2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தின் ஒரு நாளில் சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் முற்பகல் காட்சியில் ‘பெட்டிஷன்’ என்றொரு சீனப்படத்தைப் பார்த்தேன். பார்த்ததும் ஒருவிதமான அதிர்ச்சி. அதே நேரத்தில், காலத்தையும் நிகழ்வுகளையும் பதிவு செய்ய சினிமாவைவிட கூர்மையான ஆயுதம் இருக்க முடியுமா என்ற கேள்வியும் மனதில் எழுந்தது. இப்படம் சென்ற ஆண்டின் ‘கான்ஸ்’ திரைப்பட விழாவில் அதிகாரபூர்வமாக திரையிடப்பட்ட படம். இப்படம், மிகச் சாதாரண காமிராவால், தற்போதைய தொழில்நுட்ப நேர்த்தி ஏதும் இல்லாமல் எளிமையாக எடுக்கப்பட்ட ஓர் ஆவணப்படம். ஆனாலும், கான்ஸ் திரைப்பட விழா இதைத் தேர்ந்தெடுக்க காரணம் படத்தில் சொல்லப்பட்ட விஷயம்தான். 

தற்போதைய சீனாவில், சாதாரண மக்கள் நியாயங்களுக்காக, தங்களின் சொந்த வாழ்வில் ஏற்பட்ட அநீதிகளின் தீர்வுக்காக பல வருடங்கள் போராடினாலும், முடிவு கிடைப்பதில்லை என்பதை சொல்கிறது படம். 

நீண்ட நெடிய சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிராந்திய நிர்வாகத்தாலும் உள்ளூர் கட்சி தலைவர்களாலும் பாதிக்கப்பட்ட பல மக்கள் அவர்களுக்கெதிராக மனு கொடுக்க தலைநகர் பீய்ஜிங்கி¢ற்கு பல ஆயிரம் மைல்கள் பயணப்பட்டு வருகிறார்கள். அங்கு அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வோ பதிலோ உடனடியாக கிடைப்பதில்லை. பலமுறை அந்த அலுவலகத்துக்கு அவர்கள் செல்ல வேண்டியுள்ளது. அதற்காக அவர்கள் அங்கேயே அலுவலகத்தின் அருகில், பெய்ஜிங்கின் புறநகர் பகுதியில் தற்காலிக குடியிருப்பில் தங்கிவிடுகின்றனர். நாளடைவில் அது ஒரு காலனியாக மாறி, ‘பெட்டிஷன் காலனி’ என்றே அழைக்கப்படுகிறது. இக்காலனியில் வசிக்கும் சில குடும்பங்களை பல ஆண்டுகளாக ஒற்றை ஆளாக இப்படத்தின் இயக்குநர் ஷாவோ லியாங் படம் பிடித்திருக்கிறார். இறுதியில் 2008ஆம் ஆண்டு பீய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கின்போது, நகர அபிவிருத்திக்காக பெட்டிஷன் காலனி தரைமட்டமாக்கப்பட்டு, எஞ்சியுள்ள சிலர், புதிதாக கட்டப்பட்ட பாலத்துக்கு கீழே இருளில் வாழ்கின்றனர்.

உலகத் திரைப்பட விழாக்கள் என்றதுமே, 25 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்பட கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், முதன் முதலாக உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. அப்போதெல்லாம் உலகத் திரைப்பட விழா என்றாலே டெல்லியில் மட்டுமே நடக்-கும். ஓர் ஆண்டு டெல்லியிலும், அடுத்த ஆண்டு இந்தியாவின் பெருநகர் ஒன்றிலும், மீண்டும் அடுத்த ஆண்டு டெல்லியிலும் நடத்தப்படும். டெல்லியில் நடத்தப்படும் விழா போட்டி விழாவாகவும், பெருநகரங்களில் நடத்தப்படும் விழா போட்டியில்லாத விழாவாகவும் நடத்தப்படும். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், இந்திய உலகத் திரைப்பட விழாவுக்கான நிரந்தர இடம் கோவா என அறிவிக்கப்பட்டு, இப்போது கோவாவில் மட்டுமே அதிகாரப்பூர்வமான இந்திய உலகப்பட விழா நடத்தப்படுகிறது.

கடந்த பத்தாண்டுகளில் பல மாநிலங்கள் தங்களின் தலைநகரங்களில் உலகத் திரைப்பட விழாக்களை நடத்த தொடங்கியுள்ளன. கொல்கத்தா, திருவனந்தபுரம், மும்பை, பூனா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் என்று பல நகரங்கள் இப்போது ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்துகின்றன. இதன் காரணமாக இந்திய அரசின் அதிகாரப்பூர்வ திரைப்பட விழாவிற்கு கவர்ச்சி குறைந்து விட்டது என்னவோ உண்மைதான். அப்போதெல்லாம் டெல்லி உலகத் திரைப்பட விழாவிற்கு ஞிமீறீமீரீணீtமீ அட்டை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும். சினிமாத் துறையோடு சம்பந்தப்பட்டவர்களுக்கும், திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கும், சினிமா பற்றி எழுதுபவர்களுக்கும், பிலிம் சொஸைட்டி இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. 

இப்போது நிலைமை அப்படியில்லை. கான்ஸ், பெர்லின், ஸன்டான்ஸ் போன்ற நட்சத்திர உலகத் திரைப்பட விழாக்களை தவிர மற்ற திரைப்பட விழாக்களில், பல நேரங்களில் திரையிடலின்போது அரங்கின் இருக்கைகள் நிரம்புவதில்லை. 

அந்தக் காலங்களில் டெல்லி திரைப்பட விழா என்றாலே, ஜனவரி மாதத்தின் கடுங்குளிரையும் மீறி, ஒருவித கொண்டாட்டமும், பேரானந்தமும், விஷேசத்தன்மையும் கரைபுரண்டோடும். திரைப்பட விழா தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே திரையிடல் தொடங்கிவிடும். மொத்த 17 நாட்களில் தீவிர சினிமா ரசிகர்கள் 60-லிருந்து 80 படங்களைப் பார்த்துவிடுவர். நாளன்றுக்கு 4 - 5 படங்களைப் பார்த்துவிடுவார்கள். நான் 80களின் ஆரம்பத்தில் கல்கத்தாவில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் மிக அதிகபட்சமாக 90 படங்களைப் பார்த்தேன். ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் அதிகபட்சமாக 7 படங்கள் பார்த்தேன். உலகப்பட விழா முடிந்து வீடு திரும்பினால், ஏதோ நீண்ட உலகப் பயணம் மேற்கொண்டு திரும்பியது போல், உடலும் மனமும் களைத்து போகும். சகஜ நிலைமைக்குத் திரும்ப ஒரு வாரமாவது ஆகும். 

இதுபோன்ற உணர்வுகளும், பரபரப்பும் இப்போதைய உலகத் திரைப்பட விழாக்களில் அனுபவப்பட முடியாத ஒன்றாகிவிட்டது. பார்ப்பவர்களை அப்படியே கட்டிப் போடும் ஒரு சில படங்களைத் தவிர, பெரும்பாலான திரையிடல்களின்போது ரசிகர்கள் உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாக இருக்கின்றனர். ஆனாலும், உலகப்பட விழாக்கள் பரவலாக்கப்பட்டுவிட்டதன் காரணமாக, பயன்கள் அதிகம் என்றே சொல்லவேண்டும். 

ஞிக்ஷிஞிகளின் வருகையால் உலக சினிமா பார்க்கும் கூட்டம் அதிகமாகிவிட்டது. குறும்படம், ஆவணப்படம் எடுக்கும் இளைஞர்கள், மாணவர்கள் பலர் உலகப் பட ஞிக்ஷிஞி-க்களைத் தேடிப் போய் வாங்குகின்றனர். இவர்களுக்கு பரவலாக்கப்பட்ட உலகப்பட விழாக்கள் பயனுள்ளதாக அமைகின்றன. 

இத்தகைய உலகப்பட விழாக்களை மேலும் பயனுள்ளதாக, சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் கொண்டு செல்லவேண்டும். 35 படச்சுருள் இல்லாவிட்டாலும், தரமான ஞிக்ஷிஞிக்களைக் கொண்டு உலகப்பட விழாக்களை இன்னும் பரவலாக்குவது சாத்தியமே. இதற்கு தேவை கொஞ்சம் பணம், நிறைய ஆர்வம் மட்டுமே. 

இன்னும் பத்தாண்டுகளில் உலகப் பட விழாக்கள் உள்ளூர்களுக்கு எடுத்துச் செல்லப்படும்போது, அது நம் தேசிய (?) சினிமாவில், பிராந்திய சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் போகிறது. 

முதல் உலகத் திரைப்பட விழா, சினிமா தோன்றி 37 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நிகழ்ந்தது. முதல் உலகத் திரைப்பட விழாவை நடத்தியவர் யாரென்று பார்த்தால், நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். இத்தாலிய சர்வாதிகாரி முசோலினிதான் முதல் உலகத்திரைப்பட விழாவை வெனிஸ் நகரில் நடத்தினான். தேசிய சினிமாவை வளர்ப்பதற்காக ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக உலகத்திரைப்பட விழா நடத்தப்பட்டது. ஒரு விதத்தில் ஹாலிவுட் சினிமாவின் ஆதிக்கத்திற்கெதிராகவும் இப்படவிழா நடத்தப்பட்டது. வேறு மொழிகளிலிருந்து இத்தாலிய மொழியில் டப் செய்யப்பட்ட படங்களுக்கு கடுமையான வரியையும் முசோலினி விதித்தான். இப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படமாக இத்தாலியப் படத்திற்கே முசோலினி கப் வழங்கப்பட்டது. இப்படவிழா இத்தாலிய சினிமாவை மட்டும் வளர்க்கவில்லை. கூடவே, இத்தாலியின் தோழனாக இருந்த நாஜி ஜெர்மனியின் சினிமாவையும் வளர்த்தது. 1936க்கும் 1942க்கும் இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் நான்கு முறை ஜெர்மனிய படங்கள்தான் சிறந்த அயல்நாட்டுக்கான பட விருதைப் பெற்றன.

முசோலினியைப் போலவே, ஹிட்லரும் சினிமாவின் சக்தியை முழுவதுமாக உணர்ந்திருந்தான். ஆரியனின் உயர்த்தன்மையைக் காட்டும் விதமாக, ஹிட்லரின் அன்புக்குரிய பெண் திரைப்பட இயக்குநர் லினே ரீபெஃபென்தால் (Lene Ricfenstahl) “Olympia” “Triumph of a will” போன்ற உலகப் புகழ் பெற்ற படங்களை எடுத்தார். அந்தக் காலத்திலேயே பல கேமராக்களை கொண்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படங்கள் அவை. அதற்கான செலவு முழுவதையும் ஹிட்லர்தான்  செய்தான்.

1937ஆம் ஆண்டு இத்தாலிய திரைப்பட விழாவில் ழான் ரெனுவார் இயக்கிய பிரெஞ்சு படமான தி கிராண்ட் இல்யூஷன் (The Grand illusion) படத்துக்குத்தான் உயர் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இத்தாலிய அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மீண்டும் உயர் விருதை இத்தாலிய படத்துக்கே அறிவித்தது. இதனால் கோபமடைந்த பிரெஞ்சு திரைப்பட இயக்குநர்கள் தோற்றுவித்ததுதான், இன்று உலகின் நம்பர் ஒன் நட்சத்திர திரைப்பட விழாவாக விளங்கும் ‘கான்ஸ்’ திரைப்பட விழா. 

இந்தியாவை பொறுத்தவரை முதல் உலகத் திரைப்பட விழா 1952ஆம் ஆண்டே மும்பையில் நேரு அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. இதன் துவக்க நிகழ்ச்சியாக சினிமாவைத் தோற்றுவித்த லூமியர் சகோதரர்கள் முதன்முதலில் (1895ல்) பம்பாயில் காட்டிய திரைப்படம காட்டப்பட்டது. இப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட படங்கள் இரு வாரங்கள் கழித்து, டெல்லி, கல்கத்தா மற்றும் சென்னைக்கும் கொண்டு செல்லப்பட்டது. இப்படங்களைத் திரையிடுவதற்காக, பெரிய திறந்தவெளி திரையரங்குகளைக் கட்டுவது ஒரு முக்கிய திட்டமாக இருந்தது. 

இந்தியாவில் முதல் உலக திரைப்பட விழா 1952ல் நடத்தப்பட்டாலும், இரண்டாவது உலகத் திரைப்பட விழா என்னவோ 1961ல்தான் டில்லியில் நடத்தப்பட்டது. அடுத்தடுத்த உலகத் திரைப்பட  விழாக்கள் சில ஆண்டு இடைவெளி விட்டுத்தான் நடத்தப்பட்டன. 1975ஆம் ஆண்டு ஐந்தாவது உலகத் திரைப்பட விழா டில்லியில் நடைபெற்றபோதுதான், அது வருடாந்திர நிகழ்வாக மாறியது. 

இன்று இந்தியா முழுதும், பல மாநில அரசுகளும், பல தனியார் அமைப்புகளும் பல உலகப்பட விழாக்களை பல இடங்களில் நடத்துகின்றன. ஆவணப்படங்களுக்காக மட்டுமே உலகப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதுபோல், குழந்தைகள் படம், பெண்கள் பற்றிய படம், உடல் ஊனமுற்றோரைப் பற்றிய படம், அரவாணிகளைப் பற்றிய படம், பிமிக்ஷி நோயாளிகள் குறித்த படம்... என பல பிரிவுகளில் உலகப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. 

பெரும்பாலும் இப்படவிழாக்கள் பெருநகரங்களில் மட்டுமே நடத்தப்படுகின்றன. இப்படவிழாக்களை சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் கொண்டு செல்வதுதான் அடுத்தக்கட்ட பரவலாக்கச் செயலாக இருக்க முடியும். இப்பணியை அரசாங்கமோ, தனியார் அமைப்புகளோ செய்யும் என எதிர்பார்க்காமல் பண்பாட்டு தளத்தில் இயங்கும் முற்போக்கு எண்ணம் கொண்ட கலைஞர்களும் ஊழியர்களும்தான் இதை செய்ய வேண்டும். அடுத்த ஆண்டு ஆண்டிப்பட்டியில் ஒன்றும், கோவில்பட்டியில் ஒன்றுமாக சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்த திட்டமிடலாம். 

சினிமாவின் அடிப்படை நோக்கமே உலகை உள்ளூருக்குக் கொண்டுவருவதும், உள்ளூரை உலகுக்-குக் கொண்டு செல்வதும்தான். அதுபோல உலகப்பட விழாக்களின் நோக்கமும், உலகப் படங்களை உள்ளூருக்கு கொண்டுவருவதும், உள்ளூர் படங்களை உலகுக்குக் கொண்டு செல்வதும்தான். 

அவ்வாறு உலகப்பட விழாக்களை கிராமங்களுக்கும் சிறு நகரங்களுக்கும் கொண்டு செல்லும்போது, நம்மூரில் படம் எடுப்பவர்கள் ஒன்று உலகத் தரத்துக்கு உள்ளூர் படங்களை எடுப்பார்கள். இல்லையேல், வேறு தொழில் பார்க்க போய்விடுவார்கள். 

- எம்.சிவகுமார் 

Pin It