periyar 221குமரி நாட்டின் தமிழ்நான் மறைகள்
அமிழ்ந்தன! வடவர் மறைகள் நிமிர்ந்தன!
தமிழன் முதலில் உலகினுக் களித்த
அமிழ்துநேர் தத்துவம் ஆன எண்ணூல்
அமிழ்ந்தது! வடவரின் அறிவுக் கொவ்வாப்
பொய்ம்மைகள் மெய்ம்மைகள் ஆகிப் பொலிந்தன!
அகத்தியன் தொல்காப் பியன்முத லானவர்
தகுதிறம் தமிழிற் பெறுதிறம் அருளிய
எண்ணருங் கண்ணிகர் தமிழ்பாடும் ஏடுகள்
மறைந்தன! வடவர் தீயொழக்க நூற்கள்
நிறைந்தன! இந்த நெடும்புகழ் நாட்டில் தீது செய்யற்க செய்யில் வருந்துக
ஏதும் இனியும் செய்யற்க வெனும்
விழுமிய தமிழர் மேன்மை நெஞ்செலாம்
கழுவாய் எனுமொரு வழுவே நிறைந்தது.
நல்குதல் வேள்வி என்பது நலியக் -
கொல்வது வேள்வி எனும்நிலை குவிந்ததே!
ஒருவனுக் கொருத்தி எனும் அகம் ஒழிய
ஐவருக் கொருத்தி எனும் அயல் நாட்டுக்
குச்சிக் காரிக்குக் கோயிலும் கட்டி
மெச்சிக் கும்பிடும் நிலையும் மேவிற்று.
மக்கள் நிகர்எனும் மாத்தமிழ் நாட்டில்
மக்களில் வேற்றுமை வாய்க்கவும் ஆனதே!
உயர்ந்தவன் நான்என் றுரைத்தான் பார்ப்பான்
அயர்ந்தவன் நான்என் றுரைத்தான் தமிழன்
இப்படி ஒருநிலை காணுகின் றோமே
இப்படி எங்குண் டிந்த உலகில்?
இறந்த காலத் தொடக்கத் திருந்து
சிறந்த வாழ்வுகொள் செந்தமிழ் நாடு
இழிநிலை நோக்கி இறங்குந் தோறும்
பழிநீக் கிடஎவன் பறந்தான் இதுவரை?
இதுவரை எந்தத் தமிழன் இதற்கெலாம்
பரிந்துபோ ராடினான்? எண்ணிப் பார்ப்பீர்!
தமிழன் மானம் தவிடுபொடி ஆகையில்
வாழாது வாழ்ந்தவன் வடுச்சுமந்து சாகையில்
ஆ என்று துள்ளி மார்பு தட்டிச்
சாவொன்று வாழ்வொன்று பார்ப்பேன் என்று
பார்ப்பனக் கோட்டையை நோக்கிப் பாயும்இவ்
அருஞ்செயல் செய்வார் அல்லால்
பெரியார் எவர்? - நம் பெரியார் வாழ்கவே!

- பாரதிதாசன் (8.6.1958, 6)

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It