reservation sep19

பட்டேல்களின் இடஓதுக்கீட்டு உரிமைப் போராட்டத்தை முன் வைத்து...

இட ஒதுக்கீடு பிச்சை என்ற எண்ண ஓட்டத்தில் தோன்றியதே பட்டேல்கள் என்னும் பனியாக்களின் இட ஒதுக்கீடு கோருதல் என்ற பெயரில் தோன்றி யாருக்கும் இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற கோணத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் போராட்டம். தன் பசிக்கு சாப்பாடு வேண்டும் என்ற தொனியில் தோன்றிய அப்போராட்டம், பிறருக்கு சாப்பாடு கிடைக்காமல் செய்ய தான் பட்டினி கிடக்கவும் தயார் என்ற நோக்கில் பயணித்து இடஒதுக்கீட்டின் அடித்தளத்தையே தகர்த்து விடும் போக்கில் நகர்ந்து கொண்டுள்ளது. இதற்கான தற்போதைய "பொறி' ஹர்திக் பட்டேல் எனும் 22 வயது இளைஞன். இவனை இன்று ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது, வியக்கிறது.

ஒரு தனிமனிதனைச் சார்ந்து ஒட்டுமொத்த சமூகமே ஒருங்கிணைவது என்பது காலங் காலமாய் நிகழ்ந்து வருவதுதான். அதற்கான காரணிகள் எப்போதும் உணர்வு வயப்பட்டதே. அறிவு வயப்பட்டதாக இருந்ததேயில்லை. நியாயம் சார்ந்து சிந்திக்கும் ஒரு சில சமூக மற்றும் இனக் குழுக்களை தவிர்த்து.

இவ்வுண்மையின் பின்புலத்தில் வைத்துப் பார்த்தால், பட்டேல் பனியாக்களின் பேராட்டத்தின் பின்னணியும் அதற்குக் காரணம் என தன்னைத் தானே அம்மணப் படுத்தி கொண்டிருக்கும் சிறுமதியாளன் ஹர்திக் பட்டேலின் உள்ளக்கிடக்கையும், அவனைப் பின்னிருந்து இயக்கும் பார்ப்பன, பனியாக்களின் சதிதிட்டமும் புலப்படும்.

தன்னைச் சுற்றியுள்ள பிற சமூகங்கள், அதன் தோற்ற மற்றும் இயக்க வரலாறு, ஒட்டுமொத்த சமூகங்களில் இன்றைய இருப்புநிலை என்ற எவை குறித்தும் சிறிதும் அறிவற்ற ஒரு மூடன் இவ்விளைஞன். இதை அண்மைக் காலமாய் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளும், ஊடகங்களுக்கு அவன் அளித்து வரும் நேர்காணல்களுமே புலப்படுத்தும். சராசரி மனிதனின் அறிவுக்கும் குறைவான அறிவுடைய அவன் மற்றும் அவனைச் சார்ந்தோர் பிதற்றும் வியாக்கியானம் இதுதான். அறிவாளிகளாக இருந்தும் இடஒதுக்கீட்டால்தான் எங்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதே அது. இக்கூற்று முற்றிலும் பொய் என்பதை கல்வி வேலை வாய்ப்பால் பட்டேல்கள் முதல் நிலையிலிருப்பதும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒன்பது அளவுகோளில் ஒன்றில் கூட அவர்கள் பொருந்தமாட்டார்கள் என்பதும் செய்தித்தாள்கள் வெளியிடும் புள்ளி விவரங்களிலிருந்து புலப்படுகிறது. (Economic Times, Special Future. dated 1-9-2015)

ஆகஸ்ட் 30-ஆம் தேதியிட்ட Economic Times நாளிதழுக்கு அளித்த பேட்டி ஹர்திக் பட்டேல் எவ்வகையான அறிவுக் குருடன் என்பதைப் புலப்படுத்தும். அந்நேர்காணலில் பெரும்பகுதி வசதி வாய்ப்பு படைத்த படேல் சமூகத்தினருக்காக இடஒதுக்கீடு கோரி போராடுவது நியாயம் தானா? என்ற கேள்விக்கு அவன் பதில் இதுதான். ஆமாம், பட்டேல்களில் 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் மிகுந்த வசதியுள்ளவர்களே, ஆனாலும் மீதமுள்ளவர்கள் கஷ்டப்படுவதை எவ்வாறு பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும். அவர்களுக்காகத்தான் இப்போராட்டம். அதே பேட்டியில், தான் ஒரு தரங்கெட்ட வலதுசாரி சிந்தனைவாதி என்பதை, பால்தாக்கரேவே தன் முன்மாதிரி எனவும், இந்தியா இந்துக்களுக்கான நாடு எனவும் கூறி தான் யார் என்பதையும், தன் நோக்கம் என்னவென்பதையும் தெளிவாக்கியுள்ளான்.

மேற்குறிப்பிட்ட பின்புலத்தில் வைத்துப் பார்த்தால் நடந்து கொண்டிருக்கும், நடக்கப்போகும் இவ்வகைப் போராட்டங்களின் உள்நோக்கம் என்னவென்பது தெளிவாகும். நோக்கம் இதுதான். ஏற்கனவே பொருளாதாரத்திலும், சமூக அடுக்கிலும் முன்னிலையிலிருக்கும் தங்களைப் போன்ற சமூகங்களுக்குப் போட்டியாக (ஜாட்டுகள், ரெட்டி, பிராமணர்கள், பூமிகார் எனும்பல) இதுவரை தங்களின் கீழுள்ள இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினர் வந்துவிடக் கூடாது என்பதே அது. எதிர்ப்பாளர்களின் கூற்றுப்படி பார்த்தாலே, 40 சதவீதத்திற்கும் மேலும், அதற்கு இணையாய் சராசரி வசதி நிலைக்கும் மேல் வாழ்க்கைத் தரத்தில் இருக்கும் இவர்கள், வறுமையில் உள்ளதாய் கூறிக்கொள்ளும் 10 சதவிகித்திற்கும் குறைவாய் உள்ள தம் சாதியினருக்காக பரிந்து கொண்டு நடத்தும் போராட்டம் இது. ஆக தன் சாதியினர் 100-க்கு 100 வசதியாய் வாழவேண்டும் என்பதில் இவர்களுக்குள்ள அக்கறையை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

reservation sep19 1

அதேவேளை, தற்போது பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோராய் அறியப்பட்டு இட ஒதுக்கீடு அனுபவித்து வரும் சமூகங்களின் நிலை மேற்சொன்ன நிலைக்குத் தலைகீழ். இச்சமூகங்களில் வெறும் 10 சதவிகிதத்தினரே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வசதியுடன் வாழ்கின்றனர். மீதமுள்ள 90 சதவிகிதத்தினருக்கும் மேலானோர் மேம்படாத வறிய வாழ்வே வாழ்கின்றனர். இடஒதுக்கீடு போன்ற சலுகையால் ஒரு சிலர் பச்சைப் பசேல் என்றிருப்பதை மேற்சொன்ன சாதியினர் சகித்துக் கொள்ளவியலாத மனநிலையில் உதித்ததே இப்போராட்டம். இது நன்கு சிந்தித்து கட்டமைக்கப்பட்ட நெடு நாளைய சதியின் வெளிப்பாடு. சமூகக் கட்டமைப்பின் மேல்தளத்தில் உள்ள சாதிகள், மதத்தை கருவியாய்க் கொண்டு மீண்டும் நால்வருண முறையைப் புகுத்தி பிறரை ஆள விழைவதின் வெளிப்பாடு. இச் சதிகாரர்களின் நோக்கம் தம் சாதியினருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பதல்ல. மாறாக தற்போதைய இடஒதுக்கீட்டு முறைக்கு சாவுமணியடித்து பிற சமூகத்தினரை இருண்ட வேத காலத்திற்கு அழைத்துச் செல்வதே.

இட ஒதுக்கீட்டின் பின்னணியை அறிந்தவர்கள், அறிய முயற்சிப்பவர்கள் நம்மில் சிலரே. இந்து மதத்தின் கேடுகெட்ட வருணாசிரம தர்மம் இந்திய துணைக் கண்டத்து மக்களின் வாழ்வியலில் விளைவித்த சொல்லொணாத் துயரினை துடைத்தெறியும் அருமருந்தே இட ஒதுக்கீடு!. எண்ணிலா நல்ல உள்ளங்களின் தொடர் போராட்ட முயற்சியாலும், தியாகத்தினாலும் கிடைக்கப் பெற்றதே பின்தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு!. அண்ணல் அம்பேத்காரை அத் தியாகங்களின் திருவுருவாக அறியத் தவறினால் அது வரலாற்றுப் பெரும்பிழையாகக் கருதப்படும். இவ்வாறாய் பெறப்பட்ட இட ஒதுக்கீட்டை கொச்சைப்படுத்தவும், இல்லாமலாக்கவும் ஒரு சதிகாரக் கூட்டம் கிளம்பியுள்ளது. அவர்களுக்கு நாம் உணர்த்த வேண்டியது இதுதான். இடஒதுக்கீடு ஒரு பிச்சையல்ல, அது உரிமை! சமூகக் கட்டமைப்பில் பின்வைத்து வஞ்சிக்கப்பட்ட சமூகக் குழுக்கள் என்றைக்கு 80 சதவிகிதத்திற்கு மேல் முன்னேற்றம் காண்கிறதோ, சமூகக் குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட சாதி அடைமொழி என்று மறைகிறதோ, அல்லது பொருளற்றுப் போகிறதோ, உங்களைப் பிடித்திருக்கும் சமூக அந்தஸ்து மற்றும் சாதி சார்ந்த கர்வம் என்று மறைகிறதோ, சாதி என்ற ஒன்று இல்லை அல்லது தேவையில்லை என்ற நிலை என்று உருவாகிறதோ அன்றைக்கு இல்லாமல் போகட்டும் இந்த இட ஒதுக்கீடு.

மேற்கண்ட கருத்தியலைச் சொல்லி மூடர்களை எதிர் கொள்ள நம்மில் எத்தனை பேருக்கு திராணியிருக்கிறது. வயிறு புடைத்த ஒரு கூட்டம், பிறருக்கு உணவில்லாமல் செய்ய போராட்டம் நடத்துகிற போது பசியோடிருக்கும் நாம், கிடைக்கின்ற சொற்ப உணவையும் தக்கவைத்துக் கொள்ள போராட துணியாதது ஏன்? நம் சமூக உணர்வு எங்கே போனது? நாம் ஏன் கண்ணை மூடிக்கொண்டு ஏதும் நடக்காதது போலிருக்கிறோம்? இன்னும் எத்தனை காலம்தான் உணர்வற்றிருப்பது? இன்று நம்முன், குறிப்பாய் இட ஒதுக்கீட்டால் பயன் பெற்றோர்முன், பயன் பெறப்போவார் முன், நியாயம் சார்ந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காக சிந்திப்போர் முன், மத துவே­ங்களை எதிர்ப்போர்முன், அனைத்திற்கும் மேலாய் உண்மை விழைவோர்முன் உள்ள செயல்திட்டம் பின் வருவனவாகவே இருக்க வேண்டும்.

1. இட ஒதுக்கீடு பிச்சையல்ல, அரசியலமைப்பால் நமக்கு வழங்கப்பட்ட சமூக உரிமை! அதை கேள்வி கேட்கவும், கொச்சைப்படுத்தவும் எந்த கொம்பனுக்கும் தகுதியோ, உரிமையே இல்லை என்று உணர்த்துவது. உணர்த்தும் விதமாய் செயல்படுவது.

2. இட ஒதுக்கீட்டின் பின்னணி மற்றும் வரலாற்றை தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மட்டுமல்ல, உயர் சாதியினரையும் உணர வைப்பது.

3. உணர்வுகளற்று தேமே என்றிருக்காமல், இடஒதுக்கீட்டுக் கோட்பாட்டை, சதிகாரர்கள் கேள்விக்குள்ளாக்கும் போதெல்லாம் விரைந்து எதிர்வினையாற்றுவது. வீதிக்கு வந்து போராடுவது.

4. அரியதாய்ப் பெற்ற அருமருந்தாம் இட ஒதுக்கீட்டை நியாயமாய்ப் பயன்படுத்தி சமூகப் பிணிக்குத் தீர்வு காண்பது.

5. தேவை ஏற்படும்போதெல்லாம் களப்பனியாளர்களுக்கு தாராளமாய் பொருள் மற்றும் பிற உதவிகளை வழங்குவது. இதைச் செய்ய வேண்டிய கடமை இட ஒதுக்கீட்டால் பயனடைந்து வரும் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு நிறையவே உள்ளது.

நாம் எதிர் நோக்கியுள்ள அபாயத்தை உணர்வோம்! சதிகாரர்களின் தீய முயற்சியை முளையிலேயே கிள்ளியெறிவோம்!

நிகழ்ச்சி ஏற்பாடு : அறிவாயுதம், தமிழ்த் தேசிய ஆய்விதழ்
9444081126 / 9444080967 / 7299967445