“கிறிஸ்தவ மதப் பிரசாரமா?” என்ற மகுடமிட்டு, சென்னைப் பார்ப்பனமித்திரன் சென்ற 5-7-26-ல் குறிப்பொன்றெழுதி, சென்னைக் கடற்கரையில் ஸ்ரீமான் ஆரியா இந்து மத அநுஷ்டானங்களைப் பற்றியும், இந்து தெய்வங்களைப் பற்றியும் குறிப்பாக விக்ரஹ ஆராதனையைப் பற்றியும் தூஷித்துப் பேசியதாகவும், அவர் பேச்சைக் கேட்டு ஜஸ்டிஸ் கட்சியினர் ஆனந்தங் கொண்டதாகவும், இத்தகைய கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்ய ஸ்ரீமான் ஆரியா தங்களோடு காங்கிரசிலிருந்த காலத்தில் தைரியங் கொள்ளவில்லையென்றும், இந்து மதத்தை ரட்சிக்கு முகத்தான் எச்சரிக்கை செய்திருக்கிறான். இக் குறிப்பில் அயோக்கியத்தனமும் சூழ்ச்சியும் ததும்பி வடிகிறது. யோக்கியமானவன் ஆரியாவின் பேச்சுக்களை முற்றிலும் பிரசுரித்து, தகுந்த ஆதாரத்தோடு கண்டித்திருப்பான். அவ்வாறின்றி “தூஷித்தார், மதப் பிரசாரம் செய்தார், ஆனந்தங் கொண்டனர், சட்டிக் கூழுக்கு மதத்தைப் புறக்கணித்தது யார்?’’ என்று எழுதி பொதுவாகக் கிறிஸ்தவ மதத்தின் பேரிலும், சிறப்பாக ஆரியாவின் பேரிலும் பொது மக்களிடையே துவேஷத்தை விளைவிக்கப் பார்ப்பது எவ்வளவு அயோக்யத் தனமும் சூழ்ச்சியுமானதென்று கவனியுங்கள்.

மேலும், இந்து மதமானது போலி அநுஷ்டானங்களிலும், வெறும் விக்ரஹங்களிலும் அடங்கிக் கிடக்கவில்லை. போலி வேடங்களை ஒருவர் கண்டிப்பதாலேயே இந்து மதங் கவிழ்ந்து கிறிஸ்துவ மத மோங்கிவிடாது. இன்று ஆரியாவைக் கண்டிக்கும் இதே பார்ப்பனன், இன்று இந்துப் பறையனாயிருக்கும் கோவிந்தனை பக்கத்தில் வராதே என்று விரட்டுகிறான். அதே கோவிந்தன் நாளைய தினம் மோசஸ் ஆகிவிட்டால் கைலாகு கொடுப்பான். ஆகவே கிறிஸ்தவ மதத்தை இப் பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்களா? அல்லது ஸ்ரீமான் ஆரியா ஆதரிக்கிறாரா? இதிலிருந்து இந்து மதத்தைப் பரிபாலிப்பதாகச் சொல்லும் இப்பார்ப்பனனுடைய வாய் வேதாந்தத்தையும் அநுஷ்டானத்தையும் பார்த்தீர்களா? இவ்விதப் பார்ப்பன அநுஷ்டானங்களைஆரியா கண்டித்திருந்தால் அது இந்து மதத்தை சிலாக்கியப்படுத்தியதே ஆகும்.

(குடி அரசு - கட்டுரை - 11.07.1926)

Pin It