அதிகாரத்தின் கொடிய நிழலால் மறைக்கப்பட்டிருந்த தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகள் மீது ஆய்வுக் கட்டுரைகளால் வெளிச்சத்தைப் பாய்ச்சியவர்களில் தொ.பரமசிவன் முக்கியமானவர். தமிழர்களின் தொன்மங்கள், வாழ்வியல் கூறுகள், சமூக மரபுகள், நாட்டார் தெய்வங்கள் குறித்தான இவரது கருத்துக்கள் ஆய்வுலகில் பெரும் கவனத்தை ஈர்த்தவை. தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். சுயமரியாதை உணர்வு மிக்கவர். யாருடைய தயவையோ, எந்த விருதையோ யோசியாது, தனது கருத்துக்களை, விமர்சனங்களை துணிவுடன் எடுத்து வைப்பவர். திருநெல்வேலியில் உள்ள பேராசிரியரது வீட்டில் ஒரு மதிய வேளையில் தோழர்கள் லெனா.குமார், பிரிட்டோ, கீற்று நந்தன் மற்றும் முத்துக்குட்டி ஆகியோர் கீற்று இணையதளத்திற்காக‌ எடுத்த நேர்காணல் இது. எதற்கும் விடையளிக்க வல்ல ஒரு ஆசிரியரிடம் மாணவர்கள் சிலர், தங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்து கொண்டதாகவே உரையாடலின் பெரும்பகுதி அமைந்தது.

உரையாடலிலிருந்து...

உங்கள் குடும்பப் பின்னணி பற்றி சொல்லுங்கள்?

tho_paramasivan_380நான் இந்த ஊரில் (நெல்லையில்) பிறந்து வளர்ந்தவன். பத்து தலைமுறையாக இந்த ஊரைச் சேர்ந்தவன். ரொம்ப நடுத்தரமான குடும்பத்திலே பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்தவன். இந்த ஊரினுடைய கல்விப் பிற்புலம்தான் என்னை வெவ்வேறு வகையாகச் சிந்திக்கத் தூண்டியது. என் வீட்டுக்குப் பக்கத்திலேயே மாவட்ட மைய நூலகம், மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அமைந்திருந்தன. இந்தப் பின்னணியில் இருந்து வந்தது தான் என்னுடைய பலம் என்று நான் கருதுகிறேன். மற்றபடி எனக்கு வாசிப்புக்குரிய, உலகத்துக்குரிய குடும்பப் பின்னணி என்று எதுவும் கிடையாது. நான் முதல் தலைமுறைப் பட்டதாரி.

ஆனால் வாசிப்புத் தொடங்குகிறபோதே, அன்றைக்கு இருந்த பண்ணையார்த்தனமான காங்கிரஸ்காரர்களைப் பார்த்ததால் ஒரு காங்கிரஸ் எதிர்ப்புணர்வோடுதான் நாங்கள் வாசிக்க ஆரம்பித்தோம். நான் பத்து வயதிலே முரசொலி வாசிக்கத் தொடங்கிவிட்டேன். நான் மட்டும் அல்ல, சராசரி வாசிப்புத் தன்மை அன்றைக்கு தமிழ்நாட்டிலே நன்றாக இருந்தது. 1962ம் ஆண்டுத் தேர்தலில் அண்ணா தோற்றுப் போனதுக்கு நாங்கள் நான்கு ஐந்து நண்பர்கள், (எட்டாம் வகுப்பு படிக்கும் நண்பர்கள்) பள்ளி மைதானத்திலே நின்று, ‘அண்ணா தோற்றுப் போய்விட்டாரே’ என்று அழுதோம். எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே அந்த அளவுக்கு வாசிப்பு, அரசியல் ஈடுபாடு இருந்தது. காரைக்குடியில் முதுகலை படித்தேன். அங்கு அன்று நல்ல ஆசிரியர் குழாம் இருந்தது.

பின்னர் மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்குப் போனேன். முதலில் புதுமைப்பித்தன் பற்றி ஆய்வு செய்யத்தான் போனேன். என்னுடைய ஆய்வு நெறியாளர் சண்முகம் பிள்ளை, ‘கோயிலைப் பற்றி ஆய்வு செய்’ என்று சொன்னார். அப்போது அழகர் கோயிலை எடுத்துக் கொண்டேன். அந்த ஆய்வு என்னை பல இடங்களுக்கு இழுத்துச் சென்றது. இன்றைக்கும் அந்த ஆய்வும் முறையியலும் மதிக்கக் கூடியவையாக உள்ளன.

குடும்பத்தை ஊரிலே விட்டுவிட்டு, கோவிலைப் பற்றி ஓர் ஆண்டுக் காலம் நான் கள ஆய்வு செய்தேன். தெருவிலே சந்திக்கிற எல்லா மனிதர்களும் வாசிப்பதற்குரிய ஒரு புத்தகம் என்ற ஞானம் அப்போது தான் வந்தது. கிராமங்களிலே இருக்கும் மக்களின் உலகம், புத்தகத்திற்கு வெளியே இருக்கிற உலகம். அதைப் புத்தகத்தால் அளக்கும்போது புதிய புதிய பொருள்கள் கிடைத்தன.

தமிழ்ச் சமூகத்தில் சாதி என்பது ஆரம்பத்திலிருந்து இப்போதிருக்கும் நிலையில்தான் இருக்கிறதா?

ஆதிச் சமூகத்தில் ஒரு இனக்குழு இன்னொரு இனக்குழுவைப் பார்த்து பயப்படும். அதற்குக் காரணம் மந்திர நம்பிக்கை. இந்தக் குழுவைச் சேர்ந்தவன் நம்மை அழித்து விடுவான் என்கிற அச்சத்தின் காரணமாக வேறுபாடுகள் இருந்தன. எனவே வெளியில் திருமணம் செய்வதில்லை. குழுக்களுக்குள்ளே திருமணம் செய்யத் தொடங்கினார்கள். சாதியினுடைய வரையறையையும் அதன் எல்லையையுமே ஆங்கிலத்தில் Endogamy என்று சொல்வார்கள். எது வரைக்கும் நீங்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறீர்களோ அது வரைக்கும் அது ஒரு சாதி. ஒரே பட்டப் பேரினை தரித்திருந்தாலும் கூட ஒரே சாதிக்குள்ளே பல்வேறு வகையான பிரிவுகள் இருக்கின்றன. அந்தந்தப் பிரிவுகள் எல்லாம் அதற்குள்ளே மட்டும் திருமண உறவுகளை வைத்துக் கொள்ளும்.

சாதிகள் எப்படி உருவாகின என்பது குறித்துச் சரியான ஆய்வு தமிழ்நாட்டில் இல்லை.

புராதனப் பொது உடைமைச் சமூகத்தின் எச்சப்பாடுகள் எல்லாம் இன்னும் சாதிக் குழுவில் இருக்கின்றன. சாதிக் குழுவிலே கோவிலை மையமிட்டோ அல்லது பொது நிகழ்ச்சிகளை மையமிட்டோ வரி வசூல் செய்கிறார்கள். இந்த வரி வசூல் என்பது ஏழை பணக்காரன் அனைவருக்கும் சமமாகும். ஐம்பது ரூபாய் வரி என்றால் அதற்கு நூறு ரூபாய் கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மிஞ்சிய ஐம்பது ரூபாயை ‘நன்கொடை என்று ஏற்றுக்கொண்டு வரவு வைத்துக் கொள்வோம், வரி ஐம்பது ரூபாய் என்றுதான் பற்றுச் சீட்டு தருவோம்’ என்பார்கள்.

புராதனப் பொதுவுடைமைச் சமுதாயத்தில் (All are equal) இருந்த சமத்துவம் சாதிக்குள்தான் நிலைநாட்டப்படுகிறது. கணவாழ்வின் எச்சங்கள் சாதியில் இருக்கின்றன. சாதி என்பது ரொம்ப இளகியிருந்தது. அதிலே வர்ணாசிரமம் குறுக்கு வெட்டாய்ப் பாய்ந்தபோது மேல் கீழ் என்று நிலை வருகிறது. தமிழக அரசுகள் வீழ்ந்து, விஜய நகர ஆட்சிக் காலத்தில் மேல் கீழ் நிலை மேலும் வலுப்பெற்றது. அப்பொழுது தான் சாதிப் புராணங்கள் வருகின்றன. எல்லாச் சாதிகளும், ‘நாங்கள் இந்தத் தேவர்களிடம் இருந்து பிறந்தோம், ராஜாவின் குடும்பத்துடன் உறவு கொண்டோம்’ என்று சொல்லி வந்தார்கள். சாதிகள் இடம் பெயர்வது (Caste migration), சாதிப் புராணங்களின் பெருக்கத்திற்கு ஒரு முக்கிய காரணம்.

திருநெல்வேலியில் இருக்கிற ஒரு குறிப்பிட்ட சாதியில் 200 குடும்பங்கள் மதுரைப் பக்கம் போவதாக இருந்தால் அங்கே கேட்பார்கள். “உங்களுடைய சாதியின் சமூகத் தகுதி என்ன?”. (சடங்கியல் தகுதியே (Ritual status) சாதியின் இடத்தைத் தீர்மானித்தது). சாதி நிலையை வரையறுக்கக் கூடிய விஷயமாக புரோகிதப் பார்ப்பனியம்தான் இருந்தது. எடுத்துக்காட்டாகச் சொல்வோமானால் மணமுறிவும் மணவிலக்கும் உடைய சாதி கீழ்சாதி. ஆக ஒடுக்கப்பட்டச் சாதியில் இந்த வழக்கம் இருந்ததாலே, இந்த வழக்கம் இருந்தவன் எல்லாம் கீழ்சாதி. இந்த வழக்கம் இல்லாதவன் மேல் சாதி என்பது மாதிரியான சாதிப் புராணங்கள் நிறைய வந்தன. எல்லாம் சேர்ந்து சாதி ரொம்ப இறுக்கமாக ஆகிவிட்டது.

அது எந்தக் காலகட்டம் என்பதை விளக்க முடியுமா?

ஒரு இராப்பொழுதில் வந்திருக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து விஜயநகர ஆட்சிக் காலத்தில் தான் வைதீகத்திற்கு அதிகமான செல்வாக்கு ஏற்பட்டது. அப்போதுதான் இது நிலைப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு வளர்ந்து கொண்டே வருகிறபோது சாதி தன்னைத்தானே மறுஉற்பத்தி செய்து கொள்கிறது. ஒரே சாதிக்குள்ளேயே ஒரு பிரிவு உயர்ந்தது, ஒரு பிரிவு தாழ்ந்தது என்று உள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு பிரிவில் மாமியார் தாரை வார்த்துக் கொடுப்பதில்லை. மாமனார் தான் தாரை வார்த்துக் கொடுப்ப்பார். அதனால் அந்தப் பிரிவு உயர்ந்த பிரிவு. இது ஒரு ஆணாதிக்க வெளிப்பாடுதான். இப்படிப்பட்ட பிரிவுகள் காரணமாக சாதி வேறுபாடுகள் நிறைய வந்தன.

இராஜ இராஜ சோழனை கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதியிருக்கிறீர்கள் (வாசகர்கள் பார்க்க: ராசராசனை இன்னும் கொண்டாடுவதேன்?) இராஜ இராஜ சோழன் காலத்திலே பார்ப்பனர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா? சாதி ஏற்றத்தாழ்வு இருந்ததா?

இராஜ இராஜ சோழன் ஒரு பேராண்மை என்பதால், அவன் காலத்திலே தேட ஆரம்பிக்கிறோம். ஆனால், பல்லவர் காலத்திலேயே பார்ப்பனர்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள். கிராமம் என்பது கிரமம் என்ற சொல்லிலிருந்து வந்தது. வேதத்தில் குறைந்த பட்சப் படிப்பு (அதாவது நம்முடைய 10வது, 12வது என்று வைத்துக் கொள்வார்கள்) வரைக்கும் படித்ததற்கு கிரமம் என்றும் அவர்களுக்குத் தரப்பட்ட ஊரை, அதாவது வேதம் படித்தவர்கள் வாழும் ஊரை கிராமம் என்று அழைத்தார்கள். இது பல்லவர் காலத்திலே தொடங்கிவிட்டது.

இராஜ இராஜ சோழன் காலத்திலே காஷ்மீரிலிருந்து பார்ப்பனர்கள் அதிகமாக வந்தார்கள். அவர்கள் பெரும்பாலானோர் பிருகச்சரண‌ம் என்று சொல்லக் கூடிய பிரிவாக இருந்தார்கள். பிருகச்சரணம் என்றால் பெரிய அளவில் இடம் பெயர்ந்தவர்கள் என்று அர்த்தம். நான்கு வேதம் படித்தவர்களை 'சதுர்வேதி' என்று அழைத்தார்கள். மூன்று வேதம் படித்தவர்கள் 'திரிவேதி' என்று அழைக்கப்பட்டார்கள். சோழர்கள் காலத்திலே வேதக் கல்வியை அரசாங்கம் ஊக்குவித்தது. வேதமுறைகளைக் கற்றுத் தருவதற்கு அரசாங்கம் ஏராளமான மானியம் கொடுத்தது. ஏனென்றால் கோவில் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பார்ப்பனியம் தன்னை ஆழமாக நிலைநிறுத்திக் கொண்டது.

சோழர் காலத்துக் கல்வெட்டுகளில் கம்மாணச் சுடுகாடு, பறச் சுடுகாடு என்று சுடுகாட்டில் கூடச் சாதி வேறுபாடு இருந்தது. அதற்குச் சான்று கல்வெட்டுகளில் இருக்கிறது. கோவில் கலாச்சாரம் என்று உருவாகும்போது அதில் சாதி வேறுபாடு வருகிறது. ஏனென்றால் கோவிலுக்குள்ளே குறிப்பிட்ட சாதியினரே அனுமதிக்கப்படுகிறார்கள். சாதியின் பல்வேறு பண்புகளில் ஒன்றாக தீண்டாமை உள்ளது. கோவிலுக்குள்ளேயும், வீட்டுகளுக்குள்ளேயும், புறவெளியிலும் மக்களில் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஏழாம் நூற்றாண்டில் பல்லவச் செப்பேடுகளில் பார்ப்பன வீடுகளில் பின்புறம் உள்ள தென்னை மரம், பனை மரங்களிலே ஈழவர் மரம் ஏறக் கூடாது என்ற தடை இருந்தது. ஈழவர் என்பவர் வட மாவட்டங்களில் கள் இறக்கும் சாதியினர் ஆவர்.

பல்லவர்கள் தமிழர்கள்தான் என்று சிலர் கூறுவதைப் பற்றி விளக்கமுடியுமா?

இவர்கள் ஆந்திராவும், கர்நாடகாவும் சந்திக்கிற இடத்திலிருந்து வருகிற சாதியாவார்கள். அவர்கள் காஞ்சிபுரத்தைப் பிடித்து பல்லவ அரசை நிலைநாட்டிக் கொண்டார்கள். சங்க காலத்தில் காஞ்சிபுரம் ஒரு பெரிய ஊர் தான். கச்சிப்பேடு என்று அதற்குப் பெயர். காஞ்சிபுரம் தமிழகத்தின் வடபகுதி என்பதால் சேரர்களும் சோழர்களும் அதைக் கைப்பற்ற முடியவில்லை.

பல்லவர்கள் தமிழர்கள் அல்லர். ஏனென்றால் அவர்களின் தொடக்க கால செப்புப் பட்டயங்கள் - சாருதேவி என்கிற ராணி வெளியிட்ட ‘கீரகடகல்லி’, ‘குணபதேயம்’ (இந்த நிலப்பகுதியெல்லாம் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ளன) பட்டயங்கள் - எல்லாம் வடமொழிப் பட்டயங்களாகவே இருந்தன‌. எனவே இவர்கள் எல்லாம் தமிழ் மன்னர்கள் இல்லை. தமிழ்நாட்டிற்கு வந்து, தங்களைத் தமிழர்களாக ஆக்கிக் கொண்டார்கள்.

களப்பிரர்கள் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. ‘களப்பிரர்கள் காலம் இருண்ட காலம்’ என்று ஒரு பிரிவினரும், ‘பார்ப்பனர் ஆதிக்கத்தை ஒழித்த காலம்; எனவே அது ஒரு பொற்காலம்’ என்று ஒரு பிரிவினரும் கூறுகிறார்கள்? இதைப்பற்றி..?

களப்பிரர்களும் தமிழ் மன்னர்கள் அல்லர். இவர்களும் தமிழ்நாட்டிற்கு வந்து, தமிழர்களாக மாறிப் போனவர்கள். இவர்கள் தஞ்சையைக் கைப்பற்றி சில காலம் வைத்திருந்தார்கள். இப்பொழுதும் தமிழ்நாட்டில் களப்பாளங்குளம் என்ற பெயருடைய‌ ஊர்களை நிறைய பார்க்கலாம். வேளாளர்களில் ஒரு பிரிவினர் தங்களைக் களப்பிரர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். களப்பிரர்கள் காலத்தை இருண்ட காலம் என்று சொன்னது சைவ எழுத்தாளர்கள்தாம். ஏனென்றால் களப்பிரர்கள், சமண மதத்தை ஆதரித்தார்கள். சமண மதம் வேதத்தை நிராகரித்தது. எனவே களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று சொல்கிறார்கள். களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் என்பதைப் பற்றி அருணாசலம் பிள்ளையின் நூல் ஒன்று ஆங்கிலத்தில் சென்னை பல்கலைக் கழக வெளியீடாக உள்ளது.

மயிலை சீனிவேங்கட சாமி தொடங்கி வைத்த முயற்சியின் காரணமாக இன்றைக்கு இந்தக் கருத்து மாறிவருகிறது. அச்சுதன் என்கிற ஒரு மன்னனைத் தவிர வேறு எந்தக் களப்பிர மன்னனைப் பற்றியும் செய்திகள் இல்லை. விஜயாலயச் சோழன் களப்பிரர்களிடம் இருந்துதான் தஞ்சையைக் கைப்பற்றினான்.

களப்பிரர்கள் பற்றி தமிழ்நாட்டில் கல்வெட்டுகள் இல்லை. கர்நாடகத்தில் கொஞ்சம் உள்ளது. அதுதவிர ஒரு சில பாடல்கள் மட்டுமே உள்ளன. தஞ்சைக்கும் திருச்சிக்கும் இடையிலான நிலப் பகுதியைக் கைப்பற்றி இருந்தார்கள். குறிப்பாக செந்தலை என்ற தஞ்சைக்கு அருகேயிருக்கும் ஊர் அவர்கள் தலைநகரமாக இருந்தது என்று தெரிந்தது. அதற்கு மேல் தெரியவில்லை. வரலாற்றுச் சான்றுகளும் கிடைக்கவில்லை.

சைவ மதம் தமிழ் மதமே, சைவ மதத்தைப் பின்பற்றிய பார்ப்பனர்கள் தமிழர்களே, குலம் என்ற சொல் தான் ‘ஜாதி’ என்று மாறியது என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா?

‘ஜாதி’ என்ற சொல்லில் உள்ள ‘ஜா’ என்ற வேர்ச் சொல் எந்த திராவிட மொழியிலும் கிடையாது. அது வடமொழியில் மட்டும் தான் இருந்தது. அதற்கு ‘பிறப்பு’ என்று அர்த்தம். ‘ஜா’ என்று சொன்னால் பிறப்பு வழிப்பட்டது. பத்மஜா என்றால் பத்மத்திலே பிறந்தவள். வனஜா என்றால் வனத்திலே பிறந்தவள். கமலஜா என்றால் கமலத்திலே பிறந்தவள். அந்த வேர்ச் சொல்லே தமிழ்ச் சொல்லாக இல்லாதபோது இன்றைக்கு இருக்கிற ஜாதி அமைப்பை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

tho_paramasivan_400இரண்டாவது, சைவம் தான் தமிழ் மதம் என்பதை நிலைநிறுத்தும்போது பெரியார் கூட இருந்த சைவ அறிஞர்கள், குறிப்பாக மறைமலை அடிகள் போன்றோர் பார்ப்பன எதிர்ப்பு என்கிற அம்சத்திலே பெரியாரை ஆதரித்துக் கொண்டு, ‘சைவ மதம் தான் தமிழர்களின் உண்மையான மதம்’ என்ற நிலை எடுத்தார்கள். 'பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்' என்று மறைமலையடிகள் ஒரு புத்தகமே எழுதினார். இந்தக் கருத்தோட்டத்தை ஆராய்ச்சியாளர்கள் யாருமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

உமா கூட தமிழ்ச் சொல் அல்ல. பார்வதியைக் குறிக்கும் இதன் தமிழ் வடிவம் ‘உமை’. இந்தச் சொல் ஹிமா என்ற வடசொல்லுடைய தமிழ் வடிவம். ஹிமா என்றால் பனி என்று அர்த்தம். ஹிமாத்திரி என்றால் பனிமலை, இமயமலை என்று அர்த்தம். ஹிமா என்ற சொல் தமிழில் உமா என்று ஆகிவிட்டது. ஹிமாலாய என்பது தான் உமா. உமா தான் உமை; பார்வதியைக் குறிக்கும் பழைய சொல். பார்வதி என்பவள் இமயபர்வதத்தில் பிறந்தவள். முதலில் சைவ மதத்தின் வேர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. அதே நேரத்தில் காஷ்மீரில் ஸ்ரீகண்டர் உருவாக்கிய பாசுபத சைவம் இங்கே வருகிறது. அதை வைத்துக்கொண்டுதான் சைவ தத்துவங்களை உருவாக்குகிறார்கள். ராஜ ராஜ சோழனின் குருமார்கள் எல்லாம் காஷ்மீர் சைவப் பண்டிதர்கள்தான். தஞ்சாவூர் கோவில் பாசுபத சைவ அடிப்படையில் கட்டப்பட்டது தான்; சித்தாந்த சைவம் அல்லது தமிழ்ச் சைவம் என்ற அடிப்படையில் கட்டப்படவில்லை. கோயில் உள்ளே போனால் பார்க்கலாம். அகோரம், வாமம், சதாசிவம், ஜாதம், ஈசானம் என்ற 5 மூர்த்தங்கள் இருக்கின்றன‌. இதெல்லாம் பாசுபத சைவ நெறிகள்; தமிழ்ச் சைவ நெறிகள் அல்ல.

பாசுபத சைவத்திற்கும் தமிழ்ச் சைவத்திற்கும் வேறுபாடு என்ன?

63 நாயன்மார்களில் மதுரைக்குத் தெற்கே ஒருத்தர் கூட இல்லையே என்று கேட்டால் சைவர்கள் அதிகம் கோபப்படுவார்கள். இது தான் உண்மை. அப்பொழுது சமண மதம் செழித்து இருந்த பூமியாக அது இருந்தது.

அதற்குப் பின்னாலே பாசுபதம் வந்தது. பாசுபத‌ சைவம் தமிழ்ச் சைவத்திற்கு மூத்த வடிவம். பாசுபத‌ சைவம் பற்றி விரிவாகப் பல நூல்கள் வந்துள்ளன‌. தமிழில் திருமந்திரம் கூட பாசுபத‌ சைவத்தில்தான் உள்ளது.

எல்லா மன்னர்களாலும் ஆதரிக்கப்பட்ட மதமாக சைவம் இருந்தது. அப்பொழுது கூட தமிழ்ச் சைவம் வரவில்லை. ராஜராஜ சோழன் காலத்தில் கூட தமிழ்ச் சைவம் வரவில்லை. சோழ அரசு வைணவத்தை ஆதரிக்கவேயில்லை. சைவ மதத்தின் தோற்றம் என்று கேட்டால் அது காஷ்மீரகம் தான். ஸ்ரீகண்டர்தான் அதைத் தோற்றுவித்தார். அதை லகுலீசர் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்திருக்கிறார். கடாரிப்பட்டி மலைக்கோவிலில் லகுலீசர் சிற்பம் ஒன்று உள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்துச் சாதியினருமே நாங்கள் தான் ஆண்ட பரம்பரையினர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இது எந்தளவிற்கு உண்மை?

வரலாற்று ஆசிரியர்கள் வேடிக்கையாகச் சொல்வார்கள். 'ராஜா என்பவன் சாதி கெட்டவன்'. ஏனென்றால் அரசியல் காரணங்களுக்காக எல்லா சாதியிலும் ஒரு பெண்ணை எடுத்துக்கொள்வார்கள். ஒரு அரசியல்வாதி அரசியல் செல்வாக்கு உள்ள சாதியிலே பெண் எடுத்துக் கட்டுவான். அந்த சாதியின் வாக்கெல்லாம் அவனுக்குக் கிடைக்கும். அதேபோல்தான் அப்போதும். எனவே ராஜாக்கள் ஒரே ஜாதி இல்லை என்பதைவிட உண்மை இருந்திருக்க முடியாது. அந்த அந்த ராஜாக்கள் பெயரை, பெருவாரியாக உள்ள ஜாதிகள் சில பட்டப் பெயராக வைத்துக் கொண்டு 'நாங்கதான் ஆண்டோம்' என்று சொல்கிறார்கள்.

'உடையார்'களை எடுத்தால், திருக்கோவிலூர்ப் பக்கத்திலே இருக்கிற மலையமான் திருமுடிக்காரி நாட்டுக் குடிமக்களாகிய இவர்கள் இடப்பெயர்ச்சியாகி தெற்கு நோக்கி வருகிறார்கள். திருச்சி மாவட்டத்திலே லால்குடி, முசிறி போன்ற இடத்திலே தங்குகிறார்கள். திரும்பவும் தெற்கு நோக்கி தேவகோட்டை, இளையாங்குடி பகுதியில் தங்குகிறார்கள். தேவகோட்டை பகுதியிலுள்ளவர்கள் எல்லாம் பிரிட்டோ அடிகள் காரணமாக கிறிஸ்தவர்களாக மாறிப் போய்விட்டார்கள். ஆனாலும் இன்னும் மலையமான், சுருதிமான் என்ற பெயரில் பிரிவுகள் வைத்திருக்கிறார்கள். மலைய‌மான் நாட்டிலிருந்து இடம் பெயர்ந்து வந்த மக்கள் என்பதுதானே தவிர மலைய‌மான் அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். இப்படி நிறைய ஜாதிகளைச் சொல்லலாம்.

மூவேந்தர்கள் பற்றி?

பல்வேறு இனக்குழுக்கள் கலைந்தபோது மூன்று அரச மரபினர் மேலெழும்பி வருகிறார்கள். அதுதான் சேர, சோழ, பாண்டியர்கள். ஒவ்வொரு அரச வம்சத்துக்கும் பலவகையான பெயர்கள். பாண்டியன், செழியன், மாறன், வழுதி, தென்னவன், மீனவன். இத்தனை இனக் குழுக்கள் கரைந்து மேலே வரும்போது பாண்டியன் என்ற பொதுப் பெயரோடு வருகிறார்கள். இப்படி சோழர்களில் செழியன், வளவன், கிள்ளி, செம்பியன், சோழன் என இருந்தார்கள். இவர்களையெல்லாம் பார்த்தால் பத்து பேர் பதினைந்து பேர். அந்த பத்து பேரும் பதினைந்து பேரும் கரைந்து, கரைந்து ஒன்று மேல் வந்து நிலைத்து நிற்கும். அப்படித்தான் மூவேந்தர்கள் உருவானார்கள். வேந்தன் என்று சொன்னால் சேர, சோழ, பாண்டியன் ஆகிய மூன்று பேரையும் குறிக்கும். இவர்கள் கூட கடைசியில் போன இடம் தெரியாம‌ல் மறைந்தார்கள். இறுதியாக 1648ல் பாண்டியன் ஒருவன் அப்படியே தெற்கு நோக்கி வந்து தென்காசி பகுதியில் முடிசூட்டிக் கொண்டான் என்று தெரிகிறது. அவனது பரம்பரையையே கண்டுபிடிக்க முடியவில்லை.

வேந்தர்களின் மீது ஜாதிப் பெயரைச் சூட்டி இன்று அழைப்பதை அறியாமை என்று சொல்லலாமா?

அப்படித்தானே சொல்லமுடியும். பாண்டியன் என்ற பட்டப் பெயர் பல ஜாதியிலே இட்டுக் கொள்கிறார்கள். பாண்டியன் என்று பெயர் இட்டுக்கொள்கிறவர்கள் எல்லாம் பாண்டியர்களா? ஆனால் சேரன், சோழன் என்று பெயர்கள் இட்டுக்கொள்ளவில்லை. பாண்டியன் பெயர் மட்டும் மக்கள் பெயராகத் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஏனென்றால் அந்த அரச மரபுதான் பதினேழாம் நூற்றாண்டு வரைக்கும் உயிரோடிருந்தது. சேர, சோழ மரபுகள் காணாமல் போய்விட்டன‌. வேந்தர்கள், இனக் குழுக்கள் காலத்தில் பிறந்தவர்கள். அவர்களை சாதியோடு தொடர்புபடுத்தவே முடியாது.

அதுபோல பாண்டியனைக் குறிக்கும் பெயரை நெல்லை மாவட்டத்திலே இட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பாண்டியர்கள் இயற்கையாக இட்டுக் கொள்கிற பெயர் வேம்பன். வேம்பன் என்பது வேப்பமரத்தைக் குறிப்பது. நெல்லை மாவட்டத்திலே பார்ப்பனர்களில் இருந்து ஒடுக்கப்பட்டவர்கள் வரை எல்லாரும் ‘வேம்பு’ என்ற பெயரை இட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வேம்பன் என்பது பாண்டியன் பெயர். திருநெல்வேலிக்கே வேம்பநாடு என்று தான் பெயர். மூவேந்தர்களிலும் பழைய குடியினர் பாண்டியர்கள்தான்.

வர்ணாசிரமப் படிநிலையில் முன்னொரு காலத்தில் மேல்நிலையிலிருந்த ஒரு ஜாதி, பின்னர் கீழ்நிலைக்குத் தள்ளப்படுவதற்கு சாத்தியமுண்டா?

தலித் மக்களில் ஒரு பிரிவினர் (சித்தர் குருசாமி போன்றவர்கள்)தான் அப்படி கூறிக்கொள்கிறார்கள். வரலாற்று ரீதியாக இது தவறு. திடீரென்று ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சாதிப்படிநிலையில் மாற்றம் வரமுடியாது. இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலேயர்கள் தான் சாதியை ஒடுக்குவதற்கு 1856 Caste Disabilities Removal Act சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அப்போது தான் கல்வியிலும், மருத்துவமனையிலும் சாதி வேறுபாடுகள் கிடையாது என்பது நடைமுறைக்கு வந்தது. ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் நாங்கள் அடிமைப்பட்டோம் என்று கூறிக்கொள்வது எல்லாம் வரலாற்றுப் பிழை. யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இனவரைவியல் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து பேசப்படுகின்றன. இனவரைவியல் எந்த அடிப்படையில் நடைபெறுகிறது?

இனவரைவியல் என்பது நிலத்தோடும், வெளியோடும், உறவுடைய விஷயங்கள் தான். இதைப்பற்றி ‘இனவரைவியலும் தமிழ்நாவலும்’ என்ற பெயரில் ஆ.சிவசுப்பிரமணியன் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். இனவரைவியல் என்றால் நம்முடைய தொல்காப்பியர் சொல்கின்ற உரிப்பொருள்கள் தாம். உரிப்பொருள் என்பது தெய்வம், உணவு, மரம், விலங்கு, பறவை, இசை முதலியவற்றைக் குறிக்கும்.

எடுத்துக்காட்டாக செங்கோடன் என்று பெயர் இருந்தால் அவர் மதுரைக்காரராக நிச்சயம் இருக்க முடியாது. கொங்குமண்டலத்துக்காரராகத் தான் இருக்க முடியும். நீர்க் காத்தலிங்கம், பரமார்த்தலிங்கம் என்று பெயர் இருந்தால் அவர் நிச்சயமாக நாஞ்சில் நாட்டுக்காரராகத்தான் இருப்பார். வடிவு என்ற பெண் பெயர் இருந்தால் பூர்வீகத்திலே திருநெல்வேலிகாரர்களாகத்தான் இருப்பார்கள்.

தெய்வம் வித்தியாசப்படும். சுடலைமாட வழிபாடு திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்திலும், கருப்புசாமி வழிபாடு மதுரை, இராமநாதபுர மாவட்டத்திலும் இருக்கிறது. திருச்சி, அரியலூரில் காத்தவராயன் வழிபாடும், கோவை மாவட்டத்தில் அண்ணன்மார் சாமி வழிபாடும், வடக்கே தென்ஆற்காடு மாவட்டத்தில் பொன்னியம்மன் வழிபாட்டு முறையும் இருக்கின்றது. தெய்வங்கள் நிலத்துக்கு நிலம் வேறுபடுகின்றன அல்லவா?

திணை அரிசியினை நாம் பெரும்பாலும் உட்கொண்டு இருக்கமாட்டோம். ஆனால் சங்கரன்கோவில் மக்கள் திணை அரிசி சாப்பிட்டு இருப்பார்கள். அந்நிலப் பகுதியில்தான் திணை விளையும்.

உணவு வித்தியாசம், நிலம் வித்தியாசம், மரம் வித்தியாசம் இருக்கின்றது. பூவரச மரங்கள் நெல்லை மாவட்டத்தில் இருக்கிற மாதிரி வேறு எங்கும் காண முடியாது. அதே போல போகன் வில்லாச் செடிகளை எல்லா இடங்களிலும் காண முடியாது. காலத்தோடும் வெளியோடும் தொடர்புடைய மனிதர்களும் பிறப்புகளும்தான் இனவரைவியலின் கூறுகள்.

மொழி அடிப்படையில் இனம் பிரிக்கப்பட்டுள்ளதா?

மொழி இனத்திற்கான முதல் அடையாளம். மொழி மட்டுமே இனத்துக்குரிய அடையாளம் ஆக முடியாது. ஒரு நிலப்பரப்பு, ஒரே வகையான பொருளாதார வாழ்க்கை முறை, ஒரே வகையான சடங்குகள், உறவு முறைகள் எல்லாம் சேர்ந்து தான் ஒரு இனத்தை அடையாளம் காட்ட முடியும்.

மதம் இனத்திற்கான அடையாளமாக இருக்க முடியுமா?

மதம் இனத்திற்கான அடையாளமாக இருக்கவே முடியாது. ஏனென்றால் மதம் மாறும்போது அடையாளம் மாறுவதில்லை. இத்தாலியில் இருக்கிற கத்தோலிக்க கிறிஸ்தவமும், நெல்லை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவமும் ஒரே இன அடையாளமாக இருக்க முடியாது. நாம் விரும்பினால் இன்றைக்கு மாலையிலே இஸ்லாம், நாளை மறுநாள் இந்து என மாறிக்கொள்ளலாம். எனவே மதம், இனத்திற்கான அடையாளமாக இருக்க முடியாது.

திராவிடம் என்பது இன அடையாளம் கிடையாது, அதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை, அறிவியல் அடிப்படை அற்றது என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆரியம் X திராவிடம் என்று தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இதில் எது சரியானது? இதை விளக்கமுடியுமா?

திராவிடம் என்ற கருத்தாக்கம் உருவாவதற்கு அன்றைக்கு இருந்த அடிப்படையான காரணங்களில் ஒன்று காலனி ஆட்சியிலே ஏற்பட்ட சமூக மாற்றம். அதைவிட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மாநிலங்களுக்கு இடையே அடிப்படையிலே கலாச்சார ஒற்றுமைக் கூறுகள் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. வட இந்தியர்கள் இந்த நாலு மாநிலத்தவர்களையும் ஒன்றாக 'மதராஸி' என்று குறிப்பிடுவது தற்செயலானதல்ல. தோற்ற அமைப்பில் இருக்கும் ஒற்றுமைதான் இவர்களை ஒரே இனமாக மற்றவர்களைப் பார்க்க வைக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்த சமூகத்தில் எந்த ஜாதியாக இருந்தாலும் சில அடிப்படையான கலாச்சார ஒற்றுமைகள் உண்டு. எடுத்துக்காட்டாக தாய்மாமன் மரியாதை என்பது இன்றும் நான்கு மாநிலங்களிலும் கடுமையாய் இருக்கிறது. ஆண்கள் மீசை வைத்துக் கொள்வது இந்த நான்கு மாநிலங்களில் மட்டுமே அதிகம் காணப்படுகிறது. அதே மாதிரி இறுதி மரியாதை, சடங்கியல் தகுதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பூர்வீகத்திலே அனைவரும் ஒரு மொழி பேசுபவர்களாக இருந்தார்கள் என்று கால்டுவெல் ஏற்கனவே நிருபித்து இருக்கிறார். அது உண்மை தான். ஒரு இனத்துக்காரர்களாய் இருந்தோம். ஏன் பிரிந்தோம் என்று தெரியவில்லை. வரலாற்றுத் தொடர்ச்சியும், காரணங்களும் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் இக்கருத்தை அரசியல் ரீதியாகவும் (Socail Political phenomenon) முன் வைத்தார்கள். அரசியல் ரீதியாக தோற்றுப்போய்விட்டதால் திராவிடக் கருத்தியலே தோற்றுப் போனது என்று சொல்ல முடியாது.

ஆரியர் என்பது ஒரு இனமா அல்லது கூட்டமைப்பா?

ஆரியர் என்பது இனம் தான். குறிப்பாக இந்தோ-‍ஆரியர் என்று இனமே இருக்கிறது. ஜெர்மனிக்கும் சமஸ்கிருதத்துக்கும் அடிப்படையிலே சில வேர்ச் சொற்களைக் கண்டு கொண்டதன் காரணமாகத்தான் மேக்ஸ்முல்லர் இந்தியாவை தன் பூர்வதேசம் என்று நினைக்கிறார். ‘ஜா’ என்ற வேர்ச்சொல் ஆங்கிலத்தில் ‘ஜி’ என்றும், சமஸ்கிருதத்தில் ஜாதி என்றும் இருக்கிறது. ஆரியர் உயர்வு வாதத்திற்கு அடித்தளம் இட்டவர் மேக்ஸ்முல்லர். அவர்தான் ஆரியர் இனம் ஆளப்பிறந்த இனம் என்று கூறினார். கீழைநாட்டு வேத நூல்களை இது தொடர்பாக மொழிபெயர்த்தார்.

ஆரிய இனத்திற்கு சில அடிப்படை மரபுகள் உண்டு. ஆரிய இனத்திற்கும் நமக்கும் வேறுபாடுகள் உண்டு. நாம் வெப்ப மண்டலத்திலே வாழ்கிறவர்கள். தமிழர்களும், மலையாளிகளும் நீரைக் கொண்டாடுவார்கள். நீர் சார்ந்த சடங்குகள், புனிதங்கள் நமக்கு அதிகம். கங்கைச் சமவெளியில் வாழ்ந்த ஆரியர்களுக்கு நெருப்பு சார்ந்த சடங்குகள் அதிகம். அவர்கள் தந்தை வழிச்சமூகம், நாம் தாய்வழிச் சமூகம். அவர்கள் கிராமப்புற நாகரிகம், நாம் நகர நாகரிகம்.

சடங்குகள் என்பது தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. இதில் எந்த அளவு மூடநம்பிக்கை உள்ளது; எந்த அளவு அறிவியல் சார்ந்து உள்ளது?

நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்? இதுதான் என் தெய்வம், வழிகாட்டுகிறது என்று நம்புவது நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு எங்கே அதிகாரம் குறுக்கே வருகிறதோ அங்கே மூடநம்பிக்கை பிறக்கிறது. 'உனக்காக நான் யாகம் பண்றேன், ஹோமம் பண்றேன்' என்று சொல்வது மூடநம்பிக்கை. அதாவது அர்ச்சகர் என்ற ஒரு அதிகாரம் இங்கே குறுக்கே வருகிறது. நம்பிக்கை இயல்பானது. அதிகாலையில் வயல்வெளிக்குப் போகிற வழியில் சூரிய உதயத்தைப் பார்த்துவிட்டால், செருப்பைக் கழற்றி விட்டு கும்பிடு போடுகிறோம். அதை மூடநம்பிக்கை என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அந்த சூரியன் இல்லையென்றால் பயிர் விளையாது. அது ஒரு நம்பிக்கை. அதுவே பெரிய கோவிலாக உருவெடுத்து, அங்கே அர்ச்சகர் வரும்போது, மூடநம்பிக்கை பிறந்து விடுகிறது.

நம்பிக்கையில் அரசு அதிகாரம் மட்டுமல்ல‌, ஏதோ ஒரு ஆன்மீக அதிகாரம் குறுக்கே வந்து விட்டால் கூட‌, அது மூட நம்பிக்கையாகிவிடும். இன்றைக்கு இருக்கிற அறிவியல் என்பது Europian Science தான். அதை Pure Science என்று எங்களைப் போன்றவர்களால் ஒத்துக் கொள்ள முடியாது. ஒரு வகையான சுரண்டல் நோக்கத்தை உள்ளடக்கியதாகவே அவர்களது அறிவியல் உள்ளது. எனவே இது மூடநம்பிக்கைக்கு எதிரான அறிவியல் அன்று. இன்றும் 13 என்ற எண்ணைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்களே!

சந்தையை விரும்புகிற முதலாளிகளும், நாடு என்பது பிரிந்து போகக் கூடாது என்று கூறுகிறார்கள். இவர்களை எதிர்க்கின்ற இந்தியாவிலுள்ள இடதுசாரிகளும், நாடு பிரிந்துபோகக் கூடாது என்கிறார்கள். இதில் எது உண்மை?

நம்முடைய இடதுசாரிகள், முதலாளிகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் முதலாளித்துவ சிந்தனைக்குள் வந்துவிட்டார்கள். இவர்களுக்கு கூடங்குளத்தில் ரஷ்யா விற்ற ரியாக்டர் மாதிரி இன்னும் 10 ரியாக்டர்களை ரஷ்யா இந்தியாவிலே விற்க வேண்டும் என்றே விருப்பம். இது ஒரு வகையான ஏகாதிபத்திய சிந்தனை. ஏகாதிபத்தியத்தில் இடது என்ன? வலது என்ன? இடதுசாரிகளில் ஒரு பகுதியினர் ஏகாதிபத்தியவாதிகளாக, சிந்தனை அளவிலே முதலாளித்துவவாதிகளாக உருமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தமாகிறது.

இன்றைக்குத் தீவிர இடதுசாரிகள் கூட்டுக் குடும்பத்தை வலியுறுத்துகிறார்கள். ஏனெனில் 'கலாச்சாரம் என்பது அப்பா, அம்மாவிடம் இருந்து வந்ததில்லை. கதை சொல்லும் தாத்தா, பாட்டி இல்லாத குடும்பம், கலாச்சாரம் இழந்து போயிருக்கிறது' என்கிறார்கள். கூட்டு குடும்பம் நரகமாக மாறும் போது தனிக்குடும்பத்தை ஆதரிக்கிறோம். எப்படி இருந்தால் மகிழ்ச்சியோ அப்படியே வாழ்கிறோம். இப்படித்தான் வாழவேண்டும் என யாரும் நிர்பந்திப்பதில்லை. மாறி வரும் பொருளாதார உறவுகளும், உற்பத்தி உறவுகளும் புறச்சூழலைத் தீர்மானம் செய்கின்றன‌.

tho_paramasivan_385இடதுசாரிகள் போராட்டச் சிந்தனைகளில் இருந்தே வெளிவந்துவிட்டார்கள். அது, எது வரைக்கும் கொடூரமாக இருக்கிறது என்று பார்த்தால், இலங்கையின் இறையாண்மைக்குள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று சொல்லுகின்ற அளவிற்கு முதலாளித்துவச் சிந்தனை உள்ளவர்களாக மாறிப்போனார்கள். இலங்கை ஒன்றாய் இருப்பது இந்தியாவிற்கு நல்லது. ஏனென்றால், இந்தியா, இலங்கையைச் சந்தையாக்கப் பார்க்கிறது; சீனாவும் சந்தையாக்கப் பார்க்கிறது. ‘இலங்கை இறையாண்மைக்குள் ஒரு சிக்கல் இருக்கிறது’ என்று மூன்று லட்சம் பேரைக் கொன்றபின் சி.பி.எம் கூறுகின்றது. இதை எப்படி ஒத்துக் கொள்வது? இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இவர்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?

ராமேஸ்வரத்திலே இந்திய இறையாண்மை, இலங்கை அரசால் சிக்கலுக்குள்ளாகிறது அல்லவா? ஒரு நாட்டின் எல்லைக்குள் வந்து அந்த நாட்டுக்காரனை சுட்டுக் கொல்வது அந்த நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கிற விசயம்தானே? அதை 600 முறை இலங்கை அரசு செய்து இருக்கிறது. இவர்கள் ஒருமுறை கூட கண்டிக்காது இருப்பது ஏன்? இலங்கை இறையாண்மை பற்றி கவலைப்படுகிறவர்கள் இடதுசாரிகளே அல்ல; இடதுசாரிப் போர்வையில் மறைந்து இருக்கிற வலதுசாரிகள்; பாஜகவின் மாற்று வடிவம்.

சங்க இலக்கியத்தில் இயற்கையோடு வாழ்ந்து வந்தோம். மரங்களை வெட்டுவது என்பது உடன் பிறந்த சகோதரியை வெட்டுவதுபோல கருதப்பட்டது. ஆனால் இப்பொழுது இயற்கைக்கு எதிரான கூடங்குளம் அணு மின்நிலையம் போன்ற திட்டங்களை ஆதரிக்கும் அளவுக்கு மக்கள் மாறிவிட்டார்கள். இது ஏன்?

காலனி ஆட்சியிலே செல்வங்களை மட்டுமல்லாது, மீட்டெடுக்க முடியாத கலாச்சார மதிப்பீடுகளையும் இழந்து நிற்கிறோம் என்பது தான் உண்மை. அந்த இழப்பை இப்போதாவது உணர வேண்டும். இயற்கைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு அறுந்து கொண்டே போகிறது. குறிப்பாக ஆங்கில மருத்துவம் வந்ததினால் நிறைய தாவரங்களுக்கும் தமிழர்களுக்குமான தொடர்பு காணாமல் போய்விட்டது. சித்த மருந்துக் கடையிலே இருக்கும் வேர்களை எத்தனை பெண்கள் இப்போது அடையாளம் காட்டுவார்கள்? நான் அடையாளம் காட்டும் தாவரத்தை என் மகளோ, மருமகளோ காட்ட முடியாது. இயற்கைக்கும் நமக்கும் தொடர்பு அறுந்து கொண்டே வந்தது தான் ஆங்கில மருத்துவம் வளரக் காரணம்.

நம்முடைய குழந்தை மருத்துவ முறையிலே ரோசனை, கஸ்தூரி இவை முக்கியமானவை. ரோசனை என்பது பசுவினுடைய அன்ட்ரினல் கிளாண்ட். கஸ்தூரி என்பது கஸ்தூரி மானுடைய அன்ட்ரினல் கிளாண்ட். இந்த கிளாண்ட்களை மருந்துகளோடு சேர்த்துக் கொடுத்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இந்த மருந்துகளை இன்று நாம் இழந்து போனோம். இப்படி உயிர் உலகத்தோடும் பயிர் உலகத்தோடும் நம் தொடர்பு அறுந்து கொண்டே வந்தது தான் காலனி ஆட்சி நமக்குச் செய்த மிகப் பெரிய கொடுமை; துரோகம். இப்போதுதான் நாம் யோசிக்கிறோம். ஆனாலும் இன்னுமும் நம்மிடையே பச்சை மரத்தை வெட்டும்போது யாராவது இரண்டு கிழவன் அல்லது கிழவி, 'ஏன் பச்சை மரத்தை வெட்டுறே' என்று கேட்கத்தான் செய்கிறார்கள். ஒரு திடப் பொருளாகத் தாவரங்களைப் பார்க்கிற வழக்கம் நம்மிடம் எப்பொழுதும் இருந்தது இல்லை.

நம்முடைய தாவரங்களில் இருந்து மருத்துவப் பயனை மீட்டெடுப்பதற்குரிய வழி நம்மிடையே இருக்கிறது. ஐரோப்பியர்களிடையே அது இல்லை; குரோட்டன் தாவரத்தின் மருத்துவப் பயனை அவர்கள் இன்னமும் மீட்டெடுக்கவில்லை. நிச்சயமாக குரோட்டன் என்ற தாவரத்திற்கு, அது பிறந்த மண்ணிலே ஒரு மருத்துவப் பயன் இருந்திருக்க வேண்டும். ஐரோப்பியர்கள் நிறைய விஷயங்களைப் புதைத்துவிட்டுப் போய்விட்டார்கள். இன்றைக்கு இதை எங்கிருந்து மீட்டெடுக்க முடியுமென்றால் இலக்கியத்திலிருந்து மட்டும்தான் மீட்டெடுக்க முடியும். இன்னும் அமெரிக்கப் பல்கலைக் கழகத்திலே வரலாற்றுப் பாடம் மரியாதை இல்லாத பாடமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கு வரலாறு கிடையாது. அவர்களுடைய பார்வையெல்லாம் எதிர்காலத்திலேதான் அதிகமாக இருக்கிறது. பிற நாடுகளை அடிமை செய்வதற்கு ஏதுவாக, படையெடுக்கப் போகிற நாட்டைப் பற்றி அறிந்து கொள்வதற்காக மொழியியல் கொண்டு வந்தார்கள். இப்படிதான் குறுகிய காலத்தில் மொழியைக் கற்றுக் கொண்டு, தேசத்தின் கலாச்சாரத்தை அடிமைப்படுத்துவதற்கு உபயோகித்தார்கள்.

தமிழர்கள் தொன்மங்களை இழந்தமைக்குப் பெரியாரைப் பழி சுமத்துகிறார்கள், இது சரியா?

பெரியாரைக் கொண்டாடுவது அறிவுலகத்துக்கு அடையாளம் என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. மார்க்சியவாதிகள் கூட பெரியாரைக் கொண்டாடினார்கள். பகுத்தறிவின் சிகரம் பெரியார் என்று சொல்லி 1954ல் தொழிற்சங்கத் தலைவர் தோழர் ஐயங்கார் புத்தகம் எழுதினார். பெரியாரைக் கொண்டாடியது அறிவுலகத்துக்கு ஒரு அடையாளம் என்று கருதப்பட்டது போல, இந்த பத்து ஆண்டுகளில் பெரியாரைப் பழிப்பது என்பது அறிவுலகத்துக்கு அடையாளம் ஆகிப் போய்விட்டது. பெரியார் மீதான விமர்சனத்துக்குப் பெரியாரின் ஆளுமை இன்னமும் ஒரு நூற்றாண்டிற்குத் தாங்கும்.

பெண் உரிமை பற்றி வாய்கிழியப் பேசுகிற கூட்டம் கூட பெரியாருடைய தாலி நிராகரிப்பு பற்றிப் பேசுவதில்லை. வட இந்தியப் பெண்கள் இயக்கத்தில் கூட ‘தாலியை நிராகரியுங்கள்’ என்று யாரும் சொன்னதில்லை. பெரியார், கடவுளை மட்டும் அல்ல, தாலியையும் நிராகரியுங்கள் என்று வலியுறுத்தினார். ஆனால் அதைப் பற்றிப் பேசவோ சிந்திக்கவோ யாரும் தயாராக இல்லை. ஆனால், பெரியாரைப் பழிக்கிறது என்பது ஒரு நாகரிகம் (Fashion) ஆகிவிட்டது. அந்த வகையிலே தான் தொன்மங்களைப் பற்றி பேசுகிறார்கள். பெரியாரினால் தொன்மங்கள் காணாமல் போய்விட்டது என்று கூறுவது தவறு.

பெரியார் என்றுமே நாட்டார் கலாச்சாரத்தின் மீது போர் தொடுக்கவேயில்லை. அது அவரின் நோக்கமும் இல்லை. அவர் வைதீகத்தின் மீதும் நகர கலாச்சாரத்தின் மீதும் தான் போர் தொடுத்தார். பெரியார் பிள்ளையார் சிலையைத் தானே உடைத்தார்; சுடலைமாடன் சிலையை உடைக்கவில்லையே. சுடலைமாடன், காத்தாவராயனை அவர் ஒன்றும் செய்யவில்லையே. பெரியார் தொன்மங்களைக் காலி செய்துவிட்டார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தொன்மங்கள் இன்றைக்கும் உயிரோடு இருக்கின்றன. பெரியாரைப் பற்றியே நிறைய தொன்மங்கள் வந்துவிட்டன‌.

periyar_tho_pramasivan_640

பெரியார் வாழ்ந்த காலத்தின் சூழல் வேறு; இன்றைக்கு இருக்கும் காலம் வேறு. பெரியாருக்குப் பிறகு உலகம் முப்பது ஆண்டுகள் சுற்றியிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய அறிவியல் கருவிகள் எவ்வளவு வந்திருக்கிறது! இதை வைத்துக் கொண்டு பெரியாரை அளக்க முற்படுவோம். பெரியாருக்கு அப்புறம் பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருக்கிறது. பெரியாரே இருந்தால் இன்றைய பெண்கள் அடைந்து இருக்கும் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைவார். பெண்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்று நம்புகிறார்கள். இன்னமும் நம்முடைய பெண் தெய்வங்களின் கையில் இருக்கிற ஆயுதத்தைத் தூக்கிப் போட யாருக்கும் தைரியம் வரவில்லை. அது தான் போர்க்குணம். அதுதான் பண்பாடு.

அறிவியல் வளர்ந்து இருக்கிற இந்த காலத்தில் சிறு தெய்வ வழிபாடுகளை அல்லது நாட்டார் தெய்வங்களை எப்படி நாம் பார்க்க வேண்டும்?

பெரியார், நாட்டார் தெய்வங்களை எதிர்க்கவில்லை. காளியம்மன், மாரியம்மனை எதிர்க்கவில்லை. இந்த நாட்டார் தெய்வங்கள் ஒவ்வொரு மனிதனின் இரத்த ஓட்டத்திலும் கலந்த விஷயம். மழை வேண்டுமென்றால் மாரியம்மனுக்கு மழைக்கஞ்சி எடுக்க வேண்டும். இது நம்பிக்கை; மூட நம்பிக்கை இல்லை. நாட்டார் தெய்வங்கள் என்பவை அதிகார மையங்கள் அல்ல; காமாட்சி அம்மனைப் போல, மீனாட்சி அம்மனைப் போல அதிகார மையத்தைச் சார்ந்த தெய்வங்கள் அல்ல.

நாட்டார் தெய்வத்திலே தெய்வத்திற்கும் மனிதனுக்கும் குறுக்கே நிற்கிற அதிகாரம் எவ்வளவு நேரம்? சாமி ஆடும் நேரம் மட்டும் தான். அந்த பத்து நிமிடம் சாமி ஆடுவான். அந்நேரம் தான் அவனுக்கு அதிகாரம். அதற்குப் பிறகு அவனும் கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு மற்றவர்களோடு வேலைக்குக் கிளம்பிவிடுவான். நாட்டார் தெய்வங்கள் ஜனநாயகத் தன்மை வாய்ந்தவை. நான் என்ன சாப்பிடுகிறேனோ அதைச் சாப்பிடுவது தானே என் தெய்வம். இதுவும் ஒரு உயர்தர சமத்துவம் தானே! நான் பன்றிக் கறி சாப்பிட்டால் என் தெய்வமும் பன்றிக் கறி சாப்பிடணும். நான் ஆட்டுக்கறி சாப்பிட்டால் என் தெய்வமும் ஆட்டுக்கறி சாப்பிடணும். நான் ரோட்டிலே சாப்பிட்டால் என் தெய்வமும் ரோட்டில் சாப்பிடணும். இந்த தெய்வத்தை எப்படி நீங்கள் அழிக்க முடியும்?

ஆனால், சாதி சார்ந்து நாட்டார் தெய்வங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனவே?

சில பெரிய சாதிகளுக்கு மட்டும் தான் வரையறுக்கப்பட்ட தெய்வங்கள் உண்டு. மாரியம்மன் எந்த சாதியின் தெய்வம்? ஒரு காலத்தில் மாரியம்மன் உழவுத் தொழில் செய்தவனுடைய தெய்வம். இன்றைக்கு மழை வேண்டுபவர்களுக்கெல்லாம் மாரியம்மன் தெய்வம். எல்லா தெய்வங்களையும் அப்படி சேர்க்க முடியாது. சில சில தெய்வங்கள் வட்டாரம் சார்ந்திருக்கிறது; சாதியைச் சார்ந்திருக்கிறது.

நமது மரபு சார்ந்த இலக்கியங்களை மீட்டு எடுப்பதன் மூலமாக நமது வாழ்க்கை முறையை நெறிப்படுத்த முடியுமா?

இலக்கியங்களை மீட்டெடுப்பது என்பது வாழ்வியலின் மதிப்பீடுகளை மீட்டெடுப்பது தான்.

மாடு பிடித்தல் என்பது நமது தொன்மங்களில் ஒன்று. அது இன்றைக்கு அவசியம்தானா?

மாடு பிடிக்கிறதோ, மாடு அடக்குறதோ கிடையாது. மாட்டை அணைத்தல் என்பதே சரியானது. திமிரை அணைத்துப் பிடித்தல், கொம்பை ஒடித்துப் பிடிக்கிறது இல்லை. இது ஒரு விளையாட்டு. அவர்கள் மாட்டை அணைத்துப் பிடிப்பதற்காகவே போகிறார்கள். தொலைக்காட்சிப் பேட்டியில் பார்க்கும்போது கூட ‘நான் இருபது வருடமா மாட்டை அணைக்கிறேன்’ என்றே கூறுவார்கள். சட்டத்தைக் கொண்டுவந்து இதைத் தடுக்கிறார்கள், அதுவும் வனவிலங்குச் சட்டத்தின் கீழ்.

அடிப்படையில் மாடு வனவிலங்கே கிடையாது. வீட்டில் பிறந்து, வீட்டில் வளர்ந்த காளை எப்படி வனவிலங்கு ஆகும்? கோவிலுக்கு நேர்ந்துவிட்ட மாட்டை, ஊர் கூடி வளர்த்து விட்ட மாட்டை எப்படி வனவிலங்கு என்று சொல்வீர்கள்? அது வீட்டுக்காரர்கள் அழைத்தால் ரொம்ப சாதுவாக கூடவே போகும். தொலைகாட்சியில் கூட காட்டினார்கள் அல்லவா? ஒரு பதினெட்டு வயதுப் பெண், மாட்டைக் குளிப்பாட்டி, ஜல்லிக்கட்டுக்கு கூட்டிக்கொண்டு வருவதைக் காட்டினார்களே! அது எப்படி வனவிலங்கு ஆகும்? அது வளர்ப்பு மிருகம் (Domestic Animal) தான்.

பிடிக்கிறவன் வெறும் கையோடுதான் அதைப் பிடிக்கிறான். ஆயுதத்தை எடுத்துக் கொண்டு போகவில்லை. எனவே அது வன்முறை ஆகாது. ஆயுதம் எடுத்தால்தானே வன்முறை.

சில நேரம் விபத்துகள் நடந்திருக்கிறது. அதுவும் மாடு கூட்டத்தைப் பார்த்து, தப்ப முயற்சிக்கிறபோது அது மிரண்டு ஓடுகிறது. அப்பொழுது கொம்பைப் பயன்படுத்துகிறது. முறையான பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

பெரியாருடைய கருத்துக்கள் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய விளைவுகள் என்ன?

சாதிப் பேர் இல்லாமல் இருக்கின்ற தைரியம் இந்தியாவிலேயே தமிழர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த வீட்டிலும் யாரும் நீங்கள் எந்த ஜாதி என்று விருந்தினரை விசாரிப்பதில்லை. இஸ்ரோவின் தலைவர் மாதவன் நாயர், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், மிஸ்ரா, குப்தா என்று சாதிப் பெயர் இல்லாமல் மற்ற மாநிலங்களில் இருப்பதில்லை. நாம்தான் மூன்று தலைமுறைகளாகச் சாதிப் பெயர் துறந்து இருக்கிறோம். இது பெரியாராலேதான் சாத்தியாமாயிற்று.

பெரியார் தலித் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டார். இதனாலேயே பெரியாரை நிராகரிப்பது பார்ப்பனர்களுக்கு ஒரு நாகரிகமாக மாறிவிட்டது. லால்குடி தாலுகாவில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மாநாடு 1925‍ல் நடந்தது. அதை நடத்த விடாதபடி செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியர்கள் முயற்சி செய்தார்கள். அப்போது திருச்சி கத்தோலிக்கர்களில் பெரும்பான்மையினராக வெள்ளாளர்களும், பார்ப்பனர்களும் இருந்தனர். வெள்ளாளர்களும் பார்ப்பனர்களும் லால்குடி தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ மாநாடு நடக்க விடாமல் தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் மாநாடு நடத்த பெரியார் தொடர்ந்து உதவி செய்தார். எதிர்ப்புகளைக் கண்டித்து, தொடர்ந்து ‘குடியரசு’ இதழில் எழுதினார்.

இப்படியாக பெரியார் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இயங்குவதைப் பொறுக்க முடியாமல் 1933ல் கத்தோலிக்க மாநாடு கூட்டி பெரியார் இயக்கத்தைத் தடை செய்யவேண்டும் எனத் தீர்மானம் போட்டார்கள். அது மட்டுமல்லாமல் பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவர், கத்தோலிக்க மதக் கொள்கைக்கு எதிராக செயல்படுகின்றார் என்று, சுதந்திரம் அடைந்ததலிருந்து பெரியாரை கத்தோலிக்கக் கல்லூரிகளில் நுழையவிடாமல் தடை செய்தார்கள். யார் பெரியாரை எதிர்க்கிறார்கள் என்பதை நாம் பார்த்தோமென்றால், பெரியாரின் வெற்றி புலப்படும்.

தட்டச்சு உதவி: சுரேஷ்