மனிதர்கள் உலகில் தோன்றி இரண்டு இலட்சம் ஆண்டுகள் மேல் ஆகின்றது. இந்த இரண்டு இலட்சம் ஆண்டுகள் மனித குல வரலாற்றில் வர்க்க சமூகம் உருவானது வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தான்! சுரண்டும் வர்க்கம் சுரண்டப்படும் வர்க்கமென மனித சமூகம் பிளவுண்டது இப்படியாக குறுகிய காலம்தான் ஆகின்றது. இதில்,முதலாளிய சமூகம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்புதான் உருவானது மனித குல வரலாற்றில் இந்த முதலாளிய சமூகம் ஆரம்பத்தில் முற்போக்கு பாத்திரம் வகுத்து சமூக வளர்ச்சியை முன் கொண்டு சென்றது. ஆனால் தனது இலாப வேட்டையில் நாடுகள் கடந்த முதலாளியமாக (ஏகாதிபத்தியமாக) மாறிய பின்பு தனது நலன்களுக்காக பெரும் உலக போர்களை செய்து பேரழிவுகளை உண்டாக்கியது. பாசிசமாக உருவெடுத்து நாசங்களை செய்தது இந்த நாகரிக உலகை. இந்த கார்ப்பரேட் முதலாளியம் சமூக வளர்ச்சியில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தியது. இன்று தனது நெருக்கடியில் இருந்து மீள சூறையாடும் முதலாளியமாக (CRONY CAPITALISM) மாறி மேலும் மேலும் சமூக நெருக்கடிகளுக்குள் சென்று கொண்டிருக்கின்றது.

CRONY CAPITALISM

விரல்விட்டு எண்ணக்கூடிய சில பணக்காரர்களுக்கு சலுகைகளை வாரி இறைக்கின்றது. இயற்கையை சூறையாடுகின்றது. இயற்கைக்கு மனிதனுக்குமான முரணை பெரும் பகை முரணாக மாற்றி வருகின்றது இந்த சூறையாடும் முதலாளியம்!

இன்று உலகமய பொருளியல் கொள்கையானது, எவ்வளவு வேகமாக பொருளீட்ட முடியுமோ, அத்தகைய வழிமுறைகளையே பின்பற்றுகிறது. ஆய்வுகள் சார்ந்து, மக்களுக்கு தீங்கு விளைவிக்காத மாற்று வழிகள், கால அவகாசம் எடுப்பதால், அம்மாற்று வழிகள் குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை. எவ்வளவு வேகமாக இயற்கை வளங்களைச் சூறையாட முடியுமோ, லாபம் சம்பாதிக்க முடியுமோ அதுவே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக நம்நாட்டில் பெரும் ஊழல்கள்..! மோசமான முறைகேடுகள்..!! புகார்களால் கறைபடாத ஆட்சியாளர்களோ, கார்ப்பரேட் நிறுவனங்களோ இல்லை என்று சொல்லிவிடலாம். இந்தப் பட்டியலில் அதன் அதிகாரிகளும் போட்டி போட்டுச் சேர்ந்துவருவது அதிகரித்துள்ளது.

பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன்! மலிவான விலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆண்டுக்கு 100 பில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் தனியார் துறைமுகம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மின் உற்பத்தி நிலையம் துறைமுகத்துக்குச் செல்ல 64 கிலோ மீட்டர் தொலைவுக்கு தனியார் தொடர்வண்டி இருப்புப்பாதை இவை எல்லாம் குறுகிய காலத்தில் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலதிபர் அதானியின் வளங்கள், இந்த வளர்ச்சி இவருக்கு எப்படிச் சாத்தியமானது-

1990ஆம் ஆண்டு இவரைப் போன்று இரண்டே செல்வந்தர்கள் இந்தியாவில் இருந்தனர். இவர்களின் சொத்து மதிப்பு ஏறத்தாழ ரூ, 2 ஆயிரம் கோடி 2012ஆம் ஆண்டு இந்தச் செல்வந்தர்களின் பட்டியலில் 46 பேர் சேர்ந்தனர், இவர்களின் சொத்து மதிப்பு ஏறத்தாழ ரூ,11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இதற்குக் காரணம்…. சென்ற காங்கிரஸ் அரசால்.. இன்றைய மோடி அரசால் வாரி வழங்கப்படும் சலுகைகள், வரிவிலக்குகள், தாரைவார்க்கப்படும் விவசாய நிலங்கள். அள்ளிகொடுத்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வங்கிக்கடன்கள். சொற்பமான தொகையில் கனிம வளங்கள், நிலக்கரி, மணல் என எதையும் சூறையாட அனுமதி… என இந்திய அரசே முன்வந்து வாரிவழங்கியதால்தான் இந்தச் செல்வந்தர்கள் பணத்தில் மிதக்கின்றனர்.

அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஏன் அரசு எந்திரமே இந்தச் செல்வந்தர்களுக்கு ஒத்துழைப்பதுடன். அவர்களின் முகவர்கள் போல் செயல்பட்டு அனைத்துப் பணிகளையும் முடித்து கொடுக்கின்றன. இதனால் உற்பத்தி பெருகுகிறது. வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது. தொழிடலவளடம எங்கே போகிறது என ஊடகங்கள் மூலம் இடைவிடாத பொய்யான பரப்புரையை அரசு எந்திரம் முடுக்கிவிடுகிறது. கண்கட்டு வித்தையாக வாரி வழங்கிய சலுகைகள் மறைக்கப்பட்டு விடுகின்றன.

இப்படி வளம்பெற்ற செல்வந்தர்களால் உருவானதுதான் சலுகைசார் முதலாளியம் (CRONY CAPITALISM)… இவர்களால்தான் பெரும் ஊழலும் முறைகேடுகளும் தலைவிரித்தாடுகின்றன. இந்தத் தொழில் முதலாளிகளுடன் அரசு உயர் அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் கூட்டச் சேர்ந்து சூறையாடுகின்றனர். இதனை தேசத்தின் வளர்ச்சி முன்னேற்றம், தேசபக்தி என்ற பெயரில் நியாயப்படுத்துகின்றனர்.

இதனால்தான் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே அரசியல்வாதிகளால் கோடிகளில் குளிக்க முடிகிறது. சட்டத்தின் பிடியில் சிக்காமலும்., அப்படியே மாட்டினாலும் எளிதாகத் தப்பித்துவிடவும் முடிகிறது. இந்த அரசியல் தலைவர்களின், அரசு எந்திரத்தின் துணையோடு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக தொழில் போட்டியாளர்கள் முடக்கப்படுக்ன்றனர். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் மற்றும் கட்டுப்பாட்டை கார்ப்பரேட் நிறுவனங்களிடமே நடுவண் அரசு கொடுத்துவிட்டது.

இப்படி மிகப்பெரும்பான்மையான மக்களின் வாழ்வியலை இருளில் தள்ளிவிட்டு, சமூகத்துக்குச் சொந்தமான பொதுச் சொத்துகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் சொந்தமாக்கிக்கொள்ள இந்த அரசே ஏற்பாடு செய்து தருகிறது. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில்துறை உற்பத்தி என்பதை பின்னுக்குத் தள்ளிவிட்டு இயற்கை வளங்களை, கனிமங்களை சூறையாடுவதையே முதன்மையான தொழிலாகக் கொண்டுள்ளன.

இப்படிப்பட்ட சலுகைசார் முதலாளியத்தில் உள்ளூர் பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்து சூறையாடுகின்றன. இவற்றை பகட்டுப் பரப்புரை மூலும் இந்த அரசு மூடிமறைத்தவிடுகிறது. அறநெறிகள் வீசியெறியப்பட்டு பெரும் ஊழலும் கேவலமான முறைகேடும் தலைவிரித்தாடத் துணைபோகின்றன.

விரல்விட்டு எண்ணக்கூடிய சிலருக்க நாட்டின் சொத்து தாரை வார்க்கப்படுவது சரியானதா?

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது உறுதி செய்யப்பட வேண்டாமா?

பன்னாட்டு நிறுவனங்களுக்க வாரிவழங்கினால்தான் வளர்ச்சியைப் பெற முடியுமா?

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், தலைமை கணக்குத் தணிகை அதிகாரியாக இருந்த வினோத்ராய் போன்றவர்கள் சலுகைசார் முதலாளியம் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்கிறார்களே உண்மையா ஊழலும் முறைகேடும் கார்ப்பரேட் முதலாளிகள்-.ஆட்சியாளர்கள்-அதிகாரிகள் என்ற முக்கூட்டு இல்லாமல் நடைபெறுகிறதா ….?

கீழ்மட்டம் வரை புரையோடிப்போன இந்தச் சிக்கலுக்குத் …தீர்வுதான் என்ன-

தீர்வை

நாள்: 20-06-2015 சனிக்கிழமை
நேரம்:மாலை 4.30 மணி முதல் 9.00 வரை
இடம்: இக்சா கருத்தரங்க அறை, கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர், சென்னை.

சிறப்புரை:

பேராசிரியர் பி.ஜே.ஜேம்ஸ், கேரளம் இ.பொ,க. (மா.லெ) (ரெட் ஸ்டார்)

தோழர் தங்கப்பாண்டியன், பொதுவுடைமை கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை,

தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தலைமை: வழக்கறிஞர் சுப.மனோகரன், அறிவுச்சுடர் நடுவம்

வரவேற்புரை: உதவி பேராசிரியர். சீனி.கோகிலா, அறிவுச்சுடர் நடுவம்

நன்றியுரை: திரைப்பட இயக்குநர் ரா. சிதம்பரம், அறிவுச்சுடர் நடுவம்.

அனைவரும் வருக..! ஆதரவு தருக!!

தொடர்புக்கு: ஊடகவியலாளர் மணிமாறன்
289, தம்புதெரு, பாரிமுனை, சென்னை.600 001
செல்:9500001224, 9940176599