இரும்பு சத்தின் குறைபாட்டால் வரும் நோய்களே அதிகம் என உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. 80 சதவீதம் பேர் இக்குறைப்பாட்டால் அவதியுறுவதாகவும், அதில் 33 சதவீதம் பேர் இரத்தச் சோகையால் அவதியுறுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 நமது உடலின் ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். பொதுவாக நம் உடலுக்கு தேவைப்படும் இரும்புச் சத்து நமக்கு உணவின் மூலம் போதுமானதாக கிடைப்பதில்லை. இதனால் ஆரம்பத்தில் இரும்பின் தேவையை உடல் அதன் சேமிப்பிலிருந்து எடுத்துக் கொள்கிறது. நாளடைவில் இரும்புச் சத்து குறைவதால் இரத்தச் சோகை ஏற்படுகிறது.

 பெரும்பாலும் பெண்களுக்கே அதிக அளவில் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு இருந்தால் உடலில் இரும்புச்சத்தின் இருப்பு குறைய ஆரம்பிக்கும். இதனால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.

 இதுபோல் சிறுகுடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் தடை ஏற்படுவதாலும், இரும்புச்சத்து குறைபாடு உண்டாகிறது. சிறுநீரக பாதிப்பு இருந்தாலும் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யத் தூண்டும் ஹார்மோன்கள் உற்பத்தி சீராக செயல்படுத்த முடியாமல் இரும்புச்சத்து குறைவு ஏற்படும்.

 வைட்டமின் ஏ, இரும்புச்சத்தை திசுக்களுக்கு அனுப்பும் வேலையைச் செய்கிறது. இந்த வைட்டமின் ஏ குறைபாட்டால் இரும்புச்சத்து திசுக்களுக்குக் கிடைக்காமல் இரத்தச் சோகை ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்பு இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாட்டால் உண்டாகும் அறிகுறிகள்.

 பொதுவாக உடலில் இரும்புச் சத்து குறைவதனால் இரத்த சோகை உண்டாகும். அதிக தளர்ச்சி, சுறுசுறுப்பின்மை, சிறுவயதில் மூளை வளர்ச்சி குறைவது, புரிந்துகொள்ளும் திறன் குறைவது போன்றவை ஏற்படும். நாக்கில் வீக்கம். உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்து போகும். உடல் வெப்ப நிலையை சமனாக்கி பாதுகாக்கும் செயலிலும் குறைபாடு உண்டாகும். மண், சாம்பல் போன்றவற்றை உண்பதால் இரத்த சோகை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 குடலில் வீக்கம் அல்லது புற்று நோய்க்கான அறிகுறிகள் இருந்தாலும் சோகை உண்டாகும். இவை இரும்புச்சத்து குறைவினால் உண்டானவை அல்ல.

இரும்புச்சத்து அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியவர்கள் :

 கருவுற்ற பெண்கள், சிறு குழந்தைகள், பருவ வயதை அடையும் பெண் குழந்தைகள் போன்றோருக்கு இரும்புச்சத்து அதிகம் தேவைப்படுகிறது. மாதவிலக்கு சுழற்சியின் போது ஏற்படும் இரத்த இழப்பால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. எனவே பருவம் அடைந்த அனைத்து பெண்களுக்கும் இரும்புச்சத்து தேவை அதிகமாகிறது.

 சைவ உணவு உண்பவர்களை விட அசைவ உணவு உண்பவர்களுக்கு மிக அதிக அளவில் இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் சைவ உணவில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்த கீரை வகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது.

 கர்ப்பிணிப் பெண்களுக்கு சாதாரண பெண்களுக்கு தேவைப்படும் இரும்புச்சத்தை விட 50% அதிகம் தேவைப்படும். சாதாரணமாக பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 9 மி.கி. அளவு தேவை. ஆனால் கர்ப்பகாலத்தில் இதன் அளவு 27 மி.கி. அளவு தேவைப்படுகிறது.

 தினசரி உணவில் 30 மி.கி. இரும்பு சத்து கிடைக்கும் வகையில் இருக்கவேண்டும்.

 அதிகமாக உடற்பயிற்சி செய்வோர்களின் இரத்த சிவப்பணுக்கள் விரைவில் இடமாற்றம் அடைகின்றன. மேலும் பழைய சிவப்பணுக்களை அழித்துவிட்டு புதியதை அதிகம் உற்பத்தி செய்கின்றன. இதற்கு இரும்புச்சத்து அதிகம் தேவை. இதனால் அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது நல்லது.

 குழந்தைகளுக்கு தேவைக்கதிகமாக இரும்புச்சத்து நிறைந்த மருந்து மாத்திரைகளைக் கொடுத்தால் அது உடலில் நச்சுப் பொருளாக மாறிவிடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொடுக்கும் மருந்து மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. உணவின் மூலம் கொடுப்பதே சாலச் சிறந்தது. பொதுவாக இரும்புச்சத்து உணவின் மூலம் உடலுக்குக் கிடைப்பது சாலச்சிறந்தது. மருந்து மாத்திரைகள் மூலம் கிடைப்பது அவ்வளவு சிறப்பானதாக அமையாது.

 காபி, தேநீர், மதுபானம் போன்றவற்றை அதிகம் அருந்துபவர்களுக்கு அதில் உள்ள கார்பாலிக் அமிலம் குடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. இதனால் மேற்கண்ட பானங்களை தவிர்ப்பது நல்லது.

 கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து அதிகம் தேவை என்பதால் மருந்து மாத்திரை அதிகம் எடுத்தால், அது வாயுவை அலர்ஜியுறச் செய்யும். மலச்சிக்கலை ஏற்படுத்தும். வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். சிலசமயங்களில் கருவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்

 முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, ஆரைக்கீரை, புதினா, குப்பைக் கீரை போன்றவற்றில் அதிகம் உள்ளது. அதுபோல் பழங்களில் பேரீச்சை, அத்திப்பழம் போன்றவற்றில் அதிகம் உள்ளது. மற்ற பழங்களிலும் ஓரளவு உள்ளது.

 முட்டை, மீன், ஆட்டு ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)

Pin It