புதுச்சேரி தாய்மொழி வழிக் கல்வி கூட்டியக்கம் சார்பில் ‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் (19.06.2019) நடைபெற்றது. அரங்கம் நிறைந்த பார்வையாளாகளுடன், நான்கு அமர்வுகளாக நாள் முழுவதும் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் முனைவர் மறைமலை இலக்குவனார், பேராசிரியர் பிரபா. கல்விமணி, முனைவர் கோ. தாமரைக்கோ, தோழர் தியாகு உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

பேராசிரியர் பிரபா. கல்விமணியை பார்த்ததும் தமிழக காவல்துறையால் அவர் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதை கண்டித்து ஒரு பதிவும் எழுதாத குற்றவுணர்வு மேலிடுகிறது. அந்த அரங்கத்தில் ஒரு ஓரமாக மூத்த எழுத்ததாளர் பா. செயப்பிரகாசம் பார்வையாளராக அமர்ந்திருக்கிறார். அவருக்கு முன்னால் அமர்ந்திருக்கம் நான், மேடையின் மீதான அவரது பார்வையை மறைக்கக் கூடாது என்று இப்படியும் அப்படியும், சாய்ந்தும் நகர்ந்தும் பிரயத்தனப் பட்டுக்கொண்டிருக்கிறேன். குளிர்ச்சாதன பொறிகளின் தயவால் மிதமாக பரவும் குளிர்ந்த காற்று கொளுத்தும் வெயிலின் தாக்கம் இல்லாமல் அந்தக் கருத்தரங்கில் கரைய நம்மை தயார் செய்கிறது.

தொடக்க நிகழ்வில் க. ரேகா சுறுக்கமாக ஒரு வரவேற்புரை வழங்கி வழிவிட, ஒரு நேர்த்தியான நோக்கவுரையை தோழர் கோ. சுகுமாரன் வழங்கினார். “இந்த கூட்டு இயக்கத்தின் நோக்கம் என்னவென்றால், நமது கல்வி தமிழ் மொழியில் இருக்கவேண்டும், தமிழ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும், தமிழ் நீதிமன்ற மொழியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலே பலதரப்பு அமைப்புகளையும் ஒன்றிணைத்து, ஒரு கூட்டு இயக்கமாக இயங்கி புதுச்சேரியில் அனைத்து நிலையிலும் தமிழை கொண்டுவருவது. இதற்காகத்தான் இந்த கூட்டு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அடிப்படையிலே தாய்மொழி வழிக் கல்வி என்றால் புதுச்சேரி, காரைக்காலிலே தமிழ் கல்வி மொழியாகவும், ஏனத்திலே தெலுங்கு கல்வி மொழியாகவும், மாஹேவில் மலையாளம் கல்வி மொழியாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் தமிழ் வழிக் என்றில்லாமல் ‘தாய்மொழி வழிக் கல்வி’ என்று இந்த கருத்தரங்கிற்கு தலைப்பு வைத்துள்ளோம். ஊர் கூடி தேர் இழுப்பது போல் நாம் அனைவரும் ஒன்றினைந்து புதுச்சேரியில் அனைத்து நிலைகைளிலும் தமிழை கொண்டுவர பாடுபடுவோம்” மிக அழகாக, தெளிவாக தன் நோக்கவுரையை நிறைவு செய்தார்.

அடுத்து தலைமையுரையாற்றிய முனைவர் நா. இளங்கோ, “இன்று பெரும்பாலான தமிழர்கள் தாய் மொழி வழிக் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாமல்தான் இருக்கிறார்கள். தமிழில் கையெழுத்திடும் வழக்கமும் நமக்கு கிடையாது. நமது பெயரின் தலைப்பெழுத்தை தமிழில் எழுதும் வழக்கமும் கிடையாது. வேறு எந்த மொழிக்காரனும் இப்படி எழுதமாட்டன். எந்த இனத்திலாவது இப்படி நடக்குமா? தமிழன் தான் இந்த அவலத்தை செய்து கொண்டிருக்கிறான். தமிழில் கையெழுத்திடுவது என்பது ஒரு மானஉணர்ச்சி. நான் என் மொழியில் கையெழுத்திடுவேன் என்ற உணர்வு ஒவ்வொருவனுக்கும் இருக்கனும். இங்கு இருக்கா? தாய் மொழியில் கையெழுத்திடுவது நமது சுயமரியாதை தொடர்பானது. அது மிக… மிக… மிக… அவசியமானது. சரி பிறந்த குழந்தைகளுக்காவது தமிழில் பெயர்  வைக்கிறோமா என்றால் அதுவும் கிடையாது. நட்சத்திரம், நியுமராலஜினு பாரத்து பார்த்து அத்தனை பேரும் சமஸ்கர பெயர்களாகத்தான் வைக்கிறார்கள். குழந்தைகளின் பிறந்தநாள் அழைப்பிதழ்களில் 95% பெயர்கள் சமஸ்கிரதத்தில் தான் இருக்கின்றன”.

“தமிழ் செம்மொழி, உயர்ந்த மொழி என்பதற்காக நாம் போராடவில்லை. வரலாற்று சிறப்பு இல்லாத சாதாரண மொழியாக இருந்தாலும் அதை தாய்மொழியாக கொண்டவன் அந்த மொழியில் கற்றால் தான் சிறப்படைவான். இது உலக அளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டு இயக்கத்தின் நோக்கம் இந்தியையே, சமஸ்கிறதத்தையே, ஆங்கிலத்தையோ எதிர்ப்பதல்ல. நமது வேலை நமது மொழியை வளப்படுத்துவது மட்டுமே. ஒரு மொழியை வளப்படுத்த வேண்டுமானால் அதற்கு தாய் மொழி வழிக் கல்விதான் ஒரே தீர்வு. ஆகவே, நமக்கு தேவை ஒரே மொழி - ஒரே பாடம் - ஒரே கல்வி முறை. அதுவும் தாய்மொழி வழிக் கல்வி முறை” என்று முடித்து, மையப் பேருரை நிகழ்த்த முனைவர் அய்யா மறைமலை இலக்குவனார் அவர்களை அழைக்கிறார்.

‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு’ என்ற பாவேந்தரின் வரிகளுடன் என் பேச்சை தொடங்குகிறார் மறைமலை இலக்குவனார். “தாய் மொழி வழிக் கல்விக்கான இந்த கருத்தரங்கம் தொல்காப்பியர் அரங்கில் நடைபெறுவது மிகவும் பொருத்தமானது. தொன்மையான ஒரு மொழியை காப்பதற்காக இயம்ப்பட்டது தொல்காப்பியம் என்பார் பேராசிரியர் இலக்குவனார். 1964-ல் அவர் இரண்டு முறை கைது செய்யப்பட்டார். முதன் மறை இந்தி எதிர்ப்புக்காக. இரண்டாவது முறை தமிழை பல்கலைக்கழகங்களிலே பயிற்று மொழியாக வைக்கவேண்டும் என்ற கோரிக்கைகாக. இந்தியாவிலேயே ஒரு மொழியை பயிற்று மொழியாக வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகாக கைது செய்யப்பட்ட முதல் நபர் இலக்குவனார் தான்”.

“அந்த காலத்தில் தழிழையே ஆங்கிலம் வழியாக தான் பயிற்றுவித்து வந்தார்கள். இன்டர்மீடியேட் வகுப்புகளில் தமிழ் மொழி பாடத்தை ஆங்கிலம் வழியாகத் தான் கற்றுத்தந்தார்கள். இதற்கு எதிராக பேராசிரியர் இலக்கவனார் தனித் தமிழில், தெள்ளியத் தமிழில், சங்கத் தமிழில் தன் வகுப்புகளை நடத்தத் தொடங்கினார். அப்போதெல்லாம் தமிழ் வகுப்புகளில் வருகை பதிவேடு எடுக்கும் பொழுதும் மாணவர்கள் ‘பிரசண்ட் சார்’ என்று தான் சொல்வார்கள். அதையும் ‘உளன் அய்யா’ என்று மாற்றியவர் இலக்குவனார் தான். கவனியுங்கள் ‘உள்ளேன் அய்யா’ என்று அவர் செல்லச் சொல்லவில்லை. ‘உளன் அய்யா’ என்று தான் சொல்லச் சொன்னார். உங்களுக்கு அய்யம் இருந்தால் தோழர் நல்லகன்னு அவர்களிடம் கேட்டு தெளிந்துகொள்ளுங்கள். ஏனெனில், இதையெல்லாம் பதிவு செய்தவர் அவர் தான்” என்று ஆச்சரிய தகவல்களை அள்ளித் தருகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழை பயிற்று மொழியாக கொண்டுவர வேண்டும் என்ற நமது கோரிக்கையில், போராட்டத்தில் நீண்ட காலகட்டத்திற்குபின் திரும்பி பார்த்தால், நாம் எங்கு தொடங்கினோமோ அங்கேயே தான் நிற்கிறோம். மலைப்பாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. தாய் மொழி என்பது நமது செவிக்கு இனியது மட்டுமல்ல, நமது சிந்தையை துண்டுவது. எந்த மொழியை காட்டிலும் தாய் மொழி தான் சிந்தனையில் கிளர்ச்சி ஏற்படுத்தும். தமிழன் என்னவாகிவிட்டான்? தாய் மொழியை கேட்காத கேளா காதினன் ஆகிவிட்டான்” என்று தன் ஆதங்கத்தை தெரிவிக்கிறார்.

முன்னதாக தன் உரையில் பேராசிரியர் பக்தவச்சலபாரதி குறித்து பேசியபோது, “பண்பாட்டு மானுடவியல் துறையில் மயிலை சீனி. வேங்கடசாமிக்கும், சாத்தன்குளம் வே. இராகவனுக்கும் அடுத்து ஒரே தமிழ் பேராசிரியர் பக்தவச்சலபாரதி தான். இங்கிருக்கும் ஆய்வாளர்களை இறைந்து கேட்கிறேன், மன்றாடி கேட்கிறேன். பண்பாட்டு மானுவியலில் அவர் வழங்கியிருக்கும் அரிய - பெரிய நுல்களை ஒரு முறைக்கு இருமுறை ஆழ்ந்து படியுங்கள். தமிழ் இலக்கியத்திற்கு ஒரு புதிய பார்வை கிடைக்கும்” என்று இறைஞ்சுகிறார்.

போலவே பேராசிரியர் பிரபா. கல்விமணி குறித்து பேசும் போது, “கல்யாணி எல்லோரையும்விட ஒரு படி உயர்ந்தவர்” என்று நிறுத்த அரங்கில் கைதட்டல் அதிர்கிறது. அவர் தொடர்கிறார், “ஏன் உயர்ந்தவர் என்று தெரியாமல் தைதட்டாதீர்கள். ஏன் உயர்ந்தவர் தெரியுமா…? நாம் எல்லோரும் தமிழ் மொழி வழிக் கல்விக்காக பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவர் இருபது ஆண்டுகளாக தாய்த் தமிழ் பள்ளிக்கூடத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். யாருக்காக, அடித்தட்டு மக்களுக்காக” என்று தங்கள் காலம் முழுவதும் தமிழுக்காகவே உழைத்துக்கொண்டிருக்கும் தமிழ்ச் சான்றோர்களின் அர்பணிப்பை நமக்கு அறிமுகப்படுத்துவதுடன், அந்த சான்றோர்களை போற்றியும் வணங்குகிறார். தன்னை மட்டும் முன்னிறுத்திக்கொள்ளாமல் தன் சக படைப்பாளிகளை, போராளிகளை மெச்சும் இந்தச் செயலின் மூலம் ‘மேன் மக்கள் மேன் மக்கள் தான்’ என்ற கூற்றை மெய்பிக்கிறார் அய்யா மறைமலை இலக்குவனார். நிறைவாக சுகன்யா நன்றியுரைக் கூற, சரியாக பகல் 12.00 மணிக்கு தொடக்க நிகழ்வு நிறைவடைந்தது.

********************

முதல் அமர்வுக்கு தோழர் இரா. சுகுமாரன் தலைமைத்தாங்க, முனைவர் இரா. சம்பத் மற்றும் பேரா. பிரபா. கல்விமணி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

தனது தலைமை உரையில் இரா. சுகுமாரன், “தமிழ் வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்று ஒரு போலியான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. இதை செய்பவர்கள் யார் என்று பார்த்தால், அவர்கள் அத்துனை பேரும் தனியார் பள்ளி முதலாளிகள். ஆங்கிலம் படித்தால் வேலை கிடைத்துவிடும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா என்றால் நிச்சயம் கிடையாது. கூகுல், மைக்ரோ சாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் நமது இளைஞரைகள் சிலருக்கு வேலை கிடைப்பதற்கு காரணம் ஆங்கிலம் படித்ததால், அவர்கள் கணினி படித்ததால் தான். இங்கு ஆங்கிலம் என்பது ஒரு தொடர்பு மொழிதான். நிச்சயமாக அவர்களுக்கு ஆங்கிலத்தால் வேலை கிடைக்கவில்லை என்பது தான் உண்மை” சுறுக்கமாக பேசி முனைவர் இரா. சம்பத் அவர்களை கருத்துரை வழங்க அழைக்கிறார்.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரான முனைவர் இரா. சம்பத் தனது கருத்துரையில், “இந்த தாய் மொழி தொடர்பான பிரச்சனை என்பது ஒரு மூன்று நுற்றாண்டுகளாகத்தான் இருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றம் உள்ளது. ஆனால், நமக்கு கிடைத்த வரலாற்று ஆவணங்களின்படி இது தொல்காப்பிய காலத்தில் இருந்தே இந்த தாய் மொழி தொடர்பாக சிக்கல் இருந்து வருவதுதான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் அறிஞர்களாக இருந்தாலும், படைப்பாளிகளாக இருந்தாலும் அவர்காளால் முடிந்தமட்டும் போராடி வந்திருக்கிறார்கள். தொல்காப்பியத்தில், சங்க இலக்கியத்தில், திருக்குறளில் இதற்கான பதிவுகளை நீங்கள் பார்க்கலாம். ஒரு காலத்தில் தமிழும் ஆரியமும் கலந்த போது தமிழை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி நமது ஆழ்வார்கள் துய தமிழில் பாடியிருக்கிறார்கள். அதை ஒரு தொடக்ககால தனித் தமிழ் இயக்கமாவே கருதலாம். இப்படி நீங்கள் பார்த்தீர்களானால் வராலற்று ரீதியாக தமிழ் மொழிக்காக போராடியவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இன்றும் நாம் இதைப்பற்றி பேசுகிறோம் என்றால், நாம் ஒரு தொடர்ச்சியான சிக்கலில் இருந்துகொண்டே தான் இருக்கிறோம்”.

“அறுபது இலட்சம் பேர் வசிக்கூடிய சிங்கப்பூரில் நான்கு மொழிகள் அலுவல் மொழியாக உள்ளன. உலகில் எந்த நாட்டிலும் ‘தேசிய மொழி’ என்று சொல்வது கிடையாது. இங்கு தான், இந்தியாவில் மட்டும் தான் தேசிய மொழி என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். இது போல் எண்பது இலட்சம் பேர் கொண்ட சுவிட்சர்லாந்தில் நான்கு மொழிகளும், ஐந்தரை கோடி பேர் கொண்ட தென்னாப்பிரிக்காவில் பதினோரு மொழிகளும் அலுவல் மொழிகளாக இருக்கும் போது, 130 கோடி மக்களை கொண்ட இந்தியாவில் ஏன் 20 மொழிகள் அலுவல் மொழியாக இருக்க முடியாது…? முடியாது என்பது அல்ல, அவர்களுக்கு (மத்திய அரசுக்கு) மனம் இல்லை என்பதே உண்மை” என்று மொழி அரசியலை பேசிவிட்டு, “எழுத்து – சொல் – தொடர் இது தான் மொழியுடைய வடிவம் என்று தொடங்கி” ஒரு அற்புமதமான தமிழ் இலக்கண வகுப்பெடுத்துவிட்டு தனது கருத்துரையை நிறைவுசெய்தார்.

பேரா. பிரபா. கல்விமணின் கருத்துரை கலகலப்பான கருத்துரையாக இருந்தது. அவர் எப்பொழுதும் மக்கள் மொழியில் பேசுபவர். அப்படித்தான் பேசினார் இந்த கருத்தரங்கிலும். “இலக்குவனார் பேராசிரியராக இருந்த போது நாங்களெல்லாம் மதுரை அமெரிக்கன் கல்லுரில் படித்துக் கொண்டிருந்தோம். அப்பதான் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. அந்த போராட்டம் தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றத்துக்கு வழிவகுத்தது. அந்த போராட்டம் தான் காங்கிரசை அப்படியே துக்கிக் குப்புற போட்டது. அதற்கு அப்புறம் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. அப்படி நடந்த ஒரு நாட்டில் இன்று ஒருவன் தமிழில் படிக்கிறான் என்றால் அவன் யார் என்று பார்த்தால், அவனெல்லாம் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் தான். யாராலெல்லாம் கட்டணம் கட்ட முடியாதே அவன் தான் தமிழில் பிள்ளையை படிக்க வைக்கிறான். கல்வி அடிப்படையில் எடுத்துக்கொண்டாலும் சரி, மொழி அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும் சரி நாம் இருண்ட காலத்தில் தான் இருக்கிறோம்” என்று புள்ளி விபரங்களை அள்ளி அள்ளித் தருகிறார்.

“அரசு பள்ளியின் வீழ்ச்சி என்பது சாதாரண ஏழை எளிய மாணவர்களின் வீழ்ச்சி. நான் ஒரு கிராம உதவியாளரின் மகன் தான். அப்பா ஒரு கடைநிலை ஊழியர் என்பதால் கிராமத்தில் எல்லோரும் அவரை பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். ஊரில் வசதியானவர்கள் எல்லோரும் ரெட்டியார்கள். ஆனால், அந்த ஊரின் பள்ளியில் நான் தான் முதல் மாணவன். வசதியானவனுக்குத்தான் – பணக்காரனுக்குத்தான் மூளை பெருசா வேலை செய்யும் என்றில்லை. படித்தால் எல்லோருக்கும் வேலை செய்யும் என்று நரூபித்தவன் நான்” என்று அவர் முடிக்கும் போது கரவொலி அதிர்கிறது.

“எங்கள் பழங்குடி இருளர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அவர்கள் பிள்ளைகளுக்கு கல்வி வழங்கி வருகிறோம். அவர்களெல்லாம் இப்போதுதான் முதல் தலைமுறையா பள்ளிக்கே வருகிறார்கள். அவனுக்கு தமிழே தெரியாது, அவங்கிட்போய் ஆங்கிலப் புத்தகத்தை கொடுகுறியேடா…. பாவி” என்று பதறுகிறார். தனது தலைமையுரையில் முனைவர் இளங்கோ “நமக்கு அரசியல் கட்சிகள் எல்லாம் வேண்டாம் சமுதாய இயக்கங்களை மட்டும் கொண்டே இந்த தாய்மொழி வழிக் கல்வி கூட்டியக்கம் செயல்படும்” என்று சொன்னதை சுட்டிக்காட்டி, “நமக்கு அரசியலும், அரசியல் கட்சிகளும் வேண்டும். அரசியல் கட்சிகள் இருந்த்தால் தான் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யபட்டவர்களுக்கு இந்த அளவுக்காகவது நாம் நியாயத்தை போராடி பெறமுடிந்தது” என்று சொல்லி தனது கருத்துரையை முடிக்க முதல் அமர்வு நிறைவுபெற்றது.

********************

அந்த மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் மரங்கள் சூழ்ந்த கருங்கல் தாழ்வாரத்தில் சுடுமண் சிற்ப குதிரைகளையும், முதுமக்கள் தாழிகளையும் ரசித்தபடி, பாக்குமட்டை தட்டை கையில் யேந்தி வரிசையில் நின்று அன்னமும் – சாம்பாரும் – ரசமும் – பொறியலும் – கூட்டும் வாங்கிக்கொண்டு, மொழி அரசியலும் – தமிழ் இலக்கியமும் பேசியபடி மதிய உணவை ருசித்தது அலாதியான அனுபவம். இந்த மதிய உணக்காக மட்டுமே ஒரு தனி நன்றியை முனைவர் இளங்கோ அய்யாவுக்கு சொல்ல வேண்டும். நன்றி அய்யா.

********************

இரண்டாவது அமர்வுக்கு பொறிஞர் இரா. தேவதாசு தலைதாங்க, ஆசிரியர் கோ. தாமரைக்கோ அவர்கள் கருத்துரை வழங்கினார்.

“தாய்மொழி வழிக் கல்விக்கு நாம் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறோம் என்பது மிகவும் துயரமான செய்தி. வேறு எந்த நாட்டிலும், எந்த மாநிலத்திலும் சொந்த தாய் மொழியை பேச வேண்டும் என்று சொல்லி போராடவேண்டிய நிலை இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. இது புதுச்சேரியிலும், தமிழகத்திலும் மிகவும் துயரமான நிலையில் இருப்பதை நான் வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். ஏன் என்று சொன்னால், மழலை கல்வியில் இருந்து உயர்கல்வி வரை தாய் மொழியே படிக்காமல் கல்வி கற்கும் முறை உலகிலேயே தமிழகத்தை தவிற வேறு எங்கம் கிடையாது. இது குறித்து நாம் யாருமே கவலைப்படவில்லை. நீங்கள் யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம். உங்களில் எத்தனை பேர் தமிழில் கையெழுத்து போடுகிறீர்கள்? பெரும்பான்மையோர் போடமட்டீங்க. அதுபோவே நமது தலைப்பெழுத்தையும் தமிழில் எழுதமாட்டோம்” என்று பார்வையாளர்களை குற்றணர்ச்சியில் ஆழ்த்துகிறார் பொறிஞர் தேவதாசு.

“சொந்த குழந்தைக்குகூட நல்ல தமிழில் பெயர் வைப்பதில்லை. சில மாதங்களுக்கு முன் முனைவர் இளங்கோ அவர்களுக்கு பேரன் பிறந்திருக்கிறான். அந்த மழலைக்கு ‘அதியமான்’ என்று அழகுத் தமிழில் பெயர் வைத்திருக்கிறார். இப்படி மொழி மேல் முனைப்புக் காட்டவும், ஆர்வம் காட்டவும் இன்று தமிழர்கள் தயாராக இல்லை. இதன் விளைவு என்னவென்றால், புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றில் கூட தமிழ் மொழியில் பயிலும் மாணவர்கள் இல்லை. இதற்கு காரணம், தமிழால் எதவும் முடியாது ஆங்கிலத்தால் தான் எல்லாம் முடியம் என்று மக்களே ஒரு மாயையில் – போதையில் மூழ்கியிருக்கிறார்கள். இன்று உலகம் முழவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் தமிழ் அழிந்து வருகிறது என்று கவலைப்படுகிறார்கள். அதற்கு காரணம் நாம் புழக்கத்திலே – பழக்கத்திலே நம் தாய் மொழியை பேசுவதில்லை. மொழிக்காக எதுவும் செய்ய யாரும் தயாராக இல்லை. இந்த நிலைமாற வேண்டும் என்றால், எங்கெங்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் நமது மொழியை நிலைநட்டிட நாம் போராட வேண்டும். அதற்கு இந்த கூட்டியக்கம் துணை நிற்கும். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைத்தால் நமது இந்த தாய்மொழி வழிக் கல்விப் போராட்டத்தில் நிச்சயம் வெற்றி வெறுவோம்” என்று தனது உரையை முடித்துக்கொண்டு, ஆசிரியர் கோ. தாமரைக்கோ அவர்களை கருத்துரை வழங்க அழைக்கிறார்.

தனித் தமிழ் அறிவியல் விற்பனர், நல்லாசிரியர் தாமரைக்கோ தனது கருத்துரையில், “ஆங்கிலம் தான் சோறு போடும் என்று நம்ப ஆரம்பித்துவிட்டோம். ஆங்கிலம் மேல் ஒன்னும் பெரிய விருப்பமெல்லாம் கிடையாது. ஆங்கிலத்தில் படித்தால் பொறியாளர் ஆகலாம், மருத்துவராகலாம். இவை இரண்டும் தான் உலகின் மிகப்பெரிய வேலை என்று முடிவு பண்ணிவிட்டார்கள். உயர் கல்வி – வெளிநாடு போவது – நிறைய சம்பாதிப்பது என்ற பொருளியல் கண்ணோட்டம் தான் இந்த ஆங்கில மோகத்துக்கு காரணம். இந்த ஆங்கிலப் பள்ளிக்கூடங்களை எல்லாம் நடத்துவது யார் என்று பார்த்தால் அரசியல் தலைவர்கள், அரசியல் சார்ந்த தலைவர்கள் அல்லது குட்டித் தலைவர்கள். இவர்கள் எல்லாம் யார் என்று பார்த்தால் வியாபாரிகள். அதிலும் கள்ளுக்கடை, சாராயக்கடை வியாபாரிகள். அவனுக்கு கல்வியைப் பற்றி என்ன தெரியும்? அதான் அதை கடைச்சரக்காக்கி கொழுத்த இலாபம் பார்க்கிறான்”.

“கல்வி ஒருவனை பண்படுத்துதோ இல்லையோ, நாசப்படுத்தக் கூடாது. இந்த பிராய்லர் பள்ளிக்கூடங்களில் பதினொன்னாவது, பனிரெண்டாவது படித்து வெளிவரும் ஒருவன் நிச்சயம் அரக்கானகத்தான் வருவான். ஏனெனில், அத்தனை கொடுமைகளை அவன் அங்கு அனுபவிக்கிறான். அதையெல்லாம் சமூகத்திற்கு திருப்பித்தர அரக்கனாகிரான் அல்லது தற்கொலை செய்துகொள்கிறான். நாங்கள் கலைச்சொல் அகராதி தயாரிப்பில் இருந்த போது தமிழ்நாடு பாடநுல்கள் அனைத்தையும் படித்து அதில் இருக்கும் கலைச்சொற்களை ஒவ்வொன்றாக பொறுக்கியெடுத்து தொகுக்கும் பணியில் இருந்தோம். அது காங்கிரஸ் ஆட்சிக் காலம். பாடநுல்கள் ஒவ்வொன்றாக தமிழில் வந்துகொண்டிருந்தது. இளங்களை பாடநுல்கள் முடிந்து முதுகளை பாடநுல்கள் வரும் நேரத்தில் தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. காங்கிரஸ் ஆட்சி போய் தி.மு.க., ஆட்சி வந்தது. அண்ணா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஆனால், அதற்கு பின்னால் வந்தவர்கள் தமிழ் பாடநுல்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்கள். ஆசியர்கள் மீதும் மிகப்பெரிய தவறு இருக்கிறது. இவன் அரசு பள்ளியில் வேலை செய்து கொண்டு பிள்ளையை மட்டும் தனியார் பள்ளியில் சேர்த்தால் மற்ற பெற்றோர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பார்கள்?” என்று அறச்சீற்றத்தோடு தன் கருத்தரையை முடிக்க, இரண்டாம் அமர்வு நிறைவுபெற்றது.

********************

நிறைவு நிகழ்வுக்கு தோழர் பெ. பராங்குசம் தலைமைதாங்க, தோழர் தியாகு அவர்கள் கருத்துரை வழங்கினார். பராங்குசம் “உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் அவரவர் தாய் மொழியில் தான் கல்வி கற்கின்றனர். இந்தியாவிலும் மற்ற மாநிலங்களிலும் அவர்கள் மொழியில் தான் கல்வி கற்கின்றனர். ஆனால், தமிழகத்திலும் புதுச்சேரியிலும் தான் தாய்மொழி வழிக் கல்வி இல்லை. 1967-க்கு முன்புவரை இருந்த தாய்மொழி கல்வியை, “67-க்கு பின்பு வந்த திராவிட அரசுதான் மாற்றியது. காரணம், எல்லா நாட்டிலும் மாநிலத்திலும் மண்ணின் மைந்தன் ஆளுகிறான், இங்கு அப்படி இல்லை” என்று சுறுக்கமாக முடித்துக்கொள்ள, தோழர் தியாகு கருத்துரை வழங்க வருகிறார்.

“பாரதியும், பாவேந்தரும் நடமாடிய புதுவை மண்ணில், மறைந்த அறிஞர்கள் புலவர் திருமுருகன், தோழர் லெனின் தங்கப்பா, எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோரை நினைவுகாந்து, வணங்கி என் உரையை தொடங்குகிறேன். தாய்மொழி வழிக் கல்வியை பற்றி பேச வேண்டிய தேவை, தாய்மொழியின் முகமையை எடுத்துரைக்க வேண்டிய தேலையெல்லாம் உலகில் நமக்கு மட்டும் தான் உள்ளது என்பது போன்ற ஒரு வருத்தம் எல்லோருடைய குரலிலும் தொனிக்கிறது. அது தேவையில்லை. உண்மையில் அடிமைப்பட்ட ஒவ்வொரு தேசமும் இந்த நெருக்கடியை கடந்து தான் வந்திருக்கின்றன.

நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இந்தி அலுவல் மொழி தான். ஆனால், இந்திய அரசு வெளியிடும் அறிவிக்கைகளில் எல்லாம் இந்தி தேசிய மொழி என்றும், நமது தமிழ் உப்பட பிற மாநில மொழிகள் எல்லாம் வட்டார மொழிகள் என்றும் பழிக்கப்படுகின்றன. கஸ்தூரிரங்கன் அறிக்கை ‘மூன்று மொழிகள்’ என்று சொல்லுகிறபோதுகூட இந்தி, ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகள் என்றுதான் குறிப்பிடுகிறது. நமது தமிழ் வட்டார மொழி என்றால் இந்தி மட்டும் எப்படி தேசிய மொழியாகும்? இது தமிழுக்கு மட்டுமே வந்துள்ள சிக்கல் அல்ல, மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று எல்லா மாநில மொழிகளையும் வட்டார மொழிகளாக காட்டுகிறார்கள். இது தமிழுக்கு மட்டும் நடந்துவிட்ட நிலை என்று நாம் வருந்த வேண்டிய தேவையில்லை. இது உலகெங்கும் இருக்கக்கூடிய ஒரு சிக்கல். ஒரு இனத்தினுடைய அடிமை நிலை, வளர்ச்சிகுன்றிய நிலை, அந்த இனம் ஒரு குடியாட்சியை அடையாத  நிலையிலெல்லாம் இது இருக்கும். எனவே, இது தமிழக்கு மட்டும் வந்த தீமை என்ற சோர்வு தேவையில்லை என்பதை நான் இங்கு மீண்டும் வலியுறித்தி சொல்ல விரும்புகிறேன்.

தாய்மொழி கல்வி பற்றி மிகத் தெளிவான ஒரு கருத்தை வெளியிட்டவர் காந்தியார். அவர் என்ன சொன்னார் என்றால், அயலார் ஆட்சியால் நமக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி தாய்மொழி கல்வியை புறக்கணித்தது தான். இதன் பொருள் என்ன? ஒரு இனம் தாய்மொழி கல்வியை புறக்கணிக்கிறது என்றால் அது விடுதலை பெற்ற இனமாக இல்லை, அடிமை இனமாக இருக்கிறது என்று பொருள். ஆனால்? தாய்மொழி கல்விக்கு அழுத்தம் கொடுத்த அதே காந்தியார், இந்துஸ்தானியை பொது மொழியாக்க விரும்பினார். இதனால் தான் காந்தியாரே தோற்றார். இதில் வென்ற கொள்கை எது? ஒரு சிறு கூட்டம் பேசுகின்ற மொழியாக இருந்தாலும் சரி, அந்த மொழியும் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும். ஒற்றை தொடர்பு மொழி என்ற ஒன்று இருக்க முடியாது என்ற கருத்தில் உறுதியாக ஊன்றி நின்று, தாய்மொழி கல்வியை ஒவ்வொரு மனிதனின் உரிமையாகவும் அறிவித்தவர் புரட்சியாளர் லெனின் மட்டுமே! அதனால் தான் அவருடைய கொள்கை வெற்றிப் பெற்றது. நாம் வலியுறுத்துகிற தாய்மொழி கொள்கை என்பது லெனினுடைய மொழி கொள்கையே.

தாய் மொழி என்பதை இரத்த சம்பந்தப்பட்டதாக பார்க்க வேண்டாம். மொழி என்பது ஒரு சமூக வினை பொருள். சமூகத்தில் எந்த மொழி புழங்குகிறதோ, சமூகத்தின் இயக்கத்தில் எந்த மொழி இருக்கிறதோ அது தான் தாய் மொழி. இன்னும் சரியாக சொன்னால் நம்முடைய தேசிய மொழி என்று சொல்லலாம். இந்த தேசிய மொழி தான் கற்றுக்கொள்கிற முதல் மொழி. நம்முடைய தொடக்கப் பள்ளிகளும், உயர்நிலை பள்ளிகளும் மொழியியல் கல்வி நிறுவனங்களா? நாம் மொழி புலமைக்காகத்தான் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்துகிறோமா? பொறியாளர்களை, மருத்துவர்களை, வழக்கறிஞர்களை, ஆசிரியர்களை உருவாக்க மொழி தேவை. ஆனால், எல்லா மாணவர்களுக்கும் நீங்கள் மூன்று மொழிகளை கற்றுத்தரவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? வளர்ச்சி பெற்ற எந்த நாட்டிலும் இப்படியொரு நடைமுறை இல்லை. உயர்வான கல்வி என்பது, அதனுடைய கல்வி மொழி என்பது, நம்முடைய தாய்மொழி தான்.

நம் சமூகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் கல்விக்கண் திறக்க வேண்டும் என்றால், எங்களுக்கு இயற்கை கண் திறந்தால் போதாது, அறிவுக்கண்ணும் திறக்க வேண்டும் என்பதில் நம்பிக்கைகொண்ட, கல்வி ஆர்வம் கொண்ட, தமிழ் மக்களுடைய - பெரும்பான்மை மக்களுடைய - ஒடுக்கப்பட்ட மக்களுடைய கல்வி உரிமையை மீட்பதற்கு தமிழ்நாட்டில் தமிழ்மொழி வழிக் கல்வி தேவை. தமிழை கல்வி மொழியாக்குவதை தவிற வேறு வழியில்லை என்ற நிலைப்பாட்டில் நாம் ஊன்றி நிற்போம். இந்த அடிப்படையில் ஒரு தெளிவை உருவாக்குவோம். அது தமிழ் மக்களுடைய விடுதலைக்கு வழிகாட்டுகிற ஒரு அரசியல் படையாக திகழும். இன்று இது ஒரு கேட்பார் இல்லாத பொருளாக இருக்கலாம். ஆனால், இந்த நிலைக்கு ஒரு நியாயமான, அருமையான தீர்வு வரும்.

ஆட்சி மொழி, வட்டார மொழி என்ற இந்த குழப்பங்கள் எல்லாம் நமக்கு தேவையில்லை. நமக்கு தேசிய மொழி தமிழ் தான். தமிழர்களுக்கும் தேசிய மொழி தமிழ் தான். நமக்கு ஆட்சியானாலும் – நீதியானாலும் - கல்வியானாலும் துறைதேறும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் தான். ஆக, நமது கெள்கையே ஒரு மொழி கொள்கை தான். இரு மொழி கொள்கை என்தே தாய் மொழியையும், அயல் மொழியையும் சமப்படுத்துவதாகும். தாய்மொழிக்கு நிகறாக எதுமே வரமுடியாது என்ற தெளிவை நாம் மக்களுக்கு ஏற்படுத்துவோம்.

எங்களுக்கான கல்வி அறிவியலுக்கான கல்வி - அறவியலுக்கான கல்வி - ஒப்புறவுக்கான கல்வி- போராடுவதற்கான கல்வி - விடுதலைக்கான கல்வி. அந்தக் கல்வியை தமிழர்கள் அனைவருக்கும் உரித்தாக்க தமிழ் வழிக் கல்விக்கான போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று அரங்கம் நிறைந்த கரவொலியுடன் அவர் நிறைது செய்தபோது சரியாக ஐம்பது நிமிடம் பேசியிருந்தார். ஒரு கருத்தரங்க உரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தோழர் தியாகு அவர்களின் உரை. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படியொரு உரையை கேட்ட மகிழ்ச்சியில் உள்ளம் முழுவதும் உவகையில் திளைக்கிறது.

இறுதியாக புதுவை தமிழ் நெஞ்சன் தீர்மானங்களை வாசிக்க, இரா. பரமேஸ்வரி நன்றியுரை கூற தாய்மொழி வழிக் கல்விக்கான அந்த அற்புதமான முழுநாள் கருத்தரங்கம் இனிதே நிறைவுப்பெற்றது.

********************

குறிப்பு :

1) இப்படியொரு கருத்தரங்கில் முழு நாளும் அமர்ந்து தமிழ் அரசியலையும், அறவியலையும் பயின்றுவிட்டு, அதிலும் முனைவர் இளங்கோ மற்றும் பொறியாளர் தேவதாசு ஆகியோரின் பேச்சை செவிமடுத்துவிட்டு, மீண்டும் நான் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டால் தமிழன் என்று சொல்லவே தகுதியற்றவனாகிவிடுவேன். அதனால், மாலை நான்கு மணிக்கு அந்த மொழியியல் பண்பாட்டு அராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்தை விட்டு வெளியேறும் போது நான் எடுத்துக் கொண்ட தீர்மானம்… ‘இனி தமிழில் மட்டுமே கையெழுத்திடுவேன்’ என்பதாகும். 

- முகைதீன் அர்சத், புதுச்சேரி