மனிதகுலம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை அது நடத்திவந்த போராட்டங்கள் அனைத்தும் தனித்தனியே பல இலக்குகளை கொண்டதாக இருந்தாலும் அப்போராட்டங்கள் அனைத்திற்கும் பொதுவான இலக்கு ஒன்று இருந்தது. அது முன்பு அது அனுபவித்துக் கொண்டிருந்ததைக் காட்டிலும் கூடுதலான சுதந்திரத்தை அடைவது என்பதாகும். அதாவது மனிதகுலத்தின் போராட்டம் அனைத்தின் பொது இலக்குமே கூடுதல் சுதந்திரம் என்பதை நோக்கியே இருந்தது.

மேலும் மனிதன் அவனது குறிப்பிட்ட ஒரு பருவத்தில் அவன் வாழ்க்கையிலேயே அதிகபட்ச சுதந்திரத்துடன் இருக்க விரும்புகிறான். அந்தப் பருவம்தான் அவனது இளமைப்பருவம். அதிலும் அவன் கல்லூரிவரை சென்று கல்விபயிலும் வாய்ப்புப் பெற்றவனாக இருந்தால் அவன் இயற்கை, சமூகம் குறித்த பல வி­யங்களைத் தெரிந்தவன் என்ற ரீதியில் தனது அறிவினைப் பயன்படுத்தி சுதந்திரம் என்ற கண்ணோட்டத்திலும் பல புதுப்புது பரிமாணங்களைக் கொண்ட மிகுந்த சுதந்திரம் உடையவனாக விளங்குவதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளான். ஆனால் அத்தகைய கல்லூரி மாணவப்பருவம் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப்போல் அத்தனை சுதந்திரத்தை மாணவர்களுக்கு வழங்குவதாக உள்ளதா என்று பார்த்தால் அழுத்தமான இல்லை என்பதே இன்றைய பதிலாக இருக்கும்.

இன்றைய மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய படிப்பைத் தேர்ந்தெடுக்க முதற்கண் சுதந்திரமில்லை. எத்தகைய படிப்பு இன்று வேலை வாய்ப்புச் சந்தையில் எடுபடும் நிலை நிலவுகிறதோ அந்தப் படிப்பை நோக்கியே அனைவரும் துரத்தப்படுகின்றனர். இந்தப் போக்கு முன்பும் ஓரளவு இருந்தாலும் இப்போது இருப்பதைப்போல் அத்தனை கொடுமையானதாக எப்போதும் இருந்ததில்லை. மேலும் இந்தப் படிப்பிற்கு இத்தனை காலம் வேலை வாய்ப்பிருக்கும் என்றும் கூறமுடியாத நிலை ஆண்டுதோறும் வேலைச் சந்தையில் வாய்ப்புள்ளவை என பல்வேறு படிப்புகள் மாறிமாறி வரும் ஒரு நிச்சயமும் இல்லாத போக்கு.

 இதுதவிர கல்வியைக் கைகழுவ விரும்பும் அரசின் கொள்கைகளின் விளைவாக கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தன்னாட்சி அவர்களின் மிச்சம் மீதியிருக்கும் சுதந்திரங்களையும் அடியோடு தட்டிப் பறித்து விடுகிறது. அடிமை சமூகத்தில் அடிமைகளை ஆட்டிப்படைத்த சாட்டைகளாக அகமதிப்பீட்டு முறையில் ஆசிரியர்கள் கரங்களில் இருக்கும் மதிப்பெண் வழங்கும் அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது. கல்வி என்பது ஆசிரியர் , மாணவர் இருவரும் இணைந்து கல்லூரி வளாகத்திற்குள் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்காக நடத்தும் ஒரு ஜீவனுள்ள வாழ்க்கை என்பது அறவே அழிந்தொழிந்து போய்விட்டது. ஆசிரியர் , மாணவர் உறவே எஜமானன் அடிமை என்ற உறவுபோல் ஆகிவருகிறது.

உயர் தொழில் நுட்பம் கற்பிக்கப்படும் கல்லூரிகள் கலைக் கல்லூரிகளைக் காட்டிலும் பல மடங்கு பெருகி மலிந்துவிட்ட காரணத்தால் அங்கு கல்வி கற்பிப்பதற்கு நியமிக்கப்பட உரிய தகுதியுள்ள ஆசிரியர்கள் தேவைப்படும் எண்ணிக்கையில் கிடைப்பதில்லை. கடந்த ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்கள் கூட இந்த ஆண்டு ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் உள்ளபடியே போதிக்கும் திறன் இன்றி ஏனோதனோ என்று எதையாவது சொல்லிக் கொடுத்துவிட்டுப் போகும் போக்கே அறுதி பெரும்பான்மை கல்லூரிகளில் நிலவுகிறது.

உண்மையான அறிவைப் பெறுவதற்கு உதவும் சந்தேகங்கள் கேட்டு தெளிவுடன் கல்விகற்கும் முறை அறவே இல்லாத அவலநிலை. கற்பிக்கும் திறனில்லாத ஆசிரியர்களிடம் அகமதிப்பீட்டு முறையின் கீழ் மதிப்பெண்கள் வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டால் அவர்களிடம் ஒரு அப்பட்டமான அதிகாரவர்க்க போக்கே தலைதூக்கி நிற்கிறதே அன்றி கல்விமான்களிடம் நிலவவேண்டிய குணங்கள் எவையும் விஞ்சி நிற்பதில்லை. தன்னையொத்த அரசு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் எல்லாம் தன்னைப்போல் பலமடங்கு ஊதியம் பெறும் நிலையில் தான் மட்டும் கல்லூரி ஆசிரியர் என்ற பெயரில் வெறும் 5000 , 6000 மட்டுமே ஊதியம் பெறும் நிலை. கல்வி குறித்த கண்ணோட்டம் எதுவும் இல்லாது காசு சம்பாதிப்பதை மட்டுமே நோக்காகக் கொண்டு நடத்தப்படும் நிர்வாகங்களால் தாங்கள் நடத்தப்படும் முறை இவை அனைத்தும் சேர்ந்து அவர்களில் பலரது மனதில் உருவாக்கும் வக்கிரமும் , விரக்தியும் இதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுகின்றன.

கல்லூரிகளில் மாணவர் பேரவைகள் இல்லாமல் செய்யப்பட்டது இன்னொரு வகையில் தட்டிக் கேட்பதற்கு அமைப்பேதுமில்லாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது. அதன் விளைவாக கட்டணங்களை தீர்மானித்தல் உள்பட அனைத்துமே கல்லூரி நிர்வாகங்களின் தன்னிச்சை உரிமையாகிவிட்டது. கல்வி பயிற்றுவிப்பதற்காக அரசால் நிர்ணயிக்கப்படும் கட்டணங்கள் தவிர எண்ணிறந்த பெயர்களில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும் கொடுமை. அதைத் தட்டிக்கேட்க ஆளில்லாத நிலைமை.

கல்லூரிகளுக்கு தன்னாட்சி பெறும் உரிமையில் தொடங்கி தனியார் துறையில் புதுக் கல்லூரிகள் தொடங்குவதுவரை அனைத்துமே உரிய அமைப்புகளுக்கும் , அரசு நிர்வாகத் துறைகளுக்கும் செலுத்த வேண்டிய கப்பத்தினை செலுத்திப் பெறப்படுவதால் இந்தக் கோளாறுகள் எதையும் அரசு நிர்வாகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்றாலும் பலனேதும் கிட்டாது என்பதே சூழ்நிலையாக உள்ளது. வேறு பெரிய அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்து நடக்கும் முறை கேடுகளைத் தட்டிக் கேட்க வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்தால் பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களே இதுபோன்ற தனியார் தொழில் நுட்பக் கல்லூரிகள் பலவற்றை தாங்களாகவோ அல்லது தங்களது பினாமிகளைக் கொண்டோ நடத்தும் சூழ்நிலை. மேலும் கட்டணம் , நன்கொடை என்ற பெயர்களில் தாங்கள் அடிக்கும் கொள்ளையில் ஒரு பங்கினைப் பெரிய கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாகவும் , நன்கொடைகளாகவும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் வழங்கும் போக்கு.

பெற்றோர்களின் வருமானம் வணிக மயமாகிவிட்ட கல்விமுறையின் மூலமாக அட்டையென சுரண்டப்படுகிறது, இருந்தாலும் உலகமயத்தின் விளைவாக உருவாகும் ஒருசில உயர்ந்த ஊதியம் கிட்டும் வேலைகளுக்கு தன்பிள்ளை சென்றுவிட மாட்டானா என்ற நப்பாசை தனது வருவாய் முழுவதும் பறிபோனால் கூடப் பரவாயில்லை எந்தவகைப் பிரச்னையுமின்றி அவன் நல்ல மதிப்பெண்களுடன் கல்லூரி வளாகங்களில் தனியார் நிறுவனங்கள் நடத்தும் வேலைக்கான தேர்ச்சியில் வெற்றி பெற்று வந்துவிட வேண்டும் என்ற எண்ணமே அவர்களிடம் மேலோங்கி நிற்கிறது. அதனால் கட்டணம் என்ற ரீதியில் எத்தனை கொள்ளை அடிக்கப்பட்டாலும் அகமதிப்பீட்டு முறையில் அநீதியாக தன்பிள்ளை வஞ்சிக்கப்பட்டாலும் கூட மூச்சைப் பிடித்துக் கொண்டு 3 , 4 ஆண்டுகள் படித்து பிரச்னை எதுவுமின்றி பட்டம் பெற்று அவர்கள் வந்துவிட வேண்டும் என்பதே அவர்களின் பேராவலாக உள்ளது. பருவத்தின் தன்மைக்கு உகந்த விதத்தில் அநீதி என்று படுவதை தட்டிக்கேட்கும் மனப்போங்கு மாணவர்களிடம் எப்போதாவது ஏற்பட்டாலும் அதனை பாசமுள்ள பெற்றோர்களின் எதிர்பார்ப்பு என்ற இந்த நாசக்கயிறு கட்டிப் போட்டுவிடுகிறது.

இவ்வாறு உரிய முறையில் மாணவர்களின் உரிமைகளுக்கும் , உணர்வுகளுக்கும் வடிகால் அமைத்துக் கொடுக்காததன் விளைவாக ஒருவகை விரக்தி மனநிலையும் அதன் விளைவாக கிண்டல் , கேலிப் பேச்சுகளில் தஞ்சம் புகுந்து தங்களது தரத்தினைக் குறைத்துக் கொள்ளும் அவலநிலையில் மாணவர் சமூகம் உள்ளது. இத்தகைய கொடிய நிலையிலிருந்து விடுதலை என்பது மாணவர் சமூகத்திற்கு இல்லையா என்பது நமது மனதை உறுத்தும் கேள்வியாகும். இதற்கும் இதுபோன்ற கல்வி சார்ந்த பல கேள்விகளுக்கும் விடைகாண அணிதிரண்டு கலந்து கொள்வோம்.


மாணவர் ஜனநாயக இயக்கம் நடத்தும் கல்வி காக்க கருத்தரங்கு
காந்தி மியூசியம், குமரப்பாகுடில் அரங்கம், மதுரை
24.4.2010 காலை 10 மணி


பங்கேற்பவர்கள்:
டாக்டர். பெ. அரங்கராமானுஜம் IGNOU
மற்றும் பல பேராசிரியர்கள்,கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள்

இப்ப‌டிக்கு
மாணவர் ஜனநாயக இயக்கம் , தமிழ்நாடு
தொடர்புக்கு: தோழர் வினோத் குமார், செல்: 9003828065