kaaka muttai 418

ஊரையே அலற வைத்துக்கொண்டிருக்கும் இரண்டு சிறுவர்களைப் பற்றி ஒரு செய்தித் தொகுப்பை படமாக்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட சிறுவர்கள் யாரெனத் தெரியவில்லை. எதேச்சையாக அவ்வழியே வரும் அச்சிறுவர்களை காமிரா வளையத்திற்குள் நுழைந்து விடாதபடி தடுக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் அறிவுத்திறமை இருக்கே! அட...அட. காக்கா முட்டை இதுபோன்ற எதார்த்தங்களை இயல்பாகப் பேசுகிறது.

சிறையில் கணவன்; வயதான மாமியார்; வாண்டுகளாக இரண்டு ஆண்குழந்தைகள்; இவர்களைத் தாங்கும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். வாண்டுகளாக விக்னேஷ் (பெரிய காக்கா முட்டை), இரமேஷ் (சின்ன காக்கா முட்டை). இவர்கள் மட்டுமல்ல, இரயில்வே கலாஸ் தொழிலாளியாக ஜோ மல்லூரி, சிறுசிறு குற்றங்களில் ஈடுபடுகிறவர்களாக இரமேஷ்திலக், யோகி பாபு, பிஸ்ஸா நிறுவனங்களின் முதலாளியாக பாபு ஆண்டனி என கதாபாத்திரங்களின் உருவாக்கம் அற்புதம்.

இயக்குனர் எம்.மணிகண்டன் ஒளிப்பதிவாளராகவும் கலக்கியிருக்கிறார். கதாபாத்திரங்களை குளோசப்பில் காட்டி திரையை விழுங்காமல் சுற்றுப்புறங்களோடு காட்சிப்படுத்தல் அமர்க்களம். காட்சியமைப்புகளை திணறடிக்காமல் இசைந்து நிற்கும் இசையைத் தந்த ஜி.வி.பிரகாசை தட்டி கொடுக்கலாம். படத்தின் இன்னொரு பலம் தெளிவான திரைக்கதையை அழகாக்கி தந்திருக்கும் கிஷோரின் எடிட்டிங்.

பிஸ்ஸா தின்ன ஆசைப்படும் அந்த இரண்டு சிறுவர்களும் ஏழ்மையிலிருந்து வந்திருக்கும் எல்லோருடைய குழந்தைப்பருவத்தையும் நினைவூட்டி விடுகிறார்கள். பரோட்டா அறிமுகமான காலத்தில்தான் உணவகங்களின் தோசைக்கற்கள் வீதிக்கு வந்தன. பரோட்டா மாஸ்டர் கொத்துப்பரோட்டாவில் கறிக்குழம்பை ஊற்றி கரண்டியால் தாளம் போடும்போது வாசம் ஊரைத் தூக்கும். வாங்கித் தின்ன காசிருக்காது. நாவில் எச்சிலோடு அதை வேடிக்கைப் பார்ப்பது எங்கள் வழக்கம். கண்ணில் வெறியோடு பார்த்துக்கொண்டிருந்த ஒருநாளில் சுரீரென முதுகில் விழுந்தது. எனக்கு முன்னமே நண்பர்கள் காணாமல் போயிருந்தனர். "வீட்டுக்கு வா, ஒஞ்சித்தப்பங்கிட்ட சொல்லி தோல உரிக்கேன்" ஓடிக்கொண்டிருந்த என்னை பாட்டியின் வசவு துரத்தியது. தயங்கி தயங்கி வீட்டுக்குள் நுழைந்தபோது எனக்குப் பின்னால் வந்த பாட்டியின் கையில் கொத்துப்பரோட்டா இருந்தது.

இதுதான் ஏழ்மை! பிள்ளைகளை ஏங்க விட மாட்டார்கள். கறிக்குழம்பு காலாகாலமாய் மனிதர்களின் உணவு. ஆனால் பிராய்லர் கோழி வருவதற்கு முன்பு எல்லோருக்கும் அது வாய்க்காது. பிள்ளைகள் கேட்கும். பிள்ளைகளின் ஆசையை பண்டிகை நாட்களில் பெற்றோர்கள் நிறைவேற்றுவார்கள். அதுதான் ஏழ்மை. நினைத்தபோது கிடைக்காதே தவிர நிறைவேறாமல் போகாது ஏழைப் பிள்ளைகளின் ஆசைகள்.

ஆனால் படத்தில் சிறுவர்கள் 300 ரூபாய் பிஸ்ஸாவுக்கு ஆசைப்படுகிறார்கள். சிறையிலிருக்கும் கணவனை மீட்பதற்கு காசு சேர்க்க்கும் தாய் அதை நிராகரிக்கிறாள். இது ஏழைகளின் எதார்த்தமா? இல்லவே இல்லை. தந்தை அருகில் இல்லாதபோதுதான் ஏழைத்தாய் இன்னும் அதிக அக்கறையோடு பிள்ளைகளை கவனிப்பாள். ஒரு பண்டிகை நாள் அல்லது கால அவகாசத்தோடு அதை வாங்கித் தருவதாக சொல்லியிருப்பாள். புரியாத பிள்ளைகளுக்கு அடித்தும், அதட்டியும், அரவணைத்தும் புரிய வைப்பாள். பிள்ளைகளின் எல்லா ஏக்கமும் அந்த தாயின் அரவணைப்பில் தள்ளிப்போகும். இதுதான் ஏழைகளின் உண்மை.

இயக்குனருக்கு இந்த உண்மை புரியவில்லை. ஏழ்மையின் பாசமும், அய்யோ என்பிள்ளைகள் ஏங்கிப்போகுமே என்ற பரிதவிப்பும் புரியவில்லை. ஆகையால் இயக்குனர் அந்த ஏழைத்தாய் பாத்திரத்தை மேல்தட்டு வர்க்கத்தின் மனநிலைக்கு மாற்றுகிறார். அப்பா அருகிலில்லாதப் பிள்ளைகளை அடிக்கவே கூடாதென்னும் ஏழைத்தாயை வறட்டு கண்டிப்பு, கறார்தன்மை ஆகியவைகளுக்குப் பலியாகும் நடுத்தரவார்க்க அம்மாவாக ஆக்குகிறார்.

அப்புறமென்ன? அம்மா பிள்ளைகளின் ஆசையை நிராகரிக்கிறாள்; பிள்ளைகள் பிஸ்ஸாவுக்காக அப்பாவே வேண்டாமென நிராகரிக்கிறார்கள்; தங்களை தலையில் வைத்துக் கொண்டாடிய பாட்டியை வார்த்தையால் கொல்கிறார்கள்; நிலக்கரியைத் திருடி நண்பரான கலாஸ் தொழிலாளியின் வேலையிழப்புக்கு காரணமாகுகிறார்கள்; பணக்கார சிறுவர்களின் பானிப்பூரி ஆசையைப் பயன்படுத்தி அவர்களின் புதுத்துணிகளை ஆட்டையைப் போடுகிறார்கள். மொத்தத்தில் வயதுக்கு உகந்த எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்கிறார்கள்.

ஏழைகளின் இயல்பை கொன்றுவிடும் இயக்குனர் அவர்களின் தன்மானத்தை காட்டுவதாக முயற்சிக்கும் இடமும் அபத்தமானது. சிறுவர்களின் பிஸ்ஸா ஆசையை உணர்ந்த அவர்களின் நண்பனான அபார்ட்மெண்ட் சிறுவன் தனக்கு கிடைத்ததை மிச்சப்படுத்தி எடுத்து வருகிறான். அதை ஏழைச்சிறுவர்கள் வேண்டாமென மறுப்பதுதான் தன்மானமாம்! பிஞ்சுள்ளங்களில் பெரிய வர்க்க பேதங்கள் இருப்பதில்லை என்கிற எதார்த்தமும் இயக்குனருக்குத் தெரியவில்லை.

இயக்குனரின் நடுத்தர வர்க்க கண்ணோட்டம் ஏழைகளின் இயல்பான பாசத்தை உணர முடியாமல் தடுப்பதுபோல் முதலாளிகளின் இயல்பான கொடூரத்தையும் காண முடியாமல் தடுத்திருக்கிறது. பிஸ்ஸா வாங்க கடைக்கு வரும் ஏழை சிறுவர்களை தொடர்ந்து வாட்ச்மேன் தடுக்கிறார். ஒரு கட்டத்தில் கடையின் மானேஜர் சிறுவர்களை அடிக்கவும் செய்கிறார். மானேஜர் அடித்தது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக பிஸ்ஸா கார்னர் முதலாளி கையைப் பிசைந்து நிற்கிறார். இப்படி செய்யலாமா? என மானேஜரைக் கண்டிக்கிறார். முதலாளிக்கு தெரியாமலும், மானேஜரின் அதிகப்பிரசங்கித்தனத்தாலும் இது நடப்பதாக இயக்குனர் கதை சொல்கிறார்.

பிஸ்ஸா கார்னர் மட்டுமல்ல எல்லா நிறுவனங்களிலும் விதிமுறைகள் உள்ளன. நட்சத்திர உணவகங்களில் நுழைவதற்கு வாகனம், உடை மற்றும் செருப்பு குறித்த தகுதிகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. வரையறுக்கப்பட்ட தகுதிகளோடு வராதவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை. நிறுவனங்களின் விதிமுறைகளைத்தான் அதன் ஊழியர்கள் கடைப்பிடிக்கிறார்கள். யாராவது மீற முயற்சிக்கும்போது கைகலப்புவரைக்கும் சென்று விடுகிறது. இதில் குற்றம் ஊழியர்கள் சார்ந்ததல்ல, நிறுவனம் சார்ந்தது; நிறுவனத்தின் உரிமையாளர் சார்ந்தது. ஆனால் நமது இயக்குனருக்கு இந்த உண்மைத் தெரியவில்லை.

இயக்குனர், முதலாளியை அப்பாவியாகக் காட்டுகிறார். முதலாளி அப்பாவியாக இருப்பதால் அவருடன் இருக்கிற ஒட்டுண்ணிகள் அவரைத் தவறுதலாக வழிநடத்துவதாகக் காட்டுகிறார். சங்கிலித்தொடர் பிஸ்ஸா கார்னர்களை நடத்தும் முதலாளி அப்பாவியாக இருப்பதற்கு சிறுசிறு குற்றங்களில் ஈடுபடும் குப்பத்து இளைஞர்கள் வரை வில்லன்கள் போலாகின்றனர்.

இயக்குனரின் நடுத்தர வர்க்க கோமாளித்தன நல்லெண்ணம் நரகத்தில் விழுகிற உச்சக்கட்டம் என்ன தெரியுமா? அபார்ட்மெண்ட் நண்பன் மிச்சப்படுத்தி தருகிற பிஸ்ஸாவை வாங்கித் தின்பதை அவமானமாகக் கருதும் காக்கா முட்டை சிறுவர்கள், உண்மையிலேயே தங்களை அடித்து, அவமானப்படுத்திய நிறுவனம் இலவசமாக தருவதைத் தின்பதுதான்.

ஏழைகளைப் பற்றிப் பேச வெறும் நல்லெண்ணம் மட்டும் போதாது. கலைத்திறன் மட்டும் போதாது. ஏழைகளோடு வாழ்ந்துப் பார்க்கவும் வேண்டும்.

- திருப்பூர் குணா

Pin It