2015 ல் வெளிவந்து வசூல்வேட்டை புரிந்த பாகுபலி The Beginning-ன் அடுத்த பாகம். திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஐந்து நாட்களுக்கு சென்னையில் கிட்டதட்ட டிக்கெட் எங்குமே இல்லை. சரி ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது? சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே கிடைக்கும் இந்த வரவேற்பு எப்படி ஒரு தெலுங்கு டப்பிங் படத்திற்கு கிடைக்கிறது? இத்தனைக்கும் பாகுபலி என்பது தமிழ் வார்த்தையே கிடையாதே.... கதாநாயகனுக்கான... கதாநாயகிக்குமான கூட்டமும் இது இல்லை. இயக்குனருக்குமான கூட்டமும் இல்லை....... எதிர்பார்த்தது எத்தனையோ முறை கிடைக்காமல் ஏமாந்தவர்கள் நாம். ஆம் தரமான பொழுதுபோக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையால் தியேட்டரில் கூடும் கூட்டமே இது. படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் இரண்டு மடங்கு பூர்த்தி செய்தது.

bahubali 2

ராஜமவுலிக்கு இது பதினோராவது படம். ராஜமவுலியின் அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன். நான் ஈ,மரியாத ராமன்னா, பாகுபலியைத் தவிர வேறெந்த படமும் சுத்தாமகப் பிடிக்காது. உதாரணமாக விஜய் நடித்த குருவி படத்தின் இரண்டாம் பாதி அப்படியே ராஜமவுலி இயக்கி பிரபாஸ் நடித்த "சத்ரபதி" படத்தின் முதல்பாதி. ஜூனியர் என்.டி.ஆரை ஸ்டூடன்ட் நெம்பர் 1 படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் (தமிழில் சிபிராஜ் ரீமேக் செய்து நடித்தார் ?),பின்னர் சிம்மாத்ரி (தமிழில் கஜேந்திரா?), ரக்பி விளையாட்டை மையப்படுத்திய படு செயற்கையான "சை", ரவிதேஜாவுடன் விக்ரமார்குடு (தமிழில் சிறுத்தை?), பின்னர் மீண்டும் ஜுனியர் என்டிஆருடன் எமதொங்கா. இது ஒரு ஜாலியான ஃபேன்டசி மூவி என்றாலும் சிறப்பான படம் இல்லை. இந்தப் படத்தின்போது தான் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்களில் சிறு சிறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்ட தாக அவர் சொல்கிறார். அதன்பின் தைரியமாக மகதீரா எடுத்தார். மகதீரா லாஜிக்கைத் தூக்கில் தொங்கவிட்ட ஒரு படம் .(ஹீரோ ஹீரோயினைத் தொட்டா ஷாக்கடிக்குமாம்.. போங்கடாங்க ?). அதிரிபுதிரி ஹிட். ஏனென்றால் அது தெலுங்கு படம். இதோ பாகுபலி 2 ஐயும் தெலுங்குப் படமாகவேதான் எடுத்திருக்கிறார்.

வெற்றி எதுவென்றால், எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாக சொல்லப்படும் திரைக்கதை, தேவையான இடத்தில் கதாநாயகனின் மாஸ் அம்சங்களை சரியாகப் பொருத்தி புல்லரிப்பை ஏற்படுத்துவது, கதாபாத்திரத் தேர்வு, கட்டப்பாவுக்கும் பாகுபலிக்குமான நெருக்கம், கண்ணீரை வரவழைக்கும் எமோஷனல் காட்சிகள், பட்ஜெட்டுக்கு ஏற்ற கிராஃபிக்ஸ், விஷுவல்ஸ், ஒளிப்பதிவு என பின்னியெடுக்கிறார்கள்.

தோல்வி எதுவென்றால், கதையில் என்ன நடக்கப் போகிறது என நமக்கு முதல் பாகத்திலேயே சொல்லி விட்டு தெரிந்ததையே வழ வழ என இழுத்தது, புவி ஈர்ப்பு விசை என்ற ஒன்று இருப்பதையே மறந்தது (உதாரணமாக க்ளைமாக்ஸ் பனைமரம்..முடியல). முதல்பாகத்தில் இருந்த தமிழ்வாசம் நன்கு குறைந்து டப்பிங்கில் மட்டுமே தமிழ் இருப்பது.

இயக்குனர் இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஒரு தெலுங்குப் படமாகவே எடுத்திருக்கிறார். இவ்வளவு கோடி செலவு செய்தும் அதே மசாலா ஹீரோ செய்வதையே பல இடங்களில் பாகுபலியும் செய்கிறார். இங்குதான் இதை ஒரு இந்தியப் படமாக வெளிநாட்டவர்களுக்கு காட்டுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதேபோல இறுதிப் போர் சண்டைக்காட்சி அழுத்தமாக இல்லை.(முதல் பாகத்தில் காலகேயர்களுடன் யுத்தம்தொடங்கும் முன் அதற்கான பில்ட் அப்புகளையும் போர் வியூகங்களை விவரிக்கும் இடங்களையும் நினைவில் கொள்க).

ஆனாலும் குறைகளை தாராளமாக ஒதுக்கி வைக்கலாம். குறிப்பாக கோடி கோடியாக வசூல் செய்யும் ஹிந்தி மொக்கைப் படங்களின் மூக்கை உடைக்க பாகுபலி போன்ற தென்னிந்தியப் படங்கள் அவசியம் தேவை.

ஒரு தெலுங்குப் படமாக பாகுபலி 2 வியப்பூட்டுகிறது. ராஜமவுலியை இந்திய இயக்குனராகவே அனைவரும் பார்ப்பதால் தெலுங்கு மசாலா மென்டாலிட்டியை விட்டு வெளியே வரவேண்டும்.

பாகுபலி 2 - An ஆன்ட்டி கிராவிட்டி இண்டியன் எபிக் மசாலா மூவி.

பி.கு: படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது சரத்குமாரின் நாட்டாமை படம் நினைவுக்கு வந்தது...

- சாண்டில்யன் ராஜூ

Pin It