"தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார்

தீங்கு வரக்கண்டு சிரித்திடுவார் - யாங்காணோம்

துன்பச் சுமைதாங்கி ! சீவானந்தம் போன்ற

அன்புச் சுமை தாங்கும் ஆள்."

-              பாவேந்தர் பாரதிதாசன்

ஜீவா 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் பட்டன்பிள்ளை என்பவருக்கும், உமையம்மாளுக்கும் நான்காவது பிள்ளையாகப் பிறந்தார். கோட்டாறு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.

 Jeevanandamநாடு முழுவதும் பற்றிப் படர்ந்த சுதந்திரப் போராட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தையும் விட்டுவைக்கவில்லை. நாஞ்சில் நாட்டிலும் பல இடங்களிலும் அந்நிய துணிப் புறக்கணிப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. பூதப்பாண்டிக்கு அருகில் உள்ள திட்டுவினை என்கிற ஊரில் திரிகூடசுந்தரம் பிள்ளை தலைமையில் நடைபெற்ற அந்நிய துணி புறக்கணிப்புக் கூட்டம் ஜீவாவின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்தக் கூட்டத்தின் இறுதியில் அந்நியத் துணிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கூட்டத்துக்குச் சென்றிருந்த ஜீவானந்தம்,தான் அணிந்திருந்த அந்நிய துணிகளை தீயில் வீசிவிட்டு கோவணத்துடன் வீடு திரும்பினார். அந்த நாள் முதல் ஜீவா கதர் ஆடையையே அணியலானார். அவரது இறுதிக் காலம் வரையில் ஜீவாவின் உடலைக் கதர் ஆடையே அலங்கரித்தது !

                ஜீவானந்தம் வீட்டை விட்டு வெளியேறிய காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்திற்கேற்ப 1924 ஆம் ஆண்டில், தந்தை பெரியார் தலைமையில் கேரளத்தில் வைதீகக் கோட்டையாக இருந்த வைக்கம் நகரில் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதரத் தொண்டர்களைப் போலவே, ஜீவாவும் இதில் கலந்து கொண்டு பல தொல்லைகளுக்கு ஆளாக வேண்டியிருந்தது. இத்தோடு ஜீவாவின் பள்ளிப்படிப்பு முற்று பெற்றது.

 ‘பெண்களும் - விடுதலையும்’ என்னும் பொருளில் ஜீவா உணர்ச்சி கொப்பளிக்க ஆற்றிய சொற்பொழிவைக் கேட்டு வியந்து போன வ.உ.சி , “அஞ்சுபவர்களும், கெஞ்சுபவர்களும் சுதந்திரத்தைப் பெற முடியாது' ஜீவானந்தம் போன்ற சிலர் இருந்தாலே போதும் நாடு விடுதலை பெற்றுவிடும்” என்று கூறிப் பாராட்டினார்.

காந்தியடிகள் 1927 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். ஜீவா நடத்திக் கொண்டிருந்த ஆசிரமத்துக்கும் வந்தார். ஜீவா தன் கையால் நூற்ற பத்தாயிரம் கெஜம் நூலை அவருக்குப் பரிசாக கொடுத்தார். நூலைப் பெற்றுக் கொண்ட மகாத்மா காந்தி ஜீவாவிடம் உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று கேட்டார். "இந்தியா தான் என் சொத்து" என்று பதில் சொன்னார். மகாத்மா காந்தி ,“இல்லை, இல்லை ' நீங்கள் தான் இந்தியாவின் சொத்து” என்று ஜீவாவின் தேச பக்த உணர்வைப் புகழ்ந்து பாராட்டினார்.

                சட்டமறுப்பு இயக்கம் 1932 ஆம் ஆண்டு தீவிரமடைந்தது. காரைக்குடியில் ஜீவா தலைமையில் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. சட்;ட மறுப்பு இயக்க ஆதரவுக் கூட்டங்களில் ஜீவாவின் சொல்வன்மை மக்களை ஆவேசம் கொள்ள வைத்தது. ஜீவா காரைக்குடிக் கூட்டத்தில் 07.01.1932 அன்று சொற்பொழிவாற்றினார். மிரண்டு போன பிரிட்டிஷ் அரசு மறுதினம் முதல் அவர் எங்கும் பேசக் கூடாது என்று வாய்ப்பூட்டுப் போட்டது. ஜீவா, அதை மீறினார். மறு நாள் கோட்டையூரில், தடையை மீறிப் பேசினார். அப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுவே ஜீவாவின் முதல் சிறைவாசம். இந்தச் சிறைவாசம் ஜீவாவின் அரசியல் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

சிறையிலிருந்த பொழுது மாவீரன் பகத்சிங்கின் தோழர்களான யோகேஸ்வரதத், குந்தலால் ஆகியோரையும், வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜி ஆகியவர்களையும் சந்தித்தார். சோசலிசம், கம்யூனிசம் போன்ற தத்துவங்கள் பற்றியும், சோவியத் யூனியன் பற்றியும் தெரிந்து கொண்டார். பொதுவுடைமை நூல்களையும் படித்தார். காங்கிரஸ்காரனாக 1932 சனவரியில் சிறை புகுந்த ஜீவா, நவம்பரில் பொதுவுடைமைவாதியாக வெளியே வந்தார்.

                தந்தை பெரியார், தோழா.; சிங்காரவேலர், ஜீவா ஆகியோர் பங்கு பெற்ற நாத்திகர்கள் மாநாடு 1933 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை எழும்பூர் ஒயிட்ஸ் மெமோரியில் மண்டபத்தில் நடைபெற்றது.

                பொதுவுடைமை வாதிகள் மீது பிரிட்டிஷ் அரசால் போடப்பட்ட மீரட் சதி வழக்கு மீது, 1933 சனவரி மாதத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு மிகவும் கொடூரமானது. மனிதாபிமானமற்ற முறையில் அளிக்கப்பட்டது என உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஐன்ஸ்டீன், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ரோமைன் ரோலன்ட் ஆகியோர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.

                மாவீரன் பகத்சிங் தான் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” என்ற கட்டுரையை ஜீவா தமிழாக்கம் செய்தார். அதை தந்தை பெரியார் பதிப்பித்து வெளியிட்டார். அந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக வெள்ளை ஏகாதிபத்தியம், பெரியாருக்கும், அவரது சகோதரர் கிருஷ்ணசாமிக்கும், மொழி பெயர்ப்பாளர் ஜீவாவுக்கும் சிறைத் தண்டனை விதித்தது. பிரிட்டிஷ் அரசால் தண்டிக்கப்பட்ட ஜீவா, கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து சிறைச் சாலைகளிலும் மாறி மாறி அடைக்கப்பட்டு , அலைக்கழிக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டார்.  தமிழக வரலாற்றில் மொழிபெயர்ப்பு செய்தமைக்காக முதன்முதலாக சிறைபிடிக்கப்பட்டவர் ஜீவாவாகத் தானிருக்க வெண்டும்.

                நாத்திகப் பிரச்சாரம், குட்டி முதலாளித்துவமும், செவிட்டு அரசும் ஆகிய கட்டுரைகளை 1934 ஆம் ஆண்டு சனவரியில் புரட்சி ஏட்டில் எழுதினார். அக்கட்டுரைகள் ஆட்சேபகரமானவை என்று அரசு நடவடிக்கை எடுத்தது. புரட்சி ஏடு நிறுத்தப்பட்டது.

                சுயமரியாதை சமதர்மக் கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்த பொது பொதுவுடைமைவாதிகள் ஜீவாவை தொடர்பு கொண்டார்கள். காங்கிரஸ்-சோசலிஸ்ட் கட்சியில் ஜீவா சேர்ந்தார்.

                சென்னை மாநிலத் தொழிற்சங்க காங்கிரஸ் அமைப்பில் 1935 ஆம் ஆண்டு ஜீவா தலைவராகவும், சுந்தரய்யா செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை அச்சுத் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினார். பின்னர் அச்சங்கத்தின் தலைவரானார் ஜீவா.

                காங்கிரஸ் கட்சியானது. தேர்தல் காலத்தில் கொடுத்த வாககுறுதிகளில் ஒன்று, 'குற்ற பரம்பரைச் சட்ட ஒழிப்பு'- என்பதாகும். குற்ற பரம்பரைச் சட்டத்தின்படி முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த வயது வந்த ஆண்கள் யாரும் இரவில் வீட்டில் தங்கக் கூடாது. அவர்களின் ஊரக்குரிய காவல் நிலையத்தில் இரவுப் பொழுதைக் கழிக்க வேண்டும். மறுத்தால் தண்டனைக்குள்ளாக வேண்டும். காவல் நிலையத்தில் ஆஜரானதற்காக, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் பதிவெட்டில் அவர்கள் ரேகை வைக்க வேண்டும். எனவே, மக்கள் இந்தச் சட்டத்தை ‘ரேகைச் சட்டம்’ என்று அழைத்தனர். மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வாழும் முக்குலததோரைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி கொடுமையான சட்டத்தை வெள்ளைக்கார அரசாங்கம் நடைமுறைப் படுத்தயிருந்தது.

காங்கிரஸ் கட்சி 1937 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், ரேகைச் சட்டத்தை ரத்து செய்ய மறுத்தது. ரேகைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜீவா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.இராமமூர்த்தி ஆகியவர்கள் காங்கிரஸ் கமிட்டியின் பல கூட்டங்களிலும் வாதாடிப் பார்த்தார்கள். காங்கிரஸ் கமிட்டி சிபாரிசு செய்தும், ராஜாஜி ரத்து செய்ய மறுத்துவிட்டார். இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பல மாநாடுகளும், பேரணிகளும் நடத்தப்பட்டன. வெகு மக்களின் போராட்டம் வெடிக்கும் நிலை ஏற்பட்டதால், அடுத்துக் கூடிய சட்டசபைக் கூட்டத்தில் ரேகைச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

1928 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய ரெயில்வே போராட்டத்திற்கு ஜீவா புத்துயிர் ஊட்டினார். திருநெல்வெலி விக்கிரமசிங்கபுரம் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தை 1937 ஆம் ஆண்டு ஜீவா, முன்னின்று நடத்தினார். சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் இதரப் பகுதிகளிலும் தொழிற்சங்கங்களை அமைப்பதிலும், தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதிலும் ஜீவா முன்னின்று முனைப்புடன் செயல்பட்டார். மதுரை பசுமலையில் உள்ள மகாலெட்சுமி மில்லில் 1937 ஆம் ஆண்டு தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. தொழிலாளர்கள் சங்கத்தின் மூலம் போராடினார்கள். ஹார்வி மில் போராட்டத்திற்கு ஜீவா தலைமை தாங்கி நடத்தினார். போராட்டத்தில் ஜீவா தாக்கப்பட்டார்.

                ஜீவா அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி ஜனசக்தி இதர்; வெளிவந்தது.

                இரண்டாவது உலகயுத்தம் 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பமாயிற்று. அந்த யுத்தத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கடுமையாக எதிர்;க்க வேண்டுமென அறைகூவல் விடுத்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலை ஏற்று லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். நாடெங்கும் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் நடைபெற்றன. யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் பிரிட்டிஷ் அரசு 1939 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி ஜீவாவை கைது செய்தது. இரண்டரை மாதச் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் தமிழகமெங்கும் யுத்த எதிர்ப்புப்; பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரிட்டிஷ் அரசு ஜீவாவை சென்னை மாகாணத்தை விட்டு வெளியேற வேண்டும் என நிர்ப்பந்தம் செய்தது. கம்யூனிஸ்ட்கள் மீது அடக்கு முறையை ஏவி விட்டது. ஜீவா தலைமறைவானார்.

                கப்பற்படை எழுச்சிப் போராட்டம் 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது அதற்கு ஆதரவாகக் கம்யூனிஸ்ட் கட்சி அறை கூவல் விடுத்தது. நாடெங்கும் வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளர்களின் ஊர்வலத்துக்கு ஜீவா தலைமை தாங்கினார். ஊர்வலம் சென்னை பிரூசி மில்லுக்கு அருகாமையில் சென்று கொண்டிருந்தது. காவலர் படை ஊர்வலத்தை தடுத்தது. மேற்கொண்டு ஊர்வலம் சென்றால் துப்பாக்கியால் சுடுவோம் என்று எச்சரித்தது. அப்பொது வீராவேசத்துடன் ‘சுடு’ என்று தனது மார்பைத் திறந்து காட்டி ஜீவா முன்னேறவும் ஊர்வலம் தொடர்ந்து சென்றது. காவலர் படை பின் வாங்கியது.

ஜீவா தனது தலை மறைவு வாழ்க்கையின் போது சென்னை மாநகரத்தையே அதிர வைத்த மாநகராட்சித் தொழிலாளர்கள் போராட்டம் 18 நாட்கள் நடைபெற்றது. அப்போராட்டத்திற்கு வழிகாட்டியவர் ஜீவா.

                தோழர் பத்மாவதியை; 1947 ஆம் ஆண்டு சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டார் ஜீவா. திருமணத்துக்குப் பின் அவர்களுடைய குடும்ப வாழ்;க்கை சென்னை தாம்பரம் பகுதியில், புறம்போக்கு நிலத்தில் குடிசைவாழ் மக்கள் மத்தியில் நடைபெற்றது. ஜீவா தனது இறுதிக்காலம் வரையில் இந்தக் குடிசையில் தான் வாழ்ந்து வந்தார்.

                பொதுவுடைமைக் கட்சி 1948 ஆம் ஆண்டு சட்ட விரோதமாக்கப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கட்சியின் ஆணைப்படி ஜீவா தலை மறைவானார். ஜீவா இலங்கைக்கு மாற்றுப் பெயரோடு சென்றார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டாக்டர் விக்கிரம் சிங்காவின் வீட்டில் தங்கினார். தமிழ்ச் சங்கக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். இலங்கை முழுவதும் சென்று தமிழ் இலக்கியம், இந்திய- இலங்கை உறவு குறித்து சொறபொழிவாற்றினார். இலங்கையிலிருந்த பொழுது “சோசலிஸ்ட் தத்துவங்கள்” என்ற நூலை எழுதினார். ஓர் ஆண்டுக்குப் பிறகு தமிழகம் திரும்பினார்.

                கேரளத்தில் இருந்து தேவிகுளம், பீர்மேடு ஆகிய தமிழர் வாழும் பகுதியை தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற போராட்டத்திற்கு தலைமறைவு வாழ்க்கையிலிருந்து கொண்டே ஆதரவு திரட்டினார். ஜீவா 1949 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

                சேலம் சிறைச் சாலையில் 15.02.1950 அன்று 22 கம்யூனிஸ்ட்டு கைதிகள் காங்கிரஸ் அரசால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தப் படுகொலையைக் கண்டித்து அறிக்கை விடுத்ததுமல்லாமல், ஆர்ப்பாட்டமும் நடத்திய ஒரே தமிழகத் தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா மட்டுமே. மற்ற தலைவர்களும், கட்சிக்காரர்களும் வாய்மூடி மௌனிகளாக வேடிக்கைப் பார்த்து நின்றார்கள்.

                சென்னை சட்டசபைக்கான பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஜீவா, வட சென்னைத் தொகுதியிலிருந்து கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.   சட்டமன்ற உறுப்பினாரகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜீவா, சட்டமன்றத்தில் தமிழிலேயே பேசினார்.

                சட்டமன்றத்தில் ஜீவா மதுவிலக்குச் சட்டம், தெரிpலாளர்கள் நலச் சட்டம், பண்ணையாட்கள் பாதுகாப்புச் சட்டம், விபச்சாரத் தடைச்சட்டம் போன்ற சட்டங்கள் இயற்றப்பட குரல் கொடுத்தார். மேலும், உயர்நீதி மன்றத்திலும் தமிழ் மொழி தான் கையாளப்பட வேண்டும். கல்வியைப் பொறுத்தவரையில் பல படிகளிலும் தமிழ்மொழியே போதனை மொழியாக இருக்க வேண்டும். தமிழ் தெரிந்தால் போதும், இந்நாட்டின் ஆட்சியாளராகவும் ஆகலாம். உயர் நீதி மன்ற நீதிபதியாகவும் ஆகலாம். கல்லூரிப் பேராசிரியர்களாகவும் ஆகலாம் என்ற நிலை உருவாக வேண்டும் என 1955 செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் முழங்கினார் ஜீவா!

ஜீவா தனது அரசியல் வாழ்வில் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு மேல் சிறையிலும், காவல்துறை பாதுகாப்பிலும் கழித்தார்.

                ஜீவா, சென்னைப் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராக 1955 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                தமிழ் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, தனது கொள்கை, கோட்பாடு அடிப்படையில் ஒரு இலக்கிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 1959 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலக்கியத் திங்கள் இதழாக ‘தாமரை’ ஏடு வெளியிடப்பட்டது. அதன் ஆசிரியராக ஜீவா, இறக்கும்வரை இருந்து செயல்பட்டார.;

                முற்போக்குப் படைப்பாளிகளையும், கலைஞர்களையும் ஒன்றுபடுத்தி தமிழகம் தழுவிய அளவில் 1961 ஆம் ஆண்டு மே மாதம் “தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்” என்ற அமைப்பை ஜீவா ஏற்படுத்தினார்.

                ஜீவா எழுதிய நூல்கள் : 1) பாரதியைப் பற்றி 2) மொழியைப் பற்றி 3) புதுமைப் பெண் 4) மதமும் மனித வாழ்வும் 5) கலையும் இலக்கியமும் 6) சங்க இலக்கியத்தில் சமுதாய காட்சிகள் 7) ஜீவாவின் பாடல்கள் 8) சோசலிஸ்ட் தத்துவங்கள் 9) இலக்கியத்தில் சோசலிச யதார்த்தவாதம் 10) கம்பன் கண்ட தமிழகம் 11) கம்பனும் பாரதியும் 12) இலக்கியச் சுவை 13) பாரதி பாடல்கள் 14) பாரதியின் தத்துவ ஞானம். இதைதவிர்த்து பழமொழிகளையும், வழக்குச் சொல் குறித்த அகராதியையும் தொகுத்து அளித்துள்ளார்.

சமுதாயத்தில் நிலவும் சாதி, மத வேறுபாடுகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும், கண்மூடித்தனமான மூடப்பழக்க வழக்கங்களையும் இறுதி மூச்சு உள்ளவரை எதிர்த்துப் போராடினார். தனது, பாட்டுத் திறத்தாலும் இப்படிப் பாடிச் சாடினர் :-

"சாதிச் சடங்கால் இழிவடைந்தோம்-நிதம்

                சாமிக்கழுது மனமுடைந்தோம்

                வீதிக்கொரு கோயிலைப் படைத்தோம்-வேறு

 வேலையில்லாது பந்தி புரிந்தோம்"

                ஜீவாவுக்கு மார்பு வலி ஏற்பட்டது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்' சிகிச்சைப் பலனின்றி 1963 ஆம் ஆண்டு சனவரி 18 ஆம் நாள் காலமானார். ஜீவாவின் மரணச் செய்தி கேட்டு தமிழகமே பதறியது. ஜீவாவின் உடல் சென்னை துறைமுகத் தொழிலாளர்கள் சங்க அரங்கத்தில் போது மக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. அரசியல் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். ஜீவாவின் இறுதி ஊர்வலத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். மொத்தத்தில், இந்தியாவின் சொத்தாக - தமிழ்ப் பண்பின் வித்தாக, இன்றைக்கும் விளங்குபவர் தோழர் ஜீவா!

- பி.தயாளன்