சங்ககாலம் தொடங்கி பல்லவர்காலம் முதல் கல்வியின் நிலை கேள்விக்குறியாகவே இருந்து வந்திருக்கிறது. சோழர் காலத்திலும் பொதுமக்களின் கல்விக்கான பள்ளிகள் இருந்ததாகத் தெரியவில்லை. பொது மக்களின் கல்வித் தரம் எப்படி இருந்தது என்பதற்கு ஒரு சான்றும் இல்லை. எத்தனை விழுக்காட்டினர் எழுத படிக்கத் தெரிந்து இருந்தனர் என்ற தகவல்கள் இல்லை. இது குறித்து கே.கே.பிள்ளை எழுதுவது குறிப்பிடத்தக்கது. [பக் 318 -320]

"ஊர், பொதுமக்களுக்கு கல்விப்பயிற்சி அளிக்கப்பட்டதா? அப்படி இருப்பின் அது எத்தகையது என்ற கேள்விக்கு விடை காண முடியவில்லை. கல் தச்சர்கள் பொறித்த கல்வெட்டுகளில் நூற்றுக்கணக்கான பிழைகள் காணப்படுகின்றன. படித்தவர்கள் கதியே இப்படி என்றால் பாமர மக்களின் கல்வி அறிவு எத்தகைய தன்மை படைத்திருக்கும் என்று அய்யம் ஏற்படுகிறது. சிற்பிகளும் ஒவியர்களும் கட்டிடப்புலவர்களும் சிறப்பாகத் தொழில் புரிந்தனர் என்று அய்யம் இன்றி சொல்லலாம் இல்லாவிட்டால் தஞ்சை பெரிய கோவில் போன்ற கலைக்கருவூலங்களை எப்படி படைத்திருக்கமுடியும்? அவர்கள் இத்தகைய அறிவினை எங்கிருந்து பெற்றனர் என்பது சரிவரத் தெரியவில்லை.

நூல்அறிவு/பயியலறிவு மூலம் பெற்றிருந்தார்களா? அதை எப்படி பெற்றனர் என்று தெரியவில்லை பள்ளிகளில் கற்றனரா? ஆசானிடம் இருந்து நேர்முகமாகப் படித்தனரா? தன்னியில்பாக அவை வந்தனவா? கம்பர், செயங்கொண்டார், சேக்கிழார் போன்ற பெரும் புலவர்கள் இயற்றிய நூல்களை அக்காலத்திய தமிழ் மக்கள் அறிந்தும் கேட்டும் மகிழ்ந்தனரா அல்லது அது அரசவையுடன் நின்றுவிட்டதா? என்பதும் சரியாகத் தெரியவில்லை மன்னர்கள் யாரும் தமிழ் கற்பிப்பதற்கு என்றும் இந்த நுண் கலைகளைக் கற்பிப்பதற்கு என்றும் தனியாகப் பள்ளிகளை நிறுவியதாக தெரியவில்லை. அதற்கான சான்றுகள் இல்லை. ஆனால் வடமொழிக்கு என்றும் வேதங்களுக்கு என்றும் தனியாக பாடசலைகள அமைத்து அதற்கு பொன்னும் நிலமும் கொடுத்து வளர்த்து இருக்கின்றனர். இத்தகைய கல்வி நிலையங்கள் பல சோழர் காலத்தில் இயங்கி வந்ததற்கு ஏரளாமான சான்றுகள் உண்டு".

"தமிழ்நாட்டு வரலாற்றில் கல்வி சாலைகள் அமைத்து மாணவர்களுக்கு கல்வி கற்பித்ததாக சான்றுகள் எதுவும் இல்லை. அவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு சில கல்விசாலைகளிலும் பார்ப்பனர்களே பயின்று வந்தனர். அதற்குத் தேவையான நிதி உதவிகள், இட வசதிகள் ஆகியவற்றை தமிழ் மன்னர்களே செய்து கொடுத்திருக்கின்றனர். கல்வியைப் பொறுத்த அளவில் சோழர்காலம் தமிழர் பார்வையில் தமிழக வரலாற்றில் ஒரு இருண்ட காலமே என்று கருதவேண்டியிருக்கிறது. எண்ணாயிரம் என்ற ஊர் அந்தணருக்கு அளிக்கப்பெற்று சதுர்வேதி மங்கலம் ஆக்கப்பெற்றது. இங்கு ஒரு வடமொழி கல்லூரி நிறுவப்பட்டு அங்கு 340 மாணாக்கர் கல்வி பயின்றனர். அவர்களுக்கு கற்பிக்க 14 ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். மாணவர்களுக்கு கல்வி உணவு, உறைவிடம், உடை ஆகியன இலவசமாக்கப்பட்டன. ஆசிரியருக்கு சோழ அரசு ஊதியம் வழங்கிற்று. இக்கல்லூரிக்கு 300 ஏக்கர் நிலம் அரசால் மானியமாக விடப்பட்டது.

இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவெனில், அங்கு கற்பிக்கப்பட்டது வடமொழியே ஆகும். மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் பார்ப்பனர்களே. இது போன்றே முதல் இராசேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில், திருவெற்றியூரில் ஒரு கல்லூரியும் சோழ மன்னர் இராசேந்திரனால் வேப்பத்தூர் திருமுக்கூடல், திருபுவனி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பார்ப்பனர்கள் கற்பதற்கென்றே வடமொழிக் கல்லூரிகள் அரசர்கள் உதவியுடன் தொடங்கப்பெற்று, நடந்து வந்தன என்பது சரித்திரக் குறிப்புகளாகும். இதில் வியப்பிற்குரிய செய்தி என்னவென்றால், தமிழ் கல்வி பயிற்றுவிக்க என்று ஒரு சிறிய பள்ளியேனும் இருந்ததாகவோ, அதற்கு மானியம் இடப்பட்டதாகவோ ஒரு கல்வெட்டு சான்று கூட இல்லை. தனிப்பட்ட முறையில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் ஆங்காங்கே இருந்திருக்கலாம். ஆனால் அவை அரசர்கள் ஆதரவுடன் நடைபெறவில்லை. மாறாக வடமொழி சாத்திரக் கல்லூரிகள் அரசு உதவியுடன் ஆங்காங்கே நடத்தப்பட்டது. (காண்க. தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புக்கள் என்னும் நூல், ஆசிரியர் க.ப.அரவாணன், பக்கம்.197)

நாயக்கர் காலத்திலும் இதே நிலை நீடித்தது. கி.பி.1610ல் மதுரையில் ஒவ்வொரு வகுப்பிலும் 200 பேர் என்ற வகையில் மதுரை மாநகரில் மட்டும் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர். இவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே என்று கிறிஸ்த்துவ பாதிரியான டி.நோபிலி தம்முடைய கடிதத்தில் தெளிவுபடுத்துகிறார். ஐரோப்பியர் வரவுவரை கல்வி என்பது வடமொழிக்கல்வியாகவும் அது பார்ப்பனர்க்கே உரியதாகவும் இருந்தது. பாமரர்க்கும் கல்வி என்ற நிலை ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே தோன்றிய ஒன்றாகும். அனைத்து அரசர்களாலும் சமஸ்கிருத கல்விச்சாலைகள் நடத்தப்பட்டன. வேதங்களை தமிழர்கள் படிக்கலாகாது என்று தடுக்கப்பட்டிருந்தனர். அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கல்வி கற்றனர். அது போர் சம்பந்தப்பட்ட கல்வி மட்டுமே ஆகும். அரசர், அந்தணர் என்ற இருவரைத் தவிர ஏனையோருக்கு எத்தகு பொதுக்கல்வியும் வழங்கப்படவேயில்லை. தமிழ்நாட்டில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. அவற்றில் வசதிபடைத்த வீட்டுப்பிள்ளைகள் தனிப்பட்ட முறையில், ஓரளவு கல்விகற்று வந்தனர். அவ்வளவுதான். இது பொதுக்கல்வியும் அன்று; பொதுமக்கள் கல்வியும் அன்று. (மேற்கண்ட நூல் பக்.192)

கே.கே.பிள்ளை மேலது பக் 320 மன்னர்கள் நிறுவிய பள்ளிகள் யாவும் பிராம்மணருக்கு மட்டும் வடமொழி பயிற்சி அளித்து வந்தது. தமிழ் இலக்கிய இலக்கணம் பயிற்றுவிக்கவில்லை---

அப்பள்ளிகளில் புராணங்கள் இதிகாசங்கள் சோமசித்தாந்தம் ராமனுசபாடியம், பிரபாகரின் மீமாமச வியாக்கரணம் ஆகிய வடமொழி இலக்கிய இலக்கணங்களையே பிராமணர்கள் பயின்று வந்தனர். வட ஆற்காட்டு மாவட்டத்தில் போலுர் அருகில் காம புல்லுர் [காப்பலுர்] என்னும் கிராமத்தில் வேத பயிற்சிப் பள்ளி ஒன்று நடைபெற்றது. செங்கற்பட்டு மாவட்டத்தில் ஆணியூர் என்ற ஆனூர் என்னும் இடத்தில் வேதம், இலக்கணம் ஆகியவற்றிற்கு பட்டவிருத்திகள் நிறுவப்பட்டன.. தென்னாற்காட்டில் ராசராச சதுர்வேதி மங்களம் / எண்ணாயிரம் என்னும் ஊரில் முதலாம் ராசேந்திரன் காலத்தில் வேதம் மீமாம்சப்பள்ளி ஒன்று நடைபெற்று வந்தது. அதில் 348 பிராமண மாணவர்கள் பயிற்சிப் பெற்று வந்தனர். 14 ஆசிரியர்கள் கல்வி அளித்து வந்தனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு கலம் நான்கு மரக்கால் நெல் ஊதியமாக வழங்கப்பட்டது. வேறு சில ஆசிரியர்கள் நெல்லுடன் பொன்னும் சேர்ந்து ஊதியமாகப்பெற்றார்கள். இது தான் சோழர்கள் தமிழ் வளர்த்த வரலாற்று உண்மை.

அரசவை செயல்பாடுகளில் தமிழ் எவ்விதம் இருந்தது என்பதைக் காண்போம். சோழர்கள் தமிழர்கள். எனவே அரசின் வாய்மொழி செயல்பாடுகள் அனைத்தும் தமிழில் நடைபெற்றிருக்கும் என்று நம்பலாம். அவற்றை பதிவு செய்வது என்பது வடமொழி, தமிழ் என்று இரண்டு மொழிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன [இப்பொழுது தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சிமொழி என்ற பொழுதும் அரசு ஆணைகள் சில தமிழிலும் பல ஆங்கிலத்திலும் வருவதுபோல] கல்வெட்டுகளில் வடமொழி கலந்த தமிழே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. சில கல்வெட்டுகள் முழுவதும் வடமொழியிலேயே அமைந்துள்ளன. கல்வெட்டுகளை விடவும் அதிக சிறப்பும் நம்பகத்தன்மையும் உள்ளவை செப்பேடுகள் ஆகும். இவை அரச முத்திரை இடப்பட்டு கம்பிகளில் கோர்க்கப்பட்டுக் காணப்படுகின்றன. இந்த செப்பேடுகளில் சரி பாதிக்குமேல் வடமொழியில் எழுதப்படும். தமிழிலிலும் சில வார்த்தைகள் எழுதப்படும் எ.கா திருவாலங்காட்டு செப்பேடு முதலாம் ராசேந்திரன் காலத்தைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது. இதில், பெரும்பகுதி வடமொழியில் உள்ளது.

ஆனைமங்களச் செப்பேடு ராசராசன் காலத்தை சேர்ந்தது. இதிலும் சரி பாதி வடமொழியில் காணப்படுகிறது. இவை எல்லாம் வரலாற்று ஆவணங்கள். அக்காலத்தில் மன்னன் அளித்த கொடையையும் குறிப்பிடும் ஆவணங்கள் ஆகும். அவற்றை வடமொழியில் ஏன் எழுதவேண்டும்? தமிழ்ச் சோழர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு விட்டு செல்லும் வரலாற்று ஆவணங்களில் சரிபாதிக்கு மேல் வட மொழியில் எழுத வேண்டிய காரணம் என்ன? இன்று யாராவது ஆங்கிலம் கலந்து தமிழ் பேசினால் அவன் தமிழனா? தமிழனுக்கு பிறந்தவனா? தன்னுடைய தலைப்பு எழுத்தை மட்டும் {இனிசியல்} ஆங்கிலத்தில் போட்டு உள்ளானே? இவன் ஆங்கிலேயனுக்குப் பிறந்திருப்பானா! என்று எல்லாம் நக்கலடிக்கும் தூய தமிழ்வாதிகள் ராசராசன் ஆவியிடம் இதைக்கேட்டு சொல்லவேண்டும்.

நாகப்பட்டினத்து புத்தர் கோவிலுக்கு நீங்கள் அளித்த கொடையினை தமிழில் மட்டும் பதிவு செய்யாமல் வடமொழியிலும் பதிவு செய்தது ஏன்? என்று கேட்டு சொல்லுவர்களா? மேலும் ஒரு செய்தி தமிழிலில் பதிவுசெய்யப்பட்ட செய்திகளும் வடமொழியில் பதிவு செய்யப்பட்ட செய்திகளும் ஒரே மாதிரி இருக்குமென்று உறுதி இல்லை. அன்பில் செப்பெடுகள் தொடங்கி அண்மையில் திரு இந்தளூரில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பேடுகள் வரை இந்த நிலைதான். வடமொழி பகுதி புராணக் கதைகள் மிகுந்து காணப்படும். அதாவது கடவுள், மன்னனை வாழ்த்தும் பகுதிகள் வடமொழியில்! ஒரு வேலை இவற்றைத் தமிழில் பதிவு செய்தால் கடவுள் தீட்டுப்பட்டுப் போய்விடுவர் என்ற அச்சமிருந்திருக்குமோ என்னவோ? தமிழ் நீச பாடை வடமொழி தேவ பாடை என்று பார்ப்பனக் குருக்கள அப்பொழுதே ஓத ஆரம்பித்து விட்டனரா? இதை, சோழனுக்கு காவடித்தூக்கும் முனைவர்கள் தான் விளக்க வேண்டும். தமிழப்பகுதி தானம் கொடுக்கப்பட்ட நிலத்தின் அளவுகளை மட்டும் சுட்டி நிற்கும். இதுதான் சோழர்களின் தமிழ்த் தொண்டு! இதைக் கொண்டாடத்தான் தமிழ்நாட்டு மக்களின் வரிப்,பணத்தில் அரசு விழா ஆடம்பர நாட்டியம், பொழுது போக்குக் கூத்து! இவை எல்லாம் தமிழின் பேரில்... இதுதான் தமிழின், தமிழனின் தலைவிதி போலும்.