கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தின் இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், ஒரே காரணத்திற்காக 170க்கும் அதிகமான முதல் தகவல் அறிக்கைகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டன.  அரசு சாரா நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள் என்பது போன்ற தனியார் நிறுவனங்கள் தங்களது பெயரில் “மனித உரிமைகள்” என்பதனை வைத்திருந்ததே அந்த வழக்குப் பதிவுக்குக் காரணமாகும்.

Human Rightsமுதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்றபோது நிகழ்த்தப்பட்ட வளர்ந்த மற்றும் ஆயுத பலமிக்க நாடுகளின் ஆதிக்கவெறியானது மேலும் தொடராமல் இருக்கவும், அதுபோன்ற அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் உருவாக்கப்பட்ட  ஐக்கிய நாடுகள் சபை,  மனித உரிமைகளைப்  பாதுகாப்பதற்கான பிரகடனம் ஒன்றை உருவாக்கியது. 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் நாள், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் “அகில உலக மனித உரிமைப் பிரகடனம்” அறிமுகம் செய்யப்பட்டது. இப்படியாக உலகம் முழுவதும் ‘மனித உரிமைகள்’ என்ற பதமும், அதன் வீச்சும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால் இதேவேளையில், “மனித உரிமைகள்” என்ற பதத்தினை எந்தவொரு தனியார் நிறுவனமும் தனது பெயரில் வைத்திருக்கக்கூடாது என்ற சட்டம், தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளாக அமலில் உள்ளது.

கடந்த 1993ம் ஆண்டில், மனித உரிமைகள் (பாதுகாப்பு) சட்டம் நடுவணரசால் இயற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி, தேசிய மனித உரிமைகள் ஆணையம்,  மாநில மனித உரிமைகள் ஆணையம், மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றம் என்பது போன்ற சட்டபூர்வ அமைப்புகள் உருவாக்கப்பட்டதோடு அதன் அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டன.

இதற்கிடையில், சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற, தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களைப் போல தோற்றத்தைத் தரும், அதனையொத்த பெயர்களை பல்வேறு தனியார் நிறுவனங்கள் வைக்க துவங்கின.  இதன்காரணமாக பொது மக்களிடையே குழப்பங்கள் ஏற்படும் என்பதால் அது போன்ற அமைப்புகளைக் குறித்த தகவல்களை தர வேண்டும் என்று மனித உரிமை ஆணையங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தன. இதன்காரணமாக பல மாநிலங்களில்  அதுபோன்ற பெயர்கள் தொடர்பாக விவாதங்கள் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து 2009 பிப்ரவரியில், மனித உரிமை என்ற பெயரில் அமைப்பு வைத்துக்கொண்டு, அதனைப் பலர் தவறாக பயன்படுத்துவதால், அரசு சார்ந்த அமைப்பான மனித உரிமை ஆணையம் தவிர்த்த அமைப்புகள், தமது பெயரில் மனித உரிமை என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் தடுப்பதற்கு ஆவண செய்யவேண்டும் என தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் கடந்த 30.03.10அன்று அரசாணை எண்.34 பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம், 1975ன் பிரிவு 9(2)(இ)ல் ‘சங்கங்களின் பெயர்” என்ற பகுதியில், அரசிடம் எழுத்துப் பூர்வமாக முன் அனுமதி பெறாமல், ஒரு சங்கத்தின் தலைப்பாக பதிவு செய்ய முடியாத வார்த்தைகளில், “மனித உரிமைகள்” என்பதும் சேர்க்கப்பட்டது.  இந்த நிபந்தனையானது கடந்த 01.04.10 முதல் அமலுக்கு வந்தது.

அதன்பிறகு தமிழ்நாட்டில், சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்த எந்தவொரு தனியார் நிறுவனமும், தனது பெயரில் “மனித உரிமைகள்” என்ற வார்த்தையினை வைத்திருக்க பதிவுத்துறையால் அனுமதிக்கப்படவில்லை. மேலும், மனித உரிமைகள் என்பதனை தனது பெயரில் கொண்டிருந்த சங்கங்களின் பதிவானது, பதிவு செய்யப்படாமல் திருப்பப்பட்டது.

அதே வேளையில், 01.04.10க்கு முன்பாக தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த சங்கங்களில் ‘மனித உரிமைகள்’ என்ற வார்த்தையினை, தனது பெயரில் கொண்டிருந்த அனைத்து சங்கங்களும், ஆறு மாத காலத்திற்குள் ‘மனித உரிமைகள்’ என்ற வார்த்தையை சங்கத்தின் பெயரிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு பதிவுத்துறைத் தலைவர் 27.04.10 அன்று ஒரு உத்தரவினைப் பிறப்பித்தார்.

அப்படியாக பதிவுத்துறைத் தலைவரின் உத்தரவின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட பதிவாளரால், தனது நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட உத்தரவானது அரசியலமைப்பு சாசனத்திற்குப் புறம்பானது என்பதால் அவ்வுத்தரவையும், அதற்கு அடிப்படையான சட்டதிருத்தம் மற்றும் அரசாணையை இரத்து செய்யக் கோரியும் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தைச் சேர்ந்த “தேசிய மனித உரிமைகள் கழகம்“  என்ற அரசு சாரா நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மதுரையை சேர்ந்த ஜான்வின்சென்ட் எனும் வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்த வழக்கானது, இன்றளவும் நிலுவையில் உள்ளது.

இச்சூழலில், ஒரு அரசு சாரா நிறுவனம், தனது தனியார் பள்ளிக்கு வந்து மனித உரிமைகள் என்ற பெயரில் விசாரணை செய்தது என்றும், அவ்வாறு விசாரணை செய்வதற்கு அந்த அமைப்பிற்கு எவ்வித அதிகாரமுமில்லை என்பதால் அந்த அமைப்பின் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் 2014ம் ஆண்டு அக்டோபர் 29 அன்று ஒரு வழக்கு தாக்கல் செய்தது.  அந்த வழக்கில் உயர்நீதிமன்றம், “மனித உரிமைகள்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் செயல்பட்டுவரும் அரசு சாரா நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து காவல்துறையிடம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யவதற்காக, தங்களிடம் தனி நபர்கள் எவரும் புகார் கொடுத்திட முன் வராத சூழலில், உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து புகார்களைப் பெற்று 170க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அப்படி பதிவு செய்யப்பட்ட வழக்கில் 17 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு முன் பிணை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மார்ச் 2ம் வாரத்தில் வழக்கு தாக்கல் செய்தார்கள்.  ஆனால் அந்த வழக்கில், முன் பிணை வழக்கினை தாக்கல் செய்த அமைப்பினரின் மீது எவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதன் விவரங்கள் உள்ளிட்ட பல தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அவ்வாறான அறிக்கை எதுவுமின்றி அந்த மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்று கூறி மார்ச் 26 ல், அவர்களது முன்பிணை கோரிய வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

 முன் அனுமதியில்லாமல் வைக்கக்கூடாத பெயரை வைத்துள்ள நிறுவனத்திடம், அது தொடர்பாக உரிய விளக்கம் கோரி அப்பெயரை மாற்ற நடவடிக்கை எடுப்பதுதான்  சட்டப்படியான நடவடிக்கையாகும். ஆனால் அதற்கு முரணாக அப்படிப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் மீது சட்டத்தில் சொல்லப்படாத வடிவத்தில் வழக்குப் பதிவு செய்வதைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் உள்ள நீதிமன்றம் அதற்கு மாறாக, அந்த சட்ட விதி மீறலுக்கு மேலும் வலுசேர்க்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மனித உரிமைகள் குறித்த நமது உயர்நீதிமன்றத்தின் பார்வையானது இவ்விதமாக மெச்சத்தக்க அளவில் உள்ளது.

நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்காக, மனித உரிமைகள் தளத்தில் பணியாற்றினாலும் அதனை அமைப்பின் பெயரில் வைத்திருக்கக் கூடாது  என்ற சட்டப்பிரிவு அமலில் இருப்பது மனித உரிமைகள் தொடர்பான நிகழ்வுகளில் தமிழகம் தீண்டத்தகாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளது போல உள்ளது.

அரசு மற்றும் அரசாங்கத்தால் குடிமக்கள் மீதும், ஆதிக்க சமூகத்தினரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவும் நிகழ்த்தப்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்ததில், மனித உரிமைகள் தளத்தில் பணியாற்றிவரும் பல்வேறு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறிப்பிடத்தகுந்த வகையில் இருந்துள்ளன. அது போல பல நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்கு தொடர்ந்து, சட்டபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்டு இழப்பீடு பெற்றுக் கொடுத்துள்ளதுடன், பாதுகாப்பாகவும் இருந்துள்ளன. ‘மனித உரிமைகள்’ மீதான மதிப்பினை வளர்த்தெடுப்பதில் மிக முக்கிய பங்காற்றுவதுடன், ஐ.நா.வின்  மனித உரிமைகள் தொடர்பான பணிகளை கல்வி, பிரச்சாரங்கள் வாயிலாக பொதுமக்களிடையே கொண்டு செல்லும் பிரதானமான பணிகளையும் அதுபோன்ற  நிறுவனங்கள் செய்து வருகின்றன. மேலும், தற்போதைய மற்றும் முந்தைய அரசுகளின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்து உலகளாவிய அளவில் அறிக்கைகளையும் தாக்கல் செய்து வருகின்றன. மாநில மற்றும் தேசிய மனித உரிமை ஆணையங்களுக்கு அதிகப்படியாக அனுப்பப்படும் புகார்கள், மனித உரிமை தளத்தில் பணியாற்றும் அமைப்புகள் மூலமாகத்தான் இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.

அறக்கட்டளை சட்டம், நிறுவனங்கள் சட்டம், நடுவணரசின் சங்கங்கள் சட்டம் போன்ற சட்டங்களில் பதிவு செய்துள்ள அமைப்புகளும் மற்றும் எந்த சட்டத்தின் கீழும் பதிவு செய்யாமல் இயங்கும் தனியார் நிறுவனங்கள் தங்களது பெயரில்  ‘மனித உரிமைகள்’ என்று வைத்திருந்தால் அதன் சட்டநிலை என்ன என்பது குறித்து ஒரு குழப்பமான நிலையே தமிழகத்தில் தற்போது நீடிக்கிறது.

“மனித உரிமைகள்” என்ற பெயரில் சட்ட மீறல்களைப் புரியும் எந்த அமைப்பும் சட்டத்தின்படி தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டியதே.  ஆனால் பல்லாண்டுகளாக போராடிப்  போராடி உலகம் முழுவதிலும் மனித உரிமை கலாச்சாரம் மற்றும் அதன் பார்வை வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் ‘மனித உரிமைகள்’ என்ற வார்த்தையை தனது பெயரில் வைத்திருக்கக் கூடாது என்ற சட்டப்பிரிவு தமிழகத்தில் அமலில் இருப்பது கேளிக்கூத்தான செயலாகும்.

 “மனித உரிமைகள்” என்ற வார்த்தையை தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு தனியார் நிறுவனமும் தனது பெயரில் வைத்திருக்ககூடாது எனும் சட்டப்பிரிவானது அரசியலமைப்பு சாசனத்திற்குப் புறம்பானதாகும். ஆகவே, ‘மனித உரிமைகள்’ என்ற வார்த்தையினை தனது பெயரில்  வைத்திருக்க தடையாக உள்ள தமிழக சங்கங்கள் பதிவு சட்டத்தின் பிரிவு நீக்கப்பட வேண்டும். மேலும், இந்த சட்ட பிரிவின் அடிப்படையில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் உடனடியாக திரும்பபெற வேண்டும். மனித உரிமைகள் என்ற பதமானது மேலும் பரவலாக்கப்பட வேண்டும். சட்ட மீறல்களைப்  புரிபவர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் மனித உரிமைகள் எனும் பதமானது  குடிமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் அளவிற்கு எளிமைபடுத்திட வேண்டும். அப்போது தான் அரசு, அரசாங்கம், ஆதிக்க சக்திகள் மூலமான உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்படும்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

Pin It