ilanthamizhagam agitation

2014, ஜூலை 8 ஆம் தேதி இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதலை தொடங்கியது. இது வரை 333 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். கடல் வழி, வான் வழித் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் வெள்ளிக்கிழமை(19 ஜூலை) முதல் தரைவழித் தாக்குதலையும் நடத்திக் கொண்டிருக்கிறது. காசா நகரம் கொலைக்களமாகி வருகிறது. கொல்லப்பட்ட 333 பேரில் 77 பேர் குழந்தைகள் . 24 பேர் பெண்கள், 18 பேர் முதியவர்கள். 2385 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனால், ஹமாஸின் தாக்குதலால் கொல்லபட்டவர்கள் இரண்டு இஸ்ரேலியர்கள். பாலசுதீனர்களை இனப்படுகொலை செய்து வரும் இசுரேலை எதிர்த்தும், அதை கைகட்டி வேடிக்கை பார்க்கும் இந்தியாவைக் கண்டித்தும், பின்வரும் கோரிக்கைகளை மையப்படுத்தி மனித சங்கிலிப் போராட்டத்தை நேற்று 20 சூலை 2014 மாலை 4 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகே இளந்தமிழகம் இயக்கம் ஒருங்கிணைத்தது.

• இலங்கை, இஸ்ரேல் என்ற இனப்படுகொலை நாடுகளை நட்பு நாடென்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்திய அரசைக் கண்டிப்போம்!

• இனப்படுகொலை செய்யும் இசுரேலை உலக அரங்கில் தனிமைப்படுத்துவோம்.

• நீதிக்கும், அமைதிக்குமான போராட்டத்தில் பாலஸ்தீனியர்களுக்கு தோள் கொடுப்போம்.

இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். செந்தில் பேசும் பொழுது "புலிகளுக்கு எதிராகப் போரிடுவதாகச் சொல்லிக் கொண்டு ஈழத் தமிழர்களை வகை தொகையின்றி கொன்று குவித்த சிங்கள இராணுவத்தைப் போல் ஹமாசுக்கு எதிராகப் போரிடுவதாகச் சொல்லி பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்துக் வருகிறது இஸ்ரேல் இராணுவம். "பாலஸ்தீனத் தாய்மார்கள் அனைவரையும் கொல்ல வேண்டும்!” என்று இரத்த வெறியை வெளிப்படுத்தியுள்ளார் இஸ்ரேலிய எம்.பி. அய்லட் செகது.

செய்தி தொடர்பாளர் இளங்கோ பேசும் பொழுது, இவ்வுலகிலேயே மிகப்பயங்கரமான ஒரு அமைப்பு உண்டென்றால் அது இசுரேல் தான். பாலசுதீனர்களை இனப்படுகொலை செய்யும் இசுரேலை உலக அரங்கில் தனிமைப்படுத்தவும், புறக்கணிக்கவும் மக்களால் தான் முடியும். இந்திய அரசு. இஸ்ரேல், பாலஸ்தீனம் இரண்டோடும் ந‌மக்கு வர்த்தக உறவுள்ளது அதனால் இது பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சொல்லிவிட்டார். நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்படும் பொழுதும் வர்த்தகத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றது காந்தி தேசம்!. ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம் என்றார்.

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், S.D.P.I, தமிழ்நாடு மக்கள் கட்சி, கம்யூனிசுட்டு கட்சி மக்கள் விடுதலை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், இளைஞர்களும், சனநாயக ஆற்றல்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

காணொலி: https://www.youtube.com/watch?v=KfBx6eigCjM

- ச.இளங்கோவன், செய்தி தொடர்பாளர் - இளந்தமிழகம் இயக்கம்