பன்னாட்டு இளைஞர் மாநாடு

செப்டம்பர் 7 | சனிக்கிழமை |காலை 10 மணி |சென்னை

இலங்கை அரசு புரிந்த இனப்படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை வேண்டும்! ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண பொதுவாக்கெடுப்பு நடத்து! என்று கோரி கடந்த மார்ச் மாதத்தில் தமிழகத்தில் எழுச்சி மிக்க போராட்டங்கள் நடந்தன. ஆனால் இந்திய அரசோ எப்போதும் போல ஐ.நா மன்றத்தில் இலங்கை அரசை பாதுகாத்து தமிழர்களுக்கு அநீதியிழைத்தது.

இனப்படுகொலைக் குற்றத்தை  மூடி மறைக்கவும் இலங்கை அரசை உலக நாடுகள் மத்தியில் பாதுகாக்கவும் இந்திய அரசின் ஆதரவுடன் 23வது ”பொது நலவாய அரசுகளின் தலைவர்கள்” மாநாடு வரும் நவம்பர் மாதம் 15 முதல் 17 வரை இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற உள்ளது.

தமிழர் தம் இரத்தம் தோய்ந்த அந்த மண்ணில் இம்மாநாடு நடப்பதால் சிங்கள இனவெறிப் பிடித்த இலங்கை அரசு ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் போரில் கொன்றொழித்த குற்றத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள துணை செய்யும். மிச்சமுள்ள தமிழர்களின் நிலங்களையெல்லாம் சூறையாடி ‘தமிழன் அந்த தீவில் வாழ்ந்தான் என்ற அடையாளத்தையே அழித்துவிடுவதற்கு வழி வகுக்கும்.  ஏன் என்றால்,

 இரண்டாம் உலகப் போருக்கு முன்னரும் பின்னரும் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த 54 நாடுகளின் கூட்டமைப்பாகவே இந்த ‘பொது நலவாய தேசங்கள்’ அமைப்பு உள்ளது. மனித உரிமைகளை மீறியதற்காகவும், மக்களாட்சியை நடத்தாமல் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தியதற்காகவும் பாகிசுதான், சிம்பாப்வே, நைசீரியா உள்ளிட்ட நாடுகளை சில காலம் தங்கள் கூட்டமைப்பிலிருந்து நீக்கியுள்ள வரலாறும் ’காமன்வெல்த்தில்’ உண்டு. தற்பொழுது கூட 2009 முதல் இன்று வரை பிஜீ தீவை இராணுவ ஆட்சி நடைபெறும் காரணத்தினால் தங்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

கடந்த காலத்தில் வெள்ளை நிறவெறி அரசிற்கு எதிராக நடைபெற்ற தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தில் தென்னாப்பிரிக்க அரசை எல்லா நாடுகளும் புறக்கணித்தன. 1961 முதல் 1994 வரை தென்னாப்பிரிக்கா காமன் வெல்த்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்தது. தற்காலத்தில் பாலசுதீன மக்கள் மீதான இசுரேல் அரசின் அடக்குமுறைக்கு எதிராக உலகெங்கும் உள்ள அறிஞர்கள் ’இசுரேலை புறக்கணிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

நிறவெறிக்காக தென்னாப்பிரிக்க அரசை உலக நாடுகள் புறக்கணித்திருக்கும் போது இன வெறிக்காக சிங்கள அரசை ஏன் புறக்கணிக்கக் கூடாது?

இத்தகைய சூழலிலும் இனவெறிபிடித்த இலங்கை அரசை காமன்வெத்தில் இருந்து வெளியேற்ற கோராமல் தமிழர்களின் இரத்தத்தால் இலங்கைக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் வேலையை இந்தியா செய்து கொண்டிருக்கின்றது. இந்தியாவைச் சேர்ந்த கமலேஷ் சர்மா தான் தற்பொதைய காமன்வெல்தின் பொதுச் செயலாளராக உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் நாம்  இலங்கையை புறக்கணிக்க கோருகின்றோம். ஆனால் இந்திய அரசோ, ’ஊரை கொழுத்துபவனுக்கு, ஊர் நடுவில் சிலை வைப்பது போல’ இனப்படுகொலை குற்றவாளி இராசபக்சேவுகு மகுடம் சூட்டி மகிழ்கின்றது. உலக அரங்கில் இலங்கைக்கு பாதுகாப்பும் கெளரவமும் அளித்து தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகமிழைக்கிறது.

எங்கோ உள்ள கனேடிய அரசோ இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவோ இலங்கையின் தலைநகரம் கொழும்புவில் நடக்கப் போகும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள தனிக்குழு அமைக்கின்றது.

இலங்கையை காமன்வெல்த்திலிருந்தே வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்!  காமன்வெல்த் மாநாட்டை தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் நடத்தக் கூடாது!

மீறி நடந்தால் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்!  இது உலகத் தமிழர்களின் கோரிக்கை. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கோரிக்கை. தமிழகத்தின் படித்த இளைஞர்களின் கோரிக்கை. படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கோரிக்கை. பிற மாநிலங்களில் இருக்கும் முன்னணி மாணவத் தலைவர்களின் கோரிக்கை. உலகெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழ் இளையோர்களின் கோரிக்கை. இதை இந்திய அரசுக்கு எடுத்துச் சொல்லவே இந்த மாநாடு.

இந்திய அரசே!

இலங்கை அரசைப் பாதுகாக்காதே!, தமிழர்களுக்கு துரோகமிழைக்காதே!

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே! இலங்கையை புறக்கணி!

மாநாடு ஒருங்கிணைப்பு

தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு – 95000 44452, 95516 29055, 76391 27574, 72000 29093

சேவ் தமிழ்சு இயக்கம் – 9884468039, 99419 06390