இந்த இரண்டு நபர்களுமே இந்திய சரித்திரத் தின் மத்திய அல்லது இடைக்காலத்தை (மெடீவல் பீரிய்ட்) சார்ந்தவர்கள் (கி.பி.712 முதல் 1764 வரை யிலான காலம்). பேரரசு என்கிற நிலையில் இந்தியாவைக் கடைசியாக ஆண்ட இந்திய மன்னர் ஹர்ஷவர்த்தனன் ஆவார். கன்னோ ஜியைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த இவரது ஆட்சி கி.பி.700க்குச் சற்று முன்னதாகவே முடிவுக்கு வந்துவிட்டது. அதற்குப் பின்பு ஹிந்துஸ்தானம் அல்லது ஆர்யாவர்த்தம் என்று குறிப்பிடப்படும் விந்திய மலைக்கு வடக்கே உள்ள பகுதியில் எந்தப் பேரரசும் ஆட்சி செலுத்த வில்லை. பல மன்னர்கள் பல பகுதிகளை ஆண்டு வந்தனர். அவர்களுக்கிடையே பகைமை நிலவிய தால் ஓயாத போர்கள் தொடர்ந்தன. கைபர் கண வாய்க்கு அப்பால் நிலைபெற்றிருந்த இஸ்லாமிய மன்னர்களுக்கும் போர்த் தளபதிகளுக்கும் இந்தியாவின் வடபகுதியைப் படை எடுப்பதும் கைப்பற்றுவதும் எளிதாகிவிட்டது.

எட்டாவது நூற்றாண்டில் சிந்து மாகாணப் பகுதியை முஸ்லிம்கள் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். இருப்பினும் கி.பி.1205 வரை டில்லியைத் தலைநகராகக் கொண்டு வட இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி ஏற்படவில்லை. கி.பி.1206-இல் கோரிமுகம்மதுவின் பிரதிநிதியான குத்புதீன் டில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினார். அவர் துருக்கி நாட்டைச் சார்ந்தவர். இந்தியாவில் முகலாயர் களின் ஆட்சியை 1526-இல் பாபர் நிலைநிறுத் தினார். அவரது சந்ததிகள் 1764 வரை இந்தியாவை ஆண்டனர். பெயரளவிற்கு டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள சிறிய பகுதியில் 1857 வரை முகலா யர்கள் ஆண்டனர். பஹாதூர் ஷா கடைசி மன் னர் ஆவார். சிப்பாய்க்கலகம் என்று வெள்ளையர் களால் குறிப்பிடப்பட்ட முதல் சுதந்திரப்போர் 1858-இல் முடிவுக்கு வந்தபோது பஹாதூர் ஷா கைது செய்யப்பட்டு பர்மா நாட்டில் சிறை வைக்கப்பட்டார்.

மத்திய காலத்தில் அக்பர், ஷாஜஹான் அவுரங்கசீப் போன்ற பிரசித்தி பெற்ற மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். இருப்பினும் நாம் கஜினி முகம்மதுவையும் முகம்மது துக்ளக்கையும் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் - இவர்களைப் பற்றி மக்களிடையே முற்றிலும் தவறான எண்ணங்கள் நிலவுகின்றன. கஜினி முகம்மது தோல்விக்கு ஒப்பற்ற உதாரணமாகக் காட்டப்படுகிறார். “அவர் இந்தியாவின் மீது பதினேழு தடவை படையெடுத்தார் என்று கூறப்படுகிறது. அதன் உட்பொருள் அவர் முதல் பதினாறு முயற்சிகளில் தோல்வியைத் தழுவினார், பதினேழாவது முயற் சியில் சோம்நாத் நகரைக் கைப்பற்றினார் என்ப தாகும். ஒரு திருத்தம் என்னவெனில் அவர் பதினா றாவது படையெடுப்பில் சோம்நாத் நகரைக் கைப் பற்றினார். பதினேழாவது படையெடுப்பில் ஜாட் மன்னர்களைத் தோற்கடித்தார். உண்மை நிலை என்னவெனில் உலக சரித்திரத்தில் தலைசிறந்த மாவீரர்களில் ஒருவராக கஜினி முகம்மது குறிப் பிடப்படுகிறார். அலெக்சாண்டர் சிந்து நதிக்கரை வரை வந்துவிட்டு கிரேக்க நாட்டிற்குத் திரும்பி விட்டார். நெப்போலியன் ரஷ்யர்களாலும் ஆங் கிலேயர்களாலும் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் கஜினி முகம்மது ஒருவர்தான் எல்லாப் போர்களிலும் வாகை சூடித் தோல்வியை ஒரு போதும் காணாத மாவீரர்!

அப்படி என்றால் இந்தப் பதினேழு படை யெடுப்புகள் ஏன்? ஆம். அவர் இந்தியாவின் மீது பதினேழு தடவைகள் போர் தொடுத்தார் என்பது சரித்திர அடிப்படையிலான உண்மைதான். அவ ரது ஒவ்வொரு படையெடுப்பின் போதும் ஒரு நகர் அல்லது ஒரு பகுதியைக் குறிவைத்தார். அந்த மன்னரை வெற்றிகண்டு நகரைக் கைப்பற்றி, கோவில்களில் வைக்கப்பட்டிருந்த தங்கம் - வைர நகைகளைக் கொள்ளையடித்துத் தம் நாட்டிற்குத் திரும்பிவிட்டார். அவரது நோக்கம் கொள்ளை யடிப்பதுதான் - ஆட்சியை நிலைநாட்டுவது அல்ல. அவரது பதினேழு படையெடுப்புகள் பற்றிய விவரம்: 1. இந்தியாவின் எல்லை நகரங்கள் - கைபர் கணவாயை ஒட்டிய பகுதி - கி.பி.1000, 2. பெஷாவர் மற்றும் வால்ஹிந்த் கி.பி.1001, 3. பீரா (பாட்டியா) 1004, 4. மூல்டான் 1006, 5. நவாஸா 1007, 6. நாகர்க்கோட் 1008, 7. நாராயண் 1009, 8. மூல்டான் 1010, 9. நிந்துனா 1013, 10. தாணேசர் 1014, 11.லோஹ் கோட் 1015, 12. மதுரா மற்றும் கன்னோஜி 1018, 13. ராஹிப் 1021, 14. கிராட் லோஹ்கோட் மற்றும் லாஹோர் 1022, 15. க்வாலியர் மற்றும் காளிஞ்ஜார் 1023, 16. சோம்நாத் 1025, 17. ஜாட் மன்னர்கள் 1026.

கஜினி முகம்மதுவின் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் நாம் முன்பே குறிப்பிட்டபடி - நாடு பிளவுபட்டு மன்னர்கள் ஒருவருக்கொருவர் சண்டையில் ஈடுபட்டதுதான். சிந்து நதிக்கரையில் காந்தாரப் பகுதியைப் பிராமண மன்னர்கள் ஆண்டு வந்தனர். டில்லி கன்னோஜி பகுதிகள் கல்தோமரர்கள் வசம் இருந்தது. புத்த மதத்தைத் தழுவிய பாலர்கள் கங்கை நதிப்பகுதியில் மகத நாட்டை ஆண்டு வந்தனர். குப்தப் பேரரசின் சந்ததியினர் மால்வா பகுதியை ஆண்டனர். நர்மதைப் பகுதி காலாச்சூரிகள் வசம் இருந்தது. இவர்கள் மட்டும் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் கஜினி முகம்மது நிஜமாகவே தோற்று ஓடி இருப் பார். ஆனால் இவர்களது ஒற்றுமை இன்மையும் பரஸ்பரப் பூசல்களும் இந்தியாவின் மீது படை எடுப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையை உருவாக்கி இருந்தது.

கஜினி நகரில் முகம்மதுவின் ஆட்சி சிறப் பாகவே இருந்தது. பேரறிஞர்களையும் புலவர் களையும் அவர் ஆதரித்தார். பாரசீக மொழியின் மிகப் பிரசித்தி வாய்ந்த கவிஞர் ஃபிர்தௌசி கஜினியின் தர்பாரில்தான் இருந்தார். அதேபோல் புகழ்பெற்ற வானியல் மற்றும் வர லாற்றுப் பேரறிஞர் அல்பெரூனி கஜினியின் சபையை அலங்கரித்தார். கஜினி ஒரு அழகிய நகரமாகத் திகழ்ந்தது. அவரது ராஜ்ஜியம் கஜினி நகருக்கு மேற்குத் திசையில் மத்திய ஆசியா வரை பரவி இருந்தது. இந்தியாவை ஆள்வதற்கு அவர் முயற்சிக்கவில்லை.

இருப்பினும் சில குறைகளையும் குற்றங்களையும் நாம் குறிப்பிட்டேயாகவேண்டும். இந்தியாவின் நகரங்களைச் சூறையாடியதையும் கோவில் சொத்துக்களைக் கொள்ளை அடித்ததையும் எப்படி மன்னிக்க முடியும்? ஆனாலும் நாம் நினைவில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில் இச்சம்பவங்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பதினோராவது நூற்றாண்டில் நிகழ்ந்தவை. அக்காலகட்டத்தில் உலகெங்கும் பல்வேறு மன்னர்கள் = நாடுகளிடையே போர்கள் நிகழ்ந்துவந்தன. வெற்றி பெற்ற மன்னரின் படைகள் தாம் கைப்பற்றிய நகரின் சொத்துக்களைச் சூறையாடுவதும் கட்டடங்களை இடிப்பதும் ஊரை எரிப்பதும் சகஜமாக நிகழ்ந் தன. இந்தியாவில் சாளுக்கியர்கள் காஞ்சிபுரத்தை வெற்றிகொண்டபோது அதைத்தான் செய்தனர் - அவர்களைப் பழிவாங்கிய பல்லவர்கள் வாதாபி நகரைச் சூறையாடிக் கொளுத்தினர். சோழ மன்னர்களும் தாங்கள் வெற்றிகொண்ட நகரங் களில் அதைத்தான் செய்தனர். இந்த வாதங்களை முன் வைத்து நாம் கஜினி முகம்மதுவின் செயல் களை நியாயப்படுத்தவில்லை.

அவரைத் தோல்விக்கு உதாரணமாக நாம் கொண்டுள்ள கணிப்பு தவறு என்று சுட்டிக் காட்டுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம். அவருக்கு நாங்கள் மன்னிப்பு வழங்கவில்லை.

முகம்மது துக்ளக்

இப்போது துக்ளக் பற்றிய தகவல்கள்:

டெல்லியைத் தலைநகராகக் கொண்டு இவர் இந்திய நாட்டில் 1321 முதல் 1388 வரை 67 ஆண்டு களுக்கு ஆட்சி செலுத்தினார். 1340ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் தலைநகரைத் தென்னிந்தியப் பகுதியில் உள்ள தேவகிரிக்கு மாற்றினார். தேவகிரி தௌலத்தாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் மற்றும் அர சாங்கப் பணியாளர்கள் இந்த மாற்றத்தை விரும்ப வில்லை என்பதாலும் அந்த ஆண்டில் அங்குக் கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியதாலும் தலைநகர் மீண்டும் டெல்லிக்கு மாற்றப்பட்டது. அவரது இந்த ஒரு செயலை வைத்து அவருக்குக் கோமாளி என்று பட்டம் சூட்டிப் பலரும் மகிழ்கின்றனர்.

உண்மையில் துக்ளக் கோமாளி அல்ல பிரபல வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டான்லீலேன் பூல் அவர்களது வார்த்தைகளில் அவரது எண் ணங்களும் செயல்களும் முன்னோடித் தன்மை கொண்டவை. அவர் புத்திக் கூர்மை படைத்தவர் மற்றும் சிந்தனையாளர். அவரது காலத்தில் எல்லாத் துறைகளிலும் அவர் வல்லுநராகத் திகழ்ந் தார். இந்தியக் கல்வியில் இலத்தினாகக் கருதப் பட்ட பாரசீக மொழியில் அவர் கவிதை எழுதி வந்தார். அவரது உரைநடையும் ஒப்பற்றது. மேடைப்பேச்சிலும் வல்லவர். தத்துவஞானி - குறிப்பாக கிரேக்க தத்துவ ஞானத்தை நன்கு கற்றிருந்தார். கூடவே தர்க்க இயலும் (லாஜிக்) கணிதம் மற்றும் அறிவியல் துறைகளிலும் ஞானம் உள்ளவர். சமகாலத்துப் பேரறிஞர்கள் அவரிடம் பேசுவதற்கு அச்சப்பட்டனர். அக்காலத்தில் பிர பலமாகி இருந்த கையெழுத்துக் (குர்ஆன் போன்ற நூல்களை அழகிய எழுத்துக்களில் நகல் எடுப்பது) கலையிலும் வல்லவர். அவரது அழகுணர்வு அவரது முத்திரையுடன் வெளியிடப்பட்ட நாண யங்களின் வாயிலாகப் புலனாகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால் அக்காலத்திய கலாசாரத்தின் சிறப்பு அம்சங்களை அவரிடம் காணமுடிந்தது. அவரது மேதா விலாசத்துடன் அவரது நினைவாற்றலும் போற்றக்கூடியதே. அதே போல் அவரது நெஞ்சுறுதி - தளராத அய ராத உறுதிபடைத்த உள்ளம் அவருக்கு இருந்தது. தலைநகரை மாற்றியது, நாணயப் புழக்கத்தில் மாற்றம் கொண்டு வந்தது - எல்லாமே நல்ல திட் டங்கள்தான். ஆனால் மக்கள் அவரது திட்டங் களை ஏற்கும் நிலையில் இருந்தார்களா என்பது பற்றி அவர் கவலைப்படவில்லை. மாற்றங்களை மக்கள் எளிதாக ஏற்கமாட்டார்கள் என்பது அவருக்குப் புரியாமல் போய்விட்டது. தனது திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை அவர் தண்டித்து வந்தார். அவர், தான் நினைத்த தெல்லாம் உடனடியாகச் செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தார். அப்படி நடக்காத போது அவருக்கு மிகவும் கோபம் வந்தது. அவரது வேகத் திற்கு ஈடு கொடுக்க முடியாதவர்கள் எல்லோருமே தண்டிக்கப்பட்டனர். முன்னோடியான திட்டங் கள், பிரமாதமான எண்ணங்கள் - கூடவே பொறுமை இன்மை - மற்றவர்களை அனுசரிக்க மறுத்ததன் காரணமாக அவர் தோல்வியைத் தழுவ நேர்ந்தது.

மத்திய கால இந்திய வரலாற்றில் ஏனைய நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பிய விஷயத்தில் அவர் ஒரு முன்னோடி. அவரது ஆப்பிரிக்க நாட் டின் (மொராக்கோ) தூதரான பிரசித்தி பெற்ற இபன்பட்டூட்டா துக்ளக்கின் சபையை அலங்கரித் தார்.

தலைநகரை மாற்றியது பற்றிச் சில வார்த் தைகள் துக்ளக்கின் சாம்ராஜ்யம் வட திசையில் இமயமலையிலிருந்து தென் திசையில் மதுரை வரையிலும், மேற்குத் திசையில் பெஷாவரிலிருந்து கிழக்கே வங்காளம் வரையிலும் பரவி இருந்தது. ரயில்வேக்களும் தொலைத் தொடர்பு வசதிகளும் இல்லாத காலம் அது. மாட்டு வண்டிகளும் குதிரைகளும்தான் பயணச் சாதனங்கள். அத் தகைய சூழலில் புவியியல் அடிப்படையில் நாட் டுக்கு மையமான ஒரு இடத்தைத் தலைநகராகத் தேர்ந்தெடுத்தது அவரது புத்திக் கூர்மைக்கும் ராஜதந்திரத்திற்கும் ஒரு ஒப்பற்ற எடுத்துக்காட்டா கும். நாம் முன்பே குறிப்பிட்டபடி மக்கள் அதை ஏற்கவில்லை. தண்ணீர்ப் பஞ்சம் மற்றொரு கார ணம். அதனால் முயற்சி தோல்வியுற்றது. இதில் கோமாளித்தனம் என்ன இருக்கிறது?

ஆனாலும் துக்ளக்கிடம் சில குறைபாடுகள் நிச்சயமாக இருந்தன. அவரது மேதா விலாசத் திற்கு எதிர்மறையாகக் கொடூர குணமும் அவரி டம் இருந்தது. சில பயங்கரமான சம்பவங்களை இபன்பட்டூட்டா குறிப்பிட்டுள்ளார். குற்றவாளி களைத் தண்டிப்பதற்குச் சில யானைகளுக்குப் பயிற்சியளிக்கப்பட்டிருந்தது. அவற்றின் தந்தங் களில் கூர்மையான கத்திகள் பொருத்தப்பட்டிருந் தன. குற்றவாளிகளை முதலில் பந்தாடிய யானை கள் அவர்களைக் கால்களால் மிதித்து துவம்சம் செய்து கத்திகளால் கூறுபோடும். மன்னரும் பிர தானிகளும் இக்காட்சிகளைக் கண்டு ரசிப்பார்கள்.

சுல்த்தானின் சகோதரனும் - சகோதரனின் மகனும் இந்தக் கொடூரத்திற்குத் தப்பவில்லை. மன்னருக்கு எதிராக சதி செய்தார்கள் என்பதற்காகச் சிறைப்பிடிக்கப்பட்ட இருவரும் உயிர் இருக்கும் நிலையிலேயே தோல் உரிக்கப்பட்டு பெரிய கொப்பறைகளில் வறுக்கப்பட்டனர். இவ் வாறு சமைக்கப்பட்ட அவர்களது உடல் பகுதிகள் அவர்களது குடும்பத்தினருக்கு உணவாக வழங்கப் பட்டன.

அந்த மகாமேதை இப்படியும் செய்து வந்தார்! ஒரு வழியாக 1388ஆம் ஆண்டில் மரணம் காரண மாக அவரது ஆட்சி முடிவுக்கு வந்தபோது - அக்காலத்திய சரித்திர ஆசிரியர் கூறியது: “சுல்த்தானிடமிருந்து மக்கள் தப்பினர். மக்களிடமிருந்து சுல்த்தானும் தப்பினார்.”

(உங்கள் நூலகம் நவம்பர் 2011 இதழில் வெளியானது)

Pin It