நாஞ்சில் நாடனின் எழுத்து குறித்து விவாதம் என்றபோதே அது கலை கட்டிய களம் என்று தோன்றியது.

"களம்" இலக்கிய அமைப்பின் சார்பில்.. "காந்தி பார்க் சலிவன்" வீதியில் இருக்கும் "மாரண்ண" பள்ளியில் நிகழ்வு. உள்ளே செல்வதற்குள் சற்று சாலை சுற்றியது தேடல். ஒரு வழி சாலையில் மீறலும் நிகழ்ந்தது நம்மை நாமே கண்டிக்கத்தக்கது தான்.

"களம்" அமைப்பு களத்துக்கான வழியை ஏதாவதொரு வழியில் இன்னும் எளிமைப்படுத்தி வெளிப்படுத்தி இருந்தால் எங்களை போன்ற அறிமுக நண்பர்களுக்கு நிகழ்வுக்கான இடம் கண்டு பிடிப்பதில் சிரமம் இருந்திருக்காது. சரி.... அப்படி இப்படி என்று உள் சென்று மர பெஞ்சில் அமர்கையில்.... வாரம் முழுக்க சராசரி வாழ்வில் மூச்சடக்கி கிடந்த மனதுக்கு பட்டென்று இலக்கியம், சிறகு பொருத்தியது.

எனக்கு தெரிந்து எந்த இலக்கிய கூட்டமும் குறித்த நேரத்தில் தொடங்குவதில்லை. அது ஞாயிறு கால விதி.

மற்ற களத்தை விட இந்த களத்தில் சற்று கூடுதல் இலக்கியவாதிகளை காண முடிந்தது. இயல்பா அல்லது நாஞ்சிலின் வரமா என்று தெரியவில்லை. அதே "மோனலிசா" புன்னகையில் வந்தமர்ந்த நாஞ்சில் நாடனின் அருகாமை வழக்கம் போல தகிப்புதான். நிகழ்வை தொகுக்க ஆரம்பித்தவர் "மா. நடராஜன்" அவர்கள். ஒரு மாதிரி தன்னையே தாழ்த்திக் கொள்ளும் உடல்மொழியில் அவர் சற்று நேரத்துக்கெல்லாம் அவையை கலகலப்புக்குள்ளாக்கி விட்டிருந்தார். நான் வாய் திறந்து சிரித்து நீண்ட நாட்களானதை அவரே முடிவுக்கும் கொண்டு வந்தார். நாஞ்சில் நாடன் பற்றிய நிறைய தரவுகளை தர முடிந்த அவரால்.... இவ்வாழ்வின் அனுபவங்களையும் தன் வாழ்விலிருந்து எடுத்து நகைச்சுவையோடு தேவையான போது தர முடிந்தது. ஆனால் அதே உடல்மொழி........நேரம் கூட கூட....... சற்று இம்சிக்கவும் செய்தது என்றதை சொல்லாமல் இருக்க முடியாது.

அறிமுக உரை செய்த "டீச்சர்", நிகழ்வின் டீசரை வெளியிட்டது போல நினைவுகளில் இருந்து எடுத்தெடுத்து நாஞ்சில் பற்றிய குறு வரிகளை சிரித்துக் கொண்டே நிரப்பினார். முகம் நிறைந்த மரியாதை. அகம் நிறைந்த அன்பு. நடுவில் தானற்று அமர்ந்திருந்த நாஞ்சில் நாடனுக்குள் ஏதோ ஒரு வேடிக்கை நிகழ்வதாக நான் கற்பனித்துக் கொண்டேன்.

அடுத்து பேசிய "அகிலா" ஆரம்பத்தில் நடைக்கும் குறைவான வேகம் தான். பின் ஒரு கட்டத்தில்... பட்டென்று மேலேறி பறக்க ஆரம்பித்தார். நாஞ்சிலின், கதைகள் குறித்தும்... வாழ்வியலின் போக்கு குறித்தும் பேசினார். கெட்ட வார்த்தைகள்.... அல்லது வசவுக்கு உபயோகப்படுத்தும் உறுப்புகள் பற்றிய வார்த்தைகள் என்று அதன் இயல்பும் அதன் சொற்றொடர்களுமாக சூழ்ந்திருந்தது பேச்சு. மிக எளிதாக கடக்க வேண்டியதை எவன் போட்டு அடைத்தான் என்று தெரியவில்லை. அவைகளை மீண்டும் திறந்து விடும் வரிகளை கொண்ட நாஞ்சிலின் கதைகள் பற்றி பேச அத்தனை குறுகிய காலம் போதாது என்ற முகத்தோடு அமர்ந்தார்.

பின் சு. வேணுகோபால் பேசி விட்டால் தன்னிடம் பேச ஒன்றும் இருக்காது என்று வழக்கமான அவரின் நையாண்டியோடு பேச்சை ஆரம்பித்தார் "அன்பரசு".

ரெம்பவும் ஆழமாக போகாமல்... பொதுவாக நாஞ்சிலின் எழுத்து குறித்து பேசினார். இடையே ஒரு கட்டத்தில் கூட்டத்தில் கவனம் திசை மாறிய போது அவரின் பேச்சின் நீட்சியும் தடைபட்டது. பின் சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தார். ஆங்காங்கே வழக்கம் போல அரசியல் கொட்டுகளும் சொட்டுகளுமாக இருந்தது. காவியின் அராஜகம் பற்றி இடையிடையே நுட்பமாக சொல்வதை சொல்லிக் கொண்டே சென்று தன் பேச்சை நிறைவு செய்து கொண்டார்.

"சு வேணுகோபால்".... வழக்கம் போல புள்ளி விவரத்தோடு மேடையை தனதாக்கிக் கொண்டார். அவரின் குரல் வழியே இலக்கியம் கேட்பது அற்புத கணங்களை நமக்குள் சிறக்கடிக்க வைப்பது. நேற்றைய நிலைமையில் அவர் ஒரு கட்டத்தில் எப்போது நிறுத்துவார் என அரங்கமே கண் விரித்து பார்த்ததை எப்படி எடுத்துக் கொள்வது. சுவாரஷ்யம் குறையாமல் பேசிக் கொண்டிருந்த அவரும்.. விடாப்பிடியாக பேச வந்ததை எல்லாம் சற்றே சற்று குறைத்து ஒருவழியாக முடித்து விட்டு தான் அமர்ந்தார். நகைமுரண் எப்போதெல்லாம் தொடருமோ அப்போதெல்லாம்... நிகழ் முரண் ஒன்று அரங்கேறும். அரங்கேறியது.

அதன் பிறகு வந்த "ஜோதிமணி" வேறு வழியின்றி ஓரிரு நிமிடங்களில் முடித்துக் கொண்டார். முன்னால் பேசியவர்கள் ஆளுக்கு 10 நிமிடம் அதிகமாக எடுத்துக் கொண்டதன் விளைவு.............கடைசியாக பேசியவருக்கு நேரம் இல்லாமல் செய்திருந்தது. இது தான் இங்கு நடக்கும் அரசியலும். பந்திக்கு முந்தியவர்கள் எப்போதும் தப்பித்துக் கொள்கிறார்கள். இறுதியாக இருப்பவன் எப்போதும் மாட்டிக் கொள்கிறான்.

(நிகழ்வு அமைப்பினர்.... ஒரு மேடையில் மூவர் வரை பேசவைப்பது போல திட்டமிடுதல் நலம். ஞாயிறு மதியம் 2 மணி தாண்டி நிகழ்வு தொடர்வதெல்லாம்.... இலக்கிய சாபம் என்று அந்த நேர மூளை கூச்சலிடும்) நிகழ்வில் விவாதிக்கப்பட்டவைகளில் சில :

- எழுத்தாளனின் உலட்டல் தான் இந்த சமுதாயத்துக்கு தேவை என்றார்கள். ஆம் என்ற வகையில் பின் தொடர்கையில் எழுத்தாளனின் மன உலைச்சலும்... தீராத சிந்தனையும்... இந்த சமூகத்தை நோக்கியே இருப்பதை என்னால் உறுதிப்படுத்த முடிந்தது

- நாஞ்சிலின் கதைகள் ஒட்டி வசவு சொற்கள் பற்றி கிட்டத்தட்ட எல்லாருமே பேசினார்கள். புணர்ச்சி.....இயங்குதல்... கலவி என்பதையெல்லாம் இன்னமும் நாம் ஒளித்து ஒளிந்து தான் பேசுகிறோம் என்ற உண்மை சற்றே பெரிய உண்மை தான். புணர்ச்சியை சுட்டும் நோக்கில் உடல் உறவு என்ற ஒரு சொல்லே தமிழில் இல்லை என்று லெக்சிகன் அகராதி சொல்வதாக சொல்கிறார் நாஞ்சில். உவத்தல் என்ற சொல் தான் கலவி பற்றிய நேரிடையான சொல் எனும்போது உவத்தல் மருவி... இன்றைய கலவி பற்றிய வசை சொல்லாக அது மாறியிருப்பதை உணர...... புரிய முடிந்தது.(உவத்தலை மனதுக்குள் திரும்ப திரும்ப சொல்லி பாருங்கள்.)

- பெரும்பாலும் அடிக்கடி இயல்பாக பயன்பாட்டில் இருக்கும் பெண்குறி பற்றி ஒரு சொல் தமிழில் இல்லை எனவும் சொல்கிறார். உடல் உறுப்புகளை வசவுக்கு பயன்படுத்தி அதை மூடி மறைத்து கெட்ட வார்த்தையாக மாற்றி விட்டதை வன்மையாக கண்டிக்கும் அதே சமயத்தில்.. கண் காது மூக்கு என்று சொல்வது போல தான்... யோனியும்.... பிடுக்கும். இதில் முகம் சுழிக்க ஒன்றுமில்லை என்பது என் புரிதல். நான் என்ன நினைக்கிறேன் என்றால்.. பெண் உறுப்பை திட்டுவதற்கு உபயோகப்படுத்தும் போதெல்லாம் ஒரு வித கிளர்ச்சிக்கு ஆளாகிறான்.. அது கிளர்ச்சி என்று தெரியாமலே அதை தொடர்ந்து ஓர் அனிச்சை செயலைப் போல செய்கிறான்.(சிறுநீர் கழிப்பது மலம் கழிப்பது கூட அப்படித்தான் )

- பறந்து விரிந்த பண்பட்ட மனதில்.. உவத்தலும் இந்த வாழ்வில் ஓர் அங்கமே. பாலியல் கல்வியின் பற்றாக்குறை தான்... பொத்தாம் பொதுவாக முதலிரவு என்றும் உடல் உறவு என்று சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறது. உடல் உறவு என்பது எப்படி கலவியாகும் என்ற கேள்விக்கு தமிழ் பொறுப்பில்லை. தமிழன் தான் பொறுப்பு.

- எல்லார் பேச்சிலும்... அவரவருக்கான அரசியல் பார்வை இருந்தது. மாட்டுக்கறி அரசியல்... சிறுபான்மை மீது கல்லெறிந்து காவி உயர்த்தும் நாடகம்.. என்று பேச்சில் இன்றைய கேடி ஆட்சியின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை பற்றி விவாதம் இருந்த பேச்சு... நிஜத்தை கொப்புளத்தோடு கொட்டியது.

- நாஞ்சில் நாடன், வைகை ஆற்றை கிழட்டு தேவிடியா போல இருப்பதாக ஒரு கதையில் எழுதி இருப்பது பற்றி பேசினார்கள். திக்கென்றிருந்தாலும்.... எட்டுத்திக்கும் தெரிந்த உண்மை தானே. உண்மையை உண்மையாக சொல்வது தானே உண்மை.

- கோவை குளங்களில் ஒவ்வொரு விநாயர் பிறந்த நாளுக்கும் அவரைக் கொண்டு சென்று குளங்களில் கரைத்து விட்டு வருவதை வழக்கமாக கொண்டாலும்... அதன் பின்னால் இருக்கும்.. ஆற்றின் கொலை பற்றி செய்தி நம்மை வருந்த செய்கிறது. ஊற்றுக் கண்கள் அழிந்து விட்டதாக தகவல் அறிக்கை சொல்வது பற்றி வேதனையோடு கூட்டத்தில் ஒருவர் பகிர்ந்து கொண்டது பகீர் செய்தி தான். குளம் ஆறு கிணறு.....முழுக்க கடவுள்கள் நிறைந்திருக்கிறார்கள். தண்ணீர் தான் இல்லை.

- சாதியைத் தூக்கிக் கொண்டே அலையும் மனிதக் கூட்டம்.. கழிவுகளை சுமந்து கொண்டே அலையும்... மாக்கள் கூட்டம் என்று தான் முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. சாதியும் சாமியும் வெட்டி சுமை.. என்பதை எப்போது உணர்கிறோமோ அப்போது தான் வேறு சமூகத்தில் பெண் எடுப்பார்கள். வேறு சமூகத்தில் பெண் கொடுப்பார்கள். (உலகம் தோன்றியதில் இருந்து எல்லாமே இங்கு கலப்பு தான்...எப்போ புரியும் சாதிக்குள்ளயே கட்டிக்கறவங்களுக்கு) பெரும்பாலும் ஜாதகம் பார்த்து சாகும் மனிதனுக்கு கல்யாணம் பண்ணி வாழும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.

- சமீபத்தில் ஒரு முஸ்லீம் வாலிபரை ஜெய்ராம் சொல்ல சொல்லி அடித்து கொன்றதை எல்லாம்... சேர்த்து கொண்டு எப்படி இந்தியா பண்பட்ட நாடு என்று சொல்ல முடியும். எப்படி இந்தியன் என்று மார் தட்டி பீற்றிக் கொள்ள முடியும். சாதிக்கும் சாமிக்கும் கொலை பண்றவனுக்கு சட்டம் பாதுகாப்பு தருகிறது என்றால்... அந்த சட்டம்... கொளுத்தப்பட வேண்டும் என்பது தானே தேவை.

- ரெம்ப நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த அம்மா செத்து விட்டது என்று ஊருக்கு.......சொந்தத்துக்கு.....என்று எல்லா பக்கமும் தகவல் சொல்லியாயிற்று. ஆனால் அம்மா சாகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. விடிந்தால் எல்லாரும் வந்து விடுவார்கள். வந்து அம்மா சாகாமல் இருந்தால் இரட்டை செலவு. என்ன செய்வதென்று தெரியாமல்.... ஒரு கட்டத்துக்கு மேல் முடிவெடுத்து விடிவதற்குள் அந்தம்மாவை சாகடிக்க அந்த வீட்டார் செய்யும் முடிவும் செயலும்... பதைபதைக்க வைக்க கூடியவை. இந்தக்கதை நாஞ்சிலின் மிக சிறந்த கதையாக பேசப்பட்டபோது விக்கித்து திக்கித்து பார்த்துக் கொண்டிருந்தேன். மூச்சு முட்டும்.. பச்சைத் தண்ணீர் என் மூளைக்குள் குறுகுறுப்பதை நான் இப்போதும் நடுக்கத்தோடு உணர்கிறேன்.

அய்யா நாஞ்சில் நாடன் சம காலத்தின் கசப்புகளை துப்பியபடியே இருக்கிறார். வேறு வழியில்லை. கசப்புகளைத் துப்பத்தானே வேண்டும். கசப்புகள் வசம் மாட்டிக் கொண்ட சமூகத்தின் முன்னால் நான் மட்டும் எப்படி இனிப்போடு நிற்க முடியும் என்று தான் கேட்கிறார். எல்லாரும் சேர்ந்து சரி செய்ய வேண்டியது இது. எழுத்தாளன் எப்போதும் சமூகத்தின் பிம்பமாக இருக்கிறான். ஜெயமோகனை இங்கிருந்தே எண்ணங்களால் கொன்றவர்கள் கூடத்தான் இந்த வாழ்வு நமக்கு வாய்த்திருக்கிறது.

நாஞ்சில், எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் உள்ள இடைவெளி அளவாக இருப்பது பற்றி தெளிவாகவே பேசினார். அதன் ஏதோ ஒரு புள்ளியில் கூட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. பிறகு புரிந்தது... அந்த சலசலப்பு கூட இல்லையென்றால் நாஞ்சிலின் கூட்டத்துக்கு பொருள் இருக்காது. புன்னகையோடு அதையும் கடந்து விட்ட அய்யா நாஞ்சில் நாடன்....... வழக்கம் போல மோனலிசா புன்னகையோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

"எனக்கு பிடிக்காத எழுத்தாளன் செத்தால் நான் சந்தோசப்பட முடியுமா...?"

நாஞ்சில் நாடனின் இந்த ஒற்றைக்கேள்வியில்...நிறைய கேள்விகள் இருப்பதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். சலசலப்புக்கு உரிய அந்த நண்பரும் கூட.

- கவிஜி