இதோ இங்கே ஒரு பள்ளிக்கூடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுக் கிடக்கிறது. இது நடந்தது ஈழத்தில் அல்ல. இடித்தவர்கள் சிங்களர்களும் அல்ல! சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்று வரும் பாவாணர் தமிழ்வழிப் பள்ளிக்கு 19.07.2005ல் நேர்ந்த கதிதான் இது.

பள்ளி இடத்தை வீட்டுமனையாக்கி கொள்ளையடிக்கத் துடிக்கும் பணவெறி பிடித்த இராமசாமியும், மாஃபியா கும்பலும் பணத்துக்கு விலை போகும் அரசு அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து நடத்திய பயங்கரவாதம்தான் இது.

பள்ளியை இடித்த பயங்கரவாதக் கும்பலை ஊரே திரண்டெழுந்து விரட்டியடித்து மீண்டும் பள்ளியை கட்டியது;

மக்களின் வியர்வையாலும், சமூக அக்கறையுடையவர்களின் ஆதரவாலும், முற்போக்கு அரசியல் இயக்கங்களின் துணையாலும் எழுந்துநிற்கும் பாவாணர் பள்ளியை மீண்டும் தகர்த்துவிட துடிக்கின்றனர் சமூகவிரோதிகள். 19.07.2005ல் நடத்தப்பட்ட அதே சதிச்செயல்கள் மீண்டும் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

இனியும் பொறுப்பதற்கில்லை; இதற்கு முடிவு கட்டாமல் ஓயப்போவதில்லை எனும் அடிப்படை யில் மக்களோடு சமூக - ஜனநாயக - அரசியல் அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து பாவாணர் பள்ளியைப் பாதுகாப்போம்!

பாவாணர் தமிழ்வழிப் பள்ளியின் நோக்கமும் வரலாறும்

மக்கள் வாழும் இடங்களிலேயே பள்ளிகளை அமைப்பதுதான், பயனும் பாதுகாப்புமானது. ஆனால் பள்ளிகளை நெடுந்தொலைவில் வைத்து மாணவர்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு பிஞ்சுகள் உயிரை விடுவது வாடிக்கையாகிவிட்டது. சொந்தமாக சிந்திக்க வைக்கும் கல்விதான் அறிஞர்களை உருவாக்கும். மனப்பாடம் செய்யச்சொல்லி மாணவர்களை வதைப்பதும், மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாக அவர்களை மாற்றுவதும் என இயற்கைக்கு மாறான நிலையில் சீரழிந்து விட்டது இன்றைய கல்வி.

இத்தகைய சூழலில் மாணவர்களின் சிந்தனைத்திறனை பாதுகாக்கும் நோக்கோடுதான் தமிழ்வழிப் பள்ளிகளை நடத்தும் பணி ஒரு இயக்கமாக தமிழ்நாட்டில் தொடங்கியது. அருகமைப் பள்ளி, அறிவியல் கல்வி, தாய்மொழிக் கல்வி, அடக்குமுறை இல்லா கல்வியே இதன் நோக்கம்.

இந்த சமூகப் பணியை முதன்மையாக்கியே பாவாணர் தமிழ்வழிப் பள்ளியும் தொடங்கப்பட் டது. கடந்த 14 ஆண்டுகளாக பலநூறு மாணவர்கள் இப்பள்ளியில் தொடக்கக் கல்வியை பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் திறனை இப்போது படித்துக் கொண்டிருக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பத்தாவது தேர்வில் 400க்கு மேலும், பன்னிரெண்டாவது தேர்வில் 1000க்கு மேலும் மதிப் பெண்கள் எடுத்து தமக்கும், தாம் படித்த பாவாணர் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பள்ளி வளாகத்திற்குள் வருவோரை “வணக்கம்” கூறி வரவேற்பதும், விடைபெறும்போது “நன்றி, மீண்டும் சந்திப்போம்” என வழியனுப்புவதும் என மிகச்சிறந்த பண்பாட்டின் அடையா ளமாகத் திகழ்கின்றனர் இம்மாணவர்கள்.

பாவாணர் பள்ளியின் ஆண்டுவிழாக்களில் அப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தும் நடனம், நாடகம், பாடல்கள், எழுச்சிமிக்கதாகும். அவர்க ளின் பன்முகத்திறன் வளர்ச்சியை அறிந்த சமூக ஆர்வலர்கள் சனநாயக அரங்குகளிலும், சீர் திருத்த மணவிழாக்களிலும் தமிழக அளவில் இப்பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ந்துள்ளனர்.

பாவாணர் தமிழ்வழிப் பள்ளியை அழிக்கத் துடிக்கும் நிலக்கொள்ளையர்கள்

பாவாணர் பள்ளி அமைந்துள்ள பள்ளிக்கரணை அஷ்டலட்சுமி லே-அவுட் 1985ல் அனுமதிபெற்று அமைக்கப்பட்டுள்ளது. எல்லா குடியிருப்புகளுக்குமான விதிமுறைகள் இதற்கும் பொருந்தும். லே-அவுட் விதிமுறைகளின்படி 20% சாலைகளுக்கும், 10% பள்ளி, பூங்கா ஆகிய சமூகப் பயன்பாட்டுக்கும், 10% அஞ்சல கம், காவல்நிலையம், தொலைபேசிநிலையம் போன்ற பொதுப் பயன்பாட்டுக்கும் ஒதுக்க வேண்டும். இப்படி ஒதுக்கப்படுவது நிலவிற்ப னையாளர்களுக்கு இழப்பு அல்ல; மாறாக எல்லா வசதிகளும் உள்ளன என்ற அடிப்படையில் லே-அவுட்டில் உள்ள வீட்டுமனைகளை பல மடங்கு லாபத்திற்கும் விற்கின்றனர். அஷ்டலட்சுமி லே-அவுட்டும் இவ்வாறு லாபத்தில் விற்கப்பட்டதே. பொதுப்பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட (அஞ்சலம், காவல்நிலையம், தொலைபேசிநிலையம்) 10% இடங்களை அரசு முறையாக பயன்படுத்த வில்லை எனக்கூறி இராமசாமி வகையறாக்கள் விற்றுவிட்டனர்.

அன்று அரசு அதிகாரிகள் அந்த நிலத்தை கையகப்படுத்தாமல் போனதனால் இன்று அரசுக்கும் மக்களுக்கும் தேவையான அஞ்சல் நிலையம், காவல்நிலையம் முதலானவை வாடகைக் கட்டடத்தில் இயங்கிவருகின்றன. மக்களின் வரிப்பணம் எப்படி எல்லாம் வீணடிக்கப்படுகிறது பாருங்கள்!

இப்படி பொது இடங்களை விற்று ருசிபார்த்து விட்ட கொள்ளைக்கும்பலுக்கு பள்ளிக்கான இடத் தையும் விற்றுவிட வேண்டும் என அடங்காத பணவெறி. ஆனால் நினைத்த மாத்திரத்தில் பள்ளிக்கான இடத்தை விற்க முடியாது. பள்ளிக்கூடம் கண்டிப்பாக தொடங்கவேண்டும். தொடர்ந்து நடத்த முடியவில்லையென்று சிறிது காலம் கழித்து அரசை ஏமாற்ற வேண்டும். எனவே இராமசாமி, பேருக்காக ஒரு பள்ளியை தொடங்குகிறார். அதை அவரது பினாமியான உறவினர் இரங்கநாதன் மூலம் தொடங்குகிறார். 1993ஆம் ஆண்டு ‘இந்து வித்யாலயா’ என்ற பேரில் ஒரு ஆங்கிலப்பள்ளியை தொடங்கி ஓரிரு ஆண்டுகளிலேயே நடத்த முடியாமல் மூடியும் விடுகிறார்.

‘இந்து வித்யாலயா’ என்ற அப்பள்ளி மூடப்பட்டு நான்காண்டுகள் கழித்து, 1999இல்தான் பாவாணர் பள்ளி நிர்வாகம் அந்த இடத்தை வாடகைக்கு கேட்டது. பள்ளி இடத்தை வீட்டு மனையாக மாற்றி விற்கும் வரை வாடகை வருவதை ஏன் இழக்கவேண்டும் என்ற காரணத்தால் இராமசாமியும் ஒத்துக்கொண்டார். 10 ஆயிரம் ரூபாய் முன்பணமும், மாதம் 1000 ரூபாய் வாடகையும் பேசி பாவாணர் பள்ளியை நடத்த அனுமதித்தார். முறையாக வாடகையும் பெற்றுக் கொண்டு வந்தார்.

5 இலட்சம் ரூபாய் செலவு செய்து புதர் மண்டிக்கிடந்த அந்த இடத்தையும், பள்ளி கட்ட டத்தையும் புனரமைத்தது, பாவாணர் அறக்கட் டளை நிர்வாகம் இத்தொகை மக்களிடமிருந்தும், பள்ளி நிர்வாகத்தின் கையிருப்பில் இருந்தும் செலவு செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியின் கல்வித்தரம், பண்பாடு, ஒழுக்கங்கள் காரணமாக மாணவர் எண்ணிக்கையும் பெருகியது. ஒவ் வொரு ஆண்டும் மாணவர் - பெற்றோர் மற்றும் சமூக அக்கறையுடையோர் பங்களிப்பில் ஆண்டு விழா வெகுச்சிறப்பாக நடைபெற்று பள்ளியின் புகழ் பரவத் தொடங்கியது.

பள்ளி சீராக இயங்கிக் கொண்டிருந்த இச்சூழலில், அஷ்டலஷ்மி லே-அவுட் எங்கும் வீடுகள் எழுந்து மக்கள் பயன்பாடு அதிகரித்தது. கூடவே வீட்டுமனை விலையும் அதிகரித்தது. தாங்கள் ஓய்வு பெறுவதற்குள் பள்ளி இடத்தை வீட்டுமனையாக்கி விற்று காரியத்தை சாதித்துக் கொள்ள நினைத்த சில அதிகாரிகள் இராமசாமியிடம் திட்டத்தைக் கூறினர்.

பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீட்டு மனையாக மாற்ற முடியாது என்றாலும், லே-அவுட் போட்டு 19 ஆண்டுகள் ஆகியும் யாரும் அந்த இடத்தில் பள்ளி நடத்த முன்வரவில்லை என்று பொய் சொல்லி வீட்டுமனையாக மாற்றத் திட்டம் வகுத்தனர். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துக் காரியத்தைச் சாதிக்கலாம் என காய்களை நகர்த்தினர்.

‘பள்ளி நடத்த யாரும் முன்வரவில்லை’ என்று காட்டவேண்டுமானால் அந்த இடத்தில் பள்ளி நடக்கக் கூடாது. ஆனால் பாவாணர் தமிழ்வழிப் பள்ளி நடக்கிறதே; அதுவும் மக்கள் செல்வாக் கோடு நடக்கிறதே; என்ன செய்வதென்று யோசித்தனர். அந்த இடத்தில் பாவாணர் பள்ளியை நடக்க விட்டால்தானே இந்தச் சிக்கல். பள்ளியை காலிசெய்து விரட்டிவிட்டால் அல்லது இடித்துத் தரைமட்டமாக்கி விட்டால் திட்டத்தை எளிதாக சாதித்துவிடலாம் என குறுக்குவழியைத் தேடினர்.

இராமசாமி வேட்டியை மடித்துக்கொண்டு கோதாவில் இறங்கினார். 2004ஆம் ஆண்டு பள்ளியில் மாணவர்கள் இறுதித்தேர்வை நெருங்கும் நேரமான பிப்ரவரியில் பள்ளிக்குள் நுழைந்த இராமசாமி, உடனே பள்ளியை காலி செய்யும்படி பாவாணர் பள்ளி நிர்வாகத்தை மிரட்டினார்.

“ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளியை அருகாமையிலேயே மாற்ற வேண்டும் என்றால் அதற்கு வாய்ப்பான இடம் வேண்டும்; அதற்கான அவகாசம் வேண்டும்” என்று இராமசாமியிடம் பாவாணர் பள்ளி நிர்வாகம் கோரியது. மாணவர் களின் தேர்வு, கல்வி, எதிர்காலம், பள்ளியின் நிலைமை குறித்து பள்ளி நிர்வாகத்தினர் பலவாறு விளக்கினர். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாத இராமசாமி, “எதைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை. உடனடியாக பள்ளியைக் காலி செய்யுங்கள்” என்று நாள்தோறும் மிரட்டினார்.

பள்ளியை கைப்பற்ற ரவுடிகளை ஏவிய இராமசாமி

இராமசாமியின் தொடர்ச்சியான மிரட்டலால், என்ன செய்வதென்று யோசித்தனர் பள்ளி நிர்வாகத்தினர். பாவாணர் பள்ளி நிர்வாகம் குறிப்பிட்ட இடத்தில் தாங்கள் பள்ளி நடத்துவதையும், பள்ளிக்குள்ள ஆபத்தையும் விளக்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் 10.03.2004இல் வழக்கு தாக்கல் செய்தது. இதனை ஏற்று நீதிமன்றம் சட்டத்திற்கு புறம்பாக பாவாணர் பள்ளியை காலி செய்யக் கூடாதென 14.06.2004இல் ஆணை வழங்கியது.

பள்ளிக்குச் சார்பாக நீதிமன்ற ஆணை கிடைத்த காரணத்தால், அரசியல்வாதிகள் சிலரை நாடினார் இராமசாமி. அவர்கள் இராமசாமிக்கு நேரடியாகத் துணைசெய்ய முடியாது என்று சொல்லிவிட்டு, மறைமுகமாகத் துணைசெய்தனர். அடுத்து, கட்டப்பஞ்சாயத்து செய்யும் சில தாதாக்களை அணுகினார். அவர்கள் அறக்கட்டளை நிர்வாகிகளையும், பள்ளி ஆசிரியர்களையும் மிரட்டிப் பார்த்தனர். அவர்களிடம், இது பணம் சம்பாதிப்பதற்காக நடத்தப்படும் பள்ளி அல்ல. பொதுநல நோக்கோடு நடத்தப்படும் தாய்மொழிப் பள்ளி. இதில் நீங்கள் தலையிட்டால் மக்கள் எதிர்ப்பை சந்திக்க நேரிடும். ஜனநாயக அமைப்புகளின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும். அதன்பிறகு அவர்களில் சிலர் அதைப்புரிந்து கொண்டு விலகிக் கொண்டனர்.

சிலர் மட்டும் தொடர்ந்து மிரட்டியதால், முறைப்படி, 16.03. 2004ல் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் பள்ளி நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். நடவடிக்கை இல்லை. மேலும் மிரட்டல் அதிகரித் தது. அதனால் மீண்டும் 6.05.2004இல் பள்ளி நிர்வாகம் புகார் அளித்தது. புகாரின் மேல் நடவடிக்கை எடுக்காததால், 07.05.2004இல் தமிழக முதல்வர், மாநில மனித உரிமை ஆணையம், காவல்துறை இயக்குநர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் புகார் அனுப்பியது. புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

பெற்றோர்களும், பகுதிவாழ் நல்லிதயம் கொண்டவர்களும், சமூக அக்கறையுடைய இயக் கங்களும் ஒத்துழைத்து பாவாணர் பள்ளிக்குத் துணைநின்றனர். இதனால் எல்லா ஆபத்துகளையும் எதிர்கொண்டு பள்ளி இயங்கிவந்தது.

தாதாக்களைக் கொண்டு மிரட்டி பணிய வைக்க முடியாததால், அப்போதைய பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் வீரமணியை நாடியது இராமசாமி கும்பல். தாதாக்களால் முடியாத ‘காரியத்தை நான் நிறைவேற்றிக் காட்டுகிறேன்’ என்று முண்டா தட்டினார் வீரமணி.

பள்ளி நிர்வாகத்தினரை அழைத்து, பள்ளியைக் காலி செய்யச் சொல்லி மிரட்டினார். நீதி மன்றத்தில் வழக்கு இருக்கிறது. சிவில் வழக்கில் காவல்துறை தலையிடக்கூடாது என்று சொன்ன பிறகும், ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு காவலர் களை அனுப்பித் தொந்தரவு கொடுத்தார்.

நீதிமன்றத்தை ஏமாற்றி காவல்துறை துணையுடன் பள்ளியை தரைமட்டமாக்கிய கொடூரம்

ஏதாவது ஒரு நீதிமன்ற ஆணை இருந்தால், பள்ளியைக் காலி செய்து விடலாம் என்று எண் ணிய இராமசாமி, மோசடியான ஒரு வேலையை செய்தார். பாவாணர் பள்ளி நடக்கும் இடத்தில் இராமசாமியின் உறவினர் இரங்கநாதன் இன்னமும் ‘இந்து வித்யாலயா’வை நடத்தி வருவதாகவும், அதனை இடிக்க சதி நடப்பதாகவும், பள்ளிக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கும் படியும் 28.04.2004இல் இரங்கநாதனின் பேரில் வழக்குப் பதிவு செய்தார். இப்படி நடக்காத ஒரு பள்ளிக்கூடத்தின் பேரில் பொய்யான வழக்குப்போட்டு, இல்லாத பள்ளிக்கு ‘காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’ என்று ஆணையும் பெற்றார்.

பள்ளியை இடிப்பதற்கு திட்டமிட்ட சதிகள் நடந்த அன்று பகல் 12 மணிக்கு சில அரசியல்வாதிகளை வைத்து மிரட்டி, பள்ளியை மூடச் செய்வதற்காக மாவட்டத் தொடக்க கல்வி அலுவலரை பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார் இராமசாமி. பள்ளி சிறப்பாக நடைபெற்ற காரணத்தால் பள்ளியை மூடச் சொல்லாமல் சென்றுவிட்டார் கல்வி அலுவலர்.

கல்வி அதிகாரியை வைத்து பள்ளியை மூட முடியாத காரணத்தால், காவல்துறை ஆய்வாளர் வீரமணியை அணுகினார் இராமசாமி. அன்று மாலை 3 மணிக்கு பள்ளிக்கரணை தலைமைக் காவலர் (I.S.) இராஜ்குமார் பள்ளிக்குள் வந்தார். பள்ளியைப் பற்றித் தகவல் சேகரிக்க வந்ததாக பதிவேட்டில் பதிவு செய்தார். (பள்ளியை இடிப்ப தற்கு முன் நோட்டமிடுவதற்காகத்தான் அவர் வந்திருந்தார் என்பது பின்னர்தான் தெரிந்தது.)

இதன்பிறகு மாலை பள்ளிக்கரணை ஆய்வாளர் வீரமணி 25 காவலர்களுடனும், இராம சாமியும், இரங்கநாதனும் 40 அடியாட்களுடனும் திமுதிமுவென பள்ளிக்குள் புகுந்து, பள்ளியின் மேசை, நாற்காலி, பள்ளிக்கான பதிவேடுகள் அனைத்தையும் அள்ளி டெம்போவில் ஏற்றியுள்ளனர். தட்டிக்கேட்ட தலைமை ஆசிரியர் தமிழ்க்கண்மணி மற்றும் சில ஆசிரியர், சில குழந்தைகளைப் பிடித்துத் தள்ளி தாக்கியுள்ளனர்.

அன்றைய ஆய்வாளர் வீரமணி கையில் ஒரு காகிதத்தை வைத்துக்கொண்டு இது பள்ளியை இடிப்பதற்கான நீதிமன்ற ஆணையென கொக்க ரித்தார். அதை பார்வையிட ஆசிரியர்கள் கேட்டபோது தரமுடியாது எனத் திமிராகப் பதிலளித்தார். அனைவரும் திகைத்து நிற்கும்போது பள்ளியை பின்னாலிருந்து ஜேசிபி எந்திரத்தைக் கொண்டு இடிக்கத் தொடங்கிவிட்டனர்.

பள்ளிக்குழந்தைகள் ஓலமிட்டனர்; குழந்தைகளின் பெற்றோர்கள் ஓடிவந்தனர். ஊர்மக்களும் சமூக ஆர்வலர்களும் கூடிவிட்டதைக் கண்டு பதறிய ஆய்வாளர் வீரமணிக்கு உதறல் எடுத்து விட்டது. நீதிமன்ற ஆணையை காட்டச்சொல்லி கேட்ட மக்கள், அவர் கொடுக்காததால் அவரது கையிலிருந்து பிடுங்கிப் பார்த்தனர்.

அந்த ஆணை பள்ளியை இடிப்பதற்கானதல்ல; பள்ளிக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கானது என்று அறிந்த மக்கள் கொந்தளித்தனர்; ரவுடிகளும், இராமசாமியும், இரங்கநாதனும் ஓட்டம் பிடித்தனர்.

ஆய்வாளர் வீரமணி உள்ளிட்ட காவல்துறையினரை மக்கள் சிறைப்பிடித்தனர். ஜேசிபி எந்தி ரம் மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. ஊடகங்கள் எல்லாம் நடந்த அநீதியை பதிவு செய்தன. உடனே மடிப்பாக்கம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (ASP) மகேந்திர ரத்தோர் ஓடிவந்தார். தவறு நடந்துவிட்டதென மக்களிடம் சமாதானம் கூறினார்.

காவல்துறையை கண்டிப்பது போல் காட்டிக் கொண்டார். இடிக்கப்பட்ட கட்டடத்தை கட்டித்தர ஏற்பாடு செய்வதாகக் கூறினார். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

இப்படி, இல்லாத ‘இந்து வித்யாலயா பள்ளி’ யின் பெயரில் வழக்குப்பதிவு செய்து நீதிமன் றத்தை ஏமாற்றியது மட்டுமல்லாமல், இல்லாத பள்ளிக்கு பாதுகாப்பு கொடுக்கச் சொல்லி ஆணை பெற்று, இருக்கின்ற பாவாணர் பள்ளியை இடித்து ஒரு மிகப்பெரிய பயங்கரவாதச் செயலைச் செய்துள்ளனர் பணவெறி பிடித்த இராமசாமி கும்பல். அந்தக் கும்பலுக்கு முழு உடந்தையாக இருந்திருக்கிறார் அன்றைய காவல் துறை ஆய்வாளர் வீரமணி.

பள்ளி இடிக்கப்பட்டாலும் மக்கள் இடிந்து போகவில்லை. போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

மக்களின் இடைவிடாத போராட்டமும், கிடைக்காத நீதியும்

பள்ளி இடிக்கப்பட்ட 19.07.2005 அன்று இரவே மடிப்பாக்கம் ஏ.எஸ்.பி., கிண்டி டி.சி., தாமஸ்மலை ஜே.சி, மாநகர காவல்துறை ஆணையர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு தந்தி வழி புகார் அளிக்கப்பட்டது.

எந்த பதிலும் இல்லை. ஆனால் நீதிகேட்டு மறுநாள் சாலைமறியல் செய்த மாணவர்களின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

21.07.2005இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, செங்கல்பட்டு மாவட்ட நீதிபதி, ஆலந்தூர் மாவட்ட நீதிபதிகளுக்கும் தந்தி அனுப்பப்பட்டது.

23.07.2005இல் தமிழக முதல்வர், மனித உரிமைகள் ஆணையம், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அனுப்பப்பட்டது.

புகாரின் மீது நடவடிக்கை இல்லையென உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. புகாரே கிடைக்கவில்லையென காவல்துறை நீதி மன்றத்தில் கூறியது. நீதிமன்ற பரிந்துரையின்படி மறுபடியும் புகார் கொடுக்கப்பட்டது. அதற்கும் இன்றுவரை நடவடிக்கை இல்லை.

காவல்நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் அலைந்தும் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. ஆனால் சமூகவிரோதிகளை விரட்டியடித்து விட்டு பாவாணர் பள்ளி அதே இடத்தில் செயல்படுகிறது. அதற்குக் காரணம் பள்ளிக்கரணை மக்களும், சமூக ஆர்வலர்களும் தரும் இடைவிடாத ஆதரவும் அன்புமே.

கொடியவர்கள் இடித்த பள்ளியை துணிச்சலுடன் தூக்கி நிறுத்திய மக்கள்

பள்ளி இடிக்கப்பட்ட பிறகு அடுத்தது என்ன செய்வது என்று பள்ளி நிர்வாகம் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், “வெட்டவெளியாக இருந்தாலும் பரவாயில்லை, எங்களுக்குப் பாடம் நடத்துங்கள்” என மாணவர்கள் கேட்டனர். பாவாணர் தமிழ்வழிப் பள்ளியைப் போன்ற முன்மாதிரிப் பள்ளி அருகில் எங்கும் இல்லை என்பதால் எங்கள் குழந்தைகளுக்கு நீங்களே தொடர்ந்து கல்வி சொல்லிக் கொடுங்கள்” என்று பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் முறையிட்டனர். பெற்றோர்களும் பொதுமக்களும் நிதி திரட்டி பள்ளியை மீண்டும் கட்ட உதவினர். இடிக்கப்பட்ட அதே இடத்தில் 2 மாதத்திற்குள் மீண்டும் பள்ளி கட்டப்பட்டது. அதற்குப் பிறகு இதோ எட்டாண்டுகள் ஓடிவிட்டது. மொத்தத்தில் 14 ஆண்டுகள் கடந்துவிட்டன.

அதேநேரத்தில் பள்ளியை இடித்த பணவெறி பிடித்த பயங்கரவாதிகள் மீண்டும் பழையபடி ஏதாவது செய்யலாமா என கூட்டுச்சதியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகள், காவல் துறையினரின் உதவியை நாடுகின்றனர். அன்றே பள்ளியை இடித்த பயங்கரவாதிகள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று மறுபடியும் சதிச்செயலில் ஈடுபட அவர்களுக்கு துணிவு வந்திருக்குமா?

அன்று மக்களுக்கும் சனநாயக சக்திகளுக் கும் அவர்களின் சதிச்செயல் தெரியாமல் போனதால் அவர்களால் பள்ளியை இடிக்க முடிந்தது. இன்றோ எந்த சதிச்செயல் செய்தாலும் அதை முறியடிக்கும் ஆற்றலை பெற்றோர்களும் பொதுமக்களும், பள்ளி நிர்வாகத்தினரும் பெற்றுள்ளனர்.

நமது ஒற்றுமையையும் பள்ளிக்கான ஆதரவையும் வெளிக்காட்டும் விதமாக பாவாணர் பள்ளியை பாதுகாக்க மக்களும், மக்களுக்கான இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும், குடியிருப்போர் சங்கத்தினரும் இணைந்து களம் இறங்கி உள்ளோம்.

இலங்கை இனவெறி இராஜபக்சே அரசு, தமிழீழத்தில் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, அவர்களின் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் குண்டுவீசி தரைமட்டமாக்கியதற்கு போராடுகிற நாம், நம் கண்ணெதிரே பாவாணர் தமிழ்வழிப் பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய பணவெறி பிடித்த இராமசாமி கும்பலுக்கு எதிராகவும் போராடுவோம்!

இப்போராட்டம்,

 பள்ளியை நடத்துவதற்கான உரிமைப்போராட்டம்!

 பள்ளி இடம் பள்ளி நடத்துவதற்கு மட்டுமே என்பதற்கான போராட்டம்!

 அரசு விதிகளுக்குப் புறம்பாக பள்ளி மனையை வீட்டுமனையாக்க எவருக்கும் உரிமையில்லை என்பதற்கான போராட்டம்!

 பணவெறி பிடித்த குற்றவாளி இராமசாமிக்கு துணைநிற்பதை காவல்துறையும், அரசு அதிகாரிகளும் கைவிட வேண்டும் என்பதற்கான போராட்டம்!

 பள்ளியை இடித்து, தொடர்ந்து சதிச்செயல்களில் ஈடுபடும் இராமசாமியை உடனே கைதுசெய்ய வேண்டும் என்பதற்கான போராட்டம்!

 பள்ளியை நடத்தும் தகுதியும் உரிமையும் பாவாணர் தமிழ்வழிப் பள்ளிக்கு இப்போதும் இருக்கிறது என்பதற்கான போராட்டம்.!

 குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை மக்கள் போராட்டங்கள்  தொடரும்!

காவல்துறையே!

 பாவாணர் பள்ளியை இடித்த பணவெறி பிடித்த இராமசாமி கும்பலை உடனே கைது செய்!

தமிழக அரசே!

 பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நடத்தப்படும் பாவாணர் தமிழ்வழிப் பள்ளிக்கு பாதுகாப்பு கொடு!

 பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீட்டுமனையாக மாற்றும் முயற்சியை தடை செய்!

பள்ளி தொடங்கப்பட்டு இதுவரை 13 ஆண்டு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆண்டு விழாக்களில் சிறப்பு விருந்தினர்களாக தாமரை பெருஞ்சித்திரனார், பேராசிரியர் மா.நன்னன், பேராசிரியர் வசந்த கந்தசாமி, வலம்புரி ஜான், திரைப் பட நடிகர் சூர்யா, திரைப்பட இயக்குநர் கௌதம் மேனன், புஷ்பவனம் குப்புசாமி, ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, பேராசிரியர் இறையனார், பழ.நெடுமாறன், இந்நாள் உயர்நீதிமன்ற நீதிபதியும் அந்நாளில் வழக்குரைஞராக இருந்தவருமான அரிபரந்தாமன், தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், பத்திரிகையாளர் அய்ய நாதன், திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியை சிறப்பித்துள்ளனர்

பள்ளியின் வழக்குநிலைமை

16.3.2004 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளியின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு இடைக்காலத் தடையாணை பெறப்பட்டது. பின்னர் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, ஆலந்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்படி, ஆலந்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் பள்ளி அறக்கட்டளை சார்பில் 2 உரிமையியல் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதன்பிறகு, இராமசாமி தரப்பில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதால், ஆலந்தூரில் பள்ளி சார்பில் தொடுக்கப்பட்ட 2 வழக்குகள் மற்றும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் “இரங்கநாதன் பேரில் தொடுக்கப்பட்ட போலிவழக்கு” ஆகிய மூன்று வழக்குகளும் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் அவ்வழக்குகள் அனைத்தும் தாம்பரம் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இப்பொழுது நடைபெற்று வருகின்றன.

இராமசாமி தொடுத்துள்ள வழக்கில் பாவாணர் பள்ளி நிர்வாகத்தினர் அத்துமீறி நுழைந்து பள்ளி நடத்துவதாகவும், அவர்களை காலி செய்து கொடுக்கவேண்டும் என்றும், பள்ளி இடத்தை வீட்டுமனையாக மாற்றப் போவதாகவும் கூறியுள்ளார். பாவாணர் பள்ளி தரப்பில் தாங்கள் முறைப்படியான வாடகைதாரர் என்றும், பள்ளி இடத்தை வீட்டுமனையாக மாற்றுவதற்காக தங்கள் பள்ளிக்கட்டடத்தை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டனர் என்றும், தங்களை முறைப்படியான வாடகைதாரர் என்று அறிவிக்க வேண்டும் என்றும், பள்ளியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுத்தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடந்துவருகிறது.

அஷ்டலஷ்மி அவென்யூ பகுதி மக்களின் கருத்து

பள்ளி, பூங்கா, பொதுப்பயன்பாட்டுக் கான நிலங்கள் ஒதுக்கப்பட்ட லே-அவுட் என்பதனால்தான் அஷ்டலஷ்மி அவென்யூ லே-அவுட்டில் அதிக விலை கொடுத்து வீட்டுமனை வாங்கியுள் ளோம். பொதுப்பயன்பாட்டுக்கான நிலத்தை வீட்டுமனையாக மாற்றி விற்றுவிட்டனர். இப்போது பள்ளிக்கான இடத்தையும் வீட்டுமனையாக மாற்ற முயற்சிக்கின்றனர். இது அஷ்டலஷ்மி அவென்யூ லே-அவுட்டில் இடம் வாங்கியுள்ள மக்களை ஏமாற்றுகின்ற செயல் எனவும், பள்ளிக்கான இடத்தை வீட்டுமனையாக மாற்றுவதை கடுமை யாக எதிர்ப்போம் என அஷ்டலஷ்மி அவென்யூ பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். பாவாணர் தமிழ்வழிப் பள்ளிக்கு பொருளாதார வழியிலும், அறவழியிலும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பாவாணர் தமிழ்வழிப் பள்ளியை பாதுகாப்போம்! மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

இடம் : பள்ளிக்கரணை மாமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் (முன்னாள் பேரூராட்சி மன்ற அலுவலகம் எதிரில்)

நாள் : 27.04.2013 சனிக்கிழமை     மாலை 6 மணி.

தலைமை: திரு. சிவ.காளிதாசன், பாவாணர் தமிழ்வழிப் பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம்

கண்டன உரை:

திரு. பழ. நெடுமாறன் தமிழர் தேசிய இயக்கம்
திரு. சி.மகேந்திரன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
திரு. த.வெள்ளையன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை
திரு. பாலவாக்கம் க.சோமு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
திரு. வன்னியரசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
திரு. வேல்முருகன் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி
திரு. O.U. ரஹமத்துல்லா மனிதநேய மக்கள் கட்சி
திரு. சிதம்பரநாதன் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ,ம.வி) தமிழ்நாடு.
திரு. தமிழ்நேயன் தமிழ்த் தேச மக்கள் கட்சி
திரு. திருமுருகன் காந்தி மே 17 இயக்கம்
திரு. தங்க.தமிழ்வேலன் தமிழ்நாடு மக்கள் கட்சி
திரு. அய்யநாதன் நாம் தமிழர் கட்சி
திரு. தாமரை திரைப்படப் பாடலாசிரியர்
திரு. க.அருணபாரதி தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி
திரு. தமிழழகன் தமிழ்த் தேச குடியரசு இயக்கம்
திரு. D. இராமன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
திரு. சங்கரசுப்பு உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்
திரு. பா.புகழேந்தி தமிழக மக்கள் உரிமைக் கழகம்
திரு. செந்தில் சேவ் தமிழ்ஸ்
திரு.திருமூர்த்தி திராவிடர் விடுதலைக் கழகம்
திரு. குமாரதேவன் தந்தை பெரியார் திராவிடர் கழகம்
திரு.டாக்டர் ஆ.இர.இராமசாமி இராவணன் நிறுவனம்
திரு. வேலுமணி தமிழர் எழுச்சி இயக்கம்
திரு. ஜெயப்பிரகாசு நாராயணன் தமிழர் குடியரசு முன்னணி
திரு. ராஜா திருநாவுக்கரசு தமிழின உணர்வாளர் கூட்டமைப்பு
திரு. இரா.பன்னீர்தாஸ் 199வது வட்ட மாமன்ற உறுப்பினர்
பேராசிரியர் திருமாவளவன்
திரு. அங்கயற்கண்ணி உயர்நீதிமன்ற வழக்குரைஞர்
திரு. அரணமுறுவல் உலகத் தமிழ்க் கழகம்
திரு. பி.டி.சண்முகம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ)
திரு. ஜெ.கங்காதரன் தமிழகத் தமிழாசிரியர் கழகம்.
திரு. மு.நடராசன் புரட்சியாளர் எழுச்சி இயக்கம்
திரு. குணத்தொகையன் தென்மொழி அவையம்
திரு. மா.சேகர் அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்
திரு. சுடரொளி ஆசிரியர்
திரு. வீ.இறையழகன் மறைமலையடிகள் மன்றம்
திரு. வெற்றிச்செழியன் தமிழ்வழிக் கல்விக் கழகம்
திரு. பொ.மாயவன் மண்மொழி இதழ்-ஆசிரியர் குழு
திரு. கா.விஜயன் பாவாணர் பள்ளி பெற்றோர் கழகத் தலைவர்
திரு. பா.அமுதன் முன்னாள் மாணவர்-பாவணர் தமிழ்வழிப் பள்ளி
திரு. அ.மாரியப்பன்- செ.அனுராதா பாவாணர் பள்ளி பெற்றோர் கழக முன்னாள் பொறுப்பாளர்கள்

நன்றியுரை: திரு. குணா, பாவாணர் தமிழ்வழிப் பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம்

தொடர்புக்கு : குணா - 9486641586, சிவ.காளிதாசன் - 8682854822,
ஜெயப்பிரகாசு நாராயணன் - 9840878819, குழல் - 9710204514

தோழர்களே!

தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத் தூண்களை உருவாக்கும் இப்போராட்டத்திற்கு தாங்கள் நிதியுதவி அளித்துத் துணை நிற்கும்படித் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நிதி உதவி அளிக்க வங்கி கணக்கு எண்:

State Bank of India
SB Account No.: 31266037798
டி.சுப்ரமணியன்
வேளச்சேரி பை பாஸ் ரோடு கிளை