இயக்குனர் பாலச்சந்தர் மறைந்து விட்டார் என்று திரையுலகமும் ஊடகங்களும் வடிக்கும் கண்ணீர் ஆறாகப் பெருகி வந்து தமிழகத்தையே சோகக் கடலில் மூழ்கடிக்க முனைகிறது. பாலச்சந்தர் படைப்பாற்றல் மிக்கவர். செக்கு மாடுகளைப் போல பெரும் கதாநாயகர்களை சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்த தமிழ் திரையுலகின் போக்கை மாற்றி அமைத்தவர், திறமைசாலி என்பதெல்லாம் உண்மைதான்; மறுக்கவில்லை.

balachandarஒரு கலைஞன் இந்த திறமைகள் மூலம் அவன் சொந்த வாழ்வில் வெற்றி பெறலாம், வணிக ரீதியில் வெற்றி பெறலாம், அவனது குடும்பத்தார், உறவினர்கள் ,நண்பர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்று பலரை வாழ வைக்கலாம். இந்த திறமைகளுக்காக மட்டுமே ஒட்டு மொத்த சமூகத்தின் போற்றுதலுக்கு உரியவன் ஆகி விட முடியாது. தனது படைப்பாற்றலை, திறமையை பரந்து பட்ட மக்களின் நன்மைக்காக பயன்படுத்துபவர்கள் மட்டுமே மொத்த சமூகத்தின் போற்றுதலுக்கு உரியவர்களாக ஆகிறார்கள். அப்படி பார்க்கும்போது நம்மால் பாலச்சந்தரை போற்ற முடியவில்லை. தூற்றுவதும் நமது நோக்கமில்லை. உண்மைகளை நினைவு படுத்துவதே பதிவின் நோக்கம்.

பாலச்சந்தர் திரையுலகில் அடியெடுத்து வைத்த அறுபதுகள் தமிழக அரசியல் வரலாற்றில் கொந்தளிப்பான கால கட்டம். தந்தை பெரியார் அவர்களின் அரும் பெரும் போராட்டங்களால் கிடைத்த, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஓரளவுக்கேனும் கை தூக்கி விடும் இட ஒதுக்கீடு காரணமாக அரசுத் துறைகளில் தங்களின் ஆதிக்கம் பறி போவதைக் கண்டு பார்ப்பனர்கள் உள்ளூர கருவிக்கொண்டிருந்த காலம் அது. அதனை வெளிப்படையாக சொல்ல முடியாமல் இட ஒதுக்கீடு காரணமாக தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக கள்ளப்பரப்புரைகளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த கள்ளப்பரப்புரையின் திரையுலகப் பிரதிநிதிகளில் ஒருவர்தான் பாலச்சந்தர்.

அரங்கேற்றம் என்ற இவரது படத்தில் ஒரு பார்ப்பன பெண் குடும்ப வறுமையின் காரணமாக விபச்சார தொழில் செய்வதாக காட்டியிருப்பார். கலைகளும், இலக்கியங்களும் அவை படைக்கப்படும் காலத்தை காட்டும் கண்ணாடிகள் என்பார்கள். அந்த அடிப்படையில் ஒரு பார்ப்பனப் பெண் வறுமையின் காரணமாக விபச்சார தொழில் செய்வதென்பது எப்பேர்ப்பட்ட வரலாற்று புரட்டு. மெய்யுலகில் வறுமையால் விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படுபவர்கள் அத்தனை பேரும் ஒடுக்கப்பட்ட சமூக பெண்களாகத்தான் இருக்கிறார்கள். அக்கிரகாரத்தில் சொந்த வீடு, கூடுதலோ குறைவோ ஏதோ ஒரு வருமானம் தரும் கோயில் குருக்களாக இருக்கும் தந்தை இப்படி அமைந்த சூழலில் அந்தப் பெண் விபச்சாரத்துக்குப் போவதாக சொல்லியிருப்பார். அந்த படத்தில் கோயில் குருக்களின் குடும்பம் பசியும் பட்டினியுமாக காலம் தள்ளுவதாகவும் கதை அளந்திருப்பார்.

நண்பர்களே, எண்ணிப்பாருங்கள். உங்கள் வாழ் நாளில் உடல் உழைப்பில் ஈடுபட்டு குடும்பத்தை காப்பாற்றும் ஒரு பார்ப்பனரையாவது நீங்கள் பார்த்ததுண்டா? இருக்காது. பாலச்சந்தர் சொல்வது போல் பார்ப்பன குடும்பங்கள் பட்டினி கிடக்கும் அளவுக்கு வறுமையால் வாடுவது உண்டென்றால் மூட்டை தூக்கிப் பிழைக்கும் ஒரு பார்ப்பனர் கூட அந்த சமூகத்திலிருந்து உருவாகவில்லையே, ஏன்?

இவரது இன்னொரு படம் ''வானமே எல்லை''யில் ''உயர் சாதி''யில் பிறந்த ஒரே காரணத்தால் வேலை கிடைக்காத, படித்த இளைஞன் ஒருவன் தற்கொலை செய்து கொள்ள முயல்வதாகவும் காட்டி இருப்பார். ஆனால் உண்மை நிலை என்ன? இந்த படங்கள் வெளிவந்த எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பார்ப்பனர்கள் எந்த அளவுக்கு அரசுத் துறைகளை ஆக்கிரமித்திருந்தார்கள் என்பதை எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அம்பலப்படுத்தியுள்ளார்.

1990 ஆம் ஆண்டு அவர், ‘பார்ப்பனர்கள் ஆதிக்க சக்தி’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு கூறியிருந்தார்:

“மக்கள் தொகையில் 3.5 சதவீதம் உள்ள பார்ப்பனர்கள் 70 சதவீத அரசு வேலைகளில் இருக்கிறார்கள். உயர் அதிகாரிகளாக உள்ளவர்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். துணைச் செயலாளர்கள் என்ற நிலைக்கு மேலாக உள்ள 500 பதவிகளில் 310 பேர் பார்ப்பனர்கள் (63 சதவீதம்); 26 தலைமைச் செயலாளர்களில் 10 பேர் பார்ப்பனர்கள்; 27 ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களில் 13 பேர் பார்ப்பனர்கள்; 16 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 9 பேர் பார்ப்பனர்கள்; 330 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 166 பேர் பார்ப்பனர்கள்; 140 வெளிநாட்டு தூதர்களில் 58 பேர் பார்ப்பனர்கள்; 3300 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 2376 பேர் பார்ப்பனர்கள். தேர்ந்தெடுக்கப்படுகிற பதவிகளிலும் இதே நிலைதான். 508 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 190 பேர் பார்ப்பனர்கள்; 244 மாநிலங்களவை உறுப்பினர்களில் 89 பேர் பார்ப்பனர்கள். 3.5 சதவீத மக்கள் தொகை கொண்ட பார்ப்பன சமூகம், நாட்டில் கிடைக்கக்கூடிய மொத்த பதவிகளில் 36 சதவீதத்திலிருந்து 63 சதவீதம் வரை இருக்கின்றனர் என்பதையே இந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது எப்படி சாத்தியமானது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், பார்ப்பனர்களின் 'கூர்ந்த அறிவுத் திறன்' தான் இதற்குக் காரணம் என்பதை மட்டும் நான் நம்பத் தயாராக இல்லை”

இன்றைய கால கட்டத்தில் கூட சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கூடாது என்று பார்ப்பன பனியா கும்பலின் அரசுகள் அடம் பிடிக்கின்றனவே! அவர்கள் ஆதிக்கம் அம்பலமாகி விடக்கூடாது என்ற கள்ள நோக்கம்தானே காரணம்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்மை சாகடித்தவர்கள், இன்றும் தங்கள் ஆதிக்கத்தை காங்கிரசு கட்சியாக, சங் பரிவாராக, கிரிக்கெட்டாக, திரைப்படமாக, சமஸ்கிருதமாக, வாஸ்துவாக, சோதிடமாக தக்க வைத்திருப்பவர்கள் சார்பாக பாலச்சந்தர் நம்மைப் பார்த்து 'வானமே எல்லை'யில் சொல்கிறார்: ''வேலை குடுக்காம எங்களை சவாடிக்கிறீங்க'' என்று. இப்படியான கள்ளப்பரப்புரைகள் சமூகத்தில் பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் பிற்பட்ட மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஒரு சிலர் விபீடணர்களாக மாறி இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுவதை பார்க்கிறோம்.

விபீடணர்கள் இருக்கும் வரை ராமன்களுக்கு கொண்டாட்டம்தான்.

Pin It