கல்வித் திறனும், பேச்சாற்றலும், காலையார்வமும், நடிப்புத் திறனும் ஒருங்கே பெற்றவர் சர். முத்துக்குமாரசுவாமி.

இலங்கையில் அடிமை முறையை நீக்கிய தலைமை நீதியரசர் சர். அலெக்ஸ்ஸாண்டர் ஜோன்ஸ்டோன் தலைமையிலான இயக்கத்தில் குமாரசுவாமி பெரிதும் பங்கெடுத்தார். அக்காலத்தில் அடிமைகள் விலங்குகளைப் போல விலை கூறி விற்கப்பட்டனர். ஒரு ஆண் அடிமை ரூபாய் 17-க்கும், ஒரு பெண் அடிமை ரூபாய் 34-க்கும் விற்கப்பட்டனர்.

முத்துக்குமாரசுவாமி கொழும்பிலுள்ள முகத்துவாரம் ‘அம்மை’ தோட்டத்தில் குமாரசுவாமி முதலியர் - விசாலாட்சி வாழ்விணையருக்கு 23.01.1834 அன்று மகனாகப் பிறந்தார்.

இவரது தந்தையார் 14.05.1836அன்று திடீரென்று காலமாகி விட்டார். இளைமைக் காலக் கற்றலை தமது வீட்டிலேயே பெற்றார். பின்னர் கொழும்பு அக்கடாமியில் (ராயல் கல்லூரி) சேர்ந்து தமிழ், ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம், சிங்களம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேறினார். அவர் கல்வியில் திறமை வாய்ந்த மாணவராக விளங்கியதைப் பாராட்டி ராயல் கல்லூரி முதல்வர் 1851 ஆம் ஆண்டு டர்னர் (Turnour) பரிசை அளித்துச் சிறப்பித்தார்.

முத்துக்குமாரசுவாமி முதலில் கொழும்பு நீதி மன்றத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் முல்லைத் தீவு காவல்துறை நீதிபதியாகவும், உதவி அரசு அதிகாரியாகவும் பணியாற்றினார். மிகவும் இளம் வயதில் நீதிபதியாக நியமிக்கப்பட்டபடியால் இவர் ‘பையன் நீதிபதி’ (Boy Magistrate) என அழைக்கப்பட்டார். இவரது ஆற்றலுக்கும், திறமைக்கும் அரசாங்கப் பணி உகந்ததாக அமையவில்லை. அதனால் அரசாங்கப் பணியிலிருந்து விலகினர்.

சர். ரிச்சர்ட் மோர்கன் என்னும் பிரபல வழக்கறிஞரிடம் சட்ட மாணவனாகப் பதிவு செய்து சட்டம் பயின்று, 1856 ஆம் ஆண்டு வழங்கறிஞரானார். இவரது பேச்சுத் திறமையாலும், சட்ட அறிவாலும், வாதத்திறமையாலும் சிறிது காலத்திலேயே கொழும்பில் சிறந்த வழக்கறிஞராக விளங்கினார். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்த போது சமயத்துறையிலும், அரசியல் துறையிலும் அதிக ஆர்வம் கொண்டார்.

தமது இருபத்து மூன்றாவது வயதில் 1857 ஆம் ஆண்டு இலங்கை ராயல் ஏசியாடிக் சங்கத்தின் (C.R.A.S) ஆதரவில் ‘சைவ சித்தாந்தம்’ என்னும் பொருள் குறித்து ஒரு கட்டுரை படித்தார். பின்னர் 1860 ஆம் ஆண்டு, ‘இந்திய தத்துவ சாஸ்திரம்’ என்னும் பொருள் குறித்து அதே சங்கத்தில் கட்டுரை படித்தார். இக்கட்டுரைகள் ஆங்கிலத்தில் கட்டுரை படித்தார். இக்கட்டுரைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. அச்சங்கத்தின் இதழில் வெளியிடப்பட்டது.

முத்துக்குமாரசுவாமி 1861 ஆம் ஆண்டு தமிழர் பிரதிநிதியாக சட்டசபைக்கு நியமிக்கப்பட்டார்.

பாரிஸ்டர் படிப்புக்காக 1862 ஆம் ஆண்டு முத்துக்குமாரசுவாமி இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றார். அங்கு லிங்கன்ஸ் கல்லூரியில் (Lincoln’s Inn) சேர முற்பட்டபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏனெனில், அக்காலத்தில் கிறிஸ்துவரோ அல்லது யூதரோ மாத்திரமே அங்கு சட்டம் படிக்க முடியும், சட்டத் தொழில் செய்ய முடியும். ஆனால், முத்துக்குமாரசுவாமி மனம் தளவரவில்லை. அந்நாட்டுப் பிரமுகர்களுடன் தமது நிலையினை சொல்லியதன் பயனாக அவர் கல்லூரியில் சேர அனுமதியினைப் பெற்றார். அங்கு படித்த ஆசியக் கண்டத்திலேயே யூதரோ கிறிஸ்தவரோ அற்ற முதலாவது பாரிஸ்டராக பட்டம் பெற்றவர் முத்துக்குமாரசுவாமி.

இங்கிலாந்திலிருந்த பொழுது 1863 ஆம் ஆண்டு ‘அரிச்சந்திரன்’ நாடகத்தை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். இந்நூலை அச்சிட்டு வெளியிட்ட பொழுது அதனை விக்டோரியா மகாராணிக்கு சமர்ப்பணம் செய்தார்.

முத்துக்குமார சுவாமி இங்கிலாந்தில் தங்கியிருந்த போது, அதனீயம் சங்கம், கொப்டன் சீர்திருத்தச் சங்கம், பிரித்தானியா கலைகளுக்கான சங்கம், ராயல் புவியியல் சங்கம், ராயல் புவிசரிதவியல் சங்கம் போன்ற பிரபலமான சங்கங்களில் உறுப்பினராக செயற்பட்டார்.

பிரிட்டனில் விஞ்ஞான வளர்ச்சிக்காகத் தோற்றுவிக்கப்பட்ட சங்கத்தின் ஆதாவில் 1863 ஆம் ஆண்டு ‘இலங்கை வாழ் இனங்கள்’ என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவரது உரை மானிடவியல் சார்ந்த ஆய்வு இதழில் வெளிவந்தது.

முத்துக்குமாரசுவாமி இலங்கைக்கு 1885 ஆம் ஆண்டு திரும்பினார். மீண்டும் சட்ட சபையில் தமிழர் பிரதிநிதியாக பதவி வகித்தார். சட்ட சபையில் இலங்கை மக்களின் நலனுக்காக குரல் கொடுத்தார்.

அக்காலத்தில் இலங்கையில் அங்கிளிக்கன் சபையினை (Anglican Church) நடத்துவதற்கு அரசாங்கம் நிதி உதவி செய்து வந்தது. முத்துக்குமாரசுவாமி இதனை வன்மையாகக் கண்டித்து சட்ட நிரூபண சபையில் பௌத்தர், இந்துக்கள், முஸ்லிம் முதலியோரிடமிருந்து பெறப்படும் வரிப் பணத்திலிருந்து கிறிஸ்துவ சபையை நடத்துவதற்கு நிதி உதவி செய்வது அநீதியானது. கிறிஸ்துவ தர்மத்திற்கு மாறானது எனச் சுட்டிக்காட்டினார். இவரது சொற்பொழிவைப் படித்த குடியேற்ற நாட்டு அமைச்சர், இச்சொற்பொழிவை நிகழ்த்தக் கூடியவர் இருக்கும் நாடு, சுதந்திரம் பெறுவதற்குத் தகுதியுடையது எனக் கூறினார்.

முத்துக்குமாரசுவாமி 1867 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இந்தியாவில் சைவ சமய நூல்களையும், சித்தாந்த நூல்களையும் சேகரித்தார். சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராகச் சத்தியப் பிரமாணம் எடுக்க விரும்பினார். அப்பொழுது இருந்த நீதிமன்ற நடைமுறைப்படி, வழக்கறிஞராகச் சத்தியப் பிரமாணம் செய்ய விரும்புவோர் பைபிளைக் கொண்டு சத்தியம் செய்ய வேண்டும். இந்து சமயத்தவரான முத்துக்குமாரசுவாமி பைபிளைக் கொண்டு சத்தியப் பிரமாணம் செய்ய விரும்பவில்லை. நீதிமன்றத்தார் கிறிஸ்துவரல்லாத ஒருவரைப் பைபிளைக் கொண்டு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டுமென்று நிர்பந்தப்படுத்துவது முறையில்லவென்று வாதாடினார். மேலும், தாம் இலண்டனில் பாரிஸ்டராகச் சத்தியப் பிரமாணம் செய்த பொழுது பைபிளைக் கொண்டு சத்தியம் செய்யவில்லையெனச் சுட்டிக்காட்டினார். அப்பொழுது நீதிபதி உயர் நீதிபதிகள் இடம் பெற்ற அமர்வுக்கு அனுப்பி தீர்வு காண வேண்டுமென்றார். அதன் அடிப்படையில் அமர்வு நீதிபதிகள் கூடி முத்துக்குமாரசுவாமியின் கோரிக்கை நியாயமானதெனக் கொண்டு, கிறிஸ்துவரல்லாதர் சாதாரணமாகச் சத்தியம் செய்தால் (Simple Affirmation)  போதுமெனத் தீர்மானித்தார்கள். முத்துக்குமாரசுவாமியும் ;அப்படியே செய்தார். கிறிஸ்துவரல்லாதவர்களின் சுயமரியாதையைக் காப்பாற்றினார்.

முத்துக்குமாரசுவாமி 1874 ஆம் ஆண்டு இங்கிலாந்துச் சென்றார். அங்கு தாம் முன்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த  அரிச்சந்திரன் கதையை நாடகமாக்கினார். அதனை ஆங்கிலக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் விக்டோரியா மகாராணியார் முன்னிலையில் மேடையேற்றினார். இந்நாடகத்தில் அரிச்சந்திரனாக இவரே நடித்தார்.

கலைத்திறனுக்காகவும், ஆங்கிலப் பேச்சு வன்மைக்காகவும், சட்ட அறிவிற்காகவும் மகாராணியார் 1874 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் 11 ஆம் தேதி இவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கி கௌரவித்தார். முதன் முதலில் ‘சர்’ பட்டம் பெற்ற ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசுவாமி.

புத்தரின் தந்தத்தின் சரித்திரத்தைக் கூறும் ‘தத்வம்சம்’ என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1874 ஆம் ஆண்டு வெளியிட்டார். அதே ஆண்டு புத்தரின் உரையாடல்களையும், உபதேசங்களையும் கொண்ட ‘சுத்தநிபாதம்’ என்னும் பாளி நூலையும் ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

முத்துக்குமாரசுவாமி இங்கிலாந்தில் தங்கியிருந்த பொழுது 18.03.1875 அன்று எலிசபெத் பீபி என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 22.08.1877 அன்று ஒரு மகன் பிறந்தார். அவனது பெயர் ஆனந்த கௌரிஷ் குமாரசுவாமி ஆகும்.

முத்துக்குமாரசுவாமி 04.05.1879 அன்று நோய்வாய்ப்பட்டு காலமானார்.

முத்துக்குhரசுவாமி அஞ்சா நெஞ்சம் படைத்தவர். தொண்டுள்ளம் கொண்டவர். ஆங்கிலேயரால் இவரது பேச்சுவன்மை போற்றப்பட்டது, கீழைத்திசை மக்களுள் மிகச்சிறந்த நாவன்மை கொண்டவர் எனப் புகழப்பட்டார்.

முத்துக்குமாரசுவாமி இலங்கையில் விஞ்ஞான, தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டு விஞ்ஞானக் கல்வியும் தொழில் நுட்பக் கல்வியும் மாணவருக்கு கற்பிக்கப்பட வேண்டுமென்று அரசை வற்பறுத்தினார். அதன் பயனாக இராயல் கல்லூரியில் விஞ்ஞான ஆய்வுக் கூடமும், இலங்கைத் தொழில் நுட்பக் கல்லூரியும் அமைக்கப்பட்டன. மேலும், இலங்கையில் புதை பொருள் ஆராய்ச்சித்துறையை ஆரம்பிக்க வைத்தார். இந்தியாவில் விஞ்ஞான பாடம் கற்பித்தல் ஆரம்பிப்பதற்கு முன்பே இலங்கையில் விஞ்ஞானப்பாடங்கள் கற்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பி.தயாளன்

Pin It