மேடையின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா... புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு... புத்தக வெளியீடு என்று முப்பெரும் விழா 29.05.2022 அன்று சென்னையில் திட்டமிட்டபடி வெகு நேர்த்தியாய் நடந்தேறியது. மூன்று அமர்வுகளாக நடந்த நிகழ்வு ஞாயிறு பகலுக்கு வர்ணம் பூசியது. கோடை வெயிலுக்கும் கொஞ்சம் குளிர் ஞானம் பூட்டியது. இப்படி ஒரு நிகழ்வை தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை நடத்தி முடித்ததில் பெருமையே. இலக்கியம் செய்வதில் எந்த சமரசமும் நமக்கில்லை என்று இன்னொரு முறையும் உறுதிப்படுத்தி விட்டது. எட்டு ஆண்டுகள் கடந்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மேடையின் அனுபவங்கள் கண்டிப்பாக இலக்கிய தரத்தில் தான் இருக்கின்றன. எத்தனையோ நல்ல எழுத்துக்களை சமூகத்துக்கு அடையாளம் காட்டிய மேடை இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். இந்த மாதிரி நிகழ்வுகள் நம்மை நாமே உற்சாகப் படுத்திக் கொண்டு இன்னும் வேகம் கூட்டத்தான். அந்த வகையில்... மேடையின் மகத்துவம் ஜொலிக்கும் காலம் இது. "மேடை"யின் சாமரம் தொடர்ந்து வீசும்.

"ஈஸ்ட் ரைன் கைர்" எழுதி தமிழில் "ச வின்சென்ட்" மொழிபெயர்த்த "பிட்டர் வார்ம்வுட்" என்ற கிளாசிக் நாவல் உட்பட இன்னும் சில நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்கள் காலத்தின் கால்கள். அது தன் பாதைகளை யாரின் எழுத்து மூலமாகவோ சிறுக சேர்ந்து.... சிறகுகள் பூட்டி.... யான் பெற்ற இன்பம் பெறுக... வையகத்தை வந்தடைந்து விடுகிறது. அப்படி நூல்களின் வெளியீடு வாசித்தலின் வீணையை வெகு நேர்த்தியாய் விழிகளில் மீட்டியது. காலை வெயில் முதுகு கீறினாலும்... முகம் கனிந்த நம்பிக்கை தான் புத்தக வெளியீடு.

இந்தியாவில் இருந்து விடுதலை கேட்கும் நாகாலாந்து எப்போதுமே இந்தியாவுக்குள் இல்லை. அது தனி நாடு. தனி மொழி.. தனி கலாச்சாரம்... தனி பண்பாடு கொண்ட வேறு மண். நாக இனம்... எப்போதுமே தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக் கொண்டது இல்லை.. என்று இந்திய வடகிழக்கு பகுதியில் இருக்கும் நாகலாந்து பற்றிய செய்திகள்... மனதை கனக்க செய்தன. நமக்கு ஒரு பக்கம் நடப்பதை நாமும் இன்னொரு பக்கம் நடத்துவதை என்னவென்று சொல்வது. எத்தனையோ போராட்டங்கள்... எத்தனையோ வலிகள் என்று அந்த மண்ணின் ரத்தமும் சதையுமான சித்திரத்தை இந்த நூலில் கொண்டிருப்பதாக அது பற்றிய சிற்றுரை இருந்தது. முழுதாய் படித்து விட்டு எழுதுவோம். இந்த நூலை பதிப்பித்த "பன்முக மேடை"- க்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

அடுத்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்ட நிகழ்வு. ஒருவர் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறுதல் அமைப்புக்கு பலம் கூட்டும் அற்புதம். பொறுப்புகள் என்பது சுகமான சுமை. அது பேரன்பின் வனப்போடு அறிவு சார்ந்த முனைப்போடு சேருமிடம் சேர செய்யும் டீம் ஒர்க். அந்த வகையில்... புது பொறுப்புகள் ஏற்றுக் கொண்ட தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அதே நேரம் செயல்பாட்டுக்கான நேரம் என்ற நினைவூட்டலும் இது.

கருத்துக்கள் எதிர் கருத்துக்கள்.. வாதங்கள் விவாதங்கள் என்று கூட்டம் அதற்கே உண்டான உள்ளார்ந்த அறிவு தேடலோடு அமைந்தது. உற்ற கருத்துக்களும் மாற்றுக் கருத்துக்களும் மிக அனாயசமாக வந்து விழுந்தன. காதல் கவிதைகள் வேண்டாம் என்பது போல ஒரு கருத்து வந்து சேர... புரட்சியை கையில் எடுங்கள் என்பது அதன் தொடர்ச்சியாகவும் இருந்தது. மாற்று கருத்து... காதலே அடிப்படை என்றது. பெரும் போராட்டக்காரர்கள் காதலர்கள் தான் என்று உதாரணம் தந்தது. ரசனையின் அடிப்படையில் எழும் காதலே இங்கு எதற்கும் ஆரம்பம். ஒன்றின் மீதுள்ள காதலால் தான் அதை மீட்டெடுக்க மனிதன் ஆரம்பிக்கிறான் என்ற உண்மையை பலரும் அவரவர் வாய்ப்பில் மிக அழகாக சொல்லி எதிர்வினை ஆற்றினார்கள். காதல் கொண்ட நெஞ்சில் தானே மற்றவருக்கு இரங்கும் குணம் பிறக்கும். நாம் எப்போதுமே காதலர்கள் தானே. அன்பு இருக்கும் இடத்தில் உரிமைக்காக போராடும் குணம் தானாகவே சுடர் விட்டுக் கொண்டிருக்கும் என்பது நமது அனுபவம். காதலே நிம்மதி. ஆதலால் காதலிப்போம். காதலிப்போம். மற்றபடி புரட்சியை நாம் ஒரு போதும் கை விடுவதில்லை என்பது நமக்குள் இருக்கும் இன்பில்ட் சித்தாந்தம்.

தனி மனித மாற்றம் அதன் மூலம் சமூக மாற்றம் என்ற என் கருத்துக்கு கூட... இல்லை சமூக மாற்றமே தனி மனித மாற்றம் என்ற எதிர் கருத்து வந்தது. நீங்கள் நான் அவர் இவர் என்று நான்கு பேர் சேர்ந்தால் தானே அது சமூகம் என்ற புரிதலோடு நான் உணர்ந்திருப்பது.... ஒவ்வொரு தனி மனிதனும் சேர்ந்து தானே அது சமூகமாக மாறி இருக்கிறது. ஆக தனி ஒருவன் மாறாமல் சமூகம் எப்படி மாறும். ஒவ்வொரு தனி மனிதனுமே இந்த சமூகத்தின் அங்கம் தானே. காந்தி சொன்னதை எல்லாரும் கேட்டு விட்டார்களா என்ற கருத்துக்கு.... கேட்டவர்களும் இருக்கிறார்கள் என்ற கருத்தும் இருக்கிறது தானே. மார்க்ஸை மார்க்ஸே முழுதாக படிக்க முடியாது என்ற கருத்துக்கு.... எந்த மனிதனுமே தன்னை முழுதாக படிக்க முடியாது தானே என்ற மாற்று கருத்தும் நம்மிடையே இருக்கிறது தானே. ஒருவரின் கருத்தை மறுக்கவோ... மறுதலிக்கவோ யாருக்கும் முழு உரிமை உண்டு. ஆனால் அதை எந்த வகையில் செய்கிறோம் என்பதில் இருக்கிறது இலக்கியம்.

நேர்மறை எதிர்மறை எந்த மறையும் அற்ற என்று எல்லா தரப்பு மனிதனும்தான் சமூகத்துக்குள் இருக்கிறான். ஆனாலும்...அறம் சார்ந்த உள்ளுணர்வோடு தனி மனித மன மாற்றம் கொண்ட மனிதர்கள் தானே அறிவார்ந்த சமூகத்தின் தேவையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு வீடும் சுத்தமானால் வீதி சுத்தமாகும் என்ற அடிப்படையில் தான்...தனி மனித மாற்றம் அதன் மூலம் சமூக மாற்றம் என்ற நமது கருத்து. சரி.... கருத்துக்கள் குவிந்து களைந்து தேர்ந்தெடுத்து பிறகு ஒரு இயல் தானாக கட்டமைக்கப்படுகிறது. அது மீண்டும் ஒரு விவாதத்துக்கு இழுத்து போகிறது. தொடர் விவாதங்களின் வழியாக நம்மை நாமே இதய சுத்திகரிப்புக்கு உள்ளாக்குவது தான் இலக்கியம். அரசியல் இல்லாத இலக்கியம் அரிசி விளைவிக்காது என்று அறிந்திருப்பதால்... தீவிர அரசியல் படிப்போம்...ஆழ்ந்த இலக்கியம் வடிப்போம் என்று முடிவுக்கு வருகிறோம்.

நிகழ்வின் இறுதியாக ஆனால் இருத்தலியலின் வடிவமாக "ரமேஷ் வைத்யா" எனும் கதகளி... அடுத்த ஒரு மணி நேரத்துக்கு வானுக்கும் பூமிக்கும் இசையை எல்லா வகைமையிலும் நிகழ்த்தி பார்த்தது.

தலைப்பு "சி எஸ் சுப்பராமன்- திரையிசையின் வேர்க்கால்". ஆனால் அவரை வந்தடைய வைத்யா அவர்கள் எடுத்துக் கொண்ட ரூட் புத்திசாலித்தனமான அதே நேரம் தகவல்கள் நிரம்பிய வழி. அறுபது... எழுபது வருட இசை வெளியின் சிறகுகளை தன்னையே வானமாக்கி அசைய விட்டார். அசத்தி விட்டார் என்று சொல்லும் போது... நம்மை அசைத்தும் விட்டார் என்றும் சொல்ல வேண்டும். தமிழ் இசையில் இருந்த முக்கியமான ஆணிவேர்கள் பற்றி... அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்தது... அவரின் பண்டித தன்மையை வெளிப்படுத்தியது. உச்சம் தொட்ட இசைக்கலைஞர்கள் கூட இன்னும் எதற்காக காத்திருக்கிறார்கள்.... என்றால் அது ஊர் உலகம் சொல்லும் பண்டித தன்மைக்காக என்று இசைக்கலைஞர்களின் இதயத்தை எட்டி பார்க்க செய்த வைத்யா ஒரு சிரிப்பு வைத்தியம் என்றால் தகும். வார்த்தைக்கு வார்த்தை சுய பகடி... சுற்றத்தை போல நடி என்று போட்டு தாக்கியதெல்லாம்... இரு கரம் கூப்பி கற்றுக் கொள்ள வேண்டியது. அத்தனை சிறிய உடலில்.. எத்தனை பெரிய ஞானம். தான் ஒரு யாரோ என்பதாக இருக்கும் உடல்மொழி... கச்சேரி என்று வரும் போது கெத்து காட்டி சுத்து போட்டது பத்தாது இன்னும் என்று நம்மை ஏங்க வைக்கும் அதிரி புதிரி அக்மார்க் அசால்ட்.

தமிழ் சினிமாவில் இசையின் வழியே செய்யப்பட்ட சாகசங்கள் பற்றிய பேச்சில் தனது சாகசத்தை நகைச்சுவை உடல் மொழியோடு நர்த்தன வாய் மொழியோடு ரமேஷ் வைத்தியா அவர்கள் மேடையில் செய்ததெல்லாம் அசல் கலைஞனின் ஆத்மார்த்தமான நிகழ்த்துக் கலை. உடல் உபாதைகளை கூட பகடிக்குள்ளாக்கி சரியான இடத்தில் பொருத்தி கொளுத்தி போட்டதெல்லாம் தன்னை உணர்ந்த அறிவின் தீவிரம்.

ஜி ராமநாதன்... S. V வெங்கட்ராமன்...K V மகாதேவன்...C. S ஜெயராமன்...M. S விசுவநாதன்...ராமமூர்த்தி.... கண்டசாலா...வேதா...அஸ்வத்துமா... S. M சுப்பையா... R சுதர்சனம்... டி ஆர் பாப்பா.... G. K வெங்கடேஷ்...ஷியாம் அப்படியே சங்கர் கணேஷ்... சந்திரபோஸ்.... இளையராஜா.... கங்கை அமரன்.... வித்யாசாகர்..... ஆதித்யன்... தேவா... நான் கேட்டதற்கிணங்க மனோஜ் கியான் என்று தமிழ் சினிமா பாடல்களின் அரை நூற்றாண்டு விக்கிப்பீடியாவாகவே தன்னை மாற்றிக் கொண்டிருந்த வைத்யா அவர்களின் வேகமும் தாகமும்... இசையின் பால் கொண்ட தீரா மோகமும்.... அவரின் சிரிப்பும் சிந்தனையுமான தொடர் பேச்சில் உணர முடிந்தது. எத்தனை அனுபவம் இருந்தால் இத்தனை வெளிப்பாடு இருக்கும். மிரண்டு பார்த்துக் கொண்டிருந்தோம். சரி தலைப்புக்கு வருவோம். சங்கர் கணேஷில் இருக்கும் சங்கர் ராமன் அவர்களின் அப்பா தான் சுப்பராமன் என்பது தகவல் நமக்கு. அந்த சுப்பராமன் பற்றிய இந்த சிறப்புரைக்கு... சிறகு பூட்டியது தான்.... முன்பு குறிப்பிட்ட இசை அமைப்பாளர்கள் பற்றியும் அவர்களின் உச்சம் தொட்ட பாடல்கள் பற்றியும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மொழி இசை பொழிந்தது. இந்த C. S சுப்பராமன் இசையமைத்த படம் தான் தேவதாஸ். இசையை லாவகமாக கதையோடு இணைத்ததில்... இவரின் வேர்க்கால்களில்... காட்சி மொழியோடு காற்றின் மொழியும் கூடுதல் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நம் சிறு வயதில் எங்கோ எப்படியோ காற்றில் வந்து காதோடு நுழைந்த எத்தனையோ பாடல்களை உருவாக்கிய ஆளுமைகள் பற்றி அறிந்து கொள்ள கிடைத்த இந்த வாய்ப்பு மனம் நிறைய செய்த பேருவகை என்றே கருதுகிறேன்.

"ஓ இந்த பாட்டு இவர் போட்டதா..!" என்று ஆச்சரியப்படும் அனுபவம் எத்தனையோ முறை நமக்கு ஏற்பட்டிருக்கும். அப்படி ஆங்காங்கே ஒன்றும் இரண்டுமாக இருக்கும் ஆச்சரியங்களை மொத்தமாக்கி... நம் செவிகளுக்குள் தீர்த்தமென கொட்டி தீர்த்த ரமேஷ் வைத்யா அவர்களை ஆச்சரியம் குறையாமல் ரசித்துக் கொண்டிருந்தேன். அத்தனை தெரிந்ததால் தான் அத்தனை அமைதி அவர். மற்ற நிகழ்வுகள் நடக்கையில் தான் ஒரு வழிப்போக்கன் என்பது போலவே கூட்டத்தில் அமைதியாய் அமர்ந்து நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தவர் தன் முறை வருகையில்.... மேடையை அவர் வசப்படுத்தியது... மேடை ஏற நினைக்கும் யாவரும் கற்றுக் கொள்ள வேண்டியது. நிறைந்த குடம் ஒரு போதும் தளும்பாது மாறாக இசையை உணர்ந்தபடி சும்மா இருக்கும்.

படம் முழுக்க பாடல்கள் இருந்த காலத்தில் இருந்து... படத்தில் ஆறேழு பாடல்களின் அத்தியாவசத்துக்கு சினிமா வந்தது வரை... பாடல்களின் வலிமை பற்றியும் பாடல்களின் தேவை பற்றியும்.... சுருங்க கூறினாலும் நிரம்ப புரிந்தது. கர்நாடக சங்கீதத்தில் இருந்து.... வார்த்தைகள் காற்றினில் ஏறி இறங்கி வளைந்து நெளிந்து பாமரனுக்கும்.... கேட்டதும் காது விரிய செய்யும் நூதனம் வாய்த்த மெட்டுக்கள் வரை.... அடுக்கிக் கொண்டே போனார். மானுட பரிணாமம் போலவே இசையின் தோரணம் மெல்ல மெல்ல தன்னை தகவமைத்துக் கொண்டே வந்திருக்கிறது. இசையற்ற உலகத்தில் ஒன்றுமில்லை. ஒன்றுமில்லா ஒன்றில் உலகம் இல்லை. பெருத்த மௌனத்தில் இருக்கும் இசையை உணர்ந்தவர்களுக்கு இதய ஓசைக்குள்ளே வேறென்னே.... காதல் தான் துடிக்கும்.

அந்த காலத்து குரல் வளம் பற்றி பேச்சு வருகையில்.... அதே போல குரலை மாற்றி நம் கண்களை சிமிட்ட விடாமல் செய்த ரமேஷ் வைத்யா அவர்கள் மிகப்பெரிய ஆச்சரியமாகவே எனக்கு தெரிகிறார். மடை திறந்த வெள்ளம் என்போமே... அதுதான் அவர்.

ஒரு வரி முடிந்து மறு வரி எழுகையில் உள்ள தொடர்ச்சியின் நுட்பத்தை வைத்யா அவர்கள் சொன்ன போது... அது ஒரு பிராக்டிகல் வகுப்பு போலவே உணர்ந்தேன். அவர் எடுத்தியம்பிய ஒவ்வொரு பாட்டுமே அந்த காலத்தை அழகாக்கிய ஒவ்வொரு சொட்டு தேன் மொழி. வரியோ... டியூனோ.. மொழியோ... குரலோ எதுவோ ஒன்று நம்மை ஈர்த்து...நம் நினைவு படுகைகளில் எங்கோ மறைந்திருக்க.... அதையெல்லாம் கிளறி விட்டு சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி என்று தனக்குள்ளேயே தன்னை தவிக்க செய்து விட்டார். "அடிக்கிற கைதான் அணைக்கும்.... " பாடலில் இருக்கும் அந்த போதை குரலை எங்கோ எப்போதோ சிறுவயதில் கேட்டது. அதை மீண்டும் நினைவடுக்கில் இருந்து மெல்ல எடுத்து வந்து நெற்றியில் நிறுத்தி நினைத்து பார்க்க செய்ததில்... அனிச்சை ஆனந்தம் இதயத்தில் நிரம்பி வழிவதை ஆதுரத்தோடு பகிர்கிறேன். நினைவுகள் தானே வாழ்வின் மிகப்பெரிய அர்த்தம். அதை அழகியல் சேர்த்து சொல்லிக் கொண்டே போனார். நாமோ இசை வெள்ளத்தில் தத்தளித்து ஆங்காங்கே மூழ்கி... நீர் மொட்டு விட எத்தனிக்கையில்.... பெருமூச்சில் இன்புற்ற ஆசுவாசம்.

சங்கீத கச்சேரிகள் நடக்கும் சபாக்களுக்கு... சினிமா பாடல்களை கொண்டு சேர்த்தது சுப்பராமன் காலம் தான் என்ற தகவலை அறிகையில்... அவரின் ஆளுமையை ஆழமாய் உணர்கிறோம்.

"தேவதாஸ்....மணமகள்... லைலா மஜ்னு" என்று அவரின் இசை ஞானத்துக்கு உதாரணங்கள் பல. பாரதியின் "சின்னஞ்சிறு கிளியே" பாடலுக்கு அவர் ராகமாலிகையில் அமைத்த இசையே இன்றும் அந்த பாடலுக்கு முன்னோடி. அதே பாடல் எத்தனையோ வடிவத்தில் வேறு வேறு இசை அமைப்பாளர்களால் கொண்டு வரப்பட்டாலும் சுப்பராமன் செய்த சித்தை இதுவரை யாரும் தொட முடியவில்லை என்பது கேட்கவும் இனிது. ஆச்சரியப்படவும் அரிது. அவர் ரீ ரெக்கார்டிங் கிங் என்றால் மிகையல்ல என்பது செய்தி. இத்தனை பெரிய மகா ஞானம் தனது 32 வயதில் உலக வாழ்வில் இருந்து விடுதலை பெற்றதை... வந்த வேலை முடிந்த வரம் என்பதா..... உடலுக்குள் இருக்கும் உயிரின் வறட்சி என்பதா. இசையே சாட்சி.

இப்படி ரமேஷ் வைத்யா அவர்களின் இசை கச்சேரி இனிதே நிறைவடைய... செவி நிறைந்த சிரிப்போடு வயிறு நிறைக்க அமர்ந்து விட்டோம். சிரிக்க பேசி உரக்க பேசி... தகவல் களஞ்சியமாக ஒரு மணி நேர வகுப்பில்... உள்ளம் நிறைந்து உன்னதம் உண்டோம்.

மீண்டும் மீண்டும் மனதுக்குள் அசைபோட்டபடியே இருக்க செய்த வைத்யா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். அவர் உடல் நிலை சீராக இருக்க இசையை வேண்டி மீண்டும் அவருக்கு நன்றிகள் சொல்கிறேன். இசைக்க தெரிந்த இதயம் தானே உயிர் மூச்சின் உன்னதம். கண்கள் சிமிட்டுவதில் இருக்கும் இசை தானே இன்முகம் காட்டுகிறது. சுவாசத்தில் இருக்கும் இசை... பேச்சில் இருக்கும் இசை... நடையில் இருக்கும் இசை... அமைதியில் இருக்கும் இசை... என்று இசையே ஆதி. இசையே அந்தம்.

- கவிஜி