1946இல், அரசுக்கு, மேதை அம்பேத்கர் எழுதிய மடல்
(மேதை அம்பேத்கர் 1920ஆம் ஆண்டு முதலே, சுயராச்சியத்தில், ஆட்சி அதிகாரம் பார்ப்பனர் கை களுக்கு மாற்றப்படக்கூடாது; சுயராச்சிய (சுதந்தர இந்தியாவுக்கான) அரசமைப்புச் சட்டத்தில் தீண்டப் படாதவர்களுக்கான உரிமைகளும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று கோரி வந்தார். இதற்காக 1931-இல் வட்டமேசை மாநாட்டில் போராடி, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தனிவாக்காளர் தொகுதி உரிமையைப் பெற்றார். ஆனால் அதை எதிர்த்து, காந்தியார் சாகும் வரை உண்ணாநோன்பு மேற்கொண்டு, சாவின் விளிம்புக்குச் சென்றதால், அதைக் காட்டிப் பலரும் அச்றுத்தியதால், அம்பேத்கர் பொதுவாக்காளர் தனித் தொகுதியை ஏற்கும் நிலைக் குத் தள்ளப்பட்டார். ஆயினும் அதன்பிறகு தனிவாக் காளர் தொகுதியே தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குக் குறைந்தபட்ச அரசியல் உரிமையையும். பாதுகாப் பையும் தரும் என்று வற்புறுத்தி வந்தார்.
1946ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சி அதிகாரத் தை இந்தியர்களுக்குக் கைமாற்றி அளிப்பது குறித்து வழிமுறைகளை வகுப்பதற்காக, இங்கிலாந்திலிருந்து கிரிப்° தலைமையில் அமைச்சரவைத் தூதுக்குழு இந்தியாவுக்கு வந்தது. அப்போது இந்தியாவின் வைசிராயாக இருந்த வேவல்பிரபுவும் இக்குழுவில் ஓர் உறுப்பினராக இடம்பெற்றிருந்தார். அதுசமயம், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வைசிராயின் நிருவாகக் குழுவில் அமைச்சராக இருந்தார். அந்நிலையில் 1946 மே 3 அன்று வைசிராய் வேவல் பிரபுவுக்குத் தாழ்த் தப்பட்ட வகுப்பினருக்குத் தனிவாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்று விரிவான மடல் எழுதி னார். அதன்பின் 1946 மே 14 அன்று பிரித்தானிய அமைச்சரவைத் தூதுக் குழுவின் உறுப்பினர் அலெக் சாண்டர் என்பவருக்கு அம்பேத்கர் எழுதிய அறிவார்ந்த, உரிமை ஆவணமாக அமைந்துள்ள மடலின் தமிழாக் கம் இங்கே வெளியிடப்பட்டுள்ளது. தமிழாக்கம் : க.முகிலன்).
22, பிருத்திவிராஜ் சாலை, புதுதில்லி
நாள் : மே 14, 1946
அன்பார்ந்த திரு. அலெக்சாண்டர் அவர்களுக்கு,
3. இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையிலான சிக்கலைத் தீர்ப்பது, அமைச்சரவைத் தூதுக்குழு மற்றும் அவர்கள் சார்ந்த கட்சிகளின் பொறுப் பாகும். என் கவலையெல்லாம், தீண்டப்படாத வர்களின் சிக்கல் மற்றும் அரசமைப்புச் சட்டத்தில் அவர்கள் கோரியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நீங்கள் என்ன முடிவெடுக்கப் போகிறீர்கள் என்பதைப் பற்றியதேயாகும். சிம்லாவில் நடை பெற்ற பேச்சுவார்த்தையின் இறுதிநாளில் அமைச் சரவைத் தூதுக்குழு, முறைப்படி வெளியிட்ட அறிக்கையில், தூதுக்குழு தில்லிக்குத் திரும்பிய பின், சில நாள்களுக்குள் அடுத்து மேற்கொள்ள வுள்ள நடவடிக்கை குறித்து அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த அறிவிப் பைப் பட்டியல் வகுப்பினர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் தூதுக்குழு எடுக்கப்போகும் முடிவு தீண்டப்படாத வர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அம் முடிவு, தீண்டப்படாதவர்கள் உரிமையுடனும் மகிழ்ச்சி யாகவும் வாழ்வதற்கு வழிவகுக்கப் போகிறதா? அல்லது அவர்களின் வாழ்வுக்குச் சாவுமணி அடிப்பதாக இருக்குமா? அம்முடிவு தீண்டப்படா தவர்களுக்கு வாழ்வா? சாவா? என்பதாக இருக் கும் என்பதால், தீண்டப்படாதவர்களின் சிக்கல் குறித்துச் சில கருத்துகளை உங்கள் கவனத்திற் குக் கொண்டு வர வேண்டியவனாக இருக் கிறேன். இதற்காக நீங்கள் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டுகின்றேன்.
4. தங்கள் சிக்கலை எதிர்கொண்டு வெல்வது தீண்டப் படாதவர்களுக்கு மிகவும் கடினமானதாக உள்ளது. ஆனால், ஏன் இப்படிப்பட்ட நிலை இருக்கிறது என்பதைக் கீழ்குறித்துள்ள உண்மைகளைக் கருத்தில் கொண்டு சிந்தித்தால் எளிதில் புரிந்து கொள்ளலாம். தீண்டப்படாதவர்களுக்குக் கொடுமை யையும் அநீதியையும் இழைத்துவருவது குறித்து வெட்க உணர்ச்சியற்ற - அதேசமயம் பகை மனப் போக்கு கொண்ட மாபெரும் எண்ணிக்கையி லான இந்துக்கள் கூட்டம், தீண்டப்படாதவர்களைச் சூழ்ந்து நிற்கிறது. அதனால், அன்றாட வாழ்வில் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் களைந்திட தீண்டப்படாதவர்கள், ஆட்சி செய்யும் நிருவாகத்தின் உதவியைக் கோருகின்றனர்.
ஆனால் ஆட்சி நிருவாகத்தின் கட்டமைப்பும், இயல்பும் எவ்வாறு இருக்கின்றன? சுருங்கச் சொல்வ தாயின், இந்திய ஆட்சி நிருவாகம் முழுவதும் இந்துக் களிடம் இருக்கிறது. அது அவர்களின் முற்றுரிமையாக உள்ளது. மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்துக்களின் ஆதிக்கம் இல்லாத ஒரு துறைகூட இல்லை. காவல் துறை, உயர் அதிகாரத் துறை, வருவாய்த்துறை என ஆட்சி நிருவாகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நிருவாகத்தில் உள்ள இந்துக்கள் பொது சமூக நலனில் நாட்டம் கொண்ட வர்களாக இல்லை என்பது மட்டுமின்றி, சமூகத்தின் பொதுநலனுக்கு எதிரானவர்களாகவும் இருக்கிறார்கள்; தீண்டப்படாதவர்களுக்குக் கேடுகள் பல புரிகின்றனர் என்பனவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
தீண்டப்படாதவர்களைப் பாகுபாடாக நடத்துவது, சட்டப்படி யான பயன்கள் அவர்களுக்குக் கிடைக்கவிடாமல் தடுப்பது, அவர்கள்மீது கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்கு முறைகளிலிருந்து பாதுகாப்புத் தரும் சட்டங்களைச் செயல்படவிடாமல் தவிர்ப்பது ஆகியவை இந்துக் களின் குறிக்கோளாக இருக்கின்றன. இதன் விளை வாகத் தீண்டப்படாதவர்கள், சமுதாயத்தில் பெரும் பான்மையினராக உள்ள இந்துக்களுக்கும், இந்துக் களின் ஆதிக்கத்தில் உள்ள நிருவாகத்துக்கும் இடை யில் சிக்குண்டுத் தவிக்கின்றனர். ஒருபுறம் இந்துக்கள் சமூக நிலையில் தீண்டப்படாதவர்களைப் பலவகை யிலும் கொடுமைப்படுத்துகின்றனர். மறுபுறம், பாதிக் கப்பட்டவர்களைக் காப்பதற்குப் பதிலாக இந்து-நிருவாகம் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்புத் தருகிறது.
5. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது, காங்கிர சின் சுயராச்சியம் தீண்டப்படாதவர்களுக்கு எப் படிப்பட்டதாக இருக்கும்? ஒன்று மட்டும் தெளி வாகத் தெரிகிறது. இப்போது நிருவாகம் மட்டும் இந்துக்களிடம் இருக்கிறது; சுயராச்சியத்திலோ, சட்டங்கள் இயற்றும் அதிகாரம் கொண்ட சட்ட சபையும் நிருவாகமும் இந்துக்களின் ஆதிக்கத்தில் இருக்கும். ஆகவே சுயராச்சிய ஆட்சியில் தீண்டப் படாதவர்களின் துன்பங்கள் மேலும் அதிகமாகும் என்பது சொல்லாமலே விளங்கும்.
இனி, தீண்டப் படாதவர்கள் வன்மம் கொண்ட நிருவாகத்தை எதிர்கொள்வதுடன், அவர்களின்பால் பரிவு உணர்ச்சி இல்லாத இந்துக்கள் நிறைந்த சட்டமன்றத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சட்ட அவையும், நிருவாகமும் தீண்டப்படாதவர்கள் மீது பாகுபாடு காட்டி, நஞ்சை உமிழ்ந்து, கடுமையாக ஒடுக்கு வனவாகவே இருக்கும். இதையே வேறு வகையில் சொல்வதானால், காங்கிரசு முன்வைக்கும் சுயராச்சியத்தில், இந்து மதத்தாலும் இந்துக் களாலும் சுமத்தப்பட்ட இழிவுகளிலிருந்து தீண்டப் படாதவர்கள் தப்பிப்பதற்கான வழியேதும் இருக்காது.
6. காங்கிரசின் சுயராச்சியம் தீண்டப்படாதவர் களுக்குப் பெருங்கேடானதாக அமைவதைத் தடுக்க, சட்ட அவையில் (நாடாளுமன்றத்தில்) தங்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்று தாழ்த்தப் பட்ட மக்கள் கோருவதன் நியாயத்தை நீங்கள் ஓரளவு புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்பு கிறேன். அதேபோன்று (வைசிராயின்) நிர்வாக அவையிலும் தீண்டப்படாதவர்களின் பிரதிநிதிகள் இருந்தால்தான், அவர்களது முன்னேற்றத்துக் கான திட்டங்களை வகுக்கவும், அரசு வேலை களில் உரிய பிரதிநிதித்துவம் பெறவும் முடியும். அந்நிலையில்தான் அரசு நிருவாகம் முற்றிலும் அவர்களுக்கு எதிரானதாக இருக்காது.
அரசமைப்புச் சட்ட அடிப்படையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீண்டப்படாதவர்கள் கோருவதன் நியாயத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வதாயின், தீண்டப் படாதவர்கள் தனி வாக்காளர் தொகுதி முறையை ஏன் கேட்கிறார்கள் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். சட்டமன்றத்தில் (சட்டங்களை இயற்றும் அவை என்ற பொருளில்-மொழிபெயர்ப்பாளர்) தீண்டப்படாதவர்கள் சிறுபான்மையாகவே இருப்பார்கள்.
அவர்கள் அவ்வாறு இருக்கும் வகையில்தான் இந்தச் சமூகத்தின் விதி இருக்கிறது. முன்கூட்டியே திட்டமிட்ட தன்மையிலும் நிலையாகவும், பெரும்பான்மையினராகவுள்ள - வகுப்புவாதச் சிந்தனை கொண்ட சாதி இந்துக்கள் தீண்டப்படாதவர்களை ஆதரிப்பவர்களாக மாற்ற முடி யாது. தீண்டப்படாதவர்களால் அதிகபட்சமாக ஒன்று செய்ய முடியும். அதாவது எந்த விதிமுறைகளின் (Terms) அடிப்படையில், பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களுடன் சேர்ந்து பணியாற்றுவது என்பதைத் தீர்மானிக்கும் நிலையில் தீண்டப்படாத வர்கள் இருப்பார்கள். அந்த விதிமுறைகளை இந்துக் கள் உருவாக்கித் தீண்டப்படாதவர்கள் மீது திணிக்க முடியாது.
இரண்டாவதாக, இந்துக்கள், தீண்டப்படாதவர் களுடன் சேர்ந்து பணியாற்ற மறுக்கின்ற போதும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைந்திட நடவடிக்கை எடுக்காத போதும், தீண்டப்படாதவர்கள் பெரும்பான்மையினர்க்கு எதிராகத் தங்கள் கண்டனத் தைச் சட்டமன்றத்தில் சுதந்தரமாகப் பதிவு செய்ய முடியும். இவ்வாறு எதிர்த்துக் கருத்துரைக்கும் சுதந்த ரத்தைத் தீண்டப்படாதவர்கள் பேணிக்காத்துக் கொள்ளுதல் எப்படி? அதற்கு ஒரே வழிதான் உள்ளது. தீண்டப்படாதவர்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மையி னரின் (சாதி இந்துக்களின்) வாக்குகளைச் சார்ந் திருக்கும் நிலை இருக்கக்கூடாது. தனி வாக்காளர் தொகுதி கேட்பதன் அடிப்படை இதுவே ஆகும்.
7. தனி வாக்காளர் தொகுதி முறை ஒன்றே தீண்டப் படாதவர்களைப் பாதுகாக்கும்; பயன்தருவதாக இருக்கும். இதைத் தராமல், வேறெந்தப் பாது காப்பு ஏற்பாடுகளைச் செய்தாலும், அவற்றால் உமியளவு பயனும் விளையாது. தனி வாக் காளர் தொகுதி தான் தீண்டப்படாதார் சிக்கலின் உயிரான கூறு ஆகும். 1946 ஏப்பிரல் 9 அன்று, அமைச்சரவைத் தூதுக் குழுவினர், காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த மூன்று அரிஜன்களிடம் பேட்டி கண்டனர். அப்போது அம்மூவரும் குழுவிடம் அளித்த அறிக்கையின் படிகள் என்னிடம் உள்ளன. அவர்கள் பட்டியல் வகுப்பினரின் முழு ஆதரவு பெற்ற பிரதிநிதிகளா? என்ற வினாவை ஒருபுறம் ஒதுக்கிவிடுவோம்.
காங்கிரசின் மூன்று அரிஜன்கள் அளித்த அறிக்கையில் உள்ள கோரிக்கைகளுக்கும் பட்டியல் வகுப்பினர் பேரவையின் சார்பில் நான் அளித்த அறிக்கையில் உள்ள கோரிக்கைகளுக் கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. அவர் களுடைய அறிக்கையில் இல்லாத ஒரு கோரிக்கை, நான் அளித்த அறிக்கையில் இருக்கிறது. அதுதான் தனி வாக்காளர் தொகுதி! காங்கிரசு அரிஜன்களின் கோரிக்கைகளை நீங்கள் எந்தத் தன்மையில் புரிந்துகொள்ளப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அவை கோரிக்கைகளே அல்ல. காங்கிரசுக் கட்சி, தீண்டப்படாத வகுப்பினருக்கு, அரசியல் பாது காப்பு என்ற பெயரால் எதை அளிக்க எண்ணி யுள்ளதோ அதைத்தான் அம்மூன்று காங்கிரசு அரிஜன்கள் கூறியுள்ளனர்.
இது என்னுடைய புரிதல் மட்டுமன்று. இது நான் திட்டவட்டமாக அறிந்துள்ள செய்தியாகும். காங்கிரசின் எண்ணவோட்டத்தை நன்கு அறிந்துள்ள சிலர் என் னிடம், நீங்கள் பொதுவாக்காளர் தொகுதி முறையை ஏற்றுக்கொள்ள முன்வந்தால், காங்கிரசு என்னுடைய மற்ற கோரிக்கைகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார்கள். பட்டியல் வகுப்பினரின் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற் பதற்குத் தயாராக உள்ள காங்கிரசு, தனிவாக்காளர் தொகுதி என்கிற ஒரு கோரிக்கையை மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? என்பது உங்களுக்கு வியப்பானதாக இருக்கலாம். காங்கிரசு எந்த நோக்கத்துடன் இந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்தால், இதில் வியப்பதற்கு ஏதுமில்லை என்பது தெரியும்.
உண்மையில் இது உள் ஆழங்கொண்ட விளை யாட்டு. தீண்டப்படாதவர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு கள் ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற கட்டாயச் சூழ்நிலையிலிருந்து இனி தப்பிக்க முடியாது என்பது காங்கிரசுக் கட்சிக்குத் திட்டவட்டமாகத் தெரிந்துவிட்டது. அதனால், பெரும் பயனைத் தராத தன்மையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை அளிப்பதற்கான வழியைக் காங்கிரசு தேடுகிறது. பொதுவாக்காளர் தொகுதி முறை யை அடித்தளமாகக் கொண்ட நிலையில் செய்யப்படும் எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாட்டாலும் பயன் ஏதும் விளையாது என்பதைக் காங்கிரசு தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது. அதனால்தான் காங்கிரசு பொது வாக்காளர் தொகுதியை வலியுறுத்துகிறது. பொது வாக்காளர் தொகுதி என்பது அதிகாரம் அற்ற பதவியைத் தீண்டப்படாதவர்களுக்கு அளிப்ப தாகும். தீண்டப்படாதவர்கள் அதிகாரத்துடன் கூடிய பதவிகள் வேண்டும் என்கின்றனர். தனி வாக்காளர் தொகுதி மூலமே அதிகாரம் கொண்ட பதவிகளை அடைய முடியும். அதனால்தான் அவர்கள் அதை வற்புறுத்துகின்றனர்.
8. பட்டியல் வகுப்பினரின் தனிவாக்காளர் கோரிக் கைக்கு வலுவான ஆதாரம் இருப்பதாக நான் நம்புகிறேன். காங்கிரசுக் கட்சி தவிர மற்ற எல்லாக் கட்சிகளும் இதை ஒப்புக் கொள்கின்றன. வேவல் பிரபுவுக்கு (வைசிராய்) 1946 மே 3 அன்று நான் எழுதிய மடலில் தனி வாக்காளர் தொகுதியின் தேவைக்கான காரணங்களைத் தெள்ளத்தெளி வாகக் கூறியுள்ளேன். அம்மடலை நீங்கள் படிப் பதற்காக அவர் கொடுத்திருப்பார். எனவே அக் காரணங்களை மீண்டும் இங்குக் கூறவேண்டாம் என்று எண்ணுகின்றேன்.
இப்போதுள்ள கேள்வி : பட்டியல் வகுப்பினரின் தனிவாக்காளர் கோரிக்கை மீது அமைச்சரவைத் தூதுக்குழு என்ன முடிவு எடுக்கப் போகிறது? இந்துக் களின் அரசியல் நுகத்தடியிலிருந்து தீண்டப்படாதவர் களை விடுவிக்கப் போகிறார்களா? இந்துக்களின் பிரதி நிதியாக உள்ள காங்கிரசிடம் நட்பு பாராட்டுவதற்காகப் பொது வாக்காளர் முறையை ஆதரித்து, தீண்டப் படாதவர்களை ஓநாய்களின் முன் வீசி எறியப் போகி றார்களா? பிரித்தானியர்கள் வெளியேறுவதற்குமுன், மேன்மைதங்கிய மன்னரின் அரசு, சுயராச்சியம் தீண்டப்படாத வகுப்பினரின் குரல்வளையை நெரிப்ப திலிருந்து தடுத்து நிறுத்துவதற்குரிய தக்க ஏற்பாடு களைச் செய்ய வேண்டும் என்று மேன்மைதங்கிய பிரித்தானிய அரசை வலியுறுத்துவதற்குத் தீண்டப் படாதவர்களுக்கு முழுஉரிமை உள்ளது.
9. பட்டியல் வகுப்பினரின் நலன்களைக் காக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு பிரித்தானிய அரசுக்கு இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்பு கின்றேன். எல்லாச் சிறுபான்மையினர் குறித்தும் இதே தார்மீகப் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் இதைக் காரணமாகக் காட்டி, தீண்டப்படாதவர்களுக்கான தார்மீகப் பொறுப்பைப் பிரித்தானிய அரசு, தட்டிக் கழிக்க முடியாது. தீண்டப்படாதவர்கள் தொடர் பாகப் பிரித்தானிய அரசுக்குள்ள தார்மீகப் பொறுப்பு குறித்து பிரித்தானியர்களில் மிகச் சிலரே அறிந் திருக்கின்றனர் என்பதும், அப்பொறுப்பை நிறை வேற்ற வேண்டும் என்று சிலரே கருதுகின்றனர் என்பதும் வருந்தத்தக்க நிலையாகும்.
தீண்டப்படாதவர்கள் செய்த உதவியால்தான் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி நிலைகொண் டது. ஆனால் இராபர்ட் கிளைவ், வாரன்ஹே°டிங், கூட் போன்றவர்களால்தான் இந்தியா வெற்றி கொள்ளப்பட்டது என்று பல பிரித்தானியர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது மிகவும் பிழையான கருத்தாகும். இந்தியர்களைக் கொண்ட ஒரு படையால் தான் பிரித்தானியர் இந்தியாவை வென்றனர். அந்தப் படையில் இருந்த அனை வரும் தீண்டப்படாத வகுப்பினரே ஆவர். தீண்டப் படாதவர்களின் இந்த உதவி கிடைக்காமல் போயிருந்தால், பிரித்தானியரால் இந்தியாவைக் கைப்பற்றியிருக்க முடியாது. பிரித்தானிய ஆட்சிக் குக் கால்கோள் இட்டப் பளிhசிப் போராயினும், அந்த வெற்றியை முடித்து வைத்த கிர்க்கீ போராயினும், அவற்றில் பிரித்தானியருக்காகப் போரிட்டவர்கள் தீண்டப்படாதவர்களே ஆவர்.
10. இவ்வாறு பிரித்தானியருக்காகப் போரிட்ட தீண்டப் படாதவர்களுக்காகப் பிரித்தானிய ஆட்சி என்ன செய்தது? அது ஒரு வெட்கக்கேடான கதையாகும். தீண்டப்படாதவர்களைப் படையில் சேரவிடாமல் தடுத்ததுதான் அவர்கள் செய்த முதல் வேலை. இதுபோன்ற பரிவு உணர்ச்சியற்ற, செய்ந்நன்றி மறந்த, கொடிய செயல் வேறெதையும் வரலாற் றில் காணமுடியாது. படையின் நுழைவாயில் கதவுகள் தீண்டப்படாதவர்களுக்கு மூடப்பட்ட போது, இந்தியாவில் பிரித்தானியர் ஆட்சி நிறுவப் படுவதற்கும், 1857இல் எழுந்த சிப்பாய்க் கழகத் தின் போது, இந்தியாவின் சிற்றரசுகளின் வலிமையான கூட்டுப்படையை முறியடிப்பதிலும் தீண்டப் படாதவர்கள் ஆற்றிய ஒப்பரிய பங்களிப்பை, பிரித்தானியர் கருத்தில் கொள்ளத்தவறிவிட்டனர். படையில் சேருவதற்குத் தடைவிதிப்பதன் விளை வாகத் தீண்டப்படாதவர்கள் வாழ்வில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கிஞ்சிற்றும் எண் ணிப் பார்க்காமல், ஒரே ஒரு கையொப்பத்தின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த னர். அதன்மூலம் அவர்களைப் பழைய இழிந்த வாழ்நிலைக்குத் தள்ளினர்.
தீண்டப்படாதவர்கள், அவர்களுடைய சமூக இயலாமைகளிலிருந்து மீள்வதற்கு எந்த வகை யிலேனும் பிரித்தானியர் உதவி செய்தார்களா? இதற்கான விடை, ‘இல்லை’ என்பதாகவே இருக் கிறது. பள்ளிகள், நீர் மொள்ளும் கிணறுகள், பொது இடங்கள் முதலானவற்றிலும் தீண்டப் படாதவர்கள் தடைசெய்யப்பட்டனர். அரசின் பொதுப் பணத்தைக் கொண்டு நிருவாகம் செய்யப் படும் எல்லா இடங்களிலும் இந்நாட்டின் குடி மக்கள் என்ற அடிப்படையில் தீண்டப்படாத வர்கள் நுழைவதற்கான உரிமையை நிலை நாட்டியிருக்க வேண்டியது பிரித்தானிய அரசின் கடமையாகும். ஆனால் பிரித்தானியர் இத்திசை வழியில் எதுவும் செய்யவில்லை. அதைவிடக் கொடுமை என்னவென்றால், தீண்டாமை எங்கள் ஆட்சிக் காலத்தில் உருவானதல்ல; அதற்கு முன்பிருந்தே இருந்து வருவதாகும் என்று கூறி, தங்களின் கடமை தவறியமைக்கு நியாயம் கற்பிப்பதாகும்.
தீண்டாமை பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதன்று என்பது உண்மைதான். ஆனால் இன்று ஆளுகின்ற அரசு என்ற முறையில், தீண்டா மையை ஒழிக்க வேண்டியது என்பது அரசின் நீங் காக் கடமையல்லவா? தான் செய்ய வேண்டிய பணிகள், கடமைகள் பற்றிய பொறுப்புணர்ச்சி உடைய எந்தவொரு அரசும், அவற்றைத் தட்டிக்கழிக்காது. பிரித்தானிய அரசு என்ன செய்திருக்கிறது? இந்து சமூகத்தைச் சீர்திருத்தம் செய்வது தொடர்பான எந்தவொரு சிக்கல் குறித்துச் சிந்திக்கவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் பிரித்தானிய அரசு மறுத்து வந்துள்ளது. பிரித்தானியர் ஆட்சி ஏற்படுவதற்குமுன், இந்தியாவில் இருந்த ஆட்சிகளின் கீழ், தீண்டப்படாத மக்கள் கடுமையாக உழைத்தும் கொடுந்துன்பங் களுடன் வாழ்ந்து மடிந்தனர். சிதைக்கப்பட்ட - மறக் கப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள். சமூக சீர்திருத்தம் என்பதைப் பொறுத்தமட்டில், பிரித்தானிய அரசுக்கும், அதற்குமுன் இருந்த ஆட்சி களுக்கும் இடையே முதன்மையான வேறுபாடு எதுவும் இல்லை என்றே தீண்டப்படாத வகுப்பினர் கருது கின்றனர்.
அரசியல் தளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது கூட வெறும் பெயரளவினதாகவே இருக்கிறது. இந்துக் களின் ஆதிக்கமும் அதிகாரமும் எப்போதும் போலவே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன. பிரித்தானிய ஆட்சியோ இக்கேடான நிலையை ஒடுக்குவதற்கு மாறாக, அதை ஊட்டி வளர்க்கிறது. சமுதாயக் கண் ணோட்டத்தில் பார்த்தால், பிரித்தானியர் இந்தியாவில் ஆட்சியை நிறுவியபோது, இந்தியாவில் சமூக அமைப்பு எப்படி இருந்ததோ, அதை அப்படியே பேணிக்காப்ப தில், சீனாவின் தையல்காரரின் கதையைப் போல கண்ணுங்கருத்துமாக இருந்து வந்துள்ளனர் என்பது புலனாகும். சீனாவின் தையல்காரரிடம் கோட்டு தைப் பதற்கான புதிய துணியைக் கொடுத்து, அடையாளத் திற்காகப் பழைய கோட்டும் கொடுக்கப்பட்டது. அந்தப் பழைய கோட்டு, குடுகுடுப்பைக்காரனின் கோட்டு போல பல இடங்களில் ஒட்டுத்துணி வைத்துத் தைக் கப்பட்டிருந்தது. சீனத் தையல்காரன் பழைய கோட் டில் எந்தெந்த இடங்களில் ஒட்டுப்போட்டுத் தைக்கப் பட்டிருந்ததோ அதேபோல புதிய கோட்டைத் தைத் தான். இதனால் ஏற்பட்ட விளைவு என்ன?
பிரித்தானிய ஆட்சி நிறுவப்பட்டு 200 ஆண்டுகள் கடந்த பின்னும் தீண்டப்படாதவர் கள், தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட தீமைகள் களை யப்படவில்லை. அவர்களுடைய முன்னேற்றத் திற்கு ஒவ்வொரு கட்டத்திலும் தடை போடப் படுகிறது பிரித்தானிய ஆட்சி, உண்மையில் இந்தியாவில் எதையேனும் சாதித்திருக்கிறது என்று சொல்ல வேண்டுமானால், பார்ப்பனியத் துக்கு உரமூட்டி, அது புதுவலிமையுடன் கிளர்ந் தெழச் செய்திருப்பதைத்தான் கூறவேண்டும். வரலாறு நெடுகிலும் தீண்டப்படாதவர்களின் கொடிய எதிரியாகப் பார்ப்பனியம் செயல்பட்டு வந்துள்ளது. தீண்டப்படாதவர்கள் காலங்கால மாக அனுபவித்து வரும் எல்லா வகையான துன்பங்களுக்கும் மூலமாக இருப்பது பார்ப் பனியமே ஆகும்.
11. பிரித்தானியர் தங்கள் ஆட்சியைத் துறந்துவிட்டு, இந்தியாவிலிருந்து வெளியேறுகிறார்கள் என்பதை அறிவிப்பதற்காகத்தான் அமைச்சரவைத் தூதுக் குழு இந்தியாவுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், “இந்தியாவின் ஆட்சியையும் அதிகாரத்தையும் யாரிடம் ஒப்படைக்கப் போகிறீர்கள்?” என்று தீண் டப்படாதவர்கள் பிரித்தானியரை நோக்கி எழுப்பு கின்ற வினா தவறானது என்று எவரும் கூறமுடி யாது. பார்ப்பனியத்திற்குத் தலைமை தாங்குபவர் களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கப் போகி றீர்களா? அவர்கள்தான் தீண்டப்படாதவர்களை அடக்கி ஒடுக்கும் கொடுங்கோலர்கள்!
இந்தியாவில் பிரித்தானியப் பேரரசின் ஆட்சி அதிகாரத்தை இவ்வாறு கைமாற்றுவது பற்றி இங்கி லாந்தில் உள்ள மற்ற கட்சியினர்க்கு மனஉறுத்தல் ஏதும் இதுக்காது. ஆனால் (ஆளும்) தொழிற்கட்சியின் நிலைப்பாடு என்ன? உரிமைகள் அற்ற, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவதே தன் குறிக்கோள் என்று தொழிற்கட்சி சொல்லிக் கொள்கிறது. அவ்வாறு சொல் லிக் கொள்வது உண்மையாக இருக்குமாயின், தொழிற் கட்சி, 6 கோடி தீண்டப்படாதவர்களின் பக்கம் நிற்கும் என்றும், தீண்டப்படாதவர்களுக்கு உரிய பாதுகாப்புச் செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை யும் மேற்கொள்ளும் என்றும் நான் நம்புகின்றேன். அதேபோல், மதத்திலும் வாழ்க்கைத் தத்துவத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருவோரிடம் ஆட்சி அதிகாரம் செல்லவிடாமல் தடுக்கும் என்றும் நம்புகிறேன். அவர்கள் ஆள்வதற்கு உரிமையும், தகுதியும் அற்ற வர்கள்; மேலும் தீண்டப்படாதவர்களின் எதிரிகள். ஒடுக்கப்பட்டவர்கள் என்ற வகையில் தீண்டப்படாத வர்களின் பாதுகாவலன் என்று தொழிற்கட்சி கூறி வந்தது. இதுவரையில் (இருநூறு ஆண்டுகளாக) தீண்டப்படாதவர்களின் துயர் துடைத்திட, பிரித்தானிய ஆட்சி எதுவும் செய்யாமல், அவர்களைப் புறக்கணித் ததற்குக் கழுவாய் தேடும் செயலாகவே தனிவாக் காளர் தொகுதி தருவது அமையும்.
12. தீண்டப்படாதவர்களின் எதிர்காலம் பற்றிய அச்ச வுணர்வு காரணமாக இவ்வளவு நீண்ட மடலை நான் எழுத நேரிட்டது. அரசமைப்புச் சட்டப் பாது காப்பு வழங்கப்பட வேண்டும் என்கிற தீண்டப் படாதாரின் கோரிக்கை குறித்துக் கருத்து ஏதும் கூறாமல் அமைச்சரவைத் தூதுக் குழு அமைதி யாக இருப்பதே என் கவலைக்குக் காரணமாகும். தீண்டப்படாதவர்களுக்கும் மற்ற சிறுபான்மையி னருக்கும் மேன்மைதங்கிய மன்னரின் அரசு அளித்த வாக்குறுதிகள் குறித்து, தற்போது தூதுக் குழு கொண்டுள்ள மனப்போக்கு என் அச்சவுணர்வை அதிகப்படுத்தியது. தூதுக்குழுவின் மனப் போக்கு, பால்மெர்ஸ்டன் பிரபு ஒருமுறை கூறிய தை நினைவூட்டுகிறது. “எங்களுக்கு நிலையான எதிரிகளும் இல்லை, எங்களுக்கு நிலையான பகைவர்களும் இல்லை” என்று பால்மெர்ஸ்டன் பிரபு கூறினார்.
பால்மெர்ஸ்டனின் கூற்றைத் தூதுக்குழு வழி காட்டியாகக் கொள்ளப் போகிறது என்கிற செய்தி வெளியாகியுள்ள சூழலில், தீண்டப்படாதவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து எந்த அளவுக்கு அஞ்சுவார்கள் என்பதை நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
நீங்கள் இங்கிலாந்தில், அடித்தட்டு வர்க்கத்திலி ருந்து பிறந்து வளர்ந்தவர். ஆறு கோடி தீண்டப்படாத மக்களுக்குச் செய்யக்கூடிய நம்பிக்கைத் துரோகத் தைத் தடுத்து நிறுத்திட உங்களால் இயன்றதனைத் தும் செய்வீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக் கிறது. அதனால்தான் தீண்டப்படாதாரின் பிரச்சனை குறித்து உங்களுக்கு எழுதிட எண்ணினேன். தூதுக் குழுவில் உங்களை விடச் சிறந்த நண்பர் தங்களுக்கு இல்லை என்று தீண்டப்படாதவர்கள் கருதுகிறார்கள் என்பதை இங்குப் பதிவு செய்திட என்னை அனுமதிக்க வேண்டுகின்றேன்.
தங்கள் உண்மையுள்ள,
பி.ஆர். அம்பேத்கர்
(குறிப்பு : இம்மடலின் தொடக்கத்தில் உள்ள 1, 2 எண் கொண்ட பத்திகள் இந்து-முசுலீம் ஒற்றுமைக்கான முயற்சி பற்றியவை என்பதா லும், கட்டுரையின் நீளம் கருதியும் மொழிபெயர்க் கப்படவில்லை. ‘அம்பேத்கர் மடல்கள்’ என்ற ஆங்கில நூலில் 127ஆவது மடல் இது. 1913 முதல் 1956 வரை அம்பேத்கர் எழுதிய மடல் களில், 178 மடல்கள் மட்டும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சுரேந்திர அஜ்நாத் என்பவரால் தொகுக்கப்பட்ட ‘அம்பேத்கர் மடல்கள்’ நூல் 1993இல் வெளிவந்தது. இந்த 127ஆவது மடல் முதன்முதலாக தமிழில் வெளியிடப்படுகிறது.)