உன்
கறுப்படைந்த கலாச்சாரத்தில்..
தூக்குதண்டனைதான்
ராஜ உபசாரமா?

உன்
எண்ணெய் வியாபாரத்திற்கு..
இன்னொரு பெயர்
ஜனநாயகமா?

தூக்கிலிடப்பட்டது..
சதாம் மட்டுமல்ல
உன்னுடைய பாதுகாப்பும்தான்!

அவன் விளையாடி மகிழ்ந்த
சிறுவயதுக் கோலிக்குண்டுகள்..
உன்
அசுரப்பார்வைக்கு ஏன்..
அணுகுண்டாய் தெரிந்தது?

மரணத்தை அவன் ..
மகிழ்ச்சியோடு அழைத்தான்!
மரணபயத்தை நீ..
கறுப்புத்துணி அணிந்து
மறைத்தாய்!

த வளையை தொண்டைக்குள்
தக்கவைத்த
பாம்பு எப்படி..
பச்சாதாபம் காட்டும்?

எந்த சரித்திரத்தையும்..
ஒரு
மரணம் வந்து
முடித்துவிடாது!

அவன்
உயிர் பிரிந்தது
இறப்பு அல்ல!
அது
கண்களுக்கு மறைக்கப்பட்ட
உயிர்பித்தல்!


அவன்
மரணிக்கும்பொழுது விட்ட
கடைசி மூச்சுக்காற்று...
இன்னமும்
ஈராக்கில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறதாம்!

உனது
சாம்ராஜ்யம்
சமுத்திரமாகிவிட்டதாக நினைக்கின்றாய்!
ஆனால் புரிந்துகொள்
உனது
பாதுகாப்புதான்..
பனித்துளியாகிவிட்டது!


தீவிரவாதி என்று
நீ
பட்டம் சூட்டியவன்..
தியாகியாகிவிட்டான்!

தியாகி போல நடிக்கின்ற ..
நீ
தீவிரவாதியாகிவிட்டாய்!

அப்பாவிகளைக் கொன்றதற்கு
மரணதண்டனையா?
ஒத்துக்கொள்கிறேன்
ஆனால்
உனக்கான தூக்குக்கயிறு
சதாமின்
காலடியில் அல்லவா
கண்டுபிடித்திருக்க வேண்டும்!

ஈராக்கில் நீ வெட்டிய
ஒவ்வொரு
பதுங்குகுழிக்குப்
பக்கத்திலும்
உனக்கும் ஒரு குழி
தோண்டப்பட்டது ..
உன்
சாட்டிலைட்டுக்கு தெரியவில்லையா?

சதாமின்
புதைகுழியில் இருந்து
புறப்படுகின்ற..
புற்களை வெட்டிவிடு!
யாருக்குத் தெரியும்?
அதிலிருந்து கூட உனக்கு
ஆயுதம் தயாராகலாம்!

உனக்கு
குண்டு போட்டு
குண்டு போட்டு..
களைத்துவிட்டது!
எங்களுக்கு
செத்து செத்து..
சோர்வாகிவிட்டது!

புஷ்ஷே!
எந்த புத்தாண்டில் ...
நீ சபதம் எடுக்கப்போகின்றாய்?
மனிதனாய் மாறப்போவதாக!

சதாமைப்போலவே
இந்தக் கவிதையும்
முடிந்துவிட்டது
ஆனால்
முற்றுப்பெறவில்லை........


ரசிகவ் ஞானியார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It