ஒரு நூலைப் படிக்காமலேயே, ஒரு திரைப்படத் தைப் பார்க்காமலேயே அவற்றை அரசு தடை செய் யும் அராஜகப் போக்கு உலகில் மிகப்பெரிய சனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில் அண் மைக்காலத்தில் அதிகமாகி வருகிறது. இதற்கு மதப் பழமை வாதப் பிற்போக்காளர் சிலரின் வெற்றுக் கூச் சலை அரசு நொண்டிச் சாக்காகப் பயன்படுத்திக் கொள்கிறது.

இத்தன்மையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வரும், இருபது ஆண்டுகளாகத் திரைப்படத் தயாரிப் பாளராக இருந்து வருபவருமான லெ°லீ உத்வின் எனும் பெண், இலண்டன் பி.பி.சி.4 சேனல் பிரிவு படக்குழுவினரின் துணையுடன் தயாரித்த “இந்தியா வின் மகள்” என்ற ஆவணப் படத்தை நடுவண் அரசு, நீதிமன்றத்தின் மூலமாக, இந்தியாவில் வெளியிடு வதற்குத் தடை விதித்தது. இந்த ஆவணப் படத்துக்கு “மதநம்பிக்கையை - உணர்வைப் புண்படுத்துகிறது” என்று மதவெறியர் வழக்கமாக எழுப்பும் கூச்சல் கார ணமாகத் தடை விதிக்கப்படவில்லை. மாறாக நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த ஆவணப் படத்தை ஆவேசமாக எதிர்த்ததால் தடைவிதிக்கப் பட்டது.

லெ°லீ உத்வின் ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் உருவக்கியுள்ள ஆவணப்படம், 2012 திசம்பர் 16 அன்று இரவு, தில்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவியான 23 அகவை இளம் பெண், ஆறு பேர் கொண்ட காமவெறிக் கும்பலால் மிகக் கொடுமையான முறையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, குடல்சரிந்து கிடக்க, ஒட்டுத் துணியும் உடலில் இல்லாத நிலையில் பேருந்திலிருந்த வீசி எறியப்பட்ட நிகழ்ச்சியை மய்யமாகக் கொண்டதாகும்.

தில்லியில் நடந்த இக்கொடிய பாலியல் வன் கொடுமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களும், பேரணி களும், கருத்தரங்குகளும் இந்தியா முழுவதும் ‘அறச் சீற்றம்’ கொப்பளிக்க நடத்தப்பட்டன. கல்லூரி மாணவி யரும் பெண்களும் பெருமளவில் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். எல்லா அரசியல் கட்சிகளும் தில்லியில் துணை மருத்துவ மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தன. பெண்களின் பாது காப்பை உறுதி செய்திட இந்திய நாடே எழுச்சி பெற்று விட்டது போல ஊடகங்கள் சித்தரித்தன. குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்பட வேண்டுமென்ற குரல்கள் ஓங்கி ஒலித்தன.

இந்த எதிர்ப்பைத் தணிக்க, கொடிய பாலியல் வல்லுறவின் விளைவால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அப்பெண்ணுக்கு மருத்துவம் செய்யும் பொறுப்பை நடுவண் அரசு ஏற்றுக்கொண்டது, ஆயி னும் அப்பெண் இறந்துவிட்டார். ஓடும் பேருந்தில் தன் னைக் கற்பழிக்க முயன்றவர்களை இறுதி வரையில் தீரத்துடன் எதிர்த்துப் போராடியதால் அப்பெண்ணுக்கு, ‘பயம் அற்றவள்’ என்று பொருள்படும் ‘நிர் பயா’ என்ற பெயரை ஊடகங்கள் சூட்டின. அவரின் உண்மை யான பெயர் வெளிவராமல் காத்தன.

நடுவண் அரசு எடுத்த மற்றொரு நடவடிக்கை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.எ°. வர்மா தலைமையில் ஒரு குழுவை அமைத்ததாகும். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைத் தடுப்பதற்கு, இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் மேலும் செய்ய வேண்டிய திருத்தங்களை ஆராய்ந்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு வர்மா குழுவை நடுவண் அரசு கேட்டுக் கொண்டது. மூன்று மாதங் களுக்கு முன்பே வர்மா குழு அறிக்கையை அரசிடம் அளித்தது. அக்குழுவின் சில பரிந்துரைகளை அரசு சட்டமாக்கியது. அதன்பிறகும், பெண்கள் மீதான பாலி யல் வன்கொடுமைகள் வழக்கம் போல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

இங்கே நாம் ஒரு வினாவை எழுப்ப வேண்டிய வர்களாக இருக்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன், தில்லியில் நிர் பயாவுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, இந்தியாவே பெண் ணுரிமைக்காகப் போர்க்கோலம் பூண்டது போல் காட்சியளித்தது. ஆனால் இப்போது, 126 கோடி மக் களின் பேராளர்களைக் கொண்டிருக்கும் நாடாளு மன்றமும், நடுவண் அரசும் நிர் பயாவுக்கு நேரிட்ட கொடுமையை படம் பிடித்துக் காட்டும் ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படத்துக்குத் தடை விதித்திருப்பது ஏன்?

ஏனெனில், இந்த ஆவணப் படம், பெண்கள் குறித்து நம் சமூகம் எந்த அளவுக்கு இழிவான சிந்தனைப் போக்கைக் கொண்டிருக்கிறது என்பதை முகக்கண் ணாடியில் நம் கொடூரமான முகத்தைப் பார்ப்பது போல் காட்டுகிறது. பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாப்பு அளிப்பது என்கிற குறுகிய எல்லைக் கோட்டைத் தாண்டி, பெண்களின் உரிமை மறுப் புக்கும், அடிமைத்தனத்துக்கும் அடிப்படையாக உள்ள காரணிகளைக் கண்டறிந்து, அவற்றைத் தகர்த்திடும் நிலை உருவாகிவிடுமோ என்று, ஆளும் வர்க்கமாக வுள்ள ஆணாதிக்கம் அஞ்சுகிறது. அதன் ஒரு பகுதி யாகத்தான் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங் களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஆதரிப்பது போலவே நடித்துக் கொண்டே, அதையும் அளிக்க மறுத்து வருகிறது.

பெண்களின் உடல், உணர்வு, சிந்தனை, செயல் ஆகிய அனைத்தும் தமக்குக் கட்டுப் பட்டதாக இருக்க வேண்டும் என்று ஆணாதிக்கச் சமூகம் கருதுகிறது. ஆண் அனுமதிக்கின்ற வரை யறைக்குள் - எல்லைக்குள் மட்டுமே பெண்கள் ‘சுதந்தரத்தை’ அனுபவிக்கலாம். ஆயிரக்கணக் கான ஆண்டுகளாகத் தனக்கு ஒரு நல்ல அடிமையாக இருந்துவரும் பெண்ணுக்கு முழுச்சுதந் தரமும், விடுதலையும் அளித்திட ஆண்கள் முன் வரவில்லை.

இதுகுறித்து 12-8-1928 நாளிட்ட “குடிஅரசு” ஏட்டில் எழுதிய தலையங்கத்தில் பெரியார் “பெண் களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்று வதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிக்கு விடுதலை உண்டா குமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக் காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெரு குமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனர் அல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங் கும். அப்படி ஒருகால் ஏதாவது ஒருசமயம் மேற் படி விஷயங்களில் விடுதலை உண்டாகிவிட்டா லும்கூட, ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்” என்று எழுதினார்.

‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படத்தை எதிர்ப் பதில் நாடாளுமன்றத்தின் பெண் உறுப்பினர்கள் தாம் முன்னணியில் நின்றனர். இந்திய மார்க்சி°ட் கம்யூ னி°ட் கட்சியின் பெண் உறுப்பினர் ஸ்ரீமதி டீச்சர், ‘இந்த ஆவணப்படம் இந்திய சமுதாயத்தையே அவ மதிக்கும் செயல். பெண்களை இழிவுபடுத்தும் இப்படத் தைத் தடை செய்ய வேண்டும்’ என்று முழங்கினார். மாநிலங்கள் அவையில் சமாஜ்வாதி கட்சியின் பெண் உறுப்பினர் ஜெயாபச்சன் (இந்தி நடிகர் அமிதாப்பச் சனின் மனைவி) “சிறைக்குள் இருக்கும் கற்பழிப்புக் குற்றவாளி பேட்டி அளிக்கவும், பெண்களுக்கு எதிரான அவதூறான கருத்துகளைத் தெரிவிக்கவும் எப்படி அனுமதி தரலாம்” என்று கேள்வி எழுப்பி, இந்த ஆவணப் படத்தின் எதிர்ப்புக்குத் தலைமை தாங்கினார்.

பெண் விடுதலை குறித்துப் பெண்களிடம் உள்ள புரிதல் இன்மையைப் பற்றிப் பெரியார் மேற்குறிப் பிட்டுள்ள அதே குடிஅரசு தலையங்கத்தில், “பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களை விடப் பெண்களே பெரிதும் தடையாக இருக்கிறார்கள். ஏனெனில் இன்னமும் பெண்களுக்குத் தாங்கள் முழு விடுதலைக்குரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் தன்மையையே (பிள்ளைப் பேற்றுக்கான உடற்கூறுகள் - கட்டுரையாளர்) தங்களை ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதன் அறிகுறியாய்க் கருதிக் கொண் டிருக்கிறார்கள். எப்படியெனில், பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம்; ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழமுடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறாள்.

பொது மக்கள், பிறவியில் உயர்வு-தாழ்வு ஒழிய வேண்டு மானால், எப்படிக் கடவுளாலேயே மக்களுக்குப் பிறவியில் உயர்வு-தாழ்வு கற்பிக்கப்பட்டிருக்கின்றது என்ற இந்துமதக் கொள்கையைச் சுட்டுப்பொசுக்க வேண்டியது அவசியமோ - அதுபோலவே, பெண் மக்கள் உண்மை விடுதலை பெற்று உண்மைச் சுதந்தரம் பெறவேண்டுமானால், ‘ஆண்மையும்’, ‘பெண் அடிமையும்’ கடவுளால் உண்டாக்கப்பட்ட வை என்பதற்குப் பொறுப்புள்ள கடவுள் தன்மை யும் ஒழிந்தாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அடுத்து, நடுவண் அரசு, லெ°லீ உத்வினின் ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படத்தைத் தடை செய்ததற்கு முதன்மையான மூன்று காரணங்களைக் கூறியுள்ளது. நிர் பயாவை வல்லுறவு செய்த ஆறு பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மீதி அய்ந்து பேரில், நால்வருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற ஒருவன் ‘சிறுவன்’ (18 அகவை ஆகவில்லை) என்ற காரணத் தால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒரு வரான முகேஷ் சிங் (பேருந்து ஓட்டுநர்) என்பவரின் நேர்காணல் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற் றுள்ளது. “இந்த நேர்காணலில் முகேஷ் சிங் பெண் களைப் பற்றிக் கூறியுள்ள கருத்துகள், பெண்களுக்கு எதிரான ஆதிக்க மனப்போக்கை நியாயப்படுத்தி ஆண்களை மேலும் வன்முறையில் ஈடுபடுச் செய்யத் தூண்டுவனவாக உள்ளன. இக்கருத்துகள் பெண்களை அச்சுறுத்துவனவாக இருக்கின்றன. அதனால் பெண்கள் ஒன்றுதிரண்டு போராட்டங்களை நடத்தக் கூடும். அது சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும்” என்பது இந்த ஆவணப்படம் தடைசெய்யப்படுவதற்கான முதலாவது காரணமாக நடுவண் அரசால் கூறப்பட்டுள்ளது.

2012 திசம்பரில் நிர் பயாவுக்கு நேரிட்ட பாலியல் கொடுமையைக் கண்டித்து, தில்லியில் பல்கலைக்கழக மாணவிகளும் பெண்களும் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, காவல்துறையினர், அவர்கள் மீது தண்ணீர்ப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். சமூகத்தில் எந்தவொரு மெலிந்த பிரிவனரும், எவ் வளவு இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் உள் ளாக நேரிட்டாலும், அதை எதிர்த்துப் போராட முனை வது, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் சனநாயக விரோதச் செயல் என்று அரசு கருதுகிறது. இந்தியா வில் சனநாயகத்தின் ‘மாண்பு’ இதுதான்!

சரி, முகேஷ் சிங் அந்த நேர்காணலில் அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம் : “இரவு நேரங்களில் வெளியே செல்லும் பெண்கள் தான் பாலியல் மனநிலையில் இருக்கும் ஆண்களின் கவனத்தைக் கவருகிறார்கள். எந்தப் பெண்ணாவது கற்பழிக்கப்பட்டால், அதை எதிர்த்துப் போராடக் கூடாது. அமைதியாக இருந்து, அனுமதித்துவிட வேண்டும். அப்படி இருந்தால் கற்பழிக்கப்பட்ட பிறகு, அவள் விட்டுவிடப்படுவாள். எந்த நல்ல பெண்ணும் இரவு 9 மணிக்கு மேல் வெளியே சுற்றமாட்டாள். கற்பழித்த வனைவிட, அந்தப் பெண்தான் கற்பழிப்புக்குப் பொறுப்பு. ஆணும் பெண்ணும் சமம் அல்ல.

பெண் என்பவள் வீட்டைப் பார்த்துக் கொண்டு, வீட்டு வேலை செய்ய வேண்டுமே தவிர, இரவு நேரங்களில் டிஸ்கோ, பார் என்றெல்லாம் சென்று கொண்டு, தவறான காரியங் களைச் செய்து கொண்டும், தவறான உடைகளை அணிந்து கொண்டும் இருக்கக் கூடாது. இப்போது எங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை இனி கற்பழித்து விட்டுக் கொலை செய்வதை அதிகரித்துவிடும். இப்போது கற்பழிப்பவர்கள், கற்பழிப்பு முடிந்தவுடன், பொதுவாக அவளை விட்டுவிடுவோம். வெளியில் சொல்ல மாட்டாள் என்று கூறி விட்டுவிடுவார்கள். இனி வெளியே தெரிந்துவிடக்கூடாது என்று கொன்று விடுவார்கள். நிர்பயா சம்பவம் ஒரு விபத்துத் தான்” (தினத்தந்தி 4-3-2015). முகேஷ்சிங், தான் செய்த கொடுஞ்செயலுக்காக எவ்விதக் குற்றவுணர்ச் சியும் இல்லாமல், மிக இயல்பாக அதை நியாயப் படுத்தி விரிவாகப் பேசினார்.

“நள்ளிரவில் வீதியில் ஒரு பெண் தன்னந்தனி யாக அச்சமின்றி நடக்கும் நிலை ஏற்படும்போதுதான், உண்மையான சுதந்தரம் இந்தியாவுக்குக் கிடைத்தது என்று பொருள்” என்று கூறிய காந்தியாரின் தேசத் தில், முகேஷ் சிங்கின் கூற்று, ஏதோ விதிவிலக்காக - பிறழ்மனம் கொண்ட ஒருவனின் பிதற்றல் என்று ஒதுக்கிவிட முடியாது. பெண்களைப் பற்றி முகேஷ் சிங் கூறிய கருத்தை முழுவதுமாகவோ, பாதியோ, கால் பகுதியோ சரி என்று ஏற்கும் மனநிலை கொண்டவர் களாகவே பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள். முகேஷ் சிங்கிற்காக வழக்காடும் வழக்குரைஞர்களில் ஒருவரான ஏ.பி. சிங், “என் சகோதரியோ, மகளோ நிர்பயாவைப் போல நடந்து கொண்டிருந்தால், அவள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்று இருப்பேன்” என்று அந்த ஆவணப் படத்திற்கான பேட்டியில் எவ்விதத் தயக்கமுமின்றி கூறியிருக்கிறார்.

பெண்களைப் பற்றிய ஆண்களின் இத்தகைய மனப்போக்கு திடீரென்று உண்டானதன்று. இந்த ஆணாதிக்கச் சிந்தனை ஆயிரக்கணக்கான ஆண்டு களாக இருந்து வருகிறது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் மனித சமுதாயத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், “பெண்கள் ஆண்களின் ஆசைக்கும், அனுபவிப்புக்கும், கட்டுப் பாட்டுக்கும், காவலுக்கும் உட்பட்டவர்கள்; சுதந்தரத் தை, உரிமையை, உடைமையைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்கள்” என்கிற அடிப்படையான பெண்ணடி மைத்தனத்தின் கூறுகள், கிட்டத்தட்ட அப்படியே இன்றும் நீடிக்கின்றன. “ஒரு பெண் சிறுவயதில் தந்தைக்கும், திருமணத்துக்குப் பின் கணவனுக்கும், முதுமையில் மகனுக்கும் கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும்” என்று 1800 ஆண்டுகளுக்குமுன், முதன் மையான இந்துமத சாத்திர நூலாகக் கருதப்படும் மனு°மிருதியில் எழுதப்பட்டது-இன்றும் ஆண்களின் சிந்தனையில் மட்டுமின்றி, நடப்பிலும் ‘இந்துக் கலாச் சாரம்’ என்ற பெயரால் இது நீடிக்கிறதல்லவா!

இந்து மதத்தில் மட்டுமின்றி, கிறித்துவம், இசுலாம் முதலான எல்லா மதங்களிலும் பெண் களை இழிவுபடுத்துகின்ற, அடிமைப்படுத்து கின்ற கருத்துகள் நிறைந்து கிடக்கின்றன. தொழில் வளர்ச்சி பெற்று வளர்ந்த நாடுகளாக உள்ள மேலை நாடுகளில் கிறித்துவ மதம் உள்ள போதிலும், வரலாற்று வழிப்பட்ட பல்வேறு காரணங்களால் அண்மைக்காலத்தில் அந்நாடு களில் பெண்ணடிமைத்தனம் குறைந்துள்ளது. ஆனால் இசுலாமிய நாடுகளில் இந்து மதத்தை விடக் கொடுமையானதாகப் பெண்ணடிமைத் தனம் இருக்கிறது.

எனவே முகேஷ் சிங்கின் பெண்களுக்கு எதிரான கருத்தைக் கொண்ட இந்த ஆவணப் படத்தை வெளி யிட அனுமதித்தால், உடனே கட்டுப்படுத்த முடியாத அளவில் ஆண்கள் கற்பழிப்பில் ஈடுபடுவார்கள் என் றும், அதன் விளைவாகப் பெண்கள் ஒன்றுதிரண்டு போர்க்கோலம் பூண்டு எதிர்த்து, நாட்டையே கலவர பூமியாக்கிவிடுவார்கள் என்றும் நடுவண் அரசு பூச்சாண்டி காட்டுவது, இச்சிக்கலைத் திசைத்திருப்பும் ஆணாதிக்க அரசியல் சூழ்ச்சியேயாகும்.

ஆவணப்படத்தைத் தடைசெய்ததற்கு நடுவண் அரசு கூறும் இரண்டாவது காரணம் நகைப்புக்குரிய தாகும். முகேஷ் சிங் உள்ளிட்ட நால்வரின் தூக்குத் தண்டனையின் மேல்முறையீட்டின் மீதான விசா ரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், குற்றவாளியின் கருத்தை வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாகிவிடுமாம்! தீர்ப்பின் போக்கை மாற்றி விடும் அபாயம் இருக்கிறதாம்! நீதிபதிகள் முகேஷ் கூறு கின்ற ‘நியாயத்தை’ ஏற்று நிரபராதி என்று முகேஷை விடுதலை செய்துவிடும் அளவுக்கு முட்டாள்கள் என்று நடுவண் அரசு நினைக்கிறதா?

நடுவண் அரசு கூறும் மூன்றாவது காரணம், திகார் சிறை நிருவாகம் விதித்த நிபந்தனைகளை ஆவணப் படத்தைத் தயாரித்த லெ°லீ உத்வின் மீறி விட்டார் என்பதாகும். இதுவும் அப்பட்டமான வடிகட்டிய ஒரு பொய்யே ஆகும்.

2012 சூலை 12 அன்று தில்லி திகார் சிறைத் துறை உயர் அதிகாரிக்கு (னுசைநஉவடிச-ழுநநேசயட) ஆவணப் படம் தொடர்பாக முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுக்க அனுமதி கோரி, லெஸ்லீ உத்வின் மடல் எழுதினார். அம்மடலில், “இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்தும், உலகம் முழுவதும் இது தொடர்பாக ஆண்களிடம் உள்ள மனப்போக்குக் குறித் தும் விரிவாக ஆராய்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்து வதே எங்கள் நோக்கம்” என்று லெ°லீ உத்வின் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஆவணப்படம் குறித்துச் சிக்கல் ஏற்பட்ட பின் செய்தியாளர்களிடம் லெஸ்லீ உத்வின் உரை யாடிய போது, “நானும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக நேரிட்டவள்தான். உலகில் 5 பெண்களில் ஒருவர் தன் வாழ்நாளில் ஒரு தடவையேனும் பாலியல் வல்லுற வுக்கு ஆளாக்கப்படுகிறார். நிர் பயாவுக்கு நேரிட்ட பாலியல் வன்கொடுமையைவிட, அதையொட்டி இந்தியா முழுவதும் ஏற்பட்ட பேரெழுச்சிதான் இந்த ஆவணப் படத்தை எடுக்க என்னைத் தூண்டியது” என்று சொன்னார்.

சிறைத் துறை விதித்த நிபந்தனையின்படி, முகேஷ்சிங்கிடம் எடுத்த பேட்டி முழுவதையும், 2012 திசம்பர் 9, 10 ஆகிய நாள்களில் திகார் சிறை நிருவாகம் அமைத்த அய்ந்து பேர் கொண்ட குழுவிடம் திரையிட்டுக் காட்டினார். எடுக்கப்பட்ட முழுப்படத்தையும் பார்க்க 16 மணிநேரமாயிற்று. நிர் பயாவின் பெற்றோரின் ஒப்புதலுடன் அவர்களிடம் பேட்டி கண்டார்.

நிர் பயாவின் உண்மையான பெயரை (ஜோதி சிங்) வெளிநாடுகளில் திரையிடப்படும் படத்தில் பயன்படுத்திக் கொள்ள அவர்களிடம் இசைவு பெற் றார். திரையிடுவதற்கு ஏற்ற அளவில் தொகுக் கப்பட்டுச் சுருக்கப்பட்ட அறுபது நிமிட ஆவணப் படத்தை உச்சநீதிமன்றத்தின் அய்ந்து வழக்குரை ஞர்களிடம் காட்டினார். இதற்காக அவர்களுக்கு ஊதியம் கொடுத்தார். பிறகு உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவரிடம் இந்த ஆவணப் படத்தைத் திரையிட்டுக் காட்டினார். இவர்கள் அனைவரும் இந்த ஆவணப்படம் சட்டவிதி எதையும் மீறுவதாக இல்லை என்று கருத்துரைத்தனர். ஆனால் நடுவண் அரசு சட்ட விதியை மீறினார் என்று பொய்யாகக் குற்றம் சாட்டியுள்ளது.

உலகப் பெண்கள் நாளான மார்ச்சு 8 அன்று, ஒரு மணிநேரம் காட்டப்படும். இந்த ஆவணப் படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்காக என்.டி.டி.வி. (சூனுகூஏ) யிடம் காசு எதுவும் பெறாமல் ஒரு நகலைக்கொடுத் தார். “இந்த ஆவணப் படத்தைத் தயாரிக்க எனக்கு 1,20,000 டாலர் செலவான போதிலும் இந்தியாவில் இந்த ஆவணப் படத்தை வெளியிடுவதன் மூலம் ஒரு காசு கூட வருவாயாகப் பெறக்கூடாது என்று என் மனச்சான்று கூறியது” என்று லெ°லீ உத்வின் செய்தியாளர்களிடம் கூறினார்.

மார்ச்சு 3 அன்று திகார் சிறையில் இருக்கும் முகேஷ் சிங் இந்த ஆவணப் படத்தில் கூறியுள்ள கருத்துகள், ஊடகங்களில் வெளியாயின. “இந்தியாவை இழிவுபடுத்துவதற்கான திட்டமிட்ட சதியே இந்த ஆவணப்படம்” என்று பழைமைவாதிகள் எதிர்த்த னர். அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் இது எதி ரொலித்தது. மோடி அரசு இந்தியாவில் இந்த ஆவணப் படத்தை வெளியிடுவதற்குத் தடைவிதித்தது. ஆனால் இப்படம் மார்ச்சு 5 அன்று பி.பி.சி.4 தொலைக் காட்சியிலும், 9-3-15 அன்று நியூயார்க் நகரில் இதற் காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பு நிகழ்ச்சியிலும் வெளியிடப்பட்டது. பி.பி.சி.4 தொலைக்காட்சி வெளி யிட்டதை இந்தியாவில் ‘யு டியூப்’இல் பலரும் பார்த்தனர்.

14-3-15 அன்று இந்தியாவின் நிதி அமைச்சர் இலண்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஜெ.எ°.வர்மா குழுவின் பரிந்துரைக்குப்பின் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட விதி 228-ஏ பிரிவை இந்த ஆவணப்படம் மீறியுள்ளது. அப்பிரி வின்படி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையோ, படத்தையோ வெளியிடக் கூடாது. ஆனால் இந்த ஆவணப் படத்தில் இந்த விதி மீறப்பட்டுள்ளது” என்று கூறினார் - மலையைக் கிள்ளி எலியைப் பிடித்தது போல!

பெண்கள் மீதான ஆண்களின் பாலியல் பார்வை, வெறும் உணர்வு, மனம் சார்ந்ததாக மட்டும் இல்லை. அது, வரலாற்று வழிப்பட்ட இரண்டு காரணிகளை அடித்தளமாகக் கொண்டுள்ளது. அவை 1. தனிச் சொத்து டைமை, 2. மதம் சார்ந்த கலாச்சாரம்.

மார்க்சிய மூலவர்களில் ஒருவரான பிரெடரிக் எங்கெல்சு குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியவற் றின் தோற்றம்’ என்னும் நூலை எழுதியுள்ளார். அந்நூலில், மனித சமுதாய வரலாற்றில், ஆணுக்கு மட்டுமே உரியதான தன்மையில் தனிச்சொத்துடை மை ஏற்பட்டபோதுதான் குடும்பம், பெண்ணுக்கு மட்டும் உரித்தான ஒருதார மணம், விபச்சாரம் ஆகியவை தோன்றின; தன் விந்துக்குப் பிறந்த பிள்ளை மட்டுமே தன் சொத்துக்கு உரிய வாரிசாக இருக்க வேண்டும் என்பதால் பெண் மீது பலவகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டாள் என்பதை, விரி வாக எங்கெல்சு விளக்கி உள்ளார். பெண் இந்த அடிமைச் சிறையிலிருந்து தப்பித்து வெளிவர முடியாத வகையில் மதக் கருத்துகளும், கலாச்சாரக் கூறுகளும், சமுதாயச் சடங்குகளும் பின்னப்பட்டன.

மனிதருள் பிறவி காரணமாக உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதி அமைப்பை - அதன் உச்சக்கட்டக் கொடுமையான தீண்டாமையை ஒழிக்க வேண்டுமா னால் இவற்றைக் கட்டிக்காத்துக் கொண்டிருக்கும் இந்துமத சாத்திரங்களை, இதிகாச - புராணங்களைத் தகர்த்து அழிக்க வேண்டும் என்று பெரியாரும், மேதை அம்பேத்கரும் தம் வாழ்நாள் முழுவதும் வலியுறுத் தினர்.

அதேபோல, பெண்களின் அடிமை நிலைக்கும், ஒடுக்குமுறைக்கும், உரிமைகள் பறிப்புக்கும், காரணமாக உள்ள பொருளியல் காரணிகளையும் மதம் - கலாச்சாரம் சார்ந்த தடைகளையும் தகர்த்தெறிய வேண்டும்.

சொத்துரிமை, கல்வி, வேலை வாய்ப்பு, பதவிகள் உள்ளிட்ட சமூக வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் நிலைகளிலும் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்கிற நிலையை நோக்கிச் செல்லச் செல்ல, பெண் கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மறையும்; பெண்ணுரிமை தழைக்கும்; ஆண்-பெண் என்கிற பேத உணர்ச்சி மாயும். இந்நிலையை எய்திட நீண்ட காலமாகும். ஆயினும் இதை விரைவுபடுத்த வேண்டி யது இன்றைய தலைமுறையின் நீங்காக் கடமையாகும்.

Pin It