மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை அவையில் மேற்குலக நாடுகளால் இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்று முன் வைக்கப்படவுள்ளது என்ற செய்தி இந்த ஆண்டு தொடக்கத்திலேயே வந்து விட்டது.  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 13 வயது மகன் பாலசந்திரன் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படம் சானல்-4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டது.  உலகெங்கும் உள்ள தமிழர்களையும் தாண்டி மற்றவர்களிடமும் சிங்களப் பேரினவாதத்தின் மீதான கோபத்தைப் பெருக்கியது. தமிழகத்தில் எதிர்பாராத அளவிலான கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்த கொந்தளிக்கும் உணர்வுக்குச் செயல் வடிவம் கொடுப்பதுபோல் தமிழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். ஒரு மாத காலமாக தமிழகத்தின் அரசியல் களத்தை மாணவர்களின் போராட்டம் நிரப்பி இருந்தது.

இலங்கை மீது பன்னாட்டு இனக்கொலை விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தல், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு என்று வெகுகாலமாக ஈழ ஆதரவு அமைப்புகள் முன் வைத்திருந்த கோரிக்கைகள் மாணவர் போராட்டத்தின் ஊடாக தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் எடுத்துச் செல்லப்பட்டது. ஜெனிவா தீர்மானம் உப்புச் சப்பில்லாமல் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைமுறை தாண்டி நடந்து கொண்டிருக்கும் ஈழப் போராட்டத்தில் ஒரு புதிய தலைமுறை மாணவர்கள் இணைந்துள்ளார்கள். இத்தகைய சூழலில் ஈழ விடுதலைப்போராட்டத்தின் திசை வழியை மீள் உறுதி செய்வதே இவ்வரங்கக்  கூட்டத்தின் நோக்கம்.

அமெரிக்கா முன் வைத்த தீர்மானத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற கேள்வியோடு பரபரப்பானது கடந்த ஒரு மாத காலம்.  ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் நேர் எதிரே நின்று ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொண்டனர். ஒரு தீர்மானத்தின் உள்ளடக்கத்தை நாம் எந்த அடிப்படையில் மதிப்பீடு செய்கின்றோம். ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது, கருப்பு அல்லது வெள்ளை என்ற அணுகுமுறை சரியா?

தீர்மானத்தின் முதல் பிரதிக்கும் இறுதியாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரதிக்கும் பின்னணியில் நடந்தது என்ன? இந்தத் தீர்மானம் இலங்கையைப் பாதுகாக்கும் வகையில் திருத்தப்பட்டதில் இந்தியாவின் பங்கு என்ன? தமிழகம் தழுவிய அளவில் மாணவர் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதும் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் அத்தனை கட்சிகளும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்போதும், அன்றாடம் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தாக்கிக் கொண்டிருக்கும்போதும் அத்தீர்மானத்தை இலங்கைக்கு ஆதரவாக  இந்திய அரசு திருத்துகின்றது என்றால் இந்திய அரசின் தன்மையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டாமா?

உலகெங்கும் நடக்கும் தமிழர்களின் போராட்டமும், வெளிவந்துள்ள இனக்கொலை ஆதாரங்களும் ஏற்படுத்திய அழுத்தத்தினால் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தனக்கு ஆதரவாகத் திருத்துவதில் இலங்கை அரசு வெற்றி கண்டது.  இது, ஓர் அரசு என்ற வகையில் இலங்கைக்கு இருக்கும் வலிமையையும், இன்னொரு முனையில் தமிழர் தரப்பின் அரசியல் வலிமையற்ற நிலையையும் நமக்கு உணர்த்தவில்லையா?

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் புவிசார் அரசியலின் அச்சு எங்கிருக்கின்றது? தில்லியிலா, வாஷிங்டன்னிலா? அமெரிக்காவை முடிவு எடுக்க வைத்துவிட்டால் ஈழ விடுதலையை யாரும் தடுக்க முடியாது என்று கருதும் புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினரும், தெற்காசியப் பகுதியில் இந்தியாவை மீறி ஒரு முடிவை அமெரிக்கா எடுக்க முடியாது என்று கருதும் இன்னொரு தரப்பினரும் உள்ளனர்.  மேற்கூறிய இரண்டு கருத்தையும் மறுத்து அமெரிக்க - இந்திய கூட்டு, இதில் இரண்டும் சேர்ந்தே முடிவு செய்கின்றன என்ற ஒரு கருத்தும் உள்ளது. தமிழீழத்தில் ஓர் அரசியல் தலைமை உருவாகாமல் புவிசார் அரசியல் மட்டுமே விடுதலைக்கு வழிவகுக்குமா?

போர்க்குற்ற விசாரணைக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை; மக்கள் போராட்டம் ஒன்றே வழி என்றும், போர்க்குற்ற விசாரணையை நம்பித்தான் தமிழீழ விடுதலைப் போராட்டமே இருக்கின்றது என்றும் இரு துருவங்கள் இருக்கின்றன. இவ்விரண்டையும் முற்றாக மறுக்காமலும், அதே நேரத்தில் முற்றாக ஏற்காமலும் நம் முன் உள்ள நடைமுறைசார்ந்த திசை வழி என்ன?

உலகத் தமிழர்கள் என்றும் அவர்களுக்கு ஈழ விடுதலை என்பது பொதுவான கோரிக்கை என்றும் தோன்றினாலும் ஈழத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும், புலம்பெயர்வாழ் தமிழர்களும் ஒன்றல்ல.  ஒவ்வொருவரும் வெவ்வேறு அரசமைப்புக்குள் வாழ்வதால் அவரவரின் பாத்திரம் வேறுபடுகின்றது.

ஈழத்தமிழர்கள் - 30 ஆண்டு கால அறவழிப் போராட்டத்தையும், 30 ஆண்டு கால ஆயுதவழிப் போராட்டத்தையும் தோளில் சுமந்தவர்கள்.  முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின் தமக்கான அரசியல் இராணுவத் தலைமையை இழந்த நிலையில் சிங்களப் பேரினவாத அரசு மேற்கொள்ளும் கட்டமைப்புரீதியான இனப்படுகொலைக்கு ஆளாகி வருகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் - ஈழத்திலிருந்து வெளியேறி ஏதிலிகளாக பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள்.  அந்நாடுகளிலிருந்துகொண்டு தமது தாயக விடுதலைக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் - இலங்கையை நட்பு நாடு என்று சொல்லும் இந்திய அரசின் ஊடாகவே தன்னுடைய அரசியல் வேட்கைகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச்செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளனர்.

இந்தக் காரணங்களினால் மூன்று தரப்பினரின் பாத்திரமும் கடமையும் வெவ்வேறாக உள்ளன.

தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேசக் களத்தில் நடந்து கொண்டிருந்தாலும் விடுதலைக்குத் துணை நிற்க தமிழ்நாடு செய்ய வேண்டியதென்ன? தமிழகம் எந்தக் களத்தில் நின்று கொண்டிருக்கின்றது? ஐ.நா.வை நோக்கி அம்பு வீசுவதா? அல்லது இந்தியாவை நிர்ப்பந்திப்பதன் ஊடாக சர்வதேசக் களத்தில் தாக்கம் செலுத்துவதா?

ஈழ விடுதலைக்காக தமிழகத்தில் இருந்து முன் வைக்கப்படும் அமெரிக்க எதிர்ப்பு முழக்கங்களில் உள்ளடக்கமாக இந்திய எதிர்ப்பு உள்ளதா? அல்லது இந்திய அரசுக்கு எதிரான முழக்கங்களில் உள்ளடக்கமாக அமெரிக்க எதிர்ப்பு உள்ளதா?

தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சூழலில் அத்தகைய ஒரு தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றச் சொல்லும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய முதன்மைக் கடமை தமிழ்நாட்டுக்குத்தான் உண்டு.  இலங்கையைப் புறக்கணிப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் இலங்கையுடனான அரசியல், பொருளியல், பண்பாட்டு உறவுகளைத் துண்டிக்குமாறு இந்திய அரசை நிர்ப்பந்திக்கும் பொறுப்பும் தமிழ்நாட்டுக்கே உண்டு.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் பங்கையும் தமிழகத்தின் பாத்திரத்தையும் புரிந்துகொள்வதிலிருந்தே தமிழீழத்திற்கான திசைவழியில் தமிழ்நாட்டின் கடமையைக் கண்டறிய முடியும்!

கருத்தரங்கம்

நாள்: 31 மார்ச் 2013, ஞாயிறு மாலை 5 மணி

இடம்: வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், 73 ஜி.என்.செட்டி சாலை, பனகல் பூங்கா எதிரில், தியாகராயா நகர், சென்னை

உரை:

தோழர். தியாகு, தமிழ்த் தேசிய விடுத‌லை இயக்கம்
பேராசிரியர் சரசுவதி, தோழமை மையம் - நாடு கடந்த‌ தமிழீழ அரசாங்கம்
பேராசிரியர் மணிவண்ணன், சென்னை பல்கலைகழகம்
தோழர் திவ்யா, தமிழீழத்திற்கான மாணவர் போரட்டக் குழு
தோழர் செந்தில், சேவ் தமிழ்சு இயக்கம்

- சேவ் தமிழ்சு இயக்கம் - www.save-tamils.org 9884468039