பெரியார் தமிழரின் இனப் பகைவரா? - 3

வழக்குரைஞர் பா.குப்பன் பெரியார் மீது சுமத்தும் மற்றொரு குற்றச்சாட்டு “தமிழ்ப் பார்ப்பனர்களிடம் சினப் பாய்ச்சல்; தெலுங்குப் பிராமணர்களிடம் இனப்பாசம்!” (பக் 53) என்று எழுதியுள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பா.குப்பன் தமிழ்ப் பார்ப்பனர், தெலுங்குப் பார்ப்பனர் என்று வரையறை செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

பழந்தமிழகத்தில் பார்ப்பனர் என்ற சாதியே கிடையாது. தொல்காப்பியர் காலகட்டத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியப் பார்ப்பனர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். தொல்காப்பியத்திலேயே வடமொழிச் சொற்களை சேர்ப்பதற்கான விதிகளை அவர் உருவாக்கியதிலிருந்தே இதனை நாம் உணர முடிகிறது. பெரியாரியல்வாதிகளும், மார்க்சியவாதிகளும், உண்மையான தேசிய இன விடுதலையில் அக்கறை உள்ளவர்களும் தலைவர்களின் அரசியல் நடவடிக்கைகளை வைத்தே அவர்களின் அரசியலை மதிப்பீடு செய்ய வேண்டும். அதுதான் முறை. ஆனால் பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்கள் தங்களை உயர்ந்தவர்களாக சாத்திரங்களிலும், சட்டங்களிலும் எழுதி வைத்துக் கொண்டும், அதில் அவர்கள் கட்டுப்பாடாகவும், உறுதியாகவும் இருந்து கொண்டு , மற்ற சமூகத்தினரின் மீது ஆதிக்கம் செலுத்தியதாலேயே திராவிடர் இயக்கத்தால் அவர்கள் எதிர்க்கப்பட்டார்கள்.

இராஜாஜியின் அரசியல் தலைமையைக் காப்பதற்காக ம.பொ.சியால் திட்டமிட்டு, பரப்பப்பட்டதே தெலுங்கர் ஆதிக்கம் என்பதெல்லாம். அடுத்தது தெலுங்கர் டி.பிரகாசம் முதல்வராக வந்ததற்கு, பார்ப்பனரல்லாதார் கொள்கையே காரணம் என்கிறார்.

ma po si rajaji

(ம.பொ.சி. &  இராஜாஜி)

1937 தேர்தலிலேயே பிரகாசம் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டார். அவர் ஆந்திரா பகுதியில் காங்கிரஸ் கட்சிக்காக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.80,000த்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டார். அதனால் அவரை முதல்வர் வேட்பாளருக்கு காந்தி பரிந்துரைக்கவில்லை. எனினும் 1937இல் இராஜாஜி அமைச்சரவையில் பிரகாசம் வருவாய்த்துறை அமைச்சராக இரண்டாமிடத்தில் இருந்தார்.

1946 தேர்தலை திராவிடர் கழகம் முற்றிலுமாகப் புறக்கணித்தது. திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையிலேயே அதிதீவிரம் காட்டியது. பிரகாசத்தை பெரியார் ஆதரித்தார் என்பதெல்லாம் பச்சைப் பொய்.

1946 தேர்தலிலும் இராஜாஜியே முதல்வராக ஆசைப்பட்டார். காந்தியும் 1946 ஜனவரி மாதம் ‘அரிஜன்’இதழில் “இராஜாஜியை விட்டால் முதல்வர் வேட்பாளருக்கு வேறு தகுதியான நபர் யாரும் இல்லை. எனக்கு அதிகாரமிருந்தால் இன்றே இராஜாஜியை முதல்வர் பொறுப்பில் அமர்த்திவிடுவேன். என்ன செய்வது அந்த அதிகாரம் மாகாண காங்கிரஸ் கமிட்டியிடம் உள்ளது” என்று கட்டுரை எழுதினார். ஆனால் 1942இல் பாகிஸ்தான் பிரிவினைக் கொள்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற காரணத்தைக் கூறி இராஜாஜி காங்கிரசை விட்டு வெளியேறி விட்டார். மறுபடியும் 1945 சூன் மாதத்தில் திரும்ப வந்து காங்கிரசில் சேர்ந்து கொண்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்து கொள்ளாத இராஜாஜியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பல காங்கிரசார் காந்திக்கு கடிதங்களும், தந்திகளும் அனுப்பினர்.

காங்கிரஸ் மேலிடம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காமராசர், ஆந்திர காங்கிரஸ் தலைவர் டி. பிரகாசம், கேரள காங்கிரஸ் தலைவர் மாதவ மேனன் ஆகியோரை தில்லிக்கு வரவழைத்து, பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சென்னை மாகாணத்தில் மொத்தம் 215 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. பலமான எதிர்க்கட்சி எதுவுமில்லாததால் காங்கிரஸ் 163 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. தடை நீக்கம் செய்யப்பட்ட இந்திய பொதுவுடைமைக் கட்சியினர் முதன் முதலாக தேர்தலைச் சந்தித்தனர். 2 இடங்களில் வெற்றி பெற்றனர். காந்தியின் தலையீட்டின் பேரில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இராஜாஜி முதல்வராக வருவதற்கு 38 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவளித்தனர். இதனால் இராஜாஜி முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இருந்து விலகினார்.

ஆந்திர காங்கிரஸ் தலைவர் பிரகாசம் முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, பக்தவச்சலத்தின் தாய்மாமன் முத்துரங்க முதலியாரைக் காமராசர் நிறுத்தினார். ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 77 பேர்கள் மட்டுமே. வாக்கெடுப்பில் இராஜாஜி குழுவினர் 38 பேர் டாக்டர் சுப்பராயன் தலைமையில் நடுநிலை வகித்தனர். மா.பொ.சியின் ‘எனது போராட்டம்’ நூலில் 33 பேர் என்று உள்ளது. அது அச்சுப் பிழையாக இருக்கலாம்.

பிரகாசத்துக்கு 82 வாக்குகளும், முத்துரங்க முதலியாருக்கு 64 வாக்குகளும் கிடைத்தன. 13 வாக்கு வித்தியாசத்தில் முத்துரங்க முதலியார் தோல்வியுற்றார். இராஜாஜி குழுவினர் நடுநிலை வகித்தற்குக் கூறிய காரணம் மிகவும் முதன்மையானது. 1937 தேர்தலின் போதே ஆந்திர காங்கிரசாருடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டோம். அடுத்த தேர்தலில் முதல்வர் பதவி ஆந்திராவைச் சேர்ந்தவருக்குக் கொடுக்க வேண்டும் என்று, ஆகவே நடுநிலை வகிக்கிறோம் என்றார்கள் (சான்று Wikipedia 1946 Madras presidency election result). ஆக, பிரகாசம் முதல் அமைச்சராக வருவதற்கு இராஜாஜிதான் காரணமே ஒழிய, பெரியாரோ அல்லது காங்கிரசிலிருந்த பார்ப்பனரல்லாதார் உணர்வோ காரணமல்ல.

இந்த வரலாற்றை ம.பொ.சி. அப்படியே திருப்பிப் போட்டார். “இராஜாஜி சென்னை மாநிலத்தின் முதல்வராக வேண்டுமென்று 1946இல் நான் விரும்பினேன். அதற்காக கோஷ்டி சேர்ந்து பாடுபட்டேன். சகோதர காங்கிரஸ்காரர்களிடம் கல்லடியும் சொல்லடியும் பட்டேன். அன்று இராஜாஜியிடம் எனக்கிருந்த பக்தி இன்றும் உண்டு”(ம.பொ.சி. ‘எனது போராட்டம்’ பக் 585) இந்தப் புத்தகம் 1974 இல் வெளியிடப்பட்டது.

1971இல் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அனந்தநாயகியிடம் தோல்வியுற்ற மா.பொ.சியை 1972 இல் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமித்து, அதே ஆண்டில் மேலவைத் துணைத் தலைவராகவும் நியமித்து, அரசாங்க காரும், அரசாங்க பங்களாவும் கொடுத்ததால் குளிரூட்டும் அறையில் இருந்து கொண்டு, இரண்டு ஆண்டுகளில் எழுதி 1974இல் இந்நூல் வெளியிடப்பட்டது. வி.வி.கிரி என்கிற ஆந்திரப் பார்ப்பனர்தான் இந்த நூலை வெளியிட்டார்.

மேலும் ம.பொ.சி. கூறுகிறார். “இந்த நேரத்தில், இராஜாஜி டில்லி மாநகரில் தம்முடைய மகள் திருமதி லட்சுமி தேவியின் இல்லத்தில் இருந்தார். அதனால் எனது கருத்தை அவருக்கு எடுத்துரைக்கவும் இயலாதவனாக இருந்தேன். ஆனால் எப்படியோ தனது கோஷ்டியினர் நடுநிலை வகிப்பதென்ற எண்ணம் இயற்கையாகவே இராஜாஜிக்குத் தோன்றியது. இந்த நிலையே திரு முத்துரங்க முதலியாருக்கு வெற்றியளித்து விடுமென்று அவர் கருதினாரோ என்னவோ.” ம.பொ.சி (‘எனது போராட்டம்’ பக்கம் 364) அப்படியே வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டி எழுதிவிட்டார் ம.பொ.சி. முத்துரங்க முதலியார் வெற்றி பெற வேண்டுமென்று இராஜாஜி குழு நினைத்திருந்தால் அவருக்கு வாக்களித்திருக்கலாமே.

தன்னை முதலமைச்சர் பதவிக்கு வரவிடாமல் தடுத்த காமராசர் குழு வேட்பாளர் முத்துரங்க முதலியார் தோற்க வேண்டும் என்று இராஜாஜி கருதியிருக்க வேண்டும். அல்லது தமிழ்த் தேசியர் பார்வையில் கூற வேண்டுமானால் தனது இனமான தெலுங்குப் பார்ப்பனர் பிரகாசம் முதலமைச்சராக வரவேண்டுமென்று அவர் உள்ளூர நினைத்திருக்க வேண்டும்

இராஜாஜி தெலுங்குப் பார்ப்பனரே

இராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதியுள்ளார். கல்கி ராஜேந்திரன் தமிழாக்கம் செய்து 1000 பக்கங்களில் வானதி பதிப்பகம் 2010 இல் வெளியிட்டுள்ளது.

“இராஜாஜியின் முன்னோர் திருப்பதிக்கு அருகே வசித்து வந்ததாகத் தெரிகிறது. இந்த தெலுங்குப் பகுதியிலிருந்து மைசூர் மன்னர்களின் ஆட்சியிலிருந்த பல காட் பீடபூமியில் பன்னப் பள்ளி கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்கள். (பக்கம்5)

இராஜாஜியின் தந்தையார் பெயர் ‘வேங்கடார்யா’. சக்ரவர்த்தி என்பது அவர் குடும்பப் பெயர். ஒசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளியில் அவர் முனிசிப்பாக இருந்தார். இராஜாஜிக்குப் பெற்றோர் இட்ட பெயர் ‘ராஜகோபாலாச்சார்’ (பக் 70)

 இராஜாஜியின் தந்தையைச் சக்ரவர்த்தி அய்யங்கார் என்று எல்லோரும் அழைப்பர். அவர் சமஸ்கிருத நூல்களைத் தெலுங்கில் எழுதி, படித்து சுமாரான ஞானம் பெற்றிருந்தார் (பக்9)

இராஜாஜி பட்டப்படிப்பில், தமிழில் தேர்ச்சியடையவில்லை. சட்டக்கல்லூரியில் சேர்ந்த பின்பு, அவர்கள் பட்டப் படிப்பில் தமிழில் தேர்ச்சி பெற்றால்தான் சட்டப்படிப்பில் தேர்வு எழுத முடியும் என்று அறிவித்தனர். மீண்டும் தமிழ்த் தேர்வு எழுதினார். மயிரிழையில் 46/120 மதிப்பெண்கள் பெற்றுத் தேறினார். தன்னுடைய தந்தையாரிடம் “தமிழ்ப் பூதத்திடமிருந்து ஒரு வழியாக விடுபட்டு வந்து விட்டேன்” என்று கூறினார். (பக் 18)

ஆந்திராவில் உள்ள குப்பம் கிராமத்தில் இராஜாஜியின் திருமணம் நடைபெற்றது. குப்பம் கிராமத்தில் தெலுங்கு பேசுவோரே அதிகமாக இருந்தனர். இராஜாஜியின் மனைவியின் பெயர் அலமேலு மங்கம்மாள் (பக்22)

இராஜாஜியின் மனைவிக்கு தெலுங்கு மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும். திருமணத்துக்குப் பின் இராஜாஜி அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார் (பக்.45)

இராஜாஜி வழக்குரைஞர் தொழில் நடத்துவதற்காக அவருடைய குடும்பம் 1900த்தில் சேலத்தில் குடியேறியது.

இராஜாஜி 1952இல் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தபோதும் ஆந்திரர்களுக்குச் சார்பாகவே நடந்து கொண்டார்.

வடக்கு எல்லை மீட்புக் குழுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.விநாயகம் (தி.க, தி.மு.க.வின் ஆதரவோடு), செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றவர். ஆச்சார்யா கிருபாளனியின் ‘கிஷான் மஸ்தூர் பிரஜா பார்ட்டியின்’ (அதாவது விவசாயிகள் தொழிலாளர்கள் மக்கள் கட்சி) வேட்பாளராக அவர் போட்டியிட்டார். அந்த கட்சிக்குத் தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. 1952 தேர்தலில் தி.க, தி.மு.க இரண்டுமே காங்கிரசைக் கடுமையாக எதிர்த்தும், எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாகவும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்ததால்தான் கே. விநாயகம், சி.பா.ஆதித்தனார் போன்றவர்கள் கிஷான் மஸ்தூர் பிரஜா கட்சியில் இருந்தபோதிலும் வெற்றிபெற முடிந்தது.

கே.விநாயகம் திருத்தணியைச் சேர்ந்தவர். எம்.ஏ.எல். படித்து வழக்குரைஞராக இருந்தவர். அவருடைய பகுதி நேரு சர்க்காரால் ஆந்திராவுக்குக் கொடுக்கப்பட்டதால், அதை எதிர்த்து அவர் தீவிரமாகப் போராடினார். அவர்தான் ம.பொ.சி.யை வடக்கு எல்லை போராட்டக் குழுவுக்குத் தலைவராக 1953 இல் நியமித்தார். ம.பொ.சி. முதலமைச்சர் இராஜாஜியுடன் நெருக்கமாக இருந்ததால் வடக்கெல்லைப் பிரச்சனையை சுமூகமாக முடித்து விட முடியும் என்ற நம்பிக்கையிலேயே கே. விநாயகம் அதைச் செய்தார். அதுவரை தி.மு.க.வினரும் வடக்கெல்லைப் பிரச்சனையில் ஒன்றாகவே இருந்து போராடினர். ம.பொ.சி அப்போது குலக்கல்விக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரம் செய்து வந்ததால் அவருடைய தலைமையை ஏற்க முடியாது என்று வ.ஆ.மா. தி.மு.க செயலாளர் ஏ.எல்.சி கிருஷ்ணசாமி செய்தி ஏடுகளுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார் (நம் நாடு. 12.2.1954) தி.மு.க. வடக்கெல்லைப் பிரச்சனையில் தனித்தே போராடும் என்றும் அறிவித்தார்.

ஆந்திர மாநில மசோதா விவாதத்தின் போது 15-7-1953 இல் சட்டசபையில் பேசிய விநாயகம் சித்தூர் பகுதியின் வரலாற்றை எடுத்துக் கூறிவிட்டு

“I cannot understand why the Government or the Members interested in the Andhara Bill should take objection. It narrates the history of the chittor district. After all it is a history of how the Tamillians were slowly made to appear as Telugus in my parts ”

“என்னுடைய பகுதியின் பிரச்சனையை அரசாங்கமோ, உறுப்பினர்களோ புரிந்து கொள்ள மறுப்பது ஏன் என்று எனக்குப் புரிய வில்லை. என்னுடைய பகுதியில் தமிழர்கள் எல்லாம் கொஞ்ச கொஞ்சமாகத் தெலுங்கர்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள்” என்று வேதனையோடு பேசினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் இராஜகோபாலச்சாரியார்,

“It is a very good thing” (இது நன்றாக இருக்கிறதே) என்று கமண்ட் அடித்தார் (ஆதாரம்: சட்டமன்ற விவாதங்கள் (பக் 153), நாள் 15.7.1953) ஆந்திர மாநில மசோதாவின் விவாதத்தில் இந்திய பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த ப.ஜீவானந்தம் அவர்கள் பேசும்போது சில முக்கியமான செய்திகளைக் கூறியுள்ளார்.

“இந்த மசோதாவைக் கொண்டு வரும்போது நான் ஏற்கெனவே கூறினேன். இந்த அமைப்பு (மொழிவழி மாநில அமைப்பு) தேசிய ஒற்றுமைக்கு ஏற்றதாக இருக்காது என்றும், இது தேசத்திற்கு விரோதம் என்றும் இதில் உள்ளது. மசோதாவில் மார்ச் 25 ஆம் தேதி பாராளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் நேரு பிரகடனம் செய்தபோது ஆந்திர மாகாணம் அமைந்ததும் உடனடியாக ஒரு கமிஷன் அல்லது பல எல்லைக் கமிஷன்கள் ஏற்படுத்தி எல்லைகள் நிர்ணயிக்கப்படும் என்று கூறினார். இன்று இருக்கக் கூடிய எல்லையைக் கொண்டு ஆந்திர ராஜ்யம் அமைக்கப்படும் என்றும, பிறகு எல்லைக் கமிஷன் நியமிக்கப்படும் என்றும் கூறினார். ஆனால் இன்று இந்த மசோதாவில் என்ன பார்க்கிறோம்? எல்லைக் கமிஷன் நிர்ணயம் செய்யப்படுவது துண்டு விழுந்திருப்பதைப் பார்க்கிறோம். எங்கு தேடிப் பார்த்தாலும் ஒரு இடத்திலாவது எல்லைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டியதைப் பற்றி இந்த மசோதாவில் கூறவே இல்லை என்பதை நாம் பார்க்கவேண்டும்...”

இராஜாஜி தயாரித்த ஆந்திரப் பிரிவினை மசோதாவில் எல்லைக் கமிஷன் வேண்டும் என்ற விதி உருவாக்கப்படவில்லை.

“ஆகவே நான் சொல்லுகிறேன்... மொழி வாரியாக மாகாணங்கள் அமைப்பதில், அமைத்துக் கொள்வதில் சகோதரச் சண்டைகள் வேண்டாம். நமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் போராட்டங்கள் தற்போது எழுந்திருக்கிற சண்டையும் கூட இந்தத் தாலுகா அத்துடன் சேருவதா, இத்துடன் சேருவதா என்ற எல்லையை நிர்ணயப்பதில் ஏற்பட்டிருக்கும் தகராறு தான். எல்லைகளை சண்டை, சக்சரவுகள் இன்றி, சமாதான முறையிலேயே ஜனநாயக ரீதியாக நிர்ணயிக்க முடியும் என்று தான் கம்யூனிஸ்டு கட்சி கூறுகிறது." (சட்டமன்ற விவாதங்கள் பக்-171-176 நாள் 15-7-1953).

இப்பபடி சட்டமன்றத்தில் பேசிய ஜீவானந்தமும் அவருடைய கம்யூனிஸ்டு கட்சியும் வடக்கெல்லைப் போராட்டத்தில் தமிழகத்துக்கு துரோகமே இழைத்தது. அதை ஜீவானந்தமே ஜன சக்தி தலையங்கத்தில் எழுதியுள்ளார்.

‘புதிய தமிழகம்’ என்ற தலைப்பில் 26-7-52 இல் ஜீவா ஒரு தலையங்கம் எழுதியுள்ளார்.

“திருப்பதி வரையில் சித்தூர் ஜில்லாவின் பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையில் கிஞ்சிற்றும் நியாயமில்லை. ‘சித்தூர் ஜில்லாவும், திருப்பதியும் ஆந்திரர்களுக்கே உரியது’ என்று தமிழ்நாடு கம்யூனிஸ்டு கட்சி 1948-லேயே மிக விளக்கமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் சென்னை ஆந்திரர்கள் கோருகிற தவறுக்குக் குறையாத தவறு. சரித்திரப் பூர்வமாக, திட்டவட்டமாக ஆந்திரப் பிரதேசமாக உருவாகிவிட்ட சித்தூர் ஜில்லாவையும், திருப்பதி நகரையும் தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என்று கோருவதும், இலக்கியத்தில் காணப்படுகிற சில எல்லைக் கோடுகளைக் கொண்டு யதார்த்த வாழ்வில் சரித்திரப் பூர்வமாக உருவாகி வந்திருக்கிற, தேசிய இன மக்களின் பிரதேசங்களை மாற்றி அமைத்துவிட முடியும் என்பது நியாயமல்ல. சரித்திரத்திற்குப் புறம்பானது என்பதைத் தமிழ் மக்கள் நிதானமாக சிந்திக்க வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” (ப.ஜீவா. ஜனசக்தி 26.7.1952)

கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களைப் பொருத்த வரை சட்ட சபையில் என்ன பேசினாலும் வாக்கெடுப்பு என்று வருகிறபோது தங்கள் கட்சியின் நிலைபாட்டையே ஆதரிப்பார்கள். “கம்யூனிஸ்டு கட்சியினர் சட்டமன்றத்தில் ஆந்திராவுக்கு ஆதரவாக வாக்களித்ததுபோல், தெற்கெல்லை போராட்டத்தில் கேரளாவுக்குச் சாதகமாக வாக்களித்து விட வேண்டாம்” என்று அ.கோவிந்தசாமி மொழி வாரி மாநில சீரமைப்பு ஆணையத்தின் விவாதத்தின் போது சட்ட மன்றத்தில் கூறினார்...(சட்டமன்ற விவாதங்கள் பக் 296 நாள் 23-11-1955)

ஆந்திர மாநில மசோதாவின் மீது பேசிய அ.கோவிந்தசாமி (இவர் 1952 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.க, தி.மு.க. ஆதரவால் உழைப்பாளர் கட்சி விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். அக்கட்சித் தலைமை, காங்கிரஸ் ஆதரவு போக்குக்குச் சென்றவுடன் இவர் தி.மு.க.விற்கு வந்துவிட்டார்).

15.7.53 அன்று சட்டமன்றத்தில் பேசிய அவர்,

“இன்றைய தினம் வடநாட்டினர், டில்லி சர்க்கார், நம்மை அடிமைப்படுத்திக் கொண்டு, தென்நாட்டை வியாபார ஸ்தலமாக வைத்துக்கொண்டு சுரண்டும் இடமாகவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு நாம் என்ன பார்க்கிறோம் - சேட்டுகளும் மார்வாடிகளும் மெத்தையில் படுத்துக்கொண்டு வியாபாரம் செய்யும் நிலைமையை நாம் இப்பொழுது பார்க்கிறோம். இதையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும்தான் பெரியாரும் அறிஞர் அண்ணாவும் ஜவுளிக் கடையின் முன்பாக, வடநாட்டார் வியாபாரம் செய்யும் கடைகளின் முன்பாக தியாகம் செய்து மறியல் செய்தார்கள். இதை அடிப்படையில் வைத்துக் கொண்டுதான் மொழி வாரி மாகாணம் முதலில் பிரிந்து, இறுதியில் இனத்தின் அடிப்படையில் நாம் ஒன்று பட்டு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வேலை செய்து வருகின்றன. இது எல்லோருக்கும் தெரியும்.

திராவிடம் பிரிய வேண்டும் என்பதற்காகத்தான் மதிப்புக்குரிய மாணிக்க வேலு நாயக்கர் அவர்களும், பக்தவச்சலு அவர்களும், இன்னும் இந்தப் பக்கத்திலுள்ள 38 பேர்களும் கையெழுத்திட்டு, சென்ற தேர்தலில் வெற்றிபெற்றோம். நாம் வடநாட்டை விட்டுப் பிரிந்து சுகமாக வாழவேண்டும் என்று தீர்மானித்தோம். காரணம் வட நாட்டார்கள் வரிகளையும், வருமானத்தையும் வாங்கிக் கொண்டு போகிறார்கள். இன்னும் சுரண்டல் மூலமாகவும் இன்சூரன்ஸ் மூலமாகவும், பாங்குகள் மூலமாகவும் சேட்டுகள் சுரண்டிக் கொண்டு போகிறார்கள். ஏன்? கல்லக்குடியை டால்மியாபுரம் என்று மாற்றும் போது எதைத்தான் செய்ய மாட்டார்கள். அதைப் போலவே சென்னையில் சௌகார்பேட்டை என்று பெயர் வைத்திருக்கிறார்கள் ஏன்? டில்லியில் காமராஜ் பேட்டை என்ற பெயரை வைக்க முடியுமா? அல்லது ராஜாஜிபேட்டை என்றுதான் வைக்க முடியுமா? நமது ராஜாஜி அவர்களும் அங்கு கவர்னர் ஜெனரலாகத் தான் இருந்தார். அப்படி இருந்தும் அவருடைய பெயரை அங்கு வைக்க முடியுமா? ஒருக்காலும் வைக்க முடியாது......

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பெயரால் தன்னுடைய 60 ஆவது வயதில் பெரியாரும், தாளமுத்து நடராஜனும் இன்னும் பல தோழர்கள் சிறை சென்றார்கள்.. தாளமுத்துவும் நடராஜனும் சிறையில் பலியானார்கள். அதற்காகவே தான் அண்ணாவும் போராட்டத்தை நடத்தினார்.... மொழியின் பெயரால் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகத்தான்... நேரு தலைவராக இருக்கும் வரையில் வடநாட்டு ஆதிக்கம் இருக்கும் வரையில் தீர்ப்பு கிடையாது. வாஞ்சுவை அனுப்பக் கூடிய வடநாட்டு ஆதிக்கம் இருக்கும் வரையில் நமக்குத் தீர்ப்பு கிடையாது. நாம் சுபிட்சமாக வாழ முடியாது. நாம் சுமூகமாக பங்கிட்டுக் கொள்ள முடியாது. அந்த ஆதிக்கம் இருக்கும் வரையில் குரங்கு அப்பத்தை பங்கிட்டுக் கொடுத்தது போல தான் ஆகும். இப்பொழுது இருக்கும் நிலைமையில் தமிழர்களுக்கும் ஆந்திரர்களுக்கும் கசப்பு, மலையாளிகளுக்கும் கன்னடியர்களுக்கும் கசப்பு. இதெல்லாம் ஏன் வருகிறது? நம்முடைய அதிகாரத்தை எல்லாம் வட நாட்டார் வைத்திருக்கிறார்கள். நாம் பிரிந்து கொள்ளக் கூட நமக்கு உரிமை இல்லை. நமக்கு எவ்விதமான உரிமையும் இப்போது இல்லை.

நாட்டில் எந்த விதமான கிளர்ச்சி வந்தாலும் மொழி ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. ஆகவேதான் ஆகஸ்டு 1 ஆம் தேதியன்று பெரியாரும் அண்ணாவும் தமிழ் நாட்டில் திருப்பதியிலிருந்து தூத்துக்குடி வரையிலுள்ள ரயில்வே நிலையங்களிலுள்ள இந்திமொழியை அழித்தார்கள். இந்திக்கு இங்கு என்ன இடம் இருக்கிறது? அன்று வெள்ளைக்காரன் மவுண்ட் பேட்டன் இருந்த இடத்தில் இன்று ராஜேந்திர பிரசாத் இருக்கிறார். அன்று ஹோப் இருந்த இடத்தில் இன்று ஸ்ரீ பிரகாசா (கவர்னர்) இருக்கிறார். அப்பொழுது எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டதோ அவ்வளவு சம்பளம் தான் இப்பொழுதும் கொடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளைக்காரன் சுரண்டல் அப்பொழுது எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்பொழுதும் இருக்கிறது. அவர்கள் வியாபார முறையில் வந்து இங்கிருந்து சுரண்டிக் கொண்டு போனார்கள். அன்று அவர்கள் எஜமானராக இருந்தார்கள். இன்று வடநாட்டினர் எஜமானர்களாக இருக்கிறார்கள்”....

“போராட்டம் நடக்கும் போது நானும் திருத்தணிக்குப் போயிருக்கிறேன். அங்கு பெருவாரியாகத் தமிழ் பேசுகிறார்கள். எந்தப் பக்கங்களில் தமிழ் பேசுகிறார்களோ அந்தப் பக்கங்களை தமிழ் நாட்டுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதைப் போலவே எங்கு தெலுங்கர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அந்தப் பகுதியை ஆந்திர ராஜ்யத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். “

“ஆந்திரர்கள் புதிதாக தங்கள் ராஜ்யத்திற்குத் தலைநகரம் ஏற்படுத்த வேண்டும், அதற்காக நஷ்ட ஈடு கோருகிறார்கள் என்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் சொத்தை ஜனத்தொகை வாரியாகப் பிரித்திருக்கிறார்கள். அதே முறையில் கடனையும் பிரித்திருக்க வேண்டும். கடனை அப்படிப் பங்கிடாமல், தமிழர்களே கடனை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சொல்வதில் நியாயமில்லை. ஒரு குடும்பத்தில் சகோதரர்களுக்குள் பாகம் பிரிக்கின்ற போது, சொத்தையும் பிரிப்பார்கள், கடனையும் பிரிப்பார்கள். அந்த முறையில் பிரித்திருக்கலாம். ஆனால் அப்படிப் பிரிக்கவில்லை.”

இராஜாஜி ஆந்திர அரசுக்கு புதிய தலைநகரை உருவாக்க 2.30 கோடி கொடுக்க வேண்டும் என்ற விதியை சேர்த்திருந்தார்.

“இராஜாஜி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்; பல ஆயிரக்கணக்கான மக்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், நாடு பிரிகின்ற இந்த நல்ல நேரத்தில், இராஜாஜி கொண்டு வந்திருக்கின்ற புதுக் கல்வித் திட்டத்தை (குலக்கல்வித்திட்டத்தை) வாபஸ் வாங்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.” (ஆதாரம் - சட்டமன்ற நடவடிக்கை பக் 186 முதல் 190 வரை நாள் 15-7-1953)

ம.பொ.சி. அப்போது சட்ட மேலவையில் உறுப்பினராக இருந்தார். அப்போது அவர் பேசியதாவது

“மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, நம்முடைய முதல் அமைச்சர் அவர்கள் இந்தக் கவுன்சிலின் முன்பு வைத்துள்ள ஆந்திர ராஜ்ய அமைப்பு மசோதாவை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்...

இந்த எல்லைப் பிரச்சினையைப் பொருத்தவரையில் ஒரு நியாயம் நடந்திருக்க வேண்டும். சித்தூர் ஜில்லா தகராறுள்ள பிரதேசமாக இருப்பதால் அதை எஞ்சிய சென்னை ராஜ்யத்தோடு சேர்ந்திருக்க வேண்டும். சித்தூர் ஜில்லா தகராறுள்ள ஜில்லா என்று முத்திரை போட்டு எஞ்சிய சென்னை ராஜ்ஜியத்தில்தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியில்லாமல் மொழியின் அடிப்படையிலே அமைக்கப்படுகிற ஆந்திர ராஜ்ஜியத்தில் தகராறுள்ள இந்த சித்தூர் ஜில்லாவை சேர்த்திருக்கக்கூடாது. எஞ்சிய சென்னை ராஜ்ஜியத்தில் சேர்க்காமல், ஆந்திர ராஜ்ஜியத்தில் சேர்ப்பதற்கு நியாயமில்லை. ஆனால், சந்தர்ப்பம், சூழ்நிலை, தயக்கம் முதலிய விஷயங்கள் வேறுவிதமாக மாற்றி அமைத்து விட்டது. ஆயினும் இதைப் பெரிதாகக் கொள்ளாமல் எல்லைக் கமிஷன் அமைக்கப்படும் வரையில் பொறுத்திருந்து, இதற்கு முடிவு காண்பதில் ஆட்சேபனை ஒன்றுமில்லை. ஆகவே எல்லைக் கமிஷன் சீக்கிரமாக வரவேண்டும்.....

ஏற்கெனவே பிரிந்துபோன ராஜ்ஜியங்களுக்கு நஷ்டஈடு கொடுக்கப்படவில்லை. ஆனால் இங்கே மட்டும் நஷ்டஈடு என்ற ஒரு பிரிவு இருக்கிறதைப் பார்க்கும்போது ஒரு புது சம்பிராதயமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இப்படி கொடுக்க உத்தேசித்திருப்பதை நஷ்டஈடு என்று சொல்லாமல், சகோதரர்களுக்கு செய்யும் உதவி என்று வேண்டுமானால் சொல்லலாம், கொடுக்கலாம்” என்று கூறுகிறார் (சட்டமேலவை விவாதங்கள் பக் 111-116 நாள் 21.7.53).

எந்தப் பெயரில் கொடுத்தாலும் தமிழகத்தின் பணம் ஆந்திராவுக்குத் தானே போகும்.

திருத்தணி, சித்தூர், திருப்பதி முதலான பகுதிகளை ஆந்திராவோடு இணைத்து இராஜாஜி ஆந்திரப் பிரிவினை மசோதா தயாரித்திருந்தார். ம.பொ.சி. இதைப் பெரிதுப்படுத்த வேண்டாம் என்கிறார். தேவிகுளம், பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம் என்றபோது காமராஜர் ஆட்சி பதவி விலக வேண்டும் என்று கூறிய ம.பொ.சி. இராஜாஜி செய்தியில் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்கிறார். இவர்தான் வடக்கெல்லை பாதுகாப்புக் குழுத் தலைவர்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கோசல்ராமன் பேசிய அளவுக்குக்கூட ம.பொ.சி. பேசவில்லை. இராஜாஜிக்கு சார்பாகவே பேசியுள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. திருவில்லிப்புத்தூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கே.டி.கோசல்ராமன் ஆந்திரப் பிரிவினை மசோதாவின் மீது சட்டமன்றத்தில் இராஜாஜின் ஆந்திர ஆதரவுப் போக்கை வன்மையாகக் கண்டித்தார்.

“இந்த ராஜ்யத்தின் தலைவராகிய கனம் இராஜாஜி அவர்கள் பிரிந்துபோகின்ற ஆந்திரர்களுக்கு சலுகை காட்டும் வகையில் தமிழர்களுடைய உரிமைகளை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டுமென்றுதான் நான் கேட்கிறேன். எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்று நீங்கள் கேட்கலாம். சித்தூர் ஜில்லாவில் 6 தாலுக்காக்கள் தமிழர்கள் வாழுகின்ற பிரதேசம். தமிழ் கலாச்சாரம், நாகரீகம், இலக்கியம் தழைத்திருக்கின்ற பிரதேசம். அதையும் ஆந்திர மாகாணத்தோடு சேர்ந்திருப்பதைக் கண்டு அங்குள்ள தமிழர்கள் உள்ளம் குமுறுகிறார்கள். புள்ளி விவரங்களுடன் கூட அந்தத் தாலுகாக்கள் தமிழர்களுடைய தாலுகாக்கள் தான் என்று நிரூபிக்கிறார்கள்..... சந்திரகிரி தாலுகா என்ற திருப்பதிதான் நமது மதிப்பிற்குரிய தலைவர் கனம் இராஜகோபாலாச்சாரியார் அவர்களின் பரம்பரையினர் பிறந்த இடம். அங்கிருந்து வந்தவர்தான் நமது சக்கரவர்த்தி இராஜாஜி அவர்கள். அப்படி இருக்கும்போது கனம் இராஜாஜி அவர்கள் அந்த தாலுகாக்களையெல்லாம் ஆந்திரர்களுக்கு விட்டுக் கொடுக்க எப்படி முன் வந்தார்கள் என்றுதான் தெரியவில்லை.”

முதலமைச்சர் இராஜாஜி குறுக்கிட்டு “அது அவருடைய தாராள குணத்தினால்” அவையில் ஒரே (சிரிப்பு)

கே.டி.கோசல்ராமன்: “தன்னுடைய தாராள குணத்தினால்தான் விட்டுக் கொடுத்திருப்பதாக கனம் இராஜாஜி சொல்லுகிறார்கள். தமிழர்கள் எல்லோரும் தாராள மனப்பான்மையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும்தான் உடையவர்கள். ஆனால் மிக அதிகமான தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறபோது அதை தாராளமான மனப்பான்மையென்று சொல்லி விட்டுக் கொடுக்கவே முடியாது. தமிழர்கள் எல்லோரும் இன்றைய தினம் என்ன சொல்லுகிறார்கள் என்றால், கனம் இராஜாஜி அவர்கள் ஆந்திரர்களுக்கு சலுகை காட்டுகிறார்களே தவிர தமிழர்களின் உரிமையைக் காக்க முயற்சிக்கவில்லை என்று கூறுகிறார்கள்....

பெல்லாரி ஜில்லாவை எத்துடன் சேர்ப்பது என்று விசாரிக்க ஒரு நீதிபதியை அனுப்பினார்களே, 'நீதிபதி மிஸ்ரா' அது மாதிரியாக சித்தூர் ஜில்லாவைப் பற்றியும் விசாரணை செய்து ஒரு முடிவு அறிவிக்க ஏன் ஒரு நீதிபதியை அனுப்பக்கூடாது என்று நான் கேட்கிறேன்? கனம் இராஜாஜி அவர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழர்களின் உரிமைகளை விட்டுவிடக் கூடாது. ஏன் இந்த ஆந்திர மாகாணப் பிரிவினை மசோதாவிலேயே, சித்தூர் ஜில்லாவிலுள்ள ஆறு தாலுகாக்கள் நீங்கலாக இதர சச்சரவு அற்ற பிரதேசங்களைக் கொண்டு ஆந்திர மாகாணம் அமைக்கப்படுமென அறிவிக்கக்கூடாது என்று தான் நான் கேட்கிறேன்” (சட்டமன்ற விவாதங்கள் பக் 54, 55 நாள் 14.07.1953)

இராஜாஜி ஆந்திரர்களுக்கு சார்பாகவே இம்மசோதாவை தயாரித்திருந்தார் என்பதை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே சட்டசபையில் இராஜாஜி முன்னிலையிலேயே கண்டித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. ஆந்திரப் பிரிவினை மசோதாவின் மீது பேசிய பிரகாசம் “வ.ஆ.மாவட்டம், சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் கூடவே இராஜாஜியையும் சேர்த்து எடுத்துக் கொள்வோம். ஏனென்றால் இராஜாஜியும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட தெலுங்கர்தான்” என்று பேசினார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் இராஜாஜி, பிரகாசம் ஆங்கிலத்தில் பேசவே இராஜாஜியும் ஆங்கிலத்தில் “you take me or Hosur?” (நீங்கள் என்னை எடுத்துக் கொள்ளப் போகிறீர்களா அல்லது ஓசூரையா?) என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பிரகாசம் ஓசூரையும் எடுத்துக் கொள்வோம். உங்களையும் அழைத்துக் கொள்வோம்” என்றார். (சட்டமன்ற விவாதங்கள் பக். 342, 343 நாள் 16.07.1953)

புதுதில்லியில் நாடாளுமன்றத்தில் ஆந்திரப் பிரிவினை மசோதாவின் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வி.இராமசாமி, “சென்னை மாகாணத்தில் கடந்த பல ஆண்டுகளாக முதலமைச்சர்களாக இருந்தவர்களில் இரண்டு பேர்தான் தமிழர்கள். ஒருவர் டாக்டர் சுப்பராயன், மற்றொருவர் இராஜாஜி” என்று கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த எல்லூரு நாடாளுமன்ற உறுப்பினர் பி.எஸ்.மூர்த்தி, “இராஜாஜி தெலுங்கர். அவரை நீங்கள் உரிமை கொண்டாடக்கூடாது” என்றார். “அவர் தெலுங்கு மனிதரேதான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நாங்கள் தான் அவரை உங்களிடம் விட்டு வைத்தோம்” என்று மீண்டும் கூறினார். “சக்ரவர்த்தி என்பது அவரது குடும்பப் பெயர்தான். அதை வைத்து ஏமாற வேண்டாம்” என்றும் கூறினார். (நாடாளுமன்ற விவாதங்கள் பக். 1530, நாள் 22.08.1953)

ma po si with Kamarajar

இராஜாஜி தெலுங்கர்தான் என்பது, சட்டமன்றப் பதிவேட்டிலும், நாடாளுமன்றப் பதிவேட்டிலும் இடம் பெற்றுள்ளது. ம.பொ.சி. தன்னுடைய சுயநல அரசியலுக்காக இராஜாஜியை ‘தமிழ்ப் பார்ப்பனர்’ என்று கூறி தமிழர்களை ஏமாற்றி விட்டார்.

ஆந்திர மசோதாவில் இராஜாஜி ஆந்திரர்களுக்குச் சார்பாகவே அந்த மசோதாவை தயாரித்திருப்பது மேற்கண்ட சட்டமன்ற உரைகளிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

சென்னை நகர் பிரச்சினையிலும் இராஜாஜி ஆந்திரர்களுக்குச் சார்பாக இருந்தார் என்பதையும் ம.பொ.சி.யின் ‘எனது போராட்டம்’ நூலே சாட்சியாக உள்ளது.

இராஜாஜியின் ஊசலாட்டம் என்ற தலைப்பில் ம.பொ.சி கூறுவதாவது.

“மாநகராட்சியின் சிறப்புக் கூட்டம் நடைபெறவிருக்கும் செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்ததும், மேயரையும் என்னையும் இராஜாஜி தமது இல்லத்திற்கு அழைத்துப் பேசினார். ‘ஆந்திர அரசுக்குத் தற்காலிகமாகக் கூட சென்னையில் இடம் தரக் கூடாது’ என்ற வாசகத்தைத் தீர்மானத்திலிருந்து நீக்கி விடும்படி மேயரையும், என்னையும் இராஜாஜி கேட்டுக் கொண்டார்” (ம.பொ.சி. ‘எனது போராட்டம்’ பக் 632) இதற்குப் பொருள் என்ன? ஆந்திரர்களுக்குச் சென்னையில் தற்காலிகத் தலை நகரமாக இருக்க இடம் தர வேண்டும் என்பது தானே.

பிரிந்து செல்லும் ஆந்திர சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்குப் பிரிவு உபச்சார விழா 30.7.53 அன்று பேரவையில் நடைபெற்றது. அப்போது பேசிய பிரகாசம் அவர்கள் “இராஜாஜி ஆந்திராவைச் சேர்ந்தவர், அவரை நாங்கள் அழைத்துக் கொள்வோம்” என்று கூறினார். அன்று பேரவையில் பேசிய தி.மு.க உறுப்பினர் அ.கோவிந்தசாமி ஆந்திர உறுப்பினர்களைப் பாராட்டி விட்டு முடிக்கும் தறுவாயில் “கடைசியாக ஒரு வேண்டுகோள்; கனம் பிரகாசம் அவர்கள் பேசும்போது சொன்னார், கனம் இராஜாஜி அவர்களும் ஆந்திராவைச் சேர்ந்தவர் தான் என்றும், அதனால் தன்னுடன் அழைப்பேன் என்றும் சொன்னார். அவ்விதம் அழைத்து கனம் இராஜாஜி அந்த நாட்டிற்குப் போய் விட்டால் சந்தோஷமாக இருக்கும். நாட்டில் குழப்பம் இருக்காது என்று சொல்லிக் கொண்டு இத்துடன் முடித்து கொள்கிறேன்” என்றார். (ஆதாரம்: சட்டப்பேரவை நடவடிக்கைகள் பக். 1807 நாள் 30.7.1953)

அன்று ம.பொ.சி.யும் சட்ட மேலவையில் தான் வீற்றிருந்தார். இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் இராஜாஜி தெலுங்குப் பார்ப்பனர் என்பதும், அவருடைய செயல்பாடுகள் ஆந்திரர்களுக்கு ஆதரவாகவே இருந்தது என்பதும் வெளிப்படையான உண்மையாகும். ம.பொ.சி. தன்னுடைய சுயநலத்திற்காக இராஜாஜி தமிழ்ப் பார்ப்பனர் என்ற பொய்யைக் கட்டவிழ்த்தார். அதை நம்பிய முனைவர் அருகோ, வழக்குரைஞர் பா.குப்பன், பழ.நெடுமாறன், பெ.மணியரசன், ராஜேந்திர சோழன் உள்ளிட்ட தமிழ்த் தேசியவாதிகள் உண்மையைக் கண்டறியாமல். ம.பொ.சி சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பக் கூறிவருவது தமிழ்த் தேசியம் அடைவதற்கு எந்த வகையிலும் பயன்படாது.

இராஜாஜி சட்டமன்றத்திற்கு வெளியிலும் வடக்கெல்லைப் போராட்டத்திற்கு ஆதரவாக இல்லை என்பதை ம.பொ.சியின் ‘எனது போராட்டம்’ நூலே சாட்சி. “முதலமைச்சர் இராஜாஜியைச் சந்தித்துப் பேசி, சித்தூர் மாவட்டத்தை ‘தகராறுக்கிடமான பிரதேசம்’ என்றறிவிக்குமாறு பிரதமர் நேருவிடம் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்துமாறு மீண்டும் ஒரு முறை அவரை வற்புறுத்திக் கேட்க விரும்பினேன். அதன்படி 26.6.53 இல் முதல்வர் இராஜாஜியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினேன்......”

“இப்பிரச்சனையில் தமக்குள்ள சங்கடத்தை மற்றொரு முறையும் அவர் எனக்கு விளக்கினார். தமது அமைச்சரவையில் சரிபாதிப்பேர் ஆந்திரராயிருப்பதாலும், சட்டமன்றக் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் சரி பாதிப்பேர் தமிழரல்லாதாராக இருப்பதாலும் ஆந்திரர் நிலைக்கு எதிராக தமிழர் மட்டுமே நடத்தும் எல்லைக் கிளர்ச்சிக்கு ஆதரவாக முதல்வர் என்ற முறையில் தாம் எதையும் செய்ய இயலாமல் இருப்பதை எனக்கு உணர்த்தினார்”. (ம.பொ.சி. ‘எனது போராட்டம்’ பக் 659). இது இராஜாஜியின் ஆந்திரர்களுக்குச் சார்பான போக்கேயாகும்.

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சென்னை மாகாணத்தில் 375 சட்ட மன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அதில் காங்கிரஸ் கட்சியினர் 152 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். பெரியார் அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சியையும் காங்கிரஸ் அல்லாத வேட்பாளர்களையும் ஆதரித்தார். தி.மு.க திராவிட நாட்டுக்கு ஆதரவாக உறுதி கொடுத்த கட்சியையும், வேட்பாளர்களையும் ஆதரித்தது.

ஆந்திர காங்கிரஸ் தலைவர் டி.பிரகாசம் 1950 இல் காங்கிரசை விட்டு வெளியேறி, 1951 இல் ஐதராபாத் பிராஜா பார்டி என்பதைத் தொடங்கினார். என்.ஜி.ரங்கா அதன் செயலாளராக இருந்தார். 1952 இல் கிருபாளனி தலைமையிலான. கிஸான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி (K.M.P.P) விவசாயிகள் தொழிலாளர்கள் மக்கள் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். 1952 தேர்தலுக்கு முன்பு ஆந்திரப் பகுதியில் கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் (Democratic peoples front) என்ற கூட்டமைப்பை உருவாக்கினார். ஆந்திரா தனி மாநிலம் பெறுவதே இதன் முக்கிய கொள்கைகளுள் ஒன்று. ஆந்திர கம்யூனிஸ்டு கட்சியினர் தாங்கள் தேர்தலில் வெற்றிபெற்றால், வீட்டுக்கு 5 ஏக்கர் நிலம், ஏர் உழுவதற்கு வீட்டுக்கு ஒரு ஜதை ஏர் மாடு, வீட்டில் பால் கறந்து குடிக்க வீட்டுக்கு ஒரு பசுமாடு தரப்படும் என்று வாக்காளர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர். தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் எதிர்ப்பாலும் ஆந்திராவில் பிரகாசம் கூட்டணி எதிர்ப்பாலும் காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. சரிபாதி உறுப்பினர் கூட காங்கிரசுக்கு இல்லை. டெல்லி மேலிடம் இராஜாஜியை முதல்வர் பதவி ஏற்குமாறு ஆணையிட்டது. அப்போது ஸ்ரீ பிரகாசா என்ற உ.பி. காரர் சென்னை மாநில ஆளுநராக இருந்தார். ஆளுநர் நியமனத்தின் பேரில் மேலவை உறுப்பினராகி இராஜாஜி முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மந்திரி பதவி ஆசை காட்டி, மாணிக்கவேலரையும், இராமசாமி படையாச்சியையும் தம் வலையில் விழவைத்தார். முன்னவருக்கு 6 சட்ட மன்ற உறுப்பினர்களும் பின்னவருக்கு 19 சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்தனர். மாணிக்க வேலருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார். 1954 இல் காமராசர் இராமசாமி படையாச்சிக்கு அமைச்சர் பதவி கொடுத்தார். இராஜாஜி ஆந்திராவில் பிரகாசத்திடம் இருந்து பிரிந்து சென்ற என்.ஜி.ரங்கா தலைமையிலான ‘கிரிஸ்கர் லோக் பார்ட்டியில்’ இருந்து சில உறுப்பினர்களை இழுத்தார். எப்படியோ ஒரு வகையில் மெஜாரிட்டியை நிரூபித்துவிட்டு முதலமைச்சர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.

அப்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில்

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்                  190

ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்                     140

மலபார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்                     30

கன்னடாப் பகுதியைச் சார்ந்தவர்கள்                  15

மொத்தம்                      375 பேர்                                            

அந்தத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர் 62 பேர் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தனர். தமிழ்நாட்டில் பெரியார் பிரச்சாரமும், ஆந்திராவில் தெலுங்கானா புரட்சியின் தாக்கமும் பிரகாசத்தின் கூட்டணியும் அதற்குக் காரணமாகும். தமிழ்நாட்டில் 14 பேர் மட்டுமே இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர். தமிழ்ப் பகுதியைச் சார்ந்த 190 சட்ட மன்ற உறுப்பினர்களில் இந்த 14 பேர் மட்டுமே வடக்கெல்லைக்கு ஆதரவு தரமாட்டார்கள். தங்கள் கட்சிக் கட்டுபாடு என்ற முறையில், மற்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சி பாராமல் வடக்கெல்லைக்கு 176 பேர் ஆதரவளித்திருப்பார்கள். ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை விட இது அதிகம் தான். தமிழர்களுக்கு உதவி செய்ய இராஜாஜிக்கு விருப்பமில்லை. அவ்வளவுதான். ‘இராஜாஜி பரந்த தமிழகம் காண விழைந்தார்’ என்ற அருகோவின் கருத்தும் தவறானது ஆகும். (அருகோ தமிழர் இந்தியர் இல்லையா பக்கம் 4)

இராஜாஜி மொழி வாரி மாநிலக் கொள்கைக்கும் தொடக்கம் முதலே எதிராகத்தான் இருந்தார். இது பற்றி ம.பொ.சி கூறுவதாவது. “பிரதமர் நேரு திடீர்ப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். அதாவது பசல்அலி கமிஷன் பரிந்துரையில் கண்டபடி மொழி வாரி ராஜ்யங்கள் அமைப்பதற்கு மாறாக, இந்தியாவை ஐந்து ராஜ்ஜியங்களாகச் செய்யும் திட்டமொன்றை திடீரென்று வெளியிட்டார் . அவை தட்சிணம்(தெற்கு) ராஜ்யம், உத்திர (வடக்கு) ராஜ்யம், மேற்கு ராஜ்யம், கிழக்கு ராஜ்ஜியம், மத்திய ராஜ்யம் என்பவனாம்...... நேருவின் திடீர்ப் பிரகடனத்தை இராஜாஜி அவர்கள் மன நிறைவோடு வரவேற்றார். அதற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவும் முற்பட்டார். முதல் கூட்டம் மயிலை விவேகானந்தர் கல்லூரியில் நடைபெற்றது. அதில் இராஜாஜி “மொழி வாரி அரசு காண விழைவோர் காட்டுமிராண்டிகள்” என்று கடுஞ்சொல் புகன்றார். இந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்”(ம.பொ.சி. ‘எனது போராட்டம்’ பக்.761) இராஜாஜி மொழி வாரி மாநிலம் கேட்பவர்கள் காட்டுமிராண்டிகள் என்று திட்டினாலும் ம.பொ.சிக்கு இனிக்கும். பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறினால் மட்டும் கசக்கும்.

இராஜாஜி தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தையும் வர விடவில்லை. ஆ.கசபதி நாயகர் தமிழ் ஆட்சி மொழி மசோதாவை சென்னை சட்ட மேலவையில் 5-1-1954இல் தாக்கல் செய்தார். அதை விவாதத்துக்கே வரவிடாமல் முதல் அமைச்சர் இராஜாஜி தடுத்து விட்டார். இராஜாஜியின் பச்சை அடிமை ம.பொ.சியும் அன்று மேல் அவையில் தான் இருந்தார். அவர் வாய் மூடி மௌனியாவே இருந்தார். கசபதி நாயகரின் ஆட்சி மொழி மசோதாவை வரவேற்று நம்நாடு நாளேடு 16.1.54 இல் தலையங்கம் எழுதியது. 20.12.54 அன்று சென்னையில் அனைத்து கட்சிகளையும் அழைத்து, கசபதியார் தமிழ் ஆட்சி மொழி மாநாட்டை நடத்தினார். அங்கு பேசியவர்களின் உரைகள் நம்நாடு நாளிதழில் தொடராக வெளிவந்துள்ளது. இதையெல்லாம் ம.பொ.சி. திட்டமிட்டு தன்னுடைய செங்கோல் இதழில் வெளியிடாமல் மறைத்து விட்டார்.

மத்தியில் இந்தி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று ம.பொ.சி.யும், மத்தியில் இந்தி ஆட்சி மொழியாக இருக்கக்கூடாது, ஆங்கிலம்தான் இருக்கவேண்டும் என்று இராஜாஜியும் கூறிவந்தனர். அப்போது ம.பொ.சிக்கும் இராஜாஜிக்கும் இடையே சிறு உரசல் ஏற்பட்டது. ‘கல்கி’ ஏடு இராஜாஜியை ஆதரித்து எழுதியது. அதற்கு பதில் அளித்து ம.பொ.சி. 21.07.63 செங்கோல் ஏட்டில் இராஜாஜியைப் பற்றி எழுதியுள்ளார். “மொழிவாரி மாநிலத்தை அன்று எதிர்த்தாரே. இராஜாஜி மொழிவாரி மாநிலக் கோரிக்கையைக் “காட்டு மிராண்டிகளின் கொள்கை” என்று அய்தராபாத் காங்கிரஸ் மகாசபையில் பேசினார். அது மட்டுமன்றி மொழிவாரி மாநிலம் அமையவிருந்த தருணத்தில் அதனை அழிப்பதற்கென்றே “தட்சிணப்பிரதேசத் திட்டம்” என்ற கரடியை கட்டவிழ்த்து விட்டார். இதனை கல்கி மறந்ததா? இல்லை மறைக்கிறதா? இன்றளவும் இராஜாஜி வாய்ப்பு நேரும் போதெல்லாம் மொழிவாரி மாநில அமைப்பை எதிர்த்து வருகிறார்.”

பெரியார் மொழிவாரி மாநிலம் பிரிந்தவுடன் அதனை ஏற்றுக்கொண்டு சுதந்திரத் தமிழ்நாடு கோரினார். ஆனால் இராஜாஜி 1963இல் கூட மொழிவாரி மாநிலத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என ம.பொ.சியே எழுதியுள்ளார்.

“1952 இராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது, ஆந்திரம் தனி மாநிலமாக பிரிந்து போன சந்தர்ப்பத்தில் எஞ்சிய சென்னை ராஜ்ஜிய ஆட்சியை தமிழிலே நடத்த வேண்டுமென்று ஒரு மசோதா மேல் சபையில் அரங்கேற்றப்பட்டபோது, அதனை இராஜாஜி ஆதரிக்கவில்லை. அப்போது அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் பலங்கொண்டு தோற்கடித்தார்.”

கசபதியார்தான் தமிழ் ஆட்சிமொழி மசோதாவை மேல் அவையில் கொண்டுவந்தார் என்று சொல்லுவதற்குக்கூட ம.பொ.சி. தயாராயில்லை. அன்றைக்கு இராஜாஜியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, ம.பொ.சியும் தான் தமிழ் ஆட்சிமொழி மசோதாவை எதிர்த்தார். கொள்கையை விட தனி நபர் தன் குருநாதர் தான் முக்கியம் என்று செயல்பட்டவர் ம.பொ.சி.

“இராஜாஜியிடமிருந்து விலகி நிற்பதிலோ, அவர் மீது பழிசுமத்தி பிரச்சாரம் செய்வதிலோ எனக்கு துளிஅளவும் மகிழ்ச்சி கிடையாது” (செங்கோல் 21.7.63)

பெரியார் தன்னுடைய கொள்கைக்கு எதிராக யார் இருந்தாலும் எதிர்க்கத் தவறமாட்டார். 1948இல் ஓமந்தூரார் ஆட்சிக்காலத்தில் இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்.

தன்னுடைய நண்பர் வரதராசலு நாயுடு பார்ப்பனர்களுக்கு ஆதரவாக 1927முதல் தமிழ்நாடு பத்திரிக்கையில் எழுதி வந்ததை குடிஅரசு இதழில் வன்மையாகக் கண்டித்தார்.

1927இல் நீதிக்கட்சியைச் சார்ந்த ஏ.பி.பாத்ரோ, முத்துலட்சுமி ரெட்டியின் தேவதாசி ஒழிப்பு மசோதாவை பொறுப்புக் குழுவுக்கு விடவேண்டும் என்று சட்டசபையில் பேசியபோது, ‘இவர் பார்ப்பனரல்லாதார் கட்சியில் இருப்பதற்கே தகுதியில்லை. நீதிக்கட்சியில் இருந்து விலக வேண்டும்’ என்று பெரியார் குடிஅரசில் எழுதினார்.

1930இல் முதலமைச்சராக இருந்த சித்தூர் முனிசாமி நாயுடுவின் ஆட்சியில் ஆதிதிராவிட பள்ளிகள் மூடப்பட்டதைக் கண்டித்து அவர் பதவி விலக வற்புறுத்தி திராவிடன் ஏட்டில் பெரியார் எழுதியுள்ளார்.

ஆனால் ம.பொ.சி தன் கொள்கைகளுக்கு எதிரான கொள்கைகளையுடைய இராஜாஜியைத் தான் எப்போதும் ஆதரித்து வந்தார். இவர் என்ன கொள்கை வீரர் என்பது ம.பொ.சி அன்பர்களுக்கே வெளிச்சம்.

ம.பொ.சிக்கு எப்போதுமே இராஜாஜிதான் குருநாதர் அவர் சொல்படிதான் கேட்பார். தி.மு.கவோடு தேர்தல் உறவு கொண்டதற்கும் இராஜாஜிதான் காரணம் என ம.பொ.சியே கூறியுள்ளார்.

“பிரிவினைக் கோரிக்கையை தி.மு.கழகம் கைவிட்டு விட்டதால், அதனோடு தேர்தல் களத்தில் கூட்டு சேருவதற்கு எனக்கோ, தமிழரசுக் கழகத்திற்கோ அரசியல் ரீதியான தடை எதுவும் இல்லை. இதைச் சுட்டிக்காட்டி, சுதந்திரா தி.மு.க. கூட்டணியில் தமிழரசுக் கழகமும் இணைய வேண்டும் என்று என் தலைவர் இராஜாஜி வற்புறுத்தினார்.”

“தேர்தலில் நான் வெற்றிபெற்ற செய்தி கிடைத்தவுடன் முதன்முதலாக இராஜாஜியின் இல்லத்திற்குச் சென்று, அவருக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தேன். இராஜாஜியின் பிடிவாதமான வற்புறுத்தல் இருந்ததில்லையானால், நான் பார்லிமெண்டரி அரசியலில் புகுந்திருக்கவே மாட்டேன். சட்டமன்றத்திற்கு வெளியிலிருந்தே என் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும், தமிழினத்திற்கும், என்தாய் நாடான பாரதத்திற்கும் தொடர்ந்து பணியாற்றி வந்திருப்பேன். ஆனால், இராஜாஜி என் மீது வெற்றி கண்டுவிட்டார்.” (ம.பொ.சி. ‘நானறிந்த இராஜாஜி’ பக். 309-312)

தனக்கென ஒரு கொள்கை இல்லாத ம.பொ.சியை, தமிழனத்தின் தலைவராகக் காட்டுவதற்கு முனைவர் அரு.கோபாலன், பா. குப்பன் போன்ற தமிழ்த் தேசியவாதிகளுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ தெரியவில்லை.

 1937இல் இராஜாஜி பள்ளிப்பாடங்களில் இந்தியைக் கட்டாயமாகத் திணித்ததால் பெரியார் எதிர்த்தார். தமிழினமே கொந்தளித்து எதிர்த்தது.

1952இல் இராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது அரைநாள் கல்வித்திட்டம் (குலக்கல்வித் திட்டம் - அரைநாள் பள்ளியில் பாடம் பயில வேண்டும். மீதம் அரைநாள் பெற்றோர் தொழிலை செய்யவேண்டும்) என்று உத்தரவிட்டு அதுவும் அது கிராமப்புறப் பள்ளிக்கு மட்டுமே என்பதை நடைமுறைப் படுத்தினார். பார்ப்பனரல்லாத பிள்ளைகளின் எதிர்காலமே பாழடிக்கப்படுகிறது என்ற காரணத்தில்தான் பெரியார் எதிர்த்தாரே தவிர, பா. குப்பன் கூறுவது போல் இராஜாஜி தமிழ்ப் பார்ப்பனர் என்பதால் எதிர்க்கப்படவில்லை. அவர் தெலுங்கு பார்ப்பனரே என்பதை நிரூபித்துள்ளேன்.

தமிழ் ஆட்சி மொழி பற்றியும் ம.பொ.சி. மழுப்பலாகவே மேலவையில் பேசினார். 11-3-1954 அன்று மேலவையில் பேசிய ம.பொ.சி “தலைவர் அவர்களே, ஆட்சி மொழிப் பிரச்சினையைப் பற்றி நான் வற்புறுத்திப் பேசுகின்றபோது. உடனடியாகத் தமிழ் மொழியை இந்த இராச்சியத்தின் ஆட்சி மொழியாகச் செய்ய வேண்டுமென்று கூட நான் சொல்லவில்லை. இன்றைய நிலைமையில் சட்டத்திலுள்ள சிக்கல்களையும், நிர்வாகத்திலுள்ள கஷ்டங்களையும் நான் அறிகின்றேன்”. என்று இராஜாஜிக்கு ஒத்தூதும் தன்மையிலே பேசினார். “இந்தியா முழுவதற்கும் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி மொழியைத்தான் தேசிய மொழியாகக் கொண்டு வர வேண்டுமென்று நமது அரசியல் அமைப்பில் தெள்ளத் தெளிய விளக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் விடுதலைக்காகப் போரிட்ட வீரர்களில் ஒருவன் என்ற முறையில் நான் இந்தியைத் தேசிய பாஷையாக ஆக்குவதற்கு ஒப்புக் கொள்கிறேன்... தமிழ்மொழி இருக்க வேண்டிய இடங்களை எல்லாம் இன்றைக்கு ஆங்கிலம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதுதான், அந்த இடத்தில் இனிமேல் இந்தி உட்கார்ந்து கொண்டு தாய் மொழி மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அதனால் தேசிய வாதிகளிற் பலரும், இந்தியை எதிர்க்கும் தேசிய எதிர்ப்பு சக்திகளின் கூட்டத்தினிடையே வழுக்கி விழும்படி நேரிட்டு விடுமோ என்று நான் அச்சப்படுகிறேன். ஆகவே தமிழை ஆட்சி மொழியாக ஆக்குவதற்கு வேண்டிய ஏற்பட்டை உடனே எடுத்துக் கொள்ள வேண்டுமென்று நான் அரசாங்கத்திற்கு வற்புறுத்திக் கூற விரும்புகிறேன்” அதே உரையில் மேலும் கூறுகிறார்.

“ஒரு பாட்டாளி ஆங்கிலம் தெரியாது என்பதினால் பாராளுமன்றத்திற்கு வரமுடியவில்லை என்பதை நினைக்கும் போது என் நெஞ்சு துடிக்கிறது. மனம் கொதிப்படைகிறது”.

ம.பொ.சிக்கு ஆங்கிலத்தின் மீது ஏன் அவ்வளவு ஆத்திரம் என்பது உங்களுக்குப் புரிகிறதா? 1946 இல் வடசென்னை பாராளுமன்றத் தொகுதிக்கு ம.பொ.சி மனுப்போட்டிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலிலும் இவர் பெயர் இருந்தது. பட்டியல் டில்லிக்குச் சென்ற பிறகு ம.பொ.சி பெயர் நீக்கப்பட்டு நரசிம்மராவ் பெயர் வெளியிடப்பட்டது. (‘எனது போராட்டம்’ பக் 356) இதை மனதில் கொண்டுதான் ம.பொ.சி பேரவையில் பேசியுள்ளார். அதே மேலவை உரையில் ம.பொ.சி. மேலும் கூறுகிறார். “ஆங்கிலத்தை உலகப்பொது மொழியாக நாங்கள் ஏற்றுக் கொள்ளத்தயார். இந்தியை இந்திய நாட்டுப் பொது மொழியாகவும் ஏற்றுக் கொள்ளத் தயார். ஆனால் தமிழை இந்த ராச்சியத்தின் ஆட்சி மொழியாகச் செய்தே தீரவேண்டும்” என்கிறார்.

ஆக மும்மொழித் திட்டத்தை ம.பொ.சி. ஏற்றுக் கொண்டார் என்பதே இதன் பொருள்.

அன்றே குலக் கல்வித்திட்டத்தையும் ஆதரித்துப் பேசியுள்ளார்

“கல்வித்திட்டம். இதற்கு எதிராகச் சொல்லப்படும் வாதங்கள் பலர் பேசிப் பேசிப் புளித்துப் போனவைகள். சொல்லிச் சொல்லி சலித்துப் போனவைகள். இருந்தாலும் கூட அதே சான்றுகளை பழைய அத்தாட்சிகளை எடுத்து சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் உண்மையில் கல்வித் திட்டத்திற்கு முன்பு இருந்த எதிர்ப்பு சக்திகள் தேய்ந்து கொண்டே வருகின்றது. ஆதரவு தான் அமோகமாக வளர்ந்து கொண்டிருந்தது. தேய்பிறை போல நாளுக்கு நாள் தேய்ந்து வரும் எதிர்ப்பை எனது நண்பர் டி.ஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார். ஆரம்பத்திலிருந்தே அதற்கு ஆதரவு தேடிக் கொண்டு வரும் நான், தற்போது அதற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அதிக ஆதரவைக் கண்டு உள்ளம் பூரித்து உவகை கொள்கிறேன்” ஆதாரம்: (சட்ட மேலவை விவாதங்கள் பக்கம் 412 - முதல் 420 வரை நாள் 11.3.1954 வரவு - செலவு திட்டத்தின் மீதான உரை)

ம.பொ.சி பேசியதில் ஒரு துளிகூட உண்மை இல்லை. இராஜாஜியை மகிழ்ச்சியடையச் செய்வதற்காக அந்தத் திட்டத்திற்கு ஆதரவு பெருகுவதாக அவர் பொய்யாகப் பேசியுள்ளார். உண்மையில் குலக் கல்விக்கு எதிர்ப்புதான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ம.பொ.சி பேசிய 20 நாட்களில் மார்ச்சு 31 ஆம் நாள் இராஜாஜி ஆட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது தோற்று ஆட்சியை மூட்டைக் கட்டிக்கொண்டது. காமராசர் 1954 ஏப்ரல் 14 ஆம் நாள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

காமராசர் ஆட்சிக்கு வந்தவுடனேயே குலக் கல்வித்திட்டத்தை நீக்கினார். அதனால் பெரியார் அவருக்கு ஆதரவு கொடுத்தார்.

வடக்கு எல்லைப் பிரச்சினையை இழுத்தடிக்க இராஜாஜி சூழ்ச்சி செய்தார். இதை கஜபதி நாயகர் கண்டித்தார். 25.2.1954 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய ஆ.கசபதி நாயகர் “தமிழ்நாட்டுடன் சேர்ந்திருக்க வேண்டிய பகுதிகளாகிய சித்தூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி போன்ற பிராந்தியங்களை ஆந்திர ராஜ்யத்தோடு இந்திய சர்க்கார் சேர்ப்பதற்கு அனுமதித்தது தவறு ஆகும். அதனால் நாட்டில் எழுந்த கேடுகளை, கிளர்ச்சிகளை குழப்பங்களை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். அந்தப் பிராந்தியங்களில் வசிக்கின்ற பெருபான்மையான தமிழ் மக்களின் கலாச்சாரத்தைப் பாதிக்கின்ற ஒரு பெரிய விஷயத்தைப் பற்றி அந்தச் சபையில் என் நண்பர் திரு விநாயகம் அவர்கள் பேசும்போது, சித்தூர் விஷயம் ஆந்திர சர்க்காரின் பொறுப்பும் அல்ல, சென்னை ராஜ்யசர்க்கரின் பொறுப்பும் அல்ல. அது மத்திய சர்க்காரின் பொறுப்பு! என்று குறிப்பிட்டார்கள். ஆனால் மேன்மை தாங்கிய கவர்னர் பிரான் அவர்களுடைய சொற்பொழிவில் இருந்து என்ன தெரியவருகிறது என்றால் இது மத்திய சர்க்காரின் பொறுப்பு அல்ல. சென்னை ராஜ்ய அரசியலாரும், ஆந்திர ராஜ்ய அரசியலாரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிலைமையில் இருவர்களுடைய பொறுப்பாகவே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது......

ஆனால் கவர்னர் பிரான் சொல்லுகிறார். எப்போதும் நிர்வாகப் பிரிவுகள் மொழி வழியாகப் பிரிக்கப்பட்ட ஒரு பிரிவாக இருக்க முடியாது என்பதை நாம் எல்லோரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று, மக்களுடைய விருப்பங் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் ஏன் என்று தான் நான் கேட்கிறேன். இப்பொழுது இருக்கும் எல்லைகளை யார் வகுத்தது? யாரால் இந்த எல்லைகள் பிரிக்கப்பட்டது? இவைகளை யெல்லாம் மொழி வழி பிரிப்பதற்கு என்ன கஷ்டம் இருக்கப் போகிறது என்பது தான் எனக்குத் தெரியவில்லை.”

“ஒரு எல்லையை நீங்களாவே அமைத்துக் கொண்டு அதில் தமிழ்த் தாயகத்தோடு சேர வேண்டிய தமிழ்ப் பிரதேசங்கள் இருந்தாலும் கூட அதைக் கவனிக்காது அந்த இடத்தோடு ஒரு கோட்டைப் போட்டு இதற்கு அப்பாலுள்ள பிராந்தியங்கள் எல்லாம் தெலுங்கு ராஜ்யத்தைச் சேர்ந்தது என்று அறிவித்திருப்பது ரொம்பவும் வருந்தத்தக்க விஷயம் ஆகும்” என்று கண்டித்துப் பேசினார்.(சட்டமேலவை விவாதங்கள் பக் 56-59 நாள் 25-2-54)

ஆனால் வடக்கெல்லைப் போருக்காக தாம் வாழ்வதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்ட ம.பொ.சி, இராஜாஜியின் எல்லைப் பிரச்சினையை இழுத்தடிக்கும் சதித் திட்டத்திற்கு ஆதரவாகவே இருந்தார்.

“மதிப்பிற்குரிய துணைத் தலைவர் அவர்களே! கவுன்சில் முன்புள்ள நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மனப் பூர்வமாக ஆதரிக்கிறேன். குறிப்பாக சித்தூர் மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பகுதிகளை இந்த ராஜ்யத்தோடு சேர்ப்பதற்காக இந்தச் சர்க்கார் ஒரு உடன்படிக்கை செய்து கொள்வார்கள் என்பதாக அவ்வுரையின் ஆரம்பத்திலேயே அந்தப் பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக, அவ்வுரையை நிகழ்த்திய கவர்னர் அவர்களுக்கும் அதனைத் தயாரித்துள்ள மந்திரிமார்களுக்கும் நான் சித்தூர் மாவட்டத் தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆந்திர அரசாங்கத்துடன் நம் சர்க்கார் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தியே ஒரு நேர்மையான முடிவைக் காண வேண்டும் என்பது அபிப்பிராயம். என்னைக் கேட்டால் எல்லைக் கமிஷன் சர்ச்சைக்கே இப்பிரச்சனையை விடாமல், உண்மை இந்தியர்கள் நாம் என்பதை அகில உலகுக்கும் எடுத்துக் காட்டும் முறையில் தமிழர்களும், தெலுங்கர்களும் கூடிப்பேசி இவ்விஷயத்தைத் தீர்த்து கொள்வது தான் சரியானதாகும். இன்றைய தினம் சென்னை ராஜ்ஜியத்திற்கும் சரி, ஆந்திர ராஜ்யத்திற்கும் சரி அறிவும், அனுபவமும், வயதும் முதிர்ந்த இரு பெரியார்கள், இரு அறிஞர்கள், இரு சிறந்த தேசத்தலைவர்கள்தான் முதலமைச்சர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள். சென்னை முதல்வர் இராஜாஜியும், ஆந்திர முதல்வர் பிரகாசமும் இவர்கள் இருவருமே தேச விடுதலைப் போராட்டத்தில் ஒன்றாக, ஒரே கட்சியில் நின்று போராடி வெற்றி பெற்ற சிறந்த தியாகிகள். ஆகவே ஆந்திர நாட்டுப் பிரதமராகவும், தமிழ்நாட்டுப் பிரதமராகவும் வீற்றிருக்கின்ற இந்த இரு நண்பர்களுமே ஓரிடத்தில் கூடி இப்பிரச்சினைக்கு உடனடியாக ஒரு முடிவைக் காணுவதுதான் சிறந்த வழியாகும்”. (மேலவை விவாதங்கள் பக் 106 நாள் 26.2.1954)

முன்பு எல்லைக் கமிஷன் வேண்டுமென்று விநாயகம் மூலம் தீர்மானத்தைக் கொடுத்து நான்தான் அதைச் சட் முன் வடிவில் சேர்த்தேன் என்றார். (ம.பொ.சி ‘எனது போராட்டம்’ பக் 673). ஆனால் இப்போது எல்லைக் கமிஷனுக்கே விட வேண்டாம் என்கிறார்.

ஏனென்றால் ஆளுநர் உரையில் அப்படி உள்ளது; அதற்காக இராஜாஜிக்குப் பக்கமேளம் வாசித்தார். இதனால் வந்த விளைவு பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 1956 இல் தீர்ந்திருக்க வேண்டிய வடக்கெல்லை தீராமல், பவுண்டரி கமிஷன் அனுப்பு என்று நான்காண்டுக் காலம் போராட்டம் நடத்தினார். இராஜாஜி, ம.பொ.சி கூட்டுறவால் காலம் கடந்ததுதான் மிச்சம்.

வடக்கெல்லைப் போராட்டத்திலும், தெற்கெல்லைப் போராட்டத்திலும், மொழிவாரி மாநில அமைப்பிலும், தமிழ் ஆட்சி மொழியாக்குவதிலும், எதிலுமே ம.பொ.சிக்கு ஆதரவாக இராஜாஜி இல்லை. தட்சிண பிரதேசத்திட்டத்தை ம.பொ.சி. எதிர்த்தார்; இராஜாஜி ஆதரித்தார். மொழி வாரி மாநிலப் பிரிவினை கேட்பவர்கள் “காட்டுமிராண்டிகள்” என்று இராஜாஜி பேசினார். 5.11.1953இல் நடைபெற்ற வடக்கெல்லை மீட்பு மாநாட்டிற்கு “மாநாடு வெற்றி பெறக் கோரி” பெரியார் ஈ.வெ.ரா. ராஜா சர்.முத்தையா செட்டியார் ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தனர். (கோல்டன் நா.சுப்பிரமணியன் தமிழக வடக் கெல்லைப் போராட்டமும் தணிகை மீட்சியும். பக் 48, ம.பொ.சியின் செங்கோல் 11-1-1953)

 9-2-1953இல் நகரில் நடைபெற்ற தமிழர் மாநாட்டுக்கு திருவாளர்கள் ஈ.வெ.ரா, கோவை ஜி.டி.நாயுடு, செட்டி நாட்டரசர், டாக்டர் மு.வ., திருமதி மரகதம் சந்திரசேகர் முதலிய பல தலைவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தனர்.(கோல்டன் நா.சுப்பிரமணியன் தமிழக வடக்கெல்லைப் போராட்டமும் தணிகை மீட்சியும், பக் 55 ம.பொ.சியின் செங்கோல் 15-2-53)

ஆக, பெரியார் வடக்கெல்லைப் போராட்டத்திற்கு எதிர்ப்பாக இருந்தார் என்று கூறுவது தவறே ஆகும். ம.பொ.சி.யின் எந்தக் கொள்கைக்கும் ஒத்துவராத இராஜாஜியை ம.பொ.சி ஏன் தலைவராக ஏற்றுக் கொண்டார் என்பதையும் வடக்கெல்லை, தெற்கெல்லைப் போராட்டத்தை ஆதரித்த, தட்சிணப் பிரதேச திட்டத்தை எதிர்த்த ம.பொ.சிக்கு ஒத்த கொள்கையுடைய பெரியாரை ஏன் எதிர்த்தார் என்பதையும், அடிக்கடி இராஜாஜி வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்து வரும் ம.பொ.சி. இராஜாஜி தெலுங்குப் பார்ப்பனர் என்பதை ஏன் மறைத்தார் என்பதையும், இராஜாஜி தமிழ்ப் பார்ப்பனர்; அதனால்தான் பெரியார் எதிர்த்து வந்தார் எனக்கூறித் திரியும் தமிழ் தேசியம் பேசுவோர் மற்றும் ம.பொ.சியின் பற்றாளர்கள் தான் விளக்க வேண்டும்.

(தொடரும் 

- வாலாசா வல்லவன்

Pin It