தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பெரும் சாதனை என்று மதிப்பிடப்படுகின்ற கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டிற்கும் முதன்மை ஆசிரியராக இருந்தவர். வரலாற்று இலக்கிய சமூக நாடகங்களை படைத்து அளித்தவர். சிறுவர் இலக்கியம் படைத்து இளைய தமிழுக்கு வளமை சேர்த்தவர். மொழி பெயர்ப்பிலும் ஈடுபட்டு தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். தேசபக்தராகவும் இதழாளராகவும் இலக்கியப் படைப்பாளியாகவும் திகழ்ந்தவர். தமிழிசை வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். மகாகவி பாரதியை பல்வேறு கோணங்களில் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். அவர்தான் ‘செந்தமிழ்ச் செல்வர்’ எனப் போற்றப்படும் ம.ப.பெ.தூரன்.

        Thooran  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகில் உள்ள மஞ்சக்காட்டுவலசு என்னும் சிற்றூரில் 1908 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 26 ஆம் நாள், பழனிவேலப்பர்-பாவாத்தாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் தூரன். பெற்றோர் சூட்டிய பெயர் பெரியசாமி என்பதாகும். கல்லூரியில் படிக்கும்பொழுது ‘தூரன்’ என்ற புனைப்பெயரை வைத்துக் கொண்டார்.

          தொடக்கக் கல்வியை மொடக்குறிச்சி தொடக்கப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் பள்ளியிறுதி வகுப்புவரை ஈரோடு மகாசன சபா உயர்நிலைப் பள்ளியிலும் பயின்று முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

          இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரத்தியாகிகளான பகத்சிங், சுகதேவ், இராஜகுரு ஆகியோர் 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர். இந்த நிகழ்ச்சியால் மனம் வெதும்பிய தூரன் இளங்கலை இறுதி ஆண்டுத் தேர்வை எழுதாமல் புறக்கணித்தார்.

          நண்பர்களுடன் இணைந்து ‘வனமலர்ச் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அந்த அமைப்பின் மூலம் ‘பித்தன்’ என்ற இதழை நடத்தினார்.

          தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் வேண்டுகோளை ஏற்று தூரன், சுதேசமித்திரன் அலுவலகம் சென்று சுதேசமித்திரன் இதழில் வெளிவந்த மகாகவி பாரதியாரின் எழுத்துக்களைத் தொகுத்து அளித்தார்.

          தி.க. அவினாசிலிங்கம், போத்தனூரில் தொடங்கிய இராமகிருஷ்ணா வித்யாலயத்தில் ஆசிரியராகப் பணி புரிந்தார். பள்ளியில் பணிபுரியும்போது தான் பெற்று வந்த ஊதியம் அதிகம் எனக் கருதி குறைந்த ஊதியமே பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பணிபுரிந்த பள்ளிக்கு அப்போது வருகை புரிந்த மகாத்மாக காந்தியடிகளை வரவேற்றுச் சிறப்பித்தார்.

          தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில், கல்வி அமைச்சராக இருந்த தி.க. அவினாசிலிங்கம், தமிழ் மொழி வளர்ச்சிக்காக, தன்னாட்சி உரிமையுடைய ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அந்த அமைப்பின் சார்பில் தமிழில் ‘கலைக்களஞ்சியம்’ பல தொகுதிகளாக வெளியிடத் திட்டம் வகுக்கப்பட்டது. கலைக்களஞ்சியம் தயாரிக்கும் பணிக்கு தூரன் முதன்மை ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்தொண்பது ஆண்டுகள் உழைத்து கலைக்களஞ்சியத்தை உருவாக்கினார். மேலும், குழந்தைகள் கலைக் களஞ்சியத்தை 1976 ஆம் ஆண்டு வெளியிட்டார். இது தூரனின் சாதனைப் பணி எனலாம்.

          ‘இளந்தமிழா’, ‘மின்னல் பூ’, ‘நிலாப் பிஞ்சு’, ‘பட்டிப் பறவைகள்’ முதலிய கவிதை நூல்களைப் படைத்து அளித்துள்ளார். அக்கவிதை நூல்களைத் தொகுத்து ‘தூரன் கவிதைகள்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

          தூரன் தமது கவிதைகள் மூலம், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், சாதி பாகுபாட்டையும், சமூகத்தில் நிலவும் வறுமையையும் சாடுகிறார்.

          ‘தியாகம்’. ‘வீரன் குமரன்’, ‘கிழவியும் ராணாவும்’, ‘பிருதிவி ராஜ் - சம்யுக்தை’ முதலிய சிறிய கதைக் கவிதைகளை எழுதியுள்ளார்.

          ‘காதலிக்குக் கடிதம்’ ‘பதில்’, ‘கடிதம்’- முதலிய கடித வடிவில் கவிதை நூல்களை எழுதி தமிழுக்கு வளமை சேர்த்துள்ளார்.

          உரையாடல் வடிவில் அமைந்த ‘ஓடக்காரன்’, இசைப் பாடல் வடிவில் அமைந்த ‘உள்ளம் தளராதே’ நாட்டுப்புறப்பாடல் வடிவில் அமைந்த ‘கைவளம்’ முதலிய புதுமைகளையும் தமிழுக்கு அளித்துள்ளார்.

          அறுபது ஆண்டுகளுக்கு முன்பே வசன கவிதைப் பரிசோதனையில் ஈடுபட்டு, ‘இருளும் ஒளியும்’, ‘அறிவாய் நீ’, ‘மேலே பற’, ‘மானிடா எழுக’ ‘யாரது?’ ‘வாழ்க்கைப் பயணம்’, ‘சந்திப்பு’, ‘நமது வழி’ முதலிய வசன கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். அந்த வசன கவிதை நூல்கள் புதுக்கவிதையின் பேச்சுச் சந்தமும், உரைநடை சிறப்பும் கொண்டவைகளாக அமைந்துள்ளது. ‘பிள்ளைவரம்’, ‘உரிமைப் பெண்’, ‘தங்கச் சங்கிலி’, ‘காளிங்கராயன் கொடை’, ‘மாவிளக்கு’ முதலிய சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டு உள்ளார். இவரது சிறுகதைகள் மதுவிலக்கையும், சமூக அறநெறிகளையும் உணர்த்துபவைகளாகும்.

          ‘அழகு மயக்கம்’, ‘சூழ்ச்சி’ ‘பொன்னியின் தியாகம்’, ‘ஆதி-அந்தி’, ‘காதலும் கடமையும்’, ‘மனக்குகை’, ‘இளந்துறவி’ முதலிய ஏழு நாடகங்களைப் படைத்தளித்துள்ளார். தூரனின் நாடகங்களில் நாட்டுப் பற்று, தூய காதல், உள்ளத்து முரண்பாடுகளின் மோதல், கலை விளைவிக்கும் தடுமாற்றம், மகளிரின் தியாகம், ஆழ்மனம் நிகழ்த்தும் விளையாட்டு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவைகளாகும்.

          ‘பூவின் சிரிப்பு’, ‘காட்டுவழிதனிலே’, ‘தேன் சிட்டு’ முதலிய கட்டுரைத் தொகுதிகளை தமிழுலகுக்கு அளித்துள்ளார்.

          “கட்டுரை’, ‘இலக்கியம்’ என்ற தகுதியைப் பெற வேண்டுமானால் எடுத்தாளும் பொருள்களைவிட, எழுதுகின்ற மனிதனின் சொந்த மனப்பான்மையையும், உணர்ச்சிகளையும் அது தாங்கி நிற்க வேண்டியது முக்கியம். மேலும், கட்டுரைகளில் இலக்கியச் சுவையும் கலைப் பண்பும் சிறப்பிடம் பெற வேண்டும்” எனக் கட்டுரைக்கு இலக்கணம் வகுத்துள்ளார் தூரன்.

          குழந்தைகளின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சிறுகதைகளையும், நாவல்களையும், பாடல்களையும் படைத்து ‘குழந்தை இலக்கிய’த்துக்கு பாடுபட்டவர் தூரன்.

          ‘ஓலைக்கிளி’, ‘தம்பியின் திறமை’, ‘நாட்டியராணி’, ‘மஞ்சள் முட்டை’, ‘நிலாப்பாட்டி’முதலிய குழந்தைக் கதை நூல்களை எழுதியுள்ளார். ‘உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்’, ‘ஊமை ஒரு குறையல்ல’ என்ற சமூகக் கருத்துக்களை, தனது குழந்தைகளுக்கான கதைகளில் விதைத்துள்ளார்.

          குழந்தைகளின் மனதில் நல்ல பண்புகளை பதிய வைத்து வளர்க்க வேண்டும், தீமையை எதிர்த்துப் போராடும் துணிவை ஏற்படுத்த வேண்டும், உண்மையைப் பேசுபவன் உயர்வு பெறுவான், உழைப்பின் உயர்வு, தாய்மொழிப் பற்று முதலிய கருத்துக்களை முதன்மைப்படுத்தியுள்ளார் தூரன்.

          நாவல் என்ற புனைகதை வடிவில் சிறுவர்களுக்காகத் தூரன், ‘மாயக்கள்ளன்’, ‘சூரப் புலி’, ‘கொல்லிமலைக் கள்ளன்’, ‘சங்ககிரிக் கோட்டை மர்மம்’ ‘தரங்கம்பாடித் தங்கப்புதையல்’, முதலியவற்றை படைத்தளித்து உள்ளார்.

          தூரனின் கதையுலகில், சிறுவர்களின் அறிவுக்கும், ஆற்றலுக்கும், துணிவுக்கும், செயல் திறனுக்கும் தூண்டுதல்களுக்கான கூறுகள் அமைந்துள்ளன.

          குழந்தைகளின் கலை வளரும் உள்ளத்துக்கு’, ஆனையும் பூனையும்’, ‘நல்ல நல்ல பாட்டு’ ‘மழலை அமுதம்’ முதலிய குழந்தைப் பாடல் நூல்களை எழுதி அளித்துள்ளார். அப்பாடல்கள் மூலம் ஒற்றுமையின் தேவை. சாதி சமய ஏற்றத்தாழ்வுகள் கூடாது. கல்வியின் முக்கியத்துவம் முதலிய கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார்.

          ‘மனமும் அதன் விளக்கமும்’, ‘கருவில் வளரும் குழந்தை’, ‘பாரம்பரியம்’, ‘அடிமனம்’, ‘பெற்றோர் கொடுத்த பெருங்கொடை’, ‘குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்’ முதலிய அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளார்.

          “படித்து பட்டம் பெற்று ஆராய்ச்சி செய்த நமது நாட்டு விஞ்ஞானிகள் எவரும், தாங்கள் கண்டுபிடித்ததை தாய்மொழியில் நூல்களாக இயற்றாததால், ஆங்கிலம் படிக்காத பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு யாதொரு பயனும் இல்லை” எனக்கூறி, அறிவியல் ஆராய்ச்சி நூல்கள் பலவும் தமிழில் வெளிவர வேண்டும் எனப் பாடுபட்டார் தூரன்.

          மகாகவி பாரதியாரின் கருத்துக்களை, சிந்தனைகளை ‘பாரதி தமிழ்’ என்ற வரிசையில் 134 தலைப்புகளில் பத்து தொகுதிகளாக வெளியிட்டு உள்ளார்.

          ‘இரவீந்தர் குழந்தை இலக்கியம்’, ‘கானகத்தின் குரல் ’, ‘கடல் கடந்த நட்பு’, ‘பறவைகளைப் பார்’ முதலிய நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து அளித்துள்ளார் தூரன்.

          ‘தமிழிசைப் பாடல்கள்’, ‘இசை மணிமாலை’, ‘நவமணி இசைமாலை’, ‘கீர்த்தனை மஞ்சரி’, ‘இசைமணி மஞ்சரி’, ‘கீர்த்தனை அமுதம்’ முதலிய இசை நூல்களை வெளியிட்டு தமிழிசையின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார் தூரன்.

          தூரன், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயலாளராகவும், தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம், சாகித்திய அகாதெமி, இயல் இசை நாடக மன்றம், திரைப்படத் தணிக்கைக் குழு, அனைத்திந்திய எழுத்தாளர் மன்றம் முதலிய பல அமைப்புகளில் உறுப்பினராக இருந்து பாடுபட்டுள்ளார்.

          தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும், தமிழ் இசைக் கல்லூரியின் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றினார்.

          ‘பத்ம பூஷன்’, ‘கலைமாமணி’, ‘இசைப் பேரறிஞர்’, ‘பெருந்தமிழ்ச் செல்வர்’, ‘செந்தமிழ் கலைச் செல்வர்’, ‘செந்தமிழ்ச் செல்வர்’ முதலிய விருதுகளும், பட்டங்களும் தூரனுக்கு பெருமை சேர்த்தன.

          தமிழ் இலக்கியத்திற்கும், தமிழிசைக்கும், குழந்தை இலக்கியத்திற்கும், அறிவியலுக்கும் தொண்டாற்றிய தூரன் 1987 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20 ஆம் நாள் தமது எழுபத்தெட்டாவது வயதில் காலமானார். தூரன் மறைந்தாலும் அவரது தமிழ்ப் பணி என்றும் நிலைத்து நிற்கும்.

- பி.தயாளன்

Pin It