக்காவில் அடிமைகள் பணமாகப் பயன்படுத்தப் பட்டனர். மூன்று அடிமைகளைக் கொடுத்து ஒரு குதிரையை மக்கள் வாங்கிச் சென்றதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அய்ரோப்பிய சமூகங்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களும் இது போன்ற காட்டுமிராண்டித் தனமான நிலைகளை கடந்தே வளர்ந்து வந்திருக்கின்றன. பல்வேறு உலோகங்களும் பொருள்களும் பணமாகச் செயல்பட்டிருந்தாலும் தங்கம் மட்டுமே செல்வமாக, பணமாக உயர் மதிப்பு பெற்றதற்கு என்ன காரணம் ?
தங்கம் ஒரு அரிய உலோகம் இதை வெட்டியெடுப்பது கடிமான பணி, மற்ற உலோகங்களைப் போல இது பரவலாகக் கிடைப்பதில்லை. கிடைக்கும் இடங்களிலும் இது செரிவான அளவில் இருக்காது. ஒரு டன் மண்ணை சுத்தம் செய்தால் 100 கிராம் அளவிற்கு சில இடங்களில் தங்கம் கிடைக்கும். அதிக உழைப்பைச் செலுத்தி சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படும் உலோகம் தங்கம், எனவேதான் தங்கம் உயர் மதிப்பைப்பெற்றிருக்கிறது.

“சோதனைச்சாலையில் சிறிதளவு கரியைப் பயன்படுத்தி வைரத்தை தயாரித்துவிட முடியும் என்றால், வைரத்திற்கு மதிப்பேதுமிருக்காது” என்று மார்க்ஸ் தனது ‘மூலதனம்’ நூலில் குறிப்பிட்டிருப்பார். ஒரு பொருள் எவ்வாறு மதிப்பைப் பெறுகிறது என்றால் அதில் உருப்பெற்றிருக்கும் மனித உழைப்பே அப்பொருளுக்கு மதிப்பை தருகிறது என்பதை விளக்குவதற்கே மார்க்ஸ் அவ்வாறு குறிப்பிட்டார்.

பண்ட மாற்று முறை நடைமுறையில் இருந்தபோது உலோகங்கள், பணமாகச் செயல்பட்டு பொருட்களின் பரிவர்த்தனைச் சிக்கல்களைத் தீர்த்தன. இதில் தங்கம் உயர்மதிப்பைப் பெற்ற இனமாகச் (denomination) செயல்பட்டது. தங்கத்தின் மதிப்பை, தரத்தை, எடையை, அன்றைய வணிகர்களின் சங்கமும் நகராண்மை அமைப்புகளும் திருச்சபைகளும் தீர்மானித்தன. பின்னர் அரசுகள் தோன்றிய போது நாணயங்கள் அச்சிடப்படுவது அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஓவ்வொரு நாட்டின் தங்க நாணயமும் ஒவ்வொரு பெயரைக் கொண்டு வெளி வந்தது.

இங்கிலாந்தின் ‘பவுண்ட்டும்’ பிரான்ஸில் நெப்போலியனால் கொண்டுவரப்பட்ட ‘பிராங்கும்’ அமெரிக்காவின் ‘டாலரும்’ நாடுகளுக்கிடையான வர்த்தகத்தில் பிரபலமாயின. இதைப்போலவே ஒவ்வொரு நாட்டின் நாணயமும் ஒரு குறிப்பிட்ட அளவு எடையுள்ள தங்கத்தைக் கொண்டிருந்தது. நாடுகளுக்கிடையிலான பண பரிவர்த்தனையில் ஒவ்வொரு நாட்டின் நாணயத்திலும் உள்ள தங்கத்தின் அளவைக் கொண்டு அதனதன் மதிப்பு வரையறுக்கப்பட்டது.

உதாரணமாக இங்கிலாந்தின் நாணயமான ஒரு பவுண்ட்டின் தங்க அடக்க அளவு 7.322 கிராம் ஆகும். ஒரு அமெரிக்க டாலர் 1.505 கிராம் தங்கத்தைக் கொண்டிருந்தது. பவுன் மற்றும் டாலர் இவற்றிற்கிடையேயான மதிப்பு தங்கத்தின் எடையைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டது. அதாவது 7.322 என்ற அளவை, 1.505 ஆல் வகுத்து வரும் ஈவான 4.87 எனபது இரண்டு நாணயங்களுக்கு இடையேயான மதிப்பு விகிதமாக இருந்தது. அதாவது ஒரு பவுனுக்கு 4.87 டாலர் சமம் என்று மதிப்பு நிர்ணயம் ஆகும். இப்படி தங்கத்தை ஆதாரமாகக் கொண்ட பணவியல் முறை நாடு களுக்கு இடையில் வர்த்தகத்தில் நடைமுறையில் இருந்தது.

தங்கத்தை அதிக அளவில் குவித்து வைத்திருக்கும் நாடுகள் சர்வதேச அளவில் பொருளாதார ரீதியில் மதிப்புடைய நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டன. அமெரிக்கா 1948-இல் உலக இருப்பில் 70 சதவீதத்தை (21,800 டன்) தன் நாட்டில் வைத்திருந்தது. ஆனால் 1972-இல் உலக இருப்பில் அமெரிக்காவின் இருப்பு 21 சதமாகக் குறைந்தது. உலகப் போர்களின் காரணமாகவும், உலகம் தழுவிய பொருளாதார மந்த நிலை காரணமாகவும் தங்கத்தை மையமாகக் கொண்ட பொருளாதார நகர்வுகள் மற்றும் பணவியல் கோட்பாடுகள் தளர்ந்தன. தங்கம் அல்லாத காகிதக் கடன், பணம் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. இருப்பினும், காகித நோட்டுகளை அச்சிட்டு வெளியிட ஒவ்வொரு அரசும் தனது மத்திய அல்லது ரிசர்வ் வங்கியில் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கத்தை வைத்திருக்க வேண்டும் என்ற கோட்பாடுகள் வலுவடைந்தன.

ஏகாதிபத்தியங்களும் வளர்ந்த நாடுகளும் ஒருங்கிணைந்தது பொருளாதார நெருக்கடி களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக IMF என்ற சர்வதேச நிதியம் ஒன்றினை ஏற்படுத்தினர். IMF (International monetary fund) இல் அமெரிக்காவும், இங்கிலாந்தும் முக்கியப் பொறுப்பேற்று பணியாற்றின. இதன் செயல் திட்டங்களை சோவியத் ஒன்றியம் ஏற்றுக் கொள்ளவோ இதில் உறுப்பினராகவோ மறுத்து விட்டது. இந்தச் சர்வதேச நிதியம், சர்வதேச சபை போன்ற வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளின் செல்வாக்கு மிக்க அமைப்புகளே உலக நாடுகளின் பணத்தையும் அதன் மதிப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.

ஒரு நாட்டிலிருந்து ஒரு தேசிய இனம் பிரிந்து தனி நாடாகும் பொழுது அல்லது ஓட்டெடுப்பின் மூலம் ஒரு நாட்டின் ஒரு பகுதி தனி நாடாகும் போது அல்லது மக்கள் எழுச்சி மூலம் புதிய நாடுகள் உருவாகும் பொழுது இவற்றை அங்கீகரித்து அவற்றின் பணத்திற்கு உரிய மதிப்பை அளிக்கும் போது தான் அந்தப் புதிய நாடுகள் மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய இயலும். வளர்ந்த நாடுகள் தங்களுடைய வர்த்தக நலன், தங்களுடன் வணிகம் செய்யும் நாடுகளின் நலன்களை மையப்படுத்தியே ஒரு நாட்டை அங்கீகரிப்பதையும், தனிமைப்படுத்துவதையும் செய்து வந்திருக்கின்றன.

ஒரு நாட்டின் பணம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற அந்த நாடு தன் மைய வங்கியில் குறிப்பிட்ட அளவு தங்கத்தை வைத்திருக்க வேண்டும் என நிபந்தனை விதிப்பதன் மூலம் ஏகாதிபத்தியங்கள் சிறிய நாடுகளை அச்சுறுத்தி வந்தன. அணு ஆயுதங்களைக் கொண்டு மட்டுமல்ல; தங்கத்தைக் கொண்டும் உலகை அச்சுறுத்துவது அவர்களுக்குச் சாத்தியமானது.

உண்மை நிலவரப்படி பூமியில் உள்ள தங்கம் தீர்ந்து வரும் நிலையில் தங்கத்தை மையமாகக் கொண்ட பொருளாதார, பணவியல், நடைமுறை சாத்தியமில்லாத நிலையில் ஏகாதிபத்தியங்கள் மாற்று வழி தேடி விழி பிதுங்கி நின்றன.

பொருளாதாரச்சிந்தனைகள் தோன்றாத யுகத்தில் அறிவியல் வளர்ச்சியடையாத காலத்தில் ஒரு விபத்தாகப் பின்பற்றப்பட்ட பணவியல் முறைக்கு மாற்று வடிவம் தேவையென வரலாறு நிர்ப்பந்திக்கிறது. ஆனால் பகுத்தறிவு கொண்ட நேர்மையான மக்கள் நலன் சார்ந்த, சுரண்டல் நோக்கமில்லாத சர்வதேச மனித உரிமைகளை மதிக்கிற ஒரு புதிய வடிவத்தை இவர்களால் கண்டடைய முடியாது. ஏனெனில், இவர்களது நோக்கம் எதிர் மறையானது. ஆனால் மனிதகுலம் தனி நபர்களின் ஆசைகளை புறந்தள்ளியே வந்துள்ளது. வரலாற்றில் எல்லாப் பண்டங்களின்(COMMADITY) பயன் மதிப்பும்(usevalue) மாறும் தன்மை கொண்டது தங்கத்தின் மதிப்பும் எதிர்காலத்தின் கைகளில்தான் இருக்கிறது.

மன்னர்களின் மணிமுடியை அலங்கரித்த தங்கத்தை, அரசுக் கருவூலங்களில் செல்வமாக சேகரிக்கப்பட்ட தங்கத்தை, நாடுகளின் இறையாண்மையை நிர்ணயித்த தங்கத்தை தோழர் லெனின் அவர்கள் “நாம் (சோசலிசம்) உலக அளவில் வெற்றி பெற்ற பின்னர் உலகத்தின் மிகப் பெரும் நகரங்கள் சிலவற்றில், தெருக்களில் பொதுக் கழிப்பிடங்களின் தளங்களுக்கு தங்கத்தைப் பயன்படுத்துவோம் என்று நினைக்கிறேன்” என்று மிகச்சாதாரணமாகக் கூறினார். உலகின் மிக அதிகமான அளவான 370 நூல்களை தன் வாழ் நாளில் எழுதிய மாமேதை லெனின் அவர்கள் இவ்வாறு விமர்சிக்க என்ன காரணம்? உலகம் ஒரு உலோகத்தை முன்னிறுத்தி பொருளாதாரத்தைக் கட்டமைப்பது வேடிக்கையாக இல்லையா?

நீங்கள் 5 லட்சம் கடன் வாங்கியிருந்து அதை திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்றால் உங்களுக்குக் கடன் கொடுத்தவரிடம் நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது பொருள். ஆனால் 500 லட்சத்தை நீங்கள் ஒருவரிடம் கடனாக பெற்றிருந்தால், கடன் கொடுத்தவர் உங்களிடம், சிக்கிக் கொண்டிருக்கிறார் என்பதே இன்றைய வர்த்தக உலகத்தின் நியதி. அமெரிக்கா 1980 களிலேயே உலக அளவில் 200 பில்லியன் டாலர்களை கடனாகப் பெற்றிருந்தது. இன்று இதன் கடன் பல மடங்கு உயர்ந்திருக்கும்.

அமெரிக்கா ஏதோ கடனாளியாக இருக் கிறதோ என்று நினைக்கத் தேவையில்லை. உண்மையில் இது ஒரு ஏகாதிபத்திய விரிவாக்கமே! அமெரிக்காவும் மற்ற ஏகாதிபத்திய நாடுகளும் IMF, உலக வர்த்தக வங்கி போன்ற அமைப்புகளுடன் கமுக்கமாகச் செய்து கொள்ளும் திரைமறைவு ஒப்பந்தங்கள் மூலம் உலகத்தையே ஒரு ஒற்றை பொருளாதார சார்பு நிலைக்குள் வைக்கின்றன.

அவர்கள் தங்களிடம் தங்கம் அதிகமாக இருந்தால் தங்கத்தில் நாணயங்களை வெளியிடுவார்கள். எண்ணெய் petrol அதிகமாக இருந்தால் எண்ணெயைத் தங்கத்திற்கு மாற்றிக் கொள்வார்கள். தங்கம் குறைந்துவிட்டால் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட அமெரிக்க டாலரே சிறப்பானது. நம்பகமானது எனச் சொல்லச் செய்வார்கள் இதுவே ஏகாதிபத்தியங்களின் கபட நாடகம்.

உலகம் மக்களின் தேவை சார்ந்த மாற்றுப் பொருளாதாரத்தை அறம் சார்ந்த அறிவார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கும் போது தங்கம் கலைப்பொருளாகவோ, காட்சிப் பேழைகளிலோ, உத்திரங்களிலோ அல்லது தோழர் லெனின் அவர்கள் கூறியது போல கழிவறைகளின் தளங்களிலோ காணக் கிடைக்கும். அது வரையிலும் நம் ஆலயங்களில் உள்ள தங்கத்தை விற்று, ஒவ்வொரு வரலாற்றுப் புகழ் பெற்ற திருத்தலங்களின் வளாகங்களிலும் ஒரு பல் சிறப்பு மருத்துவமனையினை நிறுவினால் கடவுளால் கைவிடப்படும் ஏழை எளிய மக்கள் மருத்துவ அறிவியலால் காப்பாற்றப் படுவார்கள்.

பின் குறிப்பு : இரசிய நாட்டின் பொருளாதார நிபுணரான அ.வி.அனிக்கன் அவர்கள் மஞ்சள் பிசாசு என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதிலிருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளது. - தி.கருப்புச்சாமி 9443109026

Pin It

(கார்த்திக் ராம்மனோகரன் Centre for Studies in Social Sciences,Calcutta- வில் அரசியல் அறிவியல் துறையில்,உதவிப்பேராசிரியராகப் பணியாற்றுகிறார்)

நீட் தேர்வினால் விளையும் பிரச்சனைகள் பற்றிப் பலவிமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு வருடத்திற்கு முன்பு, வங்காளக் கல்வியாளரும், சமூக ஆர்வலருமான கர்ஜாசாட்டர்ஜி “நீட் என்பது மாநிலங்களின் செலவில், மத்திய அரசையும், அதனை உருவாக்கிய உயர்குடியினரையும், சி.பி.எஸ்.இ. என்ற பாடத்திட்டத்தின் மூலம் வலுப்படுத்தும் முயற்சி” என்று கூறினார். மருத்து வரும், பகுத்தறிவாளரும், தமிழ் ஆர்வலருமான எழிலன் நாகநாதன், தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இரட்டை இருப்பிடச் சான்றிதழ்கள் மோசடியை அம்பலப்படுத்தினார். இவர்களுடன் இணைந்து சமூக ஊடகங் களிலும்,வேறுசிலதளங்களிலும்,பல ஆர்வலர்கள் நீட் தேர்வினால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றித் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தனர்.

அதற்குப்பின்தான், அனிதா தற்கொலை செய்துகொண்டார். தினக்கூலித் தொழிலாளியின் 16 வயது மகளான அவர், பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றவர்.நியாயமாக, அனிதா சிறந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கவேண்டும். அது நடந்திருந்தால், அரியலூர் மாவட்டத்திலுள்ள குழுமூர் கிராமத்தில்,அவரது சமூகத்திலிருந்து உருவான முதல் மருத்துவர் என்ற பெருமையை அடைந்திருப்பார்.

தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான மாணவர்களைப்போல அனிதாவும் தமிழ்வழிக் கல்வி பயின்றவர். இந்தியாவிலுள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. மாணவர்களின் எண்ணிக்கையைவிட, மகாராஷ்ட்ர மாநிலத்தில் மட்டும் மாநிலக் கல்விபயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமான தாகும் என்று கர்ஜாசாட்டர்ஜி தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

எண்ணிக்கையில் நிலவும் இந்த ஏற்றத்தாழ்வானது தமிழகத்திலும் பிரதிபலிக்கிறது. அங்கேயும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைவிட மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களே அதிகமாகும். நீட் தேர்வானது, மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் செலவில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலுள்ள சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரி இடங்களைப் பெற்றுத்தரும். இது அத்தேர்வினால் ஏற்படும் அநீதிகளில் ஒன்று.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஸ்டேட் போர்டு பள்ளிகளும், தமிழ்வழிக்கல்வி கற்பிக்கும் பள்ளிகள் அல்ல. ஆனால்,அவர்களின் பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் போலில்லாமல் மண்ணிற்கேற்ற முறையிலிருக்கும். கணிசமான எண்ணிக்கையிலான ஸ்டேட்போர்டு பள்ளிகள் தனியாரால் நடத்தப்படுகின்றன. அவற்றில் பலபள்ளிகள் சிறு நகரங்களிலும், கிராமப் புறங்களிலும் குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகளோடு அமைந்துள்ளன. ஆனால்,அவை சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் மாணவர்களுக்குக் கல்வியளிக்கின்றன.

இதற்கு முரணாக, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் அதிகம் காணப்படுகின்றன. உள்ளூரிலும் வட இந்தியாவிலுமுள்ள மேல்தட்டு மாணவர்களுக்குக்கே கல்வியளிக்கின்றன. தமிழகத்தில் சுமார் 580 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும், 2488 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் (தனியார் பள்ளிகளைத் தவிர்த்து) உள்ளன. 580 என்பது ஒட்டுமொத்த சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் எண்ணிக்கையாகும். அவற்றில் மேல்நிலைக் கல்வியளிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை அதைவிடக் குறைவானதே! இந்தியாவிலேயே, மொத்தமாணவர் சேர்க்கைவிகிதம் (GER: Gross Enrollment Ratio) அதிகமாக இருப்பது தமிழகத்தில்தான்!

தமிழகத்தின் மொத்த மாணவர் சேர்க்கை விகிதமானது, இந்தியாவின் சராசரி மாணவர் சேர்க்கை விகிதத்தைவிட இருமடங்கு அதிகமானதாகும்.

தமிழகத்தின் மாணவிகள் சேர்க்கைவிகிதம் 42.7சதம். ஆனால் இந்தியாவின் சராசரி மாணவிகள் சேர்க்கைவிகிதம் 22.7 சதம் மட்டுமே. தமிழகத்தில் பள்ளிக்கல்வியைத் தொடங்கும் மாணவர்களில் அனைவருமே (100 சதம்) தொடக்கக்கல்வியை முடித்துவிடுகிறார்கள். அதில் 45 சத மாணவர்கள் கல்லூரிகளில் சேர்கின்றனர்.

சி.பி.எஸ்.இ. மாணவர்களே அதிக அளவில் கல்லூரிக் கல்விவரை படிப்பார்கள் என்று தமிழ்நாட்டில் சிலகல்வி ஆர்வலர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது. ஆனால், உண்மையில் கல்லூரிக்கல்வி (மருத்துவக்கல்வி உட்பட) வரை பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையானோர் மாநிலப்பாடத்திட்டத்தில் பயின்றவர்களே! எனவே இங்கே கடுமையான போட்டி நிலவுகிறது. அதிக மதிப்பெண்களுடைய மாணவர்களால் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும்.

நீட் தேர்விற்குமுன், தமிழகத்திலுள்ள சுமார் 2500 அரசு மருத்துவக்கல்லூரி இடங்களில், 69 சதவீத இடங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. எனினும்,சேர்க்கைக்கான Cut off- ல் மிகக்குறைவான வித்தியாசமே காணப்பட்டது.

உதாரணமாக, 2014-ஆம் ஆண்டில் பெருமை மிக்க சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்வதற் கான Cut off  விவரம் வருமாறு:

பொதுப்போட்டி -199.5, பிற்படுத்தப் பட்டோர்-199.25, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் -198.75, தாழ்த்தப்பட்ட - பழங்குடியினர் -196.75

இம்மாணவர்களைப் போதுமான தகுதியுடையவர்கள் அல்ல என்று இந்த அறிவிலிகள் கூறுகின்றனர். சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கை யிலான மாணவர்கள் (98 சதவீதத்திற்கும் மேல் மொத்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள்) பொதுப்போட்டியின் கீழும் தங்கள் இடங்களைப் பெற்றனர்.

இத்தகைய முறையானது, நேர்மையான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்து உயர்ந்த தரத்தைப் பராமரிக்க எந்த வகையிலும் தவறவில்லை. சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்கிய நீட் தேர்வுதான் இத்தரத்தைக் குறைத்திருக்கிறது.

நீட் தேர்வின் மூலம், தமிழகத்திலுள்ள தலைசிறந்த மருத்துவக்கல்லூரிகளின் பெரும்பான்மையான இடங்கள் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்குத்தான் கிடைத்துள்ளன. மருத்துவ இடங்களைப் பெற்ற மாணவர்களில் 35 சதவீத சி.பி.எஸ்.இ. மாணவர்கள்தான், என்று சமூக ஆர்வலர்கள் குறிப் பிடுகின்றனர். இச்சதவீதத்தைப் பார்க்கும்போது, பெரும்பாலான இடங்கள் மாநிலப்பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்குச் சென்று விட்டதுபோல் தோன்றலாம்.

ஆனால், நீட் தேர்வு எழுதியவர்களில், மாநிலப்பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களைவிட சி.பி.எஸ்.இ. மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவானதே! ஆனால், சி.பி.எஸ்.இ. மாணவர்களே மற்றவர்களைவிட அதிகமாகத் தேர்வாகியுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். கிடைத்த தகவல்களை ஆழ்ந்து பார்த்தோமானால், மாநிலப்பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களைவிட சி.பி.எஸ்.இ. மாணவர் களுக்கே நீட்தேர்வில் தகுதி பெறுவது எளிதாக இருந்துள்ளது என்பதை அறியலாம்.

நீட்தேர்வில், மாணவர்களின் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களைக் கணக்கில் கொள்வ தில்லை. மேலும், கேள்வித்தாளின் தன்மை மற்றும் மல்டிபில் சாய்ஸ் கேள்விகள் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கே மிக எளிதாக இருந்தது. பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கேள்விகள் சரியாகப் புரிந்துகொள்ள முடியாதபடி இருந்தன. இவை யனைத்தும் அனிதாவிற்கு எதிராக சதிசெய்தன. இத்தேர்வுமுறையானது பாரபட்சத்தோடு இருப்ப தால், போட்டி மனப்பான்மையை ஒருபோதும் ஊக்குவிக்காது.

சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஐந்து வருடங்களாகப் படித்த துன்பமான அனுபவம் எனக்குண்டு. என்வாழ்க்கையின் மிகமோசமான ஆண்டுகள் அவை!

அப்பள்ளி தமிழகத்தில் இருந்தபோதும், காலனித்துவ நிறுவனத்தைப்போல் செயல்பட்டது. அது ஆங்கிலவழியில் கல்வி கற்பிக்கும் பள்ளி. எனவே, தமிழில் பேசுவது தடை செய்யப் பட்டிருந்தது. மீறிப்பேசுவோருக்கு, உடல் மற்றும் மனரீதியாக வருத்தும் பல தண்டனைகள் வழங்கப் படும். மறுபுறம், இந்தியில் பேசுவது ஊக்குவிக்கப் பட்டது.

அதில் நல்லவிஷயம் என்னவெனில் பாலி வுட்டின் அனைத்து சமீபத்திய ஹிட்படங்களையும் அறிந்துகொள்ள உதவியது. ஆனால், தமிழ்மொழி அவமானமாகக் கருதப்பட்டது. தமிழை இரண்டாம் மொழியாகவோ, மூன்றாம் மொழியாகவோ படிக்கத் தேர்வு செய்தவர்கள்கூட தரக்குறைவாகக் கருதப்பட்டனர். மேலும், சில சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், பார்ப்பனியம் போற்றப் படுவதையும், பிறவகையிலான ஆன்மீக வெளிப்பாடுகள் மற்றும் நாத்திகம் மிகத்தீவிரமாக ஒடுக்கப்படுவதையும் நாம் அறிவோம்.

சமூகப்பொறுப்பு மற்றும் சமூகநீதியில் அக்கறையின்றி, சிறந்த மாணவர்களைக் கடைந்தெடுத்து வெளியே தள்ளிவிடும் நீட் தேர்வானது, இப்பள்ளிகளின் கரங்களில் கொடுக்கப்பட்ட ஊக்கமருந்து போன்றது. நல்லவேளை, எனக்கு பள்ளி மாறுவதற்கும், பொறியியலையும், மருத்துவத்தையும் தாண்டி என்வாழ்வை அமைத்துக்கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது.

கிராமப்புறப் பின்னணியில் இருந்துவரும் பலமாணவர்களுக்கு, மருத்துவராவ தென்பது அவ்வளவு எளிதானதல்ல. பலர் சுட்டிக்காட்டியபடி, அனிதாவிற்குக்கிட்டாத சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தைக் கொண்டது நீட்தேர்வு! சமூக ஊடகங்களில் சில உயர்ஜாதி மக்களிடமிருந்து, மருத்துவம் படிக்க “அனிதா தகுதியானவரல்ல!” என்பதுபோன்ற வெளிப்படையான குற்றச் சாட்டுகள் எழுந்தது அபத்தமானதாக இருப்பினும், அவை நாம் எதிர்பார்த்த ஒன்றே! ஒரு மீனின் திறனை மதிப்பிட, அதை மரம் ஏறச்சொல்லும் அட்டூழியத்தை இனியாவது மறந்துவிடுங்கள்!

மருத்துவத்தில் மற்ற மாநிலங்களைவிட மிகச் சிறந்து விளங்கும் தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு நீட்தேர்வு உதவும் என்று நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. அதேபோல், அனிதாவைப் போன்றோரின் மருத்துவ இடங்களைப் பறித்த உயர்ஜாதியினரும், மேட்டுக் குடியினரும், இந்திமொழி இல்லாத மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மருத்துவர்களைப் போன்று சிறந்து விளங்குவார்கள் என்பதற்கும் எவ்விதத் தரவுகளோ சமூக வாதங்களோ இல்லை!

பொருளாதாரரீதியாகவும், சமூகரீதியாகவும் ஒடுக்கப்பட்ட பின்னணியைக் கொண்டு, ஒரு பின்தங்கிய கிராமத்தில், தன்தாயையும் இழந்து வளர்ந்த அனிதா, தன் கிராமத்திலிருக்கும் பிற பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஊக்கப் படுத்துவதற்குப் பயன்படுத்தும் ஓர் வெற்றிக் கதையாக இருந்திருப்பாள்!

அனிதா ஒரு சாதனையாளர்! தன்னைப்போல் பாதிக்கப்பட்ட பலமாணவர்களுக்காக நீட்தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியவர்! ஆனால், தனது இலட்சியம் தடைப் பட்டதாலும், முயற்சிகள் பலனளிக்காததாலும், சாதனைகளுக்குப் போதிய அங்கீகாரம் கிடைக் காததாலும் தற்கொலையை நோக்கித் தள்ளப் பட்டார் என்பதே உண்மை!

நீட்தேர்வு குறித்து ஆரம்பத்திலிருந்தே தமிழகத்தில் நிலவி வந்த குழப்பங்களுக்கும்,நீட்டை எதிர்த்துப் பல நம்பகமான வாதங்கள் இருந்தாலும் அத்தேர்வைத் தமிழகத்தில் திணித்தே தீரவேண்டும் என்ற பா.ஜ.க.-வின் பிடிவாதத்திற்கும், தற்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசின் மிதமான எதிர்வினைக்கும் அனிதாவின் மரணத்தில் பங்குண்டு.

அரைநூற்றாண்டுக்குமுன், முன்னாள் காங்கிரஸ் அரசாங்கம் இந்தியைத் திணிக்க ஒருதலைப் பட்சமாக எடுத்த முடிவினால் அக்கட்சி தமிழகத்தில் அரசியல் அழிவைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்துதான், திராவிட ஆட்சி அமைக்கப் பட்டது. நீட்தேர்வும், தமிழகத்திலுள்ள பல சமூகநீதித் திட்டங்களைச் சிதைக்க பா.ஜ.க. மேற்கொள்ளும் முயற்சிகளும் எதைநோக்கி நம்மை இட்டுச் செல்லும்? அனிதாவின் மரணத்தின் மூலம் தூண்டப்பட்டு, அவளுடைய தியாகம் வீணாகக்கூடாது என்ற நம்பிக்கையுடன், தமிழக மாணவர்கள் ஏற்கனவே வீதிகளில் போராடிக் கொண்டிருக்கின்றனர்!

தமிழில்: யாழ்மொழி

Pin It

நீட் தேர்வு என்னும் சமூக அநீதி குறித்து தமிழகம் எங்கும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு, இந்தியா முழுமைக்குமான ஒரு பொது நுழைவுத் தேர்வினைக் கொண்டுவரும் முயற்சி 2010ஆம் ஆண்டில் மத்திய அரசு  (இந்திய மருத்துவக் கவுன்சில்) தொடங்கிய காலத்தில் இருந்தே தமிழகம் அதனை உறுதியுடன் எதிர்த்து வருகிறது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும், இந்த விசயத்தில் ஒரே கருத்துடன் இருந்திருக்கின்றன.

மருத்துவக்கல்வி: கடந்து வந்தவை

நுழைவுத் தேர்வு குறித்து தமிழ்நாடு கொண்டிருக்கும் நிலைப்பாடு என்பது அனுபவப் பூர்வமானது.  1984 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்பது, நேர்முகத் தேர்வின் ((Interview) அடிப்படையில் நடந்து வந்தது. அந்த முறையைக் கைவிட்டு, 1984 ஆம் ஆண்டுமுதல் மாநில அளவிலான நுழைவுத்தேர்வினைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. மாநில அரசின் பள்ளி பாடத்திட்டத்தின் அடிப்படையில் அந்தத் தேர்வு முறை இருந்துவந்தது.

ஒப்பீட்டளவில் நேர்முகத்தேர்வு முறையை விட, நுழைவுத்தேர்வு என்பது, சார்புநிலையற்ற தேர்வு முறையாக இருந்தது. ஆனால் காலப் போக்கில், தமிழகமெங்கும் நுழைவுத்தேர்வுப் பயிற்சி மய்யங்கள்  தோன்றி, நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான உத்திகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தன. பொருளாதார வசதி குறைந்தவர்களுக்கும், கிராமப்புறங்களில் வசிப்பவர் களுக்கும், நகரங்களில் கிடைக்கும் நுழைவுத்தேர்வு பயிற்சிகள் கிடைக்காத காரணத்தினால், அவர்கள் பெருமளவு மருத்துவக்கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தச் சூழலைச் சரி செய்வதற்காக, 1989 ஆம் ஆண்டு, அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு, முதல் தலைமுறை மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்களாக 5 புள்ளிகள் வழங்கும் ஒரு முறையைக் கொண்டுவந்தது. ஓரிரு ஆண்டுகள் அந்தத் திட்டம் நடைமுறையில் இருந்தது. பிறகு உயர் நீதிமன்றத் தலையீட்டினால், அது கைவிடப்பட்டது.

பிறகு 1996 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கும் முறையைக் கொண்டுவந்தது. சில ஆண்டுகள் நடைமுறையில் இருந்த அந்தத் திட்டம், மீண்டும் உயர்நீதிமன்றத் தலையீட்டினால் கைவிடப்பட்டது.

இறுதியாக, 2006 ஆம் ஆண்டு, அதுவரை தமிழக அரசு நடத்திவந்த நுழைவுத் தேர்வு முறையைக் கைவிட்டது. அதன் பிறகு குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில், கிராமப்புற மாணவர் களுக்கும், முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர் களுக்கும் மருத்துவம் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.

எனவே, தமிழகம் நுழைவுத்தேர்வு வேண்டாம் என்கிற முடிவுக்கு வருவதற்கு முன்பு பல சோதனை முயற்சிகளைச் செய்து அதன் படிப்பினைகளின் அடிப்படையில்தான் இந்த முடிவிற்கு வந்திருக் கிறது.

நீட் டை ஏன் எதிர்க்கிறோம்?

நாம் நீட் தேர்வினை எதிர்ப்பது, அது ஒரு நுழைவுத் தேர்வு என்கிற காரணத்திற்காக மட்டு மல்ல, கூடுதலாக வேறு சில முக்கியமான காரணங் களும் உள்ளன.

1. நீட் தேர்வு மத்திய அரசுப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

2. மாநில அரசு தன்னுடைய சொந்த நிதி ஆதாரத்தில் நடத்துகிற மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு எப்படி மாணவர் சேர்க்கை நடத்துவது என்கிற உரிமையைப் பறிக்கிறது.

3. ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை என்பது மிக மிக குறை வானதாக, 10ரூ என்கிற அளவில்தான் இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், நம் நாட்டில், இலட்சக் கணக்கில் பணம்கட்டி கோச்சிங் சென்டர்களில் பெண் குழந்தைகளைப் படிக்க வைக்க, பெற்றோர்கள் தயாராக இல்லை. ஆனால், கடந்த ஆண்டுவரை, தமிழகத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்களில் 50 ரூ மேல் மாணவிகளே இருந்தனர். நீட் தேர்வு என்கிற நுழைவுத் தேர்வு பெண் கல்வியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

4. ஒரு மாணவர், 3 முறை நீட் தேர்வினை எதிர்கொள்ளலாம். அதாவது, இந்த ஆண்டு போதிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்றால், கூடுதலாக பயிற்சி எடுத்துக்கொண்டு, அடுத்த ஆண்டு மீண்டும் எழுதலாம். அதற்கு அடுத்த ஆண்டும் எழுதலாம். பெரும்பாலும், கிராமப்புற மாணவர்களும், ஏழை - நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும், இத்தகைய முயற்சிகளை துணிச்சலாகச் செய்ய மாட்டார்கள். நடப்பு ஆண்டில் தேர்வு எழுதுகிற முதல் தலைமுறை மாணவர்களையே இது பெரிதும் பாதிக்கும்.

5.  தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு நடை முறையில் இருக்கிறது. மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டுவரை, இடஒதுக்கீடு செய்யப்படாத 31 சத இடங்களிலும் பெரும்பாலான இடங்களை இடஒதுக்கீட்டு பிரிவினரே பெற்றுவந்தனர். தோராயமாக, 90 சத  இடங்களை இடஒதுக்கீடு பெற்ற பிரிவினரான, பி.சி, எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினரே பெற்றுவந்தனர். நீட் நுழைவுத் தேர்வு என்பது இந்த சூழலைப் பாதிக்கும்.

இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடந்து முடிந்து விட்டது. 2016ஆம் ஆண்டிலும், 2017ஆம் ஆண்டிலும் மருத்துவக்கல்லூரியில் இடம்பிடித்த மாணவர்களின், சமூகரீதியிலான பகுப்பாய்வினை அட்டவணையில் காணவும். இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர், அதாவது முன்னேறிய சாதியினர் (எஃப்.சி), இந்த ஆண்டு கூடுதலாக 245 இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் (பி.சி) சேர்ந்த மாணவர்கள், இந்த ஆண்டு 280 இடங்களைக் குறைவாகப் பெற்றிருக்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் (எம்.பி.சி), 39 இடங்களையும், பட்டியல் சாதியினர்  (எஸ்.சி), 15 இடங்களையும் கடந்த ஆண்டைவிடக் குறைவாக பெற்றிருக்கிறார்கள்.

நீட் தேர்வு இழைத்திருக்கும் அநீதிகளி லெல்லாம் பெரும் அநீதியாக நாம் பார்க்க வேண்டியது, சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் பெற்றிருக்கும் இடங்கள். மொத்த மாணவர் எண்ணிக்கையில், வெறும் 5 சதம் கூட இல்லாத சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்கள், சுமார் 35 சத மருத்துவக்கல்லூரி இடங்களைப் பெற்றிருக் கிறார்கள். கடந்த ஆண்டு 64 இடங்களை பிடித்த வர்கள், இந்த ஆண்டு 1220 இடங்களை பிடித்திருக் கிறார்கள்.

நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு விசயம், முந்தைய ஆண்டுகளில் 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள், இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிப் பெற்றிருக்கும் மருத்துவ இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்து, இந்த ஆண்டு மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றிருப்பவர்களில் 43 சதம் மாணவர்கள் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு எழுதிய மாணவர்கள் அல்ல.

அதேபோல, மத்திய அரசுப் பாடத்திட்டத்தில் படித்து, மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்தவர் களில், 28 சதம் மாணவர்கள் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதியவர்கள் இல்லை. வசதி வாய்ப்பு பெற்றவர்கள், மூன்று நான்கு ஆண்டுகள் கூட நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிக்க முடியும் என்பதைத்தான் இது காட்டுகிறது.

அரசுப்பள்ளியில் படித்து, இந்த ஆண்டு மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்தவர்கள் வெறும் 5 பேர் மட்டும்தான். தமிழ்வழியில் படித்து இடம் பிடித்தவர்களின் எண்ணிக்கை இன்னமும் தெரியவில்லை.

மொத்தமாகப் பார்க்கும்போது, நீட் தேர்வு என்கிற பெயரில், ஒரு பலமுனைத் தாக்குதல் தமிழ் நாட்டு மாணவர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்க வேண்டிய மாணவர்களில் சுமார் 2500 மாணவர்கள், தங்கள் மருத்துவக் கனவைப் பலிகொடுத்திருக் கிறார்கள்.

மத்திய ஆர்.எஸ்.எஸ் / பாஜக  அரசின் நய வஞ்சகச் சூழ்ச்சி, உச்சநீதிமன்றத்தின் அலட்சியம், மாநில அதிமுக அரசின் கையாலாகாத்தனம் அனைத்தும் சேர்ந்து தமிழ்நாட்டின் சமூகநீதிப் பாரம்பரியத்தின் மீது ஒரு தாக்குதலை நிகழ்த்தி யிருக்கிறது.

இதிலிருந்து நாம் எப்படி மீள்வது? நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு பெறுவது நம்முடைய முதல் இலக்காக இருக்க வேண்டும். அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் நம் மக்களிடம் மிகப்பெரிய எழுச்சியையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

தமிழகத்தில் நிலவும் நிலையற்ற அரசியல் சூழல் காரணமாக, மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் தென்படுகின்றன. சுயமரியாதை உணர்வுகொண்ட ஒரு மாநில அரசு அமையும் பட்சத்தில், எளிமையாக மீட்டெடுக்கப்படக்கூடிய ஒரு உரிமைதான் நீட் விலக்கு என்பது. 

எனவே, மக்களிடம் தற்போது ஏற்பட்டி ருக்கும் இந்த எழுச்சி என்பது, நீட் தேர்வு விலக்கு என்பதோடு மட்டும் முடிந்துவிடாமல், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவது, ஐஐடி, எய்ம்ஸ் போன்ற மத்திய அரசு கல்விநிறுவனங்களில் நம் மாணவர்கள் நுழைவதற்குத் தடையாக இருக்கிற நுழைவுத்தேர்வுகளை ஒழிப்பது போன்ற பெரிய இலட்சியங்களை நோக்கி நாம் நம் கோரிக்கை களையும் போராட்டங்களையும் வலுப்படுத்த வேண்டும்!

Pin It