(The Inter - State Water Disputes Act, 1956) / (சட்டம் எண். 33/ 1956) / இந்தச் சட்டத்தின் நோக்கங் களுக்கும் காரணங்களுக்குமான விவரக் குறிப்பு / (Statement of objects and Reasoms) / திருத்தச் சட்டம் (Amending Act 4507 1980)

மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுகள் சட்டம், 1956, மாநிலங்களுக்கிடையிலான ஆறுகள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் சம்பந்தமான தகராறுகளில் தீர்ப்பு வழங்குவதற்கு, தீர்ப்பாயங்களை ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது. தீர்ப்பாயத்தின் முடிவு இறுதியானதாகும். அது வழக்கின் இருதரப்பினர்களையும் கட்டுப்படுத்தும். வழக்கின் இருதரப்பினரும் அதற்குச் செயலாக்கம் கொடுக்கவேண்டும்.

மாநிலங்களுக்குக்கிடையிலான தண்ணீர்த் தகராறுகள் சட்டம், (சட்டம் 33 / 1956)

28 ஆக்ஸ்ட்டு, 1956

மாநிலங்களுக்கிடையிலான ஆறுகள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் சம்பந்தமான தகராறுகளில் தீர்ப்பு வழங்குவதற்கு வழி செய்யும் ஒரு சட்டமாகும் இது.

இந்தச் சட்டம் இந்தியக் குடியரசின் ஏழாம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது.

பிரிவு 1. குறுந்தலைப்பும் அளாவுகையும் :

(1) இந்தச் சட்டம், மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுகள் சட்டம், 1956 என்று அழைக்கப் பெறும்.

(2) இந்தச் சட்டம் இந்தியா முழுமைக்கும் உரியதாகும்.

வழக்குத் தீர்வு

இந்தச் சட்டம், இந்திய அரசியலைப்புச் சட்ட உறுப்பு 262-ஆல் இயற்றப்பட்டதாகும். இந்திய அரசியலைப்புச் சட்டம், பட்டியல் 1, பதிவு 56-ஆல் இயற்றப்பட்டதல்ல.

- AIR 1992 SC 522 (523)

பிரிவு2. சொற்பொருள் விளக்கங்கள்

வேறு வகையில் பொருள் விளக்கம் தரப்படுவது அவசியமாக இருந்தாலன்றி, மற்றபடி பின்வரும் சொற்கள் பின்வரும் பொருளையே கொண்டிருக்கும்.

(அ) “வகுத்துரைக்கப்பட்டது” என்பது, இந்தச் சட்டத்தின்கீழ் இயற்றப்பட்ட விதிகளால் வகுத்துரைக்கப் பட்டது என்று பொருள்படும்.

(ஆ) “தீர்ப்பாயம்” என்பது, பிரிவு 4- இன்கீழ் ஏற்படுத்தப்பட்ட தண்ணீர்த் தகராறுகள் தீர்ப்பாயம் என்று பொருள்படும்.

(இ) “தண்ணீர்த் தகராறு” என்பது, பின்வருபவை தொடர்பாக, இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மாநில அரசாங்கங்களுக்கிடையிலான தகராறைக் குறிக்கும்.

(i) மாநிலங்களுக்கிடையிலான ஆறுகளின் தண்ணீரைப் பயன்படுத்துவது, வழங்குவது அல்லது கட்டுப்பாடு சம்பந்தமானது. அல்லது ஆற்றுப் பள்ளத் தாக்கைப் பயன்படுத்துவது சம்பந்தமான தகராறு; அல்லது

(ii) அத்தகைய தண்ணீரைப் பயன்படுத்துவது வழங்குவது, அல்லது கட்டுப்படுத்துவது சம்பந்தமான உடன்படிக்கைக்கு விளக்கம் அளிப்பது; அல்லது அத்தகைய உடன்படிக்கையை நிறைவேற்றுவது; அல்லது

(iii) பிரிவு 7- இல் அடங்கியுள்ள தடைக்கு முரணாக, தண்ணீர்த் தீர்வையை விதிப்பது.

பிரிவு 3. தண்ணீர்த் தகராறுகளை மாநில அரசாங்கங்கள் முறையீடு செய்தல் :

ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கு மிடையில் தண்ணீர் சம்பந்தமாகப் பிரச்சினை எழுந்தால், அதில் அக்கறை கொண்ட மாநிலமோ அல்லது அந்த ஆற்றுப் பகுதியில் வாழ்பவர்களோ, அந்தப் பிரச்சினை சம்பந்தமாக முறையீடு செய்யலாம்.

(அ) மாநிலங்களுக்கிடையிலான ஆறு அல்லது ஆற்றுப் பள்ளத்தாக்குச் சம்பந்தமாக, ஒரு மாநிலத்தைப் பாதிக்கும் வகையில் மற்றொரு மாநிலம் ஏதேனும் நிறைவேற்று நடவடிக்கை எடுத்தாலோ, அல்லது சட்டம் இயற்றினாலோ, அல்லது சட்டமியற்றுவதாக இருந்தாலோ; அல்லது

(ஆ) மாநிலங்களுக்கிடையிலான ஆற்றுநீரைப் பயன்படுத்துவது, வழங்குவது அல்லது கட்டுப்படுத்துவது சம்பந்தமான, அதிகாரங்களை மற்றொரு மாநிலமோ அல்லது அதிகார அமைப்போ செலுத்தத் தவறியிருந் தாலோ; அல்லது

(இ) மாநிலங்களுக்கிடையிலான ஆற்று நீரைப் பயன்படுத்துவது, வழங்குவது அல்லது கட்டுப்படுத்துவது சம்பந்தமான உடன்படிக்கையை மற்றொரு மாநிலம் நிறைவேற்றத் தவறியிருந்தாலோ,

ஒரு மாநில அரசாங்கம் தண்ணீரில் பிரச்சினையை ஒரு தீர்ப்பாயத்திற்கு (நடுவர் மன்றத்திற்கு) அனுப்பி வைத்துத் தீர்ப்பு வழங்கிடச் செய்வதற்கு, மத்திய அரசாங்கத்தை உரியமுறையிலும் வகையிலும் கேட்டுக் கொள்ளுதல் வேண்டும்.

வழக்குத் தீர்வு

மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு, பிரிவு 3 - இன்கீழ் இசைவுத் தீர்வுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. நீதிமன்றம் என்பதில் உச்சநீதிமன்றமும் உள்ளடங்கும். அந்தத் தண்ணீர்த் தகராறில் உச்சநீதி மன்றத்திற்கும் அதிகார வரம்பு இல்லை. மனுவில் கோரியுள்ள பாத்தியத்தை முடிவு செய்யத் தீர்ப்பாயத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

- AIR 1990 SC 1316 (1319)

பிரிவு 4. தீர்ப்பாய அமைப்பு:

(1) தண்ணீர்த் தகராறு சம்பந்தமாக, பிரிவு 3 - இன்கீழ் மாநில அரசாங்கத்திடமிருந்து வேண்டுகோள் ஒன்றைப் பெற்றிருக்கின்ற மத்திய அரசாங்கம், அந்தத் தண்ணீர்த் தகராறைச் சமாதான முறையில் தீர்க்கமுடியாது என்று கருதினால், அந்தத் தண்ணீர்த் தகராறு சம்பந்தமாகத் தீர்ப்பு வழங்க மத்திய அரசாங்கம், தனது அரசுப்பதிவிதழில் அறிவிப்பு ஒன்றையும் செய்து, தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

(2) அந்தத் தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) ஒரு தலை வரையும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கும். இவர்கள் நியமிக்கப்படும் காலத்தில் உச்ச நீதிமன்ற நீதியரசர்களாகவோ அல்லது உயர்நீதிமன்ற நீதியரசர் களாகவோ இருப்பார்கள். இவர்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசர் நியமிப்பார்.

(3) இந்தத் தீர்ப்பாயத்தில் (நடுவர் மன்றத்தில்) நடைபெற்றுவரும் வழக்கு நடைமுறையில் உதவுவதற்காக, இந்தத் தீர்ப்பாயர் (நடுவர் மன்றத்திற்கு) இரண்டு தீர்ப்புதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

வழக்குத் தீர்வு

தண்ணீர்த்தகராறை மத்திய அரசாங்கம் சமரசமாகத் தீர்த்து வைக்க முடியாத நிலையில் உள்ளது என்பதனை உச்சநீதிமன்றம் உணர்ந்துகொண்டது. அதனால், தீர்ப்பாயம் ஒன்றை அமைப்பது மத்திய அரசாங்கத்தின் கடப்பாடாக இருக்கிறது. பிரிவு 4 - இல் குறிப்பிட்டுள்ள படி அந்தத் தீர்ப்பாயத்திற்கு (நடுவர் மன்றத்திற்கு) இந்தத் தண்ணீர்த் தகராறு அனுப்பிவைக்கப்படும். ஆகையால், உரிய தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) ஒன்றை ஏற்படுத்தவும், அதனிடம் இந்தத் தண்ணீர்த் தகராறை அனுப்பிவைத் திடவும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசாங்கத்திற்குக் கட்டளையிடுகிறது.

 - AIR 1990 SC 1316 : (1990) 2 JT 397

பிரிவு 5. தண்ணீர்த் தகராறுகளில் தீர்ப்பு :

(1) பிரிவு 4-இன்கீழ் தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும் பொழுது, மத்திய அரசாங்கம், பிரிவு 8- இல் அடங்கிய தடைகளுக்கு உட்பட்டு, தண்ணீர்த் தகராறு, மற்றும் அதோடு தொடர்புடையதாகத் தோன்றுகின்ற விடயத்தை, தீர்ப்புக்காகத் தீர்ப்பாயத்திற்கு (நடுவர் மன்றத்திற்கு) அனுப்பிவைத்தல் வேண்டும்.

(2) தீர்ப்பாயத்திற்கு (நடுவர் மன்றத்திற்கு) அனுப்பி வைக்கப்பட்ட விடயத்தை, தீர்ப்பாயம் ஆய்வு செய்து, அதனால் கண்டறியப்பட்ட முடிவு சம்பந்தமான அறிக்கையை மத்திய அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டும். மற்றும் அந்த விடயங்கள் குறித்து, தீர்ப்பு வழங்க வேண்டும்.

(3) தீர்ப்பாயத்தின் (நடுவர் மன்றத்தின்) தீர்ப்பைப் பரிசீலித்த மத்திய அரசாங்கமோ அல்லது மாநில அரசாங்கமோ தீர்ப்பில் அடங்கியவைகுறித்து ஏதேனும் விளக்கமளிக்க வேண்டுமென்றாலோ அல்லது வழி காட்டுதல் வேண்டுமென்றாலோ, அத்தகைய விளக்கத்தை அல்லது வழிகாட்டுதலைப் பெறுவதற்குத் தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) தீர்ப்பு வழங்கியதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அந்த விடயத்தை மறுபடியும் மத்திய அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கம் தீர்ப்பாயத்திற்கு அனுப்பிவைத்தல் வேண்டும். அவ்வாறு அனுப்பப்பட்ட அந்த வழக்கில், தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) தக்கதெனக் கருதும் விளக்கம் அல்லது வழிகாட்டுதலை, மீண்டும் ஒரு அறிக்கையாக, மத்திய அரசாங்கத்திற்கு அனுப்புதல் வேண்டும். தீர்ப்பாயத்தின் (நடுவர் மன்றத்தின்) தீர்ப்பு, அதற்கேற்ப மாற்றியமைக்கப்படும்.

(4) ஒரு கருத்துக் குறித்து, தீர்ப்பாயத்தின் (நடுவர் மன்றத்தின்) உறுப்பினர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் முடிவுப்படி தீர்க்கப்படும்.

வழக்குத் தீர்வுகள்

1. பிரிவு 5 (2) - இன் பொருள் வரையறைக்கு ஏற்ப தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) தீர்ப்பு வழங்கியிருக்கும்போது, அது இருதரப்பினர்களையும் கட்டுப்படுத்தும் வகையிலும், அதற்குச் செயலாக்கம் கொடுக்கும் வகையிலும், அதனை, பிரிவு 6 - இன்கீழ் மத்திய அரசாங்கத்தின் அரசுப் பதிவிதழில் வெளியிட வேண்டும்.

- AIR 1992 SC 522 (558)

2. தீர்ப்பாயத்தால் (நடுவர் மன்றத்தால்) வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவை அல்லது பரிகாரத்தை இரு தரப்பினர்களும் நிறைவேற்றுதல் வேண்டும். காவிரி தண்ணீர்த் தகராறுகள் நடுவர்மன்றத்தால், 25-7-91-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவானது, நடுவர் மன்றத்தின் அறிக்கையும் தீர்ப்பும் ஆகும்.

- AIR 1992 SC 522 (558)

பிரிவு 5-அ. காலியிடங்களை நிரப்புதல்:

(தற்காலிக வருகையின்மையில்லாத மற்றைய சந்தர்ப்பங்களில்), தீர்ப்பாயத்தின் (நடுவர் மன்றத்தின்) தலைவர் அல்லது உறுப்பினர் பதவி இடங்களில் காலியிடம் ஏற்படுகின்றபோது, பிரிவு 4, உட்பிரிவு (2)-இன் வகையங்களுக்கேற்ப, இதன் பொருட்டு, இந்தியத் தலைமை நீதியரசரால் நியமிக்கப்பட்ட ஒரு நபரைக் கொண்டு அந்தக் காலியிடம் நிரப்பப்படும். அந்தக் காலியிடம் நிரப்பப்பட்ட பிறகு தீர்ப்பாயத்திற்கு (நடுவர் மன்றத்திற்கு) அனுப்பிவைக்கப்பட்ட விடயம் மீண்டும் ஆய்வு செய்யப்படும். காலியிடம் ஏற்பட்டபோது, வழக்கு என்ன நிலையில் இருந்ததோ அந்த நிலையிலிருந்து, காலியிடம் நிரப்பப்பட்ட பிறகு வழக்குத் தொடங்கும்.

குறிப்பு

மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுகள் (திருத்தம்) சட்டம், 1968 (35/1968), பிரிவு 4 (22.8.1968) -ஆல் இணைக்கப்பட்டது.

பிரிவு 6. தீர்ப்பாயத்தின் (நடுவர் மன்றத்தின்) தீர்ப்பை வெளியிடுதல்:

நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசாங்கம், மத்திய அரசாங்க அரசுப் பதிவிதழில் வெளியிடுதல் வேண்டும். அந்தத் தீர்ப்பு, தண்ணீர்த் தகராறுக்குரிய இருதரப்பினரையும் கட்டுப்படுத்தும், இருதரப்பினரும் அந்தத் தீர்ப்புக்குச் செயலாக்கம் கொடுக்க வேண்டும்.

வழக்குத் தீர்வு

கர்நாடகா காவிரிக்கரை பாசனப் பாதுகாப்பு அவசரச் சட்டம் என்பது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். அது, இந்திய அரசியலமைப்புச் சட்டம், உறுப்பு 262-க்கு நேரிடையாக முரண்படுகிறது. ஆகையால் கர்நாடகா நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவோ அல்லது இடைக்காலப் பரிகாரமோ பிறப்பிப்பதற்கு அதிகார மில்லை. அது, பிரிவு 6-இன்படி ஒரு தீர்ப்பாகாது. அதனால், அது இருதரப்பினரையும் கட்டுப்படுத்தாது.

- AIR 1992 SC 522 (550)

பிரிவு 6-அ. தீர்ப்பாயத்தின் (நடுவர் மன்றத்தின்) தீர்ப்பை நிறைவேற்றுவதற்குத் திட்டங்களைப் புனைவதற்கான அதிகாரம்:

(1) பிரிவு 6-இன் வகையங்களுக்குப் பாதிப்பு இல்லாமல் மத்திய அரசாங்கம், மத்திய அரசாங்க அரசுப்பதிவிதழில் அறிவிப்புச் செய்து, தீர்ப்பாயத்தின் (நடுவர் மன்றத்தின்) தீர்ப்புக்குச் செயலாக்கம் (நககநஉவ) கொடுக்கும் வகையில், திட்டம் அல்லது திட்டங்களை வனையலாம். அதன் மூலம் அனைத்து விடயங்களுக்கும் அவசியமான வகையங்களை உருவாக்கலாம்.

(2) உட்பிரிவு (1) - இன்கீழ் வனையப்பட்ட திட்டம், பின்வருவனவற்றுக்கு வழிவகை செய்யலாம்.

(அ) நடுவர் மன்றத் தீர்ப்பை அல்லது கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக, அதிகார அமைப்பை ஏற்படுத்தலாம். (அது குறித்துரைக்கப்பட்ட ஒரு அதிகார அமைப்பாகவோ அல்லது ஒரு குழுவாகவோ அல்லது மற்ற அமைப்பாகவோ இருக்கலாம்.).

(ஆ) அதிகார அமைப்பின் ஒருங்கிணைப்பு, ஆள்வரை, அதிகாரங்கள், செயற்பாடுகள், பதவிக்காலம், பணி நிபந்தனைகள், பின்பற்றப்படவேண்டிய நடைமுறை, அதிகார அமைப்பின் உறுப்பினர்கள் பதவியிடங்களில் காலியிடம் ஏற்பட்டால், அதனை நிறைவுசெய்வதற்கான வகைமுறைகளுக்கு வழிவகை செய்யலாம்.

(இ) அந்த அதிகார அமைப்பின் கூட்டங்களை ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்தபட்சம் எத்தனை முறை கூட்டவேண்டும். அந்தக் கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் எத்தனைபேர் இருக்கவேண்டும் என்பதற்கும் மற்றும் அதற்கான நடைமுறைக்கும் வழிவகை செய்யலாம்.

(ஈ) அதிகார அமைப்பால், நிலைக்குழு, நியமனக் குழு அல்லது மற்றைய குழுக்களை நியமனஞ் செய்யப்படுவதற்கு வழிவகை செய்யலாம்.

(உ) அதிகார அமைப்பால், செயலாளர், மற்றும் மற்றைய ஊழியர்களைப் பணியமர்த்திக் கொள்வதற்கு வழிவகை செய்யலாம். அத்தகைய ஊழியர்களின் சம்பளம், படித்தொகைகள் மற்றும் பணிநிபந்தனைகள் தொடர் பாகவும் வழிவகை செய்யலாம்.

(ஊ) அதிகார அமைப்பால் நிதியமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கும், அந்த நிதியத்தில் தொகைகள் செலுத்தப்படுவதற்கும், அந்த நிதியத்தை எந்தச் செலவுக்குப் பயன்படுத்தலாம் என்பதற்கும் வழிவகை செய்யலாம்.

(எ) அதிகார அமைப்பால் கணக்குகள் எவ்வாறு பராமரிக்கப்படவேண்டும்.

(ஏ) அதிகார அமைப்பின் நடவடிக்கைகள் சம்பந்தமாகச் சமர்ப்பிக்கப்படும் ஆண்டறிக்கை.

(ஐ) மறுஆய்வுக்கு உட்பட்ட அதிகார அமைப்பின் முடிவுகள்.

(ஒ) மறு ஆய்வு செய்வதற்காக ஏற்படுத்தப்படும் குழு; மற்றும் அந்தக் குழு பின்பற்ற வேண்டிய நடைமுறை.

(ஓ) நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அல்லது கட்டளை களை நிறைவேற்றுவதற்கு அவசியமான அல்லது தேவையான மற்ற விடயங்கள்;

ஆகியவை சம்பந்தமாகவும் வழிவகைசெய்யலாம்.

(3) நடுவர் மன்றத் தீர்ப்புக்குச் செயலாக்கம் கொடுப் பதற்காக, ஏற்படுத்தப்படும் அதிகார அமைப்புக்காக, உட்பிரிவு (1) - இன்கீழ் வனையப்பட்ட திட்ட வகையங்களில், தீர்ப்புகள் மற்றும் தொடர்புடைய மற்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப, மத்திய அரசாங்கம், அத்தகைய தன்மையிலான ஆள் வரையையும், அதிகாரங்களையும் மற்றும் செயற்பாடுகளையும் அந்த அதிகார அமைப்புக்கு அளிக்கலாம். அத்தகைய திட்டத்தில், அந்த அதிகார அமைப்பானது, அந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட பெயரில், சொத்தை எடுக்கவும், வைத்திருக்கவும், பைசல் செய்யவும், ஒப்பந்தங்களைச் செய்யவும், வழக்குத் தொடுக்கவும், எதிர்வழக்காடவும், மற்றும் தனது ஆள்வரையையும், அதிகாரங்களையும், செலுத்துவதற்கும் செயற்பாடுகளைச் செய்வதற்கும் அவசியமானதும் சரியானதுமான அத்தகைய பிற செயல்களையும் செய்யலாம்.

(4) மத்திய அரசாங்கத்தின் முன் அனுமதியுடன், திட்ட நோக்கங்களுக்குச் செயலாக்கம்.

கொடுக்கும் ஒழுங்குமுறையை ஏற்படுத்துவதற்கான அதிகாரத்தை, திட்ட வரையானது, இந்த அதிகார அமைப்புக்கு வழங்கலாம்.

(5) உட்பிரிவு (1) - இன்கீழ் புனையப்பட்ட திட்டத்தை, மத்திய அரசாங்கம், மத்திய அரசாங்க அரசுப்பதிவிதழில் அறிவிப்புக் கொடுத்த பின்னர், அந்தத் திட்டத்தில் எதனையும் இணைக்கவோ அல்லது திருத்தம் செய்யவோ அல்லது வேறுபடுத்தவோ செய்யலாம்.

(6) (இந்தச் சட்டம் அல்லது) அப்போது நடைமுறையிலுள்ள வேறு எந்தச் சட்டத்தில் என்ன கூறப்பட்டிருப்பினும்; அல்லது இந்தச் சட்டம் அல்லாத வேறு சட்டத்தால் செல்லாக்கத்திலுள்ள ஆவணத்தில் என்ன கூறப்பட்டிருப்பினும், இந்தப் பிரிவின்கீழ்ப் புனையப்பட்ட திட்டமே செல்லுபடியாகும்.

(7) திட்டம் ஒன்றின் கீழ்ப் புனையப்பட்ட ஒவ்வொரு திட்டத்தையும் ஒழுங்குமுறையையும், அது புனையப் பட்டவுடன் கூடிய விரைவில் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும் தாக்கல் செய்தல் வேண்டும். நாடாளுமன்றத்தின் அமர்வு மொத்தத்தில் முப்பது நாட்களைக் கொண்ட ஒருகாலஅளவில் இருத்தல் வேண்டும். அது ஒரே அமர்வாகவோ அல்லது அடுத்தடுத்து வரும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட அமர்வுகளாகவோகூட இருக்கலாம். மேலே சொல்லப்பட்ட அடுத்தடுத்த அமர்வுகள் முடிவடைவதற்கு முன்னர், அந்தத் திட்டம் அல்லது ஒழுங்குமுறையில், திருத்தம் எதனையும் செய்வதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புக்கொண்டால், அந்தத் திருத்தத்தைச் செய்த பிறகே அந்தத் திட்டம் அல்லது ஒழுங்குமுறை நடைமுறைக்கு வரவேண்டும். அந்தத் திட்டம் அல்லது ஒழுங்கு முறை செய்யப்படக்கூடாது என்று நாடாளு மன்றத்தின் இருஅவைகளும் ஒப்புக்கொண்டால், அந்தத் திட்டம் அல்லது ஒழுங்குமுறை நடைமுறைக்கு வருதல் கூடாது. செய்யப்படும் திருத்தம் அல்லது நீக்கம் எதுவும், ஒரு திட்டம் அல்லது ஒழுங்குமுறையின்கீழ் முன்னதாகச் செய்யப்பட்டதன் செல்லாக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருத்தல் கூடாது.

குறிப்பு

இது, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுகள் (திருத்தம்) சட்டம், 1980 (45/1980) - பிரிவு 2-ஆல் இணைக்கப்பட்டது. (ஆனால் நடைமுறைக்கு வரவில்லை.)

பிரிவு 7. வரிவிதிப்புக்குத் தடை:

(1) மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைப்பணிகளுக்காக, மாநில எல்லைக்குள் ஒரு மாநில அரசாங்கம் செய்த பணிகளின் காரணமாக, அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தும் மற்ற மாநில அரசுக்கு எதிராக அல்லது அங்கே வசிப்பவர்களுக்கு எதிராக வரி எதனையும் விதிக்கவோ அல்லது கட்டணம் எதனையும் வசூலிக்கவோ கூடாது.

(2) உட்பிரிவு (1) - இல் அடங்கியுள்ள தடைக்கு முரணாக, தண்ணீர்க் கட்டண விதிப்புச் சம்பந்தமாக, இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மாநில அரசாங்கங்களுக்கு இடையில் பிரச்சினை அல்லது கருத்து வேறுபாடு எதுவும் ஏற்பட்டால், அதனையும் மாநிலங்களுக்கிடையிலான ஒரு தண்ணீர்த் தகராறாகவே கருதவேண்டும்.

பிரிவு 8. நடுவர் மன்றத்திற்குச் சில தகராறுகளை அனுப்புவதற்கான தடை:

பிரிவு 3 அல்லது பிரிவு 5 - இல் என்ன கூறப் பட்டிருப்பினும், ஆறு வாரியங்கள் சட்டம், 1956 - இதன்கீழ் இசைவுத் தீர்வுக்கு அனுப்பி வைக்கும் விடயம் தொடர்பாக எழுந்த தகராறை, நடுவர் மன்றத்திற்கு அனுப்பிவைத்தல் கூடாது.

பிரிவு 9. நடுவர் மன்ற அதிகாரங்கள்:

(1) பின்வரும் விடயங்கள் சம்பந்தப்பட்டவைகளில், உரிமையியல் விசாரணைமுறைச் சட்டம், 1908 - இன்கீழ் உரிமையியல் நீதிமன்றம் ஒன்றுக்குக் கொடுக்கப்பட்ட அதே அதிகாரத்தை, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த்தகராறுகள் நடுவர்மன்றமும் பெற்றிருக்கும். அதாவது:-

(அ) நபர் எவருக்கும் அழைப்பாணை அனுப்பவும், அவரை நடுவர் மன்றத்திற்கு வரும்படி கட்டாயப்படுத்தவும் மற்றும் அவரை விசாரிக்கவும் செய்யலாம்;

(ஆ) ஆவணங்களைக் கண்டுபிடிக்கவும், அதனை ஒப்படைக்கவும், மற்றும் சான்றுப்பொருள்களை ஒப்படைக்கும் படியும் கட்டளையிடலாம்;

(இ) சாட்சிகளை விசாரிக்கவோ அல்லது வட்டாரப் புலனாய்வைச் செய்யவோ ஆணையரை நியமிக்கலாம்;

(ஈ) குறித்துரைக்கப்பட்ட மற்ற பணிகளைச் செய்யலாம்.

(2) நடுவர் மன்றத்தின் முன் நிலுவையிலிருக்கும் தண்ணீர்த்தகராறில், தீர்ப்பு வழங்குவதற்கு அவசியமாக இருப்பதாகக் கருதும் அளவைகளை மேற்கொள்ளவும் புலன்விசாரணையைச் செய்யவும், நடுவர் மன்றம்

ஒரு மாநில அரசாங்கத்திற்குக் கட்டளையிடலாம்; அல்லது அதனைச் செய்வதற்கு அனுமதித்திட மாநில அரசாங்கத்திற்குக் கட்டளையிடலாம்.

(3) நடுவர் மன்றம் வழங்கும் தீர்ப்பில், நடுவர் மன்றத்தின் செலவுகளை எந்த அரசாங்கம் ஏற்க வேண்டும் என்பதற்கான கட்டளைகள் அடங்கியிருக்கலாம். நடுவர் மன்றத்தில் மாநில அரசாங்கம் எதுவும் தோன்றுவதற்கு ஆகிய செலவுகளைச் செலுத்துவதற்கும் நடுவர் மன்றம் கட்டளையிடலாம். செலுத்தப்பட வேண்டிய செலவுத் தொகை அல்லது வழக்குச் செலவுத் தொகைகளை நிர்ணயம் செய்யலாம். செலவுத் தொகை அல்லது வழக்குச் செலவுத் தொகைகளை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமல்படுத்தலாம்.

(4) இந்தச் சட்டத்தின் வகையங்கள், மற்றும் இந்தச் சட்டத்தின்கீழ் இயற்றப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு, நடுவர் மன்றம் உத்தரவு ஒன்றின்மூலம் நடைமுறையை ஒழுங்குபடுத்தலாம்.

பிரிவு 10. நடுவர் மன்றத்திற்குத் தலைமை தாங்குபவர் மற்றும் தீர்ப்புதவியாளருக்கான படித்தொகைகள் அல்லது கட்டணங்கள்:

நடுவர் மன்றத்தின் தலைவர், மற்றும் அதன் மற்றைய உறுப்பினர்களும் தீர்ப்புதவியாளர்களும் குறித்துரைக்கப் பட்ட ஊதியத்தையும் படித்தொகையையும் பெறுவதற்கு உரிமையுடையவர்களாவார்கள்.

பிரிவு 11. உச்சநீதிமன்றமும் மற்றும்மற்றைய நீதிமன்றங்களும் இந்த வழக்கை விசாரிக்க அதிகாரமில்லை:

மற்ற சட்டத்தில் என்ன கூறப்பட்டிருப்பினும், மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுகளை உச்சநீதிமன்றமோ அல்லது வேறு நீதிமன்றமோ விசாரிக்கக் கூடாது. அதனை இந்தச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் நடுவர் மன்றத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

பிரிவு 12. நடுவர் மன்றக் கலைப்பு:

நடுவர் மன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட தண்ணீர்த் தகராறுகள் சம்பந்தப்பட்ட வழக்கில் நடுவர் மன்றம் தனது அறிக்கையை மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பிய பிறகு, வேறு விடயம் எதுவும் அந்த நடுவர் மன்றத்திற்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லாததாக மத்திய அரசாங்கம் கருதும்போது, மத்திய அரசாங்கம் அந்த நடுவர் மன்றத்தைக் கலைத்தல் வேண்டும்.

பிரிவு 13. விதிகளை இயற்றும் அதிகாரம்:

(1) மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசனை செய்த பின்னர், மத்திய அரசுப் பதிவிதழில் அறிவிப்புச் செய்து, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு விதிகளை இயற்றலாம்.

(2) முன்னர் சொல்லப்பட்ட அதிகாரத்தின் பொதுத் தன்மைக்குப் பாதிப்பு இல்லாமல், பின்வரும் விடயங்கள் அனைத்திற்கும் அல்லது அவற்றிற்குமேனும் விதிகளை இயற்றுவதற்கு வழிவகை செய்யலாம். அதாவது -

(அ) தண்ணீர்த் தகராறு சம்பந்தமாக மாநில அரசாங்கம் எந்த வகையிலும் முறையிலும் முறையீடு தாக்கல்செய்ய வேண்டும் என்பது தொடர்பான விதிகளை இயற்றுவதற்கு வழிவகை செய்யலாம்;

(ஆ) எந்த விடயம் சம்பந்தமாக நடுவர் மன்றத்திற்கு, ஒரு உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரங்களை வழங்கலாம் என்பது தொடர்பான விதிகளை இயற்று வதற்கு வழிவகை செய்யலாம்.

(இ) இந்தச் சட்டத்தின்கீழ் நடுவர்மன்றம் ஒன்றால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் பற்றி விதிகளை இயற்றுவதற்கு வழிவகை செய்யலாம்;

(ஈ) நடுவர் மன்றத்தின் தலைவர், அதன் மற்ற உறுப்பினர்கள், மற்றும் தீர்ப்புதவியாளர்களுக்கு ஊதியம், படித்தொகைகள் அல்லது கட்டணங்கள் செலுத்தப் படுவது சம்பந்தமான விதிகளை இயற்றுவதற்கு வழிவகை செய்யலாம்;

(உ) நடுவர் மன்ற அதிகாரிகளின் பணி வரையறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி விதிகளை இயற்றுவதற்கு வழிவகை செய்யலாம்;

(ஊ) குறித்துரைக்கப்பட்ட மற்ற விடயங்கள் சம்பந்தமாக விதிகளை இயற்றுவதற்கு வழிவகை செய்யலாம்.

(3) இந்தப் பிரிவின்கீழ் இயற்றப்படும் ஒவ்வொரு விதியையும், அது இயற்றப்பட்டவுடன் கூடிய விரைவில், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும் தாக்கல் செய்தல் வேண்டும். நாடாளுமன்றத்தின் அமர்வு மொத்தத்தில் முப்பது நாட்களைக் கொண்ட ஒரு கால அளவில் இருத்தல் வேண்டும். அது ஒரே அமர்வாகவோ அல்லது அடுத்தடுத்துவரும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட அமர்வுகளாகவோ கூட இருக்கலாம். மேலே சொல்லப்பட்ட அடுத்தடுத்த அமர்வுகள் முடிவடைவதற்கு முன்னர், அந்த விதியில் திருத்தம் எதனையும் செய்வதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புக்கொண்டால், அந்தத் திருத்தத்தைச் செய்த பிறகே அந்த விதி நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

அந்த விதி இயற்றப்படக் கூடாது என்று நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் ஒப்புக்கொண்டால், அந்த விதி நடைமுறைக்கு வருதல் கூடாது. செய்யப்படும் திருத்தம் அல்லது நீக்கம் எதுவும், அந்த விதியின்கீழ் முன்னதாகச் செய்யப்பட்டதன் செல்லாக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருத்தல் கூடாது.

(உங்கள் நூலகம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)

Pin It