rajendran ias book on 1801எழுத்தாளர் டாக்டர் மு.ராஜேந்திரன் ஐஏஎஸ் எழுதி, 2016-இல் வெளிவந்த ‘1801’ நூலினை அனைத்துலகத் தமிழ்ப் படைப்புகளில் சிறந்த படைப்பாக மலேசியாவின் டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் அறிவித்திருக்கின்றது. இந்நூலுக்கு ரு.6,50,000/- (10,000 அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது.  

     மலேசியாவின் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், அனைத்துலகத் தமிழ் நூல் போட்டியை நடத்தியது. இதில், இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நாடுகளின் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் சிறந்த நூலைத் தேர்வு செய்ய அறிஞர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் டாக்டர் மு.ராஜேந்திரன் ஐஏஎஸ் எழுதி, வந்தவாசி அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘1801’ நூல் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

     இந்நூலுக்கான பரிசளிப்பு வரும் நவம்பர்-17,18,19 ஆகிய நாட்களில் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள விழாவில் வழங்கப்படவிருக்கிறது.

’1801’ நாவல் குறித்து...

    இந்திய சுதந்திர வரலாற்றில் விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருது பாண்டியர்கள், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாய்க்கர், தீரன் சின்னமலை உள்ளிட்ட போராளிகளே. 

   தென்னிந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801-ஆம் ஆண்டு நடத்திய போராட்டமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாகும். ஆங்கிலேயர்கள் மிக அதிகமான மனித இழப்புகளை சந்தித்ததும் இந்தப் போர்க்களத்தில்தான். இந்திய விடுதலைப் போராட்டக்காரர்கள் முதன்முதலில் நாடுகடத்தப்பட்டதும் இப்போரில் தான்.

      உலகம் முழுக்க நடந்த விடுதலைப் போர்களின் விழுச்சிக்குப் பல காரணங்கள் இருந்துள்ளன. தென்னிந்திய விடுதலைப் புரட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாய் அமைந்தது சில தனி நபர்களின் துரோகம் மட்டுமே. சில நூறு பணங்கள், சிறு துண்டு நிலம், ஆசை வார்த்தைகள், அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு என ஆங்கிலேயர்கள் விரித்த வலையில் விழுந்து துரோகிகளாக மாற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.

     முதல் இந்திய சுந்தந்திரப் போரின் எழுச்சி, வீழ்ச்சி, 18 - ஆம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை, பிரிட்டிஷ் இந்தியக் கால தமிழகம், ஆங்கிலேயர்களின் இந்திய வாழ்க்கை எனப் பல்வேறு கதைக்களன்கள் விவரிக்கப்பட்ட நாவலே ’1801.’  

எழுத்தாளர் குறிப்பு : 

        rajendran ias டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகிலுள்ள வடகரை கிராமத்தில் பிறந்தவர். முதுகலை ஆங்கில இலக்கியமும் சட்டமும் படித்தவர். ஐ.ஏ.எஸ். தேர்விற்காக வரலாற்றை ஒரு பாடமாக எடுத்து படித்தப் பிறகு, அவரின் முழு ஆர்வமும் வரலாற்றின்மீதே திரும்பியது. வரலாற்றைத் தேடி பயணிப்பதில் தீராத ஆர்வம் உள்ளவர். 

        இயற்கைப் பாதுகாப்பு செயல்பாட்டாளர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராய் இருந்தபோது மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைப்பகுதிகளிலும் பத்து லட்சம் விதைகளைத் தூவி, மலைவளம் காத்தவர். மாவட்டத்தில் இருக்கும் ஆயிரம் ஆண்டுகாலப் பழமையான கோவில்களில் உள்ள கல்வெட்டுகளைத் தொல்லியல்துறை உதவியுடன் படியெடுத்தவர். 

         'திருக்குறளில் உள்ள உள்நாட்டு வெளிநாட்டுச் சட்டக்கூறுகள்' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முதல் பட்டமளிப்பு விழாவில் 'முனைவர்' பட்டம் பெற்ற முதல் மாணவர். தற்போது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.

          இவரின் பிற நூல்கள்: 

                                                            1சோழர் காலச் செப்பேடுகள்
                                                            2. பாண்டியர் காலச் செப்பேடுகள்
                                                            3. சேரர்  காலச் செப்பேடுகள்
                                                            4. பல்லவர் காலச் செப்பேடுகள்
                                                            5. சட்ட வல்லுநர் திருவள்ளுவர்
                                                            6. வடகரை - ஒரு வம்சத்தின் வரலாறு ( தன்வரலாற்று நாவல் )
                                                            7. பாதாளி (சிறுகதைகள்)
                                                            8. 1801 (நாவல்) 

  1. வந்தவாசிப் போர்-250
                                                             10. கம்பலை முதல்... (இரு கட்டுரை நூல்களும் கவிஞர் அ.வெண்ணிலாவுடன் இணைந்து எழுதியவை).

             பெற்ற விருதுகள்: 

                                                      0 ’சோழர் காலச் செப்பேடுகள்’ நூலுக்காக ’கவிதை உறவு’ சிறந்த வரலாற்று 
                                                           நூல் விருது, கம்பம் பாரதித் தமிழ்ச் சங்க விருது, தினமலர்  இராமசுப்பையர் 
                                                           வரலாற்று நூல் விருது.
                                                      0  ’பாண்டியர்  காலச் செப்பேடுகள்’ நூலுக்காக தமிழக அரசின் சிறந்த நூல்ப் பரிசு.
                                                      0  ’வடகரை-ஒரு வம்சத்தின் வரலாறு’ நூலுக்காக கோவை மா.பொ.சி.
                                                            சிலம்புச் செல்வர் இலக்கிய விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் 
                                                              ’புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’.

                                                      0  ’1801’ நூலுக்காக ’கவிதை உறவு’, ’கவிமுகில் அறக்கட்டளைப் பரிசு’, 
                                                            தமிழ் நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் கழகத்தின் 
                                                            சிறந்த நாவலுக்கான விருது, கலை  இலக்கியப்  பெருமன்றம் மற்றும் 
                                                            நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து வழங்கும் சிறந்த நாவலுக்கான முதல் பரிசு.