நில உரிமையாளர்கள் ஒப்புதல் பெறாமலே,தொழில் முதலாளிகளுக்குத் தரவே அவசரச் சட்டம்!

சிந்து சமவெளி நாகரிகம் 4000 ஆண்டு பழைமையானது. அங்கு வாழ்ந்த மக்கள் பழங்காலத் தமிழர்கள் அல்லது திராவிடர்கள் என்று ஆராய்ச்சிக்காரர்கள் கூறுகிறார்கள். அந்த நாகரிகம் இன்றைய பாக்கிஸ்தானின் பெரும் பகுதியில் தொடங்கி. உத்தரப்பிரதேசம் குசராத் வரை பரவியிருந்தது.

அவர்கள் வாழ்ந்த இடத்தில் காணப்படும் முதலாவது தடயம் தானியங்களைச் சேமித்து வைக்கும் குதிர்கள் அல்லது தொம்பைகள், அடுத்த தடயம் வேளாண்மைக்கும் அன்றாட வீட்டு வாழ்க்கைக்கும் வேண்டப்படும் நீர் சேமிப்பும், நீர் மேலாண்மையும் ஆகும். அவை இன்றும் அங்கே காணப்படுகின்றன.

வடக்கே சிந்து ஆற்றில் தொடங்கி தெற்கே தாமிரபரணி ஆறு வரையில் முதலாவது ஆற்றுப்பாசனம்; இரண்டாவது ஏரிப்பாசனம். அப்படி நீர்ப்பாசனம் பெறுகிற நிலப்பரப்பு மூன்றில் ஒரு பங்குதான்; மீதி மூன்றில் இரண்டு பங்கு வானம் பார்த்த நிலங்கள்.

வெள்ளையன் வெளியேறிய காலத்தில் இருந்த இந்த நிலைமையில் -இந்தியரான காங்கிரசுக் கொள்ளைக்காரர்களும். பாரதிய சனதா பழைமை வாதிகளும், இவர்களை நடத்திக்கொண்டு மாநில ஆட்சிகளை நடத்தியவர்களும் நடத்திய ஆட்சிகளில், இதில் பெரிய மாற்றம் வரவில்லை.

1800க்குப் பிறகு அய்ரோப்பாவிலும் இங்கிலாந்திலும் கையால் தொழில்களைச் செய்யாமல் இயந்திரங்களைக் கொண்டு தொழிற்சாலைகளை இயக்குவது வேகமாகப் பரவியது.

இந்தியா வேளாண்மையை நம்பிய நாடாகவே அன்றும் இன்றும் உள்ளது.

இங்கு விளைந்த நிலக்கடலை முழுவதையும் இங்கிலாந்துக்கு ஏற்றிக் கொண்டுபோய் இயந்திரச் செக்குகளில் எண்ணெய் பிழிந்து திருப்பி எண் ணெயாக இந்தியாவுக்கு அனுப்பினான். அதேபோல் பருத்தி முழுவதையும் ஏற்றிக்கொண்டு போய் அங்கே துணியாக நெய்து இந்தியாவுக்கு அனுப்பி னான். இரும்புக் கனிமத்தை ஏற்றிக்கொண்டு போய்த் தண்டவாளங்களாக வார்த்து இங்கே அனுப்பினான்.

இவற்றால் இங்கிலாந்து வெள்ளைக்காரத் தொழிலாளர்களுக்கு வேலையும் நல்ல கூலியும் கிடைத்தது; வெள்ளை முதலாளிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. இதைத்தான் “வெள்ளைக்காரன் சுரண்டல்” என்றோம்.

பிறகு வெள்ளைக்கார முதலாளிகள் இந்தியாவிலேயே அந்தத் தொழிற் சாலைகளை அமைத்தார்கள். அப்படித் தொழிற்சாலைகளை அமைக்க, வேளாண் நிலங்களை நேரடியாகவும். மாகாண அரசுகள் மூலமும் விலைக்கு வாங்கினார்கள். 1940கள் முதற்கொண்டு இந்தியர்களும் தொழிற்சாலைகளை நிறுவினார்கள். அவர்களும் அப்படியே நேரடியாகவும், அரசு மூலமும் வேளாண் நிலங்களை வாங்கினார்கள்.

வேளாண் நிலங்களைத் தனியாருக்குத் தருவதற் காக அரசு கைப்பற்றுவது அல்லது கையகப்படுத்து வது, சமூகப் பொது நன்மைக்கான பணிகளைச் செய்ய அரசு நிலத்தைக் கையகப்படுத்துவது என்கிற செயலை வரன்முறைப்படுத்திட, “1894ஆம் ஆண் டைய நிலம் கையகப்படுத்தும் சட்டம்” என்பதை வெள்ளையன் நிறைவேற்றினான்.

அதன்படி ஒரு தனி வேளாண் குடியிடமிருந்து நிலத்தை வாங்கும் போது, மூன்று ஆண்டுகளுக்கு முன் அதன் பக்கத்திலுள்ள மூன்று பேர்களின் நிலங் கள் என்ன விலைக்கு விற்கப்பட்டிருக்கின்றன என்று ஆய்வு செய்து, அதன் சராசரியை அன்றைய விலை யாகக் குறித்து, தனியார் நிலத்தை அரசினர் கைப் பற்றினர். அந்தச் சட்டத்தின் 4ஆவது உட்பிரிவின்படி, எந்தெந்தப் பட்டாதாரரின் நிலத்தைக் கையகப்படுத்த அரசு திட்டமிடுகிறது என்பதை நாள் இதழ்களில் முன்கூட்டி அரசு விளம்பரப்படுத்தும்; தனி நில உடை மைக்காரருக்கும் அரசு அறிவிக்கும். ஆனாலும் பத்திரப் பதிவுக்கான கட்டணத்தை ஏமாற்றிட ஒருவழியாக, நிலத்தை விற்பவரும் வாங்குபவரும் உண்மையான விலையைப் பத்திரத்தில் எழுதாமல், குறைத்தே எழுதி னார்கள். அதனால் புதிதாக நிலத்தை விற்கிறவர் களுக்கு, அன்றைய நிலவரப்படியான -நல்ல விலை கிடைக்காமல் போனது.

இதற்காக ஒரு புதிய சட்டத்தைச் செய்ய, 1980 முதல் முயன்று, “2013ஆம் ஆண்டைய - திருத்தப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டம்” என்பதை, கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்தது.

இடையில் 1990 முதல் தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்கிற முதலாளித்துவ -பெருங்கூட்டு வணிக-பெருந்தொழிற் கூட்டுத் தனியார் நிறுவனங்கள் -ஆளுங்கட்சியினர், உயர் அதிகார வர்க்கம் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் -நில விற்பனை உரிமம் பெற்ற அதிகாரத் தரகர்கள் (Power Agents) வழியாக, அயல்நாட்டு -உள்நாட்டுப் பெருவணிகக் குழுமத்தின ரும் -நவீன வேளாண் குழுமத்தினரும் - குடியிருப்புக் கட்டட -அடுக்குமாடிக் கட்டட வணிகர்களும் “தொழில் வளர்ச்சிக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்” என்ற போர்வையில், பெரிய பெரிய பரப்புள்ள நிலங் களை அரசு மூலம் வாங்கி உரிமையாக்கிக் கொண் டார்கள்.

அந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக இதுவரை அரசினால் ஒதுக்கப்பட்ட வேளாண் நிலங் களின் பரப்பு 46,635 ஹெக்டேர் -அதாவது 1,14,087 ஏக்கர்கள்.

அப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களில் பெரிதும் தொழில் தொடங்கப்படவில்லை; நவீன முறை வேளாண்மை செய்யப்படவில்லை; ஒரு பகுதி நிலங் களில் கட்டடங்களே கட்டப்பட்டுள்ளன.

அந்நிலங்களில் தொழில்கள் தொடங்கப்படாததால், அந்நிலங்கள் மூலம் 2006-2007 முதல் 2012-2013 வரையிலான காலத்தில் அரசுக்கு வரவேண்டிய வரியான ரூபா 83,104 கோடி வராமல் இழப்பு ஆகிவிட்டது.

இப்படி இதுவரை நிலத்தைக் கையகப்படுத்திட, எந்த ஊரில் நிலம் எடுக்கப்பட்டதோ, அந்த நிலம் சமூகமும் -தனியாரும் இணைந்த -பொதுப் பயன்பாட்டுக்கு என் றால் 30 விழுக்காடு பரப்பையும், தனியாருக்கு என் றால் 20 விழுக்காடு பரப்பையும் மட்டுமே எடுக்கலாம். அதற்கும், முறையே உள்ளூர் மக்களில் 70 விழுக் காடு பேர் கூட்டாக ஒப்புதல் தரவேண்டும்; அல்லது 80 விழுக்காடு பேர் கூட்டாக ஒப்புதல் தரவேண்டும்.

இந்த ஒரு மக்கள் நாயக நடைமுறை 2013 ஆண்டைய சட்டத்தில் இருந்தது. அத்துடன் நிலத்தை விற்பவரின் மறுவாழ்வு, உள்ளூர் உறவு அற்று இடம் பெயர்தல், புது இடத்தில் வாழ்வாதாரம் கிடைக்கச் செய்தல் இவற்றுக்கும் அரசினர் பொறுப்பேற்க வேண்டும் என்கிற பாதுகாப்பும் 2013ஆம் ஆண்டைய திருத்தப்பட்ட சட்டத்தில் இருந்தது.

இப்போது 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய சனதாக் கட்சிக்கு 543 மக்களவை இடங்களில் 284 இடங்கள் கிடைத்தன. இது அறுதிப் பெரும்பான்மை ஆகும். இதை வைத்து, தானடித்த மூப்பாக உலக -இந்தியப் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக, அவர்களின் தொழில்-வணிக நலன்களுக்கு வழிகோலிட, முனைந்து வேலை செய்கிறார், பிரதமர் நரேந்திர மோடி.

அவர் அண்மையில் பல உலக நாடுகளுக்குச் சென்று வந்தார். எல்லா அயல்நாட்டு-அந்நிய தேச முதலாளிகளையும், அ0யலகத்தில் குடியேறியுள்ள இந்திய வம்சா வழி முதலாளிகளையும் இரு கைகளையும் நீட்டி வர வேற்று, “வாருங்கள்! வாருங்கள்! இந்தியாவில் உற் பத்தி செய்யுங்கள்” (Make in India) என்று அழைப்பு விடுத்துவிட்டுத் திரும்பிவந்தார்.

இந்தியப் பெருமுதலாளிகளான அம்பானி, ரிலையன்ஸ், டாட்டா, அதானி, வேதாந்தம், பஜாஜ் இவர்கள் போதாது என்று, அமெரிக்கரை-இரஷ்யரை-பிரிட்டிஷாரை-ஜெர் மானியரை அறைகூவி அழைக்கிறார். மோடி. அவர் களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க அவர் அடிகோலுகிறார்.

அதற்காக, முதலில் வேளாண் நிலங்களைக் கையகப் படுத்துவதற்கு எந்தச் சட்ட நெறி முறையையும், நிலச் சந்தைவிலை நிலவரத்தையும், வேளாண்மையை நம்பியிருக்கிற 67 விழுக்காடு இந்திய மக்களையும் ஒரு பொருட்டாக எண்ணாமல்-வேளாண் மக்களை வெறும் பண்டங்கள் போல் நினைத்துக் கொண்டு, ஒரு மசோதாவை அண்மையில் நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் நிறைவேற்றிவிட்டார்.

அந்தச் சட்டத்தில், 1) எந்த ஊரில் வேளாண் நிலத்தை அரசு எடுக்கப் போகிறதோ, அந்த ஊர் மக்களின் ஒப்புதலை அரசு பெற வேண்டியதில்லை; 2) வேளாண் மக்கள் இடம்பெயர்தல், உள்ளூர் உறவு அற்றுப்போதல், புதிய இடத்தில் வாழ்வாதாரம் பெற்றிட வழி செய்தல் என்கிற எது பற்றியும் அரசுக்குப் பொறுப்பு இல்லை; என்று தடாலடிச் சட்டமாக நிறைவேற்றிவிட்டார்.

ஆனால், அச்சட்டத்தை மாநிலங்கள் அவையில் நிறைவேற்றிடப் போதுமான உறுப்பினர்களின் எண் ணிக்கை பா.ச.க.வுக்கு இல்லை.

மொத்தம் உள்ள 245 மாநிலங்கள் அவை உறுப்பினர் களுள் 139 பேர் எதிர்க்கட்சிக்காரர்கள்.

பாரதிய சனதாக்கட்சி முன்மொழிந்த 8 முதன்மை யான மசோதாக்களை நிறைவேற்றிட அவர்கள் ஒப்பு தல் தரவில்லை.

உடனே அரசு என்ன செய்திருக்க வேண்டும்?

எல்லாக் கட்சிகளையும் கொண்ட ஆய்வுக்குழுவுக்கு இந்த 8 மசோதாக்களையும் ஆய்வுக்கு அனுப்பி ஓர் அறிக்கை தருவதற்கு வழி செய்திருக்க வேண்டும்.

அதைச் செய்யாமல், இந்தியக் குடிஅரசுத் தலைவருக்கு நெருக்கடி தந்து, அவருடைய ஒப்புதலைப் பெற்று அச்சட்டத்தை அவசரச் சட்டமாக வெளியிட்டுள்ளது அரசு!

இது எப்படிப்பட்ட இந்திய வேளாண் மக்களுக்குத் தீமைகளை விளைவிக்கப் போகிறது தெரியுமா?

இந்தியாவிலுள்ள 126 கோடி மக்களில், 12.1 கோடிப் பேர் வேளாண்மை நில உடைமைக்காரர்கள். இந்த

12.1 கோடி நில உடைமைக்காரர்களில் 9.9 கோடிப் பேர் சிறு, குறு நில உடைமைக்காரர்கள். அதாவது அரை ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நில உடைமை பெற்றவர்கள்.

ஆனால், இவ்வளவு பெரிய கூட்டத்தாரிடம் மொத்த வேளாண் நிலத்தில் 44 விழுக்காடு நிலங் களே உள்ளன. ஆனால் வேளாண்மையை ஒரு தொழிலாகச் செய்கிறவர்களாக உள்ளவர்களில் இவர்கள் மட்டுமே 87 விழுக்காடு பேர்.

மீதிப் பேர் நடுத்தர மற்றும் பெரிய வேளாண்குடிகள்; நகத்தில் அழுக்குப் படாதவர்கள்;வெயிலில் காயாதவர்கள்; மழையில் நனையாதவர்கள்; ஆடு மாடு வளர்க்காதவர்கள்; அதா வது -15 விழுக்காடாக உள்ள மேல்சாதி -சற் சூத்திர சாதிக்காரர்கள்.

ஆதலால், மேலே கண்ட சிறு, குறு வேளாண் குடிகளுடைய வாழ்வுதான் புண்ணாக ஆக்கப் படப் போகிறது, மோடி ஆட்சியில்.

இம்மக்களை, இவர்களுடைய இடங்களில் போய்ப் பார்ப்பவர் யார்? இவர்களுக்கு வரப்போகிற பேரா பத்தை எடுத்துச் சொல்லுவது யார்?

இந்த 8 அவசரச் சட்டங்களில் கையொப்பம் போட்டகுடிஅரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, 19-1-15 அன்று, ஒப்புக்கு ஒப்பாரி வைக்கிறார்.

“எதிர்பாராத சூழ்நிலைகள் இருக்கும் போதுதான்,தவிர்க்க முடியாத காரணத்தால், அவசரச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்” என்று கூறி ஒப்பாரி வைக்கிறார்.

ஏற்கெனவே ஆட்சியிலிருந்த பிரதமர் இந்திரா காந்தி -16 ஆண்டுகளில் 65க்கு மேற்பட்ட அவசரச் சட்டங் களை அமல்படுத்தியதை-எல்லோரும் மேற்கோளாகக்காட்டுகிறார்கள்.

இதன் பொருள் என்ன? இந்தியாவில் மக்கள் நாயகம் எப்போதும் இல்லை என்பதைத்தானே!

இந்தியாவில் -மேல்சாதி, பணக்கார, பார்ப்பன,பனியா, ஆங்கிலம் கற்ற கொள்ளைக்காரர்கள் மற்றும்அவர்களின் அடிவருடிகள் ஆட்சிதான் 1946 முதல் 68 ஆண்டுகளாக நடக்கிறது என்பதே உண்மையிலும் உண்மை.

இந்த அமைப்பை அடியோடு ஒழித்திடுவோம் வாரீர், வாரீர்!

- வே.ஆனைமுத்து