புதுக்கோட்டையில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு

“சாதியின் கொடுமையால் நாற்றமெடுத்த மலத்தைவிட மனிதன் கேவலப்படுத்தப்படுகிறான்.. இது உண்மை; வாய்ப்பேச்சுக்காக நான் சொல்லவே இல்லை. எப்படி என்றால் மல உபாதைக்கு சென்றவன், அந்த பாகத்தை மட்டும் ஒரு சொம்பு தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்கிறான். மலத்தைக் காலில் மிதித்துவிட்டால் அந்த காலை மட்டும் தண்ணீரை விட்டு கழுவிவிட்டால் அந்த குற்றம் போய்விடுவதாகக் கருதப்படுகிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தொட்டுவிட்டால் அவனைத் தொட்டதால் ஏற்பட்ட தோஷம், தன்னுடைய உடலை உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர நனைத்துக் குளித்தால் ஒழியப் போவதில்லை என்கிறார்கள். ஆகவே மலத்தைவிட மனிதன் எவ்வளவு கேவலமாக மதிக்கப்படுகிறான் என்பதைப் பாருங்கள். ஆகவே சாதி வித்தியாசத்தையே அழித்தாக வேண்டும். சாதி வித்தியாசத்தை போக்குவதற்கு எல்லாவிதமான தியாகத்தையும் செய்வதற்கு முன்வர வேண்டும்.” - தந்தை பெரியார்

தமிழகத்தில் தீண்டாமைக்கொடுமைகளை ஒழிக்க தன் தடம் பதியாத ஊர் இல்லை என்ற வகையில் தள்ளாத வயதிலும் உழைத்தவர்தான் தந்தை பெரியார். அவருடைய பெயரைச் சொல்லக்கூடிய திராவிடக்கட்சிகள் குறிப்பாக, திமுக தீண்டாமை ஒழிப்பில் எத்தகைய பாத்திரத்தை வகிக்கிறது என்பதை அக்கட்சியை ஆதரிக்கிற தலித் கட்சித் தலைவர்களைக் கேட்டாலே கூறுவார்கள். தலித் மக்களுக்கு எதிரான வழக்குகள் 3.6 சதவீதம் அதிகரித்து வரும் நிலையில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீக்க வேண்டும் என கொங்குப்பகுதி மட்டுமின்றி மதுரையில் இருந்தும் சில அபாயகரமான குரல்கள் எழும்பி வருகின்றன. அதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டியவர்கள், பதவி நாற்காலிகளைப் பிடித்துக் கொண்டு, மௌனத்தை மொழியாக்கிக் கொண்டுள்ளனர்.

புதுகையில் மாநாடு

CPM_500

தமிழகத்தில் தீண்டாமைக்கொடுமை என்ற சாதியத்தின் மீது "போராடு, போராடு, வெற்றி வரும் உன்னோடு" என்ற முழக்கத்துடன் போராட்ட ஆயுதத்தை கோடாரியாய் வீசிய பி.சீனிவாசராவின் வழிதொட்டு, தமிழக வீதிகளில் அரங்கேறி வரும் தீண்டாமைக்கொடுமைகளைக் களைய களம் கண்டு வரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இருபத்தியாறு தலித் அமைப்புகள் உள்ளிட்ட 52 அமைப்புகள் உள்ளன.

உத்தப்புரத்தில் துவங்கிய தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் மேலும், மேலும் வீறுகொண்டு பல்வேறு மாவட்டங்களில் கோயில் நுழைவுப் போராட்டமாய், நிலமீட்புப் போராட்டமாய், பொதுப்பாதையை மறுக்கும் சாதித்திமிருக்கு எதிரான போராட்டமாய் பலரூபம் கொண்டு வருகிறது.

புதுக்கோட்டையில் பி.எஸ்.தனுஷ்கோடி அரங்கத்தில் மே-28ந் தேதி துவங்கிய இம்மாநாடு 29 ந்தேதி வரை நடைபெற்றது. மாநாட்டின் முதல் நிகழ்வாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தியாகிகள் ஜோதி பெற்றுக் கொள்ளப்பட்டது.

நாகை மாவட்டத்தில் இருந்து வெண்மணி நினைவாக கொண்டு வரப்பட்ட தீண்டாமை ஒழிப்பு வர்க்க ஒற்றுமை ஜோதியை அகில இந்திய விவசாயிகள் பொதுச்செயலாளர் கே.வரதராசன் பெற்றுக் கொண்டார். திருப்பூர் இடுவாய் ரத்தினசாமி நினைவாக கொண்டுவரப்பட்ட தீண்டாமை ஒழிப்பு மக்கள் ஒற்றுமை ஜோதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன் பெற்றுக் கொண்டார். மதுரை மாவட்டம் மேலவளவு முருகேசன் நினைவாக கொண்டுவரப்பட்ட தீண்டாமை ஒழிப்பு ஜோதியை சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா பெற்றுக் கொண்டார். அதிர்வேட்டுகள் முழங்க ஜோதி பயணக்குழுவிற்கு வரவேற்பளிக்கப்பட்டது. தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு தலைவர்கள் மற்றும் மாநாட்டுப் பிரதிநிதிகள் மலரஞ்சலி செலுத்தினர்.

மாநாட்டிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் பெ.சண்முகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.லதா, எஸ்.கே.மகேந்திரன் மற்றும் பி.சுகந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். வரவேற்புக்குழுத் தலைவர் எல்.பிரபாகரன் வரவேற்றார். அகில இந்திய விவசாயிகள் பொதுச்செயலாளர் கே.வரதராசன் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார்.அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்புக்காக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். 148 தீண்டாமை வடிவங்கள் இருப்பதாக ஆந்திராவில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. தமிழகத்தில் 80 வகையான தீண்டாமை வடிவங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், மேலும் இக்கொடுமையின் வடிவங்கள் இருக்கக்கூடும். கூலி உயர்வு பேசும் நீங்கள் எதற்கு சாதியைப் பற்றிப் பேசுகிறீர்கள் என நம்மைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள். சாதிய ஒடுக்குமுறை மட்டுமின்றி பொருளாதார ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். ஏனெனில் வர்க்கமும், சாதியமும் இணைந்து கிடக்கிறது. வெண்மணியில் துவங்கிய போராட்டம் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரப் போராட்டத்தை சமுதாயப் போராட்டத்துடன் இணைத்து நடத்த வேண்டும்" என்று சுட்டிக்காட்டினார்.

முதல் நிகழ்வில் பஞ்சமி நில மீட்புக்குழுத் தலைவர், ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் வி.கருப்பன், சாட்சியம் இயக்குநர் கதிர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் அறிக்கை சமர்ப்பித்தார். அதன் மீது பிரதிநிதிகளின் ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாட்டில் 2 ஆவணப்படங்களின் குறுந்தகடுகள் வெளியிடப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம் காங்கியனூரில் நடைபெற்ற கோவில் நுழைவுப்போராட்டம் குறித்து வடசென்னை தமுஎகச சார்பில் விஜயன் தயாரித்த,“ காங்கியனூர் கருவறை‘ என்ற ஆவணப்படத்தை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் ஏ.லாசர் வெளியிட, தமிழ்நாடு அருந்ததியர் சங்க தலைவர் அரு.சி.நாகலிங்கம் பெற்றுக் கொண்டார். மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் கெட்டிப்படுத்தப்பட்ட சாதியத்திமிரை உடைத்தெறிந்த வரலாற்றை, சாத்தூர் தமுஎகச சார்பில் மாதவராஜ் தயாரித்த “உத்தப்புரம்: உடைபடும் சுவர்கள்‘ என்ற ஆவணப்பட குறுந்தகட்டினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் கே.பாலபாரதி வெளியிட, புதுச்சேரி தலித் சுப்பையா பெற்றுக் கொண்டார்.

பிரகாஷ்காரத் பங்கேற்பு

மாநில மாநாட்டின் இரண்டவாது நாள் நிகழ்வில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: "கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ்நாட்டில் நிலவுகின்ற அனைத்து வகையான தீண்டாமைக் கொடுமைகள் மற்றும் சாதிய வேறுபாடுகளை எதிர்த்து மகத்தான இயக்கங்கள் நடத்தியுள்ளது. இன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் பிறபகுதியின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் இயக்கங்களை நடத்த அவர்களுக்கு உத்வேகத்தை தந்துள்ளது" என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், "இந்திய சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் முடிந்துவிட்டது. அரசியல் சட்டம் அனைவருக்கும் சமம் என்று பிரகடனப்படுத்துகிறது. ஆனாலும், சாதிய வேறுபாடுகள் இன்னும் தொலைந்தபாடில்லை. நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் தான் சாதியம் வேர் பிடித்து வளரும் என்றும், முதலாளித்துவ வளர்ச்சியில் அது தொலைந்து போகும் என்றும் கருதப்படுகிறது. ஆனால், இன்று நாட்டில் சாதியானது எல்லா வர்க்கங்களையும் கடந்து சமுதாயத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.

இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கப் பொதுச்செயலாளர் உ.வாசுகி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் ஏ.லாசர், மார்க்சிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச்செயலாளர் எம்.சின்னத்துரை, இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச்செயலாளர் எஸ்.கண்ணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் இரா.அதியமான், தமிழ்நாடு அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநிலத்தலைவர் கு.ஜக்கையன், தமிழ்நாடு அருந்ததியர் சங்க தலைவர் அரு.சி.நாகலிங்கம், அருந்ததியர் மகாசபை தலைவர் மரியதாஸ், களம் அமைப்பாளர் பரதன், ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை ஏ.எஸ்.பௌத்தன், புதுச்சேரி தலித் சுப்பையா, தமிழ்நாடு அருந்ததியர் ஜனநாயக முன்னணி     கௌதமன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ரவிக்குமார், டாக்டர் அம்பேத்கர் பேரவை நிக்கோலஸ், அம்பேத்கர் கிராம மக்கள் உரிமை இயக்கம் சுப்பு, தமிழ்நாடு.ஆதி ஆந்திரா அருந்ததியர் மகாசபை டாக்டர் கே.ஆர்.நாகராஜன், நவஜீவன் டிரஸ்ட் நளன், வீர அருந்ததியர் பேரவை ஓ.ரெங்கசாமி, அருந்ததியர் விடுதலை முன்னணி என்.டி.ஆர், ஜகஜீவன்ராம் மக்கள் ஜனநாயக இயக்கம் சென்னியப்பன், அருந்ததியர் மனித உரிமை இயக்கம் கருப்பசாமி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள் 

cpm_350சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் நடந்த பாதை அடைத்துவைக்கப்பட்டுள்ளது. அந்தப்பாதையை ஒரு மாத காலத்திற்குள் திறந்துவிடவேண்டும். மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தலித் மக்களுக்காக திறந்துவிடப்பட்ட பொதுப்பாதையை முழுமையாக தலித் மக்கள் பயன்படுத்தவும், நிழற்குடை அமைத்து தரவும் தமிழக அரசு ஜீன்-30 ந்தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நேரடியாக களத்தில் இறங்கி போராட்டம் நடத்தும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தலித் இட ஒதுக்கீடு சதவீதம் உயர்வு, தனியார் துறை இட ஒதுக்கீடு, நிலுவைக் காலியிடங்கள நிரப்பப்பட வேண்டும். தலித் உட்கூறு திட்டங்களின் முறையான அமலாக்கத்தை அரசு உறுதி செய்ய வேண்டும். 2010-11ம் ஆண்டில் தலித் மக்கள் தொகைக்கேற்ப பட்டியலினத்தவர் துணைத்திட்டத்திற்கு ரூ 3828 கோடிகள்(19.14 சதவீதம்) முதன்முதலாக தமிழகத்தில் ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியதாகும். உத்தப்புரத்தில் தலித் மக்களின் அரச மர வழிபாட்டிற்கும், பேருந்து நிழற்குடை அமைப்பதற்கும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக அரசு நில ஆவணங்களை முறையாகப் பரிசீலித்தும், புகார்களை ஆய்வுக்குட்படுத்தியும் பஞ்சமி நிலங்களை மீட்டு தலித்துகளிடம் ஒப்படைக்க வேண்டும். தலித் பெண்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை அமலாக்குமாறும், பாலியல் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. புதிரை வண்ணார் சமூகத்திற்கு தாமதமின்றி சான்றிதழ் வழங்க வேண்டும். காங்கியனூரில் அடக்குமுறையை ஏவிவிட்ட காவல்துறை எஸ்.பி. அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிலம், பட்டா, தொகுப்பு வீடு பராமரிப்பு ஆகிய தலித் வாழ்வுரிமைப் பிரச்சனைகளில் உடனடித்தீர்வு காண தமிழக அரசை வலியுறுத்துவதோடு, உழைப்பாளி மக்களைத் திரட்டிப் போராடுவதெனவும் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு  

மாநாட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், அமைப்பின் துணைத்தலைவர்களாக என்.வரதராஜன், இரா.அதியமான், ஏ.லாசர்,பெ.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், கு.ஜக்கையன், ஜி.லதா, ஆர்.சிங்காரவேலு, கோவை ரவிக்குமார், நிக்கோலஸ், ஞானப்பிரகாசம், எஸ்.திருநாவுக்கரசு, ஜி.ஆனந்தன், எம்.சின்னதுரை, நாகைமாலி, உ.நிர்மலா ராணி, சுப்பு ஆகியோரும், செயலாளர்களாக க.சுவாமிநாதன், கே.ஆர்.கணேசன், எஸ்.கண்ணன், பி.சுகந்தி, ஆர்.கிருஷ்ணன், பி.இசக்கிமுத்து, யு.கே.சிவஞானம், ஆதவன் தீட்சண்யா, கே.ராமசாமி, பி.இராமமூர்த்தி, ஜி.பெருமாள் கணேஷ், எஸ்.பொன்னுத்தாய், பழனிச்சாமி, தங்கராஜ், எம்.ஜெயசீலன், ராஜ்மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இத்துடன் 98 மாநிலக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்திய மண்ணில் சாதியக் கட்டமைப்பின் உச்சபட்ச கொடுரமாக தீண்டாமை விளங்குகிறது. பிறப்பிலிருந்து இறப்புவரை வாழ்க்கையின ஒவ்வோர் அம்சத்திலும் தீண்டாமை நீக்கமற நிறைந்திருக்கிறது. தேநீர்க்கடைகள், சிகை திருத்தகம், சலவையகம், கோவில், குளம், ஆறு, மயானம் என எல்லா அம்சங்களிலும் தீண்டாமைக் கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் இன்றும் நீடிக்கின்றன. இத்தகைய ஒடுக்குமுறைகள் உழைப்பாளி மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்களுக்குப் பெரும் சவாலாய் விளங்குகின்றன. எனவே, இது தலித் மக்களை இலக்குகளாக்குகிற அநீதிகள் எனும் போதும் இது குறிப்பிட்ட பகுதி மக்களின் பிரச்சனை மட்டுமல்ல. இத்தகு அநீதிகளை எதிர்கொள்ளாமல் சனநாயகத்திற்கான போராட்டத்தில் இம்மியளவும் நகர முடியாது. எனவே தேசத்தின் இழிவாக விளங்குகிற தீண்டாமைக் கொடுமைகளை அடியோடு ஒழிப்பதற்கு இம்மாநாடு உறுதியேற்கிறது என பிரகடனம் வெளியிடப்பட்டது.

50 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி

மாநாட்டின் முத்தாய்ப்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாட்டையொட்டி புதுக்கோட்டையே குலுங்கும் வகையில் எழுச்சிமிகு பேரணி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி துவங்கியது. அகில இந்திய விவசாயிகள் சங்கப்பொதுச்செயலாளர் கே.வரதராசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் ஏ.லாசர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் பி.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.சீனிவாசன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.லதா, என்.நன்மாறன்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத்தலைவர் என்.அமிர்தம், இந்திய வாலிபர் சங்க மாநிலச்செயலாளர் எஸ்.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து

பேரணி சின்னப்பா பூங்கா சென்றடைந்தது. புதுச்சேரி சப்தர் ஹஷ்மி கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் பி.சம்பத் தலைமை வகித்தார். வரவேற்புக்குழுச்செயலாளர் எம்.உடையப்பன் வரவேற்றார். மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் பேசுகையில், "மத்திய அரசு கடைபிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் சாதாரண மக்களின் வாழ்வுரிமை, தலித் மக்களின் வாழ்வுரிமைக்கு எதிராகவும் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கிறது.பொதுத்துறை தனியார்மயமாக்கப்படுவதால் தலித் மக்களின் இடஒதுக்கீடு வெட்டிச்சுருக்கப்படுகிறது. புதிய வேலை நியமனமும் தடை விதிக்கப்படுகிறது. இதனால், இடஒதுக்கீடு பொருளிழந்து போகிறது. தனியார் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு இல்லை என்ற நிலையில் அரசுத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை வெட்டிச்சுருக்கும் வேலையில் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் போராட முன்வரவேண்டும். இப்படிப்பட்ட போராட்டம் மூலம் மட்டுமே தலித் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க முடியும்" என்று குறிப்பிட்டார்.

ஐந்து முறை முதல்வராய் இருந்தும் . . .

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், " 26 தலித் அமைப்புகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ள தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அமைப்பின் நேரடி நடவடிக்கைகள் வெற்றி பெற்றிட எந்தத்தியாகத்தையும் செய்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் கீழத்தஞ்சையில் தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக பி.சீனிவாசராவ் நடத்திய போராட்டம் தீண்டாமைக்கொடுமையின் முதுகெலும்பை ஒடித்தது. அப்படிப்பட்ட பெருமை செங்கொடிக்கு மட்டும் உண்டு. இடதுசாரிகள் ஆட்சியில் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தீண்டாமைக்கொடுமைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆட்சியைப் பயன்படுத்தி தலித் மக்களின் தேவைகளை நிர்வாக ரீதியாகவும் அந்த ஆட்சிகள் பூர்த்தி செய்துள்ளன. சாதிக்கொடுமைகளை ஒழிக்க அண்ணல் அம்பேத்கர் நடத்திய போராட்டங்களும், சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்களும், வர்க்கப்போராட்டத்துடன் தீண்டாமைக்கொடுமைகளுக்கு எதிராக பி.சீனிவாசராவ் நடத்திய போராட்டங்களின் அனுபவங்களை உள்வாங்கி செயல்படும் ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகும். தமிழகத்தில் தந்தை பெரியாரின் பாதை எனப்பேசும் திராவிடக்கட்சிகள் கையில் 42 ஆண்டு காலமாக ஆட்சியதிகாரம் இருந்தாலும் தீண்டாமைக்கொடுமைகள் ஒழிக்கப்படவில்லை. திமுக தலைவர் கலைஞர் 5 முறை முதலமைச்சர் பொறுப்பில் இருந்தும் தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கமுடியவில்லை" என ஜி.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

பெரியார் வழி பேசுபவர்கள்

கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன் பேசுகையில், " இன்றைக்கு 'பெரியார் வழி' என பேசிக்கொண்டிருக்கிறார்கள். பெரியார் வழி பற்றி பேசுபவர்கள் அதிலிருந்து தவறுகிறார்கள், தடுமாறுகிறார்கள். தீண்டாமை ஒழிப்பிற்காக களத்தில் நின்று போராடுபவர்கள் நாம் தான். தமிழகத்தில் சென்னையில் மட்டும் மயான உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏன் இது போன்று தமிழக முழுவதும் செய்யவில்லை. மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் இறங்கி மூச்சுத்திணறி தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சென்னையில் மட்டும் நவீன இயந்திரம் உள்ளது. மற்ற இடங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. தீண்டாமைப் பிரச்சனைகளில் துணிவோடு தலையிட்டு அதில் வெற்றி காண்போம். பெரியார் வழி பேசுபவர்களுக்கு மக்கள் எழுச்சியின் மூலம் சரியான பதில் அளிப்போம்" என்று குறிப்பிட்டார்.

ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத்தலைவர் இரா.அதியமான் கூட்டத்தில் பேசுகையில், "தமிழகத்தில் கந்துவட்டி ஒழிப்பு, கொத்தடிமை முறை ஒழிப்பு, குழந்தைத் தொழிலாளர் தடை போன்ற பல்வேறு சட்டங்கள் உள்ளது. ஆனால் நடைமுறையில் நடப்பது வேறு. இப்போது கட்டாயக் கல்வி என்கிறார்கள். சுதந்திரம் பெற்று 60ஆண்டுகளுக்கு மேலாகியும். கல்வி மறுக்கப்படுகிறது என்பதற்கு அடையாளம்தான் இந்தச் சட்டம். தலித் மக்களின் பிரச்சனைகளுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கட்சியால் மட்டுமே தீர்வு காண முடியும். அருந்ததியர் உள் ஒதுக்கீடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் தொடர் போராட்டத்தால்தான் கிடைத்தது. போராட்டம் இன்றி எதுவும் இல்லை. தமிழக முதல்வர் கருணாநிதியோ, நானே கோரிக்கை வைத்தேன், நானே நிறைவேற்றினேன் என்கிறார். கோவை செம்மொழி மாநாட்டையொட்டி இடைக்காலமாக துப்புரவுப்பணியாளர்கள் ரூ.100 சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது.இத்தகைய கொடுமை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தும் போராட்டங்களுக்கு என்றும் நாங்களும் துணை நிற்போம்" என்று அவர் கூறினார்.

தலித் மக்களுக்கு அதிகாரம்

அருந்தமிழர் விடுதலை இயக்கத்தலைவர் கு.ஜக்கையன் பேசுகையில், "தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை. ஒழிக்க வேண்டியவர்களே அதனை கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் தமது எழுத்தில் 'சண்டாளர்' என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். 'சண்டாளர்' என்றால் ஒடுக்கப்பட்டவர்கள் என்று பொருள். இந்த வார்த்தையை அவர் தவிர்க்க வேண்டும். அரசியல் அதிகாரத்தோடு தீண்டாமை கட்டமைக்கப்பட்டுள்ளது. தலித் மக்களுக்காக துவக்கப்பட்ட இயக்கங்கள் இன்று திசை மாறி சென்று கொண்டிருக்கிறது. தலித் மக்களுக்கான போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களையும் ஒன்றிணைத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாற்றி வருகிறது. தலித் மக்களுக்கான அதிகாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே பெற்றுத்தர முடியும்" என அவர் கூறினார். தமிழகத்தில் தீண்டாமைக்கொடுமைகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடிய பலர் பாராட்டப் பெற்றனர்.

தமிழகத்தில் சிதறிக்கிடக்கும் தலித் அமைப்புகளை ஒன்று திரட்டும் அமைப்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாறியுள்ளது என்றால் அது மிகையில்லை. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராகவும் களமிறங்கியுள்ள இந்த அமைப்பின் பணிகள் தலித் விடுதலையின் வரலாறுகளைக் கட்டாயம் எழுதும்.

- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)