ஒரு கலைப் படைப்பை ஒற்றைத் தன்மையுடன் வெறும் கலை ரசனையோடு மட்டுமே பார்க்காமல் அதனுள் இருக்கும் பல்வேறு நுட்பமான பார்வைகளை பன்முகத் தன்மையுடன் அவதானிக்க வேண்டும் என்று புகழ் பெற்ற கலை இலக்கியக் கோட்பாடான பின்நவீனத்துவம் சொல்கிறது. உலகளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்தக் கோட்பாட்டை முன் வைத்து தமிழ்ச் சூழலிலும் நவீன தமிழ் படைப்பாளிகளும், நவீனவிமர்சகர்களும் செயல்பட்டார்கள்.

‘படைப்பாளி என்பவன் யார்?’ என்கிற மிஷேல் ஃபூக்கோவின் பார்வையிலிருந்து ‘படைப்பாளியின் மரணம்’ என்ற ரோலாண்ட் பார்த்தின் பார்வை வரை படைப்புகளில் ஒளிந்திருக்கும் அல்லது மறைந்திருக்கும் பல்வேறு நுட்பங்களைப் பிரித்து மேய்ந்தார்கள்.

Prasanna Vithanageஇதன் நீட்சியாக தற்போது சிங்கள மொழிப்படமான பிரசன்னவிதானகேயின் with you with out you படத்தை முன் வைத்து காரசாரமான விமர்சனப் பார்வைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படைப்புக்கு உள்ளே நுட்பமாகக் கட்டமைத்துள்ள அரசியல் விஷயங்களை முன்வைக்கின்றனர்.

இப்படியான பார்வைகளை முன்வைத்து விமர்சிக்கிறவர்கள் கதைகவிதை எழுதுகின்ற எழுத்தாளர்கள் அல்லாதோர்; இவர்கள் தமிழ் தேசிய அரசியல் பேசும் மாற்று அரசியலாளர்கள்.

ஆனால், கதைகவிதை எழுதும் படைப்பாளிகள், ‘படைப்பைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? மிக அற்புதமான படைப்பு அது, படைப்பை படைப்பாகப் பார்க்காமல் ஏதேதோ உளறுகிறார்கள்’ என்று இவர்களைக் கிண்டலடிப்பதுதான் நகை முரண்.

இந்த இருசாராரின் கருத்துக்களையும் மறந்து படத்திற்குள் புத்துணர்ச்சியுடன் நுழையலாம்:

இலங்கையின் மலையகப்பகுதியில் அமைந்துள்ள தமிழர்கள் வசிக்கும் இடத்தில் நடக்கிறது கதை. தமிழீழப் போரினால் தனது குடும்பத்தை இழந்த செல்வி என்னும் தமிழ்ப்பெண் உறவினர் வீட்டில் வாழ்கிறாள். தனது வாழ்வியலுக்காக தன்னிடமுள்ள சிறுசிறு தங்க நகைகளை அடகு வைத்து வாழ்கிறாள். அடகுக் கடை நடத்தும் சரத் ஸ்ரீ என்னும் சிங்களவன் அவளின் நிலையை உணர்ந்தாலும் தனது வணிக நோக்கிலேயே இருக்கிறான். ஒரு கட்டத்தில் அவளுக்கு ஒரு கிழவரை மணமுடித்து வைக்க உறவினர் வீட்டில் ஏற்பாடு செய்கிறார்கள். அது பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறும் செல்வியை தான் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்கிறான் சரத்ஸ்ரீ. அவளும் சம்மதிக்கத் திருமணம் நடக்கிறது. சந்தோஷமாகப் போகும் அவளது வாழ்வில் தனது கணவன் முன்னால் ராணுவ வீரன் என்கிற விஷயம் தெரிகிறது. அவள் மனமுடைந்து போகிறாள். தனது இனத்தையும் தனது குடும்பத்தையும் நிர்க்கதியாக்கிய சிங்கள ராணுவம் சார்ந்த அவனோடு இணைந்து வாழ முடியாமல் தவிக்கிறாள். இறுதியில் அவனை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், விலகியும் போக முடியாமல் இருக்கும் கையறுநிலையில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறாள்.

இப்படத்தின் மையக்கதையம்சம் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தாவ்ஸ்கியின் A Gentle Creature சிறு கதையாகும். இக்கதையை ஏற்கனவே புகழ்பெற்ற பிரெஞ்ச் இயக்குனர் ராபர்ட் ப்ரஸோன் The Gentle Woman என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். அதேபோல, நம்நாட்டிலும் வங்காள இயக்குனர் மணிகௌல் ‘Nazar’ என்னும் தலைப்பில் படமாக்கியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

இந்த இரு படங்களையும் ஆண்-பெண் என்கிற பொதுவான உணர்வுகளிலேயே கதையை நகர்த்தியிருக்கிறார்கள் அந்த இயக்குனர்கள். இந்தப் படங்களில் இனம், மொழி, மதம் போன்ற விஷயங்கள் இடையீடு செய்வதில்லை. தனது மனைவி தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் ஏன் அவ்வாறு செய்தாள் என்ற பின்னோக்கிய நினைவு அடுக்குகளில் அதற்கான முகாந்திரத்தைத் தேடும் கணவன் என்பது போன்ற காட்சியமைப்புகளாகவே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

கணவனுக்கும் மனைவிக்குமான அதீதமான மன அழுத்தங்கள் சார்ந்த குற்ற உணர்வுகளில் பீடிக்கப்பட்டிருக்கும் மைய ஓட்டம் தான் இப்படங்களின் கதைக் கரு.

ஆனால், சிங்களப்படத்தில் அந்தக் குற்ற உணர்வுகளை இனத்தின் மீதும் மொழியின் மீதும் பொருத்திப் பார்த்திருக்கிறார் விதானகே. இது ஒரு ‘குற்ற உணர்வுகளின் அழகில்’ சார்ந்த படம் என்கிறார்.

குற்ற உணர்வுகளின் அழகியல் வெறுமனே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நிகழ்வது என்பது வேறு. இனம் சார்ந்த, மொழி சார்ந்த, மதம் சார்ந்த கதாபாத்திரத்திரங்களுக்கு நிகழ்வது என்பது வேறு என்பதை உணரத் தவறிவிட்டார் இயக்குனர்.

அமெரிக்கா போன்ற ஐரோப்பிய ஆதிக்க நாடுகள் கட்டமைத்த உலக சினிமா பம்மாத்தெல்லாம் என்றைக்கோ முடிந்து விட்டது. இன்றைக்கு தங்களது நாட்டின் அடையாளங்களை, பண்பாடுகளை, அதிகார மீறல்களை, சிதைவுகளை முன் வைத்து மூன்றாம் உலகநாடுகளின் கலைஞர்கள் பயணப்படத் துவங்கிவிட்டனர். மேற்குலக ஆதிக்க நாடுகளின் இஸங்களினாலும் புதிய அழகியல் போக்குகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தப் பின்காலனிய நாடுகளின் பார்வை, கலைக்கும் மனித வாழவியலுக்குமிடையிலான நிரப்ப முடியாத இடைவெளியை தங்களது அரசியல் பார்வைகளால் நிரப்பிக் கொண்டிருக்கிறது.

நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு கோட்பாட்டுக் கருத்தை மீண்டும் இங்கே முன்வைக்க வேண்டியிருக்கிறது.

ஒரு கலைஞன், தற்காலத்திய உலக மயமாக்கலின் வருகைக்குப் பிறகு கலை இலக்கியங்களைப் படைக்கும் போக்கு என்பதை மிகமிக நுட்பமாக அவதானிக்க வேண்டியிருக்கிறது. படைப்பாளிக்கே தெரியாமல், தான் படைக்கும் படைப்பில் பல்வேறு அரசியல் கட்டமைப்புகள், வரலாற்றுத் திரிப்புகள், ஆதிக்க அழகியல்கள், நுட்பமாக தங்களது படைப்பின் சட்டங்களுக்குள் நுழைந்து ஒளிந்து கொள்கின்றன.

இந்த நுட்பமான கூறுகள் என்பவை ஒரு படைப்பாளி உலகளாவிய படைப்புகளை மேற்கு நாடுகளின் படைப்புகளை அவதானித்து வருவதால் நிகழும் ரசனை மாற்றங்கள். இவை ஆழ்மன உளவியலில் கிடந்து மெதுவாக ஒரு கட்டத்தில் படைப்பாளியின் ரசனை மாற்றத்தை வாஸ்தவமாக மாற்றி படைப்பில் வந்து கம்பீரமாக உட்கார்ந்து கொள்ளும். இந்த நுட்பமான கூறுகளுக்குள் இயங்கும் நுண்ணரசியல்களை இனங்கண்டு அவைகளை நெறிப்படுத்த வேண்டும். இதுதான் இன்றைய மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த படைப்பாளிகளின் சவால்.

இந்தப் பார்வையில்தான் விதானகேவை அணுக வேண்டியிருக்கிறது.

ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் குரலை ஆதரிப்பவர் என்கிற அடையாளத்துடன் இயங்குபவர். இடதுசாரிக் கருத்துக்களால் புடம் போடப்பட்டவர். தொடர்ந்து இலங்கை இனப்பிரச்சினைகளை தனது படங்களில் விமர்சித்துக் கொண்டிருப்பவர். இவரது Death of a full moon day என்னும் படம் எளிய சிங்கள மக்களின் வாழ்வியலைச் சிதைக்கும் போரின் கொடூரத்தைப் பற்றிப் பேசுகிறது.

எளிய குடும்பத்தைச் சேர்ந்த சிங்களக் குடிமகன் தனது குடும்பத்தின் வாழ்வியலுக்காக ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிகிறான். யுத்தத்தில் இறந்து போகிறான். சிங்கள ராணுவத்தினர், போரில் இறந்துபோன உடல்களை அப்படியே போர்க் காலத்திலேயே விட்டு வந்துவிடுகின்றனர். அவர்களது பெற்றோர்களுக்கு ஒரு சவப்பெட்டியில் வெறும் செங்கற்களை வைத்து மூடி, ‘இதுதான் உடல்’ என்று அனுப்பி விடுகின்றனர். சவப்பெட்டியை யாரும் திறந்து பார்க்கக் கூடாது என்ற கடுமையான உத்தரவுடன். தனது மகன் போரில் இறக்கவில்லையென்று நம்பும் அப்பா, சவப்பெட்டியை உடைத்துப் பார்க்கிறார். பிறகு தனது மகன் என்றாவது ஒரு நாள் வந்து சேருவான் என்கிற நம்பிக்கையில் வாழ்கிறார்.

இக்கதை, ஒரு பார்வையில் சிங்கள அரசு, ராணுவ வீரர்களுக்குச் செய்யும் கொடுமையைப் பற்றிப் பேசினாலும், மறு பார்வையில் வேறொரு உள்ளீடு ஓடுகிறது: இந்த பாழாய்ப்போன யுத்தம் என்கிற நிர்ப்பந்தத்தின் அடிப்படையே, யுத்தம் விளைவித்த பொருளாதாரச் சீர்கேடுகளே, தங்களது வாழ்வியலைச் சிதைப்பதற்கான முன்னோட்டங்கள் என்று எளிய சிங்கள மக்களின் மனத் தோற்றத்தில் பதிவாகிறது. எனில், யுத்தகளத்தில் நிற்கும் தமிழினப் போராளிகளை வெறுத்து ஒதுக்கும் மனநிலை கட்டமைகிறது.

யுத்தம் ஏன் வந்தது? யுத்தத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் யார்? என்கிற நுட்பமான நுண்ணரசியலை நோக்கிப் படம் நகர்வதில்லை. ஒரு பறவைப் பார்வையுடன், வெகுஜன மனத்தின் வாஸ்தவமான நியாயத்துடன், அறத்துடன் கலைப்படைப்பாக முன் வைக்கிறது.

இவரைப் போலவே ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உளவியலுக்குள் நின்று இப் பிரச்னையை விமர்சித்த சிங்களத் திரைப்படக் கலைஞர்களாக அசோக ஹந்தகமா, விமுக்கி ஜயசுந்தரா, தர்மசேன பத்திராஜா... போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்கள் இந்த யுத்தத்திற்காகக் கற்பிக்கப்பட்ட நியாய தர்மத்தின் மீது பலத்த விமர்சனங்களை முன் வைத்தவர்கள்.

தேசநலன்தான் முக்கியம் என்கிற மையக் கருத்தைக் கொண்ட ஹந்தகமாவின் ‘இது என் நிலா’ படம் பேசும் கருத்துக்களைப் போலவே, மேலும் ஆணித்தரமாக தற்போது எடுத்திருக்கும் ‘இனி அவன்’ என்கிற படத்தில் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார் அவர். இனநல்லிணக்கம், தேசநலன், போரில் ஏற்பட்ட வாழ்வியல் சிதைவுகள், நடந்து போன விஷயங்களை மறந்து விடுதல் என்று நுட்பமாக இலங்கைப் பேரினவாதத்தின் கருத்துக்களைக் கலையாக முன் வைக்கிறார். எளிய கருத்துக்கள் கொண்ட தமிழர்களிலிருந்து, புலி ஆதரவு/ புலி எதிர்ப்பு கருத்துக்கள் கொண்ட தமிழர்கள் வரை எல்லாத் தரப்பினரிடமிருந்தும் இப்படத்திற்கு மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

‘ஈழப் போராட்டத்தை பயங்கரவாதம்’ என்று தனது நேர்காணலில் குறிப்பிடுகிறார் ஹந்தகமா.

அதே போல, இங்கு வேறு சிலரையும் நினைவு கூறலாம். சமகால அரசியல் விமர்சகரான நோம் சாம்ஸ்கி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அறிவு சீவி. சமகால அரசியல் கொள்கைகளை அரசியல் நடத்தைகளை தெளிவாய் தைரியமாய் விமர்சிப்பவர், அமெரிக்க மேலாதிக்கம் , அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளின் பயங்கரவாத தன்மை மற்றும் அமெரிக்க அரச அடக்கு முறைகள், அமெரிக்க , இஸ்ரேலிய உறவு , இஸ்ரேலிய பலஸ்தீன் அராஜக அடக்குமுறை போன்றவற்றை பற்றி 1970களின் தொடங்கி இன்றுவரை தனது நூல்கள், கட்டுரைகள், உரைகள், பேட்டிகள் ஊடாக உலகிற்கு பகிரங்கமாக வெளிபடுத்துபவர்.

இவர், இலங்கை விவகாரம் குறித்து லங்கா கார்டியனுக்கு அளித்த நேர்காணலில், இலங்கை இனப்படுகொலைகள் பற்றி, மீண்டும் மீண்டும் வன்முறைகளில் ஈடுபடுகிறவர்களும் யுத்தக் குற்றவாளிகளும் கண்டிக்கத்தக்கவர்கள் என்று திருவாய் மலர்ந்திருந்தார்.. உடனே தமிழ் நவீன இலக்கிய அறிவு சீவிகள் பொங்கியெழுந்து விளக்க அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தார்கள்.

அதன்பிறகு வளைகுடா நாட்டில் பணியில் இருந்த எழுத்தாளர் ஹெச். பீர்முஹம்மது, அந்த நாட்டுக்கு வந்திருந்த சாம்ஸ்கியிடம் உன்னதம் இதழுக்கு பிரத்யேகமான நேர்காணல் (ஜூலை 2009) எடுத்தபோது இந்த விவகாரத்தைக் கேள்வியாக வைத்தார். அதற்கு அவர் அளித்த பதில்:

ஹெச். பீர்முஹம்மது:- அதிகாரம் குறித்த உங்களின் பார்வை சார்பு நிலையாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். மன்னிக்கவும். நீங்கள் இலங்கை விவகாரம் குறித்து லங்கா கார்டியன் பத்திரிகைக்கு நேர்காணல் அளித்திருந்தீர்கள். என்ன நிகழ்ந்தது என்றே தெரியவில்லை. அவர்கள் உங்களை வென்று விட்டார்கள். இலங்கை விவகாரம் பாலஸ்தீன் போன்றே இரு நூற்றாண்டுகளின் துயரம். அதற்கு மறுப்பாக என் நண்பர்கள் சிலர் (நாகர்ஜுனன், ஜமாலன், பெருந்தேவி) அறிவுத்துறையை சார்ந்த பலரின் கையெழுத்து அடங்கிய விளக்க அறிக்கை ஒன்றை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்கள். நானும் அதில் கையெழுத்திட்டிருந்தேன். பாலஸ்தீன் குறித்த ஆழ்ந்த அனுதாபமும், அவதானமும் கொண்ட நீங்கள் ஏன் தெற்காசிய விவகாரங்களிலிருந்து உங்களை துண்டித்து கொள்கிறீர்கள்.? (Disconnect from South Asian Affairs)

சாம்ஸ்கி:- இலங்கை விவகாரம் குறித்து லங்கா கார்டியனுக்கு நான் அளித்த நேர்காணல் தவறாக பிரதியாக்கம் செய்யப்பட்டதாகவே கருதுகிறேன். எனக்கு அந்த விவகாரம் குறித்த விரிவான அகன்ற படிப்போ அல்லது பார்வையோ இல்லை. இதை நான் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலுக்கான பதிலிலும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் சொன்னது போன்றே அது ஒரு துயரம் தான். அது தீர்க்கப்பட வேண்டும். அங்குள்ள சிறுபான்மையினர் எல்லா வித சம உரிமைகளை பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.

(இந்த விஷயம் தமிழிலோ பிற மொழிகளிலோ வேறு எந்தப் பத்திரிகைகளிலும் வெளிவரவில்லை. மிகக் குறைவான வாசகர் எண்ணிக்கை கொண்ட உன்னதம் இதழில் மட்டுமே வெளிவந்தது.)

இதுதான் பல லட்சம் உயிர்களை காவு வாங்கிய தமிழினத்திற்கான நியாயமான அவரது பதில். இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஒடுக்கப்படும் இனத்திற்காகக் குரல் கொடுக்கும் அறிவுசீவியின் கடைக்கண் கடாட்சம்..

அடுத்து ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த லண்டன் வாழ் ஜான் பில்கர். இவர் அனுமதிக்கப்பட்ட போர்ச்செய்தியாளர். உலகளவில் நடக்கும் இனப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் போன்ற சமூக விழிப்புணர்வு சார்ந்த பல்வேறு விடயங்களில் கவனம் குவித்து அவைகளை ஆவணப்படங்களாக உருவாக்குபவர். (இவரது ஆவணப் படங்களை விடியல் பதிப்பகம் குறுந்தகடு போட்டுள்ளது.)

ஆனால், இவர், இலங்கையில் நடந்த இனப் படுகொலைகள் குறித்தோ, அங்கு இன்றளவிலும் லட்சக் கணக்கான மக்களை அடைத்து வைத்திருக்கும் அகதி முகாம்களின் அவலம் குறித்தோ ஒரு ஆவணப் படத்தையும் உருவாக்கியதில்லை. இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன? என்று கேட்டு உன்னதம் இதழிலும், மின்னஞ்சலிலும் விளக்கம் கேட்டு அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தேன். பதிலில்லை. (உன்னதம் 2009 டிசம்பர்)

இதற்கு அவர் எனக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது, அவர்களைப் போன்றவர்கள் மீது தொடுக்கப்படும் தார்மிகம்.

ஐரோப்பிய அறிவு ஜீவிகள் தமிழினத்துக்காகக் குரல் கொடுப்பதென்பது அவர்கள் போடும் பிச்சை அல்ல. அது தமிழினம் அவர்களுக்குத் தரும் அங்கீகாரம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டாலே போதுமானது.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிறகான தற்போதைய சூழலில் முன்னால் போராளிகளின் பரிதாபமான நிலையை எல்லோராலும் வெறுக்கத்தக்க குற்ற உணர்வுக் காட்சிகளாகப் பதிவு செய்துள்ள ஹந்தகமா காட்டும் யாழ்ப்பாணம் குற்றவுணர்வு மிகுந்ததாக இருக்கிறது. போராளிகள் இன்று மாஃபியாகாரர்களாக மாறுவது போல சித்தரிக்கும் இவர், இதற்கான ரிஷி மூலங்களை முன் வைப்பதில்லை. அப்படியான ரீதியில் பார்வையாளன் யோசிப்பதற்கான தருணங்களை உருவாக்குவதில்லை. இறுதியில் தமிழர்கள் சிங்களர்களோடு சார்ந்து வாழ வேண்டும் என்கிற இன நல்லிணக்கத்தை தெளிவாக முன் வைக்கிறார்.

இதே மாதிரியான ஒரு போக்கைத்தான் விதானகேவும் with you.... படத்தில் பூடகமாக முன் வைக்கிறார். சிங்கள ராணுவம் அல்லது சிங்களப் பேரினவாதத்தின் குற்ற உணர்வுகளாக முன் வைத்து மன்னிப்பும் கேட்கிறார். சரி Past is Past எல்லாவற்றையும் மறந்துவிடுவோம். இனி புதிய வாழ்க்கையை ஆரம்பிப்போம், ஒருவரோடு ஒருவர் கலந்து வாழ்வோம் என்பது போன்ற ஒரு பார்வையை முன் வைத்துப் பார்க்கிறார்.

இந்தக் குற்ற உணர்வு என்னும் படிமம் அவருக்கு தாஸ்தாவ்ஸ்கியிடமிருந்து கிடைக்கிறது. ஏனெனில், அவரது பதின்பருவம் இடதுசாரிய ரஷ்ய இலக்கியங்களால் கட்டமைக்கப்பட்டது. டால்ஸ்டாயும், தாஸ்தாவ்ஸ்கியும், துர்க்கனேவும், செகாவும் அவருக்குள் பல்வேறு அறரீதியான, தார்மீகமான எண்ண அலைகளை உருவாக்கியிருக்கிறார்கள். அதனால்தான் அவரால் ஹந்தகமாவைப்போல வெளிப்படையாக இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியவில்லை. ஒரு கையறு நிலையிலேயே படம் முழுக்க அழைத்துச் செல்கிறார்.

தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றமும் அதன் பண்பாடுகளும் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் இச்சூழலில் அதுகுறித்த விமர்சனமேதுமின்றி, அப்படி எதுவும் நடக்காதது போன்ற ஒரு தோற்றத்தைப் படம் முழுக்கக் கட்டமைக்கிறார். படத்தின் பின்புலத்தில் திரும்பிய புறமெங்கும் கந்தசஷ்டிக் கவசமும் தமிழ் கும்தலக்கிடி பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. உட்டாலக்கிடி படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. போரினால் பெரியளவில் தமிழர்களிடையே மனரீதியாக பாதிப்பு எதுவும் இல்லை; பொருளாதார ரீதியிலான பாதிப்பு வேண்டுமானால் உள்ளது என்கிற தோற்ற மாயையை தொடர்ந்து உருவாக்குகிறார்.

தமிழ்ப்பெண்ணின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் சிங்களராணுவ வீரன் என்னும் குறியீடு முழுக்க முழுக்க மேலோட்ட மான வெகுஜனப் பார்வை கொண்டது. இதைக் குற்றவுணர்வுகளின் அழகியல் என்கிறார். ஒரு இனத்தை மிகக் கொடூரமாகக் கொலை செய்த பிறகு குற்றவுணர்வுகளுடன் கூடிய சில சில நல்லிணக்கங்களையும் சமரசங்களும் செய்யும் காட்சிகளை உருவாக்குவதற்குப் பெயர்தான் குற்றவுணர்வுகளின் அழகியலா?

"நாங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து வாழ்ந்து வந்த எங்களது நிலத்தை அபகரித்துவிட்டு, எங்களுடன் வந்து ஒன்று கலவுங்கள் என்று அழைக்கிறீர்களே... நாங்கள் எப்படி வரமுடியும்? எங்களது நிலம், பண்பாடு, வாழ்வு எல்லாவற்றை யும் பறித்துக்கொண்டு நிர்வாணமாக இருக்கும் எங்களை அழைக்கிறீர்கள். உங்களுக்குத் தேவை சக மனிதன் அல்ல; ஒரு அடிமைதான்..." என்று வெள்ளையர்களை நோக்கிக் கேள்வி கேட்ட செவ்விந்திய தலைவரான டேன்ஜார்ஜின் கடித வரிகள், இங்கு ஈழத் தமிழருக்கும் பொருந்தும்தானே....

விதானகே மீது விமர்சனம் வைத்தால், ராஜபக்சேவை போய்க் கேள் என்று கிண்டலடிக்கும் நவீன தமிழ் அறிவுசீவிகளே...

ஒரு இனத்தைக் கொன்றொழித்துவிட்டு எஞ்சியவர்களை, ‘நாங்கள் உங்களை ஏற்றுக் கொள்கிறோம், நாம் அனைவரும் ஒரே மக்கள், வந்து எங்களுடன் சார்ந்து ஒன்று கலவுங்கள்..’ என்று ராஜபக்சே கூறுவதற்கும் விதானகே கூறுவதற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்: நாங்கள் குற்றவுணர்வில் இருக்கிறோம் என்று விதானகே வாக்குமூலம் கொடுப்பது மட்டும்தான்.

சரி. தமிழ்நாட்டில் உள்ள தமிழ் தேசியம் பேசுகிறவர்கள், இந்தப் பிரச்னையில் நேரடிப் பற்கேற்பாளர்களாக இல்லை. வெறும் பார்வையாளர்கள்தான். அதனுடைய வலிகளோ, பிரச்னைப்பாடுகளோ தெரியாது.

ஆனால் ஹந்தகமாவோ,விதானகேவோ யுத்தத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட இனத்தின் முற்போக்குப் படைப்பாளிகள். தீர்க்க முடியாத வலியாலும் எல்லையற்ற துயரத்தாலும் கிடக்கும் ஒரு இனத்தை தருணம் பார்த்து தங்களுக்கேற்ப மாற்ற நினைக்கும் கருத்தியல்களை விதைக்கும்போது, அவர்களை சிங்களவர்கள் என்ற பொதுப் புத்தியின் கீழ் விமர்சிக்காமல், தடம் தடுமாறும் முற்போக்கான படைப்பாளிகள் என்ற பார்வையில் விமர்சிப்பதுதானே இன்றைய தேவை..

தோற்றவர்களைப் பெருந்தன்மையுடன் நல்லிணக்கம் என்ற சொல் மூலம் மேலும் தோற்கடிக்க வைக்கும் போக்கு அல்லவா இது? இவர்களுக்குத் தேவை நல்லிணக்கம் அல்ல; பல லட்சம் மக்களைக் கொன்று குவித்ததற்கான நியாயம். இனப் படுகொலைகளுக்கான தார்மீகப் பொறுப்பு. செங்குருதி பாய்ந்த முள்ளிவாய்க்காலுக்கான தீர்ப்பு.

13 வது சட்டத் திருத்தத்தை முள்ளிவாய்க்காலில் குழி தோண்டிப் புதைத்துவிட்டு இன நல்லிணக்கம் பேசும் கலை இலக்கியப் பார்வைகளை, ’படங்களை வெறும்படங்களாக மட்டுமே பாருங்கள்’ என்று கூக்குரலிடும் நவீன தமிழ் அறிவுசீவிகளை எந்த ரீதியில் மதிப்பிடுவது?

இதுபோன்ற இன நல்லிணக்கப் பார்வைகள், முழுக்க முழுக்க ஒரு கடந்த கால ஐரோப்பிய வகைப்பட்ட சிந்தனை. காலங்காலமாக கறுப்பின மக்களை அவர்களது பண்பாட்டுக் கூறுகளை, நிலங்களை அழித்தொழித்து விட்டு அதற்கு நியாயம் கற்பிக்கும் விதமாக ஒரு சில அறிவு சீவிகளை முன்னிறுத்தி மேலோட்டமான குற்றவுணர்வு சார்ந்த கலைப் படைப்புகளை முன் வைக்கும் மேற்குலக ஆதிக்க நாடுகளின் அழகியல் எச்சம். இந்தப் பார்வை கொண்ட பல மேற்குலகப் படங்களைக் காணலாம். அந்தப் படங்களை உலகின் உன்னதமான படங்கள் என்று பாராட்டி, யாரெல்லாம் அழித்தொழிப்பு செய்தார்களோ, அந்த மகானுபாவர்களைக் கொண்டே உலகின் உயர் விருதுகளை வழங்குவார்கள்.

இத்தருணத்தில்To Kill a Mockingbird என்னும் படம் குறித்து இங்கு நினைவு கூறலாம். இது அமெரிக்க வெள்ளைப் பெண்மணியான ஹார்பர்லீ எழுதிய நாவல். புலிட்சர் விருது பெற்றது. இதை ராபர்ட் முல்லிகன் என்னும் வெள்ளையின அமெரிக்கர் திரைப்படமாக எடுத்துள்ளார். இதன் கதையம்சத்தைப் பாருங்கள்:

அட்டிகஸ் பிஞ்ச் என்னும் வெள்ளையின அமெரிக்க வழக்கறிஞர், வெள்ளையினப் பெண்ணை வன்கலவி செய்ததாக பொய்க் குற்ற வழக்கில் மாட்டிக் கொண்ட கறுப்பின மனிதனை நிரபராதியென விடுவிக்கப்படும் போராட்டமே இந்நாவல். 1960ல் இந்நாவல் வெளிவந்தபோது கறுப்பினத்தவர் மீதான வெள்ளையினத்தவர்களின் ஆதிக்கம் உச்சத்திலிருந்தது. அந்த நிறவெறியையும் அதிகாரத்திமிரையும் தட்டிக் கேட்டதால் இந்நாவல் கறுப்பினத்தவருடையே மிகுந்த வரவேற்புப் பெற்றது. (பாடும் பறவையின் மௌனம் என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்திருக்கிறது. மொழியாக்கம்: சித்தார்த்தன் சுந்தரம்)

Mockingbird என்பது கறுப்பினத்தின் குறியீடு. யாரையும் தொந்தரவு செய்யாமல் தானாகப் பாடித் திரியும் அந்தப் பறவைகளை வேட்டையாடக் கூடாது என்று தன் குழந்தைகளிடம் பிஞ்ச் சொல்வது போன்ற காட்சிகள் கலையாகவும், இனத்தின் உணர்ச்சிக் கூறுகளாகவும் படத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது நெஞ்சை நெகிழ வைக்கும்.

சிறு உண்மைச் சம்பவமும், கற்பனையும் கலந்தோடும் இப்புதினத்தில் கறுப்பின மக்கள் மீது தொடுக்கப்பட்ட இனவாதம் மேலோட்டமாகவே கட்டமைக்கப்பட்டிருக்கும். காலங்காலமாக கறுப்பின மக்கள் மீது தொடுக்கப்பட்ட இன அழித்தொழிப்பை முன்வைத்து, ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் என்ற வெள்ளையினத்தவர் எழுதிய uncle Tom’s cabin என்னும் புதினம்தான் முதன் முதலாக இப்படியான ஒரு வகையை (Genre) தோற்றுவித்தது என்று சொல்லலாம். (இது நவீன கலை இலக்கியம் சார்ந்த தற்கால தமிழ்ச் சூழலில் பெரிதும் பேசப்படும் தலித் இலக்கிய வகைக்கும் பொருந்தும்)

இந்த இடத்தில், ரோமன் போலான்ஸ்கியின் The Pianist, மற்றும் ஸ்பீல் பெர்க்கின் Schindler's List போன்ற திரைப்படங்களை இப்படியான பார்வையில் பார்க்க வேண்டுமா என்ற கேள்வியை முன் வைத்தால் அது அபத்தமானது. ஏனெனில், அவை தங்களது யூத இனத்தை அழித்தொழிக்கச் செயல்பட்ட நாஜிகளின் கொடூரமான செயல்களை, பாதிக்கப்பட்ட யூத இனப் படைப்பாளிகள் முன் வைத்த வேறு ஒரு வகை (Genre) திரைப்படப் பார்வைகள்.

With-You-Withut-Youதற்காலங்களில் கறுப்பினப் படைப்பாளிகளே தங்களது பார்வைகளை முன்வைத்து திரைப் படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாம் உலகநாடுகளின் பார்வையாளன் தற்கால பின்காலனிய அரசியல் சூழலில், இப்படியெல்லாம்தான் ஒரு கலைப்படைப்பை அணுக வேண்டியிருக்கிறது. விதானகேவின் படம் எந்தக் காலச்சூழலில் நடக்கிறதென்ற காலப் பிரக்ஞையேயின்றி முன்வைக்கப்படுகிறது.

ஒரு படைப்பை ‘இரண்டாம் உலகப் போருக்கு முந்திய கதைக்களமா? பிந்திய கதைக்களமா? என்று காலப் பின்னணியில்தான் அணுக வேண்டும் என்கிறது உலகளாவிய விமர்சனக் கோட்பாடு.

இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய சூழலில் நடக்கும் இத்தாலிய இயக்குனரான விக்டோரியா டிசிகாவின் Bicycle thieves படம் போருக்குப் பிந்திய கடுமையான வறுமை, பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, மனிதம் அழிந்துபோன துயரம், இந்நெருக்கடிகளில் வாழ்வியலுக்காகப் போராடும் மனிதஅவலம் போன்றவைகளை முன்வைத்துப் பேசும். வயிற்றுப் பாட்டுக்காக வைத்திருந்த தனது திருடு போன சைக்கிளைத் தேடி அலையும் அவலத்தை, அற்புதமான யதார்த்தப் பார்வை கொண்டகலையாக சொல்லியிருப்பார் இயக்குனர். இதை காலம் பற்றிய ப்ரக்ஞையின்றிச் சொல்லியிருந்திருந்தால் மிகமிகச் சாதாரணமான படைப்பாகத்தான் போயிருக்கும். அதனுடைய பலமே காலப்பிரக்ஞைதான்.

சரி. நவீன தமிழ் அறிவுசீவிகள் சொல்வதுபோல இந்தப் படத்திலுள்ள அரசியலை விடுத்து ‘கலை’யை மட்டுமே பார்க்கலாம்:

முதலில் கதாபாத்திரங்களின் கட்டமைப்பே மிகப்பெரும் முரண்பாடாக இருக்கிறது. போரிலிருந்து விடுபட்டு எளிய வாழ்க்கை வாழ விரும்பும் நாயகன் தேர்ந்தெடுப்பது மிக மோசமான நகை அடகு வியாபாரத்தை. (மூலக் கதையில் இருப்பது போல எடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மேலும் மூலக்கதையை மாற்றியும் அமைத்திருக்கிறார்தானே....) அதில் ஏதாவது எளிய மக்களுக்கு உதவி செய்கிறாரா என்றால் நிச்சயமாக இல்லை. இரக்க மனநிலையில் உள்ள தனது மனைவியைக் கூட ‘எப்போதும் அடகு வைக்கப்படும் பொருளின் உண்மையான மதிப்பில் கால் பங்கை மட்டும் சொல், ஒருநாள் தாமதமானாலும் ஒருமாதத்திற்குரிய வட்டியை வாங்கு’ என்று மாற்றுகிறான். இதுவும் ஒருவித ராணுவ மனநிலைதான்.

இரக்க உணர்வுகள் ஏதும் இல்லாத ஒருவன் சட்டென இரக்கப்பட்டு தமிழ்ப்பெண்ணுக்கு வாழ்வு தருவதற்கான வலுவான காட்சியமைப்புகள் இல்லை. மேலும், அவன் தொடர்ந்து WWF என்கிற மிகமிகக் கொடூரமான மல்யுத்தப் போட்டியைப் படம் முழுக்க ரசித்துக் கொண்டேயிருக்கிறான். ராணுவ உளவியலின் நீட்சி அது. சட்டென காட்சிகள் மாறி புத்தருக்கு முன் தீபம் ஏற்றி மனமுருக வணங்குகிறான்.

அவளுக்கு வீட்டில் வயதான முதியவருக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி நடக்கிறது. அதிலிருந்து தப்பித்து வெளியே வந்து ஒரு சிங்களவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். எனில் அங்கு கட்டப்படுவது, ஒரு சிங்களவரோடு கூடி வாழ முடியும் ஆனால், தமிழரோடு வாழ முடியாது என்பதற்கான கருத்தியலா? ‘முதியவரோடு திருமணம்’ என்கிற கருத்தியலை விடுத்து அந்த சிங்களவர் மேல் அன்பு ஏற்பட்டு திருமணம் செய்து கொள்வதாக காட்சிகள் அமைத்தால் ‘கலையின் புனிதத்துவம்’ கெட்டுவிடுமோ?

தமிழச்சியைத் திருமணம் செய்த பிறகு முரண்பாடு ஏற்பட்ட உடன், தனது துப்பாக்கியை எடுத்து மறைத்து வைத்துவிடுகிறான். காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் ஒருவனால், என்னைக் கொல்வதுதான் உன் பிரச்னைக்குத் தீர்வென்றால் சுட்டுத் தள்ளு என்று துப்பாக்கியை நீட்டியிருக்க வேண்டிய கவித்துவமான கதைப்போக்கு, கள்ளத்தனம் கொண்டு எடுத்து மறைத்து வைக்கச் சொல்கிறது. எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும் தமிழர்களிடம் உஷாராகத்தான் இருக்க வேண்டும் என்கிற கருத்தைச் சொல்கிறது இக்காட்சி. இவை எல்லாமே அக்காட்சிகள் உணர்த்தும் கருதியல்கள்தான்.

தமிழச்சி சரளமாக சிங்களத்தில் உரையாடுகிறாள். ஆனால் சிங்களன் தமிழ் பேசுவதில்லை. இதுதான் பேரினவாதம். என் மொழிதான் நீ பேசப்பட வேண்டும் என்னும் Reconciliation. ‘அவன் அவள் மீது எல்லையற்ற காதல் கொண்டு தமிழ்மொழி கற்றுக் கொள்வது போல ஒரு காட்சி வைக்க முடியாதா? அப்படி வைத்தால் இக்கதையின் ‘கலைப் புனிதத்திற்கு பங்கம் நேர்ந்துவிடுமா? ( தமிழுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் விதானகேவுக்கு தனது மொழியான சிங்களத்தின் சக மொழியான தமிழ் மொழி எழுதத் தெரியாதது மட்டுமல்ல பேசவும் தெரியாது என்பது எவ்வளவு பெரிய நகை முரண் என்பதையும் இங்கு பொருத்தலாம்.)

அவள் சர்ச்சுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது, ‘உன் கடவுள் உனக்கு என்ன தந்தார்?’ என்று கேட்கிறான் அவன். ‘நான்தான் பாதுகாப்புக் கொடுத்தேன்’ என்று சொல்லிவிட்டுப் புத்தரை வணங்கச் செல்கிறான். உனது கடவுள் பயனற்றவர்.எனது கடவுளை ஏற்றுக்கொள் என்றாகிறது அக்காட்சி.

அதேபோல, தமிழ்பெண்ணின் கதாபாத்திரமும் பெரும் முரண்பாடுடனேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. போரின்கொடூரமான தாக்குதலினால் சிங்கள இனத்தின் மீதான ஓயாத மன வெறுப்பாலும், கடும் வறுமையாலும் உழல்பவள். டக்கென்று ஒரு சிங்கள இனத்தவரை திருமணம் செய்து கொள்ள மனம் ஒப்பாது. அடுத்த நொடியே தனது உடலைக் கொடுத்துவிடும் அதிசயமும் நிகழாது. (அந்த உடலுறவுக் காட்சி வெளிப்படையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழின் மூன்றாந்தர மசாலா இயக்குனர்கள் கூட ‘கலை’யாக இக் காட்சியை வடிவமைத்திருப்பார்கள்) மேலும், தேசிய இன அரசியல் பேசும் அப்பெண்ணை ‘விஜய் படங்களின் ரசிகையாக’ மாற்றியிருப்பது பெரும் Irony யாக இருக்கிறது.

இந்தச் சூழலிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு, தமிழ்நாட்டுக்குப் போவதுதான் ஒரே தீர்வாக முன் வைக்கிறார் விதானகே. அப்படியானால், ஈழத் தமிழர்களின் நலனுக்காக முன் நிற்கும் நாடு என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். ஈழத் தமிழர் நலன் சார்ந்த இந்திய வெகுஜன அரசியலும் நுண்ணரசியலும், தமிழ் நாட்டு வெகுஜன அரசியலும் நுண்ணரசியலும் எல்லோரும் அறிந்ததே. சமீபத்தில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் ஈழப் பெண்ணிற்கு ‘அகதி’ என்ற காரணத்துக்காக மருத்துவப் படிப்பு மறுக்கப்பட்ட அலட்சியம் தோய்ந்த பூமிக்கு வரத்தான் அவள் ஆசைப்படுகிறாள். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு NRI இட ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களை அள்ளிக் கொடுக்கும் அரசு, தனது மொழி பேசும் அகதியை அலட்சியப்படுத்தும் புண்ணியபூமி தான் அவளுக்கு ஆறுதல் கொடுக்குமென எண்ணுகிறாள். ஏன் கனடா, லண்டன் போன்ற நாடுகளுக்குப் போவது பற்றி அவள் கனவு காணவில்லை?

தமிழ்நாட்டுக்கு வர முடிவெடுத்தவுடன் தனது அடகுக் கடையை விற்றுவிட நினைக்கிறான் அவன். அதை வாங்குபவர் மிடுக்கும் செல்வந்தத் தன்மையும் கொண்ட இஸ்லாமியர்!

இலங்கையில் இன்று இஸ்லாமியர்களின் தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் வர்த்தக ரீதியாக பலமாக மாறிக் கொண்டிருக்கிறது. அதன் குறியீடாக இப்படியான ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார். அந்தக் கடையை வேறு ஒரு சிங்களவர் வாங்கிக் கொள்கிறார் என்று ஒரு காட்சி அமைத்தால் கதையின் ஓட்டமோ, கதையின் தன்மையோ எங்கும் மாறுபடப் போவதில்லை. அந்த காட்சியைக் காட்டாவிட்டால் கூட ஒன்றும் இல்லை. வலிந்து திணிக்கப்பட்ட இஸ்லாமியப் பாத்திரம் அது. இதன் அரசியல் என்ன?

August sun என்கிற தனது படத்தில் விடுதலைப்புலிகளால் இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவதை விமர்சனமாக முன் வைத்திருக்கும் விதானகே . தற்போது சிங்களப் பேரினவாதிகளால் தாக்குதலுக்குள்ளாகும் இஸ்லாமியர்களுக்காக எங்குமே குரல் எழுப்பவில்லை என்பதும் நினைவு கொள்ளத்தக்கது.

இப்படிப் பல்வேறு பார்வைகளை இப்படத்தின் மீது வைத்து விமர்சனங்களை முன் வைக்கும் அதேசமயத்தில், அவரது இன்னொரு நிலையை நுட்பமாகப் பார்க்க வேண்டியதிருக்கிறது.

படம் முழுக்க காட்சிகள் ஒரு பறவைப் பார்வையிலேயே மேலிருந்து பார்ப்பது போல, தள்ளி நின்று பார்ப்பது போல கட்டமைத்திருக்கிறார். இதுதான் அவருக்குள்ளிருக்கும் கலைஞனின் கையறு மனநிலை என்று கொள்ளலாம். ‘தன்னால் என்ன செய்ய முடியும்? சக பயணியாகப் பகிர்ந்து கொள்வதைத் தவிர’ என்னும் மனநிலை.ஒரு பாசிச நிலப்பரப்பில் அவருக்குள்ள செயல்பாட்டு சுதந்திரம், இதற்குமேல் யோசிக்க வைக்காமல் முடமாக்கி வைத்திருக்கிறது. இலங்கை கவிஞர்கள் மஞ்சுள வெடிவர்த்தன, மகேஷ் முனசிங்க மற்றும் அரசியல் விமர்சகர்களான சுனந்த தேசப்ரிய, பாஷண அபேவர்த்தன போன்றோர் இலங்கையிலிருந்து வெளியே உள்ளதால் அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமாக இருக்கின்றன. ஆகவே இந்தப் பார்வையையும் கணக்கில் கொண்டு அவரை அணுகவேண்டியிருக்கிறது.

அதனால்தான் ஈழப் படைப்பாளிகள் எதிரணியிலிருந்து வரும் மாற்றுக் குரல் என்கிற ரீதியில் அவரை ஆதரிக்கின்றனர். ஆனால். அந்த மாற்றுக் குரல் மேற்குலக திரைப்பட கலைத் தந்திரோபாயங்களுக்கு பலியாகிவிட்டது என்பதுதான் நான் இங்கு வைக்கும் விமர்சனம்.
ஆனாலும் இறுதிக் காட்சியில் அவருக்குள்ளிருக்கும் தார்மீகமான போராளி விழித்துக் கொள்கிறான். தன் இனத்தை அழித்தொழித்தவர்களுடன் இணைந்து அல்லது சார்ந்து வாழவே முடியாது என்பதையும் இலங்கை அரசு பிரச்சாரம் செய்யும் நல்லிணக்கம் குறித்த பார்வைகளையும் கேள்விக்குள்ளாக்கி தமிழ்ப்பெண் செல்வியை தற்கொலை செய்ய வைக்கிறார்.

இது ஒரு கையறு நிலை கொண்ட கலைஞனின் ஆற்றாமை.விதானகேவின் அலை வரிசையை நாம் புரிந்துகொள்ளலாம். இந்த ரீதியில் அவரைப் பாராட்டலாம்.

ஆனால், சிங்களரோடு சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் இல்லையெனில் சாவதைத் தவிர வேறு வழியில்லையென்ற விமர்சனம் இதற்குள் கட்டமைகிறது.

அவர் இன்னும் சற்று விசாலமாக யோசித்திருந்தால், தமிழ்ப் பெண்ணைச் சாகடிக்காது, அவனிடமிருந்து பிரிந்து, தனது நிலத்தில் சுதந்திரமாக அவள் விரும்பும் ‘விஜய் பாடல்களுடன்’ கொண்டாட்டமாக வாழ வைத்திருக்கலாம்.

இறுதியில் சோக முடிவு தருவதுதான் ஒரு கவித்துவ சோகத்தையோ, காவியத் தன்மையையோ ஏற்படுத்தும் என்று அவர் நினைத்தாரோ என்னவோ.. அல்லது அரசியல் காரணங்கள் பின்னிப் பிணைந்திருக்கலாம். இந்தக் காவிய அழகியல் பார்வை, ‘அவளைத் தனிமையில் வாழ விடுவதிலும் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் மூன்றாம் உலக நாடுகளின் காவிய அழகியலாய் பரிணமித்திருக்கும்.

இப்படி எந்தவிதமான அரசியல் இடையீடுமற்று சுயசிந்தனையாக, கலையாக மாத்திரமே இப்படத்தை அவர் படைத்திருப்பதாகச் சொன்னால், ‘தொடர்ச்சியான மேற்குலகப் படங்கள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள கலைஞர்களின் சிந்தனைப் போக்கை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதற்கு பிரசன்னவிதானகே போன்ற கலைஞர்கள் ஒரு சாட்சி.

- கௌதம சித்தார்த்தன்

Pin It