காட்சி ஊடகங்களில் இன்றளவும் மக்களிடையே குறிப்பாக குழந்தைகளிடையே அதிகம் செல்வாக்குப் பெற்றிருப்பது திரைப்பட ஊடகமாகும். திரைப்படம் நல்லதொரு பொழுதுபோக்கு பிரச்சார சாதனமாகத் தொன்றுதொட்டு விளங்கிவருகின்றது. தமிழ்நாட்டு அரசியலில் திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்கும் நீடித்த நிலைத்த ஆட்சிக்கும் அடித்தளமாகத் திரைப்படங்கள் இருந்துவருவது கண்கூடு. பக்தி மற்றும் புராணங்களில் ஊறித்திளைத்துக் கொண்டிருந்த தமிழ்த் திரைப்படத்தின் ஒற்றை ஆதிக்கச் சிந்தனையினைச் சீர்திருத்தி பன்முகத் தன்மைகொண்ட புதிய பரிமாணங்களையும் பாதையையும் காட்டி வெகுமக்கள் ஊடகமாக அதனை மாற்றியமைத்ததில் காந்திய, பொதுவுடைமை, சமூக சீர்திருத்தவாதிகளுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் பெரும்பங்குண்டு.

அதேபோல, மக்களிடையே நல்ல பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், விழுமிய பண்பாட்டுக்கூறுகள், உயரிய வாழ்வியல் செய்திகள் போன்றவற்றை வளர்த்தெடுக்கும் புதிய வார்ப்புகளாகவும் தமிழ்த் திரைப்படங்கள் உள்ளன. குடும்ப உறவுகளின் மீதான மதிப்பும் மரியாதையும் வளரும் இளம்தலைமுறையினருக்கு இயல்பாக வளர இவை வடிகால் அமைத்துத்தந்தன. தாய், தந்தையின்மேல் பாசமும் பற்றும் போற்றிவளர்த்ததோடு மட்டுமல்லாமல் வயதில் மூத்தவர்களையும் பெரியவர்களையும் மதித்தொழுகும் பாங்கும் குறைவின்றிக் காணப்பட்டன. இவற்றை இப்போதிருக்கும் மூத்த, பெற்றோர் தலைமுறையினரிடத்து நன்கு காணவியலும்.

பிற்காலத்தில் திரைப்பட தயாரிப்பு முதலாளிகளிடம் ஏற்பட்ட சிந்தனை மாற்றம், தொழில் போட்டி, வியாபார நோக்கு மற்றும் போக்கு, வன்முறை, கவர்ச்சி ஆகியவற்றிற்கு அதீத முக்கியத்துவம் அளித்தமை முதலிய காரணங்களால் இந்திய, தமிழ்த் திரைப்படங்கள் தடம்புரளத் தொடங்கிவிட்டன. இதன்விளைவாக சமுதாயத்தில் பல்வேறு கலாச்சார சீரழிவுகளும் சமூக ஒழுங்கின்மையும் தீய நெறிகளும் தொடர்ந்து மலிந்திடவும் அதிவேகமாகப் பெருகிடவும் வழிவகுத்தது எனலாம். தவிர, உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளின் காரணமாக கூட்டுக்குடும்ப தமிழ்ச்சமூகங்களில் உருவெடுத்த சிறு மற்றும் தனிக் குடும்பநெறிகள், நுகர்வுக் கலாச்சாரத் தன்மைகள், ஒப்புக்கொள்ளப்பட்ட மேற்கத்திய பண்பாட்டு இழிச்செயல்கள், குழும நாகரிக வளர்ச்சி ஆகிய காரணிகளால் மனித வாழ்வியல் விழுமியங்கள் மற்றும் மதிப்புகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. மேலும், அவை கேலிப்பொருள்களாக மாறிப்போயின.

அதேசமயம், ஒப்பற்ற மனித அறிவும் உணர்வும் மழுங்கடிக்கப்பட்டு சக உயிரிகளின் மீதான கருணை கிஞ்சித்துமில்லாமல் நவீன மனித சமுதாயத்தினரிடம் அனைத்தும் கேளிக்கைக்குரியதேயன்றி வேறில்லை என்கிற பிற்போக்குச் சிந்தனை பரவத் தொடங்கிவிட்டது. இதற்கு மேன்மேலும் உரமூட்டும் விதமாக திரைப்படக் காட்சிகள் பெருவணிகத்தை ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டன. எனினும், நல்ல திரைப்படங்கள் நல்ல செய்திகளைச் சமுதாயத்திற்கு சொல்லாமலில்லை. களைகள் மண்டிப்போன காட்டில் இவை குறிஞ்சிச் செடிகளாக உள்ளன. தவிர, இத்தகைய புதுமுயற்சிகளுக்கு இச்சமூகம் என்றென்றும் போதிய ஆக்கமும் ஊக்கமும் தருவது சமுதாயப்பணியாகக் கருதப்படுகிறது. திரைப்பட வியாபாரிகள் நல்லபடம், நச்சுப்படம் என்று பகுத்துப் பிரித்தறிவதைவிட வெற்றிப்படம், தோல்விப்படம் என்பதிலேயே குறியாகக் காணப்படுகின்றனர். அது அவர்களது குற்றமன்று.

ஏனெனில், இன்று பட்ஜெட் படமெடுக்கக்கூட தயாரிப்பாளர்களுக்குப் பலகோடிகள் தேவைப்படுகின்றன. வென்றால் அதிபதி. இல்லையேல் அதோகதி நிலை. இந்த அவல நிலைகள் மாற்றப்பட வேண்டும். அதற்கு நல்ல கருத்துள்ள திரைப்படங்கள் கொண்டாடப்பட்டு ஒரு மசாலா படத்திற்கு ஈடாக வசூலை வாரிக்குவிப்பது அவசர அவசியத் தேவையாய் இருக்கின்றது. குறுகிய திரைக்கண்ணோட்டம் பொதுமக்களிடம் விரிவடைதல் நல்லது. இதற்கு எஞ்சிய ஊடகங்கள் இணை அல்லது துணைவினையாற்றுதல் மிகுந்த நன்மைப் பயக்கும்.

அண்மைக்காலத் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் அவற்றின் முக்கிய கதைமாந்தர்கள் தமிழ்க்குடும்பங்களை வெகுவாக சீரழித்துக்கொண்டிருக்கும் புகை மற்றும் குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் முகமாக தொடர்ந்து நடித்து வருவதென்பது ரசிகப் பெருமக்களுக்குச் சகிக்க முடியாததாக உள்ளது. கதையில்லாமல்கூட சில திரைப்படங்கள் வெளிவந்து சக்கைப்போடு போடும் அதேவேளையில், குறிப்பாக குடிப்பழக்கக் காட்சியில்லாதத் திரைப்படங்கள் இங்கு அரிதினும் மிக அரிதாகக் காணப்படுகின்றன.

மதுவும் மதுசார்ந்த கேடுமிக்க பழக்கவழக்கங்களும் ஆறாம்திணையாக வலிந்து புனையப்படும் காரணத்தால் ஐந்திணை நல்லொழுக்கத்துடன் புற, அகம் சார்ந்து பெருவாழ்வு வாழ்ந்த ஓங்கியுயர்ந்த மூத்த தமிழ்க்குடிகளின் நவீன தலைமுறைகள் ஒழுக்கமும் ஒழுங்கும் கெட்டு பட்டப்பகலிலேயே தள்ளாட்டம் போடுவதற்கு வலுவான திரைச்சாதனத்தை வீணாகப் பயன்படுத்துதல் சரியல்ல. இது நல்லதோர் வீணையினை நலம்கெட வைப்பதற்கு ஒப்பாகும்.

தமிழ்த்திரைப்பட உலகம் அண்மையில்தான் புத்தம்புது ஆக்கங்களுடனும் உலகத்தரத்திற்கு ஈடான படைப்புச் செயல்திறனுடனும் கோலோச்சிக் காணப்படும் இச்சூழலில் இத்தகைய விரும்பத்தகாத பார்வையாளர்களைப் பெரும்சீரழிவிற்கு உட்படுத்தும் மது உள்ளிட்ட காட்சிகளின் தேவைகள் குறித்து ஆழ்ந்த மறுபரிசீலனை செய்தல் நல்லது. படைப்பு மற்றும் படைப்பாளிகள் சுதந்திரம் என்று முழங்கிக் கொண்டு எண்ணம், சொல், செயல்கள் மூலமாக தனிநபர் ஒழுக்கம் சார்ந்த கழிப்பறை, படுக்கையறை உள்ளிட்ட மறைவுக்காட்சிகளை யாதொரு உள்ளார்ந்த சமூகத்தணிக்கைக்கும் உட்படுத்தாமல் பிரமாண்டத்தோடு வெட்டவெளிச்சத்துடன் வெளிக்காட்ட நினைப்பதென்பது ஆபத்தானது. அபாயகரமானதும்கூட.

ஒரு நல்ல சமூகம் உருவாகவும் மேம்படவும் நல்ல கலை, இலக்கியப் படைப்புகள் இன்றியமையாதவை. சமூக அக்கறையும் தொலைநோக்குப் பார்வையும் ஒரு நல்ல படைப்பாளியின் இதயத்துடிப்போடு இயைந்த தலைசிறந்த அடிப்படை அருங்குணங்களாகும். இவையில்லாதோர் மனச்சாட்சியை அடகுவைத்திட்ட வெறும் நச்சுக்குப்பை கலை, இலக்கிய, எழுத்து வியாபாரிகளாகவே இங்கு மதிப்பிடப்படுவர் என்பது திண்ணம்.

கட்டுப்பாடுகள் மற்றும் கடப்பாடுகள் ஏதுமின்றி விருப்பம்போல் வாழ முயல்வதும் நினைப்பதும் உழைப்பால் உலகை உயர்த்திவரும் ஏனைய விலங்குகளிலிருந்து மாறுபட்டு விளங்கும் உயிரிகளில் மேம்பட்ட மனித சமூகத்தின் திறந்தவெளிக் காட்டுமிராண்டி மீள்வாழ்க்கையென்பது நடப்பியலுக்கு முற்றிலும் முரணானது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நிரம்பிய கூட்டுச் சமூக வாழ்க்கைக்கும் மகிழ்ச்சிக்கும் நீடித்த அமைதிக்கும் தனிமனிதன், சமூகம் சார்ந்த தணிக்கைமுறைகளும் அறக்கட்டுப்பாடுகளும் அவசியம். அவ்வப்போது நெறிபிறழும் மனித சமூகத்தை நல்வழிப்படுத்தவே சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஏனெனில், காலந்தோறும் மாறிவரும் மனித அறிவு வளர்ச்சியில் நிகழும் நெறிபிறழ் நடத்தை மாற்றங்களைத் தடுக்கவோ, ஒடுக்கவோ, அழிக்கவோ இயலாது. சீர்செய்து சரிபடுத்த மட்டுமே முடியும். இத்தகு அரும்பெரும் உயர்பணியினைச் செவ்வனே செய்திட நீதிமன்றங்கள், காவல்துறைகள், தணிக்கை அமைப்புகள் முதலியன நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய தன்னாட்சியின்கீழ் செயல்படும் மாநிலந்தழுவிய திரைப்பட தணிக்கை அமைப்புகள் இந்திய இறையாண்மைக்கும் குடியாட்சிக்கும் ஊறு உண்டாகாதவாறு பழையபடி இரும்புக்கரம் கொண்டு அதீத வன்முறை, அளவுக்கு மீறிய கவர்ச்சி ஆபாசக் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், தகாத செய்கைகள், கண்ணியமற்ற பேச்சுகள் மற்றும் செயல்கள் நிரம்பிவழியும் புற்றீசல் நச்சுத்திரைக்கலையினை ஒடுக்கிப் புத்துயிரூட்ட வேண்டிய நிர்பந்தம் தற்போது அதிகரித்திருப்பதை மறுப்பதற்கில்லை. தொலைக்காட்சித் துறைக்கும் இதை விரிவுபடுத்தவேண்டிய தேவையும் இங்கு மிகுந்துள்ளதை இத்தருணத்தில் எடுத்துக்காட்டாமல் இருக்கவியலாது.

அதுபோல், மாநிலம்விட்டு மாநிலம்தாவி தணிக்கைச் சான்றிதழைக் குறுக்குவழியில் பெற்றுத் திரையிடும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடுதல் நன்மை உண்டாகும் என நம்பலாம். ஏனெனில், இந்தியப் பண்பாடு பல்வகைப்பட்ட வேற்றுமைகளை உள்ளடக்கியது. வேற்றுமையில் ஒற்றுமையென்பதைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதென்பது புறந்தள்ளவேண்டிய ஒன்று.

அதுபோல், தனிமனித கருத்துச் சுதந்திரத்தினைப் போற்றிப் பேணிக்காப்பதென்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. அதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. அதேவேளையில் அடுத்தவர் சுதந்திரத்தையும் கட்டிக்காத்தல் என்பது ஒவ்வொருவரின் பெரும்பொறுப்பாக இருக்கின்றது. நல்ல கருத்தை வலிந்து புகட்டுதல் ஒன்றும் குற்றமாகாது. நச்சுக் கருத்துத் திணிப்பை ஏழ்மையும் வறுமையும் அறியாமையும் மலிந்துக்கிடக்கும் இச்சமூகத்திற்கு அதிகம் தித்திப்பைக் கலந்து திகட்டத் திகட்டத் தின்னச் செய்வதைச் சமுதாயப் பிரக்ஞைக் கொண்ட எந்தவொரு நல்ல குடிமகனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தேசம் முழுவதும் பற்றிப்படர்ந்து வரும் இத்தகைய சமுதாய அழுக்கையும் குப்பைமேட்டையும் சுத்தப்படுத்திச் சரிசெய்திட மேற்கொள்ளும் இவ் உழவாரப் பணிக்குத் திரைத்துறை சார்ந்த அனைவருடனும் பொதுமக்களை உள்ளடக்கிய அறிவார்ந்த சமுதாயத்தினரும் ஒன்றித்து ஒருங்கிணைந்து செயலாற்றுதல் சாலச்சிறந்தது. திரைப்படம் என்பது வெறுமனே பொழுதைப் போக்கி மனத்தைக் கெடுத்துக்கொள்ளும் அற்ப அறிவியல் சாதனமன்று. நல்ல பொழுதைப் பயனுள்ளதாக்கிக்கொள்ளவும் பண்பாட்டை வளர்த்துக்கொள்ளவும் இருள் அப்பிக்கிடக்கும் உள்ளத்தைப் பண்படுத்தவல்ல அதிஅற்புத வெகுமக்கள் ஊடகமென்பது நிச்சயம். அப்போதுதான் நம் மானம் நம் கைகளில் மிளிர்ந்து உலகிற்கு மற்றுமொருமுறை வழிகாட்டும்.

-    மணி.கணேசன், மன்னார்குடி-614001

Pin It