I

காங்கிரசுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையேயான சர்ச்சையில் பொதிந்துள்ள அடிப்படைப் பிரச்சினை என்ன? நான் புரிந்து கொண்டவரை, தீண்டப்படாதோர் இந்தியாவின் தேசிய வாழ்க்கை யில் ஒரு தனி சக்தியினரா, இனத்தினரா இல்லையா என்பதுதான் இதிலுள்ள பிரச்சினை என்று கருதுகிறேன்.

ambedkar 408இதுதான் இந்த சர்ச்சையில் உள்ள உண்மையான பிரச்சினை. இந்தச் சர்ச்சையில்தான் காங்கிரசும் தீண்டப்படாதவர்களும் வேறு பட்ட நிலைகளை, போக்குகளை மேற்கொண்டுள்ளனர். இந்தக் கேள்விக்கு தீண்டப்படாதோர் அளிக்கும் பதில் ‘ஆம்’ என்பதுதான். தாங்கள் இந்துக்களிடமிருந்து தனியானவர்கள், வேறுபட்டவர்கள் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் காங்கிரசோ ‘இல்லை’ என்று மறுதலிக்கிறது; தீண்டப்படாதவர்கள் இந்து சமுதாயத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதியினர் என்று அது சாதிக்கிறது. இதுதான் இந்தப் பிரச்சினையில் இருதரப்பினரது மனப்பான்மை.

இதில் பிரிட் டிஷ் அரசாங்கத்தின் நிலை என்ன? இந்தியாவின் வைசிராய் மற்றும் கவர்னர் ஜெனரல் என்ற முறையில் லின்லித்கோ பிரபு இதில் பிரிட் டிஷ் அரசாங்கத்தின் நிலையை தாம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் (பின் இணைப்பு VIல், குறிப்புகள் 9 மற்றும் 12 பார்க்க) மிகத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்; தீண்டப்படாத வர்கள் இந்தியாவின் தேசிய வாழ்வில் ஒரு தனித்த இனத்தினர்தான் என்று அந்த அறிக்கையில் அவர் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அரசியல் சட்டப் பாதுகாப்புகள் பிரச்சினையை ஓர் அடிப் படை பிரச்சினையாகக் கருதும் பலர் அவர்கள் அடிப்படையானது என்று எதைக் கருதுகிறார்களோ அதிலிருந்து மாறுபட்ட அடிப்படை யானதொரு பிரச்சினையாக நான் கருதுவதைக் கண்டு வியப்படையக் கூடும். ஆனால் உண்மையைக் கூறுவதானால் இதில் வேறுபாடு ஏதும் இல்லை.

ஒருவர் எதை உடனடியானதாகக் கருதுகின்றனர், எதை முடிவானதாகக் கருதுகின்றனர் என்பதைப் பொறுத் துத்தான் இது அமைந்துள்ளது. அரசியல் சட்டப் பாதுகாப்புகள் பிரச்சினையை மற்றவர்கள் இறுதியானதாகப் பார்க்கின்றனர். நானோ உடனடிப் பிரச்சினையாகப் பார்க்கிறேன். நேரியல் வாத முறையில் ஒரு முற்கோளிலிருந்து எப்படி முடிவு தோன்றுகிறதோ அது போன்றதுதான் இது. இந்த வேறுபாட்டை நான் ஏன் வற்புறுத்து கிறேன் என்பதை இங்கு கூறியாக வேண்டும்.

இந்திய அரசியலமைப் பின் பரிணாம வளர்ச்சி ஒரு வகையான நேரியல் வாதத்தைத் தோற்று வித்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இந்த நேரியல் வாதத் தில் பிரதான முற்கோள் இந்தியாவின் தேசிய வாழ்க்கையில் தனி யானதென, வேறுபட்டதென நிர்ணயிக்கக்கூடிய ஒரு சக்தி, இனம் இருக்குமாயின் அரசியல் சட்டரீதியான பாதுகாப்புகள் பெற அது உரிமை பெற்றுள்ளது என்பதேயாகும். அரசியல் சட்டப் பாதுகாப்புகள் கோரும் ஓர் இனத்தினர் மற்றவர்களிடமிருந்து தாங்கள் வேறுபட்ட வர்கள், தனித்தவர்கள் என்பதை மெய்ப்பிக்க வேண்டும். அவ்வாறு தாங்கள் தனியானவர்கள், வேறுபட்டவர்கள் என்பதை அவர்கள் நிரூபித்தால், அரசியல் சட்டப் பாதுகாப்புகள் பெறுவதற்கு அவர் களுக்குள்ள உரிமை அனுமதிக்கத்தக்கதே.

 இவ்வாறுதான் முஸ்லீம்கள், இந்தியக் கிறித்தவர்கள், ஆங் கிலோ-இந்தியர்கள், ஐரோப்பியர்கள், சீக்கியர்கள் ஆகியோர் அர சியல் சட்டப் பாதுகாப்புகள் பெற வகை செய்யப்பட்டது. இந்தியா வின் அரசியலமைப்பு கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப் படவில்லை என்பது உண்மையே. கோட்பாடுகளின் அடிப்படை யிலன்றி அவசரத் தேவைகளுக்கு, நெருக்கடி நிலைமைகளுக்கு தற்காலித் தீர்வுகாணும் அடிப்படையிலேயே அது தற்செயலாக உருவானது என்றே கூறவேண்டும். ஆயினும் நான் குறிப்பிட்டது ஒரு கோட்பாடல்லாவிட்டாலும், ஓர் அமைதியான முற்கோள்; அது எல்லா வகையிலும் செயல்பட்டு வருவதாகவே தோன்றுகிறது. ஒரு பிரிவினர் அரசியல் சட்டப் பாதுகாப்புகள் பெறுவதற்கான உரிமை காரண காரிய தொடர்புள்ளதாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அடிப்படையாக நிபந்தனை பூர்த்தி செய்யப்படும்போது, அதாவது அவர்கள் இந்திய தேசிய வாழ்க்கையில் ஒரு தனித்த, வேறுபட்ட இனத்தினராக அமைந்திருக்கின்றனர் என்பது நிலைநாட்டப்படும் போது அரசியல் சட்டப் பாதுகாப்புகள் பெறுவதற்கு அவர்களுக்குள்ள உரிமை தானாகக் கிட்டுவதே நியாயம், முறை. இந்தப் பிரச்சினையைக் கையாளும்போது, நேரியல்வாதத்தில் கையாள்வது போல் இதையும் கையாள வேண்டும்.

நேரியல் வாதத்தில் முடிவும் சரி, முற்கோளும் சரி அடிப்படையானவை; எனவே முற்கோளைப் பரிசீலிப்பதைத் தவிர்த்துவிட்டு முடிவை மட்டும் ஆராய்வது போது மானதாகாது. இந்தக் கோணத்திலிருந்து பிரச்சினையை நோக்கும் போது, அரசியல் சட்டப் பாதுகாப்புகளைப் பற்றி மட்டும் விவா தித்து விட்டு தீண்டப்படாதவர்கள் சம்பந்தப்பட்ட இதர விஷயங் களைப் புறக்கணிக்கக் கூடாது என்று கருதுகிறேன். முற்கோள், முடிவு அல்லது அரசியல் சட்டப் பாதுகாப்புகள் உருவாவதாகத் தோன்றும் ஆய்வுப் பொருள் ஆகியவற்றை இயல்பான முறையில் அல்லாவிட்டாலும் முந்துரிமை அடிப்படையில் பரிசீலிக்க நான் கடமைப் பட்டுள்ளேன் என்பதை உணர்கிறேன்.

இவ்வாறு, உடனடியானதற்கு வேறுபட்டதான முடிவை தனி யாக ஆராய்வதற்கு நான் தீர்மானித்திருப்பது முற்றிலும் நியாயமே என்பதை எவரும் காணமுடியும். இதனைத் தனியாகவும், கணிசமான அளவிலும் ஆராய்வது அவசியம் எனத் தோன்றுகிறது. ஏனென்றால் இதனை அடிப்படையான பிரச்சினை என்று காங்கிரஸ் முற்றிலும் உணர்ந்துள்ளது; தீண்டப்படாதவர்களை ஒரு தனி இனம் என்று அங்கீகரித்துவிட்டால், அரசியல் சட்டப் பாதுகாப்புகள் பெறும் தங்கள் கோரிக்கையில் அவர்கள் வெற்றி பெறுவதைத் தடுக்க முடி யாது என்பதையும் அது அறிந்துள்ளது. இந்த முற்கோளை எதிர்க்க காங்கிரஸ் முன்வந்திருக்கிறது என்றால், இது முதல் அகழி என்றும், அதனைப் பாதுகாக்கத் தவறிவிட்டால் தன்னால் நிலைமையைச் சமாளிக்க முடியாது என்பதையும் அது அறிந்திருப்பதே இதற்குக் காரணம்.

II

சர்ச்சைக்கு இடமற்றத்தை சர்ச்சைக்குள்ளாக்க காங்கிரஸ் முன் வந்திருப்பது அதாவது தீண்டப்படாதவர்கள் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதை எதிர்க்க அது முன்வந்திருப்பது இந்தியா விலுள்ள நிலைமைகளை நன்கு அறிந்தவர்களை பெரிதும் வியப்பிற் குள்ளாக்காமல் இருக்க முடியும். ஆனால் காங்கிரஸ் இதனை எதிர்க்க தீர்மானித்துவிட்ட நிலைமையில் இந்தப் பிரச்சினையை என்னால் முடிந்தளவு ஆழமாக விளக்க வேண்டியவனாக இருக்கிறேன்.

தாங்கள் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்ப தற்கு ஆதரவாக தீண்டப்படாதோர் கூறும் காரணங்களைப் புரிந்து கொள்வது கடினமல்ல. இதற்கு நீண்ட, விரிவான விளக்கம் தரவேண் டிய அவசியமே இல்லை. ஓர் எளிதான கேள்வியை வைத்து அவர் களது வாதத்தை முழு அளவுக்கு நிலைநாட்டலாம். அந்தக் கேள்வி இதுதான்: எந்த அர்த்தத்தில் அவர்கள் இந்துக்கள்? முதலாவதாக, ’இந்து’ என்னும் சொல் பல்வேறு பொருள்களில் பயன்படுத்தப் படுகிறது; எனவே இந்தக் கேள்விக்கு முறையாகப் பதிலளிப்பதற்கு முன்னர் இந்த சொல் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். பிரதேச அடிப்படையில் அது பயன்படுத்தப்படுகிறது. இதன்படி இந்துஸ்தானில் வாழும் ஒவ்வொருவரும் இந்து எனப்படுகிறார். இந்தப் பொருளில் பார்க்கும் போது தீண்டப்படாதவர்களை இந்துக்கள் எனக் கூறலாம் என்பதில் ஐயமில்லை.

ஆனால், இதே அளவுகோல் முஸ்லீம்கள், கிறித்தவர் கள், சீக்கியர்கள், யூதர்கள், பார்சிகள் போன்றோருக்கும் பொருந்தும். இரண்டாவதாக ‘இந்து’ என்னும் சொல் சமய அர்த்தத்திலும் பயன் படுத்தப்படுகிறது. இது சம்பந்தமாக எத்தகைய முடிவுக்கும் வருவ தற்கு முன்னர் இந்து சமயத்தின் மீறமுடியாத, வறட்டுத்தனமான சித்தாந்தங்களை இந்து சமயத்தின் வழிபாடு மரபுகளிலிருந்தும், வினைமுறைகளிலிருந்தும் தனியே பிரித்துப் பார்ப்பது அவசியம். மத அர்த்தத்தில் தீண்டப்படாதவர்கள் இந்துக்களா என்பது அவர்கள் தங்களுக்கு அடிப்படையானவையாக எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள், சித்தாந்தங்களையா அல்லது வழிபாட்டு மரபுகளையா என்பதைப் பொறுத்துள்ளது.

இந்து சமயத்தின் அடிப்படைகள் சாதி, தீண்டாமை சித்தாந்தங்கள்தான் என்றால் அப்போது ஒவ்வொரு தீண்டப்படாத வரும் இந்து சமயத்தையும், தான் ஓர் இந்து என்பதையும் திட்ட வட்டமாக, தீர்மானமாக மறுதலிக்கவே செய்வார். இதற்கு மாறாக, இங்கு கடைப்பிடிக்கப்படும் அடிப்படை என்பது ராமன், கிருஷ்ணன், விஷ்ணு, சிவன் மற்றும் இந்து சமயத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய தெய்வங்களை வழிபடும் மரபைக் குறிக்கிறது என்றால் அப்போது தீண்டப்படாதவர்களை இந்துக்கள் என்று உரிமை கொண்டாடக் கூடும். காங்கிரஸ் வழக்கம்போல் தீண்டப்படாதவர்களிடமிருந்து ஒரு கைக்கூலிப் படையை உருவாக்கி, தீண்டப்படாதவர்கள் இந்துக் கள்தான், இந்துக்களாகவே அவர்கள் மாண்டுமடிவார்கள் என்று அவ்வப்போது ஆரவாரக்க் கூச்சல் போடச் செய்துள்ளது. ஆனால் இந்து சமயம் என்பது சாதியிலும், தீண்டாமையிலும் நம்பிக்கை வைப் பதையே குறிக்கிறது என்னும் நிலைமையில் தங்களை இந்துக்கள் என்று பலர் அறியப் பிரகடனம் செய்யும்படி கேட்கப்பட்டால் இந்த ஐந்தாம்படையினரே கூட தங்களை இந்துக்களாகக் கூறிக்கொள்ள ஒப்பமாட்டார்கள்.

மற்றொரு விஷயத்தையும் இங்கு வலியுறுத்திக் கூற வேண் டும். மேலே செய்யப்பட்ட ஆய்வின்படி, இந்து என்னும் சொல் சமய அர்த்தத்தில், அதுவும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டு முறையைப் பின்பற்றுபவர் என்னும் ஒரு வரையறைக்குட்பட்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்படுமானால் தீண்டப்படாதவரை ஓர் இந்து என்று கூற வாய்ப்பு உண்டு. ஆனால் இங்கேயும் கூட இந்துவும் தீண்டப் படாதவரும் ஒரு பொதுவான சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முடி வுக்கு வருவதற்கு எதிராக எச்சரிக்கை செய்வது அவசியமாகிறது. இவ்விரு தரப்பினரும் அங்கரிக்கப்பட்ட வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுபவர்கள் என்பதை வைத்துக்கூட அவர்கள் ஒரு பொது வான சமயத்தைக் கொண்டிருக்கின்றனர் என்று கூறிவிட முடியாது. வேண்டுமானால் இவர்கள் ஒத்த சமயத்தைக் கொண்டிருப்பவர்கள் என்று கூறலாம்; இதுதான் துல்லியமான, சரியான விளக்கமாக இருக்க முடியும்.

ஒரு பொதுசமயம் என்பது பொதுப் பங்கெடுப்பாளர் வட் டத்தைக் குறிக்கிறது. அப்படிப் பார்க்கும்போது, வழிபாட்டு மரபு களையும், வினைமுறைகளையும் கடைப்பிடிப்பதில் இத்தகைய பொதுப் பங்கெடுப்பாளர் வட்டம் என்று ஏதும் இல்லை. இந்துக் களும் தீண்டப்படாதவர்களும் தமது வழிபாட்டு மரபுகளைத் தனித் தனியாகக் கடைப்பிடிக்கின்றனர்; அவர்களுடைய வழிபாட்டு மரபு கள் ஒத்தவையாக இருந்தாலும் அவர்கள் இரண்டு அந்நியர்களைப் போல் தனித்தனியாகவே இருந்து வருகின்றனர். எனவே, இவ் விரண்டு அர்த்தங்களில் எது ஒன்றும் ‘இந்து’ என்னும் சொல் அர சியல் பிரச்சினையை நிர்ணயிப்பதில் உதவிகரமாக இருக்க முடியாது என்பது தெள்ளத் தெள்வு; இது ஒன்றுதான் இந்த விவாதத்தை நியாயப் படுத்த முடியும்.

எனவே, இந்து சமுதாயத்தின் ஓர் உறுப்பினர் என்பதைக் குறிக்கும் சமூக அர்த்தம்தான் இங்கு பயன்படுத்தப்படக்கூடிய ஒரே அடிப்படையாக இருக்க முடியும். இவ்வகையில் ஒரு தீண்டப்படாத வரை இந்து சமுதாயத்தின் ஒரு பகுதியாக, அங்கமாக கருத முடி யுமா? அவர்களை இந்துக்களின் ஏனைய பகுதியினருடன் இணைக் கும் மனிதாபிமான பிணைப்பு ஏதேனும் இருக்கிறதா? அத்தகைய பிணைப்பு ஏதும் இல்லை. மண உறவு இல்லை. சமபந்தி போஜனம் இல்லை. இணைந்து சேர்ந்து பழகுவது இருக்கட்டும், தொடும் உரிமை கூட இல்லை. இதற்கு மாறாக, தொட்டாலே ஓர் இந்துவை தீட்டு பிடித்துக் கொள்ளும்.

தீண்டப்படாதவர்கள் ஒரு தனி இனத் தினர் என்பதை இந்து பாரம்பரியம் முழுவதுமே நெடுகிலும் அங்கீகரித்து வந்துள்ளது; இது மறுக்க முடியாத உண்மை என்பதை யும் வலியுறுத்தி வந்துள்ளது. இந்துக்களையும் தீண்டப்படாதவர் களையும் பிரித்துக் காட்டுவதற்கு இந்துக்கள் காலம் காலமாக, வழி வழியாகப் பயன்படுத்தி வந்துள்ள பதப்பிரயோகம் தீண்டப்படாதவர்களின் வாதத்துக்கு வலுவூட்டும் சான்றாக அமைந்துள்ளதைக் காணலாம்.

இந்தப் பாரம்பரியமான பதப்பிரயோகப்படி, இந்துக் கள் சவர்ணர்கள் என்றும், தீண்டப்படாதவர்கள் அவர்ணர்கள் என்றுமொ குறிப்பிடப்பட்டு வந்திருக்கின்றனர். இந்துக்களை சதுர் வருணிகர்கள் என்றும், தீண்டப்படாதவர்களைப் பஞ்சமர்கள் என்றும் அது கூறுகிறது. இவர்களிடையேயான பிரிவினை இவ்வளவு மிகப் பிரதானமாக இருந்திருக்கவில்லை என்றால், இத்தகைய ஒரு பதப்பிரயோகம் உருவாகி இருக்க முடியாது. இந்தப் பிரிவினை யைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாக இருந்ததால்தான் இத் தகைய பதப்பிரயோகங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதேற்பட்டது என்பது வெள்ளிடை மாலை.

எனவே, தீண்டப்படாதவர்கள் இந்துக்கள் என்றும், ஆதலால் முஸ்லீம்களும் அவர்களைப் போன்றவர்களும் அனுபவிக்கும் அதே அரசியல் உரிமைகளை தீண்டப்படாதவர்கள் கோர முடியாது என் றும் காங்கிரஸ் முன்வைக்கும் வாதத்தில் எத்தகைய சத்தும் சாரமும், ஆதாரமும் அடிப்படையும் இல்லை என்பது தெள்ளத் தெளிவு. தீண்டப்படாதவர்கள் இந்துக்கள் அல்ல என்பதை நிரூபிப்பதற்கு பாரம்பரிய பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்ட வாதம் சிறந்ததாகவும், செல்லத்தக்கதாகவும் இருக்கக்கூடும் என்றாலும் சிலருக்கு இந்த வாதம் பலவீனமானதாகத் தோன்றக்கூடும்.

காங்கிரஸ் வாதத்தை நேரடியாகச் சந்திக்காமல் களத்தைவிட்டுச் செல்லுவதற்கு நான் விரும்பவில்லை. இதன் பொருட்டு, மத வழியில் தீண்டப் படாதவர்கள் இந்துக்களே என்பதை ஒப்புக்கொள்ளத் தயாராக இருக் கிறேன். ஆனால் இங்கு எழும் கேள்வி என்னவென்றால் அவர்கள் இந்துக்களாகவே இருக்கட்டும், அதனால் என்ன? இந்தியாவின் தேசிய வாழ்வில் அவர்கள் ஒரு தனி இனத்தினராக ஏற்கப்படுவதற்கு இது குறுக்கே நிற்க முடியுமா? சமயம் என்ற குறுகிய அர்த்தத்தில் அவர்கள் இந்துக்கள் என்று அழைக்கப்படுவது மட்டுமே அவர்கள் இந்து சமுதாயத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதியினர் என்ற வாதத்துக்கு எவ்விதம் ஆதார அடிப்படையாக இருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வது சிரமமாக இருக்கிறது.

சமய வழியில் தீண்டப்படாதவர்கள் இந்துக்களே என்பதை ஒரு விவாதத்திற்காக ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஏனைய இந்துக் களைப் போன்றே தீண்டப்படாதவர்களும் அதே தெய்வங்களை யும், தேவதைகளையும் வழிபடுகிறார்கள்; அதே யாத்திரைத் தலங்களுக்குச் செல்கிறார்கள், அதே தெய்வீக அருள் நிகழ்வு நம்பிக்கை கள் கொண்டிருக்கிறார்கள், அதே கற்களையும், மரங்களையும், மலைகளையும் மற்ற இந்துக்களைப் போலவே புனிதமானவையாகக் கருதுகிறார்கள் என்றெல்லாம் ஏற்கெனவே கூறினேனே அதற் கும் மேலாக இந்த வாதம் எதை அர்த்தப்படுத்துகிறது? தீண்டப்படாதவர்களும் இந்துக்களும் ஒரே சமூகத்தின் பின்னிப்பிணைந்த பகுதியினர் என்ற முடிவுக்கு வருவதற்கு இதுமட்டுமே போதுமா? சரி, இதுதான் காங்கிரஸ் வாதத்திற்கு அடிப்படையாக உள்ள தருக்க நியாயம் என்றால், பெல்ஜியர்கள், டச்சுக்காரர்கள், நார்வேஜியர்கள், சுவீடிஷ்காரர்கள், ஜெர்மானியங்கள், பிரெஞ்சுக்காரர்கள், இத்தாலியர்கள், ஸ்லாவ்கள் போன்றோரின் விஷயம் என்ன? இவர்கள் எல்லோரும் கிறித்தவர்களில்லையா? ஒரே தேவனை வழி படுபவர்கள் இல்லையா? அவர்கள் அனைவரும் ஏசுவை தங்களது ரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லையா? அவர்கள் ஒரே சமய நம்பிக்கைகளைக் கொண்டிருக்கவில்லையா? எண்ணத்திலும், சிந்தனையிலும், வழிபாட்டிலும், நம்பிக்கைகளிலும் அவர்களிடையே பரிபூரண ஒற்றுமை நிலவுவது கண்கூடு. எனினும், பிரெஞ்சுக்காரர்களும், ஜெர்மானியங்களும், இத்தாலியர்களும், ஏனையோரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை யார் மறுக்க முடியும்? அடுத்தப்படியாக, அமெரிக்காவில் உள்ள வெள்ளையர்கள், நீக்ரோக்கள் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். அவர்களும் ஒரு பொதுவான மதத்தை பின்பற்றுபவர்களாவர். இரு இனத்தவர்களும் கிறித்தவர்கள்.

இதன் காரணமாக அவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று எவரேனும் கூறமுடியுமா? மூன்றாவதாக இந்தியக் கிறித் தவர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ-இந்தியர்களை எடுத்துக் கொள்வோம். அவர்கள் ஒரே மதத்தில் பற்றுறுதி கொண்டு அதனைப் பின்பற்றி வருகிறார்கள். எனினும் அவர்கள் ஒரே கிறித்தவ சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அடுத்து சீக்கியர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களில் சீக்கியர் கள், மஜ்பி சீக்கியர்கள், ராம்தாசிய சீக்கியர்கள் எனப் பலப் பிரிவினர் இருக்கிறார்கள். அனைவரும் சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களே. எனினும் அவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களல்ல என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது. இந்த உதாரணங்களில் பின்புலத்தில் பார்க்கும்போது, காங்கிரஸ் வாதம் முற்றிலும் குறைபாடுகளுடையது என்பது தெளிவு.

அரசியல் சட்டப் பாதுகாப்புகள் வழங்குவதா, இல்லையா என்பதைத் தீர்மனிப்பதற்கான அடிப்படை அம்சம் மக்கட்தொகை யில் ஒரு சமூகக் குழுவினர் ஒன்றுபட்டிருக்கின்றனரா அல்லது பிரிந் திருக்கின்றனா என்பதேயாகும் என்பதை உணர்ந்து கொள்ளத் தவறியது காங்கிரஸ் வாதத்திலுள்ள முதல் குறைபாடாகும். மதம் என்பது ஐக்கியமா, பிளவா என்பதை முடிவு செய்யக்கூடிய ஒரு சூழ்நிலை மட்டுமே ஆகும். முசல்மான்களும் இந்தியக் கிறித்தவர் களும் தனி அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதற்கு அவர்கள் முசல்மான்களாகவோ அல்லது கிறித்தவர்களாகவோ இருப்பது காரணமல்ல, மாறாக அவர்கள் அடிப்படையிலேயே இந்துக் களிடமிருந்து வேறுபட்ட இனத்தினராக இருப்பதே காரணம். இந்த உண்மையை காங்கிரஸ் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

பொது மதம் இருந்தால் சமூகக் கூட்டிணைப்பை மெய்யெனக் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்க முயல்வதில் காங்கிரஸ் வாதத் தின் இரண்டாவது குறைபாடு அடங்கியுள்ளது. இத்தகைய தருக்க நியாயத்தின் அடிப்படையில் வெற்றி பெற்றுவிட முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் இவ்வாறு வெற்றிபெறுவது சாத்தியமல்ல். ஏனென்றால் உண்மை நிலவரங் கள் இத்தகைய முடிவான அனுமானத்திற்கு வருவதற்கு எதிராக இருக்கின்றன.

பொதுவான மதம் இருந்தால் சமூக இணைப்பு ஏற் பட்டுவிடும் என்ற வாதம் சரியானதல்ல. ஏனென்றால், ஐரோப்பா வில் இத்தாலியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள், ஸ்லாவ் கள், அமெரிக்காவில் நீக்ரோக்கள், வெள்ளையர்கள், இந்தியாவில் இந்தியக் கிறித்தவர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் ஆகியோர் ஒரே மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருப்பினும் அவர் கள் ஒரே சமூகமாக அமைந்திருக்கவில்லை என்பதைப் பார்க்கி றோம். இதிலுள்ள மிகவும் பரிதாபகரமான விஷயம் என்னவென் றால் மதம் ஓர் ஒன்றுபடுத்தும் அம்சம் என்ற தனது வாதத்தில் முற்றிலுமாக மயங்கிப்போய் சில முக்கிய உண்மைகளை காங்கிரஸ் உணரத் தவறிவிட்டதேயாகும்; இவை இரண்டுக்கும் இடையே ஒத்துப்போகும் இயல்பு இல்லை என்பதையும், சில சந்தர்ப்பங்களில் மதங்கள் தனித்தனியாக இருந்தாலும் பிளவு ஏற்படவில்லை என் பதையும், வேறு சில சந்தர்ப்பங்களில் ஒரு பொதுவான மதம் இருந் தாலும் பிளவு ஏற்பட்டிருப்பதையும், இவை எல்லாவற்றையும் விட மோசம் மதமே ஒரு விதிமுறையாக ஆக்குவதால் பிளவு நிலவு வதையும் காங்கிரஸ் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது.

காங்கிரஸ் வாதத்திற்கு சமாதி கட்டுவதற்கு மேலே குறிப் பிட்ட சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் உதாரணம் கூறுவது பொருத்தமாக இருக்கும். முதலாவது சந்தர்ப்பத்தை எடுத்துக் கொண் டால் அதற்கு மிகச்சிறந்த, எளிதினும் எளிதான உதாரணமாக சீக்கி யர்களையும் இந்துக்களையும் குறிப்பிடலாம். அவர்கள் சமய அள வில் வேறுபட்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் சமூக ரீதியில் அவர்கள் பிரிந்திருக்கவில்லை. அவர்கள் ஒன்றாக உணவு உண் கின்றனர்; ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்கின்றனர்; ஒன்றாக வாழ்கின்றனர். ஓர் இந்து குடும்பத்தில் ஒரு மகன் சீக்கியனாக இருப்பான்; இன்னொரு மகன் இந்துவாக இருப்பான். சமய வேறு பாடு சமூக உறவைத் துண்டிப்பதில்லை. இரண்டாவது சந்தர்ப் பத்தைப் பொறுத்தவரையில், ஐரோப்பாவில் இத்தாலியர்களை யும், பிரெஞ்சுக்காரர்களையும், ஜெர்மானியர்களையும், அமெரிக்கா வில் வெள்ளையர்களையும் நீக்ரோக்களையும் சிறந்த உதாரணங் களாகக் கூறலாம். மதம் ஓர் ஒன்றிணைக்கும் சக்தியாக இருக்கும் இடத்தில்தான் இவ்வாறு நிகழ்கிறது; ஆனால் வருண இன உணர்வு போன்ற பிளவு உண்டுபண்ணும் சக்திகளைத் தாக்குப் பிடித்து நிற்கும் அளவுக்கு மதம் வலுமிக்கதாக இருப்பதில்லை. மதமே பிளவை உண்டுபண்ணும் மூன்றாவது சந்தர்ப்பத்திற்கு இந்துக்களையும் இந்து சமயத்தையும் மிகப் பொருத்தமான இன்னும் சொல்லப்போனால் ஒரே உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இந்து சமயம் ஒற்றுமைக் குப் பதிலாக பிரிவினையை போதிக்கிறது என்பது அனைவரும் நன்கு அறிந்த விஷயம்.

ஓர் இந்து என்றால் கூடியுறவாடாதவன், எல்லா வற்றிலும் தனித்து நிற்பவன் என்றே பொருள். இந்து சமயம் சாதி அமைப்பையும் தீண்டாமையையும் தாங்கிப் பிடித்து நிற்கிறது என்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் வாசகம் அநேகமாக அதன் இயல்பை மூடிமறைக்கிறது என்றே சொல்லவேண்டும். இந்து சம யத்தின் உண்மையான இயல்பு பிளவுபடுத்தவதே ஆகும். இதில் எத்தகைய ஐயத்துக்கும் இடமில்லை. ஏனென்றால் சாதி அமைப்பும், தீண்டாமையும் எதைக் குறிக்கின்றன? பிளவையும் பிரிவினையை யுமே குறிக்கின்றன என்பது தெளிவு. சாதி என்பது பிரிவினைக்கு மற்றொரு பெயர்; தீண்டாமை என்பது ஒரு சமூகத்தை இன்னொரு சமூகத்திலிருந்து பிரிக்கும் மிக அதீத பிரிவினை வடிவத்தைக் குறிக் கிறது. சாதியமைப்பும், தீண்டாமையும் மரணத்திற்குப் பின்னர் ஆத்மாவின் நிலை சம்பந்தப்பட்ட இதர சித்தாந்தங்களுடன் ஒப்பிடும் போது கேடுவிளைவிக்காத சித்தாந்தங்கள் அல்ல என்பதும் ஐயத் துக்கப்பாற்பட்ட்தேயாகும்.

இவை ஒவ்வொரு இந்துவும் இந்த உலகில் தனது வாழ்நாட் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சாதி அமைப்பும் தீண்டாமை யும் வெறும் சித்தாந்தங்களாக மட்டுமன்றி, இந்த் மதம் விதித் துள்ள மிக முக்கியமான சமய வினைமுறைகளில் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளன. சாதி அமைப்பு மற்றும் தீண்டாமையைச் சித்தாந்தங் களில் ஓர் இந்து நம்பிக்கை வைப்பது மட்டும் போதாது. அவன் தனது அன்றாட வாழ்க்கையில் சாதியையும் தீண்டாமையையும் கடைப்பிடித்தொழுகவும் வேண்டும்.

இந்து சமயம் தனது தீண்டாமை சித்தாந்தத்தின் மூலம் இந்துக்களும் தீண்டாதவர்களுக்கும் இடையே கொண்டுஒ வந்துள்ள பிளவு, பிரிவினை காலனி நாடுகள் சம்பந்தமாக போர்த்துக்கீசியர் களுக்கும் அவர்களுடைய எதிராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட சச்சரவில் ஒரு சமயம் போப்பாண்டவர் கோடிட்டது போன்ற வெறும் கற்பனையான ஒரு பிரிவினைக் கோடல்ல; அது கண்ணுக்குத் தெரியக் கூடிய அல்லது தெரியாமலும் இருக்கக்கூடிய அகலமில்லாத நீளம் மட்டுமே கொண்ட வண்ணகோடு அல்ல; அது தனித்தன்மை கொண்ட ஆனால் வேறுபாடு காட்டாத வழிமரபுக் கோடல்ல.

மாறாக இந்தக் கோட்டுக்கு ஆழமுமுண்டு, அகலமுமுண்டு. உண்மையில் இந்துக்களும் தீண்டப்படாதவர்களும் குத்துமுள் கம்பிகளால் ஆன ஒரு வேலியால் பிரிக்கப்பட்டுள்ளனர். சுருக்கமாகக் கூறுவதானால் இதனைத் தொற்றுநோய்த் தடுப்பு வேலி என்றே கூறவேண்டும். தீண்டப்படாதவர்கள் இதனைக் கடந்து செல்ல ஒருபோதும் அனு மதிக்கப்பட்டதில்லை, என்றேனும் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.

பொதுப்படையாகக் கூறுவதானால், இந்து சமயமும் சமூகக் கூட்டிணைப்பும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஒவ்வாதவை, முரண் பாடானவை. ஆனால் இந்து சமயம் தனது இயல்பு காரணமாக, சமூகப் பிரிவினையில் நம்பிக்கை வைத்திருக்கிறது; இது சமூக ஒற் றுமையின்மையின் மறுபெயராகும்; எனவே இது சமூகப் பிரிவினை யையும் தோற்றுவிக்கிறது. இந்துக்கள் ஒன்றுபட்டு இருக்க விரும்பி னால் அவர்கள் இந்து சமயத்தைத் துறக்க வேண்டும். இந்து சமயத்தைக் கைவிடாமல் அவர்களால் ஒற்றுமையாக இருக்க முடியாது. இந்து சமயம் இந்துக்களின் ஒற்றுமைக்கு மிகப் பெரிய தடையர ணாக இருந்து வருகிறது. அனைத்துச் சமூக ஒற்றுமைக்கும் அடிப் படையான ஒன்றுப்படிருக்க வேண்டும் என்ற அந்த ஆசையை. ஆர்வத்தை இந்து சமயத்தால் தோற்றுவிக்க முடியாது. அதற்கு மாறாக பிரிய வேண்டுமென்ற விருப்பத்தைத்தான் இந்து சமயம் தோற்று விக்கிறது.

தான் முன்வைக்கும் வாதம் தன்க்கு எதிராகவே திரும்புகிறது என்பதை காங்கிரஸ் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஆனால் தீண்டப்படாவதவர்கள் முன்வைக்கும் வாதம் அப்படிப்பட்டதல்ல; அது மறுக்க முடியாத, அசைக்க முடியாத ஆணித்தரமான வாதம். தீண்டப்படாதவர்கள் இந்துக்களே என்ற வரட்டுத்தனமான வாதத் திலிருந்து ஏதேனும் முடிவுக்கு வர முடியுமானால் அந்த முடிவு பின் கண்டவாறுதான் இருக்கும்; தீண்டப்படாதவர்கள் இந்துக்கள்தான் என்று சாதிக்கும் இதே இந்து சமயம்தான் தீண்டப்படாதவர்களை இந்துக்களில் ஒரு பிரிக்க முடியாத பகுதியினராக ஏற்றுக்கொள்ளக் கூடாது, மாறாக அவர்களை இந்துக்களிடமிருந்து பிரித்து ஒரு தனித்த பகுதியினராகவே நடத்திவர வேண்டும் என்று கொள்கை அளவிலும் சரி, நடைமுறையிலும் சரி எப்போதுமே வலியுறுத்தி வந்திருக்கிறது.

எனவே, தீண்டப்படாதவர்கள் தாங்கள் ஒரு தனிப் பிரிவினர் என்று கூறினால் அரசியல் அனுகூலங்களைப் பெறுவதற்காக அவர் கள் ஒரு புதிய கோட்பாட்டை கண்டுபிடித்திருக்கின்றனர் என்று அவர்கள்மீது யாரும் குற்றம் சுமத்த முடியாது. அவர்கள் அப்பட்ட மான யதார்த்தத்தையும், அந்த எதார்த்தம் எவ்வாறு இந்து சமயத் தின் மரபுரிமையாக வந்தது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் களே தவிர வேறல்ல. தீண்டப்படாதவர்களை ஒரு தனி இனத்தின ராக அங்கீகரிக்க மறுப்பதற்கு இந்து சமயத்தை ஒரு வாத ஆதாரமாக காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள முடியாது; அது நேர்மையான செயலாகவும் இருக்க முடியாது; அவ்வாறு அது பயன்படுத்திக் கொள்ளுமானால், சுயநல நோக்கங்களால் தூண்டப்பட்டே அவ்வாறு செய்ய முடியும். தீண்டப்படாதவர்களை இந்தியாவின் தேசிய வாழ் வில் ஒரு தனித்த, வேறுபட்ட இனத்தினராக ஏற்றுக்கொள்வது நிர் வாக சபையிலும், சட்டமன்றங்களிலும், அரசுப் பணித்துறைகளிலும் உள்ள இடங்களை தீண்டப்படாதவர்களும் இந்துக்களும் தங்களுக் குள் பங்கிட்டுக் கொள்வதில் போய் முடியும் என்பதையும், இதன் மூலம் இந்துக்களும் பங்கு குறையும் என்பதையும் காங்கிரஸ் அறியும்.

இதுவரை தீண்ப்படாதவர்களுக்கு உரிய இடங்களையும் இந்துக்களே அபரித்துக் கொள்வது வழக்கமாக இருந்து வந்திருக் கிறது. அப்படியிருக்கும்போது அந்த இடங்களை இப்போது இந்துக் கள் இழப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை. இந்தியாவின் தேசிய வாழ்வில் தீண்டப்படாதவர்களை ஒரு தனி இனமாக அங்கீகரிக்க காங்கிரஸ் மறுப்பதற்கு இதுவே உண்மையான காரணம்.

தேசிய வாழ்வில் தீண்டப்படாதவர்களை ஒரு தனித்த, வேறு பட்ட இனமாக அரசியல் ரீதியில் அங்கீகரிக்கக் கூடாது, அவ்வாறு செய்தால் இந்துக்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே யான பிளவை அது நிரந்தரமாக்கிவிடும் என்பது காங்கிரஸ் முன் வைக்கும் இரண்டாவது வாதம்.

இது எவ்வகையிலும் பரிசீலனைக்குத் தகுதியற்ற உப்பு சப் பில்லாத வாதம். காங்கிரஸ் முன்வைத்துள்ள வாதங்களிலேயே இது மிகவும் பலவீனமானது; இதைவிட உருப்படியான வாதங்கள் எதை யும் வைக்க காங்கிரசுக்குத் திராணியில்லை என்பதையே இது காட்டு கிறது, சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். தவிரவும், அதன் முந்தைய வாதத்துக்கே முரண்பாடானதாக இருக்கும் இந்த வாதம் முற்றிலும் தவறான கருத்திலிருந்து தோன்றியதாகும்.

இந்துக்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே உண்மையிலேயே பிளவு இருக்குமானால், தீண்டப்படாதவர்களுக்கு எதிராக இந்துக்கள் பாரபட்சப் போக்கைக் கடைப்பிடிக்கக்கூடிய அபாயம் இருக்குமானால், அப்போது தீண்டப்படாதவர்கள் அர சியல் அங்கீகாரம் பெறுவதும், இந்துக்களின் கொடுங்கோன்மை யிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு அரசியல் பாதுகாப்புகள் வழங்குவதும் இன்றியமையாததாகிறது. இதை விடுத்து, உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது எனும் வாதத்தை இப்போதைய கொடுங்கோன்மையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழி துறைகளைத் தீண்டப்படாத வர்கள் பெறாதபடி தடுப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

இரண்டாவதாக, இந்துக்களையும் தீண்டப்படாதவர்களை யும் சமூக ரீதியில் ஒன்றிணைப்பதில் உண்மையிலேயே ஆர்வம் கொண்டவர்களும், இத்தகைய கூட்டிணைப்பை உருவாக்குவதற்கான வழிதுறைகளைக் காணுவதில் செயலூக்கத்துடன், தீவிரமாக ஈடுபட் டிருப்பவர்களும்தான் இந்த வாதத்தைப் பயன்படுத்த முடியும். தீண்டப் படாதவர்களின் பிரச்சினை சமூக இயல்பும், அரசியல் இயல்பும் கொண்டது என்று காங்கிரஸ்காரர்கள் அடிக்கடி பேசி வருவதைக் கேட்கிறோம்.

ஆனால் இங்கு ஒரு கேள்வி எழுகிறது: இது ஒரு சமூகப் பிரச்சினை என்று காங்கிரஸ்காரர்கள் நெஞ்சறிந்து, வாய்மை யோடும் நேர்மையோடும் கூறுகிறார்களா? அல்லது தீண்டப்படாத வர்களுடன் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதால் ஏற்படக் கூடிய விளைவுகளைத் தவிர்க்கும் நோக்கத்தோடு இதனை ஒரு சாக்குப்போக்காகக் கூறுகிறார்களா? இது ஒரு சமூகப் பிரச்சினை என்று உண்மையிலேயே அவர்கள் மனமார்ந்து கருதுகிறார்கள் என்றால் இந்த விஷயத்தில் அவர்கள் நேர்மையோடு, வாய்மையோடு நடந்துகொள்கிறார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என்ன சான்று இருக்கிறது? காங்கிரஸ்காரர்கள் இந்துக்களிடையே ஏதேனும் சமூக சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் களா? சமபந்தி போஜனங்களையும் கலப்புத் திருமணங்களையும் ஆதரித்து அவர்கள் என்ன அறப்போர் நடத்தினார்கள்? சமூக சீர் திருத்தத் துறையில் காங்கிரஸ் புரிந்துள்ள சாதனைதான் என்ன?

III

தீண்டப்படாவதர்கள் தங்கள் பிரச்சினை குறித்து என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்பதை இங்கு கூறுவது உசிதமாக இருக்கும். பிரிட்டிஷார் வரும்வரை தீண்டப்படாதவர்கள் தாங்கள் தீண்டப்படாதவர்களாக இருப்பதிலேயே திருபதியடைந்திருந்தார் கள். இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது எங்கள் தலையெழுந்து; இந்து தெய்வம் இவ்வாறு முன்விதித்தமைத்து, அதை இந்து அரசு அமல்படுத்தி வந்தது. ஆதலால் இதிலிருந்து தப்ப எங்களுக்கு வேறு வழியில்லை. இந்த ரீதியில்தான் இந்த மக்களின் கண்ணோட்டம் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தது. இதன்பின்னர் அதிர்ஷ்ட வசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ கிழக்கிந்திய கம் பெனிக்கு இந்தியாவிலிருந்து தங்கள் போர்ப்படைகளுக்குப் படை வீரர்கள் தேவைப்பட்டனர். அப்போது அவர்களுக்கு தீண்டப்படாத வர்களைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லை.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவம் குறைந்தபட்சம் அதன் வரலாற்றின் ஆரம்ப கட்டத்தில் தீண்டப்படாதவர்களைக் கொண்டதாகவே இருந்தது. தீண்டப்படாதவர்கள் இப்போது போருக்குத் தகுதியற்றவர்களது வகுப்பினர் பட்டியிலில் சேர்க்கப்பட்டு, அதனால் படைகளில் சேர்க்கப்படாமல் இருந்து வருகின்றனர். ஆனால் அப்போது இப்படி இல்லை. தீண்டப்படாதோர்களைக் கொண்ட போர்ப்படையின் துணைகொண்டுதான் பிரிட்டிஷார் இந்தியாவை வென்று கைப்பற் றினர். கிழக்கு இந்தியக் கம்பெனியின் சைனியத்தில் இந்தியப் படை வீரர்களும் அவர்களுடைய குழந்தைகளும் ஆணாயினும் சரி, பெண் ணாயிலும் சரி கட்டாயம் கல்வி கற்றாக வேண்டும் என்ற ஒரு விதி முறை இருந்து வந்தது.

ராணுவத்தில் சேருவதற்கு தீண்டப்படாதவர் கள் அனுமதிக்கப்பட்டிருந்தபோதுதான் அவர்களுக்கு கல்வி கற்கும் வசதி அளிக்கப்பட்டது; இது அவர்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் பெற்றிராத ஓர் அனுகூலமாகும். இது அவர்களுக்கு ஒரு புதிய பார்வை யையும் மதிப்பையும் அளித்தது. தாங்கள் கீழானவர்களாக நடத்தப் படுவது தங்களது தவிர்க்க முடியாத விதி அல்ல என்பதையும், சூழ்ச்சி மிக்க புரோகிதரின் நயவஞ்சக செயல்களால் தங்கள் ஆளுமை மீது தீணிக்கப்பட்ட ஒரு கறை, வடு என்பதையும் அவர்கள் உணர ஆரம்பித்தனர். இதுகுறித்த இதன் முன்னர் என்றும் இல்லாத விதத் தில் அவர்கள் வெட்கி தலைகுனிந்தனர்; இந்த இழுக்கை, அழுக்கை ஒழித்துக்கட்டியே தீருவது என்று உறுதிபூண்டனர்.

அவர்களும் ஆரம் பத்தில் தங்கள் பிரச்சினை சமூக ரீதியான என்றே எண்ணினர்; அப்பிரச்சினைக்குத் திர்வுகாண சமூக வழிகளில் போராடி வந்தனர். இது முற்றிலும் இயல்பே. ஏனென்றால் இந்துக்களுக்கும் தீண்டப் படாதவர்களுக்கும் இடையே சமபந்தி போஜனங்களும், கலப்புத் திருமணங்களும் தடைசெய்யப்பட்டிருப்பதை தங்களது கீழான நிலையின் வெளிப்புறச் சின்னங்களாக அவர்கள் பார்த்தனர். எனவே, தங்கள் மீது பூசப்பட்டுள்ள கறையை அகற்றுவதற்கு சமத்துவ அடிப்படையில் இந்துக்களுடன் சமூக உறவை வளர்த்துக் கொள்வது அவசியம் என்றும், சம்பந்தி போஜனங்களையும் கலப்புத் திருமணங் களையும் தடுக்கும் விதிகளை இதம் மூலம் ரத்து செய்ய முடியும் என்றும் அவர்கள் முடிவுக்கு வந்தனர். வேறுவிதமாகச் சொன்னால், தீண்டப்படாதவர்கள் தங்களது கீழ்ப்பட்ட, இழிந்த நிலையை தெரிந்து கொண்ட பிறகு, அதிலிருந்து விடுபடுவதற்கு, விமோசனம் அடைவதற்கு மேற்கொண்ட முதல் செயல் திட்டம் சாதி முறையை ஒழிக்கும்படி வலியுறுத்தி, இந்து சமயத்தின் அரவணைப்பின் கீழ் உள்ள எல்லோரிடையேயும் சமூக சமத்துவத்தை நிலைநாட்டுவதேயாகும்.

இதில், இந்துக்களில் ஒரு பகுதியினர் தங்களுடைய நண்பர் களாக இருப்பதை தீண்டப்படாதவர்கள் கண்டனர். தங்களுடைய சமூக அமைப்பு மிகவும் குறைபாடுடையாதாக இருக்கிறது என்பதை யும், பல சமூகத் தீமைகளுக்கு, கேடுகளுக்கு, கொடுமைகளுக்கு இதுவே உறைவிடம், பிறப்பிடம் என்பதையும் பிரிட்டிஷாருடன் ஏற்பட்ட தொடர்பால் தீண்டப்படாதவர்களைப் போலவே இவர் களும் உணர்ந்து கொண்டனர்.

அவர்களும் ஒரு சமூக சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்க விரும்பினர். வங்காளத்தில் ராஜா ராம் மோகன் ராயுடன் இந்த இயக்கம் தொடங்கி அங்கிருந்து அகில இந்தியாவிலும் படர்ந்து பரவிற்று; இறுதியில் இந்திய சமூக சீர்திருத்த மாநாடு என்னும் அமைப்பை நிறுவுவதில் முடிந்தது; அரசியல் சீர் திருத்தத்திற்கு முன்னர் சமூக சீர்திருத்தம் என்னும் குறிக்கோளை இந்த அமைப்பு முன்வைத்து. தீண்டப்படாதவர்கள் இந்த சமூக சீர்திருத்த மாநாட்டைப் பின்பற்றினர்; அதன் பின்னால் ஒரேஎ மனிதனாக அணி வகுத்து நின்றனர்; அந்த அமைப்புக்குத் தங்கள் முழு ஆதரவையும் அளித்தனர். நாளடைவில் இந்த அமைப்பு மாண்டு மடிந்து, குழி தோண்டிப் புதைக்கப்பட்டு, மறக்கப்பட்டு விட்டது என்பதை அனை வரும் அறிவர். அதை யார் கொன்றார்களா? காங்கிரஸ்தான் கொன்றது.

“அரசியல்தான் முதலில், அரசியல்தான் முடிவில்”, “அரசியல்தான் ஆதியும் அந்தமும்”, “ஒவ்வொருவருக்கும் அரசியல், அனைவருக் கும் அரசியல்” என்பன போன்ற கோஷங்களை முழங்கிய காங்கிரஸ் சமூக சீர்திருத்த மாநாட்டை தனது எதிராளியாகக் கருதிற்று. அர சியல் சீர்திருத்த ஏற்படுவதற்கு முன்னர் சமூக சீர்திருத்தம் ஏற்படுவது அவசியம் என்ற மாநாட்டின் கோட்பாட்டை அது வன்மையாக எதிர்த்தது. காங்கிரஸ் மேடையிலிருந்தும், தனிப்பட்ட காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து இடையறாதும் ஓயாதும் வீசப்பட்ட அக்கினி குண்டுகளால், அவர்களது பயங்கர பிரசாரத் தீயால் சமூக சீர்திருத்த மாநாடு எரிந்து சாம்பலாயிற்று.

சமூக சீர்திருத்தத்தின் மூலம் தங்களுக்கு விமோசனம் கிட்டும் என்று தீண்டப்படாதவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை முழுவதும் இவ்வாறு தீய்ந்துபோன பிறகு, காய்ந்து போன பிறகு தங்களைப் பாதுகாத்துக் கொள்வதோடு அரசியல் வழிகளை நாட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அவர்கள் உள்ளாயினர். இப்போது காங்கிரஸ்காரர்கள் குட்டிக்கரணம் அடித்து, இது சமூகப் பிரச்சினை என்று கூற ஆரம்பித்துள்ளனர். இது கடைந்தெடுத்த கபட நாடகமே தவிர வேறன்று.

தீண்டப்படாதவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒரு சமூகப் பிரச்சினை என்று கூறுவது தவறு. ஏனென்றால் சீதனம், விதவை மறுமணம், திருமண வயது போன்றவற்றைத்தான சமூகப் பிரச்சினை கள் எனக் கூறுவது முறையாகும்; தீண்டப்படாதோர் பிரச்சினை இப்படிப்பட்ட பிரச்சினைகள் போன்றதல்ல. அடிப்படையில் இது முற்றிலும் வேறுபட்டதொரு பிரச்சினை. இன்று பெரும்பான்மை யினர் சிறுபான்மையினருக்கு சுதந்திரமும் சமத்துவ வாய்ப்பும் அளிக்க மறுக்கின்றனர்; சிறுபான்மையினர் மீது தமது கொள்கை யைத் திணிக்க சதிசெய்து வருகின்றனர்; இத்தகைய பகைமை மனோ பாவம் கொண்ட பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு சுதந் திரமும் சமத்துவ உரிமையும் வழங்கச் செய்வதே இன்று தீண்டப் படாதோரை எதிர்நோக்கும் பிரச்சினையாகும்.

இந்தக் கண்ணோட் டத்திலிருந்து பார்க்கும்போது, தீண்டப்படாதோர் பிரச்சினை அடிப் படையில் ஓர் அரசியல் பிரச்சினை என்பது புலனாகும். சரி, இது ஒரு சமூகப் பிரச்சினை என்று வாதத்திற்காக வைத்துக்கொண்டால் கூட, இந்துக்கள் நல்லெண்ணம் படைத்தவர்களாக இருக்கும் பட்சத் தில், தீண்டப்படாதவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்குவதும், அவர்களுடைய பந்தோபஸ்துக்காக பாதுகாப்புகள் அளிப்பதும் அவர் கள் சமூக ரீதியில் இந்துக்களுடன் ஒன்றுபடுவதை எப்படி தடுக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. காங்கிரஸ்காரர்கள் தங்கள் மனத்தில் திட்டவட்டமான, தெளிவான கருத்துகள் ஏதுமின்றியே வாதிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. அரசியல் அம்சங்களுக்கும் சமூக அம்சங்களுக்கும் இடையேயான பரஸ்பர உறவுகள் குறித்து, சம்பந்தா சம்பந்தங்கள் குறித்து அவர்களுக்கு ஒரு தெள்ளத் தெளிந்த கருத்து இருப்பதாகக் தெரியவில்லை. அவர்கள் தனிவாக்காளர் தொகுதிகளை எதிர்ப்பதிலிருந்தும், கூட்டு வாக்காளர் தொகுதிகளை ஆதரிப்பதிலிருந்தும் இதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு அவர்கள் கூறும் காரணத்தைப் பார்ப்போம். ஒரு கூட்டு வாக் காளர் தொகுதியில் இந்து வாக்காளர்கள் ஒரு தீண்டப்படாதவருக் கும் தீண்டப்படாத இனத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் இந்துவுக் கும் வாக்களிக்கலாம். இது சமூக ஒற்றுமையைக் கட்டி வளர்க்கிறது. தனி வாக்காளர் தொகுதியிலோ இந்து வாக்காளர்கள் ஓர் இந்துவுக் கும், தீண்டப்படாத இன வாக்காளர்கள் ஒரு தீண்டப்படாதவருக் குமே வாக்களிக்கின்றனர். இது சமூக ஒருமைப்பாடு உருவாவதைத் தடுக்கிறது. ஆனால் வாக்காளர் தொகுதிகள் பிரச்சினையை தீண்டப் படாதவர்கள் இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கவில்லை.

இவை இரண்டில் எது தீண்டப்படாதவர்கள் தாங்கள் விரும்பும் தங்களுடைய இன வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய உதவும் என்ற கண்ணோட்டத்திலிருந்தே இப்பிரச்சினையை அவர்கள் நோக்கு கிறார்கள். ஆனால் இங்கு காங்கிரஸ் வாதத்தை நுணுகி ஆராய்வதி லேயே என் கவனத்தைச் செலுத்த விரும்புகிறேன். விரிவாக சென்று வாதத்தை சிக்கலாக்க விரும்பவில்லை. காங்கிரஸ் முன்வைக்கும் வாதம் சரியானதாகவே தோன்றுகிறது. ஆனால் இது இவ்விஷயம் குறித்த ஆழமற்ற மேலெழுந்தவாரியான கண்ணோட்டமேயாகும். இந்தத் தேர்தல்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. அப்படியிருக்கும்போது, இந்த ஐந் தாண்டுகளில் மற்ற நாட்களில் எல்லாம் இந்துக்களும் தீண்டப் படாதவர்களும் கடுமையான முறையில் பிரிந்து வாழ்ந்து வருகை யில் தேர்தல்கள் நடைபெறும் இந்த ஒரு நாளில் கூட்டாக வாக் களிப்பதால் மட்டும் எப்படி அவர்களிடையே ஒருமைப்பாட்டைக் கட்டி வளர்த்துவிட முடியும் என்று கேட்கலாம்.

அதேபோன்று, இந்த ஐந்தாண்டுகளில் ஒரே ஒரு நாளில் மட்டும் தனிவாக்காளர் தொகுதியில் வாக்களிப்பது ஏற்கெனவே உள்ளதைவிட எப்படி அதிகப் பிரிவினையை ஏற்படுத்திவிட முடியும் என்று கேட்கலாம்; இவ்வாறே, ஐந்தாண்டுகளில் ஒரு நாளை தனி வாக்காளர் தொகுதி யில் வாக்களிப்பதற்கு செலவிடுவது ஒற்றுமைக்காகப் பாடுபடு வோரின் பணியை எப்படித் தடுக்க முடியும் என்றும் கேட்கலாம். இன்னும் ஸ்தூலமாகக் கூறுவதானால், தீண்டப்படாதவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதிகளை உருவாக்குவது அவர்களுக்கும் இந்துக் களுக்கும் இடையே சமபந்தி போஜனங்களும் கலப்புத் திருமணங் களும் நடைபெறுவதற்கு எப்படி முட்டுக்கட்டையாக இருக்க முடியும்? இது முட்டுக்கட்டையாகத்தான் இருக்கும் என்று பிறவி முழு மூடன்தான் கூற முடியும். எனவே, நிரந்தரப் பிரிவினைக்கு முடிவுகட்ட இந்துக்கள் உண்மையிலேயே விரும்பினால், தீண்டப் படாதவர்களை ஒரு தனி இனமாக அரசியல் ரீதியில் அங்கீகரித்து, அவர்களுக்கு அரசியல் சட்டரீதியாக பாதுகாப்புகளை வழங்குவது அவர்களிடையேயான பிளவை சாசுவதமாக்கவே செய்யும் என்று கூறுவதும் வாதிடுவதும் சிறுபிள்ளைத்தனமானதேயாகும்.

IV

தங்களுக்கு அரசியல் சட்டப் பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டுமென்ற தீண்டப்படாதவர்களின் கோரிக்கைக்கு எதிராக வேறு சில கவைக்குதவாத வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. அவற்றையும் இங்கு பரிசீலிப்பது அவசியம். அத்தகைய வாதங் களில் ஒன்றை இங்கு பார்ப்போம். இந்தியாவில் மட்டுமன்றி ஐரோப்பாவிலும் இதர எல்லா இடங்களிலும் சமூகப் பிரிவினை கள் இருந்து வரவே செய்கின்றன; ஆனால் ஐரோப்பிய மக்கள் தங்கள் அரசியலமைப்புச் சட்டங்களை வகுத்துக் கொண்டபோது இவற்றைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு பொதுவாக வாதிடப்/ படுகின்றது. எனினும் தீண்டப்படாதவர்களின் கோரிக்கையும் இந்த வாதத்திற்கும் அடங்கக்கூடும். எனவே, இந்த வாதம் சிறிதளவும் ஆதாரமற்றது என்று நான் ஏன் நினைக்கிறேன் என்பதை இங்கு கூறவேண்டும்.

இவ்வகையில் என் கருத்துகளைக் கூறும்போது, தெரிவிக்கப் படும் கூற்றுக்கும் அதனை அடிப்படையாகக் கொண்ட வாதத்தை யும் வேறுபடுத்தி அவற்றைத் தனித்தனியாகப் பகுத்தாய விரும்பு கிறேன். ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை இந்தக் கூற்று ஏற்கத்தக்கதாக இருக்கிறது. ஒவ்வொரு சமுதாயத்திலும் வகுப்புகள் இருக்கின்றன என்று கூறப்படுவதை மறுக்க முடியாது. ஏனென்றால் ஐரோப்பிய அல்லது அமெரிக்க சமுதாயத்தில் கூட பல்வேறு வழிகளில், பல் வேறு நோக்கங்களுக்காக இணைந்த வகுப்பினர் இருக்கின்றனர். சில வகுப்பினர் குருதி உறவால் அல்லது மொழியால் பிணைந்த வகுப்பினர்களாக உள்ளனர். சில வகுப்பினர் சமுதாய படிநிலை யிலும் அந்தஸ்திலும் வேறுபட்ட சமூக வர்க்கங்களைப் போன்று அமைந்துள்ளனர்.

இதேபோன்று குறிப்பிட்ட சித்தாந்தங்களைப் பின்பற்றும் சமயப் பிரிவினர் இருக்கின்றனர். இதேபோன்று சில சமயங்களில் வேறுபட்ட நோக்கங்களைக் கொண்டவர்களும், சில சமயங்களில் இறுக்கமற்ற பிணைப்புகளைக் கொண்டவர்களும்,சில சமயங்களில் வெவ்வேறு அளவில் கட்சிகளும், தொழில்துறை இணைக் கழகங்களும் என முடிவே இல்லாமல் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லுகிறது. ஆனால் இதற்கப்பாலும் சென்று இந்தியா விலுள்ள சாதிகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுள்ள குழுக் கள், வகுப்புகளைப் போன்றவையே என்று கூறுவது சுத்த முட்டாள் தனமாகும். கடைந்தெடுத்த அபத்தமாகும். ஐரோப்பாவிலுள்ள வகுப்புகளும் குழுக்களும் மேலெழுந்தவாரியாகப்ல் பார்க்கும்போது இந்தியாவிலுள்ள சாதிகள் போல் தோன்றலாம்.

ஆனால் அடிப் படையில் இவை இரண்டுமே முற்றிலும் வேறுபட்டவை. இதில் பிரதான வேறுபாடு இந்தியாவில் சாதிகள் தனிமைப்படுத்தப்படு வதும் ஒதுக்கப்படுவதுமாகும்; இதுதான் இந்தியாவின் சாதிகள் குறித்த தனி அம்சங்களாகும்; இவை ஏதோ வெறும் நடைமுறைகளாக அன்றி சமய சார்புடைய விதிமுறைகளாகவே கடைப்பிடிக்கப்படு கின்றன; இந்த அம்சங்களில் எதையும் ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ உள்ள குழு அல்லது வகுப்பு அமைப்பில் காண முடியாது.

இந்தியாவின் சமூக அமைப்பு முறை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சமூக அமைப்பு முறையிலிருந்து வேறு பட்டிருக்கும் விஷயத்தை எடுத்துக்கொண்டு பார்ப்போமானால், ஐரோப்பாவும் அமெரிக்காவும் தமது அரசியலமைப்பை உரு வாக்கும்போது தமது சமூக அமைப்பு பற்றிய விவரங்களையும், சூழ்நிலைகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதும், ஆனால் இந்தியா இது விஷயத்தில் தனது சாதி அமைப்பு முறையையும் தீண்டாமையையும் கணக்கிலெடுத்துக் கொள்ளா மல் இருக்க முடியாது என்பதும் புலனாகும். இந்தப் பிரச்சினையை இன்னும் முழு அளவுக்குப் புரிந்துகொள்வதற்கு இது ஐரோப்பா வுக்கு ஏன் தேவையில்லை. இந்தியாவுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை இங்கு விளக்குவது அவசியம். குழுக்களாக அமைந்துள்ள ஒரு சமுதாயத்தை எதிர்நோக்கும் அபாயம் என்னவென்றால் ஒவ் வொரு குழுவும் “தனது சொந்த நலன்களை” வளர்த்துக் கொள்கிறது, அப்போது இத்தகைய நலன்கள் மற்ற குழுக்களது நலன்களுக்கு குந்தகம் விளைவிக்காமல் தடுப்பதற்கு அரசியல் சட்ட பாதுகாப்பு களை உருவாக்க வேண்டியதாகிறது.

இந்தத் தீங்கை அரசியல் அல் அலாத வழிகளில் தடுத்து நிறுத்துவதற்கு வாய்ப்பு இருக்கும்போது, அரசியல் சட்டப் பாதுகாப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லாது போகிறது. இவ்வாறு இந்தத் தீங்கை அரசியல் அல்லாத வழிகளில் முறியடிப்பதற்கு வாய்ப்பு இருக்கும்போது அரசியல் சட்டப் பாதுகாப்புகளுக்கு வகைசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த சீர்கேட்டுக்கு முடிவுகட்டுவதற்கு அரசியல் அல்லாத வழிகள் இல்லாதபோது, அரசியல் சட்டப் பாதுகாப்புகள் வழங்கு வது இன்றியமையாதது. ஒரு குறிப்பிட்ட குழு “தனது சொந்த நலன் களை” வளர்த்துக் கொள்வதிலிருந்து எழக்கூடிய தீமையை எதிர்க் கக்கூடிய சாத்தியக்கூறு ஐரோப்பாவில் இருக்கிறது.

ஏனென்றால் அங்கு பல்வேறு குழுக்கள் தனிமைப்படுத்தப்பட்டோ, ஒதுக்கப் பட்டோ இருக்கவில்லை; அக்குழுக்கள் பரஸ்பரம் சுதந்திரமாக உறவுகளை வளர்த்துக்கொள்ள இது உதவுகிறது; இதன் விளைவாக, குழுக்கள் தமது சொந்த நலன்களுக்காக நிற்பதும், எப்போதும் அவற்றைப் பாதுகாப்பதை தலையாய குறிக்கோளாகக் கொண்டிருப் பதும் வரம்பு மீறிய செயலாகக் கருதப்படுகிறது; இத்தகைய தூய எண்ணம் அவற்றின் குறிக்கோள்களையும் நோக்கங்களையும் விரிவு படுத்தவும் சமூக நலனுக்குகந்தவையாக இருக்கச் செய்யவும் வகை செய்கிறது. ஐரோப்பாவில் பல்வேறு குழுக்களிடையே நிலவும் இத்தகையதோரு நிலை அவற்றின் போக்குகளில் ஆக்கபூர்வமான மாற்றங்களை உண்டுபண்ணுகிறது; இதனால் சிந்தனையில் ஒருமைப்பாடும், நோக்கங்களில் உடன்பாடும், செயலில் ஒற்றுமையும் நிலவும் ஒரு சமுதாயத்தை உருவாக்க முடிகிறது. ஆனால் இந்தியாவின் விஷயம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். இந்தியாவில் சாதிகள் என்பவை தனிமைப்படுத்தப்பட்டவையாக, ஒதுக்கப்பட்டவையாக இருந்து வருகின்றன.

அவற்றிடையே பரஸ்பர உறவு ஏதுமில்லை; ஒத்த குறிக்கோள்களோ நோக்கங்களோ இல்லை. ஒரு சாதியோ அல்லது சாதிகளின் கூட்டோ தமது “சொந்த நலன்களை” ஏனைய சாதிகளின் நலன்களை விட மிகவும் புனிதமானவையாக, என்றென்றும் மீறவொண்ணாதவையாகக் கருதுகின்றன. இந்த சாதிகள் ஒன்றுபடுவதும் ஒத்துழைப்பதும் அவற்றின் இயல்பை மாற்றிவிடுவதில்லை. இந்த ஒத்துழைக்கும் செயல்பாடுகள் வெறும் யாந்திரிகமானவை, சமூக ரீதியானவை அல்ல. தனிநபர்கள் சில குறிப்பிட்ட பலன்களை அடையும் பொருட்டு பரஸ்பரம் ஒருவர் மற்றவரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்; இதில் உணர்ச்சிபூர்வமான, அறிவுபூர்வமான மனப்போக்கும் இடமில்லை.

அவர்கள் பரஸ்பரம் கட்டளைகளைப் பிறப்பிப்பதும் கட்டளைகளை ஏற்பதும் அவர்களது செயற்பாடு களிலும் விளைவுகளிலும் வேண்டுமானால் தாக்கத்தை ஏற்படுத் தலாம். ஆனால் இது அவர்களது மனப்போக்குகளை மாற்றாது. ஆதலால் “சுயநல நோக்கங்கள்” கொண்ட சாதிகள் ஏனைய நிராதர வான சாதிகளுக்கு கேடு விளைவிப்பதைக் தடுப்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவற்றுக்குப் பாதுகாப்புகள் அளிப்பது அவசியம்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏன் இதனைக் கணக்கி லெடுத்துக் கொள்ள வேண்டும். இதிலிருந்து தோன்றக்கூடிய கேட் டுக்கு எதிராக ஏன் பாதுகாப்புகள் அளிக்க வேண்டும் என்பதை நியாயப்படுத்தும் மற்றொரு அம்சமும் இந்திய சாதி அமைப்பு முறையில் அடங்கியுள்ளது. ஒவ்வொரு சமுதாயமும் பல்வேறு குழுக்களைக் கொண்டதாக இருக்கிறது. ஆனால் இந்தக் குழுக்களுக்கு இடையேயான பரஸ்பர உறவுகள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும்.

ஒரு சமுதாயத்தில் குழுக்கள் பரஸ்பரம் ஒன்று மற்றொன்றில்பால் காட்டும் மனப்போக்கு சமூக-சார்பற்றதாக இருக்கக்கூடும். இன்னொரு சமுதாயத்தில் இதுவே சமூக-விரோதப் போக்காக இருக்கக்கூடும். பல்வேறு சமூகக் குழுக்களைச் செயல்பட உந்தும் உணர்வு சமூக சார்பற்றதாக இருக்கும் இடங்களில்தான் இத்தகைய குழுக்கள் இருந்துவருவதை அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஒரு குழு மற்றொரு குழுவிடம் சமூக-விரோத உணர்வுடன் நடந்துகொள்ளும் போதும், அந்தக் குழுவுக்கு வெளியே இருப்பவர்களைப் பகைவர் களாகக் கருதும்போதுதான் அரசியலமைப்புச் சட்டத்தை வகுக்கும் போது இதனைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்; சமூக- விரோதப் போக்குக்கு இலக்கான வகுப்பினருக்கு முறையான பாது காப்புகள் அளிக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் சாதிகள் வெறும் சமூக சார்பற்றவையாக மட்டும் இருக்கவில்லை. மிகப்பல சந்தர்ப் பங்களில் அவை சமூக-விரோதமானவையாகவும் இருக்கின்றன. தீண்டப்படாதவர்கள் விஷயத்தில் இந்துக்கள் நடந்துகொள்ளும் போக்கை இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். தீண்டப் படாதவர்கள்பால் இந்துக்கள் எத்தகைய சமூக-விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதற்கு இங்கு சில உதாரணங்களைக் கூறுவது பொருத்தமாக இருக்கும். ஒரு பொதுக் கிணற்றிலிருந்து தீண்டப்படாதவர்கள் தண்ணீர் எடுப்பதை இந்துக்கள் அனுமதிக் காத்தை இங்கு ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதேபால் பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டப்படாத இனத்தைச் சேர்ந்த குழந்தைகளை இந்துக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தீண்டப்படாதவர்கள் பேருந்து களில் பயணம் செய்வதையும் இந்துக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

ஒரே ரயில் பெட்டியில் தங்களுடன் சேர்ந்து தீண்டப்படாதவர்கள் பயணம் செய்வதையும் இந்துக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தீண்டப் படாதவர்கள் அழுக்குப்படாத தூய்மையான உடை உடுத்துவதை யும் இந்துக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தீண்டப்படாதவர்கள் அணிமணிகளி அணிவதையும் இந்துக்கள் அனுமதிக்க மாட்டார் கள், தீண்டப்படாதவர்கள் தங்கள் வீடுகளின் கூரைகளுக்கு ஓடுகள் வேய்வதையும் இந்துக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தீண்டப்படா தவர்களுக்கு நிலம் சொந்தமாக இருப்பதை இந்துக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். தீண்டப்படாதவர்கள் ஆடுமாடுகள் போன்ற கால்நடைகளைச் சொந்தமாக வளர்ப்பதை இந்துக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஓர் இந்து நின்று கொண்டிருக்கும்போது தீண்டப்படாத வர் அமர்ந்திருப்பதை இந்துக்கள் அனுமதிக்கவே மாட்டார்கள். இவையாவும் இந்துக்களிடையே உள்ள சில தீயவர்கள் அங்கு மிங்குமாக செய்யும் அடாவடித்தனங்கள் அல்ல. மாறாக, இவை எல்லாம் தீண்டப்படாதவர்களுக்கு எதிராக இந்து சமூகம் நிரந்தர மாகக் கடைப்பிடிக்கும் சமூக-விரோதப் போக்கின் வெளிப்பாடுகளே ஆகும்.

இந்த விஷயத்தை மேலும் நீட்டித்துச் செல்லத் தேவை யில்லை. இது ஏராளமான குற்றம் குறைகள் நிறைந்த வாதமாகும். அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென்று தீண்டப்படாதவர்கள் முன்வைக்கும் கோரிக்கையை எதிர்ப்பதற்கு இந்த சித்தாந்தம் பயன்படுத்தப்பட்டால் அது மிகவும் மானக்கேடான, பழிப்பிற்கிடமான ஏமாற்றுவித்தையாகவே இருக் கும் என்று கூறினால் போதும் என்று கருதுகிறேன்.

V

மற்றொரு சொத்தையான வாதம் முன்வைக்கப்படுவதை யும் பார்க்கிறோம். தீண்டாமை என்பது மறைந்துபோகக் கூடிய ஒரு நிகழ்வுப் போக்கு, ஆதாலால் தீண்டப்படாதவர்களை இந்தியாவின் தேசிய வாழ்வில் ஒரு தனித்த சக்தியினராக, இனத்தினராக அங்கீ கரிப்பதில் அர்த்தமில்லை, பயனுமில்லை என்பது இந்த வாதத்தின் அடிப்படை. மனிதகுல வரலாற்றில் எல்லாமே மறைந்து போகக் கூடியதுதான், நிரந்தரமானது என்று எதுவுமே இல்லை. தீண்டாமை வேரோடு வேரடி மண்ணோடு அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் இந்தைப் பற்றிப் பரிசீலிக்கலாம். அந்த நிலை வரும் வரை இதுகுறித்து எத்தகைய கவனமும் செலுத்தத் தேவையில்லை. தீண்டாமை ஒழிய வேண்டும், மண்ணோடு மண்ணாக மடிய வேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புகிறோம், நம்புகிறோம்.

ஆனால் அசைக்க முடியாத நம்பிக்கைவாதிகள் என்று தங்களைத் தம்பட்டமடித்துக் கொள்ளும் பேர்வழிகளைப் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சோர்வுற்றிருக்கும் ஒருவருக்கும் உற்சாகமும் உத்வேக மூட்டக்கூடிய ஒரு நம்பிக்கைவாதி ஒரு நல்ல தோழன்தான் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவன் மெய்ந்நிகழ்வுகளுக்கு எப்போதும் ஓர் உண்மையான சான்றாளனாக எப்போதும் இருப்பான் என்று எதிர் பார்க்க முடியாது.

இந்த வாதம் உண்மையில் வாதமே அல்ல. அவர் இந்த வாதத்தின் மாயவலையில் விழக்கூடுமாதலால் அதன் உண்மை சொரூபத்தைத் தோலுரித்துக் காட்டவும், அது எத்தகைய வீணான, பயனற்ற வாதம் என்பதை அம்பலப்படுத்தவும் விரும்புகிறது. இந்த விஷயத்தை எழுப்புபவர்கள் “என்னைத் தொடாதே” என்கிற ரீதி யான தீண்டாமைக்கும் சமூக ரீதியில் தீண்டப்படாதவர்களிடம் பார பட்ச மனோபாவம் காட்டும் தீண்டாமைக்குமுள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை. ‘என்னைத் தொடாதே’ என்னும் ரீதியான தீண் டாமை நகரங்களில் படிப்படியாக மறைந்து கொண்டிருக்கலாம்; எனினுமொ இது குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்று வருகிறதா என்பதில் எனக்கு ஐயமே.

தீண்டப்படாதவர்கள் விஷயத்தில் இந்துக்கள் பாரபட்சம் காட்டும் மனோபாவ ரீதியிலான தீண்டாமை நக ரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி அண்மைக் காலத்தில் மறைந் தொழியப் போவதில்லை என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவ்வாறு பாரபட்ச மனோபாவ ரீதியிலான தீண்டாமை மறையாத்தோடு, ஏராளமான இந்துக்கள் இப்போது வாழ்ந்து வரு கின்ற, இனியும் தொடர்ந்து வாழ்ந்து வரப்போகின்ற பல்லாயிரக் கணக்கான கிராமங்களில் ‘என்னைத் தொடாதே’ என்னும் ரீதியி லான தீண்டாமையும் எண்ணிப் பார்க்கத்தக்க காலத்தில் மறையப் போவதில்லை. இரண்டாயிரம் ஆண்டுக்காலமாக திருக்குமறுக்காக உருத்திரிந்துபோன மனித மனத்தை எதிர்நிலையில் திருப்பவிட முடியாது.

இந்து சமயம் நிலைமைக்கும்த் தக்கபடி தன்னைப் பெரிதும் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய சமயம் என்றும், எல்லாவற்றுக் கும் தன்னை தகவமைத்துக் கொண்டு, எதையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் அதற்கு இருக்கிறது என்றும் கூறும் சில இந்து சமய தீவிர ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். ஒரு சமயத்துக்குள்ள இத்தகைய ஆற்றலை ஒரு மாபெரும் நற்கூறாகப் பலர் கருத மாட்டார்கள் என்பதை நான் நிச்சயமாக அறிவேன். ஏனென்றால் ஒரு குழந்தை சாணத்தைத் தின்று சீர ணிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றுவிட்டது என்பதற்காக யாரேனும் பெருமைப்படுவார்களா? எனினும் இது வேறுவிஷயம். இந்து சமயம் எந்த நிலைமைக்கும் தன்னைத் தகவமைத்துக் கொள்ள முடியும் என்பது முற்றிலும் உண்மையே.

அக்பர் தீன் இலாஹி என்னும் சமய நூலை உருவாக்கினார்; இந்து சமயத்தினுள் அதற்கு ஓர் இடத்தைப் பெற்றுத் தருவதற்காகவும், அதனை இந்து மெய் விளக்க வியலின் ஏழாவது தொகுதியாக அங்கீகரிப்பதற்காகவும் அக்காலத் திய பிராமணர்கள் அல்லஹுப நிடதம் என்னும் இலக்கிய நூலைப் படைத்தார்கள். தகவமைத்துக்கொள்ள இந்து சமயத்துக்குள்ள ஆற்ற லுக்கு இதனை மிகச் சிறந்த உதாரணமாகக் கூறலாம். இந்து சமயம் பல விஷயங்களைத் தன்னுள் ஈர்த்துக் கொள்ள முடியும் என்பது உண்மையே. மாட்டிறைச்சி உண்பதை ஆரம்பத்தில் ஆதரித்துவந்த இந்து சமயம் (அல்லது சரியாகக் கூறுவதானால் ஆதி நாட்களில் இந்து சமயத்தின் சரியான பெயர் பிராமணீயம் என்பதேயாகும்) பௌத்த சமயத்தின் அகிம்சைக் கொள்கையைச் சுவீகரித்துக் கொண்டு சைவ உணவுக் கோட்பாட்டை ஆதரிக்கும் சமயமாயிற்று. எனினும் இந்து சமயத்தால் எக்காலத்திலும் செய்ய இயலாத ஒரு விஷயம் இருக்கிறது.

தீண்டப்படாதவர்களை ஈர்த்துக் கொள்ளும் வகையில் அல்லது தீண்டாமை என்னும் தடைவேலியை அகற்றும் வகையில் அது தன்னைத் தகவமைத்துக் கொள்ளாததே அது. திரு. காந்திக்கு முன்பே பல சீர்திருத்தவாதிகள் அரங்கில் தோன்றி அவர்கள் அனைவரும் தோல்வியே கண்டனர். என்னைப் பொறுத்தவரையில் அவர்களுடைய தோல்விக்கான காரணத்தை மிக எளிதாகக் கூறிவிடலாம். தீண்டப் படாதவர்களைப் பற்றி இந்துக்கள் அஞ்சுவதற்கு எதுவும் இல்லா திருப்பதும், தீண்டாமையை ஒழிப்பதால் அவர்களுக்கு எந்த ஆதாய மும் கிட்டப்போவதில்லை என்பதுமே அந்தக் காரணம். இந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டார்களே. ஏன்? ஏனென்றால் அவ்வாறு செய்யவில்லை என்றால் பௌத்த சமயம் இந்து சமயத் தைத் தூக்கி விழுங்கிவிடும் என்ற பயம் இந்துக்களுக்கு.

இந்துக்கள் அல்லாஹு பனிடதத்தை எழுதினார்கள் என்றால் அக்பர் ஒரு புதிய சமயத்தை உருவாகுவதற்கு உதவுவதன் மூலம் தங்களுக்கு எல்லாவிதத்திலும் ஆதாயம் கிட்டும் என்று அவர்கள் நம்பியதே இதற்குக் காரணம். இந்த நூலை எழுதியவர் அக்பரை மகிழ்வித்து நிறைய பணம் பெற்றார்; அது மட்டுமல்ல; அக்பர் ஒரு புதிய சமயத்தை உருவாக்குவதற்கு உதவுவதன் மூலம், இந்துக்களுக்கு இதுவரை இஸ்லாமிய மன்னர்கள் இழைத்துவந்த கொடுமையை யும் கொடுங்கோன்மையையும் குறைக்க முடியும் என்று அவர் நம்பினார். தீண்டாமை என்னும் சாபத்தீட்டுக்கு, சாபக்கேட்டுக்கு இந்துக்கள் தாமே முன்வந்து முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்ற நம்பிக்கை தீண்டப்படாதவர்களுக்கு இடையே மிகவும் பரந்த மனோ பாவம் படைத்தவர்களுக்கே இல்லை.

தீண்டாமை ஒழித்துக்கட்டப்படுவதால் இந்துக்கள் அஞ்சு வதற்கு எதுவுமில்லை; அவர்கள் பெறக்கூடிய ஆதாயமும் எதுவு மில்லை; ஆனால் உண்மையில் அவர்கள் இழக்கக்கூடியதான் மிகவும் அதிகம். தீண்டாமை அமைப்பு முறையை இந்துக்களுக்கு ஒரு தங்கச் சுரங்கம் என்றே கூறவேண்டும். இதில், 24 கோடி இந்துக் கள் தங்களுக்கு ஏவலர்களாக, எடுபிடிகளாக ஊழியம் செய்வதற்கு 6 கோடி தீண்டப்படாதவர்களைப் பெற்றிருக்கின்றனர்; இந்துக்கள் தங்களது ஆடம்பரத்தையும் பகட்டாவாரத்தையும், ஆர்ப்பாட்டத் குரிய பெருமையையும் செருக்கையும் அகம்பாவத்தையும் கட்டி வளர்க்க இது துணைபுரிகிறது; தனக்குக் கீழே ஓர் அடிமை வர்க்கம் இல்லையென்றால் இத்தகைய மதிப்பை, மேன்மையைக் கட்டிக் காப்பாற்ற முடியாது. இதில், 24 கோடி இந்துக்கள் கட்டாயமாக உழைப்பதற்கென 6 கோடி தீண்டப்படாதவர்களைப் பெற்றுள்ளனர்; இந்தப் பரிதாபத்துக்குரிய மக்களின் துணையற்ற, வகையற்ற நிராதரவான அவலநிலை காரணமாக அவர்கள் மிக அற்பக் கூலிக்கு அல்லது சிலசமயம் கூலியில்லாமலேயே உழைக்க நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.

இதில், 24 கோடி இந்துக்கள் தெருப்பெருக்குதல், துப் புரவு செய்தல் போன்ற அசுத்தமான வேலைகளைச் செய்ய 6 கோடி தீண்டப்படாதவர்களைப் பெற்றிருக்கின்றனர்; இந்தப் பணிகளை எல்லாம் ஓர் இந்து செய்யக்கூடாது, இந்துவல்லாதவர்கள் செய்ய வேண்டும் என்று அவனது சமயம் விதித்துள்ளது; அந்த இந்துவல்லா தவர்கள் வேறு யாருமல்ல, தீண்டப்படாதவர்கள்தான். இதில், 24 கோடி இந்துக்கள் கீழ்மட்ட பணிகளில் அமர்த்தப்படுவதற்கு 6 கோடி தீண்டப்படாதவர்களைப் பெற்றிருக்கின்றனர்; இதனால் இந்துக்களுக்கு ஏகபோகமானவையாகக் கருதப்படும் உயர் பதவிகளுக் கான போட்டியில் தீண்டப்படாதவர்கள் பங்கெடுத்தக்கொள்ள முடியாதப்படித் தடுக்கப்படுகின்றனர். இதில், 24 கோடி இந்துக்கள் 6 கோடி தீண்டப்படாதவர்களை பொருளாதார மந்தத்தின்போது அதிர்ச்சி தாங்கிகளாகவும், பொருளாதார ஏற்றத்தின்போது தேவை யற்ற சுமையாகவும் நடத்துகின்றனர்; இதன் காரணமாக பொரு ளாதார மந்தத்தின்போது தீண்டப்படாதவன்தான் முதலில் வேலை யிலிருந்து விலக்கப்படுகிறான், இந்து கடைசியாகத்தான் வேலை இழக்கிறான்; ஆனால் அதேசமயம் பொருளாதார ஏற்றத்தின்போதோ இந்துதான் முதலில் வேலைவாய்ப்பு பெறுகிறான், தீண்டப்படாத வனுக்கோ கடைசியில்தான் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.

தீண்டாமை என்பது ஒரு சமய விதிமுறை என்று பலர் நம்புகின்றனர். இது உண்மைதான். ஆனால் இது ஒரு வெறும் சமய விதிமுறை என்று மட்டுமே கருதுவது தவறு. தீண்டாஅமை சமய விதிமுறைக்கும் அப்பாற் செல்லுகிறது. அது அடிமைத்தனத்தையும் விட மிக மோசமான பொருளாதார விதிமுறையாகவும் உள்ளது. எது எப்படியிருந்தாலும் அடிமை முறையில் எசமான் தனது அடிமைக்கு உணவு, உடை, உறைவிட வசதிகளைச் செய்து தரவும், அவனை நல்ல நிலைமையில் பராமரிக்கவும் கடமைப்பட்டிருக்கிறான்; இல்லையேல் அடிமையின் சந்தை விலை வீழ்ச்சியடைந்துவிடும். ஆனால் தீண்டாமை முறையிலோ அப்படியல்ல; தீண்டப்படாத வனைப் பராமரிக்கும் பொறுப்பு எதையும் இந்து ஏற்றுக்கொள்வதில்லை.

ஒரு பொருளாதார அமைப்பு முறை என்ற வகையில் தீண்டாமையானது எத்தகைய கடமைப் பொறுப்புமின்றி இஷ்டம் போல் சுரண்டுவதற்கு அனுமதிக்கிறது. எனவே, தீண்டாமை என்பது மட்டுப்படுத்தப்படாத ஒரு சுரண்டல் முறை மட்டுமல்ல, ஒரு கட்டுப் படுத்தப்படாத சுரண்டல் முறையுமாகும். இதனைக் கண்டிக்கக் கூடிய சுதந்திரமான பொதுஜன அபிப்பிராயம் இல்லாதிருப்பதும், அதனைத் தடுத்து நிறுத்தும் நேர்மை வாய்ந்த நிர்வாக அமைப்பு இல்லாதிருப்பதுமே இதற்குக் காரணம். பொதுஜன அபிப்பிராயத் துக்கு வேண்டுகோள் விடுப்பதற்கும் வழியில்லை; ஏனென்றால் பொதுஜன அபிப்பிராயம் என்பது சுரண்டும் வர்க்கத்தைச் சேர்ந்த இந்துக்களின் அபிப்பிராயமே ஆகும்; இந்த அபிப்பிராயம் சுரண் டலை ஆதரிப்பது முற்றிலும் இயல்பே. காவல் துறையோ அல்லது நீதித்துறையோ தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வதற்கும் வாய்ப்பில்லை; ஏனெனில் இவர்கள் எல்லோரும் இந்துக்கள் வட்டா ரத்திலிருந்து வந்தவர்கள்; சுரண்டல்காரர்களுக்கே அவர்கள் பச்சை விளக்குக் காட்டுகின்றனர்.

தீண்டாமை விரைவில் மறைந்துவிடும் என்று நம்புபவர் கள் இந்துக்களுக்கு அது வழங்கும் பொருளாதார அனுகூலங்களைக் கருத்திற் கொண்டதாகத் தெரியவில்லை. தன்னைப் பீடித்துள்ள தீண் டாமை என்னும் அவக்கேட்டை ஒழித்துக்கட்டுவதற்கு தீண்டப்படாத வனால் எதுவும் செய்ய இயலாது. அவன் தனிப்பட்ட முறையில் இழைக்கும் எந்தத் தவறாலும் இது தோன்றுவதில்லை. தீண்டாமை என்பது இந்துவிடம் குடிகொண்டிருக்கும் ஒரு மனோபாவம். ஆத லால் தீண்டாமை மறைய வேண்டுமானால், இந்து மனம் மாற வேண்டும். அவ்வாறு அவன் மாறுவானா?

இந்துவுக்கு மனச்சான்றுக்கு என்று எதுவும் இருக்கிறதா? இந்தக் கயமைத்தனமான ஒழுக்கக்கேட்டை, அக்கிரமத்திலும் அக்கிரமான இந்த அநீதியை எதிர்த்து அவன் என்றேனும் தீங்குகள் போல் மனம் குமுறி வெடித்துக் கொதித்தெழுந்தது உண்டா? தனது நியாய மான வெஞ்சினத்தை வெளிப்படுத்தியது உண்டா? தீண்டாமையை ஒரு பெரும் அநீதியாக, பழிச்செயலாகக் கருதும் அளவுக்கு அவன் மாறிவிட்டதாகவே வைத்துக்கொள்வோம்; மனிதனை கடவுளின் நிலைக்கு உயர்த்தும் அளவுக்கு அவன் நேர்மை உணர்வைப் பெற்று விட்டான் என்றே வைத்துக்கொள்வோம்; அப்போது அவன் தீண்டாமை அளிக்கும் பொருளாதார, சமூக ஆதாயங்களை விட்டுக் கொடுக்க இணங்குவானா? ஓர் இந்துவுக்கு நீதி நேர்மையின் பால்பட்ட மனச்சான்று இருக்கிறது.

அநீதியை அழித்தொழிப்பதற்கு ஓர் அறப்போரைத் தொடுக்கும்படி தார்மிக ஆவேசத்துடன் அவனை ஆர்த்தொழச் செய்யும் முடிவுக்கு வருவதை வரலாறு எவ்வகையிலும் நியாயப்படுத்தாது என்றே அஞ்சுகிறேன். அறவியலும் பொருளியலும் முரண்படும்போது, பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் போது வெற்றி எப்போதுமே பொருளியலின் பக்கமே இருந்து வந்திருப்பதை வரலாறு காட்டுகிறது. அதிகார நலக் கும்பல் களை நிர்ப்பந்தப்படுத்தக்கூடிய போதிய வலுமிக்க சக்திகள் இருந்தா லொழிய இந்தக் கும்பல்கள் தாமே முன்வந்து தமது அதிகாரங் களைக் கைவிட்டதை நாம் ஒருபோதும் அறிந்ததில்லை. தீண்டப் படாதவர்களால் இத்தகைய ஆற்றலை உருவாக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்கள் வறுமையிலும் வெறுமையிலும் கல்லாமையிலும் இல்லாமையிலும் உழன்று சிதறிக் கிடக்கின றனர். அவர்கள் தலைதூக்கத் துணிந்தால் அவர்களை எளிதாக ஒடுக்கி விட முடியும்.

இந்த அடிப்படையில் நோக்கும்போது, சுயராஜ்யம் இந்துக் களை மேலும் வலிமைமிக்கவர்களாகவும், தீண்டப்படாதவர்களை ஆதரவற்றவர்களாகவுமே ஆக்கும். மேலும், சுயராஜ்யம் இந்துக் களுக்கு ஏராளமான, தாராளமான பொருளாதார அனுகூலங்களை அளிக்கும் என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, சுய ராஜ்யம் தீண்டாமையை ஒழித்துக் கட்டுவதற்குப் பதிலாக அதற்குப் புத்துயிர் அளிக்கவே செய்யும் என்பது தெளிவு. எனவே, தீண்டாமை மறைந்து வருகிறது என்று கூறுவது வெறும் கட்டுக்கதையே தவிர, இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய்யே தவிர வேறல்ல. அரசிய லமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் போன்ற தீண்டப்படாதவர்கள் முன் லெடுத்துக் கொள்வதும் இன்றைய எதார்த்தங்களையும் எதிர்கால எதார்த்தங்களையும் புறக்கணிப்பதும் வடிகட்டிய முட்டாள்தனமே ஆகும், அறிவு மழுக்கமே ஆகும்.

("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 8)

Pin It