சர்வதேச வெளவால் ஆண்டு 2011-2012 சிறப்புக் கட்டுரை

உலகம் சுற்றும் பொடி ஜந்துக்களே,

உங்களுடைய காலடிச் சின்னங்களை, எனது

சொற்களிலே விட்டுச் செல்லுங்கள்

-    தாகூர் 

ஒரு முன்னிரவில் என் இல்லத்தின் முன்பு அமர்ந்திருந்தேன். அப்போது தரையில் ஏதோ ஒரு பூச்சி ஊர்ந்து செல்வது போல் இருந்தது. அது வழக்கமாகப் பார்க்கும் பூச்சிகளைப் போல் இல்லாமல், வித்தியாசமான வடிவில் இருந்ததால், அருகே சென்று குனிந்து பார்த்தேன். எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. ஏனென்றால் அது ஒரு வெளவால் குட்டி.

ஒரு வெளவால் குட்டி இவ்வளவு சிறியதாக இருக்கும் என்று நான் இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை. சுமார் ஓர் அங்குல நீளமே இருந்தது அது. அநேகமாக வெகு அண்மையில்தான் அது பிறந்திருக்க வேண்டும். தரையில் தன் குட்டி இறக்கையை இரண்டு புறங்களிலும் சற்று பரப்பியவாறே ஊர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது. அந்தக் குட்டி வெளவாலை கையில் எடுத்தால், அதன் சின்னஞ்சிறிய மென் உடலுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி, ஒரு சிறிய விளக்குமாற்று குச்சியை எடுத்து அதன் பின்னங்கால்களுக்கு அருகே வைத்தேன். நான் எதிர்பார்த்தது போல், அது தன் பின்னங்கால்களால் விளக்குமாற்றுக் குச்சியை கவ்விப் பிடித்துக் கொண்டது, அப்போது அந்தக் குச்சியை மெல்ல நான் மேலே தூக்கினேன். வெளவால்களுக்கே உரிய இயல்பூக்கத்தோடு அந்தக் குட்டி தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது.

இப்போது அதை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே அதை விட்டுவிட்டால், ஏதேனும் ஓர் இரைகொல்லிக்கு இரையாக நேரிடலாம். வெளவால்கள் விளக்கை அணைத்த பிறகுதானே பறக்கத் தொடங்குகின்றன. எனவே, சற்று இருட்டாக இருந்த சுவரின் மேல் பகுதியில் அக்குச்சியோடு அதை வைத்துவிட்டேன். அந்தக் குட்டி அகஒலியை எழுப்பி தன் தாயை வரவழைத்து விடக்கூடும் என்பதே என் நம்பிக்கை. அக்குட்டியின் மேல் இந்த அளவுக்கு எனக்கு பரிவு ஏற்பட்டதற்குக் காரணம், வெளவால்களைக் குறித்து நான் தெரிந்து வைத்திருந்த ஒரு தகவல்தான். ஒவ்வொரு முறையும் வெளவால் ஒரே ஒரு குட்டியை மட்டுமே ஈனும் என்பதே அந்த முக்கியமான செய்தி.

இப்படி வெளவால்கள் ஒரே ஒரு குட்டியை ஈனுவதற்குரிய காரணத்தை அறிந்து கொள்ள, அதன் பரிணாம வளர்ச்சிப் பாதையில் பின்னோக்கி ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். முழுமையாக வளர்ச்சியடைந்த வெளவால்களின் புதை படிவங்கள் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பாறை இடுக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், இதுவோர் மிகப் பழைமையான உயிரினம். பறவைகள் தோன்றி பல காலத்துக்குப் பிறகு பாலூட்டிகளுள் சில சிற்றினங்கள் காற்றில் சறுக்கிப் பறக்கும் (Gliding) ஆற்றலைப் பெற்றன. இவை கொலுகோ (Colugo) என்று அழைக்கப்பட்டன. ஆரம்ப கால பூச்சியுண்ணிகள் தங்கள் பரிணாம வளர்ச்சியின்போது, ஒரு குறிப்பிட்ட இடைநிலையைக் கடந்துதான் மேற்சொன்ன கொலுகோவாக மாறியிருக்கின்றன. மேற்சொன்ன கொலுகோவுக்கு உதாரணம், போர்னியோ காடுகளில் காணப்படும் பறக்கும் லீமர் (Flying Lemur) ஆகும்.

பார்ப்பதற்கு பறக்கும் அணில்களைப் போல காணப்படும் இவை, வெளவால்களை போலவே தலைகீழாக தொங்கும் தன்மையுடையவை. இந்த கொலுகோதான், உண்மையான பறக்கும் பாலூட்டிகளாக, அதாவது வெளவால்களாக மாறின என்பது உயிரியலாளர்கள் கருத்து.

மேலும் பறவைகளுக்கு ஒரு மாற்றாக இப்படி வெளவால்களை உருவாக்க வேண்டிய அவசியம் இயற்கைக்கு இருந்தது. பறவைகள் பகலில் பறந்து பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. இதனால் இரவு நேரப் பூச்சிகள் பெருகின. எனவே, இவற்றை கட்டுப்படுத்த வேண்டியே, இத்தகையதொரு பரிணாம மாற்றம் நிகழ்ந்தது. இருப்பினும் பறவைகளுக்கு இல்லாத ஒரு பிரச்சினையை வெளவால்கள் சந்திக்க நேர்ந்தது.

பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை. வெளவால்களின் மூதாதைகளோ பாலூட்டிகள். பாலூட்டிகள் வழிவழியாக நஞ்சுக் கொடியை பெற்றிருப்பவை. பரிணாமக் கடிகாரம் என்பது எப்போதும் பின்னோக்கி சுழல்வதில்லையே! எனவே, வெளவால்கள் பறக்கும் தன்மையை பெற்று விட்டன என்பதற்காகவே, முட்டையிடும் இயல்புக்கு திரும்பிச் செல்ல முடியாது. ஆகவே, ஒரு வெளவால் சூலுற்ற நிலையில் குட்டியின் எடையும் தொடர்ந்து அதிகரிப்பதால், அதன் எடை கூடிவிடும். இதனால் பறப்பது மிகுந்த சிரமமாகிவிடும். இதனால்தான் இயல்பிலேயே ஒரே ஒரு குட்டியை மட்டுமே வெளவால் ஈனுகிறது (மிக அரிதான சந்தர்ப்பங்களில் இரண்டு குட்டிகளை ஈனுவது உண்டு). இந்த வகையில்தான் அந்த வெளவால் குட்டி மிக முக்கியமானதாக எனக்குப் பட்டது.

ஆனால் பொதுவாக பார்த்தால், எல்லோருக்கும் வெளவால்களை குறித்து ஒரு வெறுப்பு மனநிலையே காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக, மேற்கு நாட்டினருக்கு அது ரத்தப் பிசாசாகவே காட்சியளிக்கிறது. இதற்கு வாம்பயர் (Vampire) என்ற ஒரு வகை வெளவாலே காரணம். இது 10 செ.மீ. அளவேயுள்ள ஒரு சிறிய வகை வெளவால். இந்த வகை வெளவாலின் எச்சிலில் ரத்தம் உறைவதை தடுக்கும் ஒரு வகை எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே, இது தூங்கும் விலங்கின் தோலில் கடிக்கும்போது தன் எச்சிலையும் கலந்து விடுவதால், வெளிவரும் ரத்தம் இயல்பாக உறைவதற்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு தொடர்ந்து வெளி வந்த படியே இருக்கும். இப்படி ஒழுகும் ரத்தத்தை இந்த வெளவால் உறிஞ்சிக் குடிக்கிறது. இது ஏறக்குறைய ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அட்டையை போன்றதுதான். சமயங்களில் உறங்கும் மனிதனும் இந்த சிறிய வெளவாலின் கடிக்கு ஆளாகிவிடுவதால், இவை ரத்தக் காட்டேரியாக மாற்றப்பட்டு விட்டன. இதைத் தவிர வேறு எந்த வகை வெளவாலும் ரத்தத்தை உறிஞ்சுவதில்லை, பெரும்பாலும் பூச்சியுண்ணிகளே.

வெளவால்களில் ஏறத்தாழ ஈராயிரம் வகைகள் இருக்கின்றன. இவற்றில் இந்தியாவில் 73 வகைகள் இருக்கின்றன. இருந்தாலும் வெளவால்களை குறித்த முழுமையான ஆய்வு இன்னமும் நடைபெறவில்லை என்பதே உண்மை. ஆனால் எல்லா வகை வெளவால்களும் சூழலியலுக்கு தனக்குரிய பங்கை செலுத்திக் கொண்டே இருக்கின்றன. அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் காணப்படும் வெளவால்களில், அமெரிக்காவில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகை வெளவால்கள் மட்டும் ஆண்டுக்கு 20,000 டன் எடையுள்ள பூச்சிகளை உட்கொள்கின்றன என்கிற செய்தியே, வெளவால்கள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற செய்தியை நமக்கு உணர்த்துகின்றது.

இந்த பூச்சியுண்ணி வகை வெளவால்களைப் பற்றி குறிப்பிடும்போது, கொமந்தோங் குகை என்ற பெயரை தவிர்க்க இயலாது. உலகிலேயே அதிக வெளவால்கள் வசிக்கும் இடம் இதுதான் என்று கூறப்படுகிறது. இந்த ஒரேயரு குகையில் மட்டும் சுமார் இருபது லட்சம் வெளவால்கள் வசிக்கின்றன. போர்னியோவில் உள்ள இந்த குகையில் மாலை நேரத்தில் ஒரு கரும்புகை நாடாவைப் போல், இந்த வெளவால்கள் வெளியேறி வானில் பரவும் பரவசக் காட்சி கட்டாயம் காண வேண்டிய ஓர் அற்புத காட்சி. இந்த வகை வெளவால்கள் ஒவ்வொன்றும், ஓர் இரவில் மட்டும் தன் உடல் எடைக்கு நிகரான அளவுக்கு பூச்சிகளை சாப்பிடுகிறதாம். அப்படியெனில் இத்தனை லட்சம் வெளவால்களும் ஓர் இரவில் மட்டும் எத்தனை டன் பூச்சிகளைச் சாப்பிடும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். இத்துடன் சூழலுக்கு நஞ்சூட்டும் பூச்சிக் கொல்லிகள் இல்லாமல், இவை ஆற்றும் நன்மைகளை நாம் ஒரு நிமிடம் நினைவுகூர வேண்டும்.

எல்லா வகை வெளவால்களும் பூச்சிகளை உண்பதில்லை. சில வகை வெளவால்கள் பூந்தேன், பூந்தாது ஆகியவற்றை உண்ணுகின்றன. இத்தகைய வெளவால்களுள் ஒன்றுதான் விடிகாலை வெளவால்கள் (Dawn bats). இந்த வகை வெளவால்களின் நாக்கு மிக நீளமாக அமைந்திருக்கும். இதனால் அது பூவுக்குள் தன் நாக்கால் துழாவி தேனை உண்ண முடிகிறது. விலை உயர்ந்த பழ வகைகளில் ஒன்றான டுரியன், இந்த வெளவால்கள் இல்லாவிட்டால் இனவிருத்தி செய்ய இயலாது. ஏனெனில் இதன் மலர்கள் நள்ளிரவில் மலர்ந்து விடியலில் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டவை. எனவே, அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் மகரந்தச் சேர்க்கை நடக்க வேண்டியது அவசியம். இம்மலர் பூத்தவுடன் அதன் வாசனையை முகர்ந்து இவ்வகை வெளவால்கள் விரைந்து விடுகின்றன. பப்பாளி, வாழை போன்ற தாவரங்களிலும் மகரந்தச் சேர்க்கை நடைபெற வெளவால்கள் உதவுகின்றன.

வெளவால்களில் மிகப் பெரியது பழந்தின்னி வெளவால்கள். இறக்கையை விரித்தால் சுமார் ஒன்றரை மீட்டர் நீளம் வரை இருக்கும். இதை நாம் எல்லோருமே நன்கு அறிவோம். மற்ற வெளவால்களுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு, இவை அகஒலி துணை கொண்டு பறப்பவை அல்ல என்பதுதான். சூழலியலில் பழந்தின்னி வெளவால்களின் முக்கியத்துவம் அளப்பரியது. ஏனெனில், விதைப் பரவலில் வெளவால்கள் அந்த அளவுக்கு தன் பங்கை ஆற்றுகின்றன. அமேசான் காடுகள் அழிக்கப்பட்ட இடங்களில் செயற்கையான வெளவால் வாழிடங்களை ஏற்படுத்தி நடத்திய ஓர் சோதனையில், வெளவால்கள் மட்டுமே அறுபது வகையான தாவரங்களை அழிந்து போன அந்தக் காட்டில் மீண்டும் முளைக்க வழி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை வெளவால்களின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் பாடம்.

இருந்தாலும் வெளவால்கள் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை என்பது நமது துரதிருஷ்டம். இதைப் போக்க ஐ.நாவின் சி.எம்.எஸ். (Convention of Migratory Species) அமைப்பு 2011&2012ஆம் ஆண்டுகளை சர்வதேச வெளவால்கள் ஆண்டுகளாக அறிவித்துள்ளது. இதை முன்னிட்டு வெளவால்களின் அவசியத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதை அழிவிலிருந்தும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். குறிப்பாக, சுண்ணாம்புப் பாறைக் குன்றுகள் அழிக்கப்படுவது விடிகாலை வெளவால்களின் வாழ்விடத்தையும், பெருமரங்கள் அழிக்கப்படுவது பழந்தின்னி வெளவால்களின் வாழ்விடத்தையும் கேள்விக்குறியாக்கி விடுகின்றன.

சரி, இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நான் கூறிய அந்த வெளவால் குட்டியை சுவற்றின் மேல் விட்ட மறுநாள் காலை விடிந்ததும், நானும் என் குடும்பத்தினரும் அதைத் தேடிப் பார்த்தோம். அந்த விளக்குமாறு குச்சி மாத்திரமே அங்கு இருந்தது. அந்தக் குட்டி வெளவால் எங்குமே தென்படவில்லை. தாய் வெளவால்தான் அதை கொண்டு சென்றிருக்கும் என்று நாங்கள் நம்பினோம், நம்பிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் அப்படித்தானே நம்புகிறீர்கள்?

(பூவுலகு ஜூலை 2012 இதழில் வெளியானது)

Pin It