அன்பார்ந்த தமிழர்களே, தமிழ்த்தேச மக்களே!

இந்திய மக்களவைக்கு தேர்தல் அவர்களின் கணக்குப்படியே 30, 40 ஆயிரம் கோடி செலவில் மாபெரும் சனநாயக (?) திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. யார் பிரதமர்? எந்தக் கூட்டணி? எந்தக் கட்சி? இந்தக் குதிரைப்பந்தயத்தில் முதலில் வருமென்று ஊடகப் பரபரப்பைத் தாண்டி இவர்கள் கூற்றுப்படி இந்தியா என்பது சனநாயக முறைப்படித்தான அமைப்பா? இவற்றில் தேசிய இனங்கள் எல்லாம் விரும்பித்தான் சேர்ந்ததா? திட்டங்கள் தீட்டும்(?) சட்டங்களை இயற்றும்(?) மக்களவை உறுப்பினர்களை மட்டும் தேர்ந்தெடுப்பதுதான் சனநாயகமா? இதைத்தாண்டி நிர்வாகம், நீதி, இராணுவம், நாட்டின் கொள்கை, சட்ட திட்டம் இவற்றை எல்லாம் மக்கள் தீர்மானிக்க முடியாதபோது அது எப்படி சனநாயகமாக இருக்க முடியும் என்பது போன்ற அடிப்படையான கேள்விகள் இருக்க குறைந்த பட்சம் இந்த நாடாளுமன்றம் ஜனநாயகத் தன்மை படைத்ததா என்பதை நாம் பரிசீலிக்க வேண்டி உள்ளது.

545 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்திற்கு 2 நியமன உறுப்பினர்கள் போக 543 இடங்களுக்கான உறுப்பினர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடாக உள்ளது. 1 முதல் 10 தொகுதிகள் கொண்ட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 13ம் 10லிருந்து 20 தொகுதிகள் கொண்ட மாநிலங்கள் 5ம் 20லிருந்து 30 தொகுதிகளைக் கொண்ட மாநிலங்கள் 5ம் 39லிருந்து 48 தொகுதிகள் கொண்ட மாநிலம் 5ம் 80 தொகுதிகள் கொண்ட மாநிலம் ஒன்றும் உள்ளது. இதில் இந்தி பேசக்கூடிய 10 மாநிலங்களில் 225 தொகுதிகள் உள்ளன.

பல்வேறு மாநிலங்களிடையே தற்போதைய நிலையே கடும் வேறுபாடாக உள்ளபோது தற்போதைய இந்த நிலையை மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப மறு சீரமைக்க வேண்டுமென தொகுதி சீரமைப்புக்குழு பரிந்துரைத்துள்ளது (அப்பரிந்துரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது). அப்பரிந்துரைப்படி தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் வட மற்றும் வடமேற்கு மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரை நிறைவேற்றப்பட்டால் தற்போதைய வேறுபாட்டை இன்னும் அதிகமாக்கும்.

யூனியன் பிரதேசங்கள் தவிர பெருவாரியான மாநிலங்கள் தேசிய இன அடிப்படையில் உருவானதே. தனித்துவமான மொழியையும் பண்பாட்டையும் வரலாற்றையும் நிலப்பரப்பையும் மரபுகளையும் கொண்டு வாழும் இவர்களின் முதன்மையான அடையாளம் தேசிய இனமாகவே உள்ளது. எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அவர்கள் ஒரே அடையாளத்தின்கீழ் தங்களை தமிழர்கள், கன்னடர்கள், பஞ்சாபியகர்கள், வங்காளிகள் என அழைத்து தேசிய இனமாகவே வாழ்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாட்டும், மொழிவழி மாநிலங்களுக்கான போராட்டமாகட்டும், இந்தி எதிர்ப்புப் போராட்டமாகட்டும், பார்ப்பனிய இந்து மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டமாகட்டும், கஷ்மீர், வடகிழக்கு பஞ்சாப் தமிழகத்தின் தேசிய விடுதலைப் போராட்டமாகட்டும், தற்போது மத்திய இந்தியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பழங்குடிகளின் போராட்டமாகட்டும், மேற்கு வங்கத்தில் சிங்கூர் நந்திகிராமில் நடந்த போராட்டமாகட்டும், கேரளாவில் நடைபெற்ற அணுவுலை எதிர்ப்பு பிளாச்சிமாடா போராட்டமாகட்டும், தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அணுவுலை, மீத்தேன், நியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டமாகட்டும், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, ஈழ ஆதரவு, மரண தண்டனை எதிர்ப்பு கச்சத்தீவு, கடலுரிமை போராட்டமாகட்டும் இப்படி வரலாற்றிலும் தற்போதும் நடந்து வரும் போராட்டங்கள் அனைத்துமே தன்னுடைய இனத்தையும், தன்னுடைய மொழியையும், தன்னுடைய மண்ணையும் தன்னுடைய பண்பாட்டையும், தன்னுடைய பொருளியலையும், தன்னுடைய கடலையும், தன்னுடைய அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கான பல்வேறு தேசிய இனங்களின் இனப்போராட்டக் களமாகவே இந்தியா உள்ளது.

இப்படி தேசிய இனமாக வாழும் இவர்களிடையே எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும், இவர்கள் தேசிய இனம் என்ற அடிப்படையில் சம மதிப்பு படைத்தவர்களே. எத்தனை லட்சம் பேர் இருந்தாலும், மணிப்பூரிகள் மணிப்பூரிகள் தான். எத்தனை கோடி பேர் இருந்தாலும், தமிழர்கள் தமிழர்கள் தான். எண்ணிக்கை மாறுபாட்டால் இவர்களின் தேசிய இனத்தன்மை மாறப்போவது இல்லை. இந்தக் காரணத்தால் தன் ஐ.நா. மன்றம் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுரிமை உண்டு என்று கூறுகிறது. அது எண்ணிக்கையை அடிப்படையாகக் கொள்ளவில்லை.

நிலை இவ்வாறு இருக்க பல்வேறு தேசிய இனங்களுக்கு தலைமை தாங்கி ஆட்சி அதிகாரம் நடத்தும் இந்திய நாடாளுமன்றம் தேசிய இனங்களுக்கு சம பிரதிநிதித்துவம் வழங்குவதுதான் சனநாயகமாக இருக்க முடியும். அதற்கு மாறாக எண்ணிக்கை அதிகமாக இருப்பவர்களுக்கு அதிக பிரதிநிதித்துவமும்; குறைந்த எண்ணிக்கை கொண்டவர்களுக்கு குறைந்த பிரதிநிதித்துவம் தருவது சனநாயகமாக சமத்துவமாக இருக்க முடியாது. அதுபோல அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் பேசும் மொழிக்கு தேசிய மொழி அந்தஸ்தும், அதிக மூலதனம் கொண்ட தேசிய இனத்திற்கு தொழில்வாய்ப்பும், மூலதனமற்ற தேசிய இனங்களைக் கூலியாக்குவது இங்கு வாழும் தேசிய இனங்களை வஞ்சிப்பது; ஒடுக்குவது; ஒழிப்பது ஆகும். ஆக எண்ணிக்கை அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கும் இந்திய நாடாளுமன்றம் சமத்துவத்திற்கு எதிரானது, சனநாயக விரோதமானது.

அதேபோல் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர் பலம் என்ற அடிப்படையில் தேசிய இனங்களின் தலைவிதியை அவர்களின் மொழி, இன, பொருளாதார, நில, பண்பாட்டு உரிமைகள், அவர்கள் சார்ந்த உள்ளுறவு வெளியுறவுக் கொள்கையை அவர்களின் சம்மதம் இல்லாமல் தீர்மானிப்பதும் நடைமுறைப்படுத்துவதும் தேசிய இனங்களின் இறையாண்மைக்கும் சனநாயக மாண்பிற்கும் விரோதமானது.

இத்தகைய சனநாயக சமத்துவ பண்பற்ற இந்திய நாடாளுமன்றம் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்படுவதால் மட்டும் சனநாயக அடையாளமாகி விடாது. நாடாளுமன்றத்தில் தேசிய இன அடிப்படையில் சம பங்கீடு வழங்கக் கோருவதும். அந்தந்த தேசிய இனங்கள் அவர்களின் தலையயழுத்தை அவர்களே தீர்மானிக்கும் அதிகாரத்திற்காகப் போராடுவதே சனநாயகத்திற்கான பணி. இப்பணியை முன்னெடுப்பதன் வழியாக நம் கோரிக்கைகளை வெல்வோம், தமிழ்த்தேசிய விடுதலையை முன் நகர்த்துவோம்.

tamilzhar front 900