மேலைநாட்டு இலக்கியம், கல்வி, அரசியல் சிந்தனைகள், கலாசாரம் இவற்றுடன் புதிதாகத் தோன்றிய ‘மத்திய தர வகுப்பினர்’ என்ற பிரிவினரின் தாக்கத்தையும் முதலில் உணர்ந்த மாநிலம் வங்காளம் தான். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே கல்வி, சமயம், சமுதாயம் என்று அனைத்துத் துறைகளிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இந்தியாவின் பிற மாநிலங்களைவிட நூறு ஆண்டுகள் முன்னோக்கிச் செல்லும் மாநிலமாக வங்காளம் விளங்கியது. “இந்தியாதான் வங்காளத்தின் மாகாணமோ” என்று வங்காளத்தின் முற்போக்குச் சிந்தனைகள் குறித்து வியந்தவர் காந்திஜி.

மேலைநாட்டுக் கல்வியும், இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றமும் இந்திய சிந்தனையாளர்களிடையே ஒரு புதிய தேசிய உணர்வை ஏற்படுத்தின. ‘தேசிய எழுச்சிவாதிகள்’ எனப்பட்ட சீர்திருத்தவாதிகள், ‘தேசிய மறுமலர்ச்சி’ என்று அழைக்கப்பட்ட இயக்கத்தின் மூலம் குடும்பம் என்ற கட்டமைப்பிலும், பெண்கள் மீதான கருத்தாக்கத்திலும் மாற்றம் ஏற்படுத்த முனைந்தனர். சமுதாய எழுச்சியை ஏற்படுத்தாமல், தேசிய முன்னேற்றமும், அரசியல் சுதந்திரமும் முழுமையடையாது என்றனர். இதன் மூலம், இந்தியாவை ஒரு ‘நாகரிகமடைந்த நாடாக’ வெளிப்படுத்திக் கொள்ள விரும்பினர். ஆங்கிலேய அரசும், இவர்களுடன் இணைந்து பல சீர்திருத்தச் சட்டங்களை ஏற்படுத்தியது. ஏனெனில், “நாகரிகமற்ற இனங்களை நாகரிகப்படுத்துவதற்காகவே தங்கள் இனம் படைக்கப்பட்டது என்றும் அதற்காகவே காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தனர்.” எனவே, இத்தகைய சட்டங்களை இயற்றுவதன் மூலம் இந்தியாவில் தங்கள் ஆட்சியை நியாயப்படுத்திக் கொள்ள முயன்றனர்.

‘இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி’ என்று அழைக்கப்பட்ட இராஜாராம் மோகன் ராய் காலத்தில் சமூக எழுச்சி வீறுகொண்டது. இந்துச் சமயத்தில் பின்பற்றப்பட்ட தவறான கருத்துக்கள், நடைமுறைகளைக் கடுமையாக எதிர்த்தார். பாமர மக்களுக்கும் புரியும் வகையில் வேதாந்தத்தை வங்க மொழியில் மொழிபெயர்த்தார். சாதிப் பிரிவினையால் தான் மக்கள் நாட்டுப்பற்று இல்லாது காணப்படுகின்றனர் என்றார். மதம் என்ற பெயரில் பெண்கள் மீதான அடக்குமுறைகளை, கொடுமையாகக் கடுமையாகச் சாடினார். பலதார மணங்களை எதிர்த்தார். ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தையும் கைம்பெண் முறையையும் எதிர்த்தார். 1822-இல் எழுதிய “பெண்களின் பண்டைய உரிமைகள்” என்னும் நூலில் பெண்களின் சொத்துரிமை குறித்து வாதிட்டார். இவருக்கு ஆதரவாக, வில்லியம் பெண்டிங், டேவிட் ஹேர், துவாரகநாத் தாகூர், பிரசன்ன குமார் தாகூர் போன்றோரும் வாதிட்டனர்.

அதே சமயம், அத்தகைய சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்த பிற்போக்குவாதிகளும் இருந்தனர். சமூக சீர்திருத்தத்தைவிட அரசியல் சுதந்திரத்திற்கே அதிக முக்கியத்துவம் அளித்தனர். தங்கள் நாட்டில் சீர்திருத்தம் செய்வதற்கு காலனிய ஆட்சியாளர்க்கு உள்ள அதிகாரத்தையும் எதிர்த்தனர். “முதலில் இந்தியாவிற்கு அரசியல் சுதந்திரம் அளிக்கட்டும். பின்னர் அதே நாளில் நூறு கைம்பெண்களுக்குத் தாம் மறுவிவாகம் செய்துவைப்பதாக பாலகங்காதர திலகர் சூளுரைத்தார். பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வி என்பது ‘குரங்கு கையில் கொடுக்கப்படும் கத்தியைப் போன்று ஆபத்தானது” என்றார்.

இவ்வாறு, இந்தியாவில் சமூக சீர்திருத்தம் என்பது ஒரு முக்கோண சட்டத்திற்குள் மாட்டிக் கொண்டிருந்தது. இச்சூழலில், இந்தியா என்னும் நாடு, அதன் இனம் ஆகியவற்றின் ‘பாரம்பரியத்தை சுமக்கும் ஒரு தேசிய அடையாளமாகப் பெண்ணை’ சித்திரித்துக் காட்ட தேசிய எழுச்சிவாதிகள் முயன்றனர். இதன் மூலம் ‘குடும்பம்’ என்னும் இந்தியப் பாரம்பரியத்தின் மீது காலனி சக்தி பதியாதவாறும் பார்த்துக்கொள்ள விரும்பினர். எனவே, ‘குடும்பம்’ என்னும் கட்டமைப்பைச் சிதைக்காமல், அதே சமயம், அதன்மீது தேவையற்றுப் படர்ந்திருக்கும் நச்சுக்களை மட்டும் அகற்றி இந்தியப் பாரம்பரியத்திற்குப் புதிய பொலிவை அளிக்க விரும்பினர்.

*      இந்திய சமுதாயத்தை நவீனமானதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்;

*      அதே சமயம், இந்தியக் குடும்பப் பாரம்பரியத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் வேண்டும்;

*      பெண்ணையே இந்தியப் பாரம்பரியத்தின் அடையாளமாகக் காட்ட வேண்டும்;

*      இதற்கென சில சீர்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும்;

*      அச்சீர்திருத்தங்களை எதிர்க்கும் பிற்போக்குவாதிகளையும் எதிர்கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில், தேசிய எழுச்சிவாதிகள் ஒரு சூட்சுமமான வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். பண்டைய வேதாந்தங்களில் குறிப்பிடப்படாத, இடைக்காலத்தில் பின்பற்றப்பட்ட சில பழக்க வழக்கங்களை மட்டுமே மாற்ற விரும்பினர். இதற்கு, இவர்கள் ஆதாரமாக மேற்கோள் காட்டியவை பண்டைய வேதாந்தங்களைத்தான். உதாரணமாக, ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம், கைம் பெண் நோன்பு, இதனால் ஏற்பட்ட இழிநிலை ஆகியவற்றைத் தான் சீர்படுத்த விரும்பினர். இவை, பிற்காலத்தில் மேல்தட்டு வகுப்பினரால் மட்டுமே பின்பற்றப்பட்ட பழக்கங்களாகும். வேதங்கள் பற்றிய கடும் விவாதம் நடைபெற்றது. இவ்விவாதங்களின் கருப்பொருளாக, மையப் பொருளாக இருத்தப்பட்டவள் பெண். தன் மீதான, தன்னைப் பற்றிய விவாதங்களில் கலந்துகொள்ள முடியாத மௌன சாட்சியாகத்தான் பெண் வைக்கப்பட்டு இருந்தார்.

‘ஒரு நாட்டு நாகரிகத்தின் குறியெண் பெண் தான்’ என்று பின்னாளில் ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியத்தின் சீரிய நெறிக்குப் பெண்ணே அடையாளமாகக் காட்டப்பட்டாள். கல்வி கற்ற பெண் குடும்பநலன், குழந்தைநலன் பேணுவதில் சிறப்பாகச் செயல்படுவாள் என்று சொல்லப்பட்டது. கல்வி கற்ற பெண், தன் கணவன் பேசும் கருத்துக்களைப் புரிந்துகொள்ளக்கூடிய நல்ல துணையாக இருப்பாள் என்று கூறப்பட்டது. குடும்பப்பாரத்தைச் சீராக சுமந்து செல்லவும், கணவனை ‘வீணை வாசித்து மகிழ்விக்கவும்’, சிறந்த தலைமுறையினரை உருவாக்கவும் பெண் கல்வி அவசியம் என்றே விவாதிக்கப்பட்டது. பெண் கல்வியால் அந்தப் பெண் எப்படி மேம்பாடு அடைகிறாள் என்பதைவிட அதனால் அவள் சார்ந்த குடும்பம் எப்படி மேம்பாடு அடைகிறது என்ற கண்ணோட்டம் தான் இன்னமும் உள்ளது.

19-ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி இயக்கத்தில் சாஸ்திரங்களும், பாரம்பரியமும், பழக்கவழக்கங்களும் முன்னிலைப்படுத்தப்பட்டன. பெண்களின் இழிவான நிலை, அவர்கள் அனுபவித்த கொடுமைகள், இன்னல்களை மையமாகக் கொள்ளாமல், அவற்றைப் பற்றி சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன என்பதே மையமாகக் கொள்ளப்பட்டது. பெண் ஒரு விவாத அரங்கமாக வைக்கப்பட்டு ஆனால் “இந்தியப் பாரம்பரியம்” என்பதை மையமாகக் கொண்ட விவாதங்கள்தாம் நடைபெற்றன. சாஸ்திரங்களை சேதப்படுத்தாமல் பெண் மீதான நடைமுறைகளைச் சீர்படுத்த இயலுமா என்பதே விவாதமாக இருந்தது.

சதியும்’, சாஸ்திரமும்: ‘சதி என்னும் உடன் கட்டை ஏறும் பழக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று முயற்சித்தபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினருமே சாஸ்திரங்களைத் தான் நாடினர். Tunfatal Muwahiddin (A gift to Deisto) என்னும் முற்போக்கான நூலை பாரசீக மொழியில் எழுதியவர் இராஜாராம் மோகன் ராய். பகுத்தறிவுவாதத்திற்குப் பெரும் முக்கியத்துவத்தை அளித்த நூல். ‘சமயம்’ என்ற ஒன்றையே மறுக்கும் நிலையில் அந்தப் புத்தகத்தை எழுதினார். ஆனால், அதே இராஜாராம் ‘சதி’ பற்றி வாதிடும்போது ‘சாஸ்திரம் என்ன சொல்கின்றது?’ என்பதையே மேற்கோள் காட்டினார்.

“Abstract of Arguments regarding the burning of widows as a Religious Rite” என்ற ஒன்றை 1830-இல் வெளியிட்டார். அதிலும், உடன்கட்டை ஏறும் பழக்கத்தை இந்து சமயம் அனுமதித்துள்ளதா என்று தான் வினவியிருந்தார். இதற்காகவே, பண்டைய சாஸ்திரங்கள் எளிமையாக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. இதனால், சாஸ்திரங்கள் அதுவரை பெறாத இன்னும் உயர்ந்த அந்தஸ்தையே பெற்றன. பிரிட்டிஷ் அரசும் இந்து பண்டிட்டுகளின் கருத்துக்களையே நாடியது. 1817இல் உச்சநீதிமன்றத் தலைமை பண்டிட்டான மிருக்குஞ்சயா வித்யாலங்கர், ‘சதி’ என்னும் பழக்கம் சமய சாஸ்திரங்களால் ஏற்கப்படவில்லை என்று அறிவித்தவுடன்தான் 1829-இல் ‘சதி’ பழக்கம் சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவிக்கப்பட்டது

விதவாமறுமணம்: 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே விதவா மறுமணம் பற்றியும் பெரும் விவாதம் நடைபெற்றது. இராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், மலபாரி ரானடே, தயானந்த சரஸ்வதி ஆகியோர் விதவா மறுமணத்திற்கு ஆதரவாக வாதாடினர். ஆனால், இங்கும் சாஸ்திரங்களின் ஒப்புதலையே எதிர்நோக்கினர். மேல்தட்டு வகுப்பினரிடம் விதவா மறுமணம் மறுக்கப்பட்டிருந்தது. கீழ் வகுப்பினர் இடையே மறுமணம் பழக்கத்தில் இருந்தது. எனவே, கல்கத்தா, அலகாபாத், மெட்ராஸ், பாம்பே ஆகிய நகரங்களிலிருந்த நீதிமன்றங்கள் இம்முயற்சியை எதிர்த்தன. கீழ்ச்சாதி, மேல் சாதியினரிடையே எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விடும், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறி எதிர்த்தனர். எனவே, 1837-இல் இந்திய சட்டக் கமிஷன் இம்முயற்சியைக் கைவிட்டது.

1855-இல் மீண்டும் இவ்வியக்கத்தைப் புதுப்பித்தனர். இச்சமயம், சாஸ்திரங்களின் உதவியை நாடியதுடன், ‘பெண்களின் பவித்ரம்’ என்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. விதவா மறுமணம் மறுக்கப்படுவதால் ஒழுக்கக்கேடு ஏற்படுவதாக வித்யாசாகரே கூறினார். பெண்களின் பாலியல் உறவை வரையறை செய்வதற்காகவே மறுமணம் என்பது ஏற்கப்பட்டது. 1856-இல் விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்டது. அதே சமயம், மறுமணம் செய்துகொள்ளும் பெண் தன் முதல் கணவன் மூலமாகப் பெற்ற சொத்துரிமையை இழக்கவும் வகை செய்தது. இதிலும், அவள் தன் கற்புநிலையை மீறினாள் என்பதற்கான தண்டனையாகவே வழங்கப்பட்டது. அதே சமயம், பெரும்பான்மையான கீழ்மட்ட இனத்தில் பழக்கத்திலிருந்த மறுமண முறை சிறுபான்மையான மேல்மட்டத்தினருக்காக சட்டப்படி ஏற்கப்பட்டது. இதனால், மறுமணம் என்ற உரிமையை எந்த இழப்பும் இல்லாமல் அனுபவித்துவந்த பெரும்பாலான கீழ்மட்ட பெண்கள் இச்சட்டப்படி தங்கள் சொத்துரிமையை இழந்தனர்.

கரேவா: மறுமணம் குறித்து பிரிட்டிஷாரின் போக்கு வேறுபட்டதாக இருந்தது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் பழக்கத்தில் இருந்த விதவா மறுமணம் என்பதை ஒரு இழப்பின் அடிப்படையில் சட்டப்படியாக்கியது. ஆனால், பஞ்சாபில் ஜாட் இனத்தவர்களிலே காணப்பட்ட ‘கரேவா’ என்னும் பழக்கத்திற்கு பிரிட்டிஷ் அரசு வேறு விதமான ஆதரவை அளித்தது.

பெரும் நிலக்கிழார்களான ‘ஜாட்’ இனத்தவர் இடையே காணப்பட்ட விதவா மறுமணம் என்னும் பழக்கம்தான் ‘கரேவா’. முதல் கணவனின் சொத்தின் மீது முழுமையான உரிமைகளைப் பெற்றிருந்த மனைவி அதை விற்பதற்கும் உரிமை பெற்றிருந்தாள். ஆனால், அவ்வாறு குடும்பச் சொத்து கைமாறி விடக்கூடாது என்பதற்காக, அக்குடும்பத்திலுள்ள ஒரு ஆண்மகன், மிக இளம் வயதாக இருந்தாலும் கூட, அப்பெண்ணை மறுமணம் செய்துகொள்ளும் பழக்கம் இருந்தது. ஆனால், அந்த இனப் பெண்கள் அத்தகைய மறுமணத்தை விரும்பவில்லை. பல முறை அரசாங்கத்திடம், இம்முறையைத் தடை செய்யும்படி விண்ணப்பித்தார்கள். ஆனால், இவ்வினத்தவர்கள் செலுத்தும் சொத்துவரிக்காகவும், இராணுவப் பணிக்காகவும் இவர்களது ‘பழக்கத்தில்’ தலையிட மறுத்துவிட்டது பிரிட்டிஷ் அரசு.

இந்தியாவைப் பொறுத்தவரை ‘சமயமும் பெண்களும்’ என்பது மிகுந்த உணர்வுபூர்வமானவை என்பதால் பிரிட்டிஷ் அரசு இவ்விவகாரங்களில் தலையிடாமல் இருந்தது. எனினும், சில சீர்திருத்தங்களால் ‘இந்துமதம் ஆபத்திற்குள்ளாகிறது’ என்று கடும் கண்டனக் குரல் எழுப்பியதால், ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களை மீட்பதைவிட, அந்த ஆணாதிக்கத்துடன் ஒத்துப் போவதே சிறந்தது என்பதை பிரிட்டிஷ் அரசு உணர்ந்திருந்தது.

ரக்மாபாய் வழக்கும் தேசியவாதிகளும்: தாதாஜி பிகாஜி என்பவருக்கு 11 வயதில் திருமணம் செய்விக்கப்பட்ட ரக்மாபாய் தன் கணவருடன் சேர்ந்து வாழவில்லை. பருவ வயது அடைந்தாலும் சேர்ந்து வாழ மறுத்தார். உடல்நலமில்லாத, ஒழுக்கக் கேடான கணவனுடன் சேர்ந்து வாழ மறுத்தார். ஆனால், பிகாஜியோ, தன் மனைவியைத் தன்னுடன் சேர்ந்து வாழ ஆணையிட வேண்டும் என்று 1884-.இல் கீழ்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கீழ்நீதிமன்றம் ரக்மாபாயிற்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. உடனே, இந்துமத வாதிகளும், பாலகங்காதர திலகர் போன்ற தேசிய வாதிகளும் கொதித்தெழுந்தனர். பிகாஜிக்கு ஆதரவாகப் பெரும் நிதி திரட்டப்பட்டு பம்பாய் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் ஆணையின்படியும் பிகாஜியுடன் சேர்ந்து வாழ ரக்மாபாய் மறுத்துவிட்டார். ரக்மா பாய் கைது செய்யப்பட்டதுடன் அவரது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், இந்துச் சட்டப்படி, அவர் மறுமணம் செய்யக்கூடாது என்றும் ஆணையிட்டது.

ரக்மாபாய் வழக்கில் பழமைவாதிகள், பிற்போக்கான தேசியவாதிகள் ஆகியோருடன் பிரிட்டிஷ் அரசும் இணைந்து அப்பெண்ணிற்கு எதிராகத்தான் செயல்பட்டது.

குழந்தைத் திருமணச் சட்டம்: விவாதங்கள், விளைவுகள்: 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட மற்றொரு விவாதம் குழந்தைத் திருமண ஒழிப்பாகும். திருமண வயதை நிர்ணயித்தல், திருமண வாழ்க்கையைத் துவங்குவதற்கான வயதை நிர்ணயித்தல் என்று பல விவாதங்கள் நடைபெற்றன. 1922-1927க்கு இடையில் பல சட்டங்கள் ஏற்பட்டன. 1930-ஆம் ஆண்டு ராய் சாஹேப் ஹர்பிலாஸ் சாரதா என்பவரால் கொண்டு வரப்பட்ட சட்டப்படி, திருமண வயது 15 என்று நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், குழந்தைத் திருமண ஒழிப்புச் சட்டத்தின் மீதான விவாதம் பிற விவாதங்களிலிருந்து வேறுபட்டிருந்தது. குழந்தைத் திருமணத்தால் மிக இள வயது பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமில்லாமல் பிறக்கின்றன. ஆரோக்கியமில்லாத குழந்தைகளால் நல்லதொரு சமுதாயத்தை, நாட்டை உருவாக்க முடியாது. அந்நியர் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றால் திடகாத்திரமான மிகச் சிறந்த புத்திரர்கள் தேவையென்றும் அதற்காக, குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட வேண்டும் என்றும் வாதிட்டனர். சீர்திருத்தவாதிகள், இளம் வயது திருமணத்தால், மகப்பேறால் மரணமடையும் இளம் பெண் குழந்தைகளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை. பால்ய விவாகத்தால் பால்ய விதவைகளானவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். ஆனால், இங்கும் சமூக சீர்திருத்தத்தில் பெண்களின் நிலை விவாதிக்கப்படவில்லை.

பெகராம் மலபாரி, ரானடே, கேசவ சந்திர சேனன் போன்றவர்கள் குழந்தை மண ஒழிப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், சில நாட்களில், ரானடே, 11 வயதான ரமாபாய் என்ற குழந்தையைத் திருமணம் செய்துகொண்டார்.

கேசவ சந்திர சேனன் வயதுக்கு வராத தமது 13 வயது மக ளை 16 வயதான கூச்பிகார் இளவரசனுக்கு, சடங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் செய்வித்தார். இவர் சார்ந்திருந்த ‘இளம் பிரம்மாக்கள்’ சங்கம் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோது ‘இத்திருமணம் ஒரு விதிவிலக்கு’ என்று நியாயம் கற்பித்தார்.

அதே சமயம், பிரிட்டிஷ் அரசும் இச்சட்டத்தை நீர்க்கச் செய்யும் வகையில் சில நுட்பமான முறைகளைக் கையாண்டது.

*      கிழக்கிந்திய கம்பெனியின் 1780-ஆம் ஆண்டு, 1797-ஆம் ஆண்டு சட்டங்கள் இன்னமும் நடைமுறையில் இருப்பதாக அறிவித்தது. இவற்றின் படி, ஒரு இந்துத் தந்தை தன் மகளுக்குச் செய்விக்கும் திருமணத்தில் வேறு யாரும் இடையூறு செய்வது தண்டனைக்குரியதாகும். இதனால், பால்ய விவாகத்தைத் தடுக்க முயலும் சீர்திருத்தவாதிகள் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர்.

*      பால்ய விவாகம் செய்விப்போர் மீது மிகக் குறைவான அபராதத் தொகையே வசூலிக்கப்பட்டது. நாளடைவில், இந்தத் தொகையும் திருமணச் செலவாகக் கருதப்பட்டு பெண் வீட்டாரிடமிருந்து பிள்ளை வீட்டார் வசூலிக்கத் தொடங்கினர்.

*      மேலும் பிரிட்டிஷ் எல்லைக்குள் நடத்தப்படாமல் திருமணங்கள் பிரெஞ்சு அல்லது டச்சு இந்திய எல்லைக்குள் நடத்தப்பட்டன.

பெண்கள் மீதான இடர்களை நீக்குவதில் சீர்திருத்தவாதிகள், மற்றும் பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வாகவே குழந்தைத் திருமணச் சட்டமும் விளங்கியது.

முடிவுரை: தொடக்ககாலச் சீர்திருத்தவாதிகளும், தேசியவாதிகளும் இந்தியப் பாரம்பரியத்தையும், பழக்கவழக்கங்களையும் பாதுகாக்கவே விரும்பினர். இந்தியாவை நவீனப்படுத்த முயன்றாலும் அது அடிவேர் வரை செல்லவில்லை. ‘மேல் நுனிகளை மட்டுமே வெட்டிச் சீர்படுத்த’ விரும்பினர். சாஸ்திரங்களின் அங்கீகாரம் இல்லாத பழக்க வழக்கங்களை மட்டுமே சீர்படுத்த விரும்பினர். அனைத்திற்குமேல், பெண்ணின் கற்பியலிற்குப் பெரும் முக்கியத்துவம் அளித்தனர். பெண்களையும், சாஸ்திர சம்பிரதாயங்களையும் பாதுகாக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தின் பிரதிநிதியாகத்தான் பெண் கருதப்பட்டார். பாலின சமத்துவம் என்ற கண்ணோட்டம் சிறிதுமில்லை.

எனவே தான், சமூக சீர்திருத்த இயக்கத்தில், ‘பெண் மீதான சாஸ்திரியக் கோட்பாடுகள்’ பற்றி விவாதிக்கப்பட்டதே தவிர “பெண் மீதான வன்முறைகளும் அதற்கான தீர்வுகளும்” பற்றி விவாதிக்கப்படவில்லை. ‘பெண்’ சாஸ்திரங்களின் வரையறைக்குள் மட்டுமே வைக்கப்பட்டாள்; ‘பெண்’ என்ற அறிவும், உணர்வும் கொண்ட ‘தனிமனுஷியாக’ அவள் மதிக்கப்படவில்லை. விடுதலைப் போராட்ட காலத்திலும் ‘இந்தியப் பெண்மை’ என்பது ‘தேசியத்தின் அடையாளமாகத் தான்’ கருதப்பட்டது. பாரத மாதா, இந்திய அன்னை என்றெல்லாம் பெண் தொடர்ந்து பாரம்பரியத்தின் பிரதிநிதியாகத்தான் சித்திரிக்கப்பட்டாள்.

(உங்கள் நூலகம் செப்டம்பர் 2011 இதழில் வெளியானது)

Pin It