இன்று ஒரு நாடு, அதற்குக் கீழ் மாநிலங்கள், அதற்குக் கீழ் மாவட்டங்கள், அதற்குக் கீழ் கிராமங்கள், பஞ்சாயத்துகள். இதுவெல்லாம் இன்று எல்லா நாட்டிலும் பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை. ஆனால் இதற்குக் காரணமான இந்த முறையை அறிமுகப்படுத்தி நல்லாட்சி புரிந்த ஷெர்ஷா என்ற மாமன்னனை நமக்குத் தெரியுமா? இன்று நாம் ரூபாய் என்றும் Rupees என்றும் அழைக்கப்படும் பெயர்க்கான காரணத்தை அறிந்துள்ளோமா? நாணய பண்டமாற்று முறைக்கு அடித்தளமிட்டவரின் பெயர் எப்படி நமக்குத் தெரியாமல் போனது? பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தால் தானே நமக்குத் தெரியும்! பள்ளிக்கூட பாடங்களே வரலாற்றுத் திரிபுகளைத் தானே பெருமளவில் கற்றுத் தருகின்றன.

Sher Shah Suriஃபரீத்கான்

ஆப்கானின் மிக பழமையான பழங்குடி பஷ்டு இனத்திலிருந்து வந்து இன்றைய இந்திய சமஸ்தானத்தின் பீகாரின் ஒரு சிறிய ஆட்சிப்பகுதியை ஆண்டு கொண்டிருந்தவர்களுக்கு மகனாகப் பிறந்தார் ஃபரீத்கான். சிறு வயதைத் தொட்டே தனது துள்ளும் அறிவால் சிற்றன்னையின் கோபத்திற்கு ஆற்பட்டு வீட்டைத் துறந்து பள்ளிக்கூடத்தில் தன்னைத் தானாகவே இணைத்துக் கொண்டவர். படிப்பில் ஆர்வமும் வரலாற்று அறிவும் ஆன்மிக ஒழுக்கமும் நிறைவாக வளர்த்தெடுக்கப்பட்டு இளவயதை அடைந்ததும் தனது தந்தையின் இறப்பின் காரணமாக அவரது பொறுப்பில் அமர்த்தப்படுகிறார் ஃபரீத்கான்.

சிறு ராஜ்ஜியமாக இருந்தாலும் திறம்பட ஆட்சி செய்து மக்களின் நன்மதிப்பையும் பெற்று, சிறந்த தலைவராக அனைவராலும் அறியப்பட்டார் ஃபரீத்கான். ஆக்ராவை ஆண்டதுபோதும், எனது அமைச்சரவையில் சேர்ந்து இனி மக்கள் பணி செய் என்று மன்னரான பஹர்கான் லொகானி சொன்னதும் அமைச்சரவையில் சேர்ந்தார்.

ஷேர்கானான ஃபரீத்கான்!

ஒருமுறை காட்டில் தன் சிறிய படைகளுடன் சென்று கொண்டிருக்கும் போது இடையில் கிராமத்தார்களை அடிக்கடி தொந்தரவு செய்த புலி ஒன்று தலைப்பட்டது. படை வீரர்கள் ஒதுங்க தன் பிரமாண்ட தோற்றத்துடன் முன்னேறிய ஃபரீத் கான் புலியை நேருக்கு நேர் சந்தித்தார். ஒரு மனிதனும் எட்டடி உயரம் கொண்ட புலியும் நேருக்கு நேர் போரில் சந்திக்கிறார்கள். போர் முரசு கொட்டுவதற்கு முன்பே புலி பாய்ந்தது. புலியின் வேகத்தை கணக்கிட்டு சற்று விலகி, தாடையில் ஒரு பலத்த அடியை கொடுத்தார் ஃபரீத். ஒரே அடி, புலி சுருண்டது! (எந்த மிகைப்படுத்தலும் இல்லை, இச்சம்பவத்தை அனைத்து சரித்திர ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.) சுருண்ட புலியை மேலும் மயக்கமடையச் செய்து கால்களைக் கட்டி அரசவைக்கு தூக்கி வந்தார்கள் வீரர்கள்.

மன்னர் வியந்து பார்க்கிறார். வெட்டுக்கள் இல்லை, வடுக்கள் இல்லை எப்படி புலியை கொன்றீர்கள் என்றதும் ஃப்ரீத்தின் வீரத்தைச் சொன்னார்கள் வீரர்கள். ஃபரீத்தைப் பாராட்டி இன்று முதல் உன்னை ஷேர்கான் என அனைவரும் அழைக்கட்டும் என்று அறிவித்தார்.

இளவரசனின் ஆசானாக ஷேர்கான்!

பீகார் மன்னன் சுல்தான் தனது மகனுக்கு போர்வித்தைகளையும் நிர்வாக முறைகளையும் கற்றுக் கொடுக்க ஷேர்கானையே ஆசிரியராக நியமித்தார். ஒரு ஆசானாக ஷேர்கான் அனைத்தையும் இளவரசனுக்கு கற்றுக் கொடுத்தார். அந்த சமயம் மன்னனும் நோய்வாய்ப்பட்டு இறந்து விடவே, சிறு வயதிலேயே இளவரசன் ஆட்சிக்கு வருகிறான். அவனுக்கு பின்னால் நின்று முழு ஆட்சி பொறுப்பையும் தானே கண்காணிக்கிறார் ஷேர்கான்.

சரியான மன்னன் இல்லாத நாடு அடித்தால் சுருண்டுவிடும் என்ற மிதப்பில் பாபரின் மகன் ஹுமாயுன் பீகாரின் மீது படையெடுக்கிறான். தனது போர் உக்தியால் ஹுமாயுனின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி ஓட விட்டார் ஷேர்கான். அடுத்து தொடர்ச்சியாக சுனார் கோட்டைக்காக நடைபெற்ற யுத்தத்தில் தோல்வி, ஹுமாயுன் வெளியேறும் இடங்கள் அனைத்தும் ஷேர்கானின் கோட்டையாக மாறியது.

ஷெர்ஷாவான ஷேர்கான்!

மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட பேரரசனாக மாறினார் ஷேர்கான். 1539ம் ஆண்டு தன்னை ஷெர்ஷாவாக அறிவித்து கொண்டார். அப்போது ஷெர்ஷாவுக்கு வயது 54!

வீட்டை விட்டு ஓடி வந்த சிறுவனாக தனது வாழ்வை ஆரம்பித்து, ஒரு சிறு பகுதியின் ஆட்சியாளனாக. அடுத்து நாட்டின் அமைச்சரவை பகுதியில். பிறகு இளவரசனுக்கு ஆசானாக! அப்பப்பா... ஃபரீத்கான் ஷேர்கானாக மாற்றம் அடைந்து ஷெர்ஷாவான போது வரை உள்ள வரலாற்றில் இவ்வளவு வீரம் இருந்தாலும் நாம் இதைப் பேச போவதில்லை.

1540ல் பேரரசனான ஷெர்ஷா 1540லிருந்து 1545 வரை மட்டுமே உயிரோடிருந்தார். இந்த ஐந்தாண்டில் இவர் நிகழ்த்திய சாதனை தான் பின்னாளில் நாடுகளுக்கு ஒரு தெளிவான நிர்வாக முறையை கற்றுக் கொடுத்தது. வெறும் ஐந்தாண்டுகள் செய்த சீர்திருத்தங்கள் நாட்டின் ஒட்டுமொத்த வரலாற்றையுமே மாற்ற செய்தது. இந்தப் பெருமைக்கான ஷெர்ஷாவின் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டது வேதனை.

ஐந்து வேளை தொழுகையினாலும், ஃபார்ஷி மொழி பேசுவதாலும், ஷெர்ஷா என்ற பெயரை வைத்ததாலும், ஒரு மத அடையாளத்திற்குள் முடக்கி ஒரு சரித்திர சாதனையாளனின் வரலாறு பேசப்படவில்லையென்றாலும் ரூபாய், முனிஸ்பாலிட்டி என்ற பெயர்களிலும், நாட்டின் பல்வேறு நிர்வாக முறைகளிலும் இன்றும், என்றும் ஷெர்ஷாவின் வரலாறு தொடர்வதை யாராலும் தடுக்க முடியவில்லை... முடியாது!.

(தொடரும்)

- அபூ சித்திக்