thalayar_aruvi    எல்லா ஆறும் கோம்பையிலே
    எலிகுடிக்க தண்ணியில்ல
    காமாட்சி கோம்பையில கல்லூத்து
    பறியிதே

என்ற நாட்டுப்புறப்பாடல் இப்பகுதியில் பாடப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது இந்த அருவியில் மட்டும் தண்ணீர் அளவுக்கு அதிகமாக விழுந்துள்ளது. அதனால் இப்பகுதியில் இப்பாடல் இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புக்குரியது தலையார் அருவி.

 தேவதானப்பட்டி அருகே அமைந்துள்ளது தலையார் அருவி. தென்னிந்தியாவிலேயே உயரமான அருவி இந்த அருவிதான். இந்த அருவியின் உயரம் 297 மீட்டர் ஆகும். இந்தியாவில் மூன்றாவது உயரமான அருவியும் இந்த அருவிதான். தூரத்திலிருந்து பார்ப்பதற்கு எலிவால் போன்ற தோற்றம் உடையதால் இதனை எலிவால் அருவி என அழைப்பார்கள். தேவதானப்பட்டியிலிருந்து மஞ்சளார் அணைப்பகுதி பகுதி வழியாக சுமார் 10 கி.மீ. நடந்து சென்றால் இந்த அருவியினை அடையலாம். இந்த அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அருவியில் தண்ணீர் விழும் இடத்தை பார்க்க இயலாது. அருவிக்கு செல்லும்போது 4 கி.மீ. தூரத்திலேயே சுற்றுலா பயணிகளை அதன் சாரல் நனைத்துவிடும்.

இங்குள்ள அம்மா மெச்சு என அழைக்கப்படும் இடத்தில் அருள்மிகு ஸ்ரீமூங்கிலனை காமாட்சியம்மன் பாதம் பட்டதாக இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். அதன் அருகில் தலையார் பாவா என்ற முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சூபிகளின் கல்லறையும் உள்ளது. கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் காட்ரோட்டிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் டம்டம் பாறை என்ற இடத்தில் இருந்து இந்த அருவியை ரசித்து மகிழ்வார்கள். இந்த அருவிக்கு தலையார், மூலையார், வறட்டார் போன்ற ஆறுகள் இணைந்து மஞ்சள் ஆறாக வருகிறது. இந்த ஆற்றை வழிமறித்து அணை கட்டியுள்ளார்கள். அந்த அணை மஞ்சளார் அணை என அழைக்கப்படுகிறது.

Pin It