19.06.2022 - ஞாயிறு- பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மற்றும் NGM கல்லூரி தமிழ்த்துறை இணைந்து நடத்திய நூல் அறிமுக விழாவில் எனது "இன்னொரு நான்" சிறுகதை தொகுப்பும்.... கவிஞர் காதலாராவின் "கெணத்து வெயிலு" கவிதை தொகுப்பும் இடம் பெற்றது. வரவேற்புக்கிணங்க வழக்கம் போல நண்பர்களோடு பொள்ளாச்சி சாலையில் போக்கே வைத்துக் கொண்டே சென்றோம். போகிற போக்கில் வாழ்வது நமது வழக்கம். வாழ்ந்தோம். போகிறதெல்லாம் போக்கு தான் என்று உணர்கையில்... சிரிப்பு தான்... சிந்தனை முழுக்க.

எங்கே இருக்கும் கல்லூரி என்று தடுமாறும் போது அதன் பக்கவாட்டில் தான் நின்றிருந்தோம். மேம்பாலம் ஏற கூடாது... அதற்கு முன்பு தான் கல்லூரி என்று உள்மனம் சொல்ல... கூகுள் நண்பன் ஒப்புக் கொண்டாலும் கிட்டத்தட்ட தடுமாறினான். ஆனாலும் சற்றே முன் செல்ல... பக்கவாட்டில் சிக்கென வளைந்து நின்ற NGM விரிவாக்கம் "வாங்கடா வெண்ணைங்களா" என்பது போல பார்த்தது. ஒரு சிறு வாயில் ஏற்றம்.... பிறகு மரங்கள் சூழ்ந்திருந்த கல்லூரி....
"கவிஜி வாயா" என்பது போல மனம் திறந்து வரவேற்றது. திறந்த மனதில் எல்லாம் தீபம் ஏற்றும் நாம் இங்கே ஏற்றாமல் விடுவோமா.

வாசல் வந்து வரவேற்ற நண்பர் பூபாலன் எப்போதும் மெல்லிய பூபாளம். அன்பின் ஆண் வடிவம்.

உள்ளே சென்ற பிறகு... கை கொடுத்து கவனம் கொடுத்த அம்சப்ரியா சார் எப்போதும் கருணை உள்ள கவிதை தான். அந்த சிரிப்புக்கு எல்லை இல்லை.

பேரன்பு அங்கே பரந்து விரிந்தது. ஒரு மாதிரி செட்டில் ஆன பிறகு... வழக்கம் போலான எங்கள் குதூகலம்... கும்மாளம்.. கொண்டாட்டம்... என்று கிசுகிசுப்போடு இலக்கியம் செய்ய ஆரம்பித்திருந்தோம்.

காலை 10.40 மணி அளவுக்கு நிகழ்வு சட்டென தொடங்கி விட்டது.

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 96 வந்து அமர்வு இது. வாவ் என்றிருந்தது. தொடர்ந்து இலக்கியத்துக்காக தங்களை மாத மாதம் அர்பணித்துக் கொள்ளும் அம்சப்ரியா சார்- க்கும் நண்பர் பூபாலனுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். இது தான் சாதனை. இதற்கு... எதற்கும் அசையாத நெஞ்சுறுதி வேண்டும். இருவருமே இலக்கிய தவம் கொண்டிருக்கிறார்கள். வாழ்த்துவோம்.

முதலில்....." படித்ததில் பிடித்தது" நிகழ்வு. சிலர் வந்து பேசினார்கள். சிலர் வந்து வாழ்ந்தார்கள். அவரவர்க்கு அவரவர் சிந்தனையின் வட்டம் அழகியல். கேட்க பார்க்க உணர பகிர என்று... மேடையை பழக்கும் வித்தையை அமைப்பு மிக அழகாக பயிற்றுவித்து கொண்டிருக்கிறது. அறிவில் என்ன பெரிது சிறிது... அவரவர் அளவில் அவரவர் உலகம் அழகு தான்... அறிவு தான். கேட்க கேட்க பார்க்க பார்க்க பரவசம். பன்முகம் கண்டபோது.... போதாது ஓடு என்றது நம்மை... இலக்கிய வேட்கை.

அடுத்து நேராக நிகழ்வுக்கு சென்று விட்டார்கள்.

முதல் நிகழ்வாக கவிஞர் காதலாராவின் "கெணத்து வெயிலு" கவிதை தொகுப்பை பற்றி பேசுவதற்கு "பேராசிரியர் விஜயகுமார்" களம் இறங்கினார். இறங்கியதும் நின்று நிதானமாக எதிர் தர்ப்பை பார்த்து பார்த்து காய் நகர்த்துவது ஒரு ரகம். இவர் இறங்கியதும் அடித்து துவம்சம் செய்யும் ரகம். சும்மா போட்டு தாக்கு தனக்கென தாக்கினார். எடுத்துக் கொண்ட ஒவ்வொரு கவிதைக்கும் உணர்வளித்தவர்... அதை உண்மையாகவே உணர்ந்துரைத்தார். பொதுவாகவே கவிஞர்கள் நெகிழ்வானவரகள். பேராசிரியர் விஜய் நம்மை விட உணர்ச்சி வயப்பட கூடியவராக இருந்தார். ஒருவேளை பெயர் அப்படி வேலை செய்கிறதோ என்னவோ... ஹா.... ஜோக்ஸ் அபார்ட்... உணர்ச்சிக்கும் உணர்வுக்கும்... இடையே பிளம்பென பொரிந்து தள்ளினார். புத்திக்குள் கண்ணீர் சிந்த அமர்ந்திருந்தோம். அவரவர் பாட்டியை நினைவூட்டிய கவிதைக்கு இவர் காலம் ஊட்டினார். அடுத்தடுத்து நிறைய மேடை இவருக்கு காத்திருக்கிறது.

அடுத்து அதற்கு ஏற்புரைக்கு நகர்ந்த "காதலாரா"... தனக்கே உரிய தாகத்தோடு பாலைவனம் கடந்தார். பதிந்த கால் தடங்களில் எல்லாம் பின் வரும் கவிஞர்களுக்கு பாடம்.

அடுத்து எனது "இன்னொரு நான்" சிறுகதை தொகுப்பை "தோழர் செந்தில்குமார்" அறிமுகம் செய்தார். மிக மெல்லிய குரலில்... மெல்ல மெல்ல மனம் நெருங்கினார். கொஞ்சம் உரக்க பேசி இருக்கலாம் என்று தோன்றினாலும்.... போக போக அவர் குரலுக்கு நாங்கள் பழகி விட்டோம். மெல்லிய சிரிப்பும் புன்னகை வனப்புமாக மனம் நிறைய பேசினார். கதைகளை பற்றி சொன்ன உரையாக்கத்தில் சில முரண்பாடுகள் இருப்பினும்....சொல்லப்பட்ட அனைத்திலும் அவரின் பார்வை வெளிப்பட்டது. மனம் நெகிழ நன்றி சொன்னேன். குறுகிய நாட்களில் 9 கதைகளையும் படித்து உள் வாங்குவதில் இருக்கும் சிரமம் நாம் அறிவோம். அதுவும் "இன்னொரு நான்"... "கருப்பு வெள்ளைக்காரன்"... "கடைசி ஆப்பிள்" இந்த மூன்று கதைகளையும் படிப்பதற்கான சவாலையும் படித்து புரிந்து கொள்வதற்கான சவாலையும் நாம் அறிவோம்.

அடுத்து எனது ஏற்புரையை கொஞ்சம் தூசு தட்டி இங்கே தருவிக்கிறேன்.

தொடர்ந்து பொள்ளாச்சி இலக்கிய வட்டம் தரும் ஆதரவு அளப்பரியது. நண்பர் பூபாலன் அவர்களுக்கும் அம்சப்ரியா சார் அவர்களுக்கும்.. மற்றும் பொள்ளாச்சி இலக்கிய வட்ட நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் பூபாலன் அவர்களும் அம்சப்ரியா சார் அவர்களும் ஏதோ ஒரு வகையில் எனது நூல்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே பங்களிப்பு செய்து கொண்டே இருக்கிறார்கள். அது இந்த மாதிரி அறிமுக கூட்டமாக இருக்கலாம். அணிந்துரை எழுதுவதாக இருக்கலாம். வாழ்த்துரை பேசுவதாக இருக்கலாம். நூல் பற்றிய சிறப்புரையாக கூட இருக்கலாம். இப்படி ஏதாவது ஒரு வகையில் தங்கள் சிறப்புகளை நிகழ்த்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இது தொடர வேண்டும்...என்பது தான் எனது அன்பும் ஆர்வமும்.

நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் அன்பர்களுக்கும் மனம் கனிந்த நன்றிகளோடு அன்பும்.

பொதுவாகவே நம்மை போன்றோரின் புத்தகங்களை மறுதலிக்கவும் மறுக்கவுமே நிறைய கற்றிருக்கிறது இலக்கிய உலகம். அதில் இருந்து முற்றிலும் வேறுபட்டு நல்ல விதை எங்கிருப்பினும் தேடி பிடித்து நீருற்றி வளர்த்தெடுக்கும் வேலையை பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மிக தெளிவாக செய்து கொண்டு வருகிறது. எனது முதல் புத்தகம் "நிழல் தேசத்துக்காரனின் சித்திர பறவைக"ளில் இருந்து இதோ "இன்னொரு நான்" வரை எப்போதும் தோள் கொடுக்கும் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தை பாராட்டுகிறேன். இடையே ஐந்தாவது புத்தகம் "சிப்ஸ் உதிர் காலம்" மட்டும் தான் கொரோனா கால கட்டம் என்பதால் விட்டு போனது.

சரி "இன்னொரு நான்" க்கு வருகிறேன்.

"இன்னொரு நான்" சிறுகதை தொகுப்பு நமது "தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை" ஆண்டு விழாவில் கடந்த டிசம்பரில் "பன்முக மேடை" மூலமாக வெளியானதில் பெரு மகிழ்வு. இருபது கதைகள் அனுப்பி இருப்பேன். அதில் இருந்து கனகச்சிதமான 9 கதைகளை தேர்ந்தெடுத்து... கச்சிதமான அட்டைப்படத்துடன் "இன்னொரு நான்" நூலை வெளியிட்ட எங்கள் "விசாகன்" சாருக்கு மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பகிரப்படாத பதுங்கு குழியை மரத்தில் செய்து விட்டு அவ்வப்போது வெளியே தலை நீட்டும் பெயர் தெரியாத சிறு பறவைக்கு ஒப்பானது எனது வாழ்வும் வசந்தமும். காலப்போக்கில் பச்சையமற்றவனாகி போனேன் என்பது என் வாழ்வின் கொடுக்கல் வாங்கல். கதைகளாகவும் நினைவுகளாவும் இருப்பதெல்லாமே இடைவிடாமல் தேடிக் கொண்டே இருக்கும் நானும்... இடைவிடாமல் தொலைந்து கொண்டே இருக்கும் எனது இன்னொரு நானும் தான். இது எனது ஆறாவது நூல். ஆனாலும் இது தீராத நான். முதல் நூல் கவிதை தொகுப்பு. இரண்டாவது நூல் சிறுகதை தொகுப்பு. மூன்றாவது நூல் நாவல். நான்காவது நூல் குறுங் கவிதை தொகுப்பு... ஐந்தாவது நூல்....கட்டுரை தொகுப்பு. ஆறாவது நூல் மீண்டும் சிறுகதை தொகுப்பு என்று இதோ இந்த "இன்னொரு நான்".

இதில் ஒன்பது கதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு களத்தில் என்று ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எழுதிய கதைகள். ஒன்றுக்கொன்று தொடர்பு என்றால் அது எழுதிய நான் மட்டும் தான். இன்னொரு நான் எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்து தொட்டு தொடரும் தொடர்பவைகளை தொடர்ந்து கொண்டே இருக்கிறது... அது தான் நூலாகவும் ஆகி இருக்கிறது.
இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையே இருக்கும் மெல்லிய கோட்டில் சத்தமாக புன்னகைக்கும் சிக்கலான வளைவுகள் நிறைய இருக்கும். அதே நேரம் கொய்யா மரத்தில் காலாட்டி அமர்ந்திருக்கும் ஓர் ஒற்றை சிறுவனின் துறுதுறுப்பும் கலந்திருக்கும்.

கதைகளின் தலைப்புகள் இங்கே
*************************************************
இந்த இளைஞனின் இசை தோள்களில் எப்போதும் "எமிலி மெட்டில்டா" போன்றொரு காதலி இருக்க தவறுவதில்லை.

"ஒன்றுமில்லை போ" போன்ற வாழ்வின் ஜன்னல்கள் எப்போதும் திறந்தே இருக்கும் இவன் பயணங்களில்.

"கடைசி ஆப்பிள்" - "கருப்பு வெள்ளைக்காரன்"...மிகு புனைவில் கவிஜிக்கு உச்சம் என்றே சொல்ல வேண்டும். இன்னொரு முறை அவைகளை என்னால் எழுதி விடவே முடியாது.

"புதிய கோடாங்கி"யும் "வேஷ"மும் கவனம் கொள்ள தக்கவை என்று பதிப்புரையில் விசாகன் சார் குறிப்பிட்டிருப்பார்.

"குருதிப்புனல்" காலத்துக்கும் குருதி கொட்டும் நிஜம்.

"நிழலி" ஆழ்மன இருட்டு. தேகத்தின் பிராண்டலே சராசரி வாழ்வின் அடிப்படை.

எல்லாவற்றுக்கும் மேல் இந்த நூலில் வரும் முதல் கதை "இன்னொரு நான்" இந்த தொகுப்பின் இதயம்... என்று தான் சொல்வேன்.

அந்த வகையில் 9 திசைகள் இந்த இன்னொரு நான் -ல் ஆரவாரமாக சிறகசைக்கின்றன.

ஏற்புரையில் சொல்ல மறந்து விட்ட ஒரு வரியை இங்கே சேர்க்கிறேன்.

எனது கதைகள் அமானுஷ்யம் பேய் பிசாசு என்ற வட்டத்தில் மட்டும் சுழலுவதில்லை. அதையும் தாண்டி எல்லா வகைமையிலும் அது தன்னை திருப்தி படுத்த சுழன்று கொண்டே இருக்கும். ஒவ்வொரு கதையிலும் சமூத்தின் மீதான பார்வை ஏதாவது ஒரு வகையில் வெளிப்படும். அது எந்த மாதிரி கதை வடிவமாக இருப்பினும்... பொழுதுபோக்கு என்ற வடிவத்தில் அது இருக்கவே இருக்காது. அட் லாஸ்ட்.... ஒரு விஷயம் சமூகத்துக்கானதாக இருக்கும். அதற்கு கவிஜி கியாரண்டி.

நிகழ்வில் அடுத்து....

கவிதைகள் படித்தார்கள். ஆஹா... அட்டகாசம் அதிலும் சிறுவர் இருவர் படித்த போது கவிதை வெடித்தது என்று தான் சொல்ல வேண்டும். கவிதை தன்னை அடுத்தடுத்து வளமை படுத்திக் கொள்ளும்... என்று ஆர்வம் மேலோங்க ஆச்சரியப்பட்டோம். தமிழ் எல்லாம் ஒரு போதும் சாகாது என்று மார் தட்டலாம். சத்தியமாக... ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு பாரதி வந்து கொண்டே இருப்பான்.

அடுத்து கவிதைகள் குறித்து அம்சப்ரியா சார் - ம்... நண்பர் பூபாலனும் தோராயமாக ஆளுக்கு 15 நிமிடம் கவிதைகள் குறித்து பேசினார்கள். அற்புதமான உரைகள். இருவருமே அவரவருக்கு உண்டான தனித்துவத்தில் போட்டு தாக்கினார்கள். கவிதையை எத்தனை கோணத்தில் எந்த வகையில் எல்லாம் இருவரும் யோசிக்கிறார்கள்.... நேசிக்கிறார்கள் என்று பார்க்கையில்... இருவர் மீதும் வந்த பிரமிப்பை அடக்க முடியவில்லை. அவர்கள் கவிதைக்கென்றே வாழ்கிறவர்கள். கருணையுள்ள கவிதையை அம்சப்ரியா சார் செய்ய... எடையற்ற கவிதையை வெகு நேர்த்தியாக.. நம்மிடையே கொண்டு சேர்த்தார் பூபாலன். ஆச்சரியமாய் ஆனந்தப்பட்டோம்.

அடுத்து நினைவு பரிசு அளித்தார்கள். நூல்களை பரிசாக பெறுவதை போல வேறு பரிசு நிறைவை தந்து விடுவதில்லை.

பிறகு....." இல்ல இல்ல சாப்பிட்டு தான் போகணும்" என்று இருவரும் அன்பால் அதட்டினார்கள்.

மணி 2.30 தாண்டி இருக்க... பசி.... வயிறு மனம் அறிவு மூளை என கிள்ள.... சிறப்பு மதிய உணவு எங்களை ஆராதித்தது. நிறைய அரட்டைகளோடு மனம் நிறைந்திருந்த எங்களுக்கு வயிறும் நிறைய.. விடை பெற்றோம். வீடு வருகையில் நேரம் மாலை 5. மனதிலோ நேரம் நல்ல நேரம்.

இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்கு பொள்ளாச்சி இலக்கிய வட்டம் நண்பர்களுக்கு மீண்டும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் இது போன்ற உன்னதமான இன்னொரு நிகழ்வில் சந்திக்கும் வரை

"காட்டுக்குள் நத்தை மனது. ஓடைக்குள் காட்டின் வளைவு. யானை ஆகிடத்தான் இந்த கனவு..."

- கவிஜி