“தமிழே யுலகத் தாய்மொழியென்று

 பறையடித் தோதிய பன்மொழிப் புலவன்

 சொல்லாராய்ச்சியும் தொல்லா ராய்ச்சியும்

 வல்லவன் ‘பைபிள்’ வழியே நடப்போன்

 மலையுப தேசமே கலையெனக் கொண்ட

 ஞானப் பிரகாச நாவலன் இலங்கை

 என்றும் போற்றும் எழிலார் வித்தகச்

 செல்வனைத் தமிழர் சிந்தித்து நிதம்

 புரிக தமிழ்ப்பணி பொலிக நல்லறிவே”

என சுவாமி ஞானப்பிரகாசரை கவியோகி சுத்தானந்த பாரதியார் பாராட்டி புகழ்ந்து கவிதை பாடியுள்ளார்.

தமிழ் மொழிக்கும், கிறிஸ்துவ சமயத்திற்கும் ஈடில்லாச் செவை புரிந்தவர். கிறிஸ்வத்துடன் தமிழியும் வளர்த்தார். தமிழ் அவரால் வளர்ந்தது, சிறப்புற்றது, புதுப்பொலிவுற்றது.

Swami Gnanapirakasarசுவாமி ஞானப்பிரகாசர் தமிழ் ஆராய்ச்சியிலும், வரலாற்று ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு உழைத்தார். அறிவும், ஆற்றலும்;, சிந்தனைத் தெளிவும் அவரது ஆராய்ச்சியில் மிளிர்வதை அறிஞர் உணருவர்.

சுவாமி ஞானப்பரகாசர், வரலாறு, அரசியல், மானிடவியல், சமூகவியல், எழுத்துமுறை, சொல்லொற்றுமை, இடப்பொயர்கள், சமய வரலாறு, சமய வழிபாடுகள், பழக்க வழக்கங்கள் முதலியவற்றினை அடிப்படையாகக் கொண்டு தமது ஆராய்ச்சியினை மேற்கொண்டார்.

சுவாமி ஞானப்பிரகாசர், மொழியின் வரம்பாக மட்டுமே இருந்த இலக்கண உலகை ஆராய்ச்சி உலகாக மாற்றியமைத்தவர்.

மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு கிடந்த திராவிட நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தையும் தமது ஆய்வு நூல்கள் மூலம் அகிலத்துக்கு வெளிப்படுத்தியவர் சுவாமி ஞானப்பிரகாசர்.

கத்தோலிக்க தேவாலயங்களில் தமிழில் செபம் செய்தல் வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்ட போது, செபங்களை தமிழில் மொழிபெயர்த்து அளித்தவர் சுவாமிஞானப்பிரகாசர்.

சுவாமி ஞானப்பிரகாசர் ஈழத்தில் யாழ்பாணத்துக்கு அருகில் உள்ள மானிப்பாய் என்னும் ஊரில் சுவாமி நாதப்பிள்ளை –தங்கமுத்து வாழ்வினையருக்கு 30.08.1875 அன்று மகனாகப் பறிந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் வைத்தியலிங்கம், இவரது தந்தை, இவர் குழந்தையாக இருக்கும் போது திடீரென்று இறந்து விட்டார். இவரது தாய் கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்த தம்பிமுத்துப்பிள்ளையை மறுமணம் செய்து கொண்டார். இவரும் கத்தோலிக்க சமயத்தைத் தழுவி ஞானஸ்தானம் பெற்று ‘ஞானப்பிரகாசர்’ எனப் பெயர் சூட்டப்பட்டார்.

அச்சுவேலியில் சூசையப்பர் திண்ணைப் பள்ளியில் கல்வி பயின்றார். இவருடையே வளர்ப்புத் தந்தையான தம்பிமுத்துப்பிள்ளையிடம் தமிழ்ச் செய்யுள், தமிழக வரலாறு, தமிழ் இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார்;. பின்னர் மானிப்பாய் மெமோரியல் பாடசாலையில் சேர்ந்து ஆங்கில மொழிக் கல்வி கற்றார்.

யாழ்ப்பாணத்தில் பத்திரீசியார் கல்லூரியில் தமது உயர்கல்வியை முடித்தர். இளம் வயதிலேயே தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார்.

தமது படிப்பை முடித்த பின்னர் பெருந்தோட்டமொன்றில் கணக்காளராகப் பணிபுரிந்தார். பணிபுரிந்து கொண்டே இரயில்வே துறை பணிக்கான தேர்வெழுதி தேர்ச்சி பெற்று, கொழும்பு இரயில்வே தலைமையகத்தில் பணியில் சேர்ந்தார்.

இரயில்வேத் துறையில் பணிபுர்pந்தாலும், இவரது மனம் இறைபணியை நோக்கித் திரும்பியது. அதனால், இரயில்வேத்துறை பணியிலிருந்து விலகினார். பின்னர் யாழ்ப்பாணத்திலுள்ள இறையியற் கல்லூரியில் சேர்ந்து, இறையியல் பயின்று தேர்ச்சி பெற்று 01.12.1901 அன்று குருவானார்.

ஞானப்பிரகாசர் ஊர்காவற்துறையில் குருவாக நியமிக்கப்பட்டார். அவ்வூரில் குருவாகப் பணியாற்றியபோது, மக்களிடம் நிதி வசூல் செய்து, புனித அந்தோனியார் கோவிலின் அருகில் ‘திரு இருதய வாசக சாலையை 1903 அம் ஆண்டு நிறுவினார். தமிழில் வெளிவந்த அனைத்து நூல்களிலும் ஒவ்வொரு பிரதியைக் கொண்டு நிறுவப்பட்ட இவ்வாசகசாலையே, வட இலங்கையில் இரவலாக நூல் வழங்கும் முதலாவது வாசக சாலையாகக் கருதப்படுகிறது.

பின்னர், யாழ்பாணத்து நல்லூரில் தங்கி நாற்பத்து மூன்று ஆண்டுகள் குருத்துவத் திருத்தொண்டு செய்தார். அதனால் ‘நல்லூர் ஞானப்பிரகாசர்’ என்று அழைக்கப்ட்டார். கிறிஸ்துவ சமயப் பணியாற்றியதுடன், ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு கல்வி அளித்திட கல்வி நிலையங்கள் பல தோற்றுவித்தார்.

ஞானப்பிரகாசர் கிறிஸ்துவ சமயத் தொண்டு புரிந்து கொண்டே, தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் வரலாறு முதலியவற்றில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

ஞானப்பிரகாசர் பன்மொழிப் புலவர், மொழி நிபுணர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இத்தாலி, பிரஞ்சு முதலிய 18 மொழிகளை படிக்கவும், எழுதவும், பேசவும் கற்றிருந்தார். சமஸ்கிருதம் மூலம் பிற ஆரிய மொழிகளை அறிமுகமாக்கிக் கொண்டார். சிங்கள மொழியின் வழி பாளி மொழியையும், மேலும் திபெத், பர்மிய, கூர்க்க மொழிகளையும் கற்றார். அவர் அறிந்த பிற மொழிகள் இலத்தீன், கிரேக்கம், போர்த்துக்கீஸ், டச்சு, ஜெர்மன் உட்பட 70 மொழிகளை அறிந்திருந்தார்.

ஞானப்பிரகாசர் கிருஸ்துவ சமய அனுசார நூல்கள், பிரசங்க நூல்கள், செப நூல்கள், வரலாற்று ஆராய்ச்சி நூல்கள், சமய வரலாற்று நூல்கள், மொழி ஆராய்ச்சி நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் என நூற்றுக்கணக்கான நூலகளை எழுதி அளித்துள்ளார்.

யாழ்ப்பாண வைபவ விமர்சனம், தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும், தமிழரின் ஆதி இருப்பிடமும் பழஞ்சீர்திருத்தமும், தமிழ் அமைப்புற்றாதெவ்வாறு, திராவிட சொல்லிணக்கத்திற்கு சில விதிகள், யாழ்ப்பாணத்து தொல்குடிகள், தமிழரில் சாதி உற்பத்தி, தமிழ் மொழி ஒப்பியல் அகராதி, தமிழ் சொற்பிறப்பாராய்ச்சி, தமிழ் மொழி ஆராய்ச்சி, பூர்வீக இந்திய வரலாறும் காலமும், யாழ்ப்பாண இடப்பெயர் வரலாறு, முதலிய தமிழர் வரலாறு முதலிய நூல்களையும் தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சி நூல்களையும் படைத்தளித்துள்ளார். ‘செகராசசேகரன்’ என்னும் நாவலை எழுதி அளித்துள்ளார்.

kings of Jaffna during the portuguers period, Histroy of Jaffna under the portugues and Dutch Rule, Ancient kings of Jaffna, Early History of Tamils and the religion, 0rigin of caste among the Tamils, Indian ancient Chronology and Civilization, Life from the Excavations of the Indus Valley, Early History of the Ancient popes, Catholicism in Jaffna, 25 years of catholic progress in the Diocase of Jaffna, Origin and History of the Catholic Church in Ceylon, Philosophical Saivaism or Saiva Siddhanta, Historical aspect of Christianity and Buddhism, How Tamil was built up, An English – Tamil Dictionary, Some laws of Dravidian Etymology, The Dravidian Element in Sinhalese, Root words of the Dravidian group of Languages, The Proposed comparative Tamil Lexicon முதலிய ஆங்கில நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.

மேலும், ஆண்டவர் சரித்திரம், சுப்பிரமணியர் ஆராய்ச்சி, பிள்ளையார் ஆராய்ச்சி, மிருகபலி ஆராய்ச்சி, மறுபிறப்பு ஆட்சேபம், சைவர் ஆட்சேப சமாதானம், புதுச் சைவம், புதுச் சைவமும் புலால் உண்ணாமையும், இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை வரலாறு, ஆதிகாலத்துப் பாப்புமார் சரித்திரம் முதலிய சமயத் தொடர்பான நூல்களை எழுதி வழங்கியுள்ளார்.

உபதேசியார் சந்தியாபிள்ளை நற்சரிதை, பரிமான் என். ஆர். முத்துக்குமாரு, Life of Cecilia Rasamma, Chryasanthus Daria முதலிய வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.

ஞானப்பிரகாசர் தமது வரலாறு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சி கட்டுரைகளை Ceylon Antiguary and Literary Register, Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, Journal of the Mystic Society, Indian Historical Quarterly, Daily News, Times, Tamil Culture முதலிய ஆங்கில இதழ்களிலும், மதுரைத் தமிழ்ச் சங்க இதழான செந்தமிழ், ஈழத்து ஈழகேசரி, இந்து சாதனம், பாதுகாவலன் மற்றும் தமிழகத்திலிருந்து வெளிவந்த கலாநிலையம், கலைமகள், ஞாயிறு முதலிய இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

‘சத்திய வேதப் பாது காவலன்’, ‘குடும்ப வாசகம்’, அமலோற்பவ இராக்கினி தூதன்’ முதலிய மாத இதழ்களுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

தமிழ் மொழியின் அடிப்படை பற்றியும், ஏனைய மொழிகளுடன் அதன் தொடர்பு பற்றியும் ஆராய்ந்து, அவரது காலம் வரை யாரும் எடுத்துரைக்காத, தமிழ் மொழிக்கு முதன்மை அளிக்கும் கோட்பாடு ஒன்றை நிறுவினார். இவர் கடும் முயற்சி செய்து, ‘தமிழ் மொழியின் சொற்பிறப்பு ஒப்பியல் - அகராதி’ என்ற நூலை எழுதி இரண்டு தொகுதிகள் வெளியிட்டார்.

ஒப்பியலாய்வினைச் சுவாமிகள் தமிழ் மொழி ஆராய்ச்சியிலும், பண்டைத் தமிழர் வரலாற்றாய்விலும் பயன்படுத்தியுள்ளார். தமிழர் வரலாறறினை, ஆரியர், சீனர் குறிப்பாக ஆதிகால மேற்காசிய, எகிப்திய சமூகங்கள் முதலிய பிற வரலாற்றுடன் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்.

“பழமையான சீர்திருத்தத்தினால் புகழ் படைத்தவர்களாய், உலகத்திலெல்லாம் அதி இனிமையான மொழிகளுள் ஒன்றைப் பயிலுகின்றவர்களாய், தென்னிந்தியாவைத் தங்கள் சுய பூமியெனக் கொண்டவர்களாய், பல நூற்றாண்டுகள் தொட்டு விளங்கியிருக்கின்றவர்கள் தமிழரோயாவர். அவர்களது பூர்வீகம் யாது. அவர்களது ஆதிச்சமயம் எத்தன்மையது என ஆராயும் இச்சிறுநூல்” எனத் ‘தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும்” என்ற நூலின் முகவுரையில் சுவாமி ஞானப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி ஞானப்பிரகாசர் தமது ஆராய்ச்சி முடிவுகளை ஆங்கிலம் போன்ற பிற மொழியில் மட்டுமின்றிக் குறிப்பாகத் தமிழில் எழுதியுள்ளார். தமிழ் மொழி தக்க இடத்தினைப் பாடத் திட்டத்திலோ, சமூகத்திலோ பெற்றிராத காலத்தில், தமது தாய் மொழியான தமிழிலேயே ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும்’ எனும் நூலில், பழந்தமிழ், ஆரியத் தொடர்புகள், பழைய தமிழ் நூல்கள், பழந்தமிழர் மத்தியில் நிலவிய சமூக நிலைமைகள் முதலியவைகள் குறித்து ஆராய்ந்து விரிவாக விளக்கியுள்ளார்.

மொழி ஆக்கத் துறையில் அவரது தனிப்பெரும் சாதனை, அவர் எழுதி அளித்த ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி’ ஆகும்.

“திராவிட மொழிகளிலுள்ள வேர்ச் சொற்கள் வெற்றொலிகள் அல்ல. அவை அனைத்தும் பொருள் பொதிந்த மொழிகள் என்பதை நிறுவியுள்ளார். தமிழ்ச் சொற்களுக்கு மிக எளிதாக சமஸ்கிருத வேர்ச்சொற்களை மூலமாகக் காட்டுவது ஒரு சம்பிரதாயம், இதையொட்டியே உலகம், கலை, நகுலம் போன்ற பல சொற்களுக்கு சமஸ்கிருதர்தாது காட்டப்பெற்றன. சுவாமி ஞானப்பிரகாசர் இச்சொற்களுக்கெல்லாம் தமிழ் வேர்ச் சொற்களை ஆராய்ந்து காட்டியுள்ளார்” எனப் பேராசிரியர். மாஸ்கரேனஸ் பதிவு செய்து உள்ளார்.

‘இதற்கு முன்பு தமிழ் அகராதி செய்தோர் எல்லாம், ஒவ்வொரு சொல்லிற்கும் உரிய பொருளை ஆராய்ந்து மேலும், மேலும் சிறப்புற விளக்கினரே அன்றி, சொற்களுக்குப் பிறப்பிடமாய் நின்ற அடிகளை முறைப்படி தேடிக் கண்டு அவற்றின் கீழ் உள்ள கிளைச் சொற் கூட்டங்களை அமைத்தவரல்லர். அது மட்டும் அன்று, தமிழடிகளை அறுதியிடுவதற்கு உரிய கட்டளைகளை வகுப்போரும் எக்காலத்தாவது தோன்றியிராமையால், தமிழிற்கு அடிகள் தாம் உளவா, என்ற ஐயுறவிற்கும் இடம் உண்டாயிற்று. ஆயிரத்தில் ஒரு தமிழ்ச் சொற்கு அடியொன்று இருப்பதாக ஆசிரியர் சிலர் ஆங்காங்குக் குறித்தறிந்தது உண்மையே. ஆயினும், தமிழ்ச் சொற்றொகுதி முழுதும் ஒரு சில தலையடிகளிலே நின்று முளைத்துக் கிளைத்துள்ளது எனும் உண்மை இதுவரையிலும் பிறரால் நிலைநாட்டப்படாதது ஆயிற்று. அதனால், பிறமொழிகளோடு தமிழுக்கு உள்ள ஒப்பியலைத் தெளிவித்தல் பற்றி கூறவும் வேண்டுமல்லவா, ஆகையினால் ‘சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதி’ எழுந்தது என்க” என இந்நூல் உருவானதற்கான தேவையை தெளிவுபடுத்தியுள்ளார் சுவாமி ஞானப்பிரகாசர்.

‘தமிழ் அமைப்புற்ற வரலாறு’ (How Tamil was Built up) என்ற நூல் தமிழ் சொற்களின் உண்மைப் பிறப்பை விளக்கும் நூலாகும். மேலும், இந்நூலில் தமிழ் சொற் தொகுதிகள், இடம் பற்றிய பெயரீடு, முதற் சொல்லடிகள், வழிச் சொல்லடிகள், சொல் அர்த்தங்கள் விரிந்த விசித்திரம், பிரதிப் பெயர்கள், பெயர் விகுதிகள், வேற்றுமை உருபுகள், காலங்காட்டும் இடைநிலைகள், செயவெனச்சம், வியங்கோள், எதிர்மறை, பிறமொழிகளிற் தமிழடிகள் முதலிய தலைப்புகளில் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியளித்துள்ளார் சுவாமி ஞானப்பிரகாசர்.

தமிழ்ச் சொற் பிறப்பாராய்ச்சி (Studies in Tamil Etymology) என்னும் நூலில் தமிழ் அடிச் சொல் இயல்பு, வழிச் சொல்லாக்கக் கட்டளைகள், மேலும் நான்கு கட்டளைகள், சொற்சிதைவு, பொருள் வேறுபாட்டு முறை, ஆரிய மொழிகளில் வழிச் சொல்லாக்கம் முதலிய ஆராய்சி கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

சுவாமி ஞானப்பிரகாசரின் இந்து சமய வரலாற்று விமர்சனத்தை சைவ உலகம் முற்றாக வெறுத்து ஒதுக்கியது எனக் கொள்ள முடியாது. தமிழகத்திலுள்ள பிரபலமான சைவ மடங்களில் ஒன்றான திருப்பனந்தாள் மடம் அவரை கௌரவித்தது. மேலும், இவரது, தமிழ்ச் சொற் பிறப்பாராய்ச்சி என்னும் நூலை வெளியிட நிதி உதவியும் வழங்கியுள்ளது என்பது வரலாற்றுச் செய்தி.

சுவாமி ஞானப்பிரகாசர் எழுதி அளித்துள்ள ‘தருக்க சாத்திரச் சுருக்கம்’ என்னும் நூல், “குறித்து இக்கால அவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, புதிய ஆரம்ப நூலாக தருக்கம் பயிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகமாய் இடம் பெறத் தகுதியும் சிறப்பும் பெற்றிருக்கிறது. சுவாமியின் பன்மொழி ஆராய்ச்சியும், தமிழ் அமைப்புற்ற வரலாற்றை அறிந்த சிறப்பும், ஆங்கிலச் சொற்களுக்கேற்ற புதுச் சொற்களைப் பெய்து எழுதக்கூடியதாயிற்று” என அக்காலத்தில் இலங்கையில் கல்வி உயர் அதிகாரியாகப் பணிபுரிந்த உவாட்சன் பாராட்டியுள்ளார்.

                இந்திய பூர்வீக வரலாற்றினை ஆராய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஸ்பானிய கிருத்துவ சமயத்துறைவியும், மும்பை பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும், இந்திய புதை பொருளாராய்ச்சிக்குக் கழகத் தலைவருமான ஹெராஸ் சுவாமி, ஞானப்பிரகாசர் அடிகளாருடன் இணைந்து, சிந்து சமவெளி நாகரிகம் பற்றிப் பல ஆய்வுகளை மேற்கொண்டு, இந்நாகரிகம் திராவிடருக்கே முற்றிலும் சொந்தம், திராவிடரின் தனிப்பெரும் சொத்து என உலகிற்கு உணர்த்தினார்.

                அறிஞர் ஹெராஸ் பாதிரியார், சிந்து சமவெளியின் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளை படித்தறிவதில் தமக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள இந்தியாவிலிருந்து 1936 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்று சுவாமி ஞானப்பிரகாசரைச் சந்தித்தார். அறிஞர் ஹெராஸ் பாதிரியார் எழுதியுள்ள ‘இந்து மெதித்தேரேனியன் பண்பாடு’ என்னும் நூலில், “நான் உண்மையில் சுவாமி ஞானப்பிரகாசருக்குப் பெரிதும் கடமைப்பட்டவன் ஏனெனில் மொழி ஆராய்ச்சியைக் கொண்டு அவர் புரிந்த பேருதவிகள் நான் அதிக தவறுகளை விடாமல் பெரும்பயன் அளிக்கத்தகனவா யின எனக் குறிப்பிட்டுள்ளார்.

                சுவாமி ஞானப்பிரகாசரின் தமிழ் மொழி ஆராய்ச்சி முடிவுகள்: எந்தமிழ் மொழியில் ஆதிச்சொல்லடிகள் பெரும்பான்மை அரைகுறையின்றி நிலவுகின்றன. எனவே, அவைதான் ஏனைய மொழிகளின் அடிப்படையான சொற்பகுதிகளின் உண்மை உருவமாதல் வேண்டும். அம்மொழிகளின் பண்டைச் சொற்களை நுண்மதியால் ஆராய்ந்து ஒப்பு நோக்கிக் காண்பதுண்டாயின் யாங்கூறியது மெய்யுரையாகாமல் போகாது என்பது எனது துணிபு” என அறிவித்தார்.

சுவாமி ஞானப்பிரகாசரின் தாய் மொழிப்பற்று: “என்னே எந்தமிழின் சொல்லமைப்பு மாட்சி! ஒவ்வோர் சொல்லையும் படிக்க – ஆராய ஆராய – நம்முன்னோர் நமது தீம்மொழியை எத்துணை அறிவு விளங்கப் புனைந்து வைத்துள்ளனர் என்ற புதுமையைக் கண்டு கழிபேருவகை எய்துகின்றோமே! இத்தகைய அருமந்த மொழியைக் பயிலுவதைக் கைவிட்டு, இம்மொழியிடத்தில் ஐயம் ஏற்று வாழுகின்ற பிற மொழிகளையே தேடிப் பயில்வோரும் தமிழ் அன்னையின் நன்மக்கள் ஆவாரா”? “அமிழ்தினும் இனியது என அறிஞர் போற்றும் எம் அரிய தமிழ் மொழியின் கட்பொருந்திய அழகுகளுள் ஒன்று யாதெனில், அதன் பயனூற்றுத் தொகைப்பட்ட சொற்களின் பெரும்பாங்கானவை தம்முள் இனங்கொண்ட கூட்டங் கூட்டமாய் இயலுதலாம்” எனப் பெருமையுடன் பதிவு செய்துள்ளார்.

                சுவாமி ஞானப்பிரகாசரின் நூல் வாசிப்பு குறித்த முன்வைப்பு: “இத்தேசத்து வாலிபர் பலர் பள்ளிக்கூட படிப்பு முடிந்தவுடன் படிப்பெல்லாம் முடிந்ததென்று எண்ணினாற் போல் ஏடுகள், புத்தகங்களைக் கட்டிச் பூச்சிகள் வாசிக்கும்படி வைத்துவிடுவது வழக்கம். வாலிபரே! உங்கள் படிப்பும் இதோடு முடிந்துவிட்டதென்று எண்ணாதிருங்கள். பள்ளிக்கூட படிப்பு முடிந்த பின்பு நீங்கள் வாசிக்கும் வாசிப்பினால்தான் இந்த விதை முளைத்து வளர்ந்து பூத்துக் காய்த்துக் கனிய வேண்டும். ஆகையால் வாசிப்பைக் கை நெகிழாதிருங்கள்”. என வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

                சுவாமி ஞானப்பிரகாசர் ‘நடமாடும் நூலகம்’ என்று அழைக்கப்பட்டார். பல மொழிகளிலும் காலத்துக்கு காலம் வெளிவந்த நூல்கள், இதழ்கள் மற்றும் வெளியீடுகள் அனைத்தும் அவரது நூலகத்தில் இடம் பெற்றிருந்தது.

                சுவாமி ஞானப்பிரகாசர், இலங்கை யாழ்ப்பாண வரலாற்றுச் சங்கத்தின் சிறந்த அறிஞராக விளங்கினார். அச்சங்கத்தின் துணைத் தலைவராகவம், தலைவராகவும் செயற்பட்டார்.

                இலங்கை அரசு சுவாமி ஞானப்பிரகாசரை வரலாற்றுச் சுவடிகளின் ஆய்வுக் குழு உறுப்பினராக நியமித்தது. யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.

                இலங்கைப் பல்கலைக் கழக மூதவை உறுப்பினராகவும் தொண்டாற்றியுள்ளார். ஆசிய அரசவையின் இலங்கைக் கிளையின் உறுப்பினராக செயற்பட்டார்.

                “சுவாமி ஞானப்பிரகாசரும், சுவாமி விபுலாந்த அடிகளும் துறவிகளாயிருந்து கொண்டு மொழிப் பற்றுடன் பணிபுரிந்தவர்கள். அதே வேளையில் சமயப் பணியே தமது பிரதான குறிக்கோள் என்பதையும் மறக்காதவர்கள். ஒப்பியல் நோக்கில் ஆய்வுகளை நிகழ்த்தியவர்கள். தமிழியலுக்குப் பல வழிகளில் வளந்தேடியவர்கள். தமது சுய முயற்சியின் வலுவினால் மரபுவழித் தமிழறிஞர்களின் மதிப்பைப் பெற்றவர்கள். இறுதியில் மரபுவழித் தமிழ்க் கல்வியாளராகவே கருதப்படும் அளவிற்கு அக்கல்வியின் விழுமியங்களோடு தம்மை இணைத்துக் கொண்டவர்கள்” என மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கலாநிதி க.கைலாசபதி தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

                சுவாமி ஞானப்பிகாசரின் அறிவு, ஆராய்ச்சி, செயல்திறன் ஆகியவற்றினைப் பாராட்டி ஜெர்மனி நாட்டு அரசு அவரைக் கௌரவித்து, அவரது உருவம் பதித்த முத்திரை வெளியிட்டு பெருமைப்படுத்தியது. வெளி நாடொன்றில் இத்தகைய மதிப்பினைப் பெற்ற முதற்தமிழர் என்ற பெருமை சுவாமி ஞானப்பிரகாசரையேச்சாரும்.

                “கத்தோலிக்கத் திருப்பணிகளைத் தவிர்த்து, இவர் ஆற்றிய ஆக்கப்பணிகள் தமிழியற்பணிகள் - தமிழ்ப்பணி, வரலாற்றுப் பணி ஆகியனவற்றுக்குச் சமமான முக்கியத்துவம் அளித்து பாடுபட்டார்” என ‘ஈழகேசரி’ இதழ் புகழ்ந்துரைத்துள்ளது.

                “உரைநடையில் தமிழன்னையை உலவவிட்டு அழகு பார்;த்தவர்களும் கிறிஸ்துவக் குருக்களே. ஒப்பியல் இலக்கணத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்து வளர்த்தவரும் அத்தொண்டர்களே; எவருமே செய்யத் துணியாத தன்னிகரற்ற தனிச்சேவையொன்றைத் தமிழுக்குக் கொடுத்துச் சென்றார் பன்மொழிப் புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்”என அருட்திரு சா.ம. செல்வரட்னம் புகழாரம் சூட்டியுள்ளார்.

                “அவர் திருமறை ஆசிரியராக இருப்பதுடன் வரலாற்று ஆசிரியராகவும், ஒப்பியல் மொழி வல்லுநராகவும், தமிழின் தொண்டையையும் ஒப்பற்ற தன்மையையும் எடுத்துக் காட்டும் வல்லுநராகவும் விளங்குகிறார். அவருடைய கடல் போன்ற புலமையைக் காட்டுவதற்கு அவர் யாத்த ‘சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி’யே போதிய சான்று” என ‘தமிழ்த்தூதுவர்’ தனிநாயகம் அடிகளார் சுவாமி ஞானப்பிரகாசருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

                “ஒரு நூற்றாண்டுக்கு முன்தோன்றித் தமிழ்த் தாய்க்குத் தொண்டாற்றிய சுவாமி ஞானப்பிரகாசர் பேரறிஞராவார். இவர் முற்றும் துறந்த முனிவராகச் சமயப்பணி செய்தாரெனினும் தமிழ் மொழிப்பற்றினைத் துறக்கவில்லை. தமிழ் மொழியின் பெரும் பழமையையும், தனிச்சிறப்பையும், நுட்ப அமைப்பையும் நுணித்துணர்ந்து உலகத்துக்கு எடுத்துக்காட்டினார். பிறர் இலகுவில் செய்ய முடியாத இத்தொண்டை செய்வதற்கு இரவு பகலாக அயராது உழைத்தார்.” என ‘செந்தமிழ்க்கலாமணி’ வித்துவான் க.பொ.இரத்தினம் தமது ஆய்வில் பதிவு செய்து உள்ளார்.

                கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் 1936 ஆம் ஆண்டு, தமிழ்ச் சொற்பிறப்பையிட்டு சுவாமி ஞானப்பிரசாசருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் சுவாமி ஞானப்பிரகாசர் ஆற்றிய உரையை செவிமடுத்த, அமெரிக்க நாட்டு அறிஞரான கொக்லர் “நீங்கள் அமெரிக்க நாட்டிலே பிறந்திருந்தால், உங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஊர்கள் தோறும் சுற்றுவார்கள்” எனத் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

                தமிழ்நாட்டுப் புலவர்களையும், ஈழநாட்டுப் புலவர்களையும் கொண்ட தமிழ்ப்புலவர் மன்றம் 1944 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சுவாமி ஞானப்பிரகாசரின் ஒப்பற்ற தமிழ்ப் பணியையும், ஆராய்ச்சித் திறனையும் பாராட்டி நடத்திய விழாவில் அவருக்கு ‘சொற்கலைப் புலவர்’ என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தது.

                மேலும், அவ்விழாவுக்குத் தலைமை வகித்த தமிழ் நாட்டறிஞரான ‘நாவலர்’ சோமசுந்தர பாரதியார் தமது உரையில், “தமிழ்ச் சொற்கள் தழைத்தெழுந்த தகைமையைச் சரிவர ஆராய்ந்து, பல மொழி நூல் முடிவு கொண்டு விளக்கி, தமிழ்ச் சொற்களின் சிறப்பைக் கண்ட ஞானப்பிரகாசர் தமிழ்நாட்டில் சிலை அமைத்து புகழப்பட வேண்டியவர்” எனப் பாராட்டினார்.

                இலங்கை அரசு சுவாமி ஞானப்பிரகாசரை 22.05.1981 அன்று தேசிய வீரராகப் பிரகடனம் செய்ததோடு, அவரது உருவம் பொறித்த முத்திரை (அஞ்சல் தலை) ஒன்றையும் வெளியிட்டுச் சிறப்பித்தது.

                மறைநூல் வல்லுநராக, மொழி வல்லுநராக, மத போதகராக, மொழி ஆராய்ச்சியாளராக, பன்மொழி அறிஞராக, சிறந்த ஆசிரியராக விளங்கிய சுவாமி ஞானப்பிரகாசர் தமது எழுபத்திரெண்டாவது வயதில் 22.01.1947 அன்று இயற்கை எயிதினார்.

- பி.தயாளன்

Pin It